maraikal
MUM
"

 
 
 
இளையோர்
 
 
 
 
 
 
 
 
 
 
 

                                                பாஸ்காக்காலம் 5ஆம் வாரம் - ஞாயிறு



முதல் வாசகம்

பவுல் ஆண்டவரை வழியில் கண்டது பற்றி பர்னபா திருத்தூதர்களுக்கு விளக்கிக் கூறினார்.


திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 9: 26-31


அந்நாள்களில்

சவுல் எருசலேம் நகரத்துக்கு வந்தபோது சீடர்களுடன் சேர்ந்துகொள்ள முயன்றார். ஆனால் அவரும் ஒரு சீடர் என்பதை நம்பாமல் அனைவரும் அவரைக் கண்டு அஞ்சினர்.

பர்னபா அவருக்குத் துணை நின்று அவரைத் திருத்தூதர்களிடம் அழைத்துச் சென்றார். பவுல் ஆண்டவரை வழியில் கண்டது பற்றியும் ஆண்டவர் அவரோடு பேசியது பற்றியும் அவர் தமஸ்குவில் இயேசுவின் பெயரால் துணிவுடன் உரையாடியது பற்றியும் பர்னபா அவர்களுக்கு விளக்கிக் கூறினார். அதன்பின் சவுல் அவர்களோடு சேர்ந்து எருசலேமில் அங்கும் இங்குமாகச் சென்று ஆண்டவரின் பெயரால் துணிவுடன் பேசி வந்தார். கிரேக்க மொழி பேசும் யூதரிடம் சென்று அவர்களோடு வாதாடினார். அவர்கள் அவரைக் கொன்றுவிட முயன்றார்கள். ஆனால் அவரோடு இருந்த சகோதரர்கள் இதை அறிந்து அவரைச் செசரியாவுக்குக் கூட்டிச் சென்று அங்கிருந்து தர்சு நகருக்கு அனுப்பி வைத்தார்கள்.

யூதேயா, கலிலேயா, சமாரியா ஆகிய பகுதிகளிலெல்லாம் திருச்சபை வளர்ச்சியுற்று, ஆண்டவருக்கு அஞ்சி நடந்து, அமைதியில் திளைத்து, தூய ஆவியாரின் துணையால் பெருகிவந்தது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 22: 25b-26. 27,29. 30-31 (பல்லவி: 25a) Mp3

பல்லவி: ஆண்டவரே, நான் செலுத்தும் புகழ் உம்மிடமிருந்து எழுவதாக!

அல்லது: அல்லேலூயா.
25b
உமக்கு அஞ்சுவோர் முன்னிலையில் என் பொருத்தனைகளைச் செலுத்துவேன்.
26
எளியோர் உணவு உண்டு நிறைவு பெறுவர்; ஆண்டவரை நாடுவோர் அவரைப் புகழ்வராக! அவர்கள் இதயம் என்றென்றும் வாழ்வதாக! - பல்லவி

27
பூவுலகின் கடையெல்லைவரை உள்ளோர் அனைவரும் இதை உணர்ந்து ஆண்டவர் பக்கம் திரும்புவர்; பிற இனத்துக் குடும்பத்தார் அனைவரும் அவர் முன்னிலையில் விழுந்து பணிவர்.
29
மண்ணின் செல்வர் யாவரும் அவரைப் பணிவர்; புழுதிக்குள் இறங்குவோர் யாவரும் தம் உயிரைக் காத்துக்கொள்ளாதோரும் அவரை வணங்குவர். - பல்லவி

30
வருங்காலத் தலைமுறையினர் அவரைத் தொழுவர்; இனிவரும் தலைமுறையினருக்கு ஆண்டவரைப் பற்றி அறிவிக்கப்படும்.
31
அவர்கள் வந்து, அவரது நீதியை அறிவிப்பர்; இனி பிறக்கப்போகும் மக்களுக்கு ‘இதை அவரே செய்தார்’ என்பர். - பல்லவி

இரண்டாம் வாசகம்

நம்பிக்கை கொண்டு, அன்பு செலுத்த வேண்டும். இதுவே கிறிஸ்துவின் கட்டளை.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 18-24

பிள்ளைகளே, நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம். இதனால் நாம் உண்மையைச் சார்ந்தவர்கள் என அறிந்துகொள்வோம்; நம் மனச்சான்று நாம் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தாலும், கடவுள் திருமுன் நம் உள்ளத்தை அமைதிப்படுத்த முடியும். ஏனெனில் கடவுள் நம் மனச்சான்றைவிட மேலானவர்; அனைத்தையும் அறிபவர்.

அன்பார்ந்தவர்களே, நம் மனச்சான்று நாம் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதிருந்தால் நாம் கடவுள் திருமுன் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்க முடியும். அவரிடம் நாம் எதைக் கேட்டாலும் பெற்றுக்கொள்வோம்; ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப் பிடிக்கிறோம்; அவர் திருமுன் அவருக்கு உகந்தவற்றையே செய்து வருகிறோம். கடவுள் நமக்குக் கொடுத்த கட்டளைப்படி, அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்த வேண்டும். இதுவே அவரது கட்டளை. கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர் அவரோடு இணைந்திருக்கிறார்; கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார். கடவுள் நம்மோடு இணைந் திருக்கிறார் என்பதை அவர் நமக்கு அருளிய தூய ஆவியால் அறிந்து கொள்கிறோம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 15: 4-5b

அல்லேலூயா, அல்லேலூயா! நான் உங்களோடு இணைந்து இருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். ஒருவர் என்னுடன் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால், அவர் மிகுந்த கனி தருவார்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-8

அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “உண்மையான திராட்சைக் கொடிநானே. என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர். என்னிடமுள்ள கனி கொடாத கிளைகள் அனைத்தையும் அவர் தறித்துவிடுவார். கனி தரும் அனைத்துக் கிளைகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்துவிடுவார். நான் சொன்ன வார்த்தைகளால் நீங்கள் ஏற்கெனவே தூய்மையாய் இருக்கிறீர்கள். நான் உங்களோடு இணைந்து இருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கிளைகள் திராட்சைக் கொடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாகக் கனி தர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனி தர இயலாது. நானே திராட்சைக் கொடி; நீங்கள் அதன் கிளைகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது. என்னோடு இணைந்து இராதவர் கிளையைப் போலத் தறித்து எறியப்பட்டு உலர்ந்து போவார். அக்கிளைகள் கூட்டிச் சேர்க்கப்பட்டு நெருப்பிலிட்டு எரிக்கப்படும். நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும். நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

 
 

 

 


 
Free Blog Widget
Stats Counter
hit counter