maraikal
MUM
"

இளையோர்


பொதுக்காலம் 28 ஆம் வாரம்  11-10-2020

முதல் வாசகம்

ஆண்டவர் சிறந்ததொரு விருந்தை ஏற்பாடு செய்வார்; அனைவரின் துன்பத் துகிலைத் தூக்கி எறிவார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 25: 6-10a

படைகளின் ஆண்டவர் இந்த மலையில் மக்களினங்கள் அனைவருக்கும் சிறந்ததொரு விருந்தை ஏற்பாடு செய்வார்; அதில் சுவைமிக்க பண்டங்களும், பழரசப் பானமும், கொழுப்பான இறைச்சித் துண்டுகளும், வடிகட்டிப் பக்குவப்படுத்திய திராட்சை இரசமும் பரிமாறப்படும். மக்களினங்கள் அனைவரின் முகத்தை மூடியுள்ள முக்காட்டை இந்த மலையில் அவர் அகற்றிவிடுவார்; பிற இனத்தார் அனைவரின் துன்பத் துகிலைத் தூக்கி எறிவார்.

என்றுமே இல்லாதவாறு சாவை ஒழித்து விடுவார்; என் தலைவராகிய ஆண்டவர் எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்து விடுவார்; தம் மக்களுக்கு ஏற்பட்ட நிந்தையை இம்மண்ணுலகில் அகற்றிவிடுவார்; ஏனெனில், ஆண்டவரே இதை உரைத்தார்.

அந்நாளில் அவர்கள் சொல்வார்கள்: “இவரே நம் கடவுள்; இவருக்கென்றே நாம் காத்திருந்தோம்; இவர் நம்மை விடுவிப்பார்; இவரே ஆண்டவர்; இவருக்காகவே நாம் காத்திருந்தோம்; இவர் தரும் மீட்பில் நாம் மகிழ்ந்து அக்களிப்போம்.” ஆண்டவரின் ஆற்றல் இம்மலையில் தங்கியிருக்கும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 23: 1-3a. 3b-4. 5. 6 . (பல்லவி: 6cd) Mp3

பல்லவி: நான் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.
1
ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
2
பசும் புல்வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.
3a
அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். - பல்லவி

3b
தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்;
4
மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். - பல்லவி

5
என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. - பல்லவி

6
உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். - பல்லவி

இரண்டாம் வாசகம்

எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு, எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு.

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 12-14, 19-20

சகோதரர் சகோதரிகளே,

எனக்கு வறுமையிலும் வாழத் தெரியும்; வளமையிலும் வாழத் தெரியும். வயிறார உண்ணவோ, பட்டினி கிடக்கவோ, நிறைவோ குறைவோ எதிலும் எந்தச் சூழலிலும் வாழப் பயிற்சி பெற்றிருக்கிறேன்.

எனக்கு வலுவூட்டுகிறவரின் துணை கொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு. ஆயினும் நான் பட்ட துன்பத்தில் நீங்கள் பங்கு கொண்டது உங்கள் நன்மனத்தைக் காட்டுகிறது.

என் கடவுள், கிறிஸ்து இயேசுவின் வழியாய்த் தம் ஒப்பற்ற செல்வத்தைக் கொண்டு, உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்வார். நம் தந்தையாகிய கடவுளுக்கு என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
எபே 1: 18, 19

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்று நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக! அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நீங்கள் போய்ச் சாலையோரங்களில் காணும் எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 22: 1-14

அக்காலத்தில்

இயேசு மீண்டும் தலைமைக் குருக்களையும் மக்களின் மூப்பர்களையும் பார்த்து உவமைகள் வாயிலாகப் பேசியது: “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: அரசர் ஒருவர் தம் மகனுக்குத் திருமணம் நடத்தினார். திருமணத்திற்கு அழைப்புப் பெற்றவர்களைக் கூட்டிக்கொண்டு வருமாறு அவர் தம் பணியாளர்களை அனுப்பினார். அவர்களோ வர விரும்பவில்லை.

