maraikal
MUM
"

 
 
 
இளையோர்
 
 
 
 
 
 
 
 
 
 
 

                                    பொதுக்காலம் 29ஆம் வாரம் - ஞாயிறு


முதல் வாசகம்
 

தம் உயிரைக் குற்றநீக்கப் பலியாகத் தந்தார்; எனவே, தம் வழிமரபு கண்டு நீடு வாழ்வார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 53: 10-11

அந்நாள்களில்

ஆண்டவரின் துன்புறும் ஊழியரை நொறுக்கவும் நோயால் வதைக்கவும் ஆண்டவர் திருவுளம் கொண்டார்; அவர் தம் உயிரைக் குற்றநீக்கப் பலியாகத் தந்தார்; எனவே, தம் வழிமரபு கண்டு நீடு வாழ்வார்; ஆண்டவரின் திருவுளம் அவர் கையில் சிறப்புறும். அவர் தம் துன்ப வாழ்வின் பயனைக் கண்டு நிறைவடைவார்; நேரியவராகிய என் ஊழியர் தம் அறிவால் பலரை நேர்மையாளர் ஆக்குவார்; அவர்களின் தீச்செயல்களைத் தாமே சுமந்து கொள்வார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 33: 4-5. 18-19. 20,22 (பல்லவி: 22) Mp3

பல்லவி: உம்மையே நாங்கள் நம்புவதால், உம் பேரன்பு எம்மீது இருப்பதாக!

4
ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை.
5
அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. - பல்லவி

 
18
தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார்.
19
அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். - பல்லவி

 
20
நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார்.
22
உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக! - பல்லவி

 

இரண்டாம் வாசகம்

அருள்நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 4: 14-16

சகோதரர் சகோதரிகளே,

வானங்களைக் கடந்து சென்ற இறைமகனாகிய இயேசுவை நாம் தனிப்பெரும் தலைமைக் குருவாகக் கொண்டுள்ளதால் நாம் அறிக்கை இடுவதை விடாது பற்றிக்கொள்வோமாக! ஏனெனில், நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல; மாறாக, எல்லா வகையிலும் நம்மைப் போலச் சோதிக்கப்பட்டவர்; எனினும் பாவம் செய்யாதவர். எனவே, நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக் கூடிய அருளைக் கண்டடையவும், அருள்நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மாற் 10: 45

அல்லேலூயா, அல்லேலூயா! மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மானிட மகன் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கு வந்தார்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 35-45

அக்காலத்தில்

செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் இயேசுவை அணுகிச் சென்று அவரிடம், “போதகரே, நாங்கள் கேட்பதை நீர் எங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறோம்” என்றார்கள். அவர் அவர்களிடம், “நான் என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் அவரை நோக்கி, “நீர் அரியணையில் இருக்கும்போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்துகொள்ள எங்களுக்கு அருளும்” என்று வேண்டினர்.

இயேசுவோ அவர்களிடம், “நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? நான் பெறும் திருமுழுக்கை உங்களால் பெற இயலுமா?” என்று கேட்டார்.

அவர்கள் அவரிடம், “இயலும்” என்று சொல்ல, இயேசு அவர்களை நோக்கி, “நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். நான் பெறும் திருமுழுக்கையும் நீங்கள் பெறுவீர்கள். ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவது எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்கள் யாருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோ அவர்களுக்கே அருளப்படும்” என்று கூறினார்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப் பேரும் யாக்கோபு மீதும் யோவான் மீதும் கோபங்கொள்ளத் தொடங்கினர். இயேசு அவர்களை வரவழைத்து அவர்களிடம்,

“பிற இனத்தவரிடையே தலைவர்கள் எனக் கருதப்படுகிறவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். அவர்களுள் பெரியவர்கள் அவர்கள் மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள். ஆனால் உங்களிடையே அப்படி இருக்கக்கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும். ஏனெனில் மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” என்று கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது குறுகிய வாசகம்

