maraikal
MUM
"


பாஸ்கா 5ஆம் வாரம் - புதன்  13-05-2020

முதல் வாசகம்

எருசலேமுக்குச் சென்று, திருத்தூதர்களிடமும் மூப்பர்களிடமும் இந்தச் சிக்கலைக் குறித்துக் கலந்து பேசுமாறு நியமிக்கப்பட்டனர்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 15: 1-6


அந்நாள்களில்

யூதேயாவிலிருந்து வந்த சிலர், "நீங்கள் மோசேயின் முறைமைப்படி விருத்தசேதனம் செய்துகொள்ளாவிட்டால் மீட்படைய முடியாது" என்று சகோதரர் சகோதரிகளுக்குக் கற்பித்து வந்தனர். அவர்களுக்கும் பவுல், பர்னபா ஆகியோருக்குமிடையே பெருங் கருத்து வேறுபாடும் விவாதமும் உண்டாயின. எனவே பவுலும் பர்னபாவும் அவர்களுள் சிலரும் எருசலேமுக்குச் சென்று, திருத்தூதர்களிடமும் மூப்பர்களிடமும் இந்தச் சிக்கலைக் குறித்துக் கலந்து பேசுமாறு நியமிக்கப்பட்டனர்.

அங்கிருந்து திருச்சபையார் அவர்களை வழியனுப்பிவைத்தனர். அவர்கள் பெனிசியா, சமாரியா வழியாகச் சென்று பிற இனத்தவர் மனந்திரும்பிய செய்தியை எடுத்துரைத்தார்கள். இது சகோதரர், சகோதரிகள் அனைவரிடமும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் எருசலேம் வந்தபோது திருச்சபையாரும், திருத்தூதர்களும், மூப்பர்களும் அவர்களை வரவேற்றார்கள். அப்போது கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும் அவர்கள் அறிவித்தார்கள்.

ஆனால் பரிசேயக் கட்சியினருள் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்ட சிலர் எழுந்து, "அவர்கள் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும்; மோசேயினது சட்டத்தைக் கடைப்பிடிக்க அவர்களுக்குக் கட்டளையிட வேண்டும்" என்று கூறினர். இதனை ஆய்ந்து பார்க்கத் திருத்தூதரும் மூப்பரும் ஒன்று கூடினர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்


திபா 122: 1-2. 4-5 (பல்லவி: 1) Mp3

பல்லவி: அகமகிழ்ந்து ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம். அல்லது: அல்லேலூயா.
1
"ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்", என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன்.
2
எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். - பல்லவி

4
ஆண்டவரின் திருக்குலத்தார் ஆங்கே செல்கின்றனர்; இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைகளுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள்.
5
அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

(யோவா 15: 4-5b)

அல்லேலூயா, அல்லேலூயா! நான் உங்களோடு இணைந்து இருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். ஒருவர் என்னுடன்இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்
ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார்.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-8


அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "உண்மையான திராட்சைக் கொடிநானே. என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர். என்னிடமுள்ள கனி கொடாத கிளைகள் அனைத்தையும் அவர் தறித்துவிடுவார். கனி தரும் அனைத்துக் கிளைகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்துவிடுவார். நான் சொன்ன வார்த்தைகளால் நீங்கள் ஏற்கெனவே தூய்மையாய் இருக்கிறீர்கள். நான் உங்களோடு இணைந்து இருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கிளைகள் திராட்சைக் கொடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாகக் கனி தர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனி தர இயலாது. நானே திராட்சைக் கொடி; நீங்கள் அதன் கிளைகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது. என்னோடு இணைந்து இராதவர் கிளையைப் போலத் தறித்து எறியப்பட்டு உலர்ந்து போவார். அக்கிளைகள் கூட்டிச் சேர்க்கப்பட்டு நெருப்பிலிட்டு எரிக்கப்படும். நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும். நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது."

ஆண்டவரின் அருள்வாக்கு.

 
 

திருத்தூதர் பணிகள் 15: 1-6

விருத்தசேதனம் செய்துகொள்ளவிட்டால் மீட்படைய முடியாதா?


