maraikal
MUM
"


பாஸ்கா 5ஆம் வாரம் - வியாழன்  14-05-2020

முதல் வாசகம்

சீட்டு மத்தியா பெயருக்கு விழவே அவர் பதினொரு திருத்தூதர்களோடும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 1: 15-17, 20-26

ஒரு நாள், ஏறக்குறைய நூற்றிருபது சகோதரர் சகோதரிகள் ஒரே இடத்தில் கூடியிருக்கும்போது பேதுரு அவர்கள் நடுவே எழுந்து நின்று கூறியது: "அன்பர்களே, இயேசுவைக் கைது செய்தவர்களுக்கு வழிகாட்டிய யூதாசைக் குறித்துத் தூய ஆவியார் தாவீதின் வாயிலாக முன்னுரைத்த மறைநூல் வாக்கு நிறைவேறவேண்டியிருந்தது. அவன் நம்மில் ஒருவனாய் எண்ணப்பட்டு நாம் ஆற்றும் பணியில் பங்கு பெற்றிருந்தான்.

திருப்பாடல்கள் நூலில், "அவன் வீடு பாழாவதாக! அதில் எவரும் குடிபுகாதிருப்பாராக!" என்றும் "அவனது பதவியை வேறொருவர் எடுத்துக்கொள்ளட்டும்!" என்றும் எழுதப்பட்டுள்ளது.

ஆகையால் ஆண்டவர் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குச் சாட்சியாய் விளங்க, அவர் நம்மிடையே செயல்பட்ட காலத்தில் நம்மோடு இருந்த ஒருவரைச் சேர்த்துக்கொள்ள நாம் கூடிவரவேண்டியது தேவையாயிற்று. யோவான் திருமுழுக்குக் கொடுத்துவந்த காலமுதல் ஆண்டவர் இயேசு நம்மிடமிருந்து விண்ணேற்றமடைந்த நாள்வரை அவர் நம்மோடு இருந்திருக்க வேண்டும்."

அத்தகையோருள் இருவரை முன்னிறுத்தினார்கள். ஒருவர் யோசேப்பு என்னும் பெயர் கொண்ட பர்சபா. இவருக்கு யுஸ்து என்னும் பெயரும் உண்டு. மற்றவர் மத்தியா.

பின்பு அவர்கள் அனைவரும், "ஆண்டவரே, அனைவரின் உள்ளங்களையும் அறிபவரே, யூதாசு திருத்தொண்டையும் திருத்தூதுப் பணியையும் விட்டகன்று தனக்குரிய இடத்தை அடைந்துவிட்டான். அந்த யூதாசுக்குப் பதிலாக யாரைத் தெரிந்தெடுக்க வேண்டும் என இந்த இருவருள் ஒருவரை எங்களுக்குக் காண்பியும்" என்று இறைவனிடம் வேண்டிக்கொண்டனர்.

அதன்பின் அவர்கள் சீட்டுக் குலுக்கினார்கள். சீட்டு மத்தியா பெயருக்கு விழவே அவர் பதினொரு திருத்தூதர்களோடும் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்


திபா 113: 1-2. 3-4. 5-6. 7-8 (பல்லவி: 8) Mp3

பல்லவி: உயர்குடி மக்களிடையே அவர்களை அமரச் செய்கின்றார். அல்லது: அல்லேலூயா!
1
ஆண்டவரின் ஊழியர்களே, அவரைப் புகழுங்கள். அவரது பெயரைப் போற்றுங்கள்.
2
ஆண்டவரது பெயர் வாழ்த்தப் பெறுவதாக! இப்பொழுதும் எப்பொழுதும் வாழ்த்தப் பெறுவதாக! - பல்லவி

3
கீழ்த்திசை முதல் மேற்றிசைவரை ஆண்டவரது பெயர் போற்றப்படுவதாக!
4
மக்களினங்கள் அனைத்திற்கும் ஆண்டவர் மேலானவர்; வானங்களையும் விட உயர்ந்தது அவரது மாட்சி. - பல்லவி

5
நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நிகர் யார்? அவர் போல வானளாவிய உயரத்தில் வீற்றிருப்பவர் யார்?
6
அவர் வானத்தையும் வையகத்தையும் குனிந்து பார்க்கின்றார். - பல்லவி

7
ஏழைகளைத் தூசியிலிருந்து அவர் தூக்கி நிறுத்துகின்றார்; வறியவரைக் குப்பை மேட்டிலிருந்து கைதூக்கி விடுகின்றார்;
8
உயர்குடி மக்களிடையே - தம் மக்களுள் உயர்குடி மக்களிடையே -அவர்களை அமரச் செய்கின்றார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

 (யோவா 15: 16)

அல்லேலூயா, அல்லேலூயா! நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்
நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன்.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 9-17

அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "என் தந்தை என்மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள். நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள். என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்.

நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை. தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விடச் சிறந்த அன்பு யாரிடமும் இல்லை. நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள்.

இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன்.

நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். ஆகவே நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார்.

நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்புகொள்ள வேண்டும் என்பதே என் கட்டளை."

ஆண்டவரின் அருள்வாக்கு.

 


திருத்தூதர் பணிகள் 15: 7-21

"இயேசுவின் அருளால் நாம் மீட்புப் பெறுவது போலவே அவர்களும் மீட்புப் பெறுகின்றார்கள்"


நிகழ்வு

ஜப்பானில் இருந்த கிறிஸ்துவப் பள்ளிக்கூடம் அது. அந்தப் பள்ளிக்கூடத்தில் தன்னுடைய மகளைச் சேர்த்துப் படிக்க வைக்கவேண்டும் என்பது ஒரு தாயின் கனவு. இதற்காக இவர் தன்னுடைய மகளை அந்தப் பள்ளிக்கூடத்திற்குக் கூட்டிக்கொண்டு போனார். போகிறபோது, "இந்தப் பள்ளிக்கூடத்தில் நம்முடைய மகளைச் சேர்ப்பார்களா? இல்லையா?" என்ற தயக்கம் தாய்க்கு இருந்துகொண்டே இருந்தது. இருந்தாலும் "நடப்பது நடக்கட்டும்" என்று தன்னுடைய மனத்தில் துணிவை வரவழைத்துக்கொண்டு, இவர் அந்தப் பள்ளியின் நிர்வாகியிடம் சென்று பேசத் தொடங்கினார்.

"என்னுடைய மகளை உங்களுடைய பள்ளியில் சேர்ப்பீர்களா...?" "ஆமாம், எங்களுடைய பள்ளிக்கு வருகின்ற எல்லா மாணவிகளையும் சேர்ப்பது போல, உங்களுடைய மகளையும் எங்களுடைய பள்ளியில் சேர்ப்போம். இதிலென்ன சிக்கல் இருக்கின்றது?" என்றார் பள்ளியின் நிர்வாகி. "அது ஒன்றுமில்லை; இந்தப் பள்ளிக்கூடத்தில் படிக்கக்கூடிய மாணவிகள் யாவரும் மிகவும் அழகாக இருக்கின்றார்கள்; என்னுடைய மகளோ அழகு குறைந்தவள்போல் இருக்கின்றாள். அதனால்தான் என்னுடைய மகளை உங்களுடைய பள்ளியில் சேர்த்துக்கொள்வீர்களா என்று கேட்டேன்" என்றார்.

"அழகானவர்களைத்தான் எங்களுடைய பள்ளியில் சேர்த்துக்கொள்வோம், அழகில்லாதவர்களை எங்களுடைய பள்ளியில் சேர்த்துக்கொள்ளமாட்டோம் என்றெல்லாம் நாங்கள் எந்தவொரு வேறுபாடும் பார்ப்பதில்லை; எங்களுடைய பள்ளிக்கு வருகின்ற எல்லாரையும் சேர்த்துக்கொள்வோம்" என்று பள்ளியின் நிர்வாகி தீர்க்கமாய்ச் சொல்லி முடிக்க, தாய் அவரிடம், "அப்படியானால் உங்களுடைய பள்ளியில் படிக்கின்ற எல்லா மாணவிகளும் எப்படி அழகாக இருக்கின்றார்கள்?" என்றார்.