மானிட மகன் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கு வந்தார்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 42-45

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களிடம் கூறியது: “பிற இனத்தவரிடையே தலைவர்கள் எனக் கருதப்படுகிறவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். அவர்களுள் பெரியவர்கள் அவர்கள் மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள். ஆனால் உங்களிடையே அப்படி இருக்கக்கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர், உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும். ஏனெனில் மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” என்று கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 



 


I எசாயா 53: 10-11
II எபிரேயர் 4: 14-16
III மாற்கு 10: 35-45

தலைவரே பணியாளரானார்!

நிகழ்வு


இரண்டாம் உலகப்போர் உச்சத்தில் இருந்த நேரம் அது. ஹிட்லரின் நாஜிப் படை டென்மார்க்கின்மீது படையெடுத்து வந்து, அதை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது. அப்பொழுது டென்மார்க்கை ஆண்டவர் பத்தாம் கிறிஸ்டியான் என்ற மன்னர்.

ஒருநாள் அவர் நகரில் இருந்த ஒரு பெரிய கட்டடத்தில் ஹிட்லரின் நாஜிக் கொடியானது பறந்துகொண்டிருப்பதைக் கண்டார். அதை அப்புறப்படுத்துமாறு நாஜிப் படையிலிருந்த ஓர் உயர் அதிகாரியிடம் அவர் சொன்னபோது, “முடியாது” என்று அந்த உயிர் அதிகாரி மறுத்துவிட்டார். “நீங்கள் அப்புறப்படுத்தாவிட்டால் இங்குள்ள ஒரு படைவீரரைக் கொண்டு நான் அப்புறப்படுத்த வேண்டி வரும்” என்றார் மன்னர்.

“ஒருவேளை நீங்கள் உங்கள் நாட்டில் உள்ள ஒரு படைவீரரைக் கொண்டு இக்கொடியை அப்புறப்படுத்த முயன்றால், நான் அவரைச் சுட்டுவீழ்த்துவேன்!” என்று எச்சரித்தார் நாஜிப் படை உயர் அதிகாரி. “உங்களால் படைவீரரைச் சுட்டுவீழ்த்த முடியாது, ஏனெனில், படைவீரரின் இடத்தில் இருந்து நான் அந்தக் கொடியை அப்புறப்படுத்தப் போகிறேன்” என்றார் மன்னர்.

‘மன்னர் ஒரு படைவீரரின் இடத்தில் இருந்து, கொடியை அகற்றப்போகிறா, இப்படியும் ஒரு மன்னர் இருக்க முடியுமா?’ என்று அதிர்ந்துபோன அந்த நாஜிப்படை உயர் அதிகாரி, மறுநிமிடம் கொடியை அகற்றினார்.

தான் ஒரு நாட்டு மன்னர் என்பதைப் பொருட்படுத்தாமல், கொடியை அகற்றினால் கொல்லப்படுலாம் என்பதையும் பொருட்படுத்தாமல் ஒரு சாதாரண படைவீரர் நிலைக்கு இறங்கிவந்து, கொடியை அகற்றப்போவதாகச் சொன்ன டென்மார்க் மன்னர் பத்தாம் கிறிஸ்டியான், ஒரு தலைவர் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. பொதுக்காலம் இருபத்து ஒன்பதாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, இயேசுவைப் பின்பற்றுகின்ற ஒருவர் எப்படி இருக்கவேண்டும் என்ற செய்தியை நமக்கு எடுத்துரைக்கின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

அதிகாரத்திற்கு ஆசைப்பட்ட சீடர்கள்

அதிகாரம் என்பது ஒரு போதை. அதற்கு ஆசைப்பட்டுவிட்டாலோ அல்லது அதுதரும் மாயக் கவர்ச்சியில் வீழ்ந்துவிட்டாலோ அதிலிருந்து மீண்டுவருவது மிகவும் கடினம். கடைநிலையில் உள்ளவர்கூட, அதிகாரம் செலுத்துவதற்குத் தனக்கு ஒருவர் கிடைத்துவிட்டால், அதனால் அடைகின்ற ஒருவிதமான ‘பரவச நிலை’யைக் கொண்டே அதிகாரம் என்பது ஏன் ஒருவிதமான போதை என்பது புரிந்துவிடும்.

