maraikal
MUM
"

இளையோர்


பொதுக்காலம் 30 ஆம் வாரம்  25-10-2020

முதல் வாசகம்

விதவை, அனாதை யாருக்கும் நீ தீங்கிழைக்காதே.

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 22: 21-27

ஆண்டவர் கூறியது:

அன்னியனுக்கு நீ தொல்லை கொடுக்காதே! அவனைக் கொடுமைப் படுத்தாதே. ஏனெனில் எகிப்து நாட்டில் நீங்களும் அன்னியராய் இருந்தீர்கள்.

விதவை, அனாதை யாருக்கும் நீ தீங்கிழைக்காதே. நீ அவர்களுக்குக் கடுமையாகத் தீங்கிழைத்து அவர்கள் என்னை நோக்கி அழுது முறையிட்டால், நான் அவர்கள் அழுகுரலுக்குச் செவிசாய்ப்பேன். மேலும் என் சினம் பற்றியெரியும். நான் உங்களை என் வாளுக்கு இரையாக்குவேன். இதனால் உங்கள் மனைவியர் விதவைகளாவர். உங்கள் பிள்ளைகள் தந்தையற்றோர் ஆவர்.

உங்களோடிருக்கும் என் மக்களில் ஏழை ஒருவருக்கு நீ பணம் கடன் கொடுப்பாயானால், நீ அவர்மேல் ஈட்டிக்காரன் ஆகாதே. அவரிடம் வட்டி வாங்காதே.

பிறருடைய மேலாடையை அடகாக நீ வாங்கினால், கதிரவன் மறையுமுன் அதை அவரிடம் திருப்பிக் கொடுத்துவிடு. ஏனெனில், அது ஒன்றே அவருக்குப் போர்வை. உடலை மூடும் அவரது மேலாடையும் அதுவே. வேறு எதில்தான் அவர் படுத்துறங்குவார்? அவர் என்னை நோக்கி அழுது முறையிட்டால், நான் செவிசாய்ப்பேன். ஏனெனில் நான் இரக்கமுடையவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 18: 1-2a. 2bc-3,46,50 . (பல்லவி: 1)  Mp3

பல்லவி: என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்பு கூர்கின்றேன்.
1
என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்பு கூர்கின்றேன்.
2a
ஆண்டவர் என் கற்பாறை; என் கோட்டை; என் மீட்பர். - பல்லவி

2bc
என் இறைவன்; நான் புகலிடம் தேடும் மலை அவரே; என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும் வல்லமை, என் அரண்.
3
போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடினேன்; என் எதிரிகளிடமிருந்து நான் மீட்கப்பட்டேன். - பல்லவி

46
ஆண்டவர் உண்மையாகவே வாழ்கின்றார்! என் கற்பாறையாம் அவர் போற்றப் பெறுவாராக! என் மீட்பராம் கடவுள் மாட்சியுறுவாராக!
50
தாம் ஏற்படுத்திய அரசருக்கு மாபெரும் வெற்றியை அளிப்பவர் அவர்; தாம் திருப்பொழிவு செய்த தாவீதுக்கும் அவர்தம் மரபினருக்கும் என்றென்றும் பேரன்பு காட்டுபவரும் அவரே. - பல்லவி

இரண்டாம் வாசகம்

நீங்கள் கடவுளிடம் திரும்பி, அவருடைய மகன் இயேசுவுக்காகக் காத்திருக்கிறீர்கள்.


திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 5c-10

சகோதரர் சகோதரிகளே,

உங்கள் பொருட்டு நாங்கள் உங்களிடையே எவ்வாறு நடந்து கொண்டோம் என்பதும் உங்களுக்குத் தெரியும். மிகுந்த வேதனை நடுவிலும் நீங்கள் தூய ஆவி அருளும் மகிழ்வோடு இறைவார்த்தையை ஏற்றுக்கொண்டீர்கள். இவ்வாறு எங்களைப் போலவும் ஆண்டவரைப் போலவும் நடப்பவரானீர்கள். மாசிதோனியாவிலும் அக்காயாவிலும் உள்ள, நம்பிக்கை கொண்டோர் அனைவருக்கும் முன்மாதிரியானீர்கள்.

