maraikal
MUM
"

 
 
 
இளையோர்
 
 
 
 
 
 
 
 
 
 
 

                                                பொதுக்காலம் 3ஆம் வாரம் - ஞாயிறு



முதல் வாசகம்


நினிவே மக்கள் தீய வழிகளினின்று விலகினர்.


இறைவாக்கினர் யோனா நூலிலிருந்து வாசகம் 3: 1-5, 10

அந்நாள்களில்

இரண்டாம் முறையாக யோனாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அவர், ‘‘நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய், நான் உன்னிடம் சொல்லும் செய்தியை அங்குள்ளோருக்கு அறிவி” என்றார். அவ்வாறே யோனா புறப்பட்டு ஆண்டவரது கட்டளைப்படி நினிவேக்குச் சென்றார். நினிவே ஒரு மாபெரும் நகர். அதைக் கடக்க மூன்று நாள் ஆகும். யோனா நகருக்குள் சென்று, ஒரு நாள் முழுதும் நடந்த பின், உரத்த குரலில், ‘‘இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும்” என்று அறிவித்தார்.

நினிவே நகர மக்கள் கடவுளின் செய்தியை நம்பி, எல்லாரும் நோன்பிருக்க முடிவு செய்தார்கள். பெரியோர், சிறியோர் அனைவரும் சாக்கு உடை உடுத்திக் கொண்டனர்.

கடவுள் அவர்கள் செய்தது அனைத்தையும் பார்த்தார். அவர்கள் தீய வழிகளினின்று விலகியதை அவர் கண்டு, தம் மனத்தை மாற்றிக் கொண்டார்; தாம் அவர்கள் மீது அனுப்புவதாகச் சொல்லியிருந்த தண்டனையை அனுப்பவில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 25: 4-5. 6-7bc. 8-9 (பல்லவி: 4a) Mp3

பல்லவி: ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச் செய்தருளும்.
4
ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்;
5
உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும். ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள். - பல்லவி

6
ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும்; ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே.
7bc
உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்; ஏனெனில் ஆண்டவரே நீரே நல்லவர். - பல்லவி

8
ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார்.
9
எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். - பல்லவி

இரண்டாம் வாசகம்

இந்த உலக அமைப்பு கடந்துபோகக் கூடியது.


திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 7: 29-31


அன்பர்களே, நான் சொல்வது இதுவே: இனியுள்ள காலம் குறுகியதே. இனி மனைவி உள்ளவரும் மனைவி இல்லாதவர்போல இருக்கட்டும். அழுபவர் அழாதவர் போலவும், மகிழ்ச்சியுறுவோர் மகிழ்ச்சியற்றவர் போலவும், பொருள்களை வாங்குவோர் அவை இல்லாதவர் போலவும் இருக்கட்டும். உலகச் செல்வத்தைப் பயன்படுத்துவோர் அவற்றில் முழுமையாக ஈடுபடாதவர்போல் இருக்கட்டும். இவ்வுலகு இப்போது இருப்பதுபோல் நெடுநாள் இராது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மாற் 1: 15

அல்லேலூயா, அல்லேலூயா! இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 14-20


யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார். “காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்று அவர் கூறினார்.

அவர் கலிலேயக் கடலோரமாய்ச் சென்றபோது சீமோனையும் அவர் சகோதரரான அந்திரேயாவையும் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, “என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்” என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

பின்னர், சற்று அப்பால் சென்றபோது செபதேயுவின் மகன் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் இயேசு கண்டார். அவர்கள் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். உடனே இயேசு அவர்களையும் அழைத்தார். அவர்களும் தங்கள் தந்தை செபதேயுவைக் கூலியாள்களோடு படகில் விட்டுவிட்டு அவர் பின் சென்றார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

 
 


I யோனா 3: 1-5, 10
II 1 கொரிந்தியர் 7: 29-31
III மாற்கு 1: 14-20

மனமாற்றம், நம்பிக்கை, சீடத்துவம்


நிகழ்வு

பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்த மிகப்பெரிய நற்செய்திப் பணியாளரான சாது சுந்தர் சிங் சொன்ன நிகழ்வு இது

உலகப் போக்கிலான வாழ்க்கை வாழ்ந்த இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் மனமாற்றம் அடைந்து, ஆண்டவர்மீது ஆழமான நம்பிக்கை கொண்டு, திபெத்திற்கு நற்செய்தி அறிவிக்கச் சென்றான். அங்கிருந்தவர்கள் அவனைத் தங்களுடைய நாட்டிற்குள் அனுமதிக்காமல் தடுத்தார்கள். அவனோ, “நீங்கள் என்னைத் தடுத்தாலும், நான் என் ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்காமல் இருக்கமாட்டேன்” என்று சொல்லித் தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தான். இதனால் அவனை அங்கிருந்தவர்கள் அடித்துத் துன்புறுத்தி, நாட்டை விட்டே துரத்தினார்கள்.

