maraikal
MUM
"


பொதுக்காலம் 22 ஆம் வாரம்  02-09-2020

முதல் வாசகம்

நாங்கள் கடவுளின் உடன் உழைப்பாளர்கள். நீங்கள் கடவுள் பண்படுத்தும் தோட்டம்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-9

சகோதரர் சகோதரிகளே,

ஆவிக்குரியவர்களிடம் பேசுவதுபோல நான் உங்களிடம் பேச முடியவில்லை. மாறாக, நீங்கள் ஊனியல்பு கொண்டவர்கள் எனவும், கிறிஸ்துவோடுள்ள உறவில் குழந்தைகள் எனவும் எண்ணிப் பேசுகிறேன். நான் உங்களுக்குத் திட உணவை அல்ல, பாலையே ஊட்டினேன். ஏனெனில், திட உணவை உங்களால் உண்ண முடியவில்லை. இப்போதும் அதே நிலையில்தான் இருக்கிறீர்கள். நீங்கள் இன்னும் உங்கள் ஊனியல்புக்கேற்பவே நடக்கிறீர்கள். ஏனெனில், பொறாமையும், சண்டை சச்சரவும் உங்களிடையே உள்ளன. நீங்கள் ஊனியல்புக்கேற்ப நடந்து மனிதப் போக்கில்தானே வாழ்கிறீர்கள்?

ஏனெனில், ஒருவர் "நான் பவுலைச் சார்ந்துள்ளேன்" என்றும் வேறொருவர் "நான் அப்பொல்லோவைச் சார்ந்துள்ளேன்" என்றும் உங்களிடையே சொல்லிக் கொள்ளும்போது நீங்கள் மனிதப் போக்கில்தானே நடக்கிறீர்கள்? அப்பொல்லோ யார்? பவுல் யார்? நீங்கள் நம்பிக்கை கொள்ளக் காரணமாயிருந்த பணியாளர்கள்தானே! ஆண்டவர் ஒவ்வொருவருக்கும் அருளியவாறு அவர்கள் தொண்டு ஆற்றுகிறார்கள். நான் நட்டேன்; அப்பொல்லோ நீர் பாய்ச்சினார்; கடவுளே விளையச் செய்தார். நடுகிறவருக்கும் பெருமை இல்லை; நீர் பாய்ச்சுபவருக்கும் பெருமை இல்லை; விளையச் செய்யும் கடவுளுக்கே பெருமை. நடுகிறவரானாலும் நீர் பாய்ச்சுகிறவரானாலும் ஒன்றுதான். தாம் செய்த வேலைக்கு ஏற்ப ஒவ்வொருவரும் தம் கூலியைப் பெறுவர். நாங்கள் கடவுளின் உடன் உழைப்பாளர்கள். நீங்கள் கடவுள் பண்படுத்தும் தோட்டம். நீங்கள் அவர் எழுப்பும் கட்டடம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 33: 12-13. 14-15. 20-21 . (பல்லவி: 12b)  Mp3

பல்லவி: ஆண்டவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.
12
ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.
13
வானினின்று ஆண்டவர் பார்க்கின்றார்; மானிடர் அனைவரையும் காண்கின்றார். - பல்லவி

14
தாம் வீற்றிருக்கும் இடத்திலிருந்து உலகெங்கும் வாழ்வோரைக் கூர்ந்து நோக்குகின்றார்.
15
அவர்களின் உள்ளங்களை உருவாக்குகின்றவர் அவரே! அவர்களின் செயல்கள் அனைத்தையும் உற்று நோக்குபவரும் அவரே! - பல்லவி

20
நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார்.
21
நம் உள்ளம் அவரை நினைத்துக் களிகூரும்; ஏனெனில், அவரது திருப்பெயரில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
லூக் 4: 18-19 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர் என முழக்கமிடவும் ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நான் மற்ற ஊர்களிலும் இறையாட்சியைப் பற்றி நற்செய்தி அறிவிக்க வேண்டும்.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 38-44

அக்காலத்தில்

இயேசு தொழுகைக்கூடத்தை விட்டு, சீமோன் வீட்டிற்குள் சென்றார். சீமோனின் மாமியார் கடுங்காய்ச்சலால் துன்புற்ற நிலையில் இருந்தார். அவர்கள் அவருக்காக இயேசுவிடம் வேண்டினார்கள். இயேசு அவரருகில் நின்று, காய்ச்சலைக் கடிந்துகொள்ள, அது அவரை விட்டு நீங்கிற்று. உடனே அவர் எழுந்து அவர்களுக்குப் பணிவிடை செய்தார்.

