maraikal
MUM
"

 
 
 
இளையோர்
 
 
 
 
 
 
 
 
 
 
 

                     பொதுக்காலம் 2ஆம் ஞாயிறு


முதல் வாசகம்
 

மணமகன் மணப்பெண்ணில் மகிழ்வதுபோல் உன் கடவுள் உன்னில் மகிழ்வார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 62: 1-5

சீயோனின் வெற்றி வைகறை ஒளியெனவும், அதன் மீட்பு சுடர் விளக்கெனவும் வெளிப்படும்வரை, அதனை முன்னிட்டு மவுனமாயிரேன்; எருசலேம் பொருட்டுச் செயலற்று அமைதியாயிரேன். பிற இனத்தார் உன் வெற்றியைக் காண்பர்; மன்னர் யாவரும் உன் மேன்மையைப் பார்ப்பர்; ஆண்டவர் தம் நாவினால் சூட்டும் புதியதொரு பெயரால் நீ அழைக்கப்படுவாய். ஆண்டவரின் கையில் நீ அழகிய மணிமுடியாகத் திகழ்வாய்; உன் கடவுளின் கரத்தில் அரச மகுடமாய் விளங்குவாய்.

‘கைவிடப்பட்டவள்’ என்று இனி நீ பெயர் பெற மாட்டாய்; ‘பாழ்பட்டது’ என இனி உன் நாடு அழைக்கப்படாது; நீ ‘எப்சிபா’ என்று அழைக்கப் படுவாய்; உன் நாடு ‘பெயுலா’ என்று பெயர்பெறும். ஏனெனில், ஆண்டவர் உன்னை விரும்புகின்றார்; உன் நாடு மணவாழ்வு பெறும்.

இளைஞன் கன்னிப் பெண்ணை மணப்பது போல உன்னை எழுப்பியவர் உன்னை மணந்துகொள்வார்; மணமகன் மணப்பெண்ணில் மகிழ்வது போல் உன் கடவுள் உன்னில் மகிழ்வார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 96: 1,2a. 2b-3. 7-8a. 9-10ac (பல்லவி: 3b) Mp3

பல்லவி: அனைத்து மக்களுக்கும் ஆண்டவரின் வியத்தகு செயல்களை அறிவியுங்கள்.

1
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;
2a
ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள். - பல்லவி

 
2b
அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள்.
3
பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். - பல்லவி

 
7
மக்களினங்களின் குடும்பங்களே, ஆண்டவருக்குச் சாற்றுங்கள்; மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள்.
8a
ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள். - பல்லவி

 
9
தூய கோலத்துடன் ஆண்டவரை வழிபடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, அவர் திருமுன் நடுங்குங்கள்.
10ac
வேற்றினத்தாரிடையே கூறுங்கள்; ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்; அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார். - பல்லவி

 

இரண்டாம் வாசகம்

தூய ஆவியார் தம் விருப்பம்போல் ஒவ்வொருவருக்கும் கொடைகளைப் பகிர்ந்தளிக்கிறார்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 4-11

சகோதரர் சகோதரிகளே,

அருள் கொடைகள் பலவகையுண்டு; ஆனால் தூய ஆவியார் ஒருவரே. திருத்தொண்டுகளும் பலவகையுண்டு; ஆனால் ஆண்டவர் ஒருவரே. செயல்பாடுகள் பலவகையுண்டு; ஆனால் கடவுள் ஒருவரே. அவரே எல்லாரிடமும் எல்லாவற்றையும் செயல்படுத்துபவர்.

பொது நன்மைக்காகவே தூய ஆவியாரின் செயல்பாடுகள் ஒவ்வொருவரிலும் வெளிப்படுகிறது. தூய ஆவியார் ஒருவருக்கு ஞானம் நிறைந்த சொல்வளத்தை அருளுகிறார். இன்னொருவருக்கோ அதே ஆவியார் அறிவு செறிந்த சொல்வளத்தை அளிக்கிறார். அதே ஆவியார் வேறொருவருக்கு நம்பிக்கை அருளுகிறார். அந்த ஒரே ஆவியார் மற்றொருவருக்குப் பிணி தீர்க்கும் அருள் கொடையையும் அளிக்கிறார். தூய ஆவியார் ஒருவருக்கு வல்ல செயல் செய்யும் ஆற்றலையும், இன்னொருவருக்கு இறைவாக்கு உரைக்கும் ஆற்றலையும், வேறொருவருக்கு ஆவிக்குரியவற்றைப் பகுத்தறியும் ஆற்றலையும், மற்றொருவருக்குப் பல்வகை பரவசப் பேச்சுப் பேசும் ஆற்றலையும், பிறிதொருவருக்கு அப்பேச்சை விளக்கும் ஆற்றலையும் அருளுகிறார்.

