maraikal
MUM
"


பொதுக்காலம் 14 ஆம் வாரம்  11-07-2020

முதல் வாசகம்

தூய்மையற்ற உதடுகள் கொண்ட மக்கள் நடுவில் வாழ்பவன் நான்; படைகளின் ஆண்டவராகிய அரசரை என் கண்கள் கண்டனவே!

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 6: 1-8

உசியா அரசர் மறைந்த ஆண்டில், மிகவும் உயரமானதோர் அரியணையில் ஆண்டவர் அமர்ந்திருப்பதை நான் கண்டேன்; அவரது தொங்கலாடை கோவிலை நிரப்பி நின்றது. அவருக்கு மேல் சேராபீன்கள் சூழ்ந்து நின்றனர்; ஒவ்வொருவருக்கும் ஆறு இறக்கைகள் இருந்தன; ஒவ்வொருவரும் இரண்டு இறக்கைகளால் தம் முகத்தை மூடிக்கொண்டனர்; இரண்டு இறக்கைகளால் தம் கால்களை மூடி மறைத்தனர்; மற்ற இரண்டால் பறந்தனர்.

அவர்களுள் ஒருவர் மற்றவரைப் பார்த்து: "படைகளின் ஆண்டவர் தூயவர், தூயவர், தூயவர்; மண்ணுலகம் முழுவதும் அவரது மாட்சியால் நிறைந்துள்ளது" என்று உரத்த குரலில் கூறிக்கொண்டிருந்தார். கூறியவரின் குரல் ஒலியால் வாயில் நிலைகளின் அடித்தளங்கள் அசைந்தன; கோவில் முழுவதும் புகையால் நிறைந்தது.

அப்பொழுது நான்: "ஐயோ, நான் அழிந்தேன். ஏனெனில் தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட மனிதன் நான்; தூய்மையற்ற உதடுகள் கொண்ட மக்கள் நடுவில் வாழ்பவன் நான்; படைகளின் ஆண்டவராகிய அரசரை என் கண்கள் கண்டனவே" என்றேன்.

அப்பொழுது சேராபீன்களுள் ஒருவர் பலி பீடத்திலிருந்து நெருப்புப்பொறி ஒன்றைக் குறட்டால் எடுத்து அதைத் தம் கையில் வைத்துக்கொண்டு என்னை நோக்கிப் பறந்து வந்தார். அதனால் என் வாயைத் தொட்டு, "இதோ, இந்நெருப்புப்பொறி உன் உதடுகளைத் தொட்டது. உன் குற்றப்பழி உன்னை விட்டு அகன்றது; உன் பாவம் மன்னிக்கப்பட்டது" என்றார்.

மேலும், "யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்?" என வினவும் என் தலைவரின் குரலை நான் கேட்டேன். அதற்கு, "இதோ நானிருக்கிறேன், அடியேனை அனுப்பும்" என்றேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 93: 1ab. 1c-2. 5 . (பல்லவி: 1a) Mp3

பல்லவி: ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்.
1ab
ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; அவர் மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்; ஆண்டவர் வல்லமையைக் கச்சையாகக் கொண்டுள்ளார். - பல்லவி

1c
பூவுலகை அவர் நிலைப்படுத்தினார்; அது அசைவுறாது.
2
உமது அரியணை தொடக்கத்திலிருந்தே நிலைபெற்றுள்ளது; நீர் தொன்றுதொட்டே நிலைத்துள்ளீர். - பல்லவி

5
உம்முடைய ஒழுங்குமுறைகள் மிகவும் உறுதியானவை; ஆண்டவரே! என்றென்றும் தூய்மையே உமது இல்லத்தை அழகு செய்யும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

1 பேது 4: 14

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவின் பொருட்டுப் பிறர் உங்கள்மீது வசை கூறும்போது நீங்கள் பேறுபெற்றவர்கள். ஏனெனில், கடவுளின் மாட்சிமிக்க தூய ஆவி உங்கள்மேல் தங்கும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 24-33

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: "சீடர் குருவை விடப் பெரியவர் அல்ல. பணியாளரும் தம் தலைவரை விடப் பெரியவர் அல்ல. சீடர் தம் குருவைப் போல் ஆகட்டும்; பணியாளர் தம் தலைவரைப் போல் ஆகட்டும். அதுவே போதும். வீட்டுத் தலைவரையே பெயல்செபூல் என அழைப்பவர்கள் வீட்டாரைப் பற்றி இன்னும் தரக் குறைவாகப் பேச மாட்டார்களா?

