maraikal
MUM
"

 
 
 
இளையோர்
 
 
 
 
 
 
 
 
 
 
 

                                    பொதுக்காலம் 25ஆம் வாரம் - ஞாயிறு


முதல் வாசகம்
 



இழிவான சாவுக்கு அவர்களைத் தீர்ப்பிடுவோம்.

சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 2: 17-20

பொல்லாதவர்கள் தங்களுக்குள் சொல்லிக் கொள்வதாவது:

‘நீதிமான்களுடைய சொற்கள் உண்மையா எனக் கண்டறிவோம்; முடிவில் அவர்களுக்கு என்ன நிகழும் என ஆய்ந்தறிவோம்.

நீதிமான்கள் கடவுளின் மக்கள் என்றால், அவர் அவர்களுக்கு உதவி செய்வார்; பகைவரிடமிருந்து அவர்களை விடுவிப்பார். அவர்களது கனிவினைக் கண்டு கொள்ளவும், பொறுமையை ஆய்ந்தறியவும், வசைமொழி கூறியும் துன்புறுத்தியும் அவர்களைச் சோதித்தறிவோம். இழிவான சாவுக்கு அவர்களைத் தீர்ப்பிடுவோம்; ஏனெனில் தங்கள் வாய்மொழிப்படி அவர்கள் பாதுகாப்புப் பெறுவார்கள்.'

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 54: 1-2. 3. 4,6 (பல்லவி: 4b) Mp3

பல்லவி: என் தலைவர் என் வாழ்வுக்கு ஆதரவாய் உள்ளோருடன் இருக்கின்றார்.
1
கடவுளே, உமது பெயரின் வல்லமையால் என்னைக் காப்பாற்றும்; உமது ஆற்றலினால் எனது நேர்மையை நிலைநாட்டும்.
2
கடவுளே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்; என் வாயின் சொற்களுக்குச் செவிகொடுத்தருளும். - பல்லவி

3
ஏனெனில், செருக்குற்றோர் எனக்கு எதிராய் எழுந்துள்ளனர்; கொடியவர் என் உயிரைப் பறிக்கப் பார்க்கின்றனர்; அவர்கள் கடவுளை அறவே நினைப்பதில்லை. - பல்லவி

4
இதோ! கடவுள் எனக்குத் துணைவராய் இருக்கின்றார்; என் தலைவர் என் வாழ்வுக்கு ஆதரவாய் உள்ளோருடன் இருக்கின்றார்;
6
தன்னார்வத்தோடு உமக்குப் பலி செலுத்துவேன்; ஆண்டவரே உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; இதுவே நன்று. - பல்லவி

இரண்டாம் வாசகம்

அமைதி ஏற்படுத்துவோர் விதைத்த அமைதி என்னும் விதையிலிருந்து நீதியென்னும் கனி விளைகிறது.

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 16- 4: 3

அன்பிற்குரியவர்களே,

பொறாமையும் கட்சி மனப்பான்மையும் உள்ள இடத்தில் குழப்பமும் எல்லாக் கொடுஞ்செயல்களும் நடக்கும். விண்ணிலிருந்து வரும் ஞானத்தின் தலையாய பண்பு அதன் தூய்மையாகும். மேலும் அது அமைதியை நாடும்; பொறுமை கொள்ளும்; இணங்கிப் போகும் தன்மையுடையது; இரக்கமும் நற்செயல்களும் நிறைந்தது; நடுநிலை தவறாதது; வெளிவேடமற்றது. அமைதி ஏற்படுத்துவோர் விதைத்த அமைதி என்னும் விதையிலிருந்து நீதியென்னும் கனி விளைகிறது.

உங்களிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படக் காரணமென்ன? உங்களுக்குள்ளே போராடிக் கொண்டிருக்கும் சிற்றின்ப நாட்டங்கள் அல்லவா? நீங்கள் ஆசைப்படுவது கிடைக்காததால் கொலை செய்கிறீர்கள்; பேராசை கொள்கிறீர்கள்; அதைப் பெற முடியாததால் சண்டை சச்சரவுகள் உண்டாக்குகிறீர்கள். அதை நீங்கள் ஏன் பெறமுடிவதில்லை? நீங்கள் கடவுளிடம் கேட்பதில்லை. நீங்கள் கேட்டாலும் ஏன் அடைவதில்லை? ஏனெனில் நீங்கள் தீய எண்ணத்தோடு கேட்கிறீர்கள்; சிற்றின்ப நாட்டங்களை நிறைவேற்றவே கேட்கிறீர்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
2 தெச 2: 14

அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாட்சியை நீங்கள் அடையும் பொருட்டே, நாங்கள் அறிவித்த நற்செய்தியின் வழியாக அவர் உங்களை அழைத்தார். அல்லேலூயா.
 