இதற்குப் பள்ளி நிர்வாகி இவ்வாறு பதில் சொன்னார்: "எங்களுடைய பள்ளியில் படிக்கக்கூடிய மாணவிகள் அழகாக இருக்கின்றார்கள் என்றால், இங்கு நாங்கள் கற்றுத் தரும் கிறிஸ்துவின் மதிப்பீடுகளைத் தங்களுடைய வாழ்க்கையில் பின்பற்றுகின்றார்கள். உங்களுடைய மகளும் நாங்கள் கற்றுத்தரும் கிறிஸ்துவின் மதிப்பீடுகளைப் பின்பற்றி நடந்தால், எல்லா மாணவிகளையும் போன்று அழகாய் இருப்பார்."

இந்த நிகழ்வில் வருகின்ற பள்ளியின் நிர்வாகி, எப்படி தன்னுடைய பள்ளிக்கு வருகின்ற எல்லாரையும் பள்ளியில் சேர்த்துகொண்டாரோ, அப்படி கடவுள் எல்லாரும் மீட்படைய விரும்புகின்றார். அதே நேரத்தில் எப்படி அந்தப் பள்ளியில் படித்து வந்த மாணவிகள், கிறிஸ்துவின் போதனைகளைக் கடைப்பிடித்து வாழ்ந்ததால் அழகானவர்களாக இருந்தார்களோ, அப்படி நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவின்மீது நம்பிக்கை வைத்து, அவருடைய விழுமியங்களின் படி வாழ்ந்தால், மீட்படைவோம் என்பது உறுதி.

முதல் வாசகத்தில், மீட்புப் பெறுவது விருத்தசேதனம் பெற்றவர் மட்டுமா அல்லது எல்லாருமா என்ற பிரச்சனைக்குத் தீர்வு காணப்படுகின்றது. அது எப்படி என்று சிந்திப்போம்.

பேதுருவின், பவுல் மற்றும் பர்னபாவின் கருத்து

யூதேயாசைச் சார்ந்தவர்கள் (திப 15:1), "விருத்தசேதனம் செய்துகொள்ளாவிட்டால் மீட்படைய முடியாது" என்று பவுலோடும் பர்னபாவோடும் விவாதத்தில் ஈடுபட்டதால், இப்பிரச்சனையை அவர்கள் இருவரும் எருசலேம் திருச்சங்கத்திற்குக் கொண்டு வருகின்றார்கள். அங்கு பேதுரு, தனக்குக் கொர்னேலியோடு ஏற்பட்ட அனுபவத்தைச் (திப10: 44-46) சொல்லி, கடவுள் நமக்குத் தூய ஆவியைக் கொடுத்ததுபோல, அவர்களுக்கும் கொடுத்து, அவர்களை ஏற்றுக்கொண்டார்... இயேசுவின் அருளால் நாம் மீட்புப் பெறுவது போலவே, அவர்களும் மீட்புப் பெறுவார்கள் என நம்புவோம் என்கிறார்.

இதைத் தொடர்ந்து பவுலும் பர்னபாவும் தாங்கள் பிற இனத்தாரிடம் பணியாற்றிபொழுது, கடவுள் தங்கள் வழியாகக் அவர்கள் நடுவில் செய்த அருஞ்செயல்களை எடுத்துக் கூறுகின்றார்கள். எல்லாரும் பேசி முடித்த பின்பு, எருசலேமில் ஆயராக இருந்த யாக்கோபு, திருத்தூதர்களின் பிரதிநிதியாக இருந்து, திருஅவையின் நிலைபாட்டை எடுத்துச் சொல்கின்றார்.

யாக்கோபின் கருத்து

எருசலேமின் ஆயராக இருந்த யாக்கோபு, அங்கு திரண்டிருந்தவர்களிடம் பேசும்பொழுது, இறைவாக்கினர் ஆமோஸ் நூலில் இடம்பெறும், "எஞ்சி இருப்போர், வேற்றினத்தார் ஆண்டவரைத் தேடுவர்" (ஆமோ 9: 11-12) என்ற வரிகளை மேற்கோள் காட்டிப் பேசிவிட்டு, கடவுளிடம் திரும்பி வருபவர்களுக்குத் தொல்லை கொடுக்கக் கூடாது என்றும் கடவுளிடம் திரும்பி வருவோர் சிலைகளுக்குப் படைக்கப்பட்டவை, இரத்தம் பரத்தமை ஆகியவற்றைத் தவிர்க்கவேண்டும் என்கின்றார்.