எனவே, அவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஏனெனில் வெளிப் படாதவாறு மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை; அறியமுடியாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை. நான் உங்களுக்கு இருளில் சொல்வதை நீங்கள் ஒளியில் கூறுங்கள். காதோடு காதாய்க் கேட்பதை வீட்டின் மேல் தளத்திலிருந்து அறிவியுங்கள்.

ஆன்மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள். காசுக்கு இரண்டு சிட்டுக் குருவிகள் விற்பதில்லையா? எனினும் அவற்றுள் ஒன்றுகூட உங்கள் தந்தையின் விருப்பமின்றித் தரையில் விழாது. உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றது. சிட்டுக் குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள். எனவே அஞ்சாதிருங்கள்.

மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக்கொள்வேன். மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் எவரையும் விண்ணுலகில் இருக்கிற என் தந்தையின் முன்னிலையில் நானும் மறுதலிப்பேன்."

ஆண்டவரின் அருள்வாக்கு.

 


எசாயா 6: 1-8

“யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்?

நிகழ்வு

இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த மிகப்பெரிய மறைப்போதகர் சார்லஸ் ஸ்பர்ஜியோன் (Charles Spurgeon 1834-1892). ஒருமுறை இவரிடம் ஒரு பெண்மணி வந்தார். அவர் இவரிடம், “கடவுள் என்னைத் தன்னுடைய பணிக்காக அழைப்பதைப் போன்று உணர்கிறேன். இப்பொழுது நான் என்ன செய்வது?” என்றார்.

உடனே சார்லஸ் ஸ்பர்ஜியோன் அவரிடம், அவருடைய குடும்பத்தைப் பற்றியும், அவருக்கு எத்தனைப் பிள்ளைகள் என்பதைப் பற்றியும் விசாரித்தார். அவரோ, தன்னுடைய குடும்பம் மிகவும் வசதியான குடும்பம் என்றும், தனக்குப் பதின்மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள் என்றும் சொல்லி முடித்தார். அப்பொழுது சார்லஸ் ஸ்பர்ஜியோன் அவரிடம், “அம்மா! நீங்கள் மக்களைப் பெற்ற மகராசி என்பதால், உங்களுடைய குடும்பத்தை விட்டு, வேறு எங்காவது சென்று கடவுளின் வார்த்தையை அறிவிப்பது மிகவும் சிரமம். அதனால் கடவுள் உங்களுக்கெனக் கொடுத்திருக்கும் ‘குட்டித் திருஅவையில்’ கடவுளின் வார்த்தையை எடுத்துரைத்து, அவருடைய பணியைச் செய்யுங்கள். அதுவே சிறப்பானதாக இருக்கும்” என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தார்.

கடவுள் நம் ஒவ்வொருவரையும் ஒவ்வொருவிதமாய்த் தன்னுடைய பணிக்காக அழைக்கின்றார். அப்படி அழைக்கின்ற கடவுளுக்குக் நாம் எப்படிப் பதிலளித்துப் பணிசெய்யப் போகின்றோம் என்பதைத்தான் இந்த நிகழ்வு எடுத்துக்கூறுகின்றது. இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், இறைவாக்கினர் எசாயாவின் அழைப்பைக் குறித்ததாக இருக்கின்றது. இறைவாக்கினர் எசாயாவின் அழைப்பு நமக்கு என்ன செய்தியை எடுத்துச் சொல்கின்றது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

அறுவடை மிகுதி வேலையாட்களோ குறைவு

எசாயா தான் காணக்கூடிய காட்சியில், ஆண்டவர் உயரமானதோர் அரியணையில் அமர்ந்திருப்பதையும், அவருக்கு மேல் சேராபீன்கள் சூழ்ந்திருப்பதையும், அவர்களுள் ஒருவர், “படைகளின் ஆண்டவர் தூயவர், தூயவர், தூயவர்” என்று கூறுவதையும், இறுதியாக ஆண்டவர், “யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்?” என்று சொல்வதையும் கேட்கின்றார். உடனே அவர், “இதோ நானிருக்கிறேன், அடியேனை அனுப்பும்” என்கின்றார்.

