maraikal
MUM
"

இளையோர்


பொதுக்காலம் 30 ஆம் வாரம்  30-10-2020

முதல் வாசகம்

உங்களுள் இத்தகைய நற்செயலைத் தொடங்கியவர், கிறிஸ்து இயேசுவின் நாள்வரை அதை நிறைவுறச் செய்வார் என உறுதியாய் நம்புகிறேன்.

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-11

கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழ்கின்ற பிலிப்பி நகர இறைமக்கள், சபைக் கண்காணிப்பாளர்கள், திருத்தொண்டர்கள் அனைவருக்கும், கிறிஸ்து இயேசுவின் பணியாளர்களான பவுலும் திமொத்தேயுவும் எழுதுவது: நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும், ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!

உங்களை நினைவுகூரும்பொழுதெல்லாம் என் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்; உங்கள் அனைவருக்காகவும் எப்பொழுதும் மகிழ்ச்சியோடு மன்றாடி வருகிறேன். ஏனெனில் தொடக்கமுதல் இன்றுவரை நீங்கள் நற்செய்திப் பணியில் என்னோடு பங்கேற்று வருகிறீர்கள். உங்களுள் இத்தகைய நற்செயலைத் தொடங்கியவர், கிறிஸ்து இயேசுவின் நாள்வரை அதை நிறைவுறச் செய்வார் என உறுதியாய் நம்புகிறேன்.

நீங்கள் என் இதயத்தில் இடம் பெற்றுவிட்டீர்கள். உங்கள் எல்லாரையும் பற்றி எனக்கு இத்தகைய எண்ணங்கள் எழுவது முறையே. ஏனெனில் நான் சிறையிலிருக்கும் இந்நேரத்திலும் நற்செய்திக்காக வழக்காடி அதை நிலைநாட்டிய காலத்திலும் நான் பெற்ற அருளில் உங்களுக்கும் பங்குண்டு. கிறிஸ்து இயேசு கொண்டிருந்த அதே பரிவுள்ளத்தோடு உங்கள்மீது எத்துணை ஏக்கமாயிருக்கிறேன் என்பதற்குக் கடவுளே சாட்சி.

மேலும், நீங்கள் அறிவிலும் அனைத்தையும் உய்த்துணரும் பண்பிலும் மேன்மேலும் வளர்ந்து, அன்பால் நிறைந்து, சிறந்தவற்றையே ஏற்றுச் செயல்படுமாறு இறைவனை வேண்டுகிறேன். கடவுளின் மாட்சிக்காகவும் புகழ்ச்சிக்காகவும் இயேசு கிறிஸ்துவின் வழியாய் நீதியின் செயல்களால் நிரப்பப்பெற்று கிறிஸ்துவின் நாளுக்கென்று குற்றமற்றவர்களாக நேர்மையோடு வாழ்ந்துவர வேண்டுமென்றே இவ்வாறு செய்கிறேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 111: 1-2. 3-4. 5-6 . (பல்லவி: 2a)  Mp3

பல்லவி: ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை.

அல்லது: அல்லேலூயா.
1
நெஞ்சார ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்; நீதிமான்களின் மன்றத்திலும் சபையிலும் அவருக்கு நன்றி செலுத்துவேன்.
2
ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை; அவற்றில் இன்பம் காண்போர் அனைவரும் அவற்றை ஆய்ந்துணர்வர். - பல்லவி

3
அவரது செயல் மேன்மையும் மாண்பும் மிக்கது; அவரது நீதி என்றென்றும் நிலைத்துள்ளது.
4
அவர் தம் வியத்தகு செயல்களை என்றும் நினைவில் நிலைக்கச் செய்துள்ளார்; அருளும் இரக்கமும் உடையவர் ஆண்டவர். - பல்லவி

5
அவர் தமக்கு அஞ்சி நடப்போர்க்கு உணவு அளிக்கின்றார்; தமது உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார்;
6
வேற்றினத்தாரின் உரிமைச் சொத்தைத் தம் மக்களுக்கு அளித்தார்; இவ்வாறு ஆற்றல்மிக்க தம் செயல்களை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 10: 27

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

தம் பிள்ளையோ மாடோ கிணற்றில் விழுந்தால், ஓய்வு நாள் என்றாலும் அதனை உடனே தூக்கிவிடமாட்டாரா?