யாக்கோபு சொல்லக்கூடிய இவ்வார்த்தைகள், மீட்புப் பெறுவதற்கு விருத்தசேதனம் செய்யத் தேவையில்லை. மாறாக, பிற இனத்தார் அல்லது நாம் நம்மிடம் இருக்கும் தீமைகளை விட்டு, ஆண்டவரிடம் நம்பிக்கை கொள்ளவேண்டும் என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றன. அன்று பிற இனத்து மக்களுக்குச் சொல்லப்பட்ட வார்த்தைகள்தான், இன்று நமக்கும் சொல்லப்படுகின்றது. ஆகையால், எல்லாருக்கும் மீட்பை வழங்க இருக்கும் கடவுளிடம் (1திமொ 2:4), நாம் நம்மிடம் இருக்கும் தீமைகளை அகற்றிவிட்டு, அவரிடம் நம்பிக்கை கொள்ள முயற்சி செய்வோம்.

சிந்தனை

"மீட்பும் மாட்சியும் வல்லமையும் நம் கடவுளுக்கே உரியன" (திவெ 19:1) என்கிறது திருவெளிப்பாடு நூல். ஆகையால், நம் அனைவருக்கும், மீட்பு வழங்கும் கடவுளிடம் நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
யோவான் 15: 9-11

நம்முடைய மகிழ்ச்சியை நிறைவுபெறச் செய்யும் இயேசுவின் வார்த்தைகள்

நிகழ்வு

ஒரு சிற்றூரில் பணக்காரர் ஒருவர் இருந்தார். கிறிஸ்தவரான இவரிடம் பலர் பணிசெய்து வந்தார்கள். ஒருநாள் இவருக்குப் பிறந்த நாள் வந்தது. பிறந்த நாள் பரிசாக அவர்களுக்கு முன்பாகப் பணத்தையும் திருவிவிலியத்தையும் வைத்துவிட்டு, "இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளலாம்" என்றார்

முதலில் இவரிடம் வேலைபார்த்து வந்த காவலாளி வந்தார். அவர் பணக்காரரிடம், "ஐயா! எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது. அதனால் எனக்குத் திருவிவிலியம் வேண்டாம்; பணம் போதும்" என்று சொல்லிவிட்டுப் பணத்தை எடுத்துச் சென்றார். அவரைப் தொடர்ந்து, பணக்காரரிடம் வேலைபார்த்து வந்த தோட்டக்காரர் வந்தார். அவர் பணக்காரரிடம், "ஐயா! எனக்கு திருவிவிலியம் வேண்டும்தான்; ஆனால், என்னுடைய மனைவி நோய்வாய்ப்பட்டு இருக்கும் இந்த நேரத்தில் பணம் மிகுதியாகத் தேவைப்படுகின்றது. அதனால் நானும் பணத்தை எடுத்துக் கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டுப் பணத்தை எடுத்துச் சென்றார்.

அவரைத் தொடர்ந்து பணக்காரரிடம் வேலை பார்த்து வந்த சமையல்காரர் வந்தார். அவர் பணக்காரரிடம், "ஐயா! எனக்கிருக்கின்ற வேலைக்குச் செய்தித்தாள் படிக்கவே நேரமில்லை; இதில் நான் எங்கு திருவிவிலியத்தை வாசிப்பது...? அதனால் நானும் பணத்தை எடுத்துக்கொள்கின்றேன்" என்று சொல்லிவிட்டுப் பணத்தை எடுத்துச் சென்றார். இப்படி ஒருவர் பின் ஒருவராக வந்த எல்லாரும் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லிவிட்டுப் பணத்தை எடுத்துச் சென்றனர்.