மக்கள் தன்னை அடித்துத் துன்புறுத்தி, நாட்டை விட்டே துரத்திவிட்டார்கள் என்பதற்காக அந்த இளைஞன் நம்பிக்கையை இழக்கவில்லை. ஒருசில ஆண்டுகள் கழித்து அவன் மீண்டுமாகத் திபெத்திற்குச் சென்று, ஆண்டவருடைய நற்செய்தியை அறிவித்து, பலரையும் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளச் செய்தான். இச்செய்தியை எப்படியோ, முன்பு அவனைத் துன்புறுத்தி, நாட்டைவிட்டே துரத்தியவர்கள் கேள்விப்பட்டார்கள். ‘நாம் எவ்வளவோ சொல்லியும் கேட்காததால், இவனைக் கொன்றுபோட்டுவிடுவோம்’ என்று முடிவுசெய்துகொண்டு, முதலில் அவனுடைய தோளை உரித்து, மிளகாய்ப்பொடியைத் தடவினார்கள். அப்பொழுது அவன் அலறி ஆர்ப்பாட்டம் செய்யாமல், “ஆண்டவர் இயேசு எனக்குப் புதியதொரு ஆடையைத் தரப்போகிறார். அதனால் நீங்கள் என்னுடைய தோலை நீக்கினாலும் பரவாயில்லை” என்று உறுதியாகச் சொன்னான்.

இதனால் கடுஞ்சீற்றம் அடைந்த அவர்கள், தீச்சூளையை ஏற்பாடு செய்து, அதில் அவனைத் தூக்கிப் போட்டார்கள். அந்த நேரத்திலும் அவன் புன்னகை மாறாமல், ஆண்டவரைப் போற்றிப் புகழ்ந்துகொண்ட, தன் ஆவியை ஆண்டவரிடம் ஒப்படைத்தான் (சாது சுந்தர்சிங் சொன்ன சின்னச் சின்னக் கதைகள் 100 – ஆர். எஸ். ஜேக்கப்).

ஒரு காலத்தில் உலகப் போக்கிலான வாழ்ந்து, பின் அதிலிருந்து மனம்மாறி, ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கைகொண்டு, அவரைப் பற்றிய நற்செய்தியை அறிவித்து, அவருக்காகவே கொல்லப்பட்ட இந்த இளைஞன் இயேசுவின் உண்மையான சீடருக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக விளங்குகின்றான். பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, நாம் ஒவ்வொருவரும் மனமாற்றம் அடைந்து, ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டு, அவருடைய உண்மையான சீடராக வாழவேண்டும் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

மனமாற்றம் காலத்தின் கட்டாயம்

மெசியாவின் வருகைக்காக மக்களைத் தயாரித்து, அவர்களை மனமாற்றத்திற்கு இட்டுச் சென்றவர் திருமுழுக்கு யோவான். அவர் ஏரோது மன்னனின் தவற்றைச் சுட்டிக்காட்டியதால், அவனால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுகின்றார். திருமுழுக்கு யோவான் கைதுசெய்யப்பட்டதும், ஆண்டவர் இயேசு, “காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது. மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்கின்றார். இவ்வாறு இயேசு இறையாட்சிப் பணி தெய்வடைந்து விடாமல் தொடர்கின்றார். அத்தோடு அவர் இறையாட்சிக்காக ஒவ்வொருவரும் மனம்மாறுவது முதன்மையான தேவை என்ற உண்மையை உணர்த்துகின்றார்.

இன்றைய முதல் வாசகத்தில், அசீரியர்களின் தலைநகரான நினிவே நகரில் இறைவாக்கினர் யோனா இறைவாக்கு உரைப்பதையும், அவர் உரைத்த இறைவாக்கைக் கேட்டு அங்கிருந்த மக்கள் மனம்மாறுவதையும் குறித்து வாசிக்கின்றோம். நினிவே நகரில் இருந்தவர்கள் யூதர்கள் கிடையாது; அவர்கள் பிற இனத்து மக்கள். ஆனாலும் அவர்கள் இறைவாக்கினர் யோனா அறிவித்த இறைவார்த்தையைக் கேட்டு மனம்மாறுகின்றார்கள். இதனால் ஆண்டவர் அவர்கள்மீது அனுப்புவதாகச் சொல்லியிருந்த தண்டனையை அனுப்பவில்லை. நாம் யூதர்களாக இருந்தாலும், பிற இனத்து மக்களாக இருந்தாலும், மனம்மாறவேண்டும். அதுவே நாம் செய்யவேண்டிய முதன்மையான் செயலாக இருக்கின்றது.