மீண்டும் அவர் வேறு பணியாளர்களிடம், ‘நான் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். காளைகளையும் கொழுத்த கன்றுகளையும் அடித்துச் சமையல் எல்லாம் தயாராய் உள்ளது. திருமணத்திற்கு வாருங்கள்’ என அழைப்புப் பெற்றவர்களுக்குக் கூறுங்கள் என்று சொல்லி அனுப்பினார். அழைப்புப் பெற்றவர்களோ அதைப் பொருட்படுத்தவில்லை. ஒருவர் தம் வயலுக்குச் சென்றார்; வேறு ஒருவர் தம் கடைக்குச் சென்றார். மற்றவர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து இழிவுபடுத்திக் கொலை செய்தார்கள்.

அப்பொழுது அரசர் சினமுற்றுத் தம் படையை அனுப்பி அக்கொலையாளிகளைக் கொன்றொழித்தார். அவர்களுடைய நகரத்தையும் தீக்கிரையாக்கினார்.

பின்னர் தம் பணியாளர்களிடம், ‘திருமண விருந்து ஏற்பாடாகி உள்ளது. அழைக்கப் பெற்றவர்களோ தகுதியற்றுப் போனார்கள். எனவே நீங்கள் போய்ச் சாலையோரங்களில் காணும் எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்’ என்றார். அந்தப் பணியாளர்கள் வெளியே சென்று வழியில் கண்ட நல்லோர், தீயோர் யாவரையும் கூட்டி வந்தனர். திருமண மண்டபம் விருந்தினரால் நிரம்பியது.

அரசர் விருந்தினரைப் பார்க்க வந்தபோது அங்கே திருமண ஆடை அணியாத ஒருவனைக் கண்டார். அரசர் அவனைப் பார்த்து, ‘தோழா, திருமண ஆடையின்றி எவ்வாறு உள்ளே வந்தாய்?’ என்று கேட்டார். அவனோ வாயடைத்து நின்றான். அப்போது அரசர் தம் பணியாளர்களிடம், ‘அவனுடைய காலையும் கையையும் கட்டிப் புறம்பே உள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்’ என்றார். இவ்வாறு அழைப்புப் பெற்றவர்கள் பலர், ஆனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களோ சிலர்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது குறுகிய வாசகம்

நீங்கள் போய்ச் சாலையோரங்களில் காணும் எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 22: 1-10

அக்காலத்தில்

இயேசு மீண்டும் தலைமைக் குருக்களையும் மக்களின் மூப்பர்களையும் பார்த்து உவமைகள் வாயிலாகப் பேசியது: “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: அரசர் ஒருவர் தம் மகனுக்குத் திருமணம் நடத்தினார். திருமணத்திற்கு அழைப்புப் பெற்றவர்களைக் கூட்டிக்கொண்டு வருமாறு அவர் தம் பணியாளர்களை அனுப்பினார். அவர்களோ வர விரும்பவில்லை.

மீண்டும் அவர் வேறு பணியாளர்களிடம், ‘நான் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். காளைகளையும் கொழுத்த கன்றுகளையும் அடித்துச் சமையல் எல்லாம் தயாராய் உள்ளது. திருமணத்திற்கு வாருங்கள்’ என அழைப்புப் பெற்றவர்களுக்குக் கூறுங்கள் என்று சொல்லி அனுப்பினார். அழைப்புப் பெற்றவர்களோ அதைப் பொருட்படுத்தவில்லை. ஒருவர் தம் வயலுக்குச் சென்றார்; வேறு ஒருவர் தம் கடைக்குச் சென்றார். மற்றவர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து இழிவுபடுத்திக் கொலை செய்தார்கள்.

அப்பொழுது அரசர் சினமுற்றுத் தம் படையை அனுப்பி அக்கொலையாளிகளைக் கொன்றொழித்தார். அவர்களுடைய நகரத்தையும் தீக்கிரையாக்கினார்.