நிகழ்வு

தென்னாப்பிரிக்காவில் இருந்த கிறிஸ்தவக் கோயில் அது. ஒருநாள் அந்தக் கோயிலுக்குப் கறுப்பினத்தைச் சார்ந்த ஒருவர் சென்றார். இவரைப் பாத்ததும் அங்கிருந்த காவலாளி, "இந்தக் கோயிலுக்குக் கறுப்பினத்தைச் சார்ந்தவரெல்லாம் வரக்கூடாது" என்று அதட்டினார்.

"ஐயா! நான் ஒரு தூய்மைப் பணியாளர் (துப்புரவுப் பணியாளர்); இந்தக் கோயிலைத் தூய்மைப் படுத்துவதற்காக வந்திருக்கின்றேன்" என்றார் கறுப்பினத்தைச் சார்ந்த மனிதர். "அப்படியா?" என்று ஒருவினாடி அமைதியாக இருந்த அந்த வெள்ளை இனத்தைச் சார்ந்த காவலாளி, "சரி, கோயிலைத் தூய்மைப்படுத்துவிட்டு அப்படியே போய்விடுங்கள். கோயிலுக்குள் அமர்ந்துகொண்டு இறைவனிடம் வேண்டுகின்ற எண்ணம் இருந்தால், அதை அடியோடு விட்டுவிடுங்கள். காரணம், இது வெள்ளை இனத்தைச் சார்ந்தவர்களுக்கான கோயில்" என்றார் அந்தக் காவலாளி.

இந்த நிகழ்வில் வருகின்ற வெள்ளைச் சார்ந்த காவலாளி எப்படி கறுப்பினத்தைச் சார்ந்தவரிடம், இந்தக் கோயிலில் கறுப்பினத்தைச் சார்ந்தவர் இறைவனிடம் வேண்டக் கூடாது என்று சொன்னாரோ, அப்படி இன்றைய முதல் வாசகத்தில் வருகின்ற யூதேயாவைச் சார்ந்த யூதர்கள், "...விருத்தசேதனம் செய்துகொள்ளாவிட்டால், மீட்படைய முடியாது" என்கிறார்கள். யூதர்கள் இவ்வாறு சொன்னது எத்தகைய அதிர்வலையை ஏற்படுத்தியது... இதற்கு எப்படித் தீர்வு காணப்பட்டது... என்பன குறித்து இப்பொழுது நாம் சிந்திப்போம்.

விருத்தசேதனம் உணர்த்துவது என்ன?

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், யூதேயாவிலிருந்து வந்த யூதக் கிறிஸ்தவர்கள், பிற இனத்தைச் சார்ந்த கிறிஸ்தவர்களிடம், "நீங்கள் மோசேயின் முறைப்படி விருத்தசேதனம் செய்துகொள்ளாவிட்டால், மீட்படைய முடியாது?" என்கின்றார்கள். இது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்னர், விருத்தசேதனத்தைக் குறித்துத் தெரிந்துகொள்வோம்.

ஆண்டவராகிய கடவுள் முதுபெரும் தந்தை ஆபிரகாமைச் சந்திக்கின்றபொழுது, அவரோடு உடன்படிக்கை செய்துகொள்வார் (தொநூ 17) இந்த உடன்படிக்கையின் சாரம், ஆபிரகாமும் அவருக்குப் பின்வரும் வழிமரபினரும் ஆண்டவருக்குப் பணிந்து நடந்து, மாசாற்றவராய் இருக்கவேண்டும். அப்படி இருந்தால், கடவுள் ஆபிரகாமின் ஆபிரகாமின் வழிமரபைப் பலுகிப் பெருகச் செய்வார். அடுத்ததாக, இந்த உடன்படிக்கையின் அடையாளமாக ஒவ்வோர் ஆணும் தன்னுடைய உடலில் விருத்தசேதனம் செய்துசெய்துகொள்ளவேண்டும் (தொநூ 17: 11-12) என்று ஆண்டவர் ஆபிரகாமிடம் கூறினார். இதைத் தொடர்ந்துதான் ஒவ்வொரு யூதரும் விருத்தசேதனம் செய்துகொள்ளும் வழக்கம் வந்தது.