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1-6

அக்காலத்தில்

ஓய்வு நாள் ஒன்றில் இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றிருந்தார். அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர். அங்கே நீர்க்கோவை நோயுள்ள ஒருவர் அவர்முன் இருந்தார்.

இயேசு திருச்சட்ட அறிஞரையும் பரிசேயரையும் பார்த்து, “ஓய்வு நாளில் குணப்படுத்துவது முறையா, இல்லையா?” என்று கேட்டார். அவர்கள் அமைதியாய் இருந்தனர். இயேசு அவரது கையைப் பிடித்து அவரை நலமாக்கி அனுப்பிவிட்டார்.

பிறகு அவர்களை நோக்கி, “உங்களுள் ஒருவர் தம் பிள்ளையோ மாடோ கிணற்றில் விழுந்தால் ஓய்வு நாள் என்றாலும் அதனை உடனே தூக்கிவிடமாட்டாரா?” என்று கேட்டார். அதற்குப் பதில் சொல்ல அவர்களால் இயலவில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.
 

 


பிலிப்பியர் 1: 1-11

“என் கடவுளுக்கு நன்றிகூறுகிறேன்”



நிகழ்வு

ஆற்றங்கரையோரமாய் இருந்த துறவுமடம் அது. அந்தத் துறவுமடத்தில் ஒரு துறவியும் அவருக்குக் கீழ் ஐம்பதுக்கும் மேற்பட்ட சீடர்களும் இருந்தார்கள்.

ஒருநாள் துறவி சீடர்களிடம், “என் அன்புச் சீடர்களே! நீங்கள் கடவுளுக்கு மட்டுமல்ல, எல்லாருக்கும் ஏன்; எல்லாவற்றிற்கும் நன்றி கூறுங்கள்” என்று போதித்துக் கொண்டிருந்தார். துறவி இவ்வாறு போதித்துக்கொண்டிருந்தபொழுது, ஆற்றங்கரையில் துணி துவைக்கச் சென்றிருந்த சீடர் ஒருவர், துணிகளையெல்லாம் துவைத்துவிட்டுத் திரும்பிவந்தார். அவர் துறவி சொன்ன வார்த்தைகளைக் கேட்டு, “என்ன! எல்லாவற்றிற்கும் நன்றி சொல்ல வேண்டுமா...? இப்பொழுது நான் ஆற்றில் துணி துவைத்துவிட்டு வருகின்றேன். அப்படியானால், அந்த ஆற்றிற்கு நான் நன்றி சொல்ல வேண்டுமா...?” என்றார். “ஆற்றிற்கு மட்டுமல்ல, அது உற்பத்தியாகும் மலைக்கும் நன்றி நன்றி சொல்லவேண்டும்” என்றார் சக சீடர் ஒருவர்.

அவரைத் தொடர்ந்து, “ஆறு உற்பத்தியாகும் இடமான மலைக்கு மட்டுமல்ல, மலையில் தண்ணீர் உற்பத்தியாகக் காரணமாக இருக்கும் மேகத்திற்கும் நன்றி சொல்லவேண்டும்” என்றார் மற்றொரு சீடர். “மலைக்கு மட்டுமல்ல, மரம் செடி கொடிகள், பறவைகள், கதிரவன், நிலவு ஆகியவற்றிற்கும் நன்றி சொல்லவேண்டும்” என்றார் வேறொரு சீடர். இப்படியே ஒவ்வொரு சீடராக, ‘அதற்கு நன்றி சொல்லவேண்டும், இதற்கு நன்றி சொல்லவேண்டும்’ என்று சொல்லக்கொண்டே போனார்கள்.

எல்லாரும் சொன்னதை பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த, ஆற்றில் துணிதுவைத்துவிட்டுத் திரும்பிய சீடர், “ஆற்றில் துணி துவைத்ததற்காக இப்படி ஒவ்வொன்றையும் நினைத்து நன்றி சொல்லவேண்டுமா...? இது இயலாத செயலாயிற்றே!” என்றார். அப்பொழுது துறவி அவரிடம், “ஆற்றில் துணி துவைத்ததற்காக ஒவ்வொன்றையும் நினைத்துப் பார்த்து நன்றி சொல்வது சற்றுக் கடினமான செயல்தான். அதற்காகத்தான் இருக்கின்றது ‘நன்றி’ என்ற சொல். அந்தச் சொல்லை உச்சரியுங்கள். எல்லாவற்றிற்கும் நன்றி சொன்னதாய் ஆகிவிடும்” என்றார்.

