maraikal
MUM
"


 

                              பொதுக்காலம் 30 ம் வாரம் - 3ம் ஆண்டு

                                             வாசகம் 27-10-2019

தங்களைத் தாழ்த்துவோரின் வேண்டுதல் முகில்களை ஊடுருவிச் செல்லும்.

சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 35: 12-14, 16-18


ஆண்டவர் நடுவராய் இருக்கிறார்; அவரிடம் ஒருதலைச் சார்பு என்பதே கிடையாது. அவர் ஏழைகளுக்கு எதிராய் எவரையும் ஒருதலைச் சார்பாய் ஏற்கமாட்டார்; தீங்கிழைக்கப்பட்டோரின் மன்றாட்டைக் கேட்பார்.

கைவிடப்பட்டோரின் வேண்டுதலைப் புறக்கணியார். தம்மிடம் முறையிடும் கைம்பெண்களைக் கைவிடார்.

ஆண்டவரின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பணிசெய்வோர் ஏற்றுக் கொள்ளப்படுவர். அவர்களுடைய மன்றாட்டு முகில்களை எட்டும். தங்களைத் தாழ்த்துவோரின் வேண்டுதல் முகில்களை ஊடுருவிச் செல்லும்; அது ஆண்டவரை அடையும்வரை அவர்கள் ஆறுதல் அடைவதில்லை. உன்னத இறைவன் சந்திக்க வரும்வரை அவர்கள் நற்பயிற்சியில் தளர்ச்சியடைவதில்லை; அவர் நீதிமான்களுக்குத் தீர்ப்பு வழங்குகிறார்; தம் தீர்ப்பைச் செயல்படுத்துகிறார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

 

பதிலுரைப் பாடல்

திபா 34: 1-2. 16-17. 18,22 (பல்லவி: 6a) Mp3

பல்லவி: இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்.

1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். 2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். பல்லவி

16 ஆண்டவரின் முகமோ தீமை செய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார். 17 நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். பல்லவி

18 உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். 22 ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை மீட்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகும் எவரும் தண்டனை அடையார். பல்லவி

இரண்டாம் வாசகம்

எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே.

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 6-8, 16-18

அன்பிற்குரியவரே, நான் இப்போதே என்னைப் பலியாகப் படைக்கிறேன். நான் பிரிந்து செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன். என் ஓட்டத்தை முடித்துவிட்டேன். விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே. அதை இறுதி நாளில் ஆண்டவர் எனக்குத் தருவார்; நீதியான அந்த நடுவர் எனக்கு மட்டுமல்ல, அவர் தோன்றுவார் என விரும்பிக் காத்திருக்கும் அனைவருக்குமே தருவார். நான் முதன்முறை வழக்காடியபோது எவரும் என் பக்கம் இருக்கவில்லை; எல்லாரும் என்னை விட்டு அகன்றனர். அக்குற்றம் அவர்களைச் சாராதிருப்பதாக. நான் அறிவித்த செய்தி நிறைவுற்று, அனைத்து நாட்டவரும் அதனைக் கேட்க வேண்டுமென்று ஆண்டவர் என் பக்கம் நின்று எனக்கு வலுவூட்டினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் என்னை விடுவித்தார். தீங்கு அனைத்திலிருந்தும் அவர் என்னை விடுவித்துத் தம் விண்ணரசில் சேர்த்து எனக்கு மீட்பளிப்பார். அவருக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

2 கொரி 5: 19

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக உலகினரைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை அவரே எங்களிடம் ஒப்படைத்தார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


பரிசேயர் அல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 9-14

அக்காலத்தில் தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்: ":இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர். பரிசேயர் நின்றுகொண்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டினார்: 'கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ இந்த வரிதண்டுபவரைப் போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்; வாரத்தில் இரு முறை நோன்பு இருக் கிறேன்; என் வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன்.' ஆனால் வரிதண்டுபவர் தொலையில் நின்றுகொண்டு, வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக் கொண்டு, 'கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்' என்றார். '' இயேசு, ":பரிசேயர் அல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

 



I சீராக் 35: 12-14, 16-16

II 2 திமொத்தேயு 4: 6-8, 16-18

III லூக்கா 18: 9-14


“அவர்களுடைய வேண்டுதல் முகில்களை ஊடுருவிச் செல்லும்'



நிகழ்வு


அது ஒரு கத்தோலிக்கக் கிறிஸ்தவக் குடும்பம். அந்தக் குடும்பத்தில் அண்ணன், தம்பி என இருவர் இருந்தார்கள். இதில் அண்ணன் தவறாது கோயிலுக்குச் செல்வான்; காலையிலும் மாலையிலும் இறைவார்த்தையை வாசித்து, இறைவனிடம் மிக உருக்கமாக மன்றாடுவான். தம்பி அப்படிக் கிடையாது; அவன் கோயிலுக்குச் செல்வதும் கிடையாது; இறைவார்த்தையை வாசித்து, இறைவேண்டலும் செய்வது கிடையாது. இதனால் அண்ணனுடைய உள்ளத்தில் 'தான்தான் நல்லவன்... தம்பி மிகவும் கெட்டவன்' என்ற எண்ணமானது இருந்துகொண்டே இருந்தது.


