maraikal
MUM
வாசகம்

 

                              பொதுக்காலம் 25 ம் வாரம் - 1ம் ஆண்டு

முதல் வாசகம்
இறைவனின் கோவிலைக் கட்டி முடித்து பாஸ்கா விழாக் கொண்டாடுங்கள்.

எஸ்ரா நூலிலிருந்து வாசகம் 6: 7-8, 12b, 14-20


கடவுளின் கோவிலைக் கட்டும் பணியைத் தடை செய்யாதிருங்கள். யூதர்களின் ஆளுநரும், யூதர்களின் மூப்பர்களும் கடவுளின் கோவிலை, அது முன்பு இருந்த இடத்தில், மீண்டும் எழுப்பட்டும். யூதர்களின் மூப்பர் கடவுளின் கோவிலைக் கட்டுவதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி ஆணை பிறப்பிக்கிறேன். அவர்கள் வேலை தடைப்படாதபடி, அதற்கான முழுச் செலவைப் பேராற்றின் அக்கரைப் பகுதியிலிருந்து வரும் வரியாகிய அரச வருவாயினின்று கொடுக்க வேண்டும். தாரியு என்னும் நானே இக்கட்டளையைப் பிறப்பித்தேன். இது சரிவர நிறைவேற்றப்படட்டும்.

இறைவாக்கினர் ஆகாயும் இத்தோவின் மகன் செக்கரியாவும் இறைவாக்கு உரைத்ததன் விளைவாக யூத மூப்பர்கள் கோவிலைக் கட்டினர்; வேலையும் முன்னேறிக் கொண்டிருந்தது. இஸ்ரயேலின் கடவுளது ஆணையாலும், பாரசீக மன்னர்களான சைரசு, தாரியு, அர்த்தக்சஸ்தா ஆகியோரின் கட்டளையாலும் அவர்கள் கட்டடப் பணியை முடித்தனர். மன்னர் தாரியு ஆட்சியின் ஆறாம் ஆண்டிலே, அதார் திங்கள் மூன்றாம் நாளிலே, கோவில் வேலை நிறைவுற்றது.

இஸ்ரயேல் மக்கள், குருக்கள், லேவியர், அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்த ஏனையோர், கடவுளின் கோவில் அர்ப்பண விழாவை அக்களிப்புடன் கொண்டாடினார்கள்.

கடவுளின் கோவில் அர்ப்பண விழாவில் நூறு காளைகளையும், இருநூறு செம்மறிக் கிடாய்களையும், நானூறு செம்மறிக் குட்டிகளையும் ஒப்புக்கொடுத்தார்கள்; இஸ்ரயேல் குலக் கணக்கின்படி, பன்னிரண்டு வெள்ளாட்டுக் கிடாய்களை இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் பாவம் போக்கும் பலியாகச் செலுத்தினார்கள்.

மோசேயின் நூலில் எழுதியுள்ளபடி, எருசலேமில் கடவுளின் பணிக்காகக் குருக்களை அவர்களின் பிரிவின்படியும் லேவியரை அவர்களின் துறைகளின்படியும் அவர்கள் நியமித்தனர். மேலும் அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்த மக்கள் பாஸ்கா விழாவை முதல் மாதத்தின் பதினான்காம் நாள் கொண்டாடினர்.

குருக்களும் லேவியரும் ஒன்றிணைந்து தங்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டனர். அவர்கள் தூய்மையானார்கள். அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்திருந்த எல்லா மக்களுக்காகவும், சகோதரக் குருக்களுக்காகவும், தங்களுக்காகவும் அவர்கள் பாஸ்கா ஆட்டுக்குட்டியைக் கொன்றனர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 122: 1-2. 3-4a. 4b-5 (பல்லவி: 1) Mp3

பல்லவி: மகிழ்வுடன் ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்.

1 "ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்", என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன். 2 எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். பல்லவி

3 எருசலேம் செம்மையாக ஒன்றிணைத்துக் கட்டப்பட்ட நகர் ஆகும். 4ய ஆண்டவரின் திருக்குலத்தார் ஆங்கே செல்கின்றனர். பல்லவி

4b இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைகளுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள். 5 அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 11: 28

அல்லேலூயா, அல்லேலூயா! இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே, என் தாயும் சகோதரர்களும் ஆவார்கள்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 19-21

அக்காலத்தில் இயேசுவின் தாயும் சகோதரர்களும் இயேசுவிடம் வந்தார்கள். ஆனால் மக்கள் திரளாக இருந்த காரணத்தால் அவரை அணுக முடியவில்லை.