ஆம், நம்முடைய வாழ்க்கையில் எத்தனையோ நன்மைகளை நாம் பெறுகின்றோம். அவற்றிற்கெல்லாம் நாம் நன்றி சொன்னால் எத்துணை நலமாக இருக்கும்! இன்றைய முதல் வாசகத்தில் புனித பவுல், “உங்களை நினைவுகூரும் பொழுதெல்லாம் என் கடவுளுக்கு நன்றி கூறுகின்றேன்” என்கின்றார். புனித பவுல் சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளின் பொருள் என்ன என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

பிலிப்பியர்களை நினைவுகூரும் புனித பவுல்

கடந்த ஓரிரு நாள்களாகவே நாம், புனித பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து முதல் வாசகத்தை வாசித்திருப்போம். இன்றைய நாளிலிலிருந்து இன்னும் ஒருசில நாள்கள் புனித பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து முதல் வாசகத்தை வாசிப்போம்.

இன்றைய முதல் வாசகத்தில் புனித பவுல், பிலிப்பியர்களை நினைவுகூருவதைக் குறித்து வாசிக்கின்றோம். பிலிப்பி நகரானது மாசிதோனியாவில் உள்ள ஒரு நகர். உரோமைக் காலனிகளில் ஒன்றான இந்த நகரில் பிற இனத்து மக்களே மிகுதியாக இருந்தார்கள். இந்த நகரில் புனித பவுல் தன் உடன் பணியாளர்களோடு இரண்டாவது திருத்தூது பயணத்தின்பொழுது பணிசெய்தார். அந்த நகரில் இருந்த இறைமக்களைத்தான் புனித பவுல் நினைவுகூர்கின்றார்.

பிலிப்பியர்களை முன்னிட்டுக் கடவுளுக்கு நன்றி செல்லும் புனித பவுல்

புனித பவுல் பிலிப்பியர்களை நினைவுகூரும் பொழுதெல்லாம் ‘என் கடவுளுக்கு நன்றி கூறுகின்றேன்’ என்று கூறுகின்றாரே, எதற்காக அவர் கடவுளுக்கு நன்றி கூறுகின்றார் என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம்.

தொடக்கத் திருஅவையில் ஓரிரு இடங்களில் இருந்த இறைமக்களுக்கு நிதியுதவியும் ஏனைய உதவிகளும் தேவைப்பட்டன. அப்படிப்பட்ட உதவிகளை பிலிப்பியில் இருந்தவர்கள் எப்பப்பிராதித்துவின் வழியாகச் செய்தார்கள் (பிலி 2:25-30, 4:18). இதனாலேயே பவுல் பிலிப்பியர்களை நினைவுகூர்ந்து கடவுளுக்கு நன்றி செலுத்துகின்றார். புனித பவுல் தன்னுடைய பணிவாழ்வில் தனக்கு உதவியாய் இருந்தவர்களை நன்றியோடு நினைவுகூர்ந்து, இறைவனுக்கு நன்றி செலுத்தினார். நாம் நம்முடைய வாழ்வில் நன்மைகள் செய்தவர்களை நன்றியோடு நினைவுகூர்ந்து, இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றோமா? சிந்திப்போம்.

சிந்தனை

‘நீங்கள் உங்களுடையே வாழ்க்கையில் நன்றி என்று சொல்லிவிட்டால் போதும். அதுவே நீங்கள் இறைவனை நோக்கி எழுப்புகின்ற மிகப்பெரிய இறைவேண்டலாக இருக்கும்’ என்பார் மெய்ஸ்டர் எக்கர்ட் என்ற அறிஞர். ஆகையால், நம்முடைய இந்த வாழ்க்கையை மிகவும் அழகாக்கிய ஒவ்வொருவருக்கும், சிறப்பாக இறைவனுக்கு நன்றி சொல்லி, நன்றி நிறைந்த உள்ளத்தோடு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
லூக்கா 14: 1-6

உங்களுள் ஒருவர் தம் பிள்ளையோ மாடோ கிணற்றில் விழுந்தால் (ஓய்வுநாள் என்றாலும்) அதனை உடனே தூக்கிவிடமாட்டாரா?”