நற்செய்தியில் இயேசுவிடம் வருகின்ற யோவானும் யாக்கோபும் அவரிடம், “நீர் அரியணையில் இருக்கும்போது, எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும், இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்துகொள்ள எங்களுக்கு அருளும்” என்கிறார்கள். யோவானும் யாக்கோபும் இயேசுவிடம் இவ்வாறு கேட்பதைக் கொண்டு, அவர்கள் இயேசுவையும், அவரது போதனையையும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில், இயேசு மன்னருக்கெல்லாம் மன்னராக இருந்தபோதும் (திவெ 19: 16), மனத்தாழ்மைக்கு எடுத்துக்காட்டாக இருந்தவர் (மத் 11: 29). அப்படிப்பட்டவரிடம், யோவானும் யாக்கோபும் அதிகாரத்திற்கு ஆசைப்பட்டுப் பேசுகின்றபோதுதான், ஒரு தலைவர் அல்லது பெரியவராக இருக்க விரும்புகின்றவர் எப்படி இருக்க வேண்டும் என்று இயேசு கற்பிக்கின்றார்.

இயேசுவின் சீடர்கள் அதிகாரத்திற்கு ஆசைப்பட்டார்கள் என்பதை இந்த நிகழ்வின்மூலமாகத்தான் நாம் கண்டுகொள்ள முடியும் என்று இல்லை. இதற்கு முன்பும் (மாற் 9: 33, 34), இதற்குப் பின்பும் (லூக் 22: 24) அவர்கள் அதிகாரத்திற்கு அல்லது தாங்கள் பெரியவர்களாக இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டார்கள் என்பதைக் கண்டுகொள்ளலாம். இந்நிலையில்தான் இயேசு அதிகாரத்தில் இருப்பவர் அல்லது முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் எப்படி இருக்க வேண்டும் என்று கற்பிக்கின்றார்.

தன் வாழ்வையே பெரிய போதனையாய்த் தந்த இயேசு

உலகத்தில் எத்தனையோ போதகர்கள் தோன்றி மறைந்திருந்தாலும் இயேசு அளவுக்கு மக்கள் மனத்தில் குடிகொண்டிருக்கவில்லை. காரணம், இயேசு போதித்ததோடு நின்றுவிடாமல், தன் வாழ்வையே பெரிய போதனையாக மக்களுக்குத் தந்ததுதான். ஆம், எம்மாவு நோக்கிச் செல்லும் சீடர் இருவர், இயேசுவைப் பற்றிச் சொல்லும்போது, “அவர் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார்” (லூக் 24: 19) என்கிறார்கள்.

தன்னுடைய சீடர்கள் தன்னைப் பற்றியும், தன்னுடைய போதனையைப் பற்றியும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதை அறிந்த இயேசு அவர்களிடம், “மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தன் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” என்கிறார். இப்படிச் சொல்லிவிட்டுப் பின்னர் அவர் தன் சீடர்களிடம் காலடிகளைக் கழுவி முதன்மையானவராக, அதிகாரத்தில் இருக்க விரும்புகிறார் எப்படி இருக்கவேண்டும் என்று தான் வாழ்வால் போதிக்கின்றார்.

