maraikal
MUM
"

இளையோர்


பொதுக்காலம் 29 ஆம் வாரம்  24-10-2020

முதல் வாசகம்

தலையாகிய கிறிஸ்துவைப் போன்று எல்லாவற்றிலும் நாம் வளர வேண்டும்.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 7-16

சகோதரர் சகோதரிகளே,

கிறிஸ்து கொடுக்க விரும்பும் அளவுக்கேற்ப நம் ஒவ்வொருவருக்கும் அருள் அளிக்கப்பட்டுள்ளது. ஆகையால்தான், ‘அவர் உயரே ஏறிச் சென்றார்; அப்போது, சிறைப்பட்ட கைதிகளை இழுத்துச் சென்றார்; மனிதருக்குப் பரிசுகளை வழங்கினார்’ என்று மறைநூல் கூறுகிறது.

‘ஏறிச் சென்றார்’ என்பதனால் அதன் முன்பு மண்ணுலகின் கீழான பகுதிகளுக்கு அவர் இறங்கினார் என்று விளங்குகிறது அல்லவா? கீழே இறங்கியவர்தான் எங்கும் நிறைந்திருக்கும்படி எல்லா வானுலகங்களுக்கும் மேலாக ஏறிச் சென்றவர்.

அவரே சிலரைத் திருத்தூதராகவும், சிலரை இறைவாக்கினராகவும், வேறு சிலரை நற்செய்தியாளர்களாகவும், ஆயர்களாகவும், போதகர்களாகவும் ஏற்படுத்தினார். திருத்தொண்டாற்ற இறைமக்களை ஆயத்தப்படுத்தவும், கிறிஸ்துவின் உடலைக் கட்டி எழுப்பவும் இவர்களை அவர் ஏற்படுத்தினார். அதனால் நாம் எல்லாரும் இறைமகனைப்பற்றிய அறிவிலும் நம்பிக்கையிலும் ஒருமைப்பாட்டை அடைவோம். கிறிஸ்துவிடம் காணப்பட்ட நிறைவைப் பெறுமளவுக்கு நாம் முதிர்ச்சியடைவோம்.

ஆகவே இனி நாம் குழந்தைகளைப்போல் இருக்கக் கூடாது. மனிதருடைய தந்திரங்களையும் சூழ்ச்சிகளையும் தவறுக்கு வழிநடத்தும் ஏமாற்று வழிகளையும் நம்பி, அவர்களுடைய போதனைகள் என்னும் காற்றால் அடித்துச் செல்லப்பட்டு அங்குமிங்கும் அலைக்கழிக்கப்படக் கூடாது. மாறாக, அன்பின் அடிப்படையில் உண்மை பேசி, தலையாகிய கிறிஸ்துவைப் போன்று எல்லாவற்றிலும் நாம் வளர வேண்டும். அவரால்தான் முழு உடலும் இசைவாய்ப் பொருந்தித் தன்னிடமுள்ள தசைநார்களால் இறுக்கிப் பிணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் உறுப்பும் தனக்கே குறிக்கப்பட்ட பணியைச் செய்வதால் உடல் வளர்ச்சி பெற்று, அன்பால் கட்டமைப்புப் பெற்று வளர்ச்சியடைகிறது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 122: 1-2. 3-4a. 4b-5 . (பல்லவி: 1a) Mp3

பல்லவி: அகமகிழ்வுடன் ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்.

1
“ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்", என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன்.
2
எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். - பல்லவி

 
3
எருசலேம் செம்மையாக ஒன்றிணைத்துக் கட்டப்பட்ட நகர் ஆகும்.
4a
ஆண்டவரின் திருக்குலத்தார் ஆங்கே செல்கின்றனர். - பல்லவி

 
4b
இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைகளுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றிசெலுத்தச் செல்வார்கள்.
5
அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். - பல்லவி

 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

எசே 33: 11

அல்லேலூயா, அல்லேலூயா! தீயோர் சாகவேண்டும் என்பது என் விருப்பம் அன்று; ஆனால், அத்தீயோர் தம் வழிகளினின்று திரும்பி வாழவேண்டும், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மனம் மாறாவிட்டால், நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 1-9

அக்காலத்தில்

சிலர் இயேசுவிடம் வந்து, பலி செலுத்திக்கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர். அவர் அவர்களிடம் மறுமொழியாக, “இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரையும் விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா? அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள்.

சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப் பேரைக் கொன்றதே. அவர்கள் எருசலேமில் குடியிருந்த மற்ற எல்லாரையும் விடக் குற்றவாளிகள் என நினைக்கிறீர்களா? அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள்” என்றார்.

மேலும், இயேசு இந்த உவமையைக் கூறினார்: “ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை. எனவே அவர் தோட்டத் தொழிலாளரிடம், ‘பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்திமரத்தில் கனியைத் தேடி வருகிறேன்; எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்?’ என்றார்.

தொழிலாளர் மறுமொழியாக, ‘ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டு வையும்; நான் இதைச் சுற்றிலும் கொத்தி எரு போடுவேன். அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டிவிடலாம்’ என்று அவரிடம் கூறினார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

எபேசியர் 4: 7-16

“கிறிஸ்து கொடுக்க விரும்பும் அளவுக்கேற்ப நம் ஒவ்வொருவருக்கும் அருள் அளிக்கப்பட்டுள்ளது”



நிகழ்வு

மரவேலைப்பாடுகளைச் செய்யும் தச்சர் ஒருவர் இருந்தார். ஒருநாள் இவர் ஒரு பெரிய கோயிலில் வேலை செய்துகொண்டிருந்தார். தேநீர் அருந்துவதற்காக இவர் வெளியே சென்ற நேரத்தில், இவரிடத்தில் இருந்த சுத்தி (Hammer) திருகு (Screw), இழைப்புளி (Plane), வரைவுகோல் (Ruler), மரத்துகள் காகிதம் (Sandpaper) ஆகியவை தங்களுள் யார் பெரியவன் என்ற வாக்குவாதத்தில் ஈடுபடத் தொடங்கின. வாக்குவாதத்தில் ஒவ்வொன்றும் நான்தான் உயர்ந்தது என்று நிரூபிக்கத் தொடங்கியது.

வாக்குவாதம் நீண்டுகொண்டே போகும்பொழுது, சுத்தியைத் தவிர்த்து, மற்ற எல்லாக் கருவிகளும் ஒன்று சேர்ந்துகொண்டு, “சுத்தியே! நீதான் எங்களைவிடப் பெரியவன் என எண்ணிக் கொண்டிருக்கின்றாய். உண்மையில் நீதான் எப்பொழுது பார்த்தாலும் சத்தம் எழுப்பிக் கொண்டே இருக்கின்றாய். இது எங்களுக்கு பெரிதும் தொந்தரவாக இருக்கின்றது. அதனால் நீ தயவுசெய்து இந்தக் குழுவை விட்டு வெளியேறி விடு. அதுதான் எங்கள் எல்லாருக்கும் நல்லது” என்றன.

இத்தனை நாள்களும் தன்னோடு வேலை பார்த்துவந்த கருவிகளெல்லாம் ஒன்று சேர்ந்துகொண்டு, தன்னைக் குழுவை விட்டுப் போகுமாறு சொன்னதைக் கேட்டு அதிர்ந்துபோன சுத்தி, திருகைப் பார்த்து, “திருகே! நான் இந்தக் குழுவைவிட்டுப் போகவேண்டும் என்றால், ஓரிடத்தில் நில்லாமல், எப்பொழுதும் சுற்றிக்கொண்டிருக்கும் நீயும் இந்தக் குழுவை விட்டு வெளியேற வேண்டும்” என்றது.

இதற்குத் திருகு, இழைப்புளியைப் பார்த்து, “ஓரிடத்தில் நில்லாமல் எபோழுதும் சுற்றிக்கொண்டிருக்கும் நான் இந்தக் குழுவை விட்டு வெளியேற வேண்டுமெனில், ஆழமாகச் செல்லாமல், மேலோட்டமாய்ச் செயல்படும் இழைப்புளியும் இந்தக் குழுவை விட்டு வெளியேற வேண்டும்” என்றது. உடனே இழைப்புளி வரைவுகோலைப் பார்த்து, “நான் மேலோட்டமாகச் செயல்படுகின்றேன் என்பதற்காக இந்தக் குழுவை விட்டு வெளியேற வேண்டும் எனில், ‘நான்தான் சரியானவன்’ என்ற எண்ணத்தோடு மற்றவைகளை அளந்து கொண்டிருக்கும் வரைவுகோலும் இந்தக் குழுவை விட்டு வெளியேறவேண்டும்” என்றது.