எப்படியெனில், ஆண்டவருடைய வார்த்தை உங்கள் நடுவிலிருந்தே பரவியது. கடவுள்மீது நீங்கள் நம்பிக்கை கொண்டிருப்பது மாசிதோனியாவிலும் அக்காயாவிலும் மட்டும் அல்ல, எல்லா இடங்களிலும் தெரிய வந்துள்ளது. எனவே இதைப் பற்றி நாங்கள் எடுத்துச் சொல்ல வேண்டிய தேவையே இல்லை. நாங்கள் உங்களிடம் வந்தபோது எவ்வாறு நீங்கள் எங்களை வரவேற்றீர்கள் என்று அவர்களே கூறுகிறார்கள். நீங்கள் எவ்வாறு சிலைகளை விட்டுவிட்டு, உண்மையான, வாழும் கடவுளுக்கு ஊழியம்புரியக் கடவுளிடம் திரும்பி வந்தீர்கள் என்றும் கூறிவருகிறார்கள். இவ்வாறு நீங்கள் வானினின்று வரும் அவருடைய மகன் இயேசுவுக்காகக் காத்திருக்கிறீர்கள். அவரே வரப்போகும் சினத்திலிருந்து நம்மை மீட்பவர். இறந்த அவரையே தந்தை உயிர்த்தெழச் செய்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 14: 23

அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 22: 34-40

அக்காலத்தில்

இயேசு சதுசேயரை வாயடைக்கச் செய்தார் என்பதைக் கேள்விப்பட்ட பரிசேயர் ஒன்றுகூடி அவரிடம் வந்தனர். அவர்களிடையே இருந்த திருச்சட்ட அறிஞர் ஒருவர் அவரைச் சோதிக்கும் நோக்கத்துடன், “போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?” என்று கேட்டார்.

அவர், “ ‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து.’ இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை. ‘உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக’ என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை. திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன” என்று பதிலளித்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
 

 


I விடுதலைப் பயணம் 22: 21-27
II 1 தெசலோனிக்கர் 1: 5c- 10
III மத்தேயு 22: 34-40

அன்பே தலைசிறந்த, முதன்மையான கட்டளை!


நிகழ்வு

உழவர் ஒருவர் இருந்தார். ஒருநாள் இவர் தன்னுடைய நிலத்தில் வேலை பார்ப்பதற்காக வழக்கமாகச் செல்லும் பாதை வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தார். வழியில் ஒரு மாமரம் இருந்தது. அந்த மாமரத்தை இவர் பார்த்தபொழுது கைக்கெட்டும் தூரத்தில் ஒரு மாம்பழம் இருந்தது. ‘இத்தனை பேர் கடந்து போகின்ற இந்தப் பாதையில், எப்படி இந்த மாம்பழம் மட்டும் யாருடைய கண்ணிலும் படாமலும் இருக்கின்றது! இப்பழம் இன்று நமக்குக் கிடைக்கவேண்டும் என்று இருந்திருக்கின்றது, அதனால்தான் இது யாருடைய கண்ணிலும் படாமலும் இருக்கின்றது!’ என்று நினைத்தவராய், இவர் அந்தப் பழத்தைப் பறித்துத் துண்டில் வைத்துக்கொண்டு, தன்னுடைய நிலத்தை நோக்கி நடந்துசென்றார்.

நிலத்தில் தன்னுடைய வேலையெல்லாம் முடித்துவிட்டு, வீட்டிற்கு வந்த இவர், தன் மனைவியை அன்பை அழைத்து, “இன்று நான் உனக்கொரு பரிசு தரப்போகிறேன்” என்று சொல்லிவிட்டு, வழியோரமாய் இருந்த மாமரத்திலிருந்து பறித்த மாம்பழத்தை அவருக்கு ஆசையோடு கொடுத்தார். அதை மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்ட இவருடைய மனைவி, “வீட்டு வேலை இருக்கின்றது... வேலையை முடித்துவிட்டுப் பிறகு சாப்பிட்டுக் கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டு, மாம்பழத்தை மேசையில் வைத்துவிட்டு, வேலையைப் பார்க்கத் தொடங்கினார்.