" உம் தாயும் சகோதரர்களும் உம்மைப் பார்க்க விரும்பி வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள்'' என்று அவருக்கு அறிவித்தார்கள்.

அவர் அவர்களைப் பார்த்து, " இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

 

சிந்தனை

எஸ்ரா 6: 7-8, 12b, 14-20

“கடவுளின் கோவில் அர்ப்பண விழாவை அக்களிப்புடன் கொண்டாடினார்கள்”

நிகழ்வு

          இடைக்காலத்தில் அரசன் ஒருவன் இருந்தான். அவன் ஆண்டவர்க்கு ஒரு பெரிய கோயில் கட்டத் தொடங்கினான். கோயில் திருப்பணிகள் வேகமாக நடைபெறுவதைப் பார்த்துவிட்டு மக்களும் தாராளமாக நன்கொடைகளைக் கொடுக்கத் தொடங்கினார்கள். இந்நிலையில் புதிதாகக் கட்டப்பட்டக்கொண்டிருந்த கோயில் இருந்த அதே தெருவில் மூதாட்டி ஒருத்தி இருந்தாள். அவளுக்குச் சொந்த பந்தமென்று யாருமே கிடையாது; தனியாகத்தான் இருந்தாள். கோவில் திருப்பணிகட்கு தானும் ஏதாவது கொடுத்து உதவவேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு நிறைய இருந்தது, ஆனால், அவளிடம் கொடுப்பதற்குத்தான் ஒன்றுமில்லை.

ஒருநாள் அவள் வீட்டை ஒட்டியிருந்த திண்ணையில் அமர்ந்து  கோயில் திருப்பணிகள் நடைபெறுவதை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். அந்நேரத்தில் கோவிலுக்குப் பளிங்குக் கற்களைச் சுமந்துகொண்டு வந்த மாட்டுவண்டியில் இருந்த இரண்டு காளைமாடுகள் மிகவும் களைப்பாகவும் பசியோடும் இருப்பதை அவள் கண்டாள். உடனே அவள் தன்னுடைய வீட்டுக்குப் பின்னால் வளர்ந்திருந்த கோரைப் புற்களை அறுத்து வந்து அவற்றுக்கு இரையாக - உணவாக – தந்தாள். அவற்றை உண்ட அந்த இரண்டு காளை மாடுகளும் புதுத் தெம்படைந்தன. இதற்குப் பின் அவள், அந்த இரண்டு காளை மாடுகளும் பூட்டப்பட்ட மாட்டுவண்டி கோயிலுக்கு வேண்டிய பொருள்களை ஏற்றுக்கொண்டு வருகின்ற போதெல்லாம் அவற்றுக்குத் தன்னுடைய வீட்டிற்குப் பின்னால் வளர்ந்திருந்த கோரைப் புற்களை அறுத்துக்கொண்டு வந்து அவற்றுக்கு இரையாகக் கொடுத்து வந்தாள்.

நாள்கள் மெல்ல நகர்ந்தன. கோயில் திருப்பணிகள் வேகமாக நடைபெற்று, ஒருநாள் நிறைவுபெற்றன. கோயில் அர்ப்பண விழாவிற்கு நாள் குறிக்கப்பட்டது. குறிப்பிட்ட அந்த நாளில் மேன்மை பொருந்திய ஆயர் ஒருவர் வந்து கோயிலைத் திறந்துவைத்துச் சிறப்பு செய்தார்.

நிகழ்ச்சியின் முடிவில் ஆயர், அங்கிருந்த பேசத்தொடங்கினார்: “நான் இந்தக் கோயில் அர்ப்பண விழாவில் கலந்துகொள்வதற்கு முன்னம், அதாவது இன்று அதிகாலையில் ஒரு கனவு கண்டேன். அந்தக் கனவில் வானதூதர் ஒருவர் தோன்றி, ‘நீ கோயில் அர்ப்பண விழாவிற்குத்தானே போகிறாய்... அங்கு சென்று மக்களிடம், கோயில் திருப்பணிக்கு அரசன் செய்த உதவியைவிடவும் கோயிலுக்கு முன்பாக உள்ள தெருவில் குடியிருக்கும் மூதாட்டி செய்த உதவி பெரிது எனச் சொல்’ என்றார். அதைதான் நான் உங்கட்கு இப்பொழுது சொல்கின்றேன்.”