நற்செய்தியை நம்புதல் நல்வாழ்வின் அடுத்த கட்டம்

தீய வழியில் செல்லும் ஒருவர் மனம்மாறுவதோடு அவருடைய வாழ்க்கை நிறைவடைந்து விடுவதில்லை. மாறாக, அவர் நற்செய்தியை அல்லது இயேசுவை நம்பவேண்டும். இது ஒருவர் செய்யவேண்டிய இரண்டாவது செயலாக இருக்கின்றது. இயேசு தன்னுடைய பணியைத் தொடங்குகின்றபொழுது, “.....இறையாட்சி நெருங்கி விட்டது. மனம் மாறுங்கள்” என்று சொல்லி நிறுத்திக்கொள்ளவில்லை. மாறாக, “நற்செய்தியை நம்புங்கள்” என்றும் சொல்கின்றார். இப்படி இயேசுவின் நற்செய்தியை, அவரை நம்பியவர்கள்தான் பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவான் ஆகியோர் ஆவர்.

இன்றைய நற்செய்தியின் இரண்டாவது பகுதியில் இயேசு, சீமோனையும் அவர் சகோதரான அந்திரேயாவையும், பின்னர் யாக்கோபையும் அவர் சகோதரான யோவானையும் தன் பணி செய்ய அழைப்பதைக் குறித்து வாசிக்கின்றோம். அந்திரேயாவும் யோவானும் இயேசுவை முன்னரே சந்தித்திருந்தார்கள். மேலும் அந்திரேயா வழியாக பேதுரு இயேசுவைச் சந்தித்திருந்தார் (யோவா 1: 35-39) ஆனாலும் அவர்கள் தாங்கள் செய்துவந்த மீன்பிடிக்கும் தொழிலைத் தொடர்ந்து செய்துவந்தார்கள். எப்பொழுது இயேசு அவர்களிடம், “என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்” என்று சொன்னாரோ அல்லது அவர்கள் மிகுதியான மீன்பாட்டைக் கண்டார்களோ (லூக் 5: 1-11), அப்பொழுது அவர்கள் ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளத் தொடங்குகின்றார்கள். இவ்வாறு அவர்கள் நால்வரும் இயேசுவின்மீது, அவருடைய நற்செய்தியின்மீது நம்பிக்கை கொண்டதால், அடுத்தக் கட்டத்திற்கு நகர்கின்றார்கள்.

இயேசுவைப் பின்தொடர்ந்து சீடத்துவ வாழ்வின் நிறைவு

மனமாற்றம் முதல் நிலை என்றால், இயேசுவின்மீது, அவருடைய நற்செய்தியின்மீது நம்பிக்கை கொள்தல் அடுத்த நிலை என்றால், எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவரைப் பின்தொடர்தல் மூன்றாம் நிலை அல்லது சீடத்துவ வாழ்வின் நிறைவு என்று சொல்லலாம்.

முதல் சீடர்கள் நால்வரும் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டதோடு மட்டும் நின்றுவிடாமல், எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்கின்றார்கள். இறுதியில் அவருக்காகத் தங்கள் உயிரையே தருகின்றார்கள். இங்கு எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்தல் என்பதை, நாம் இந்த உலகின்மீது கொண்டிருக்கும் பற்று, சிற்றின்ப நாட்டங்கள் இவற்றின்மீது உள்ள பற்று ஆகியவற்றை விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்ந்து அவருடைய உண்மையான சீடராய் இருத்தல் என்றும் பொருள் எடுத்துக்கொள்ளலாம்.

புனித பவுல் இத்தகையோரு நிலையை அடைந்தார். அதனால்தான் அவரால், “என் ஆண்டவராம் கிறிஸ்துவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்ற செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன்” (பிலி 3: 8) என்று சொல்ல முடிந்தது. எனவே, நாம் இந்த உலகின்மீது உள்ள பற்றுகளை அகற்றி அல்லது மனம்மாற்றம் பெற்று, ஆண்டவரைப் பற்றிக்கொண்டு, அவரைப் பின்தொடர்ந்து அவருடைய உண்மையான சீடர்களாக வாழ முயற்சி செய்வோம்.

சிந்தனை

‘பொருள்கள், நண்பர்கள் மற்றும் பிற பிணைப்புகளிலிருந்து விலகி இருக்கும் தியாக உள்ளம் அழைக்கப்பட்டவர்களுக்குத் தேவை’ என்பார் திருத்தந்தை பிரான்சிஸ். ஆகையால், ஆண்டவரின் பணியைச் செய்ய அழைக்கப்பட்டிருக்கும் நாம், இவ்வுலகின்மீது உள்ள பற்றுகளை அகற்றி, ஆண்டவர் ஒருவரைப் பற்றிக்கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

 

 


 
Free Blog Widget
Stats Counter
hit counter