மாலை வேலையில் பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வந்தான் மகன். அவனிடம் தாய், “தம்பி! நீ பசியோடு இருப்பாய்! இந்தா இந்த மாம்பழத்தைச் சாப்பிடு” என்று தன் கணவர் தனக்கு ஆசையாய்க் கொடுத்த மாம்பழத்தை அவனுக்குக் கொடுத்தார். அவனோ, “விளையாண்டு விட்டு, வந்து சாப்பிட்டுக் கொள்கின்றேன்மா” என்று சொல்லிவிட்டு மாம்பழத்தைப் பை அருகில் வைத்துவிட்டு, விளையாடச் சென்றான். அவன் விளையாண்டுகொண்டிருக்கும்பொழுது, ‘மாம்பழத்தை நான் சாப்பிடுவதைவிடவும், என்னைப் பல்வேறு சிரமங்களுக்கு நடுவிலும் படிக்க வைத்துக்கொண்டிருக்கும் என் தந்தைக்குக் கொடுப்பதுதான் சரி’ என்ற எண்ணம் மீண்டும் மீண்டுமாக அவனுக்குள் வந்தது. இதனால் அவன் விளையாண்டுவிட்டு வீட்டுவந்த பிறகு, இரவு உணவின் தன் தாய் தனக்குத் தந்த மாம்பழத்தை எடுத்துத் தன் தந்தையிடம் கொடுத்து, “அப்பா! என்னைப் பல்வேறு சிரமங்களுக்கு நடுவிலும் படிக்க வைத்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு, என் அன்பு பரிசு இது” என்றான்.

தான் கொடுத்த மாம்பழம் தனக்கே திரும்பி வந்ததை நினைத்து மிகவும் மகிழ்ச்சியடைந்த உழவர், அந்த மாம்பழத்தை மூன்று துண்டுகளாக நறுக்குத் தன் மனைவிக்கும் மகனுக்கும் கொடுத்துவிட்டு, தனக்குரிய துண்டை மனநிறைவோடு சாப்பிட்டார்.

நாம் ஒருவரிடம் செலுத்தும் அன்பு, எப்படியும் நம்மிடம் திரும்பி வரும் என்ற உண்மையை இந்த நிகழ்வானது நமக்கு மிக அருமையாக எடுத்துக்கூறுகின்றது. பொதுக்காலத்தின் முப்பதாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, அன்பே தலைசிறந்த முதன்மையான கட்டளை என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசுவைச் சோதிக்கும் நோக்குடன் வந்த திருச்சட்ட அறிஞர்

கடந்து ஓரிரு ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் நற்செய்தி வாசகத்தை நாம் கூர்ந்து கவனித்துப் பார்த்தால், யூதச் சமூகத்தில் அதிகாரத்தில் இருந்தவர்கள் இயேசுவிடம் குதர்க்கமாகக் கேள்வியைக் கேட்டு, அவரை எப்படியாவது சிக்கலில் மாட்டிவிட வேண்டும் என்பதற்கு முயற்சிசெய்வதை நாம் அறிந்துகொள்ளலாம். கடந்த வாரம் நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தி வாசகத்தில், பரிசேயர்களும் ஏரோதியர்களும் இயேசுவிடம், “சீசருக்கு வரிசெலுத்துவது முறையா? இல்லையா?” என்றொரு கேள்வியோடு வருவார்கள். இன்றைய நற்செய்தி வாசகத்தில் தொடக்கத்தில், இயேசு (உயிர்ப்பைப் பற்றிக் கேள்வி கேட்ட) சதுசேயர்களின் வாயடைக்கச் செய்தார் என்று வருகின்றது. இதைத் தொடர்ந்துதான் திருச்சட்ட அறிஞர் இயேசுவிடம் வந்து, அவரைச் சோதிக்கும் நோக்குடன், “திருச்சட்ட நூலில் தலைச்சிறந்த கட்டளை எது?” என்று கேட்கின்றார்.

இவர் இயேசுவிடம் இப்படியொரு கேள்வியைக் கேட்டது, ஒருவகையில் அவரைச் சோதிக்கும் நோக்குடன் இருந்தாலும், மக்களால் போதகராக, இறைவாக்கினராக அறியப்பட்ட இயேசுவைப் பொறுத்தளவில், எது தலைசிறந்த கட்டளை என்று தெரிய விரும்பினார். ஏனெனில், திருச்சட்ட அறிஞர்கள் நடுவில், எது தலைசிறந்த கட்டளை? என்ற விவாதம் அடிக்கடி ஏற்பட்டது. இதனாலும் அவர் இயேசுவிடம் இப்படியொரு கேள்வியைக் கேட்கின்றார்.

