maraikal
MUM
"

 
 
 
இளையோர்
 
 
 
 
 
 
 
 
 
 
 

                                             பொதுக்காலம் 11ஆம் வாரம் - ஞாயிறு

முதல் வாசகம்

தாழ்ந்த மரத்தை ஓங்கச் செய்துள்ளேன்.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 17: 22-24

தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உயர்ந்த கேதுரு மரத்தின் நுனிக் கிளை ஒன்றை எடுத்து நானே நடுவேன். இளங்கொழுந்து ஒன்றை அதன் நுனிக் கொப்புகளிலிருந்து கொய்து, ஓங்கி உயர்ந்ததொரு மலைமேல் நான் நடுவேன்.

இஸ்ரயேலின் மலையுச்சியில் நான் அதை நடுவேன். அது கிளைத்து, கனி தந்து, சிறந்த கேதுரு மரமாகத் திகழும். அனைத்து வகைப் பறவைகளும் அதனைத் தம் உறைவிடமாகக் கொள்ளும். அதன் கிளைகளின் நிழல்களில் அவை வந்து தங்கும்.

ஆண்டவராகிய நான் ஓங்கிய மரத்தைத் தாழ்த்தி, தாழ்ந்த மரத்தை ஓங்கச் செய்துள்ளேன் என்றும், பசுமையான மரத்தை உலரச் செய்து, உலர்ந்த மரத்தைத் தழைக்கச் செய்துள்ளேன் என்றும், அப்போது வயல்வெளி மரங்களெல்லாம் அறிந்து கொள்ளும். ஆண்டவராகிய நானே உரைத்துள்ளேன்; நான் செய்து காட்டுவேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 92: 1-2. 12-13. 14-15 (பல்லவி: 1b காண்க) Mp3

பல்லவி: உமது பெயரைப் பாடுவது உன்னதரே நன்று.

1
ஆண்டவருக்கு நன்றியுரைப்பது நன்று; உன்னதரே! உமது பெயரைப் புகழ்ந்து பாடுவது நன்று.
2
காலையில் உமது பேரன்பையும் இரவில் உமது வாக்குப் பிறழாமையையும் எடுத்துரைப்பது நன்று. - பல்லவி

 
12
நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்; லெபனோனின் கேதுரு மரமெனத் தழைத்து வளர்வர்.
13
ஆண்டவரின் இல்லத்தில் நடப்பட்டோர் நம் கடவுளின் கோவில் முற்றங்களில் செழித்தோங்குவர். - பல்லவி

 
14
அவர்கள் முதிர் வயதிலும் கனி தருவர்; என்றும் செழுமையும் பசுமையுமாய் இருப்பர்;
15
‘ஆண்டவர் நேர்மையுள்ளவர்; அவரே என் பாறை; அவரிடம் அநீதி ஏதுமில்லை’ என்று அறிவிப்பர். - பல்லவி

 

இரண்டாம் வாசகம்

நாம் இவ்வுடலில் குடியிருந்தாலும் குடிபெயர்ந்தாலும் அவருக்கு உகந்தவராய் இருப்பதே நம் நோக்கம்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 6-10

சகோதரர் சகோதரிகளே,

நாங்கள் எப்போதும் துணிவுடன் இருக்கிறோம். இவ்வுடலில் குடியிருக்கும் வரையில் நாம் ஆண்டவரிடமிருந்து அகன்று இருக்கிறோம் என்பது நமக்குத் தெரியும். நாம் காண்பவற்றின் அடிப்படையில் அல்ல, நம்பிக்கையின் அடிப்படையிலேயே வாழ்கிறோம். நாம் துணிவுடன் இருக்கிறோம். இவ்வுடலை விட்டகன்று ஆண்டவரோடு குடியிருக்கவே விரும்புகிறோம்.

எனவே நாம் இவ்வுடலில் குடியிருந்தாலும் அதிலிருந்து குடிபெயர்ந்தாலும் அவருக்கு உகந்தவராய் இருப்பதே நம் நோக்கம். ஏனெனில் நாம் அனைவருமே கிறிஸ்துவின் நடுவர் இருக்கை முன்பாக நின்றாக வேண்டும். அப்போது உடலோடு வாழ்ந்தபோது நாம் செய்த நன்மை தீமைக்குக் கைம்மாறு பெற்றுக்கொள்ளுமாறு ஒவ்வொருவரின் செயல்களும் வெளிப்படும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இறைவாக்கு வித்தாகும்; கிறிஸ்துவே விதைப்பவர்; அவரைக் கண்டடைகிறவன் என்றென்றும் நிலைத்திருப்பான். அல்லேலூயா.
 