நற்செய்தி வாசகம்

ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராக இருக்கட்டும்.

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 30-37

அக்காலத்தில்

இயேசுவும் அவருடைய சீடர்களும் புறப்பட்டுக் கலிலேயா வழியாகச் சென்றார்கள். அது யாருக்கும் தெரியக்கூடாது என்று இயேசு விரும்பினார். ஏனெனில், “மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார்; அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள். கொல்லப்பட்ட மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார்” என்று அவர் தம் சீடருக்குக் கற்பித்துக் கொண்டிருந்தார். அவர் சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை. அவரிடம் விளக்கம் கேட்கவும் அவர்கள் அஞ்சினார்கள்.

அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்தார்கள். அவர்கள் வீட்டில் இருந்த பொழுது இயேசு, “வழியில் நீங்கள் எதைப் பற்றி வாதாடிக் கொண்டிருந்தீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள் பேசாதிருந்தார்கள். ஏனெனில் தங்களுள் பெரியவர் யார் என்பதைப் பற்றி வழியில் ஒருவரோடு ஒருவர் வாதாடிக்கொண்டு வந்தார்கள்.

அப்பொழுது அவர் அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம், “ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்” என்றார்.

பிறகு அவர் ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு, “இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக் கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை மட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

 



 

I சாலமோனின் ஞானம் 2: 17-20
II யாக்கோபு 3: 16- 4: 3
III மாற்கு 9: 30-37

“கடவுளின் மக்களும் அலகையின் மக்களும்”

நிகழ்வு

எதிரி நாடுகளோடு நடந்த போர்களில் நாட்டிற்குப் பல வெற்றிகளைத் தேடித்தந்த படைத்தளபதி ஒருவன், மன்னரிடம், “மன்னா! நம்முடைய நாட்டிற்கு எத்தனையோ வெற்றிகளை நான் தேடித் தந்திருக்கின்றேன். அதனால் நீங்கள் என்னைத் தேரில் அமர்த்தி, நகர் முழுவதும் கூட்டிச் சென்று கெளரவிக்க வேண்டும்” என்றான். “உனது விருப்பம் போலவே ஆகட்டும்” என்று சொன்ன மன்னன், அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்தான்.

மறுநாள் படைத்தளபதி தேரில் அமர்த்தப்பட்டு, நகர் முழுவதும் அழைத்துச் செல்லப்பட்டான். அவனுக்கு முன்பாகச் சென்ற வீரன், “நம் படைத்தளபதி வாழ்கவே” என்று குரலெழுப்பிக் கொண்டே சென்றான். திடீரென்று படைத்தளபதி அமர்ந்து சென்ற குதிரையின் மீது ஏறிய ஓர் அடிமை படைத்தளபதிக்குப் பின்னால்போய் அமர்ந்து கொண்டான். அந்த அடிமை, முன்னால் சென்றுகொண்டிருந்த வீரன், “நம் படைத்தளபதி வாழ்கவே!” என்று குரலெழுப்பியபோதெல்லாம் படைத்தளபதியின் முதுகில் அடித்தான். கூடவே, “நம் படைத்தளபதி ஒன்றும் அவ்வளவு பெரிய ஆளில்லை! அவர் நம்மைப் போன்று குறைபாடுகள் உடையவர்தான்! என்று சொல்லிக் கொண்டே வந்தான். இது படைத்தளபதிக்குக் கடுஞ்சினத்தை வரவழைத்தது.