ஆண்டவராகிய கடவுள், “யாரை நான் அனுப்புவேன்?” என்று சொல்வதில் வெளிப்படுகின்ற ஒருவிதமான ஏக்கம், நற்செய்தியில் ஆண்டவர் இயேசு சொல்லக்கூடிய, “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு...” (மத் 37) என்று சொல்கின்ற வார்த்தைகளில் வெளிப்படுகின்ற ஏக்கத்தை வெளிப்படுத்துவதைப் போன்று இருக்கின்றது. ஆம், இந்த மண்ணகத்தில் கடவுளின் வார்த்தையைக் கேட்பதற்கு மிகுதியான ஆள்கள் இருக்கின்றபொழுது, அதனை எடுத்துரைப்பதற்கு ஆள்கள் குறைவுதான். அதனால்தான் கடவுள் தன்னுடைய பணியைச் செய்ய மக்களை அழைத்துக்கொண்டே இருக்கின்றார்.

ஆண்டவரால், எசாயா அழைக்கப்பட்ட அதே ஆண்டில், இஸ்ரயேலில் தோன்றிய மன்னர்களில் மிகவும் முக்கியமான ஒருவரான உசியா மறைந்திருந்தார் (கி.மு 740). அதனால் மக்களை நல்லமுறையில் வழிநடத்த, கடவுளின் வார்த்தையை அறிவிக்க ஆள்கள் இல்லாமல் இருந்தார்கள். இப்படிப்பட்ட சமயத்தில்தான் கடவுள் எசாயாவைத் தன்னுடைய பணியைச் செய்ய அழைக்கின்றார்.

பாவிகளை அழைக்கும் இறைவன்

எசாயாவின் அழைப்பில் நாம் காணக்கூடிய மிக முக்கியமான உண்மை, கடவுள் பாவிகளை அழைக்கின்றார் என்பதாகும் (மத் 9: 13) ஆபிரகாம் (தொநூ 18:27), யாக்கோபு (தொநூ 32: 10), தாவீது (2 சாமு 7:18), புதிய ஏற்பாட்டில் வரும் பவுல் (1 திமொ 1:15), பேதுரு (லூக் 5: 8-11) ஆகியோரின் அழைப்பில் வெளிப்பட்ட இந்த உண்மை, எசாயாவின் அழைப்பிலும் வெளிப்படுகின்றது.

இங்கு ஒரு கேள்வி எழலாம். கடவுள் பாவிகளைத்தான் அழைப்பாரா? நேர்மையாளர்களை அழைக்க மாட்டாரா/ என்பதுதான் அந்தக் கேள்வி. இதற்கு ஒரே பதில், இந்த உலகத்தில் பாவம் செய்யாத யாருமே இல்லை என்பதுதான். எல்லாரும் ஏதோவொரு விதத்தில் தவறு செய்தவர்களாக, தவறு செய்யக்கூடியவர்களாக இருக்கின்றார்கள். அதனால் எல்லாரும் பாவிகள்தான்; எல்லாரையும் கடவுள் தன்னுடைய பணிக்காக அழைக்கின்றார்தான்! எசாயா ஆண்டவரைக் கண்டதும், தன்னுடைய இயலாமையை, குற்றத்தை உணர்கின்றார். உடனே சேராபீன்களுள் ஒருவர் நெருப்புப்பொறி ஒன்றை எடுத்து, அதனால் எசாயாவின் வாயைத் தொட்டு, “...உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்கின்றார். இதன்மூலம் அவர் கடவுளின் பணியைச் செய்ய உகந்தவராக மாறுகின்றார்.

ஆம், கடவுள் நம் ஒவ்வொருவரையும் நாம் இருக்கின்ற நிலையிலேயே அழைக்கின்றார். ஆகையால், நாம் எசாயாவைப் போன்று கடவுளின் அழைப்பை, அவருடைய பணியைச் செய்ய நம்மையே அவருடைய கைகளில் ஒப்புக்கொடுப்போம்.