நற்செய்தி வாசகம்

எல்லா விதைகளையும்விடச் சிறியது. எல்லாச் செடிகளையும் விடப் பெரிதாகிறது.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 26-34

அக்காலத்தில்

இயேசு மக்கள் கூட்டத்தை நோக்கிக் கூறியது: “இறையாட்சியைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளர்கிறது. முதலில் தளிர், பின்பு கதிர், அதன் பின் கதிர் நிறைய தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது. பயிர் விளைந்ததும் அவர் அரிவாளோடு புறப்படுகிறார்; ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது” என்று கூறினார்.

மேலும் அவர், “இறையாட்சியை எதற்கு ஒப்பிடலாம்? அல்லது எந்த உவமையால் அதை எடுத்துச் சொல்லலாம்? அது கடுகு விதைக்கு ஒப்பாகும். அது நிலத்தில் விதைக்கப்படும் பொழுது உலகிலுள்ள எல்லா விதைகளையும் விடச் சிறியது. அது விதைக்கப்பட்ட பின் முளைத்தெழுந்து எல்லாச் செடிகளையும் விடப் பெரிதாகி, வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக்கூடிய அளவுக்குப் பெருங்கிளைகள் விடும்” என்று கூறினார்.

அவர்களது கேட்டறியும் திறமைக்கு ஏற்ப, அவர் இத்தகைய பல உவமைகளால் இறைவார்த்தையை அவர்களுக்கு எடுத்துரைத்து வந்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு பேசவில்லை. ஆனால் தனிமையாக இருந்தபோது தம் சீடருக்கு அனைத்தையும் விளக்கிச் சொன்னார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 

 

I எசேக்கியேல் 17: 22-24
II 2 கொரிந்தியர் 5: 6-10
III மாற்கு 4: 26-34

நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்வோம்

நிகழ்வு

அன்பு என்றொரு பன்னிரண்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த மாணவன் ஒருவன் இருந்தான். படிப்பில் கெட்டிக்காரனாக இருந்த இவன், மரியன்னையிடம் மிகுந்த பற்றுக்கொண்டிருந்தான். இப்படிப்பட்டவன் அரசுப் பொதுத்தேர்வை எழுதச் செல்வதற்கு முன்பாகத் தன் ஊரில் இருந்த மரியன்னையின் திருவுருத்திற்கு முன்பாக நான்கு மெழுகுதிரிகளை ஏற்றி வைத்துக் கண்களை மூடி உருக்கமாக வேண்டினான். இவன் மரியன்னையிடம் வேண்டிவிட்டுக் கண்களைத் திறந்தபொழுது, நான்கு திரிகளில் மூன்று மெழுகுதிரிகள் அணைந்துபோயிருந்தன.

இவனுக்கு அழுகையாய் வந்தது. ‘நான் ஏற்றி வைத்த நான்கு மெழுகுதிரிகளில் மூன்று அணைந்துபோய்விட்டனவே... நான் எழுதப்போகின்ற தேர்வு எப்படி இருக்குமோ?’ என்று இவன் அழுதுகொண்டே மெழுகுதிரிகளின் அருகில் சென்றான். அப்பொழுது அணையாமல் எரிந்துகொண்டிருந்த மெழுகுதிரி இவனிடம், “மூன்று மெழுகுதிரிகள் அணைந்துவிட்டன என்று கவலைப்பாடதே! நான் எரிந்துகொண்டிருக்கின்றேனே என்று மகிழ்ச்சி கொள்” என்றது. இதைக் கேட்டுப் பெரிதும் மகிழ்ந்த அன்பு, “ஆமாம். என்னிடம் இவ்வளவு நம்பிக்கையோடு பேசுகின்றாயே! நீ யார்?” என்றான். உடனே அணையாமல் எரிந்துகொண்டிருந்த அந்த மெழுகுதிரி, “என் பெயர் நம்பிக்கை! இந்த மூன்று மெழுகுதிரிகளின் பெயர்கள் முறையே அன்பு, அறிவு, அமைதி ஆகும்” என்றது. தொடர்ந்து அது அவனிடம், “என்னை எடுத்து, இந்த மூன்று மெழுகுதிரிகளையும் பற்றவை. அவையும் என்னைப் போன்று ஒளிமயமாய் எரியும்” என்றது. எனவே அவன், நம்பிக்கை என்ற மெழுகுதிரியை எடுத்து, மூன்று மெழுகுதிரிகளையும் பற்ற வைத்தான். இதனால் அவையும் ஒளிமயமாக எரிந்தன.