அதனால் படைத்தளபதி நகர்வலம் முடிந்ததும் மன்னனிடம், “மன்னா! நீங்கள் என்னைக் கெளரவிப்பதுபோல் கெளரவித்துவீட்டு, ஓர் அடிமைக்கொண்டு என்னை அவமானப்படுத்திவிட்டீர்களே! நீங்கள் ஏன் இப்படிச் செய்தீர்கள், இதை நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை” என்று சீறினான். இதற்கு மன்னன் படைத்தளபதியிடம், “உன்னைப் போன்று எல்லாராலும் படைத்தளபதியாக உயர முடியும் என்பதற்காகவே ஓர் அடிமையை நீ அமர்ந்திருந்த தேரில் அமர்த்தினேன். வீரனுடைய வாழ்த்தொலி கேட்டு நீ ஆணவம் கொள்ளக்கூடாது என்பதற்காக அடிமையைக் கொண்டு உன்னை அடிக்க வைத்தேன். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, புகழ்ச்சியில் நீ உன்னை மறந்து விடக்கூடாது என்பதற்காக அடிமையிடம் உன்னுடைய உண்மையான நிலையைப் பறைசாற்றச் சொன்னேன்” என்றான். இதைக் கேட்டுப் படைத்தளபதியால் எதுவும் பேச முடியாமல் போனது.

பலரும் இந்த நிகழ்வில் வருகின்ற படைத்தளபதியைப் போன்று, ‘நான் எவ்வளவு பெரிய ஆள்’, ‘என்னால்தான் எல்லாம் ஆனது’ என்று ஆணவத்தோடு அலைவதைக் காண முடிகின்றது. இத்தகைய சூழலில், ஆணவம் எவ்வளவு பெரிய அழிவிற்கு இட்டுச் செல்லும், தாழ்ச்சி ஒருவரை எந்தளவுக்கு உயர்த்தும் என்பதைப் பொதுக்காலத்தின் இருபத்து ஐந்தாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை நமக்கு உணர்த்துகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

ஆணவம்கொள்வோர் அலகையின் மக்கள்

‘யாரும் எப்படியும் போகட்டும்; நமது வேலை ஒழுங்காக நடந்தால் போதும்’ என்று ஒருசிலர் இருப்பது உண்டு. நற்செய்தியில் இயேசு தம் பாடுகளையும் இறப்பையும் உயிர்ப்பையும் பற்றி முன்னறிவிக்கின்றபொழுது, அதைப் பற்றி இயேசுவிடம் எதுவும் கேட்காமல், தங்களுக்குள் யார் பெரியவர் என்று சீடர்கள் விவாதித்துக் கொண்டது, மேலே உள்ள கூற்றினைத்தான் நமக்கு நினைவுபடுத்துகின்றது.

தங்களுக்குள் யார் பெரியவர் என்ற விவாதம் சீடர்கள் நடுவில் ஏற்பட்டதற்குக் காரணம், இயேசு பேதுரு, யோவான், யாக்கோபு ஆகிய மூவரை மலைக்குக் கூட்டிக்கொண்டு போனதால்தான். சீடர்கள் நடுவில் ஏற்பட்ட இந்த யார் பெரியவர் என்ற விவாதம் பல பிரச்சனைகளுக்கும் இட்டுச் செல்லும் என்பதை நன்கு உணர்ந்ததால், இயேசு அவர்கள் நடுவில் ஒரு குழந்தையை நிறுத்தி அவர்களுக்குப் பாடம் புகட்டுகின்றார். நான் பெரியன் என்ற ஆணவம் திருஅவைக்குள் சண்டை சச்சரவை ஏற்படுத்தும், அது கொலைக்குக்கூட இட்டுச் செல்லும், பிறகு அது நாம் கடவுளிடம் கேட்கின்ற எதையும் கிடைக்காமல் செய்துவிடும் என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் யாக்கோபு மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றார். யோவான் இன்னும் ஒருபடி மேலே சென்று, அலகை அல்லது எதிர்க்கிறிஸ்து இருக்கும் இடத்தில் பிளவு இருக்கும் (1 யோவா 2: 19) என்கிறார். ஆகையால், ஆணவத்தால் ஏற்படும் சண்டை சச்சரவு, பிளவு போன்றவற்றிற்குக் காரணமாக இருக்கும் யாவரும் அலகையின் மக்களே!

தாழ்ச்சியுடையோர் கடவுளின் மக்கள்

ஆணவம் கொண்டோர் அலகையின் மக்கள் எனில், அதற்கு எதிராக உள்ள தாழ்ச்சிகொண்டோர் கடவுள் மக்கள் என்றுதான் சொல்லவேண்டும். சாலமோனின் ஞான நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகம், நீதிமான்களுக்கு எதிராகப் பொல்லாதவர்கள் சூழ்ச்சி செய்வதைக் குறித்துப் பேசுகின்றது. மேலும் நீதிமான் கடவுளின் மக்கள் எனக் கூறுகின்றது.