சிந்தனை

‘நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன். நீங்கள் கனிதரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன்’ (யோவா 15: 16) என்பார் இயேசு. ஆகையால், நம்மைத் தேர்ந்துகொண்டிருக்கும் இறைவனுக்கு உண்மையுள்ளவர்களாய், அவருடைய அன்புப் பணியைச் செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

மத்தேயு 10: 24-33

"சீடர் தம் குருவைப் போல் ஆகட்டும்"

நிகழ்வு

அவிலா நகரைச் சார்ந்தவர் இயேசுவின் புனித தெரேசா. இவர் அடிக்கடி காட்சிகள் காணக்கூடியவர். மேலும் இவர் தன்னுடைய வாழ்வில் துன்பங்களுக்கு மேல் துன்பங்களைச் சந்தித்து வந்தவர். இப்படி இருக்கையில் ஒருநாள் இவர் இயேசுவிடம், "இயேசுவே! என்னுடைய வாழ்வில் எதற்கு இவ்வளவு துன்பங்கள்?" என்றார். அதற்கு இயேசு இவரிடம், "நான் என்னுடைய நண்பர்களுக்கு இப்படித்தான் மிகுதியான துன்பங்களைக் கொடுப்பேன். ஏனெனில், நான் கடந்துவந்த பாதையும் மிகுந்த துன்பம் நிறைந்தது" என்றார்.

உடனே இயேசுவின் புனித தெரசா அவரிடம், "நீர் உம்முடைய நண்பர்களுக்கு இப்படி மிகுதியான துன்பத்தைக் கொடுப்பதால்தானோ என்னவோ, உமக்கு நண்பர்கள் மிகவும் குறைவாக இருக்கின்றார்கள்" என்றார். இதைக் கேட்ட இயேசு மெல்லிதாகச் சிரித்துவிட்டுச் சட்டென மறைந்து போனார்.

ஆம், இயேசு தன்னுடைய பணிவாழ்வில் சந்தித்த துன்பங்களும் சவால்களும் ஏராளம். இதைப் போன்று அவருடைய வழியில் நடந்து, அவருடைய சீடராக இருக்கும் ஒவ்வொருவரும் துன்பங்களைச் சந்திக்கவேண்டும். இன்றைய நற்செய்தியில் இயேசு, சீடர் தம் குருவைப் போல் ஆகட்டும் என்கின்றார். இயேசு சொல்லக்கூடிய இந்தச் சொற்றொடரின் பொருள் என்ன என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

பல்வேறு துன்பங்களுக்கு நடுவிலும் அஞ்சாது பணிசெய்த இயேசு

இயேசு தான் தேர்ந்துகொண்ட பன்னிருவரையும் பணித்தளங்களுக்கு அனுப்பி வைக்கின்றபொழுது, அவர்களுக்கு கூறுகின்ற அறிவுரையின் ஒரு பகுதியாக இன்றைய நற்செய்தி வாசகம் இருக்கிறது. இன்றைய நற்செய்தியில் இயேசு தன்னுடைய சீடர்களிடம், "தன்னுடைய சீடர்கள் தன்னைப் போல் ஆகட்டும்" என்கின்றார். அதைத்தான் "சீடர் தம் குருவைப் போல் ஆகட்டும்; பணியாளர் தம் தலைவரைப் போல் ஆகட்டும்" என்ற வார்த்தைகளில் நாம் வாசிக்கின்றோம்.

இயேசு தூய ஆவியாரின் வல்லமையால் பேய்களை ஓட்டினார்; ஆனால், பரிசேயர்களோ, "இவன் பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகின்றான்" என்று விமர்சனம் செய்தார்கள். இயேசு உடலைக் கொல்பவர்களுக்கு அஞ்சாமல் பணிசெய்தார்; அவர்களுடைய சீடர்களும் உடலைக் கொல்பவர்களுக்கு அஞ்சாமல் ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சிப் பணிசெய்யவேண்டும் என்பதைத்தான் இயேசு, சீடர் தம் குருவைப் போல் ஆகட்டும் என்று சொல்கின்றார் .