நம்மிடம் நம்பிக்கை இருந்தால் போதும், அது நமது வாழ்வையே ஒளிமயமாக்கிவிடும் என்பதைத்தான் இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகின்றது. பொதுக்காலத்தின் பதினொன்றாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, “நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்வோம்” என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்ந்த புனித பவுல்

ஆண்டவர்மீதுகொண்ட நம்பிக்கைக்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டாய் விளங்கியவர் புனித பவுல். அதற்குச் சான்றாய் இருப்பதுதான் இன்றைய இரண்டாம் வாசகம். கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல், “நாம் காண்பவற்றின் அடிப்படையில் அல்ல, நம்பிக்கையின் அடிப்படையிலேயே வாழ்கின்றோம்” என்கின்றார்.

புனித பவுல் இத்தகைய வார்த்தைகளை எத்தகைய பின்னணியில் கூறினார் என்ற பின்னணியைத் தெரிந்துகொண்டால், அவர் கூறிய வார்த்தைகளின் பொருள் இன்னும் நன்றாய் விளங்கும். விண்ணகத்தில் ஆண்டவரோடு இருப்பதைப் பற்றிப் பேசும் புனித பவுல், “இவ்வுடலில் குடியிருக்கும்வரை நாம் ஆண்டவரிடமிருந்து அகன்று இருக்கின்றோம்” என்கின்றார். அப்படியானால், ஒருவர் ஆண்டவரோடு ஒன்றித்திருக்க வேண்டும் என்றால், அவர் தன் உடலிலிருந்து பிரிந்து செல்லவேண்டும். இதை வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், நாம் இவ்வுலக வாழ்க்கையை அல்ல, மேலுலகு சார்ந்த வாழ்க்கையினை வாழவேண்டும் (கொலோ 3:1). எ[[எப்பொழுது நாம் மேலுலகு சார்ந்த வாழ்க்கை வாழ்கின்றோமோ, அப்பொழுது ஆண்டவரை விட்டு அகன்றிருக்கும் நாம், அவரோடு ஒன்றிருக்கமுடியும். இதற்கு நம்பிக்கை என்பது அடிப்படையாக இருக்கின்றது.

புனித பவுல் இந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் வாழ்ந்தார். புனித பவுல் நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்ந்து, நம்மையும் அந்த நம்பிக்கையின் அடிப்படையில் வாழச் சொல்வதன்மூலம், “நம்பிக்கை என்பது எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி; கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை” (எபி 11: 1) என்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் தருகின்றார்.

நம்பிக்கையோடு இருக்கையில் விதை விருட்சமாகும்

நாம் ஒவ்வொருவரும் நம்பிக்கையின் அடிப்படையில் வாழவேண்டும் என்று புனித பவுல் இரண்டாம் வாசகத்தில் சொன்னதைக் குறித்து சிந்தித்தோம். இப்பொழுது நம்பிக்கையோடு இருந்தால், விதை விருச்சமாகும் அல்லது நமது வாழ்வு வசந்தமாகும் என்ற செய்தியைக் கூறும் நற்செய்தி வாசகத்தைக் குறித்து சிந்திப்போம்.