அந்த ஒரே ஆவியாரே இவற்றையெல்லாம் செயல்படுத்துகிறார்; அவரே தம் விருப்பம்போல் ஒவ்வொருவருக்கும் இவற்றைப் பகிர்ந்தளிக்கிறார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

2 தெச 2: 14

அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாட்சியை நீங்கள் அடையும் பொருட்டே, நாங்கள் அறிவித்த நற்செய்தியின் வழியாக அவர் உங்களை அழைத்தார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

கானாவில் இயேசு செய்த முதல் அரும் அடையாளத்தில் தம் மாட்சியை வெளிப்படுத்தினார்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-12

கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார். இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்புப் பெற்றிருந்தனர். திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்துபோகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, “திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது” என்றார். இயேசு அவரிடம், “அம்மா, அதைப் பற்றி நாம் என்ன செய்ய முடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே” என்றார். இயேசுவின் தாய் பணியாளரிடம், “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” என்றார்.

யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளும். இயேசு அவர்களிடம், “இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்” என்று கூறினார். அவர்கள் அவற்றை விளிம்புவரை நிரப்பினார்கள். பின்பு அவர், “இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டுபோங்கள்” என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள்.

பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை; தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது. ஆகையால் பந்தி மேற்பார்வையாளர் மணமகனைக் கூப்பிட்டு, “எல்லாரும் நல்ல திராட்சை இரசத்தை முதலில் பரிமாறுவர்; யாவரும் விருப்பம்போலக் குடித்தபின்தான் தரம் குறைந்த இரசத்தைப் பரிமாறுவர். நீர் நல்ல இரசத்தை இதுவரை பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்?” என்று கேட்டார்.

இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன் வழியாக அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர். இதன் பிறகு அவரும் அவர் தாயும் சகோதரர்களும் அவருடைய சீடரும் கப்பர்நாகும் சென்று அங்குச் சில நாள்கள் தங்கியிருந்தனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 


பொதுக் காலத்தின் இரண்டாம் ஞாயிறு


I எசாயா 62: 1-5
II 1கொரிந்தியர் 12: 4-11
III யோவான் 2: 1-12

“உன் வெற்றி வைகறை ஒளியென இருக்கும்”

பெருந்தோல்விக்குப் பின் மிகப்பெரிய வெற்றி:

‘எத்தனை காலம்தான் அடிமையாய் இருப்பது? நாட்டை அடக்கி ஆண்டுகொண்டிருப்பவர்களின் கொட்டத்தை முறியடித்து, நாட்டு மக்களைச் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கச் செய்யவேண்டும். அதற்கு நான் ஏதாவது செய்யவேண்டும்’ என்று நினைத்த அந்த இளைஞன், நாட்டிலிருந்த தன்னைப் போன்ற துடிப்புமிக்க இளைஞர்களையெல்லாம் ஒருங்கிணைந்தான். பின்னர் அவன் ஒரு குறிப்பிட்ட நாளில் தன்னோடு இருந்த இளைஞர் படையைத் திரட்டிக்கொண்டு, தங்களை அடக்கி ஆண்டுகொண்டிருந்த நாட்டோடு போர்புரிய புறப்பட்டுச் சென்றான்.

போரில் அவன் எதிர்பார்த்தது நடைபெறவில்லை. அவனுடைய படையிலிருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மடிந்தார்கள்; பன்னிரண்டாயிரம் வீரர்கள் மட்டுமே எஞ்சி இருந்தார்கள். இதனால் அந்த இளைஞன், “இவ்வளவு குறைவாக வீர்ரர்களை வைத்துக்கொண்டு, வலிமை வாய்ந்த எதிரி நாட்டுப் படையோடு போரிட்டு வெற்றி பெறுவது சாத்தியமில்லாதது’ என்று சோர்ந்து போனான்.

