maraikal
MUM
"


பொதுக்காலம் 14 ஆம் வாரம்  07-07-2020

முதல் வாசகம்

அவர்கள் காற்றை விதைக்கிறார்கள்; கடும்புயலை அறுப்பார்கள்.

இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 8: 4-7, 11-13

ஆண்டவர் கூறுவது:

இஸ்ரயேல் மக்கள் தாங்களே அரசர்களை ஏற்படுத்திக் கொண்டார்கள்; அது என்னாலே அன்று; அவர்களே தலைவர்களை நியமித்துக் கொண்டார்கள்; அதைப் பற்றியும் நான் ஒன்றுமறியேன். தங்கள் வெள்ளியாலும் பொன்னாலும் தங்களுக்கு எனச் சிலைகளைச் செய்தார்கள்; தாங்கள் அழிந்து போகவே அவற்றைச் செய்தார்கள். சமாரியா மக்கள் வழிபடும் கன்றுக்குட்டியை நான் வெறுக்கின்றேன்; என் கோபத் தீ அவர்களுக்கு எதிராய் எரிகின்றது. இன்னும் எத்துணைக் காலம் அவர்கள் தூய்மை அடையாது இருப்பார்கள்? அந்தக் கன்றுக்குட்டி இஸ்ரயேலிடமிருந்து வந்ததன்றோ! அது கடவுளல்லவே! கைவினைஞன் ஒருவன்தானே அதைச் செய்தான்! சமாரியாவின் கன்றுக்குட்டி தவிடுபொடியாகும். அவர்கள் காற்றை விதைக்கிறார்கள்; கடும் புயலை அறுப்பார்கள். வளரும் பயிர் முற்றுவதில்லை; கோதுமை நன்றாக விளைவதில்லை; அப்படியே விளைந்தாலும், அன்னியரே அதை விழுங்குவர்.

எப்ராயிம் பாவம் செய்வதற்கென்றே பலிபீடங்கள் பல செய்து கொண்டான்; அப்பீடங்களே அவன் பாவம் செய்வதற்குக் காரணமாயின. ஆயிரக்கணக்கில் நான் திருச்சட்டங்களை எழுதிக் கொடுத்தாலும், அவை நமக்கில்லை என்றே அவர்கள் கருதுவார்கள். பலியை அவர்கள் விரும்புகின்றார்கள்; பலி கொடுத்து, அந்த இறைச்சியையும் உண்ணுகிறார்கள்; அவற்றின் மேல் ஆண்டவர் விருப்பம் கொள்ளவில்லை; அதற்கு மாறாக, அவர்கள் தீச்செயல்களை நினைவில் கொள்கின்றார்; அவர்கள் செய்த பாவங்களுக்குத் தண்டனை வழங்குவார்; அவர்களோ எகிப்து நாட்டிற்குத் திரும்புவார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 115: 3-4. 5-6. 7-8. 9-10 . (பல்லவி: 9a) Mp3

பல்லவி: இஸ்ரயேலரே! ஆண்டவர்மீது நம்பிக்கை கொள்ளுங்கள்.
3
நம் கடவுளோ விண்ணுலகில் உள்ளார்; தம் திருவுளப்படி அனைத்தையும் செய்கின்றார்.
4
அவர்களுடைய தெய்வச் சிலைகள் வெறும் வெள்ளியும் பொன்னுமே, வெறும் மனிதக் கைவேலையே! - பல்லவி

5
அவற்றுக்கு வாய்கள் உண்டு; ஆனால் அவை பேசுவதில்லை; கண்கள் உண்டு; ஆனால் அவை பார்ப்பதில்லை;
6
செவிகள் உண்டு; ஆனால் அவை கேட்பதில்லை; மூக்குகள் உண்டு; ஆனால் அவை முகர்வதில்லை. - பல்லவி

7
கைகள் உண்டு; ஆனால் அவை தொட்டுணர்வதில்லை; கால்கள் உண்டு; ஆனால் அவை நடப்பதில்லை; தொண்டைகள் உண்டு; ஆனால் அவை குரல் எழுப்புவதில்லை.
8
அவற்றைச் செய்கின்றோரும் அவற்றில் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் அவற்றைப்போல் ஆவர். - பல்லவி