இழைப்புளி தன்னை இப்படிச் சொன்னதைத் தாங்கிக்கொள்ளாத வரைவுகோல், மரத்துகள் காகிதத்தைப் பார்த்து, “எப்பொழுதும் மிகக் கடினமாக இருக்கும் நீயும் இந்தக் குழுவை விட்டு வெளியேறவேண்டும் என்றது. இப்படியே ஒன்று மற்றொன்றைக் குறைகூறிக் கொண்டிருந்தநேரத்தில் தச்சர் உள்ளே வந்தார். இவரைக் கண்டதும் எல்லாக் கருவிகளும் அமைதியாயின. பின்னர் இவர் சுத்தி, திருகு, இழைப்புளி, வரைவுகோல், மரத்துகள் காகிதம் என எல்லாப் பொருள்களையும் பயன்படுத்தி, ஒரு வாசக மேடை செய்து, அந்த வாசக மடையைப் பீடத்தில் அதற்குரிய இடத்தில் வைத்து அழகு சேர்த்தார்.

இந்த நிகழ்வில் வருகின்ற கருவிகள் அனைத்தும் ‘நான்தான் பெரியவன்’ என்று தங்களுக்குள் வாதிட்டுக்கொண்டிருந்தபொழுது, தச்சர் அவை எல்லாவற்றையும் ஒவ்வொன்றாகப் பயன்படுத்தி ஒரு வாசக மேடை செய்தார். ஆம், கடவுள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக அருளை அல்லது கொடையை அளித்திருக்கின்றார். அதைக்கொண்டு ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் உடலை கட்டி எழுப்பவேண்டும். அதைத்தான் இந்தக் கற்பனைக் கதையும், இன்றைய முதல் வாசகமும் நமக்கு எடுத்துரைக்கின்றன. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கொடையைத் தந்திருக்கும் இறைவன்

இன்றைய முதல் வாசகம், நேற்றைய முதல் வாசகத்தின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இறைமக்கள் யாவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று நேற்றைய முதல் வாசகத்தில் கூறிய புனித பவுல், இன்றைய முதல் வாசகத்தில், நம் ஒவ்வொருவருக்கும் அளிக்கப்பட்டிருக்கும் தனித்தன்மையான கொடைகளை அல்லது அருளைக் கொண்டு கிறிஸ்துவின் உடலைக் கட்டி எழுப்பவேண்டும் என்று கூறுகின்றார்.

கிறிஸ்துவின் உடல் அல்லது திருஅவை நம்மைப் போன்ற பல உறுப்புகளால் ஆனது. இதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான கொடை அளிக்கப்பட்டிருக்கின்றது. சிலர் திருத்தூதர்களாக இருக்க குறிக்கப்பட்டிருக்கின்றார்கள் எனில், சிலர் இறைவாக்கினர்களாகவும் நற்செய்திப் பணியாளர்களாகவும் இருக்கப் முன் குறிக்கப்பட்டிருக்கின்றார்கள். இவ்வாறு ஒவ்வொருவரும் தங்களுக்குக் குறிக்கப்பட்ட பணிகளைச் செய்யவேண்டும். அதன் மூலம் அவர்கள் கிறிஸ்துவின் உடலைக் கட்டி எழுப்ப வேண்டும்.

இங்கு நாம் கருத்தில் கொள்ளவேண்டிய முக்கியமான செய்தி என்னவெனில், கடவுள் ஒருவரைக் கொடுத்திருக்கும் கொடையைக் கொண்டு, அவர் தன்னை உயர்வாகவும், மற்றவரைத் தாழ்வாகவும் கருதக்கூடாது. அப்படிக் கருதும் பட்சத்தில், கிறிஸ்துவின் உடலை நல்லமுறையில் கட்டி எழுப்ப முடியாது.