கடைசியாக அந்தப் பணக்காரரிடம் இருந்த ஆடு, மாடுகளைப் பாரமரித்து வந்த இளைஞன் வந்தான். அவனைப் பார்த்ததும் பணக்காரர், "தம்பி! உன்னிடம் நல்ல துணிமணி இல்லை; காலில் செருப்புகூட இல்லை. அதனால் உனக்குப் பணம் தேவைப்படும் என்று நினைக்கின்றேன். இந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு நல்ல துணிமணிகளையும் காலணிகளையும் வாங்கிக்கொள்" என்றார். அதற்கு அந்த இளைஞன், "ஐயா! எனக்கு நல்ல துணிகளையும் காலணிகளையும் வாங்குவதைவிட திருவிவிலியத்தை வாங்கவேண்டும் என்றுதான் ஆசை. ஏனெனில், திருவிவிலியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி என்னுடைய அம்மா என்னிடத்தில் சொல்லியிருகின்றார். அப்பொழுது என்னிடத்தில் திருவிவிலியம் வாங்குவதற்குப் பணம் இல்லை. இப்பொழுது நீங்களே திருவிவிலியத்தைப் பிறந்த நாள் பரிசாகத் தருவதால், அதை நான் பெற்றுக் கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டுப் பணகாரரிடமிருந்து திருவிவிலியத்தைப் பரிசாக வாங்கிச் சென்றான்.

பணக்காரர் கொடுத்த திருவிவிலியத்தைப் பரிசாக வாங்கிச் சென்ற அந்த இளைஞன், அதைக் கருத்தூன்றி வாசித்து, அதன்படி நடக்கத் தொடங்கினான். இதனால் அவனுடைய உள்ளத்தில் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடியது. இதற்கு முற்றிலும் மாறாக, பணத்தைப் பரிசாக பெற்றுச் சென்ற காவலாளியும் தோட்டக்காரரரும் சமையல்காரரரும் அது தீர்ந்ததும் நிம்மதி இழக்கத் தொடங்கினார்கள்.

ஆம், கடவுளின் வார்த்தை இப்பொழுது மட்டுமல்ல, எப்பொழுதுமே நமக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடியது. அப்படிப்பட்ட கடவுளின் வார்த்தையை நாம் வாசித்து, வாழ்வாக்கினோம் எனில், அதைவிட மகிழ்ச்சியளிக்கும் செயல் வேறெதுவும் இல்லை. நற்செய்தியில் இயேசு நாம் மகிழ்ந்திருக்கவேண்டும் என்பதற்காக எல்லாவற்றையும் கற்பித்ததாகக் கூறுகின்றார். இயேசு கூறும் இவ்வார்த்தைகளின் பொருள் என்ன என்பதை இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

நாம் மகிழ்ந்திருக்கவேண்டும் என்று விரும்பும் இயேசு

கடவுள், நாம் எப்பொழுதும் கவலைதோய்ந்த முகத்தோடு இருக்கவேண்டும் என்றோ அல்லது துக்கத்தோடு இருக்கவேண்டும் என்றோ விரும்புவதில்லை. மாறாக, நாம் அனைவரும் மகிழ்ந்திருக்கவேண்டும் என்றே விரும்புகிறார். அதனால்தான் இயேசு தான் சென்ற இடங்களிளெல்லாம் நன்மையே செய்து கடவுளின் வார்த்தையை எடுத்துரைத்து வந்தார்.

இன்றைய நற்செய்தியில் இயேசு, "என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்" என்று சொன்னது நாம் எப்பொழுதும் மகிழ்ந்திருக்கவேண்டும் என்பதே இறைவனின் திருவுளமாக இருக்கின்றது என்பது நமக்குப் புரிகின்றது. நாம் எப்பொழுதும் மகிழ்ந்திருக்கவேண்டும் வேண்டும் எனில், அதற்கு நாம், இயேசுவின் கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவரது அன்பில் நிலைத்திருக்கவேண்டும். அப்படிச் செய்தால், நாம் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

நாம் இயேசுவின் கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவரது அன்பில் நிலைந்திருந்து, அதன்மூலம் அவர் தருகின்ற மகிழ்ச்சியைப் பெற்றுக்கொள்ளத் தயாரா? சிந்திப்போம்.

சிந்தனை

"நிரந்தரமில்லா வாழ்க்கையில் மக்களுக்கு மகிழ்ச்சியை விட வேறு என்ன வேண்டும்? மகிழ்ச்சியான மனிதனே மன்னன்" என்பார் ஐ.பிக்கர்ஸ்டாஃப் என்ற அறிஞர். ஆகவே, நாம் உள்ளத்தளவில் மன்னர்களைப் போன்று வாழ்வதற்கு வழிவகை செய்யும் இயேசுவின் வார்த்தைளைக் கேட்டு நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
Free Blog Widget
Stats Counter
hit counter