maraikal
MUM
"

 
 
 
இளையோர்
 
 
 
 
 
 
 
 
 
 
 

                                    பொதுக்காலம் 27ஆம் வாரம் - ஞாயிறு


முதல் வாசகம்
 

இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 2: 18-24

அனைத்தையும் படைத்து முடித்த பின் ஆண்டவராகிய கடவுள், “மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று; அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன்” என்றார்.

ஆண்டவராகிய கடவுள் மண்ணிலிருந்து எல்லாக் காட்டு விலங்குகளையும் வானத்துப் பறவைகளையும் உருவாக்கி, அவற்றிற்கு மனிதன் என்ன பெயரிடுவான் என்று பார்க்க, அவற்றை அவனிடம் கொண்டு வந்தார். உயிருள்ள ஒவ்வொன்றுக்கும் அவன் என்ன பெயரிட்டானோ அதுவே அதன் பெயராயிற்று. கால்நடைகள், வானத்துப் பறவைகள், காட்டு விலங்குகள் ஆகிய எல்லாவற்றிற்கும் மனிதன் பெயரிட்டான்; தனக்குத் தகுந்த துணையையோ மனிதன் காணவில்லை.

ஆகவே ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்கு ஆழ்ந்த உறக்கம் வரச்செய்து, அவன் உறங்கும் பொழுது அவன் விலா எலும்பு ஒன்றை எடுத்துக்கொண்டு, எடுத்த இடத்தைச் சதையால் அடைத்தார். ஆண்டவராகிய கடவுள் தாம் மனிதனிடமிருந்து எடுத்த விலா எலும்பை ஒரு பெண்ணாக உருவாக்கி மனிதனிடம் அழைத்து வந்தார்.

அப்பொழுது மனிதன், “இதோ! இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள்; ஆணிடமிருந்து எடுக்கப்பட்டதால், இவள் பெண் என்று அழைக்கப்படுவாள்” என்றான். இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்; இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 128: 1-2. 3. 4-5. 6 (பல்லவி: 5 காண்க) Mp3

பல்லவி: உம் வாழ்நாளெல்லாம் ஆண்டவர் உமக்கு ஆசி வழங்குவாராக!

1
ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்!
2
உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்! - பல்லவி

 
3
உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். - பல்லவி

 
4
ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார்.
5
ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ் நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! - பல்லவி

 
6
நீர் உம் பிள்ளைகளின் பிள்ளைகளைக் காண்பீராக! இஸ்ரயேலுக்கு நலம் உண்டாவதாக! - பல்லவி

 

இரண்டாம் வாசகம்

தூய்மையாக்குகிறவர், தூய்மையாக்கப்படுவோர் அனைவருக்கும் உயிர்முதல் ஒன்றே.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 2: 9-11

சகோதரர் சகோதரிகளே,

நாம் காண்பதோ சிறிது காலம் வானதூதரைவிடச் சற்றுத் தாழ்ந்தவராக்கப்பட்ட இயேசுவையே. இவர் துன்புற்று இறந்ததால், மாட்சியும் மாண்பும் இவருக்கு முடியாகச் சூட்டப்பட்டதைக் காண்கிறோம். இவ்வாறு கடவுளின் அருளால் அனைவருடைய நலனுக்காகவும் இவர் சாவுக்கு உட்படவேண்டியிருந்தது.

கடவுள் எல்லாவற்றையும் தமக்கென்று தாமே உண்டாக்கினார். அவர், மக்கள் பலரை மாட்சியில் பங்குகொள்ள அழைத்துச் செல்ல விரும்பிய போது, அவர்களது மீட்பைத் தொடங்கி வழிநடத்துபவரைத் துன்பங்கள் மூலம் நிறைவுள்ளவராக்கினார். இது ஏற்ற செயலே. தூய்மை யாக்குகிறவர், தூய்மையாக்கப்படுவோர் அனைவருக்கும் உயிர்முதல் ஒன்றே. இதனால் இயேசு இவர்களைச் சகோதரர் சகோதரிகள் என்று அழைக்க வெட்கப்படவில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

1 யோவா 4: 12

அல்லேலூயா, அல்லேலூயா! நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோம் என்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப்பார்; அவரது அன்பு நம்மிடம் நிறைவு பெறும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 2-16

அக்காலத்தில்

பரிசேயர் இயேசுவை அணுகி, “கணவன் தன் மனைவியை விலக்கி விடுவது முறையா?” என்று கேட்டு அவரைச் சோதித்தனர்.

அவர் அவர்களிடம் மறுமொழியாக, “மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன?” என்று கேட்டார். அவர்கள், “மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி அவரை விலக்கிவிடலாம் என்று அனுமதி அளித்துள்ளார்” என்று கூறினார்கள்.