அப்பொழுது அவனிடம் வந்த படைவீரன் ஒருவன், “தலைவரே! போரில் மிகப்பெரிய தோல்வி ஏற்பட்டுவிட்டது என நினைத்து நீங்கள் சோர்ந்துபோயிருக்கிறீர்கள்; ஆனால், நம்முடைய படையில் உள்ள வீரன் ஒருவன் அங்கே வீரர்களை ஒன்றுதிரட்டி அவர்களிடம், ‘போரில் நம்மால் வெற்றி பெற முடியும்” நம்பிக்கையூட்டிக் கொண்டிருக்கின்றான்” என்றான். இச்செய்தி அந்த இளைஞனுக்கு நம்பிக்கையூட்டியது. அதனால் அவன் வீரர்களை ஒன்று திரட்டி, எதிரிநாட்டுப் படையோடு போரிட்டு, நாட்டிற்கு வெற்றியைத் தேடித் தந்து, நாட்டு மக்கள் அனைவரும் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்குமாறு செய்தான்.

இப்படி அடிமைப்பட்டுக் கிடந்த மக்களைச் சுதந்தரக் காற்றைச் சுவாசிக்குமாறு செய்த அந்த இளைஞன் வேறு யாரும் அல்ல, அமெரிக்காவின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டனே. அவன் எதிர்த்துப் போரிட்ட நாடு இங்கிலாந்து.

ஆம், மிகப்பெரிய தோல்விக்குப் பின், வெற்றி கண்டு, அமெரிக்கா சுதந்திரக் காற்றைச் சுவாசித்தது! பொதுக் காலத்தின் இரண்டாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, “உன் வெற்றி வைகறை ஒளியென இருக்கும்” என்ற சிந்தனையைத் தருகின்றது. கடவுள் அளிக்கும் இந்த வெற்றிக்கு ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நாம் சிந்திப்போம்.

வீழ்ச்சிக்குப் பின் எழுச்சி:

‘வாழ்க்கையில் எல்லாமே முடிந்துவிட்டது; இனி மீண்டு எழுவதற்கு வழியே இல்லை’ என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கையில், ஒருவர் ஆதரவாய் நம் தோள்மேல் கைபோட்டு, நம்பிக்கை நிறைந்த வார்த்தைகளை நம்மிடம் சொல்லி, நம்மை மீண்டு எழச் செய்தார் எனில், அந்த மகிழ்ச்சியை வார்த்தையால் விவரித்துச் சொல்ல முடியாது.

பாபிலோனியர்களால் நாடுகடத்தப்பட்ட யூதா நாட்டினர் அன்னிய மண்ணில் அடிமைகளாய் வாழ்ந்தபோது மேற்சொன்னது போன்று ‘எல்லாமே முடிந்துவிட்டது; இனி மீண்டு எழுவதற்கு வழியே இல்லை’ என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர் எசாயா வழியாக, “சீயோனின் வெற்றி வைகறை ஒளியென இருக்கும்” என்கிறார். வைகைறை ஒளியானது புதிதானது; புதுமையானது; புத்துணர்வு ஊட்டக்கூடியது. இத்தகைய வெற்றியை ஆண்டவர் யூதா நாட்டினருக்கு அளிப்பதாக வாக்குறுதி அளிக்கின்றார்.

தொடர்ந்து அவர் அவர்களிடம் கூறுகின்றபோது, உன் வெற்றியைப் பிற இனத்தார் காண்பர்; புதிய பெயரால் நீ அழைக்கப்படுவாய்; ஆண்டவர் உன்னை விரும்புகிறார் என்கிறார். கடவுளுக்குக் கீழ்ப்படியாததால் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்த யூதா நாட்டினர், அவரது பேரன்பினாலும் பேரிரக்கத்தினாலும் வெற்றியைக் காண்பர் என்பது எத்துணை ஆறுதலான வார்த்தைகள். இவ்வார்த்தைகள் வெறும் வார்த்தைகளாக அல்லாமல், இயேசுவால் செயல்வடிவம் பெற்றது. அதற்குச் சான்றுதான் இன்றைய நற்செய்தி வாசகம்.

துன்பத்திற்குப் பின் இன்பம்:

கடவுள் அளிக்கின்ற வெற்றி அல்லது விடுதலை என்பது எதிரிகளிடமிருந்து கிடைக்கும் விடுதலை மட்டுமல்ல, துன்பத்திலிருந்தும் தோல்வியிலிருந்தும் பிரச்சனையிலிருந்தும் கிடைக்கும் விடுதலை கூடத்தான்.