இந்த உண்மையை உணர்ந்தவர்களாய் நாம் ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள் என்ற உணர்வோடு கிறிஸ்துவின் உடலைக் கட்டி எழுப்புவோம்.

சிந்தனை

‘பொது நன்மைக்காகவே தூய ஆவியாரின் செயல்பாடுகள் ஒவ்வொருவரிலும் வெளிப்படுகின்றது’ (1 கொரி 12: 7) என்பார் புனித பவுல். ஆகையால், பொது நன்மைகாகக் கொடுக்கப்பட்டிக்கும் கொடைகளைக் கொண்டு, கிறிஸ்துவின் உடலாம் திருஅவையைக் கட்டி எழுப்புவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
லூக்கா 13: 1-9

அவர்(கள்) மற்ற எல்லாரையும்விடக் குற்றவாளி(கள்) என நினைக்கிறீரா?



நிகழ்வு

பற்பசை (Toothpaste) உலகில் தனக்கெனத் தனிமுத்திரை பதித்திருக்கும் ஒரு நிறுவனம், கோல்கேட் நிறுவனம். இதன் நிறுவனர் சாமுவேல் கோல்கேட் என்பவர் ஆவார்.

இறைவன்மீது மிகுந்த பற்றுக்கொண்ட இவர், ஒருநாள் ஒரு நற்செய்திக் கூட்டத்தில் கலந்துகொண்டார். நற்செய்திக்கூட்டத்திற்கு பலதரப்பட்ட மக்கள் வந்திருந்தார்கள். நற்செய்திக் கூட்டத்தின் நிறைவில் திருப்பலி நடைபெற்றது. அந்தத் திருப்பலியில் மறையுரைக்குப் பின்னர், அருள்பணியாளர், “இப்பொழுது யாரெல்லாம் பாவ மன்னிப்புப் பெற விரும்புகின்றீர்களோ, அவர்கள் பீடத்திற்கு முன்பு வரலாம். நான் அவர்களுக்குப் பாவ மன்னிப்பு வழங்குவேன்” என்றார்.

அருள்பணியாளர் இவ்வாறு சொன்னதும், அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த பிற சமயத்தைச் சார்ந்த விலைமகள் ஒருத்தி, பீடத்திற்கு முன்பாக வந்து, முழந்தாள் படியிட்டாள். அவள் பீடத்திற்கு முன்பாக வந்து முழந்தாள்படியிட்டதுவோ ஒருசிலர், “இவள் மிகப்பெரிய பாவியாற்றே! கடவுள் இவளுடைய பாவத்தை எல்லாம் மன்னிப்பாரா?” என்று முணுமுணுக்கத் தொடங்கினார்கள். இது சாமுவேல் கோல்கேட்டின் செவிகளில் நன்றாகவே விழுந்தது. இருந்தாலும் அவர் எதுவும் பேசாது அமைதியாக இருந்தார்.

இதற்குப் பின்னர் அருள்பணியாளர் பீடத்திற்கு முன்பாக முழந்தாள்படியிட்டிருந்த விலைமகளுக்கு பாவமன்னிப்பு வழங்கினார். அவர் அந்தப் பெண்ணுக்குப் பாவ மன்னிப்பு வழங்கியதும், அவள் புதிய பெண்ணாக உணர்ந்தாள். அதனால் அவள், “ஆண்டவர் எனக்குப் பாவ மன்னிப்பு வழங்கிவிட்டார் என்பதை என்னுடைய உள்ளத்தில் நன்றாகவே உணர்கிறேன். ஆகவே, பிற சமயத்தைச் சார்ந்த நான் இப்பொழுதே திருமுழுக்குப் பெற்று, கிறிஸ்தவளாக வாழ விரும்புகின்றேன்” என்று உரக்கச் சொன்னாள்.