நிகழ்வு

கோவையில், இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்திக்கொண்டே மனநலம் குன்றியவர்கள், ஆதரவற்றோர் மற்றும் குடும்பத்தால் கைவிடப்பட்டோரை அவரவர்க்குரிய காப்பகங்களில் சேர்த்து, அவர்களுக்கு மறுவாழ்வு வழங்கிக்கொண்டிருப்பவர் திருவாளர் மகேந்திரன் என்பவர்.

யாராவது இவரிடம், “எது உங்களை மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், கைவிடப்பட்டவர்கள் மற்றும் ஆதரவற்றோர் ஆகியோரின் மறுவாழ்விற்காக உழைக்கத் தூண்டியது?” என்று கேட்டால், அவர் இவ்வாறு பதிலளிக்கின்றார்: “எனக்கொரு சகோதரி உண்டு. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். ஒருநாள் அவர் சாலையைக் கடக்கும்பொழுது, கால் இடறிச் சாக்கடைக்குள் விழுந்துவிட்டார். அந்த வழியாகப் பலர் கடந்துசென்றனர். யாருக்குமே சாக்கடைக்குள் விழுந்து கிடந்த என் சகோதரியைத் தூக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்படவில்லை. கடைசியில் ஓர் ஆட்டோ ஓட்டுநர் என் சகோதரியின்மீது பரிவுகொண்டு, சாக்கடைக்குள் கிடந்த அவரை வெளியே தூக்கியெடுத்துக் குளிப்பாட்டி வீட்டிற்குக் கொண்டு, விட்டுவிட்டுப் போனார்.

யாரோ ஓர் ஆட்டோ ஓட்டுநர் மனநலம் பாதிக்கப்பட்ட என் சகோதரிக்கு உதவி செய்திருக்கும்பொழுது, என் சகோதரியைப் போன்று இந்த நகரில் இருக்கும் எத்தனையோ மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்றோர்கள ஆகியோருக்கு நான் ஏன் உதவி செய்யக்கூடாது என்ற எண்ணமானது என் மனத்தில் ஏற்பட்டது. அதனால்தான் நான் இத்தகையோருக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றேன்.”

திருவாளர் மகேந்திறேன் இதுவரைக்கும் நானூறுக்கும் மேற்பட்ட மனநலம் குன்றியவர்களைக் காப்பகங்களில் சேர்த்து, அவர்களுக்கு மறுவாழ்வு தந்திருக்கின்றார்; நூற்றுக்கும் மேற்பட்ட ஆதவற்றவர்களை நல்லடக்கம் செய்திருக்கின்றார். இவருடைய இந்தத் தன்னலமற்ற பணிகளைப் பார்த்து கோவை மாநகரக் காவல்துறை ஒரு மனநலக் காப்பகம் வைத்துக் கொள்ள இடமளித்திருக்கின்றது. இவரும் அந்த இடத்தில் ஒரு மனநலக் காப்பகம் கட்டி, அதில் ஐம்பத்துக்கும் மேற்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் தந்து, மறுவாழ்வு தந்து வருகின்றார். இவர் தான் ஏற்படுத்திருக்கும் ‘ஈர நெஞ்சம்’ என்ற அறக்கட்டளையின் மூலமாக இத்தகைய பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றார்.

யாருமே கண்டுகொள்ளாத நிலையில் உள்ள அல்லது ‘குழியில் உள்ள’ மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள் ஆகியோர்மீது தனிப்பட்ட அக்கறை எடுத்துக்கொண்டு, அவர்களிடம் மறுவாழ்விற்காக உழைத்து வரும் திருவாளர் மகேந்திரன் உண்மையில் நம்முடைய பாராட்டிற்கு உரியவராக இருக்கின்றார். நற்செய்தியில் ஆண்டவர், “உங்களுள் ஒருவர் தம் பிள்ளையோ மாடோ கிணற்றில் விழுந்தால் ஓய்வுநாள் என்றாலும் அதனை உடனே தூக்கிவிடமாட்டாரா?” என்கின்றார். இயேசு இந்த வார்த்தைகளை எத்தகைய சூழ்நிலையில் சொன்னார் என்பதையும், இவ்வார்த்தைகளின் மூலம் நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்பதையும் சிந்தித்துப் பார்ப்போம்.