நீதிமான்கள் கடவுளின் மக்கள் என்பதை இயேசுவோடும், அவரைப் போன்று கனிவோடும் தாழ்ச்சியோடும், பொறுமையோடும் இருக்கின்ற ஒவ்வொருவரோடும் நாம் பொருத்திப் பார்க்கலாம். மெசியாவாம் இயேசு கிறிஸ்துவைக் குறித்து இறைவாக்கினர் எரேமியா நூலில் இவ்வாறு நாம் வாசிக்கின்றோம்: “அந்நாள்களில் நான் தாவீதிலிருந்து நீதியின் தளிர் ஒன்று முளைக்கச் செய்வேன்” (எரே 33: 15). தளிர் என்பது மெசியாவைக் குறிக்கின்ற சொல்லாடல். மெசியாவாம் இயேசு நீதியின் தளிராக இருப்பதால், அவர் கடவுளின் மகனாகின்றார். மேலும் அவர் கனிவும் மனத்தாழ்ச்சியும் உடையவராக இருப்பதாலும் (மத் 11: 28) கடவுளின் மகனாகின்றார்.

இவ்வாறு இயேசு நீதிமானாய் - நீதியின் தளிராய் - இருந்து, கனிவு, மனத்தாழ்ச்சி பொறுமை போன்ற பண்புகளைக்கொண்டு கடவுளின் மகனாக இருப்பது போல், யாரெல்லாம் கனிவு, மனத்தாழ்ச்சி, பொறுமை போன்ற பண்புகளைக் கொண்டு வாழ்கின்றார்களோ அவர்களின் கடவுளின் மக்களாகின்றார்கள். கடவுளின் மக்களாக இருக்கும் அவர்களுக்கு இன்றைய முதல்வாசகத்தில் நாம் வாசிப்பது போலக் கடவுள் அவர்களைப் பகைவர்களிடமிருந்து விடுவித்து, உதவி செய்வார்.

நாம் யாராக இருக்கப் போகிறோம்?

ஆணவம் கொண்டோர் அலகையின்மக்கள் எனவும், கனிவும் மனத்தாழ்ச்சியும் கொண்டோர் கடவுளின்மக்கள் என்றும் இதுவரையில் சிந்தித்தோம். இப்பொழுது இந்த இருவரில் நாம் யாராக இருக்கப்போகிறோம் என்று சிந்திப்போம்.

இணைச்சட்ட நூலில் நாம் வாசிப்பதுபோல், கடவுள் நமக்கு முன்பு வாழ்வையும் சாவையும், நன்மையையும் தீமையையும் வைத்துள்ளார் (இச 30: 15). இதில் நாம் எதைத் தேர்ந்தெடுக்கின்றோம் என்பதைப் பொறுத்தே நமது வாழ்வும் தாழ்வும் அடங்கியுள்ளது. ஆணவம் நம்மை அலகையின் மக்களாக்கி அழிவுக்கு இட்டுச்செல்லும் எனில், கனிவும் மனத்தாழ்ச்சியும் நம்மைக் கடவுளின் மக்களாக்கி வாழ்வுக்கு இட்டுச் செல்லும் என்பது உறுதி. இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடல், “என் தலைவர் வாழ்வுக்கு ஆதரவாய் உள்ளோருடன் இருக்கின்றார்” என்கிறது.. வாழ்வுக்கு ஆதரவாய் இருப்போர் கனிவும் மனத்தாழ்சியும் கொண்டவரே! எனவே, நாம் ஆணவத்தை அல்ல, கனிவையும் மனத்தாழ்ச்சியையும் கொண்டு வாழ்ந்து, கடவுளின் மக்களாவோம்.

சிந்தனை:

‘கடவுளின் ஆவியால் இயக்கப்படுபவர்களே கடவுளின் மக்கள்’ (உரோ 8: 14) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் கடவுளின் ஆவியால் இயக்கப்பட்டுக் கடவுளின் மக்களாவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

 

 


 
Free Blog Widget
Stats Counter
hit counter