இறையன்பு தலைசிறந்த கட்டளை

தன்னிடம் திருச்சட்ட அறிஞர் கேட்ட இப்படியொரு கேள்விக்கு இயேசு, இணைச்சட்ட நூல் 6:5, லேவியர் நூல் 19:18 ஆகிய இரண்டு இறைவார்த்தைப் பகுதிகளையும் இணைத்து, இறைவனை முழுமையாக அன்பு செய்வது தலைசிறந்த முதன்மையான கட்டளை என்றும், அடுத்திருப்பவர்மீது அன்புகூர்வது முதமையான கட்டளைக்கு இணையான கட்டளை என்றும் கூறுகின்றார். யூதர்கள் (இன்றும் ஒருசிலர்) இறைவனை அன்பு செய்தால் போதுமானது, அவரை அன்பு செய்வதே முதன்மையான கட்டளை என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், ஆண்டவர் இயேசு இறைவனை அன்பு செய்வதற்கு இணையானது, அடுத்திருப்பவரை அன்பு செய்வது என்று மிகத் தெளிவாக விளக்குகின்றார்.

இயேசு ஏன் இறையன்புக்கு இணையானது பிறரன்பு என்று சொல்கின்றார் எனத் தெரிந்துகொள்வது மிகவும் அவசியம்.

பிறரன்பு அதற்கு இணையான கட்டளை

ஆண்டவராகிய கடவுள் மானிடரை உண்டாக்கும்பொழுது, “மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம்” என்று சொல்லியே உண்டாக்குகின்றார் (தொநூ 1:26) மேலும் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில், “நீங்கள் கடவுளுடைய கோயிலென்றும், கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கின்றார் என்றும் உங்களுக்குத் தெரியாதா?” என்பார் (1 கொரி 3:16). இந்த இறைவார்த்தைகளை வைத்துப் பார்க்கின்றபொழுது, ஒவ்வொருவரும் கடவுளின் சாயலைத் தாங்கி இருக்கின்றார்; ஒவ்வொருவரும் கடவுள் வாழும் கோயிலாக இருக்கின்றார் என்பது தெளிவாகின்றது. அப்படியானால், நாம் மனிதர்களை அன்பு செய்கின்றபொழுது இறைவனை அன்பு செய்கின்றோம் என்பது உண்மையாகின்றது.

இன்றைக்குப் பலர் கடவுளை அன்புசெய்துவிட்டு, (கடைநிலையில் உள்ள) மனிதர்களை வெறுத்து ஒதுக்குகின்றார்கள். இதைவிட போலித்தனமான வாழ்க்கை வேறில்லை! இப்படிப்பட்டவர்களைப் பொய்யர் என்கிறார் புனித யோவான் (1 யோவா 4: 20). இதையொட்டி வருகின்ற இன்றைய முதல் வாசகத்தை நம்முடைய கவனத்திற்கு எடுத்துக் கொள்வோம்.

ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களிடம், “அன்னியருக்கு நீ தொல்லை கொடுக்காதே! ஏனெனில் எகிப்து நாட்டில் நீங்கள் அன்னியராய் இருந்தீர்கள்...! நான் அவர்கள் அழுகுரலுக்குச் செவிசாய்ப்பேன்” என்கின்றார். ஆண்டவர் கூறுகின்ற இவ்வார்த்தைகள், அவர் அன்னியரிலும் இருக்கின்றார்; அவர்களும் அவருடைய மக்களே என்ற உண்மையை உரக்கச் சொல்வதாக இருக்கின்றன. ஆண்டவர் அடுத்திருப்பவரிலும் இருப்பதால், அவர்களை அன்பு செய்கின்றபொழுது, நாம் ஆண்டவரை அன்பு செய்பவர்களாக இருக்கின்றோம். மேலும் திருச்சட்ட நூல் முழுமைக்கும், இறைவாக்கு நூல்களுக்கும் அடிப்படையாக இருக்கும் கட்டளைகளை நிறைவேறுபவர்களாக இருக்கின்றோம்.

எனவே, நாம் இறையன்பும் பிறரன்பும் திருச்சட்ட நூலின் தலைசிறந்த, முதன்மையான கட்டளை என்பதை உணர்ந்து, இறைவனையும் அடுத்திருப்பவரையும் முழுமையாக அன்பு செய்து, இறையரசை உரித்தாக்குவோம்.

சிந்தனை

‘உண்மையான அன்பு செலுத்துவோருடைய இதயம், பூவுலகில் ஒரு விண்ணகம். அவரிடம் இறைவன் தங்குகிறார். ஏனெனில், இறைவன் அன்பு மயமானவர்’ என்பார் லாமென்னெய்ஸ்’ என்ற அறிஞர். ஆகையால், நாம் இறைவனையும் அடுத்திருப்பவரையும் முழுமையாக அன்பு செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

 
Free Blog Widget
Stats Counter
hit counter