அதற்கு இயேசு அவர்களிடம், “உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே அவர் இக்கட்டளையை எழுதி வைத்தார். படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள், ‘ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.’ இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்” என்றார்.

பின்னர் வீட்டில் இதைப் பற்றி மீண்டும் சீடர் அவரைக் கேட்டனர். இயேசு அவர்களை நோக்கி, “தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபசாரம் செய்கிறான். தன் கணவரை விலக்கிவிட்டு வேறொருவரை மணக்கும் எவளும் விபசாரம் செய்கிறாள்” என்றார்.

சிறு பிள்ளைகளை இயேசு தொடவேண்டுமென்று, அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர். இயேசு இதைக் கண்டு, கோபம் கொண்டு, “சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது. இறையாட்சியைச் சிறு பிள்ளையைப் போல் ஏற்றுக்கொள்ளாதோர் அதற்கு உட்படமாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.

பிறகு அவர் அவர்களை அரவணைத்து, தம் கைகளை அவர்கள்மீது வைத்து ஆசி வழங்கினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது குறுகிய வாசகம்

கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 2-12

அக்காலத்தில்

பரிசேயர் இயேசுவை அணுகி, “கணவன் தன் மனைவியை விலக்கி விடுவது முறையா?” என்று கேட்டு அவரைச் சோதித்தனர்.

அவர் அவர்களிடம் மறுமொழியாக, “மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன?” என்று கேட்டார். அவர்கள், “மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி அவரை விலக்கிவிடலாம் என்று அனுமதி அளித்துள்ளார்” என்று கூறினார்கள்.

அதற்கு இயேசு அவர்களிடம், “உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே அவர் இக்கட்டளையை எழுதி வைத்தார். படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள், ‘ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.’ இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்” என்றார்.

பின்னர் வீட்டில் இதைப் பற்றி மீண்டும் சீடர் அவரைக் கேட்டனர். இயேசு அவர்களை நோக்கி, “தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபசாரம் செய்கிறான். தன் கணவரை விலக்கிவிட்டு வேறொருவரை மணக்கும் எவளும் விபசாரம் செய்கிறாள்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.



 


I தொடக்க நூல் 2: 18-24
II எபிரேயர் 2: 9-11
III மாற்கு 10: 2-16

“இருவரும் ஒரே உடலாய் இருப்பர்”


நிகழ்வு

“என் கணவருடைய போக்கு எனக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை; அவருடைய நடவடிக்கைகள் நாளுக்கு நாள் எல்லைமீறிப் போகின்றன. அதனால் நான் அவரை எந்தளவுக்குக் காயப்படுத்த முடியுமோ, அந்தளவுக்குக் காயப்படுத்திவிட்டு, அவரை விவாகரத்து செய்ய வேண்டும்” என்று, அமெரிக்காவில் இருந்த ஒரு பிரபல மனநல மருத்துரிடம் (ஜார்ஜ் டபிள்யூ. கிரேன்) முறையிட்டுக் கொண்டிருந்தார் ஒரு பெண்மணி.

“அம்மா! நீங்கள் சொல்வதுபோல் செய்துவிடலாம். அதற்கு முன்பாக, நான் சொல்வதுபோல் நீங்கள் செய்யுங்கள். அப்படிச் செய்தால் உங்கள் கணவரை எந்தளவுக்குக் காயப்படுத்த முடியுமோ, அந்தளவுக்குக் காயப்படுத்தலாம்” என்று சொல்லிவிட்டு, அந்த மனநல மருத்துவர் தொடர்ந்து பேசினார்: “நீங்கள் உங்கள் கணவரை முழுமையாக அன்பு செய்வதுபோல், அன்பு செய்யுங்கள். எப்பொழுது அவர் உங்களை முழுமையாக அன்பு செய்வது போல் உங்களுக்குத் தெரிகிறதோ, அப்பொழுது நீங்கள் அவரை விவாகரித்து செய்துவிடுங்கள். அப்படிச் செய்தால் நீங்கள் அவரை மிகவும் நன்றாகக் காயப்படுத்தலாம்.”

மனநல மருத்துவர் இவ்வாறு சொன்னதற்குச் சரி என்று ஒப்புக்கொண்டு, தன் வீட்டிற்குத் திரும்பிப் போனார் அந்த பெண்மணி. போனவர் ஒருசில மாதங்கள் கழித்து மனநல மருத்துவரிடம் திரும்பி வந்தார். அவருடைய முகத்தில் மகிழ்ச்சி பொங்கி வழிவதைப் பார்த்த மனநல மருத்துவர், “நீங்கள் விரும்பியது போல், உங்கள் கணவரை விவாகரத்து செய்துவிட்டீர்களா?” என்று ஆர்வமாய்க் கேட்டார். “இல்லை” என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்த அந்தப் பெண்மணி, “நான் என் கணவரை முழுமையாக அன்பு செய்வதுபோல் அன்பு செய்கையில், அவர் என்னை முழுமையாக அன்புசெய்யத் தொடங்கிவிட்டார். அதனால் நான் அவரை உண்மையாக அன்பு செய்வதால், விவாகரித்து என்ற பேச்சக்கே இடமில்லாமல் போய்விட்டது” என்றார்.