9
இஸ்ரயேலரே! ஆண்டவர்மீது நம்பிக்கை கொள்ளுங்கள்; அவரே உங்களுக்குத் துணையும் கேடயமும் ஆவார்.
10
ஆரோனின் குலத்தாரே! ஆண்டவர் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்; அவரே உங்களுக்குத் துணையும் கேடயமும் ஆவார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 10: 14

அல்லேலூயா, அல்லேலூயா! நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 32-38


அக்காலத்தில்

பேய்பிடித்துப் பேச்சிழந்த ஒருவரைச் சிலர் இயேசுவிடம் கொண்டு வந்தனர். பேயை அவர் ஓட்டியதும் பேச இயலாத அவர் பேசினார். மக்கள் கூட்டத்தினர் வியப்புற்று, "இஸ்ரயேலில் இப்படி ஒருபோதும் கண்டதில்லை" என்றனர். ஆனால் பரிசேயர், "இவன் பேய்களின் தலைவனைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறான்" என்றனர்.

இயேசு நகர்கள், சிற்றூர்கள் எல்லாம் சுற்றிவந்தார். எங்கும் அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசைப் பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; நோய்நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். திரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது அவர்கள் மேல் பரிவு கொண்டார்: அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப் போல அலைக்கழிக்கப்பட்டுச் சோர்ந்து காணப்பட்டார்கள்.

அப்பொழுது அவர் தம் சீடரை நோக்கி, "அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்" என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
 

 

மத்தேயு 9: 18 -26

"நம்புங்கள்; நல்லதே நடக்கும்"

நிகழ்வு

பத்தடி உயரள்ள ஒரு சுவற்றில் இரண்டு ஐந்து வயதுச் சிறுவர்கள் ஓடிப்பிடித்து விளையாண்டு கொண்டிருந்தார்கள். கவலையை மறந்து மிகவும் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்த அவர்கள் இருவரும், அந்தச் சுவர் லேசாக ஆடுவதுபோல் தெரிந்ததும், "காப்பாற்றுங்கள்; காப்பாற்றுங்கள்" என்று அலறத் தொடங்கினார்கள்.

இவர்கள் போட்ட சத்தத்தைக் கேட்டு, அங்கு ஒருவர் ஓடிவந்தார். அவர் அந்த இரண்டு சிறுவர்களிடமும் "கீழே குதியுங்கள்; நான் உங்களைப் பத்திரமாகப் பிடித்துக் கொள்கின்றேன்" என்றார். அவர் சொன்ன இந்த வார்த்தைகளைக் கேட்டு, ஒரு சிறுவன் உடனே குதித்தான். இன்னொரு சிறுவனோ, "கீழே குதித்தால் ஏதாவது ஆகிவிடுமோ" என்ற அச்சத்தில் இன்னும் மிகுதியாக அலறத் தொடங்கினான். இதனால் வந்தவர், அவன் இருந்த சுவற்றின்மீது மீது அவனைக் காப்பாற்றவேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த நிகழ்வில் வருகின்ற இரண்டு சிறுவர்களில் முதல் சிறுவன், உதவிக்கு வந்தவரை முழுமையாக நம்பினான். அதனால் அவன் பதற்றமில்லாமல் கீழே குதித்தான்; பத்திரமாகத் தரைக்கு வந்தான். இரண்டாவது சிறுவனோ, உதவிக்கு வந்தவரை நம்பவே இல்லை. அதனால் அவன் கடைசிவரைக்கும் பதற்றத்தோடு இருந்தான். ஆம். நம்முடைய வாழ்வில் நம்பிக்கையோடு இருந்தால், எதைக்கண்டும் பதற்றமடையத் தேவையில்லை. மாறாக இறைவனுடைய ஆசியை அபரிவிதமாய்ப் பெற்றுக்கொள்ளலாம்.