ஆயர் இவ்வாறு சொன்னதும் அரசன் எழுந்து, “கோயில் திருப்பணிக்கு என்னைவிடப் பெரியளவில் உதவி செய்த அந்த மூதாட்டி யார்? அவரை நான் பார்க்கவேண்டும்” என்றான். உடனே அந்த மூதாட்டி அங்கு வரவழைக்கப்பட்டாள். பின்னர் அரசன் அந்த மூதாட்டியிடம், “கோயில் திருப்பணிக்கு என்னவிட அப்படியென்ன பெரிய உதவியைச் செய்துவிட்டாய்?” என்று கேட்டதற்கு, அவள் நடந்ததையெல்லாம் ஒன்றுவிடாமல் எடுத்துச் சொன்னாள். இதைக் கேட்டு அரசன் உட்பட வந்திருந்த எல்லாரும் அந்த மூதாட்டியை வாயாரப் போற்றிப் புகழ்ந்தார்கள்.

கடவுளுடைய திருப்பணிக்கு - அது கோயில் திருப்பணியாக இருந்தாலும் வேறு எந்தப் பணியாக இருந்தாலும் - நாம் செய்யக்கூடிய சிறு உதவியும் கடவுளால் பெரிதாகப் பார்க்கப்படும் என்ற உண்மையை மிக அழகாக எடுத்துச் சொல்கின்றது இந்த நிகழ்வு. இன்றைய முதல் வாசகத்தில் மக்கள் கொடுத்த தன்னார்வக் காணிக்கைகளாலும் பலருடைய உதவினாலும் கட்டி எழுப்பப்பட்ட (இரண்டாம்) எருசலேம் திருக்கோவிலின் அர்ப்பண விழாவை எல்லாரும் மகிழ்வோடு கொண்டாடும் நிகழ்வு நடைபெறுகின்றது. இந்த நிகழ்வு நமக்கு என்ன செய்தியைத் தருகின்றது என்று சிந்தித்துப் பார்ப்போம்.

கோயில் திருப்பணியைத் தடைசெய்யவேண்டாம்

பாபிலோனினிலிருந்து சொந்த நாட்டிற்குத் திரும்பிவந்த யூதர்கள், பாரசீக மன்னர் சைரசின் ஆணையின் பேரில், முன்பு எருசலேம் திருக்கோயில் இருந்த அதே இடத்தில் மீண்டுமாகத் திருக்கோயிலைக் கட்டி எழுப்புகின்றார்கள். அப்படிக் கோயில் கட்டி எழுப்பப்படும் பொழுது, மன்னர் மக்களைப் பார்த்து, கடவுளின் கோவிலைக் கட்டும் பணியைத் தடைசெய்யாதிருங்கள். மீறினால் ஆண்டவரால் அழிக்கப்படுவீர்கள் என்கின்றார். சைரசு சொல்லக்கூடிய இவ்வாரத்தைகள் யூதர்கட்கு மட்டுமல்லலாமல், நமக்கும் இன்றைய காலக்கட்டத்திலும் பொருந்துவதாக இருக்கின்றன. நாம் கோயில் திருப்பணிகட்கு உறுதுணையாக இருக்கவேண்டுமே ஒழிய, அதற்குத் தடையாய் இருக்கக்கூடாது.

பாவத்திற்குக் கழுவாய் தேடிய இஸ்ரயேல் மக்கள்

          கோயில் கட்டி எழுப்பப்பட்ட பின்பு இஸ்ரயேல் மக்கள்  பன்னிரண்டு வெள்ளாட்டுக் கிடாய்களை பலியாக ஒப்புக் கொடுத்தார்கள் என்று வாசிக்கின்றோம். அது இஸ்ரயேல் மக்கள் கடவுளுடைய கட்டளையை மீறி தவறு செய்ததையும்  அந்தத் தவறுக்குப் பரிகாரம் தேடிக் கொள்வதையும் நமக்கு எடுத்துக்கூறுகின்றது. நாமும் கூட நம்முடைய தீய நாட்டத்தால், கடவுளை விட்டு வெகுதொலைவில் சென்றிருப்போம். இப்படிப்பட்ட தருணத்தில் நாம் நல்லதொரு ஒப்புரவு அருளடையாளம் மேற்கொண்டு அவரோடு ஒன்றிணைவது சாலச் சிறந்தது