பின்னர் தம் பணியாளர்களிடம், ‘திருமண விருந்து ஏற்பாடாகி உள்ளது. அழைக்கப் பெற்றவர்களோ தகுதியற்றுப் போனார்கள். எனவே நீங்கள் போய்ச் சாலையோரங்களில் காணும் எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்’ என்றார். அந்தப் பணியாளர்கள் வெளியே சென்று வழியில் கண்ட நல்லோர், தீயோர் யாவரையும் கூட்டி வந்தனர். திருமண மண்டபம் விருந்தினரால் நிரம்பியது.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

 



I எசாயா 25: 6-10a
II பிலிப்பியர் 4: 12-14, 19-20
III மத்தேயு 22: 1-14

விண்ணரசின் மதிப்பை உணராமல் வாழும் மானிடர்கள்!


நிகழ்வு

ஜூலியன் என்றொரு பெருஞ்செல்வந்தர் ஒருவர் இருந்தார். இவருக்கு ஒரு பண்ணை வீடு இருந்தது. அந்தப் பண்ணை வீட்டில்தான் இவர் தன்னுடைய பெரும்பாலான நேரங்களைச் செலவழித்தார். இவருடைய பண்ணை வீட்டின் ஒருபுறம் அருமையானதொரு தோட்டம் இருந்தது. அதில் வண்ண வண்ண மலர்கள் பூத்துக்குலுங்கின. பண்ணை வீட்டின் இன்னொரு பக்கம், மீன்குளம் ஒன்று இருந்தது. அதில் அரியவகை மீன்களெல்லாம் இருந்தன.

இப்படிப்பட்ட ஓர் அருமையான பண்ணைவீட்டில் எப்பொழுதும் இருந்து பழகியதால், ஜூலியனுக்கு அந்தப் பண்ணைவீடு பிடிக்காமல் போனது. அதை எப்படியாவது விற்றுவிட்டு, வேறோர் இடத்தில் நிலம் வாங்கிப் பண்ணை டு கட்டி அதில் வாழலாம் என்று முடிவுசெய்தார் ஜூலியன். இதைத் தொடர்ந்து இவர், நிலங்களை வாங்கி விற்கும் ஓர் இடத் தரகரிடம் தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்தார். அவரும் இவரிடம் “அப்படியே செய்துவிடுவோம்” என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.

மறுநாள் செய்தித்தாளில் இப்படியொரு விளம்பரம் வந்திருந்தது: “பண்ணை வீடு ஒன்று விற்பனைக்கு வருகின்றது. அதன் ஒருபுறம் அருமையான தோட்டமும், இன்னொரு புறம் மீன் குளமும் உள்ளது. சொர்க்கத்தில் இருப்பது போன்ற உணர்வைத் தரும் இந்தப் பண்ணை வீட்டின் விலை மிகவும் குறைவுதான். இதை வாங்க விருப்பமுள்ளோர் கீழ்க்காணும் தொலைபேசி எண்ணை அழைக்கவும்.”

செய்தித்தாளில் வந்த இந்த விளம்பரத்தைப் பார்த்ததும், ஜூலியன் மிகவும் உற்சாகமடைந்து, ‘எப்படியாவது அந்தப் பண்ணை வீட்டை வாங்கிவிடவேண்டும்’ என்று நினைத்துக்கொண்டு, விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணைத் தொடர்புகொண்டு பேசினார். கடைசியில்தான் தெரிந்தது, அது தன்னுடைய பண்ணை வீடுதான் என்று. இப்படிப்பட்ட பண்ணை வீட்டையா நாம் விற்கத் துணிந்தோம் என்று நினைத்து, ஜூலியன் தன்னுடைய பண்ணை வீட்டை விற்கும் எண்ணத்தைக் கைவிட்டார்.

ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற ஜூலியன், எப்படித் தன்னுடைய பண்ணை வீட்டின் அருமையையும் மகத்துவத்தையும் உணராமல் இருந்தாரோ, அப்படித்தான் இன்றைக்குக் பல கிறிஸ்தவர்கள் விண்ணரசின் மகத்துவத்தை உணராமல் வாழ்த்துகொண்டிருக்கின்றார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில், பொதுக்காலத்தின் இருபத்து எட்டாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, எல்லாருக்கும் உரிய விண்ணரசின் மகத்துவத்தை நாம் உணரவும், அந்த விண்ணரசில் நாம் பங்குபெற என்ன செய்யவேண்டும் என்பதையும் எடுத்துக்கூறுகின்றது. அதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

கொடுக்கப்பட்ட அழைப்பைப் புறக்கணிக்கும் மக்கள்

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, விண்ணரசைப் பெரிய விருந்துக்கு ஒப்பிடுகின்றார். இந்த உவமையில் வருகின்ற மன்னர் தன்னுடைய மகனுக்கு நடத்திய திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்த விருந்தில் கலந்துகொள்வதற்கு, ஏற்கெனவே அழைப்புப் பெற்றிருந்தவர்களிடம். ‘விருந்து ஏற்பாடாகிவிட்டது’ என்ற செய்தியைச் சொல்ல தன் பணியாளர்களை அனுப்பி வைக்கின்றார். ஆனால், அழைப்புப் பெற்றவர்களோ மன்னர் அனுப்பி வைத்த பணியாளர்களிடம் ஒவ்வொரு காரணத்தைச் சொல்லி திருமண விருந்துக்குக் வராமல் போகின்றார்கள். இன்னும் ஒருசிலர் அனுப்பப்பட்டவர்களைப் பிடித்துக் கொலைசெய்கின்றார்கள்.

இங்கு மன்னர் ஏற்பாடு செய்திருந்த திருமண விருந்து என்பது விண்ணரசைக் குறிக்கின்றது; அழைப்புப் பெற்றவர்கள் யூதர்களைக் குறிக்கின்றார்கள். யூதர்கள் கடவுளால் சிறப்பாக அழைப்புப் பெற்றிருந்தார்கள். ஆனாலும் அவர்கள் கடவுளால் அனுப்பப்பட்ட இறைவாக்கினர்களைப் பிடித்துக் கொன்றொழிக்கின்றார்கள். இதனாலேயே அவர்களுக்கு கிபி. 70 ஆம் ஆண்டு மிகப்பெரிய அழிவு ஏற்பட்டது. அன்று யூதர்கள் கடவுளின் அழைப்பைப் புறக்கணித்ததுபோல், இன்று நாம் விண்ணரசில், ஆண்டவருடைய திருவிருந்தில் கலந்துகொள்ளாமல், ஏதோவொரு சாக்குப் போக்கைச் சொல்லிப் புறக்கணித்துக் கொண்டிருக்கின்றோம். இத்தகைய நிலையை நாம் மாற்றிக்கொள்வது மிகவும் நல்லது.

விண்ணரசில் எல்லாருக்கும் இடமுண்டு

திருமண விருந்துக்கு அழைப்புப் பெற்றவர்கள் அதாவது யூதர்கள் கடவுளின் அழைப்பு உதறித் தள்ளியதால், அந்த அழைப்பானது எல்லாருக்கும் கொடுக்கப்படுகின்றது. இதன்மூலம் விண்ணரசு என்பது ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமல்ல, அது எல்லா மக்களுக்கும் உரியது என்ற செய்தியானது சொல்லப்படுகின்றது. இந்த உண்மையை, இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம் இன்னும் அழகாக, ஆழமாக எடுத்துக்கூறுகின்றது.