இன்றைய நற்செய்தியில், ஆண்டவர்மீதுகொண்ட நம்பிக்கையினால் இருவர் நலவாழ்வு பெறுவதைக் குறித்து வாசிக்கின்றோம். அதைப் பற்றி இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசுவின்மீது நம்பிக்கைகொண்ட தொழுகைக்கூடத் தலைவர்

இயேசு தன்னுடைய சீடர்களோடு பேசிக்கொண்டிருக்கின்றார்; அப்பொழுது அங்கு வருகின்ற தொழுகைக்கூடத்தலைவர் (யாயிர் என்று மாற்கு (5: 22) மற்றும் லூக்கா (8: 41) நற்செய்தியாளர்கள் கூறுகின்றார்கள்), "என் மகள் இப்பொழுதுதான் இறந்தாள். ஆயினும் நீர் வந்து அவள்மீது உம் கையை வையும், அவள் உடனே உயிர் பெறுவாள்" என்கின்றார். யாயிர் பேசிய இந்த நம்பிக்கை மிகுதியான வார்த்தைகளைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்னர், இந்த யாயிர் யூதசமூகத்தில் எந்த நிலையில் இருந்தார் என்பதை நாம் தெரிந்துகொள்வோம்.

யூத சமூகத்தில் தொழுகைக்கூடத்தலைவர் என்பது ஒரு முக்கியமான பொறுப்பு. ஏனெனில், அவர்தான் வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்யவேண்டும்; திருநூலின் ஏடுகளைப் பாதுகாக்கவேண்டும்; திருமறையைப் பற்றி வகுப்பெடுக்க வேண்டும்; திருச்சட்டங்களுக்கு உண்மையான இருக்கவேண்டும். இப்படிப் பல்வேறு பொறுப்புகள் அவருக்கு இருந்தன. இதனால் அவருக்குச் சமூகத்தில் தனிப்பட்ட மதிப்பு இருந்தது. இப்படிப்பட்ட மனிதர் இயேசுவிடம் நம்பிக்கையோடு வந்து, பணிகின்றார். இது தொழுகைக்கூடத் தலைவருடைய நம்பிக்கையை மட்டுமல்லாமல், தாழ்ச்சியையும் காட்டுகின்றது. இவ்வாறு யாயிர் நம்பிக்கையோடும் தாழ்ச்சியோடும் இருந்ததால், இயேசு அவருடைய வீட்டிற்குச் சென்று, இறந்துபோன ஒருவரைத் தொட்டால் தீட்டு என்று இருந்தாலும், அவருடைய மகளைத் தொடுகின்றார். இதனால் அவள் உயிர்பெற்று எழுகின்றாள்.

ஆம், யாயிரின் நம்பிக்கையும் தாழ்ச்சியும் அவருடைய மகள் உயிர்பெற்று எழக் காரணமாக இருக்கின்றன.

இயேசுவின்மீது நம்பிக்கை கொண்ட இரத்தப்போக்கினால் பாதிக்கப்பட்ட பெண்மணி

இயேசு யாயிரின் வீட்டிற்குச் செல்கின்ற வழியில் இன்னொருவரைச் சந்திக்கின்றார். அவர்தான் பன்னிரண்டு ஆண்டுகளாக இரத்தப்போக்கினால் பாதிக்கப்பட்ட பெண்மணி. இவர் தன்னிடம் இருந்த நோயிலிருந்து நலம்பெற, தான் வைத்திருந்த எல்லாவற்றையும் செலவழித்திருந்தபோதும்கூட நலம்பெறவில்லை (மாற் 5: 26). இந்த நிலையில்தான் இவர் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு, "நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே போதும், நலம் பெறுவேன்" என்று தனக்குள் நினைத்துக்கொண்டு, நம்பிக்கையோடு இயேசுவின் ஆடையைத் தொடுகின்றார்.

இந்தப் பெண்மணி இவ்வாறு நினைத்துக்கொண்டு தொடுவதற்கும் ஒரு காரணம் இருந்தது. அது என்னவெனில், ஒரு பெண்ணுக்கு உதிரப்பெருக்கு நீடித்தால், அந்த நாள்கள் எல்லாம் விலக்கு நாள்களைப் போல் தீட்டானவை" (லேவி 15: 25ff) என்று மோசேயின் சட்டம் சொன்னத்து. இதனால் "தீட்டுள்ள" தான் இயேசுவைத் தொட்டால், அவரும் தீட்டாகிவிடுவார் என்ற அச்சத்தில், இவர் அவரைத் தொடாமல், அவருடைய ஆடையைத் தொடுக்கின்றார். அந்தப் பெண்மணி தொட்டதால், தன்னிடமிருந்து வல்லமை வெளியேறியதை உணர்ந்த இயேசு அவரிடம், "உன்னுடைய நம்பிக்கை உன்னை நலப்படுத்தியது" என்கின்றார். இவ்வாறு பன்னிரண்டு ஆண்டுகளாய் இரத்தத்போக்கினால் பாதிக்கப்பட்ட பெண்மணி நலம் பெறுகின்றார்.