குற்றம் காணும் நோக்குடன் இருந்த பரிசேயர்கள்

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, தன்னை விருந்துக்கு அழைத்திருந்த பரிசேயர்த் தலைவரின் வீட்டிற்கு உணவருந்தச் செல்கின்றார். இங்கு நாம் ஒரு முக்கியமான செய்தியைக் கவனிக்கவேண்டும். அது என்னவெனில், இயேசுவை விருந்துக்கு அழைத்திருந்திருந்த பரிசேயர்த் தலைவருக்கு அவருக்கு நல்லமுறையில் விருந்துகொடுக்கவேண்டும் என்பதைவிடவும், அவரிடம் குற்றம் காணவேண்டும் என்பது பெரிதாக இருந்தது. அதனாலேயே அவர் இயேசுவை ஓய்வுநாளில் விருந்துக்கு அழைக்கின்றார்; கூடவே ஒரு நீர்க்கோவை நோயாளர் அவர்முன் இருக்குமாறு பார்த்துக்கொள்கின்றார்.

ஓய்வுநாளில் நன்மைசெய்வதே முறை

இயேசு தன்னை விருந்துக்கு அழைத்திருந்திருந்த பரிசேயர்த் தலைவர் மற்றும் அங்கிருந்த ஏனைய பரிசேயர்களின் எண்ணங்கள் அறியாமல் இல்லை. அவர் அவர்களுடைய எண்ணங்களை நன்றாகவே அறிந்திருந்தார். அதனாலேயே அவர் அவர்களிடம், “ஓய்வு நாளில் நலப்படுத்துவது முறையா? இல்லையா?” என்கின்றார். இதற்கு அவர்களிடம் எந்தவொரு பதிலும் வராததால், இயேசு நீர்க்கோவை நோயாளரை நலமாக்குகின்றார். பின்னர் அவர் அவர்களைப் பார்த்து, “உங்களுள் ஒருவர் தம் பிள்ளையோ மாடோ கிணற்றில் விழுந்தால் ஓய்வுநாள் என்றாலும் அதனை உடனே தூக்கிவிடமாட்டாரா?” என்கின்றார்.

பரிசேயர்கள் வெளிவேடத்தின் மொத்த உருவாய் இருந்தார்கள். அவர்கள் ஓய்வுநாளில்பொழுது தங்களுடைய பிள்ளையோ அல்லது மாடோ கிணற்றில் விழுந்தால் அதைத் தூக்குவதில் தீவிரம் காட்டினார்கள். அதே நேரத்தில் இயேசு ஓய்வு நாளில் யாராவது ஒருவரை நலப்படுத்தினால் அதைப் பெரிய குற்றமாகப் பார்த்தார்கள். இதனால்தான் இயேசு நீர்க்கோவை நோயாளரை ஓய்வுநாளில் நலப்படுத்தி, ஓய்வுநாள் நன்மை செய்வதற்கே என்ற உண்மையை அவர்களிடம் உணர்த்துகின்றார்.

ஆம், நன்மை செய்வதற்கு நல்ல நாளோ, நல்ல நேரமோ தேவையில்லை. எல்லா நாளும், எல்லா நேரத்திலும் இயேசுவைப் போன்று, மேலே குறிப்பிடப்பட்ட திருவாளர் மகேத்திரேனைப் போன்று நன்மை செய்யலாம். நாம் எல்லா நாளும், எல்லா நேரமும் நன்மை செய்யத் தயாரா? சிந்திப்போம்.

சிந்தனை

‘நீங்கள் நன்மை செய்வதில் ஆர்வமுடையவர்களாய் இருந்தால், உங்களுக்குத் தீமை செய்யப்போகிறவர் யார்?’ (1 பேது 3: 13) என்பார் பேதுரு. ஆகையால், நாம் நன்மை செய்வதில் ஆர்வமுடையவர்களாய் இருப்போம். எதிர்வரும் வரும் தடைகளைக் கண்டு கலங்காமல், தொடர்ந்து இறைவழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
Free Blog Widget
Stats Counter
hit counter