“படைகளின் ஆண்டவர் இந்த மலையில் மக்களினங்கள் அனைவருக்கும் சிறந்ததொரு விருந்தை ஏற்பாடு செய்வார்” என்று இன்றைய முதல் வாசகத்தில் வருகின்ற வரிகள், விண்ணரசு மக்கனினங்கள் அனைவருக்கும் உரியது என்ற செய்தியை மிகச் சிறப்பாக எடுத்துச் சொல்கின்றது. மேலும் இந்த விருந்தில் கலந்துகொள்வோருடைய முகத்தை மூடியுள்ள முக்காட்டையும், துன்ப துகிலையும் அகற்றி, கண்ணீரைத் துடைத்துவிடுவார் என்கின்றார் ஆண்டவர்.

இப்படி எல்லாருக்கும் உரிய... நம்முடைய துன்ப துயரங்கள் எல்லாம் நீங்கும்... திருவிருந்தில் அல்லது விண்ணரசில் பங்குபெறுவதற்கு நமக்கு ஒரு முக்கியமான தகுதி அல்லது நாம் ஒரு முக்கியமான செயலைச் செய்யவேண்டும். அது என்ன என்று தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.

விண்ணரசில் பங்குபெற தகுதியுள்ளவர்களாய் மாறவேண்டும்

மன்னர் கொடுத்த விருந்தை, அழைப்புப் பெற்றவர்கள் புறக்கணித்ததால், மன்னர் தன் பணியாளரிடம், “நீங்கள் சாலையோரங்களில் காணும் எல்லாரையும் அழைத்து வாருங்கள்” என்று சொல்ல, அவர்களும் அவ்வாறே செய்கிறார்கள். மன்னர் செய்த இத்தகையதொரு செயல், விண்ணரசு எல்லாருக்குமானது என்ற செய்தியை உணர்த்துகின்றது என்று மேலே பார்த்தோம். இவ்வாறு சாலையோரங்களில் இருந்து அழைக்கப்பட்டவர்களுள் ஒருவர், திருமண ஆடையின்றி இருப்பதைக் கண்டு, அவரை இருளில் தள்ளுமாறு தன்னுடைய பணியாளர்களுக்குக் கட்டளையிடுகின்றார் மன்னர்.

மன்னரின் இச்செய்தி, விண்ணரசு எல்லாருக்கும் உரியது என்றாலும், அதில் கலந்துகொள்வதற்கு தகுதி வேண்டும் என்ற செய்தியை நமக்குச் சுட்டிக்காட்டுகின்றது. இங்கு திருமண ஆடை அல்லது விண்ணரசுக்குள் நுழைவதற்கு ஒருவருக்கு இருக்கவேண்டிய தகுதி ‘நேர்மை’ என்று திருவிவிலிய அறிஞர்கள் குறிப்பிடுவார்கள். இதை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு இறைவாக்கினர் எசாயா நூல் 61: 10 இல் வருகின்ற, “நேர்மை என்னும் ஆடையை எனக்கு அணிவித்தார்” என்ற வரிகளோடு இணைத்துப் பார்ப்பது நல்லது. திருமண விருந்தில் பங்கு பெறுவதற்குத் திருமண ஆடை எப்படித் தேவையானதாக இருக்கின்றதோ, அப்படி நாம் விண்ணரசுக்குள் நுழைய நேர்மை என்ற பண்பானது தேவையானதாக இருக்கின்றது.

பலநேரங்களில் நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நேர்மை இல்லாமலும், உண்மை இல்லாமலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்நிலையை நாம் நம்மிடமிருந்து தவிர்த்து, நேர்மையோடு வாழ்ந்து கடவுள் தருகின்ற விண்ணரசை உரிதாக்கிக் கொள்ள முயற்சி செய்வோம்.

சிந்தனை

‘கடவுள் படைப்பில் நேர்மையான மனிதனே, தலைசிறந்தவன்’ என்பார் போப் என்ற அறிஞர். ஆகையால், நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நேர்மையோடு நடந்து, இறைவன் தருகின்ற விண்ணரசை உரித்தாக்கிக் கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

 
Free Blog Widget
Stats Counter
hit counter