கதிரவன் மறையும் நேரத்தில், எல்லாரும் தங்களிடையே பற்பல பிணிகளால் நலம் குன்றி இருந்தோரை அவரிடம் கூட்டி வந்தார்கள். அவர் ஒவ்வொருவர் மேலும் தம் கைகளை வைத்து அவர்களைக் குணமாக்கினார். பேய்களும், "நீர் இறைமகன்" என்று கத்திக்கொண்டே பலரிடமிருந்து வெளியேறின. அவர் மெசியா என்று பேய்கள் அறிந்திருந்தபடியால், அவர் அவற்றை அதட்டி, பேசவிடாமல் தடுத்தார்.

பொழுது விடியும் வேளையில் இயேசு தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். திரளான மக்கள் அவரைத் தேடிச் சென்றனர்; அவரிடம் வந்து சேர்ந்ததும் தங்களை விட்டுப் போகாதவாறு அவரைத் தடுத்து நிறுத்தப் பார்த்தனர். அவரோ அவர்களிடம், "நான் மற்ற ஊர்களிலும் இறையாட்சியைப் பற்றி நற்செய்தி அறிவிக்க வேண்டும்; இதற்காகவே நான் அனுப்பப்பட்டிருக்கிறேன்" என்று சொன்னார். பின்பு அவர் யூதேயாவிலுள்ள தொழுகைக்கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
 

 

1 கொரிந்தியர் 3: 1-9

"ஏனெனில், பொறாமையும் சண்டை சச்சரவும் உங்களிடையே உள்ளன"

நிகழ்வு



ஒரு காட்டில் வாழ்ந்து வந்த சிங்கமும் புலியும் ஒரேநேரத்தில் தாங்கள் வழக்கமாக நீர் அருந்தும் குளத்திற்கு வந்தன. இதற்கு முன்பாக இப்படி இரண்டும் ஒரே நேரத்தில் குளத்தில் நீர் அருந்த வந்ததில்லை. இதுதான் முதல்முறை. அதனால் அவற்றுக்கிடையே முதலில் யார் குளத்திலிருந்து நீர் அருந்துவது என்ற வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே, பெரிய சண்டையாகி, ஒன்று மற்றொன்றின்மீது பாய்ந்து கடுமையாகத் தாக்கத் தொடங்கியது. இதனால் இரண்டின் உடல்களிலிருந்தும் இரத்தம் வழிந்தோடத் தொடங்கியது.

அப்பொழுது தற்செயலாக அவை இரண்டும் வானத்தைப் பார்த்தன. மறுநொடி அவை தங்களுடைய சண்டையை மறந்து, யார் பெரியவன் என்ற ஆணவத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, ஒன்றுக்குப் பின் இன்னொன்று தண்ணீர் குடித்துவிட்டுத் தங்களுடைய வழியில் சென்றன.

மிகவும் பயங்கரமாக ஒன்றையொன்று தாக்கிக்கொண்டிருந்த சிங்கமும் புலியும் திடீரெனச் சண்டை போடுவதை விட்டுவிட்டுச் சமரசமானதற்குக் காரணம் இதுதான்: அவை இரண்டும் வானத்தை அண்ணார்ந்து பார்த்தபொழுது, மேல வல்லூறுகள் பறந்துகொண்டிருந்தது. அந்த வல்லூறுகள் சிங்கமும் புலியும் எப்பொழுது அடித்துக்கொண்டு சாகும்; அப்பொழுது அவற்றை இரையாக உட்கொள்ளலாம் என்று காத்துக் கொண்டிருந்தன. இதனாலேயே சிங்கமும் புலியும் சண்டையை மறைந்து சமரசமாயின.