நற்செய்தியில் இயேசு, ‘முளைத்துத் தானாக வளரும் விதை உவமை’, ‘கடுகு விதை உவமை’ ஆகிய இரண்டு உவமைகளைக் குறித்துப் பேசுகின்றார். இந்த இரண்டு உவமைகளும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை போன்று தோன்றினாலும், அவை நெருங்கிய தொடர்புடையை என்று சொல்லலாம். முளைத்துத் தானாக வளரும் விதை உவமையில், மனிதன் பங்கேற்பு எதுவுமே இல்லை; ஆனால் அந்த விதை தானாக முளைத்து விளைச்சலைத் தருகின்றது. கடுகு விதை உவமையில், விதைப்பவர் மிகச் சிறிய விதையை மட்டுமே விதைக்கின்றார்; ஆனால், அது எல்லாச் செடிகளையும் விடப் பெரிதாகி, வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக்கூடிய அளவுக்குப் பெருங்கிளைகள் விடுகின்றன. இயேசு இந்த இரண்டு உவமைகளின் வழியாகச் சொல்ல வருகின்ற செய்தி, “கடவுளே விளையச் செய்தார்” (1 கொரி 3: 6) என்ற வார்த்தைகளை நமக்கு நினைவுபடுத்துகின்றன. ஆம், கடவுளே விதைகளை விளையச் செய்கின்றார் என்பதால், நாம் கடுகு விதைகளைப் போன்று வயதில் சிறியவர்களாக, வறியவர்களாக இருந்தாலும், புனித பவுலைப் போன்று ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து, அதனடிப்படையில் வாழ்ந்தோமெனில் நம் வழியாகக் கடவுள் வல்ல செயல்களைச் செய்வார் என்பது உறுதி.

நம்பிக்கையோடு இருப்பவருக்குத் தக்க கைம்மாறு உண்டு

நாம் வயதில் சிறியவர்களாக, பொருளாதாரத்தில் எளியவர்களாக.... இருந்தாலும், ஆண்டவரில் நம்பிக்கை வைத்து வாழ்ந்தோமெனில், கடவுள் நம் வழியாய் வல்ல செயல்களைச் செய்வார் என்று சிந்தித்தோம். நாம் கடவுள்மீது நம்பிக்கை வைத்து வாழவேண்டும்... அவ்வாறு நாம் வாழும்போது கடவுள் நமக்கு எத்தகைய கைம்மாறு தருவார் என்பதைக் குறித்து நாம் சிந்திப்போம்.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம் ஆண்டவர் உரைப்பதாக, “உயர்ந்த கேதுரு மரத்தின் நுனிக் கிளை ஒன்றை எடுத்து நானே நடுவேன். இளங்கொழுந்து ஒன்றை அதன் நுனிக் கொப்பிலிருந்து கொய்து, ஓங்கி உயர்ந்ததொரு மலைமேல் நான் நடுவேன்” என்று கூறுகின்றது. இங்குக் குறிப்பிடப்படும் கிளையை மெசியாவாம் இயேசுவோடு ஒப்பிடலாம் (எசா 4: 2); இளங்கொழுந்தை நம்மோடு ஒப்பிடலாம். ஆம், இளங்கொழுந்து போன்ற நம்மை ஆண்டவராகிய கடவுள் உயர்ந்ததொரு மலைமேல் நடுகின்றார் எனில், நாம் அதற்கேற்றாற்போல் ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து, மிகுந்த கனி தரவேண்டும்; வானத்துப் பறவைகளைப் போன்ற மக்களை, நமது சாட்சிய வாழ்வால் கடவுளின் மக்கள் ஈர்க்கவேண்டும். இவ்வாறு நாம் கடவுளின்மீது நம்பிக்கை வைத்துக் கனிகொடுக்கும்பொழுது, கடவுள் நமக்கு அதற்கேற்ப கைம்மாறு தருவார். அதை இன்றைய இரண்டாம் வாகத்தின் இறுதியில் புனித பவுல் மிக அழகாகச் சொல்கின்றார்.

ஆதலால், நாம் புனித பவுலைப் போன்று நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்ந்து, இயேசுவுக்குச் சான்று பகர்ந்து, அவர் தரும் ஆசிகளைப் பெறுவோம்.

சிந்தனை:

‘ஆயுதங்கள் இல்லாமல் போர்க்களம் போகலாம்; அவநம்பிக்கையோடு அடுப்படியும் தாண்டாதே!’ என்பார் கவிஞர் பா. விஜய். எனவே, நாம் நம்முடைய வாழ்வை அவ நம்பிக்கையின் அடிப்படையில் அல்ல, ஆண்டவர் இயேசுவின்மீது கொண்ட நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

 

 


 
Free Blog Widget
Stats Counter
hit counter