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த மனநல மருத்துவர், “கணவன் மனைவிடம் உண்மையான அன்பு குடிகொண்டிருக்கும்போது, நீங்கள் சொல்வது விவகாரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று சொல்லி முடிந்தார்.

ஆம், திருமண வாழ்வில் கணவனும் மனைவியும் ஓருடலாய் வாழ்ந்து, ஒருவர் மற்றவரிடம் உண்மையான அன்புகாட்டினால் விவகாரத்து அல்லது மணமுறிவு என்ற பேச்சுக்கு இடமில்லை. இதையே இந்த நிகழ்வும், பொதுக்காலத்தின் இருபத்து ஏழாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தையும் நமக்கு உணர்த்துகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா?

இந்த கேள்வியோடுதான் இன்றைய நற்செய்தி வாசகம் தொடங்குகின்றது. இயேசு இக்கேள்விக்கு என்ன பதிலளித்தார் என்பதைக் குறித்துச் சிந்தித்துப் பார்பதற்கு முன், இக்கேள்வியை யார் கேட்டார், எந்த இடத்தில் வைத்து இக்கேள்வி கேட்கப்பட்டது? என்பன பற்றித் தெரிந்துகொள்வது நல்லது. இயேசு கலிலேயாவைவிட்டு, யூதேயாப் பகுதிகளுக்கு வருகின்றார் (மத் 19: 1). இந்தப் பகுதியைப் ஆண்டுவந்தவன் வேறு யாருமல்ல, தன் சகோதரன் பிலிப்பின் மனைவியோடு வாழ்ந்து வந்த ஏரோது அந்திப்பா என்பவன்தான். இவன், “நீர் உன் சகோதரனின் மனைவியை வைத்திருப்பது முறையல்ல” (மத் 14: 4) என்று சொன்ன திருமுழுக்கு யோவானைக் கொன்றுபோட்டவன். ஆகவே, முறையின்றி வாழும் ஏரோது அந்திப்பாவின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் மணவிலக்கு பற்றிய கேள்வியை இயேசுவிடம் கேட்டால், அவர் ஏதாவது சொன்னார். அதைக் கொண்டே, அவரைத் தீர்த்துக் கட்டிவிடலாம் என்ற எண்ணத்தோடு பரிசேயர்கள் இயேசுவிடம் இந்தக் கேள்வியைக் கேட்கின்றார்கள்.

இதில் இன்னொரு செய்தியை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். முதல் நூற்றாண்டில் யூதர்கள் நடுவில் மணவிலக்கு குறித்து இருவேறு கருத்துகள் நிலவின. மணவிலக்கு செய்ய எந்தவொரு காரணமும் தேவையில்லை என்று ஒருபிரிவினரும், தகுந்த காரணமின்றி மணவிலக்கு செய்யக்கூடாது என்று இன்னொரு பிரிவினரும் சொல்லி வந்தனர். இந்நிலையில் இயேசு இரண்டு கருத்துகளில் எந்தக் கருத்தைத் சொன்னாலும், அவரைச் சிக்கலில் மாட்டிவிடலாம் என்ற தந்திரத்தோடு பரிசேயர்கள் இயேசுவிடம் இக்கேள்வி கேட்கின்றபோது, அவர் அவர்களிடம், “மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன?” என்று கேள்வியை அவர்களிடம் கேட்கின்றார்.

தன்னிடம் கேள்வி கேட்பவரிடம் திருப்பிக் கேள்விகேட்டுப் பதிலளிப்பது இயேசுவின் பாணி. கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது தொடர்பாகப் பரிசேயர்கள் கேள்வி கேட்டதும், இயேசு பதிலுக்கு ஒரு கேள்வியை கேட்க, அப்பொழுது பரிசேயர்களிடமிருந்து வரும் பதில்தான், “மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி அவரை விலக்கிவிடலாம் என்று அனுமதி அளித்துள்ளார்” (இச 24: 1-4) என்பதாகும். இங்கே, எந்தவொரு காரணமின்றிக் கடின உள்ளத்தோடு யூதர்கள் தம் மனைவியை விலக்கிவிட்டதாலேயே, மணவிலக்குச் சான்றிதழ் எழுதி, அவரை விலக்கிவிடலாம் என்று மோசே கூறியிருப்பார். இது, தகுந்த காரணம் இல்லாமல் ஒருவர் தன் மனைவியை விலக்கிவிட முடியாது என்பதால், பெண்களுக்கு ஒருவகையில் பாதுகாப்பு அளித்தது. இதைப் பரிசேயர்கள் தங்கள் வசதிக்கேற்றாற்போல் பயன்படுத்தி வந்தார்கள். இதனால் இயேசு மோசேயின் சட்டம் அல்லது கட்டளையைவிட மேலான ஒரு கட்டளையைத் தருகின்றார். அது என்ன என்று பார்ப்போம்.