ஆம். ஊர்ப்புறத்தில் சொல்வார்களே, "ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்" என்று. அதுபோன்று நாம் நமக்குள் சண்டை போட்டுக்கொண்டிருந்தால், அது இன்னொருவருக்குத்தான் இலாபமாக அமையும். மேலே உள்ள கதையும், இன்றைய முதல் வாசகமும் நமக்கு இதே செய்தியைத்தான் எடுத்துக் கூறுகின்றன. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

கொரிந்து நகர்த் திருஅவையில் ஏற்பட்ட சண்டை சச்சரவு

இன்றைய முதல் வாசகத்தில் புனித பவுல், கொரிந்து நகர்த் திருஅவையில் ஏற்பட்ட சிக்கலைக் குறித்துப் பேசுகின்றார். கொரிந்து நகர்த் திருஅவையில் இருந்தவர்கள், "நான் பவுலைச் சார்ந்துள்ளேன்", "நான் அப்பொல்லோவைச் சார்ந்துள்ளேன்" என்று தங்களுக்கிடையே பொறாமையோடும் கட்சிமனப்பான்மையோடும் இருந்தார்கள். பொறாமையும் கட்சி மனப்பான்மையும் எவையெனில், ஊனியல்பின் செயல்பாடுகள் (கலா 5: 20). தூய ஆவியாரின் தூண்டுதலுக்கு ஏற்ப நடக்காமல், பொறுமையோடும் கட்சி மனப்பான்மையோடும் செயல்படுகின்ற யாவருமே ஊன்யல்பின்படி நடக்கக்கூடியவர்கள்தான் என்று குறிப்பிடும் பவுல், அப்பொல்லோ யார்? தான் யார்? என்பதற்கான விளக்கத்தைத் தருகின்றனர்.

கொரிந்து நகரில் பவுல் அப்பொல்லோவும் இருவேறு காலக்கட்டத்தில் கடவுளுடைய வார்த்தையை எடுத்துரைத்தார்கள்; ஆனால், கொரிந்து நகரில் இருந்தவர்கள், "நான் பவுலைச் சார்ந்துள்ளேன்", "நான் அப்பொல்லோவைச் சார்ந்துள்ளேன்" என்று சொல்லி பிரிந்து கிடந்தார்கள். இதனால்தான் பவுல் அவர்களிடம், தானும் அப்பொல்லோவும் உடன் உழைப்பார்கள்தான்; கடவுளே விளைச்சலை அளிப்பவர்; நீங்கள் அவருடைய தோட்டம் என்ற உண்மையை எடுத்துச் சொல்கின்றார்.

பவுல் இந்த உண்மையை விளக்கிச் சொல்வதற்கு ஒரு முக்கியமான காரணம் இருந்தது. அது என்ன என்று தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.

கிறிஸ்துவில் ஓருடலாக இருக்க அழைக்கப்பட்டிருக்கின்றோம்

கொரிந்து நகர்த் திருஅவையில் இருந்தவர்கள் தங்களுக்குள் பொறாமையோடும் கட்சி மனப்பான்மையோடும் இருக்கக்கூடாது என்று பவுல் சொன்னதற்குக் காரணம், அவர்கள் தங்களுக்குள் இப்படிச் சண்டையிட்டுக்கொண்டால், அது கொரிந்து நகர்த் திருஅவையைச் சூறையாடவும் ஒன்றுமில்லாமலும் செய்வதற்குத் காத்திருந்த போலிப் போதகர்களுக்கு இலாபமாய் அமைந்துவிடும் என்பதால்தான்.