நாமும்கூட இயேசுவிடமிருந்து நலம்பெறவும் நன்மைகளைப் பெறவும், அவரிடம் நம்பிக்கைகொண்டு வாழ்வது மிகவும் இன்றியமையாதது. நாம் இயேசுவிடம் யாயிரைப் போன்று, இரத்தப்போக்கினால் பாதிக்கப்பட்டு, நலம்பெற்ற பெண்மனியைப் போன்று நம்பிக்கை கொண்டிருக்கின்றோமா? சிந்திப்போம்.

சிந்தனை

"நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்; முட்கள் இல்லை" என்பார் டிக்கன்ஸ் என்ற அறிஞர். ஆகையால், நாம் ஆண்டவரிடம் எப்பொழுதும் நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதன்மூலம் நல்லது நடக்கச் செய்வோம்; இறையருளை நிறைவாகப் பெறுவோம்.



- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
ஓசேயா 8: 4-7, 11-13

"அவர்கள் செய்த பாவங்களுக்குத் தண்டனை வழங்குவார்"

நிகழ்வு

ஒருமுறை ஒரு நீதிமன்றத்திற்குத் திருட்டு தொடர்பாக ஒரு வழக்கு வந்தது. அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இளைஞன் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தான்.

அவன் சார்பாக வழக்காடிய வழக்குரைஞர் நீதிபதியை நோக்கி, "ஐயா! என் கட்சிக்காரர்மீது அபாண்டமாகப் பழி சுமத்தப்பட்டிருக்கின்றது. என் கட்சிக்காரர் சம்பவம் நடந்த அன்று, காலதர் (சன்னல்) திறந்து கிடந்த வீட்டில் தன்னுடைய கையை மட்டும் விட்டு, அங்கிருந்த பொருள்களை எடுத்திருக்கின்றார் ஆதலால், திருடியது அவருடைய தானே அன்றி, அவரல்ல. அவருடைய கை திருடியதற்காக அவர்மீது அபாண்டமாகப் பழிபோடுவது மிகப்பெரிய குற்றம். எனவே, திருடிய அவருடைய கைக்கு மட்டும் தண்டனை வழங்குமாறு மிகத் தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டு அமர்ந்துகொண்டார்.

நீதிமன்றத்தில் அமர்ந்திருந்த மக்கள் அனைவரும், இதற்கு நீதிபதி என்ன தீர்ப்பு வழங்கப் போகிறார் என்று அவரையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவர் இவ்வாறு தீர்ப்பு வழங்கினார்: "இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கின்ற இந்த மனிதர் திருடவில்லை; இவருடைய கைதான் திருடியது என்பதால், இவருடைய கைக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கின்றேன். இச்சிறைத்தண்டனைக்கு இவர் தன்னுடைய கையை மட்டும் அனுப்பி வைத்தால் போதும்."

நீதிபதி சொன்ன இத்தீர்ப்பைக் கேட்டு, வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட இளைஞன் மட்டுமல்லாது, அவனுக்காக வழக்காடிய வழக்குரைஞரும் அதிர்ந்துபோனார்.