இன்றைய முதல் மற்றும் இரண்டாம் வாசகம், இயேசு எப்படி இருந்தார் என்பதையும், அவருடைய சீடர்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதையும் கற்பிக்கின்றன. இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகம் துன்புறும் ஊழியரைப் பற்றிப் பற்றிய பாடல் ஆகும். இதில் வருகின்ற ஒரு சொற்றொடர், “ஆண்டவரின் திருவுளம் அவர் கையில் சிறப்புறும்” என்கிறது. கடவுள் உலகை மீட்கத் திருவுளம் கொண்டார். அதற்காக இயேசு தன்னையே கையளித்தார். இயேசுவிடம் மிகுந்த தாழ்ச்சி இருந்தாலேயே அவரால் கடவுளின் திருவுளத்திற்குத் தன்னைக் கையளிக்கமுடிந்தது (பிலி 2: 5-8). இவ்வாறு இயேசு தன்னுடைய தாழ்ச்சியால் கடவுளின் திருவுளம் சிறப்புறச் செய்தார்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில், “அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக” என்றொரு சொற்றொடர் வருகின்றது. இயேசுவின் காலத்திற்கு முன்பும் சரி (எஸ்(கி) 4: 11), இன்றைக்கும் சரி ஒருவர் அதிகாரத்தில் இருப்பவரை அல்லது அரியணையில் இருப்பவரை அவ்வளவு துணிவுடன் அணுகிச் சென்றுவிட முடியாது; ஆனால், இயேசுவின் அரியணையை நம்மால் துணிவுடன் அணுகிச் செல்ல முடியும் எனில், அவர் கனிவும் மனத்தாழ்மையும் உடையவராக இருக்கின்றார் என்பதால்தான். இவ்வாறு இயேசு தன் வாழ்வையே பெரிய போதனையாகத் தன் சீடர்களுக்குத் தந்து, அவர்கள் – இன்று நாம் – எப்படித் தாழ்ச்சியோடு பணிவிடை செய்யவேண்டும் என்று கற்பிக்கின்றார்.

தாழ்ச்சியோடு இருப்பவர் நீடு வாழ்வார்

அதிகாரத்தில் இருப்பவர் மற்றவரை அடங்கியாளக் கூடாது, அவர் இயேசுவைப் போன்று பணிவிடை செய்யவேண்டும், இயேசுவைப் போன்று தாழ்ச்சியோடு இருக்கவேண்டும் என்று சிந்தித்துப் பார்த்த நாம்,. இயேசுவைப் போன்று தாழ்ச்சியோடு இருந்து கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுக்கு என்ன ஆசி கிடைக்கும் என்று சிந்திப்போம்.

இன்றைய முதல்வாசகம், ஆண்டவரின் திருவுளம் நிறைவேற்றும் இறை ஊழியர் தம் வழிமரபு கண்டு நீடு வாழ்வார் என்கிறது. இயேசு கடவுளின் திருவுளத்தைத் தாழ்ச்சியோடு நிறைவேற்றியதால், கடவுள் அவரை மிகவும் உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார் (பிலி 2: 9). அந்த அடிப்படையில் இயேசுவைப் போன்று தாழ்ச்சியோடு கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுகின்ற ஒருவர் தம் வழிமரபு கண்டு நீடு வாழ்வார்; அவர் கடவுளால் எல்லா நலன்களையும் நன்மைகளையும் பெறுவார் என்பது உறுதி. எனவே, நாம் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி, அவரைப் போன்று தாழ்ச்சியோடு பணிசெய்து, கடவுளின் திருவுளம் சிறப்புறச் செய்வோம்.

சிந்தனை:

‘பணம், புகழ், பதவி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பாடுபடும் திருஅவைப் பணியாளர்கள் கடவுளின் உண்மையான பணியாளர்கள் அல்ல’ என்பார் திருத்தந்தை பிரான்சிஸ். ஆகவே, நாம் இயேசுவைக் கருத்தில்கொண்டு, அவரது எடுத்துக்காட்டைப் பின்பற்றி மனத்தாழ்ச்சியோடு பணிசெய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

 

 


 
Free Blog Widget
Stats Counter
hit counter