தொடக்கத் திருஅவையில், ஆட்சியாளர்கள் திருஅவைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தது ஒரு பக்கம் என்றால், இந்தப் போலிப் போதகர்கள் திருஅவைக்கு இன்னொரு பக்கம் அச்சுறுத்தலாக இருந்தார்கள். இதனால்தான் பவுல் கொரிந்து நகர்த் திருவையில் இருந்தவர்கள் தங்களிடம் இருந்த பொறாமையையும் கட்சிமனப்பான்மையையும் தவிர்த்து வாழச் சொல்கின்றார். அவர்கள் பொறாமையையும் கட்சிமனப்பான்மையையும் தவிர்த்து வாழ்வதற்கு மற்றொரு காரணமும் இருந்தது. அது என்னவெனில், எல்லாரும் ஒரே தூய ஆவியாரால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றவர்கள் (1 கொரி 12: 13) என்பதால் ஆகும். ஒரே உடலாய் இருக்கத் தூய ஆவியாரால் திருமுழுக்குப் பெற்றுவிட்டுக் கட்சி மனப்பான்மையோடு இருந்ததால்தான் பவுல் கொரிந்து நகர்த் திருஅவையில் இருந்தவர்களுக்கு இப்படி அறிவுரை கூறுகின்றார்.

ஆகையால், நாம் நம்மிடம் இருக்கும் கட்சிமனப்பான்மையத் தவிர்த்து கிறிஸ்துவில் ஓருடலாக இருகின்றோம் என்ற உணர்வோடு வாழ்வோம்.

சிந்தனை

"கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள்" (கலா 3: 28) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் நம்மிடம் இருக்கும் பேதங்களை அப்புறப்படுத்திவிட்டு, கிறிஸ்துவில் ஒன்றிணைந்து வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
லூக்கா 4: 38-44

இறைவேண்டலும் இயேசுவும்

நிகழ்வு



அமெரிக்காவில் பிறந்த மிகப்பெரிய கண்டுபிடிப்பாளர் ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் (1860-1943). இன்று நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பேனா, மை, ஷாம்பூ போன்ற முன்னூறுக்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தவர் இவர்தான்.

அறிவியலில் இவர் செய்த சாதனைகளைப் பார்த்துவிட்டு ஒருவர் இவரிடம், "எப்படி உங்களால் இவ்வளவு கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிக்க முடிந்தது?" என்று கேட்டார். அதற்கு இவர் அவரிடம், "ஒவ்வொரு நாளும் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து காட்டுக்குள் செல்வேன். அப்படிச் செல்லும்பொழுது, கடவுள் என்னோடு பேசுவதை உணர்வேன். அதைக் கொண்டுதான் என்னால் இவ்வளவு கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிக்க முடிந்தது" என்றார்.

ஆம், ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து, காட்டிற்குள் சென்று கடவுளுடன் நேரத்தைச் செலவழித்தார். அதனால்தான் அவரால் நிறைய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிக்க முடிந்தது; அறிவியலில் மிகப்பெரிய சாதனைகளைச் செய்ய முடிந்தது. நற்செய்தியில் இயேசு தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்று, அங்கு இறைவனோடு தன்னுடைய நேரத்தைச் செலவிட்டார் என்று வாசிக்கின்றோம். பல்வேறு பணிகளுக்கு நடுவிலும் இயேசு இறைவேண்டல் செய்தது நமக்கு என்ன செய்தியை எடுத்துச் சொல்கின்றது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

இறையாட்சிப் பணிகளைச் செய்துவந்த இயேசு

நற்செய்தியில் இயேசு கடுங்காய்ச்சலால் துன்புற்ற சீமோனின் மாமியார் தொடங்கி பல்வேறு பிணிகளால் துன்புற்ற மக்கள் வரை பலருக்கும் நலமளிக்கின்றார். இயேசு செய்த வல்லசெயல்கள், மெசியா வருகின்றபொழுது எவையெல்லாம் நடக்கும் என்று இறைவாக்கினர் எசாயா கூறினாரோ (எசா 35: 5,6), அவையெல்லாம் நடந்து, இயேசுவே மெசியா என்பதற்குச் சான்றளிப்பவையாக இருக்கின்றன. இதில் நாம் கவனிக்கவேண்டிய முக்கியமான ஒரு செயல், சீமோனின் மாமியாரிடமிருந்து காய்ச்சல் நீங்கியதும், அவர் அவர்களுக்குப் படைவிடை செய்ததுதான்.