சிந்தனை

‘என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய ‘இறைமன்றாட்டின் வீடு’ என அழைக்கப்படும்’ என்பார் ஆண்டவர் (எசா 56: 7) ஆகையால், எல்லார்க்கும் இறைமன்றாடின் வீடாக இருக்கும் கடவுளின் திருக்கோவிலுக்கு நம்மாலான உதவிகளைச் செய்வோம்; நாமே உயிருள்ள கோயில்களாக மாறி வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


-          மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

லூக்கா 8: 19-21

இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்போர்க்குக் கிடைக்கும் பேறு

நிகழ்வு

          அது ஒரு கிறிஸ்தவக் கிராமம். அந்தக் கிராமத்தில் செவிலித்தாய் ஒருவர் இருந்தார். அவர் கோயிலில் நடைபெறும் வழிபாடுகளில் தவறாது கலந்துகொள்வார். மட்டுமல்லாமல், தன்னை நாடுவோர்க்கு முகம் கோணாமல் உதவி செய்வார்.

‘மிகவும் கைராசியான மருத்துவச்சி’ என்று மக்களிடம் பெயர் எடுத்த இவர், இரவில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஓடிச் சென்று மக்கட்கு மருத்துவ உதவிகளைச் செய்வார். காய்ச்சல், தலைவலி முதற்கொண்டு பிரசவம் பார்த்தல் வரை நிறைய மருத்துவ உதவிகளை இவர் மக்கட்குச் செய்துவந்தார். இவற்றிற்கெல்லாம் இவர் மக்களிடமிருந்து மிகவும் சொற்பமான தொகையையே பெற்றுவந்தார்; சமயங்களில் கட்டணம்கூட வசூலிக்காமல் மருத்துவ உதவிகளைச் செய்துவந்தார்.

இவர் செய்துவந்த மருத்துவ உதவிகளைக் கவனித்து வந்த பெரியவர் ஒருவர், “தாயே! கடவுளுக்குத் தெரியும் நீங்கள் செய்துவரும் இந்த மருத்துவ உதவி எத்துணை உயர்ந்து என்று! அப்படியிருக்கும்போது இன்னும் ஏன் மிகவும் சொற்பமான தொகையை வசூலித்து வருகிறீர்கள்... இன்னும் கொஞ்சம் கூடுதலாகக் தொகையை வசூலிக்கலாம் அல்லவா?” என்றார். “நான் ஆற்றி வருகின்ற இந்த மருத்துவச் சேவை எத்துணை உயர்ந்தது என்று கடவுளுக்குத் தெரியுமல்லவா! அதுவே போதும். கூடுதலாகக் கண்டனம் வசூலித்து நான் என்ன செய்யப் போகிறேன்” என்று கனிந்த உள்ளத்தோடு சொன்னார் அந்தச் செவிலித்தாய்.

பெயர்க்கு கிறிஸ்தவராக இருந்துவிடாமல், உள்ளார்ந்த அன்போடும் வாஞ்சையோடும் மருத்துவ உதவிகளைச் செய்துவரும் இந்தச் செவிலித்தாய் உண்மையிலேயே இயேசுவின் உண்மையான உறவினர் என்றால் அது மிகையாகாது. நற்செய்தி வாசகம், இயேசுவின் உண்மையான உறவினர் யார் என்ற கேள்விக்கு விடையாக அமைகின்றது. எனவே, அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசு மதிமயங்கி விட்டார் என்று கேள்விப்பட்டு அவரைப் பார்க்க வரும் உறவுகள்

          ஆண்டவர் இயேசு, இறையாட்சிப் பணியை ஓய்வில்லாமலும் உண்பதற்குக்கூட நேரமில்லாமலும் செய்துவந்தார். ஆனால், மக்களோ ‘இவர் மதிமயங்கி விட்டார்’ என்றும் மறைநூல் அறிஞர்களோ ‘இவர் பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகின்றார்’ என்றும் விமர்சித்தார்கள். இச்செய்தி இயேசுவின் தாய்க்கும் அவருடைய உறவினர்கட்கும் தெரிய வர, அவர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டு போக அவரிடம் வருகின்றார்கள்.