சீடர்கள் இயசுவைப் போன்று பணிசெய்யும்பொழுது அவருடைய உடனிருப்பு இருக்கும்

இயேசு தன்னுடைய சீடர்களிடம் சொன்னதுபோன்று, அவர்கள் தங்கள்மீது சுமத்தப்படும் தேவையற்ற விமர்சனங்களைத் தாங்கிக்கொள்ளவேண்டும். மட்டுமல்லாமல், அவர்கள் உடலைக் கொல்பவர்களுக்கு அஞ்சாமல், உடலோடு ஆன்மாவையும் நரகத்தில் தள்ள வல்லவருக்கு அஞ்சவேண்டும். அப்படி அவர்கள் இருந்தால், அவர்களை ஆண்டவர் பத்திரமாகப் பாதுகாத்துக் கொள்வர் என்று இயேசு கிறிஸ்து மிகத்தெளிவாக எடுத்துக்கூறுகின்றார்.

இதற்காக இயேசு பயன்படுத்தும் உருவகம்தான் சிட்டுக் குருவிகள். சிட்டுக்குருவிகளோ மதிப்பு இல்லாவை. சந்தையில் அவற்றை ஒரு காசுக்கு இரண்டு என்று விற்பவரிடம், நாம் கொஞ்சம் பேரம்பேசினால், ஒரு காசுக்கு மூன்றுகூட தருவார்கள். அந்தளவுக்கு அவை மதிப்பில்லாதவை. ஆனாலும்கூட "மதிப்பே இல்லாத" அந்தச் சிட்டுக்குருவிகளை கடவுள் தரையில் விழாத வண்ணம் காக்கின்றார். அப்படியானால், இயேசுவின் வழியில் நடக்கின்ற ஒருவரை, தனக்கு மட்டுமே அஞ்சி வாழக்கூடிய ஒருவரைக் கடவுள் எவ்வாறெல்லாம் பாதுகாப்பார் என்று நாம் கற்பனை செய்து பார்த்துக்கொள்ளலாம்.

இந்த இடத்தில் இறைவாக்கினர் எலியாவை நாம் இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. இறைவாக்கினர் எலியா ஆகாபு மன்னனும் அவனுடைய மனைவியும் உண்மைக் கடவுளை மறந்து பாகால் தெய்வத்தை வழிபட்டபொழுது, அவர்களுடைய தவற்றை அவர் அஞ்சாமல், அவ்வளவு துணிச்சலாக எடுத்துரைத்தார். இதனால் அவருக்கு ஆகாபிடமிருந்து ஆபத்து வரக்கூடும் என்று கடவுள் அவரை கெரீத்து ஓடையருகே தங்க வைத்து, காகங்கள் வழியாக அப்பமும் இறைச்சியும் தந்து காக்கின்றார். இவ்வாறு கடவுள் யாருக்கும் அஞ்சாமல், தனக்கு மட்டுமே அஞ்சி, தன்னுடைய வழியில் நடக்கின்றவரை ஆபத்து இல்லாமல் காக்கின்றார்.

ஆகையால், இயேசுவின் வழியில் நடக்கின்ற நாம் ஒவ்வொருவரும், அவரைப் போன்று விமர்சனங்களைத் துணிவோடு தாங்கிக்கொள்ளக்கூடியவர்களாகவும், ஆண்டவருக்கு மட்டும் அஞ்சி வாழக்கூடியவர்களாகவும் இருக்கவேண்டும். இப்படி நாம் இருந்தோமெனில், இறைவனுடைய பாதுகாப்பையும் உடனிருப்பையும் நாம் பெற்றுக்கொள்வோம் என்பது உறுதி. எனவே, நாம் ஒவ்வொருவரும் இயேசுவின் வழியில் நடக்க முயற்சி செய்வோம்.

சிந்தனை

""அஞ்சாதே! ஏனெனில் நான் உன்னோடு இருக்கின்றேன்" (எசா 43: 5) என்பார் ஆண்டவர். ஆகையால், நாம் இயேசுவின் வழியில் நடந்து, அவருடைய உண்மையான சீடர்களாவோம். அதன்வழியாக இறை பராமரிப்பையும் இறையருளையும் நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
Free Blog Widget
Stats Counter
hit counter