கணவனும் மனைவியும் ஒன்றித்து, ஒரே உடலாக வாழ விருப்பும் கடவுள்

ஒவ்வொன்றையும் படைத்த பின் நல்லதெனக் கண்ட ஆண்டவர் (தொநூ 1: 31), மனிதனைப் படைத்துவிட்டு, அவன் தனிமையாக இருப்பது நல்லதன்று என்று காண்கின்றார். ஆகவே, அவர் அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன் என்று ஏவாவை உருவாக்குகின்றார். ஏவாவை மனிதன் காணுகின்றபோதுதான், “இவளே என் எலும்பின் எலும்பும் சதையும் சதையும் ஆளவள்” என்கிறான். மேலும் அவன் தன் மனைவியுடன் ஒன்றித்து, ஒரே உடலாய் இருக்கின்றான்.

இந்த உண்மையை பரிசேயர்களிடம் எடுத்துக்கூறும் இயேசு, மோசே உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டு மணவிலக்குச் சான்றிதழ் எழுதி, ஒருவரை விலக்கிவிடலாம் என்று சொல்யிருக்கலாம். ஆனால், கடவுள், கணவனும் மனைவியும் ஒன்றித்து, ஒரே உடலாய் வாழவேண்டும் என்றுதான் விரும்புகின்றார் என்று, மணமுறிவு என்பது இறைவனின் விருப்பதற்கு எதிரானது என்று சொல்லாமல் சொர்கின்றார். இதன்மூலம் இயேசு, கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா? என்று பரிசேயர்கள் கேட்ட கேள்விக்குச் சரியான பதிலளிதத்தோடு மட்டுமல்லாமல், இக்கேள்வி மூலம் இயேசுவைச் சூழ்ச்சியால் வீழ்த்தவேண்டும் என்ற அவர்களின் எண்ணத்தையும் முறியடிக்கின்றார்.

ஒருவர் மற்றவருடைய நலனுக்காகத் துன்பங்களை ஏற்கவேண்டும்

கணவனும் மனைவியும் ஒரே உடலாய், ஒன்றித்து வாழவேண்டும் என்று இன்றைய முதல் வாசகமும் நற்செய்தி வாசகமும் கூறுகின்ற அதே வேளையில், இன்றைய இரண்டாம் வாசகம், ஒருவர் மற்றவருக்காகத் துன்பங்களைத் தாங்கிக் கொண்டால், கணவன் மனைவியினுடைய வாழ்க்கை மட்டுமல்ல, எல்லாருடைய வாழ்க்கையும் நன்றாக இருக்கும் என்கிறது.

“அனைவருடைய நலனுக்காகவும் கிறிஸ்து சாவுக்கு உட்பட வேண்டியிருந்தது” என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில், எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர் கூறுகின்றார். நாம் அனைவரும் நலமாக இருக்க இயேசு சிலுவைச் சாவை ஏற்றுக்கொண்டார் என்ற பின்னணியில் கணவனும் மனையியும் உள்ளார்ந்த அன்பினால் ஒருவர் மற்றவருக்காகத் துன்பங்களைத் தாங்கிக்கொண்டால் அவர்களது இல்லறம் நல்லறமாகும். அப்போது இந்த அகிலமே செழிக்கும் என்பது உறுதி. ஆகையால், நமது (இல்லற) வாழ்வு சிறக்க, அன்பினால் உந்தப்பட்டு, ஒருவர் மற்றவருக்காகத் துன்பங்களைத் தாங்கிக்கொள்வோம்.

சிந்தனை:

‘ஒரு குடும்பம் கிறிஸ்துவை மையப்படுத்தி வாழ்ந்தது எனில், கிறிஸ்து அந்தக் குடும்பத்தை ஒன்றிணைத்து, அவர்களது வாழ்வை ஒளிமயமானதாய் மாற்றுவார்’ என்பார் திருந்தந்தை பிரான்சிஸ். எனவே, நாம் கிறிஸ்துவை மையப்படுத்தி வாழ்ந்து, நமது குடும்பங்களை ஒளிமயமானதாய் மாற்றி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

 

 


 
Free Blog Widget
Stats Counter
hit counter