அந்தப் பெண்மணி இவ்வாறு சொன்னதைக் கேட்டுவிட்டு, ‘இவள் மிகப்பெரிய பாவியாற்றியே...! இவளுடைய பாவத்தையெல்லாம் கடவுள் மன்னிப்பாரா?’ என்று முன்பு முணுமுணுத்த அதே மனிதர்கள், இப்பொழுதும் அதே வார்த்தைகளைச் சொல்லி முணுமுணுத்தார்கள். அதுவரை பொறுமையாக இருந்த சாமுவேல் கோல்கேட், முணுமுணுத்துவர்களை நோக்கி, “கடவுளால் மன்னிக்க முடியாத குற்றம் எதுவும் இருக்கின்றதா?. ஒருவேளை கடவுளால் இந்தப் பெண்மணி செய்த குற்றத்தை மன்னிக்க முடியாது என நீங்கள் நினைத்தீர்கள் எனில், நீங்கள் கடவுளை முழுமையாக நம்பவில்லை என்பது பொருள். மேலும் அந்தப் பெண்மணியை மிகப்பெரிய பாவி எனக் குற்றஞ்சாட்டும் நீங்கள், இதுவரை பாவமே செய்யவில்லையா?” என்றார். சாமுவேல் கோல்கேட் இப்படிச் சொன்னதும் அவர்களால் எதுவும் பேச முடியவில்லை.

ஆம், பலருக்கு மற்றவர்கள் செய்த தவறுதான் பெரிதெனத் தெரிகின்றதே ஒழிய, தாங்கள் செய்த தவறு பெரிதெனத் தெரிவதில்லை. இத்தையோர் தங்களுடைய வாழ்வை ஆய்வுக்கு உட்படுத்திப்பார்த்து, கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வது நல்லது. நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, மற்றவர்களைப் பாவிகள் என்றும் குற்றவாளிகள் என்றும் கூற விழைந்தவர்களிடம், நீங்கள் முதலில் மனம்மாறுங்கள் என்கின்றார். இது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

மற்றவர்களைத் குற்றவாளிகள் எனத் தீர்ப்பிடும் முன், நாம் மனம்மாறுவது நல்லது

இன்றைய நற்செய்தி வாசகம், பலி செலுத்திக்கொண்டிருந்த கலிலேயரை பிலாத்து கொன்றான் என்று ஒருசிலர் இயேசுவிடம் சொல்வதோடு தொடங்குகின்றது. இவர்கள் இயேசுவிடம் இச்செய்தியை சொல்வதன்மூலம், பிலாத்துவால் கொல்லப்பட்டவர்கள் பாவிகள் என்று கூற விழைகின்றார்கள். அப்பொழுதுதான் இயேசு அவர்களிடம், “சீலோவாமிலே கோபுரம் விழுந்து, பதினெட்டுப் பேரைக் கொன்றதே. அவர்கள் எருசலேமில் குடியிருந்த மற்ற எல்லாரையும் விடக் குற்றவாளிகள் என நினைகிறீர்களா...? மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள்” என்கின்றார்.

பொதுவாக, ஒருவருக்கு விபத்தோ அல்லது தீராத நோயோ ஏற்பட்டுவிட்டால், அவர் மிகப்பெரிய குற்றம் செய்திருக்கவேண்டும், அதனால்தான் அவருக்கு அப்படியெல்லாம் ஏற்பட்டிருக்கின்றது என்று மனிதர்கள் குறைசொல்வது வழக்கம். நற்செய்தியில் இயேசுவின் சீடர்கள்கூட பிறவியிலேயே பார்வையற்ற மனிதரைப் பார்த்துவிட்டு இதையேதான் கூறுவார்கள் (யோவா 9: 2); ஆனால், ஆண்டவர் இயேசு, மற்றவர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பிட்டுக் கொண்டிருப்பதற்குப் பதில், நீங்கள் முதலில் மனம்மாறுங்கள், இல்லையென்றால் அழிவு உறுதி என்று கூறுகின்றார்.

ஆகையால், நாம் பிறரைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பிட்டுக் கொண்டிருக்காமல், மனம்மாறுவதற்கான வழிகளை நாடுவோம்.

சிந்தனை

‘உங்கள் பாவங்கள் போக்கப்படும் பொருட்டு மனம்மாறி அவரிடம் திரும்பி வாருங்கள்’ (திப 3: 19) என்கிறது திருத்தூதர் பணிகள் நூல். எனவே, நாம் மற்றவர்களைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பிட்டுக் கொண்டிருக்காமல், மனம்மாற்றம் அடைந்து, ஆண்டவருக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

Free Blog Widget
Stats Counter
hit counter