ஒருநாள் அவர்களுடைய வீட்டிற்கு புதிதாக வந்திருந்த பங்குத்தந்தை இல்லம் சந்திக்க வந்தார். அவர் வீட்டிலிருந்த எல்லாரிடமும் பேசிவிட்டு, அண்ணன் தம்பி இருவரிடமும், “உங்கட்கு இறைவனிடம் வேண்டுகின்ற பழக்கமெல்லாம் இருக்கின்றாதா?' என்று கேட்டார். அதற்கு மூத்தவன் அதாவது, அண்ணன் அவரிடம், “சுவாமி! நான்தான் ஒவ்வொருநாளும் கோயிலுக்குச் சென்று திருப்பலியில் கலந்துகொள்வேன்; காலையிலும் மாலையிலும் இறைவார்த்தையை வாசித்து, இறைவனிடம் வேண்டுவேன். ஆனால், என் தம்பி இவனோ கோயிலுக்கும் செல்வது கிடையாது, இறைவார்த்தை வாசித்து, இறைவனிடம் வேண்டுவதும் கிடையாது; மிகவும் மோசம்' என்றான்.


மூத்தவன் சொன்னதை அமைதியாகக் கேட்டுக்கொண்ட பங்குத்தந்தை அவனிடம், “நீ இப்படி உன்னுடைய தம்பி கோயிலுக்குச் செல்வதில்லை; இறைவார்த்தையை வாசித்து இறைவனிடம் வேண்டுவதில்லை என்று அவனைப் பற்றி குறைகூறிக்கொண்டிருப்பதற்குப் பதில், நீயும் அவனைப் போல் கோயிலுக்குப் போகாமல், இறைவார்த்தையை வாசித்து, இறைவனிடம் வேண்டாமல் இருப்பது எவ்வளவோ மேல்' என்றார். தொடர்ந்து அவர் அவனிடம், “கோயிலுக்குச் சென்று இறைவார்த்தையை வாசித்து, இறைவனிடம் வேண்டும் யாரும் அடுத்தவரைப் பற்றி எப்பொழுதும் குறைகூறிக் கொண்டிருப்பதில்லை' என்றார். பங்குத்தந்தை சொன்ன இச்சொற்கள் அவனுடைய உள்ளத்தில் ஆழமாக இறங்கின. அதன்பிறகு அவன் தன் தம்பியைக் குறித்து குறைகூறிக் கொண்டிருக்கவில்லை.


'தான் நேர்மையாளர், மற்றவர்கள் எல்லாம் மோசம்- பாவி' என்று குறைகூறிக் கொண்டிருக்கின்ற யாரும் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆகமுடியாது, அவர்களுடைய மன்றாட்டைக் கடவுள் ஒருபோதும் கேட்பதில்லை என்ற செய்தியை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. பொதுக்காலத்தின் முப்பதாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தினராய் வாழ அழைப்புத் தருகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.


தன்னைக் குறித்துத் தப்பட்டம் அடித்த பரிசேயர்


நற்செய்தியில் இயேசு தம்மை நேர்மையாளர் என்று நம்பி, மற்றவரை இழிவாக ஒதுக்கிய பரிசேயர்களைப் பார்த்து ஓர் உவமையைச் சொல்கின்றார். இயேசு சொல்லும் உவமையில், இருவர் இறைவனிடம் வேண்டுவதற்குக் கோயிலுக்குச் செல்கின்றார்கள். இதில் முதலாவதாக வருகின்ற பரிசேயர் எப்படி இறைவனிடம் வேண்டினார் என்று சிந்தித்துப் பார்ப்போம்.


இறைவேண்டல் என்றால் இறைவனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் அவர்க்குப் பெருமை சேர்ப்பதாவும் இருக்கவேண்டும் (மத் 6: 9-10) ஆனால், பரிசேயரோ இறைவனுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், இறைவனை முன்னிலைப்படுத்தாமல், தன்னை முன்னிலைப் படுத்துகின்றார். குறிப்பாக அவர் வாரத்திற்கு இரண்டுமுறை நோன்பிருந்ததையும் (ஆண்டிற்கு ஒருமுறை பாவப்பரிகார நாளில் நோன்பிருந்தாலே போதும் (லேவி 16: 29). ஆனாலும் இவர் மக்கட்கு முன்னம் தன்னை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, வாரத்திற்கு இருமுறை நோன்பிருக்கின்றார்), பத்திலொரு பங்கைக் காணிக்கையாகத் தருவதையும் பட்டியலிடுகின்றார் (மத் 23: 23). இதைவிடக் கொடுமை என்னவென்றால், தன்னோடு கோயிலுக்கு வந்து, இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்த வரிதண்டுபவரை மிகவும் தரக்குறைவாகப் பேசுகின்றார்.