யூத இரபிகள் சொல்லக்கூடிய வார்த்தைகள் இவை: “திராட்சை இரசம் இல்லையெனில், மகிழ்ச்சிக்கு வழியில்லை.” ஒரு வாரம் நடைபெறும் யூதர்களின் திருமணக் கொண்டாட்டத்தில் திராட்சை இரசம் முக்கிய இடம் வகிக்கும். அது தீர்ந்துவிட்டால் மணமகன் வீட்டாருக்கு பெரிய அவமானமாகக் கருதப்படும். இயேசு தன் தாய் மற்றும் சீடர்களோடு சென்றிருந்த கானா திருமண விருந்தில் திராட்சை இரசம் தீர்ந்துபோக, இயேசுவின் தாய் அவரிடம் வந்து, “திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது” என்கிறார். இதற்கு இயேசு அளித்த பதில், “எனது நேரம் இன்னும் வரவில்லையே” என்பதாகும்.

“எனது நேரம் இன்னும் வரவில்லையே” என்று இயேசு சொன்னது, அவரது அவரது பாடுகளைக் குறிக்கின்றது (யோவா 7:30, 8:20). தான் பாடுகள் பட்டு, இறந்து, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து, மாட்சியுடன் மீண்டும் வரும்பொழுது திராட்சம் இரசம் மிகுதியாகக் கிடைக்கும் என்கிற பொருளில் இயேசு, “எனது நேரம் இன்னும் வரவில்லையே” என்கிறார். ஏனெனில், மெசியாவின் வருகையின்போது திராட்சை இரசம் மிகுதியாகக் கிடைக்கும் (எரே 31:12; ஓசே 14:7) என்பது கடவுள் தந்த வாக்குறுதி.

இது ஒரு பக்கம் இருக்கைகில், இன்னொரு பக்கம் இயேசு, மரியாவின் பரிந்துரையின் பெயரில், தண்ணீரைத் திராட்சை இரசமாக்கி, மணமகன் வீட்டாரின் அவலத்தைப் போக்கி, அவர்களது துன்பத்தை இன்பமாக மாற்றுகின்றார். அவலத்தை ஆனந்தமாக மாற்றுகின்றார்.

பெற்ற கொடைகள் பொது நன்மைக்கானாவை

மனித வாழ்க்கையில் துன்பங்களும் தோல்விகளும் இருந்தாலும், அவற்றையெல்லாம் நாம் ஆண்டவரிடம் கொண்டு சென்றால், ஆண்டவர் அவற்றை இன்பமாக மாற்றுவார் என்பதை நற்செய்தியின் வழியாக நாம் அறிந்துகொண்டோம். கடவுள் நமது துன்பத்தை இன்பமாக மாற்றவேண்டும் என்றால், அதற்கு நாம் ஒரு முக்கியமான செயலைச் செய்யவேண்டும். அதுதான், தூய ஆவியார் கொடுத்திருக்கின்ற கொடைகளை நமக்காக அல்ல, பொதுநன்மைக்காகப் பயன்படுத்து ஆகும். இது நாம் நமது மனத்தில் பதிய வைக்கவேண்டிய முக்கியமான செய்தி.

சொல்வடிவில் உள்ள அருள்கொடைகள், செயல்வடிவில் உள்ள அருள்கொடைகள் என இருவகையான அருள்கொடைகளைத் தூய ஆவியார் தந்திருக்கின்றார். இக்கொடைகளைப் பெற்றுக்கொண்டவர்கள் பொதுநன்மைக்காகவே பயன்படுத்த வேண்டும் என்று பவுல் இன்றைய இரண்டாம் வாசகத்தில் ஒவ்வொருவருக்கும் அழைப்பு விடுக்கின்றார். இந்த உலகத்தில் மனிதருக்கு வரும் பலவிதமான துன்பங்களுக்குக் காரணம், அவனது தன்னலமாகவே இருக்கும். எனவே, நாம் தன்னலத்தோடு வாழ்வதை விடுத்து, தூய ஆவியாரின் அருள்கொடைகளை, ஆண்டவரோடு ஒன்றித்துப் பொதுநன்மைக்காகப் பயன்படுத்திவிட்டால், ஆண்டவருடைய அருளால் நமது துன்பமெல்லாம் இன்பமாக மாறும். எனவே, நாம் நமக்கு வெற்றி அளிக்கின்ற ஆண்டவரோடு ஒன்றித்து வாழ்ந்து, அவரது மாட்சி விளங்கச் செய்து, அவர் தரும் எல்லா ஆசிகளையும் பெற்று மகிழ்வோம்.

சிந்தனைக்கு:

‘கடவுள் உமக்கு முழு வெற்றி அளிப்பார்’ (யூதி 11:6) என்கிறது இறைவார்த்தை. எனவே, நமக்கு வெற்றி அளிக்கும் ஆண்டவரிடம் தஞ்சம் அடைந்து, அவரது வார்த்தைகளின் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

 

 


 
Free Blog Widget
Stats Counter
hit counter