ஆம், தவறு செய்தவர்கள் தண்டனையை அனுபவித்தே ஆகவேண்டும். அதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது. இன்றைய முதல்வாசத்தில் இறைவாக்கினர் ஒசேயா, ஆண்டவராகிய கடவுள், தவறுசெய்த இஸ்ரயேல் மக்களுக்குத் தண்டனை வழங்கப்போவதாகக் கூறுகின்றார். அவர் அவர்களுக்கு எப்படிப்பட்ட தண்டனையை வழங்கப்போகிறார் என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

உண்மையைக் கடவுளை மறந்து, பிறதெய்வங்களைத் தேடிய மக்கள்

"நானே உன் கடவுளாகிய ஆண்டவர். என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது" (விப 20: 1-3) என்பது ஆண்டவராகிய கடவுள், மோசே வழியாக இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுத்த முதன்மையான் கட்டளை. கடவுள் இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுத்த இந்தக் கட்டளையைக் கடைப்பிடித்து, கடவுளுக்கு அவர்கள் உண்மையாக இருந்தார்களா? என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால், அவர்களுக்குக் கடவுளே அரசராக இருக்கும்பொழுது, தங்களுக்கென ஓர் அரசராகச் சவுலை ஏற்படுத்திக் கொண்டார்கள். இந்தச் சவுலின் வழி வந்த சாலமோனின் காலத்தில் பாகால் தெய்வ வழிபாட்டு நாட்டுக்குள் புகுந்து, அவருக்குப் பின் வந்தவர்களால் நாட்டில் பாகால் தெய்வ வழிபாடு கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியது.

இதனால் மக்களும் சரி, மக்களை ஆண்ட மன்னர்களும் சரி உண்மைக் கடவுளை மறைந்து, பாகால் தெய்வத்தை வழிபடத் தொடங்கினார்கள். அவ்வப்பொழுது தோன்றிய இறைவாக்கினர்கள் மக்களைக் கடவுளை நோக்கி அழைத்தபொழுதுகூட, யாரும் கடவுளிடம் திரும்பி வரவில்லை. இதனால் கடவுளின் சினம் அவர்கள் மேல் எழுகின்றது.

அசீரியர்களால் நாடுகடத்தப்படுவார்கள்

இன்றைய முதல் வாசகத்தில், ஒசேயா இறைவாக்கினர், இஸ்ரயேல் மக்கள்மீது எப்படிப்பட்ட தண்டனை வரும் என்பதைக் குறித்துப் பேசுகின்றபொழுது, "வளரும் பயிர் முற்றுவதில்லை; கோதுமை நன்றாக விளைவதில்லை; அப்படியே விளைந்தாலும், அன்னியரே அதை விழுங்குவர்" என்று சொல்லிவிட்டு, "அவர்களோ எகிப்து நாட்டிற்குத் திரும்புவார்கள்" என்கின்றார்.

இங்கு குறிப்பிடப்படும் "எகிப்து நாடு" என்பது அசீரியாவைக் குறிப்பாக இருக்கின்றது. இஸ்ரயேல் மக்கள் உண்மைக் கடவுளை மறந்து, பாகால் தெய்வத்திற்குப் பலிபீடங்களை எழுப்பி, அதில் பலிகொடுத்து வந்தார்கள். இவ்வாறு அவர்கள் ஆண்டவர் விரும்பாத செயல்களைச் செய்ததால். இதனால் கி.மு.722 ஆம் ஆண்டு அவர்கள்மீது அசீரியர்களின் படையெடுப்பு ஏற்பட்டு, அவர்கள் நாடுகடத்தப்பட்டார்கள்.

இஸ்ரேயல் மக்களுக்குக் கிடைத்த தண்டனை, அவரவர் தான் விதைத்த வினையை அறுவடை செய்வார் என்ற உண்மையை நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இஸ்ரயேல் மக்களுக்குக் கிடைத்த இந்தத் தண்டனையைக் குறித்துச் சிந்தித்துப் பார்க்கும் இவ்வேளையில், நாம் கடவுளின் கட்டளைக் கடைப்பிடித்து, அவருக்கு உகந்த வழியில் நடக்கின்றோமா என்று சிந்தித்துப் பார்த்து, நம்முடைய வாழ்வைச் சீர்தூக்கிப் பார்ப்போம்.

சிந்தனை

"ஏமாந்து போகவேண்டாம்; கடவுளைக் கேலி செய்ய முடியும் என நினைக்காதீர்கள். ஒருவர் தாம் விதைப்பதையே அறுவடை செய்வார்" (கலா 6:7) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் தீயதை அல்ல, நல்லதை விதைத்து, நல்வழியில் வாழக் கற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.



- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
Free Blog Widget
Stats Counter
hit counter