ஆம், நாம் இயேசுவின் வல்லமையால், அவரது அருளால் நன்மைகளைப் பெறுகின்றோம் என்றால், அந்த நன்மைகளை நமக்குள் வைத்துக்கொள்ளாமல், பிறருக்கும் கொடுக்கவேண்டும். அதுதான் நம்முடைய வாழ்விற்கு அர்த்தத்தைக் கொடுக்கும். இன்றைக்குப் பலர் தாங்கள் பெற்ற நன்மைகளை யாருக்கும் கொடுக்காமல், தன்னலவாதிகளாக இருப்பதைக் காணமுடிகின்றது. இவர்கள் தங்களுடைய வாழ்வை ஆய்வுக்கு உட்படுத்திப் பார்த்து, பெற்ற நன்மைகளைப் பிறரோடு பகிரக்கூடியவர்களாக இருப்பது நல்லது. இயேசு நோயாளர்களை நலப்படுத்தியது மட்டுமல்லாமல், இறையாட்சியைப் பற்றிய நற்செய்தியை மக்களுக்கு அறிவித்து, பலரையும் ஆண்டவர்மீது நம்பிக்கை கொள்ளச் செய்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

இறையாட்சிப் பணிகளுக்கு நடுவிலும் இறைவேண்டல் செய்துவந்த இயேசு

இயேசு பல்வேறு பிணிகளால் வருந்தியவர்களை நலப்படுத்தி, இறையாட்சியைப் பற்றிய நற்செய்தியை அறிவித்ததோடு மட்டுமல்லாமல், இறைவனோடு உரையாடுவதற்கும் நேரம் ஒதுக்கினார். இன்றைய நற்செய்தியின் இரண்டாம் பகுதியில் இயேசு, தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார் என்று வாசிக்கின்றோம். இப்பகுதியை மாற்கு நற்செய்தியில் வாசிக்கின்றபொழுது, இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குச் புறப்பட்டுச் சென்றார் (மாற் 1: 35) என்று வாசிக்கின்றோம். அப்படியெனில், இயேசு தனது நலப்படுத்தும் பணி, நற்செய்திப் பணிகளுக்கு நடுவில், ஆண்டவரோடு பேசுவதும், அவரோடு உறவாடுவதற்கும் நேரத்தைச் செலவிட்டார் என்பது உறுதியாகின்றது.

இயேசு சாதாரணமானவர் கிடையாது; அவர் இறைமகன்; எல்லா அதிகாரமும் கொண்டவர் (மத் 28: 18). அப்படிப்பட்டவருக்கே இறைவேண்டல் தேவைப்பட்டது எனில், நமக்கும் இறைவேண்டலானது இன்றியமையாததாக இருக்கின்றது. இன்று ஒருசிலர் "இறைவேண்டல் செய்வதற்கு எங்கே நேரம் இருக்கின்றது?" என்று சாக்குப் போக்குச் சொல்லிகொண்டு இருப்பதைக் காணமுடிகின்றது. இவர்கள் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி இறைவேண்டலுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்வது நல்லது.

இயேசு பகல் முழுவதும் இறையாட்சிப் பணியைச் செய்தார் எனில், அதிகாலையில் இறைவனிடம் வேண்டுவதற்கு தனது நேரத்தைச் செலவழித்தார். இவ்வாறு இறைவேண்டலும் இறையாட்சிப் பணியும் இயேசுவின் வாழ்வில் பிரிக்க முடியாதவையாக இருந்தன. நமது வாழ்வில் நாம் இறைவேண்டலுக்கும் இரக்கச் செயலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வாழ்கின்றோமா? அல்லது ஒன்றை விட்டுவிட்டு இன்னொன்றைப் பிடித்துக் கொண்டு வாழ்கின்றோமா? அல்லது இரண்டையுமே செய்யாதவர்களாக வாழ்கின்றோமா? சிந்திப்போம்.

சிந்தனை

"நம்பிக்கை செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாக இருக்கும்" (யாக் 2: 17) என்பார் புனித யாக்கோபு. ஆகையால், நாம் இறைவேண்டலும் இரக்கச் செயல்களும் நமது இரு கண்களென உணர்ந்து வாழ்வோம். அதவழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
Free Blog Widget
Stats Counter
hit counter