இவ்வாறு பரிசேயர் தன்னுடைய இறைவேண்டலில் இறைவனுக்கு முதன்மையான இடம் கொடுக்காமலும் தன்னைக் குறித்துத் தம்பட்டம் அடித்து, மற்றவர்களை இழிவாகப் பேசியதாலும், கடவுளுக்கு ஏற்புடையவராகாமல் போகின்றார்.


தன்னைத் தாழ்த்திக் கொண்ட வரிதண்டுபவர்


பரிசேயருடைய மன்றாட்டு எதனால் கேட்கப்படாமல் போனது என்பதை அறிந்த நாம், வரிதண்டுபவருடைய மன்றாட்டு எதனால் கேட்கப்பட்டது என்பதை அறிந்துகொள்வோம். வரிதண்டுபவர் இறைவனிடம் வேண்டுகின்றபோது வானத்தை அண்ணார்ந்து பார்க்கக்கூடித் துணியாமல், தன் மார்பில் அடித்துக்கொண்டு, “கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்' என்று மன்றாடுவதாக நாம் வாசிக்கின்றோம்.


இதில் மூன்றுவிதமான செயல்கள் உள்ளடங்கி இருக்கின்றன. ஒன்று, வானத்தை அண்ணார்ந்து பார்க்கக்கூடத் துணியாமை; இரண்டு, தன் மார்பில் அடித்துக்கொள்தல்; மூன்று, பாவியாகிய என்மீது இரங்கியருளும்' என்று மன்றாடுதல். இந்த மூன்று செயல்களும் இறைவனுக்கு முன்பாகத் தான் ஒன்றுமில்லை என்று வரிதண்டுபவர் சொல்வதாய் இருக்கின்றன. ஆம், தாழ்ச்சி என்பது வேறொன்றுமில்லை, இறைவனுக்கு முன்பாகத் தான் ஒன்றுமில்ல என்று உணர்வதுதான். வரிதண்டுபவர் கடவுளுக்கு முன்பாகத் தான் ஒன்றுமில்லை என்று உணர்ந்தார். அதனால் அவர் கடவுளுக்கு ஏற்புடையவராகை இல்லம் சென்றார். பரிசேயரோ கடவுளுக்கு முன்பாக தான் பெரிய ஆள் என்று நினைத்தார். அதனால் அவர் கடவுளுக்கு ஏற்புடையவராக ஆகாமல் போனார், அப்படியானால் ஒருவருடைய உயர்வுக்கும் தாழ்வுக்கும் அவரிடம் இருக்கும் தாழ்த்தியே அடிப்படைக் காரணம் என்றால் அது மிகையாகாது.


தம்மைத் தாழ்த்துவோரின் வேண்டுதலே முகில்களை ஊடுருவிச் செல்லும்


இதுவரையில் ஒருவருடைய உயர்வுக்கும் தாழ்வுக்கும் அவரிடம் உள்ள தாழ்ச்சியே காரணம் என்று பார்த்தோம். இன்றைய முதல் வாசகமோ ஒருபடி மேலே போய், தங்களைத் தாழ்த்துவோரின் வேண்டுதல் முகில்களை ஊடுருவிச் செல்லும் என்று கூறுகின்றது. இவ்வார்த்தைகள் இன்றைய நற்செய்தி வாசகத்தோடு அப்படியே பொருந்திப் போவதாக இருக்கின்றன. வரிதண்டுபவர் கடவுளுக்கு முன்பாகத் தான் ஒன்றுமில்லை... பாவி என்று உணர்ந்ததால், அவருடைய மன்றாட்டு, முகில்களை ஊடுருவிச் சென்று, விண்ணத்தை விண்ணகத்தை அடைந்தன. அத்தகைய தாழ்ச்சி நிறைந்த உள்ளம் பரிசேயர்க்கு இல்லாமல் போனால், அவருடைய் மன்றாட்டு முகில்களை ஊடுருவிச் செல்ல முடியவில்லை.

இப்பொழுது நாம் இயேசு சொல்லும் உவமையில் வரும் பரிசேயரைப் போன்று நம்மைப் பற்றித் தம்பட்டம் அடித்துக்கொண்டும் மற்றவர்களை இழிவாகப் பேசிக்கொண்டும் இருக்கின்றோமா? அல்லது வரிதண்டுபவரைப் போன்று தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தினராக இருக்கின்றோமா? சிந்தித்துப் பார்ப்போம். “ஆண்டவர் உள்ளத்தில் செருப்புடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகின்றார் என்றும் தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகின்றார் என்றும் லூக்கா நற்செய்தியில் (லூக் 1: 51,52) நாம் வாசிக்கின்றோம். ஆகையால், நாம் அழிவிற்கு அல்ல, ஆண்டவருடைய அருளை அபரிமிதமாய்ப் பெற்றுத் தரும் தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு வாழக் கற்றுக் கொள்ள முயற்சி செய்வோம்..

சிந்தனை

'மேன்மையடையத் தாழ்ச்சியே வழி' (நீமொ 15: 33) என்கிறது நீதிமொழிகள் நூல். ஆகையால் நாம் உள்ளத்தில் தாழ்ச்சியோடு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

 
Free Blog Widget
Stats Counter
hit counter