இந்த இடத்தில் இயேசு உதிர்கின்ற வார்த்தைகளைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்பது முன்னம், இயேசுவின் உறவினர்களிடம் இருந்த குறையை அல்லது செய்த தவறை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். அது என்ன தவறு எனில், மக்கள் இயேசுவைக் குறித்து பலவாறாக பேசினாலும், ‘இயேசு அப்படிப்பட்டவர் கிடையாது’ என்று அவர்கள் அதைப் புறக்கணித்திருக்கவேண்டும். ஆனால், அவர்கள் அதைப் புறக்கணியாமல், மக்கள் பேசிக்கொண்டது உண்மையாக இருக்குமோ என்று நம்பியதும், நம்பியதோடு மட்டுமல்லாமல், இயேசுவைப் பிடித்துக்கொண்டு போக அவரைத் தேடி வந்ததும்தான், அவர்கள் செய்த மிகப்பெரிய தவறுகளாகும்.


இறைவார்த்தையைக் கேட்டு நடப்போரே உண்மையான உறவினர்கள்

          தன்னுடைய உறவினர்கள் எதற்காகத் தன்னைத் தேடி வந்திருக்கின்றார்கள் என்பதை அறிந்த இயேசு, “இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகின்றவர்களே என் தாயும் சகோதரர்களும் ஆவார்கள்” என்கின்றார்.

இயேசு சொல்லும் இவ்வார்த்தைகளில் இரண்டு முக்கியமான கருத்துக்கள் உள்ளடங்கி இருக்கின்றன. அதில் முதலாவது கருத்து, இயேசுவின் இரத்த உறவுகளாகவே இருந்தாலும், அவர்கள் இறைவனின் வார்த்தையைக் கேட்டு, அதன்படி நடக்கவில்லை என்றால், அவர்கள் இயேசுவின் உண்மையான உறவினர்களாக இருக்க முடியாது என்பதாகும். இயேசுவின் காலத்தில் வாழ்ந்து வந்த பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் ஒருவகையில் இயேசுவுக்கு உறவினர்களாக இருந்திருக்கலாம். அப்படியிருந்தும் அவர்கள் அவருடைய வார்த்தையைக் கேட்டு, அதன்படி நடக்காமலேயே இருந்தார்கள். எப்படி இன்றைக்கு ஒருசில கிறிஸ்தவர்கள் பெயரளவுக்குக் கிறிஸ்தவர்களாக இருந்துகொண்டு, கிறிஸ்துவின் விழுமியங்கட்கு எதிராகச் செயல்படுகின்றார்களோ, அப்படி இயேசுவின் காலத்தில் வாழ்ந்து வந்த யூதர்கள் இயேசுவின் வார்த்தையைக் கேட்காமல், அதன்படி செயல்படாமல் வாழ்ந்து வந்தார்கள். இப்படிப்பட்டவர்கள் இயேசுவின் உறவினர்களாக மாறமுடியாது என்பது உண்மை.

இயேசு சொன்னதில் இருக்கும் இரண்டாவது கருத்து, ஒருவர் இயேசுவுக்கு அறிமுகமில்லாமல் இருக்கலாம். ஆனால், அவர் இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நடந்தார் எனில், அவர் இயேசுவின் உண்மையான உறவினர். இதை வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், இறையாட்சிக் குடும்பத்தில் இயேசுவின் இரத்த உறவுகளை விட, அவருடைய வார்த்தையின்படி நடப்பவர்களே, அவருடைய உண்மையான உறவினர்கள் ஆவார்கள். நாம் இயேசுவின் உண்மையான உறவினர்களாக இருக்கின்றோமா? சிந்திப்போம்.

சிந்தனை

          ‘நன்றாகச் சிந்திப்பதை விடவும் நன்றாகச் செயல்படுவது மேலானது’ என்பார் ஹோரஸ் மேன் என்ற எழுத்தாளர். ஆகையால், நாம் இறைவார்த்தைக்குச் செயல்வடிவம் கொடுக்க முன்வருவோம். அதன்வழியாக  இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

-          மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

Free Blog Widget
Stats Counter
hit counter