யூதர்களைக் கடவுள் தங்களைச் சிறப்பாகச் தேர்ந்துகொண்டதாலும் கடவுள் தங்களுக்குச் சொன்னதுபோன்று தாங்கள் விருத்தசேதனம் செய்துவருவதாலும், தாங்கள் மட்டுமே மீட்புப் மீட்புபெற முடியும் என்று நினைத்து வந்தார்கள். இதை இயேசுவிடம் வருகின்ற ஒருவர் கேட்கின்ற, "ஆண்டவரே, மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா?" (லூக் 13: 23) என்ற கேள்வியிலிருந்து இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.

இன்றைய முதல் வாசகத்தில், யூதேயாவிலிருந்து வருகின்ற யூதர்கள் அல்லது யூதக் கிறிஸ்தவர், கிறிஸ்துவைப் புதிதாக ஏற்றுக்கொண்டவர்களை "விருத்த சேதனம் செய்துகொள்ளாவிட்டால் மீட்படைய முடியாது" என்று சொன்னதற்கு மேலும் ஒரு முக்கியமான காரணம் இருக்கின்றது. கிறிஸ்துவின்மீது நம்பிக்கைகொண்ட யூதர்கள்தான் கிறிஸ்துவை முதலில் ஏற்றுக்கொண்டார்கள். அதன்பின்னர்தான் பிற இனத்தைச் சார்ந்தவர்கள் கிறிஸ்துவின் நம்பிக்கைகொண்டு அவரை ஏற்றுக்கொண்டார்கள். இப்படியிருக்கையில் விருத்தசேதனம் செய்துகொள்ளாத இன்னும் பல பிறஇனத்தைச் சார்ந்தவர்கள் கிறிஸ்துவின் நம்பிக்கைகொண்டு, அவரை ஏற்றுக்கொண்டால், அவர்களுடைய எண்ணிக்கை தங்களுடைய எண்ணிக்கையைவிட மிகுதியாகிவிடும்; பின் அவர்களுடைய கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் எல்லாம் உள்ளே புகுந்துவிடும் என்ற அச்சத்தினாலேயே, யூதர்கள், பிற இனத்தாரிடம், விருத்தசெய்துகொள்ளாவிட்டால் மீட்படைய முடியாது என்கின்றார்கள்.

யூதர்கள் மட்டுமா? எல்லாரும் மீட்படைய முடியுமா?

யூதேயாவிலிருந்து வந்த யூதர்கள் இப்படியொரு கருத்தை முன்வைக்கும்பொழுது, பவுலும் பர்னபாவும் அதை எதிர்த்து விவாதம் செய்கின்றார்கள். மேலும் இப்பிரச்சனைக்கு ஒரு தீர்வுகாண்பதற்கு அவர்கள் இருவரும் எருசலேமில் இருந்த திருத்தூதர்களிடம் வருகின்றார்கள். அங்கு இந்தப் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு காணப்படுகின்றது (நாளைய முதல் வாசகம் இதைப் பற்றி இன்னும் விரிவாகப் பேசுகின்றது). எருசலேமில் இருந்த திருத்தூதர்கள், மூப்பர்கள் ஆகியோர் முன்னிலையில் விருத்தசேதனம் பற்றிய பிரச்சனை விவாதிக்கப்படுகின்றது. அங்கு, மீட்புப்பெறுவதற்கு விருத்தசேதனம் செய்யத் தேவை இல்லை. மாறாக, கடவுள்மீது நம்பிக்கைகொண்டு வாழ்வது தேவையானது என்ற முடிவு எடுக்கப்படுகின்றது.

தொடக்கத் திருஅவையில் ஏற்பட்ட இப்பிரச்சனைக்கு பவுலும் பர்னபாவும் தலையிட்டு ஒரு நல்ல தீர்வு கண்டது மிகவும் பாராட்டுக்குரியது. ஆகையால், நாம் கடவுள்தரும் மீட்பு "அவருக்கு கிடையாது", "இவருக்குக் கிடையாது" என்று சொல்லி மனிதர்களைப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருக்காமல், நாம் மீட்புப் பெற இறைவனிடம் நம்பிக்கை கொண்டு வாழ்வோம்.

சிந்தனை

"அவர்கள் தன்னடக்கத்தோடு நம்பிக்கை, துணிவு, தூய வாழ்வு ஆகியவற்றில் நிலைத்திருந்தால்... மீட்புப் பெறுவார்கள்" (1 திமொ 2:15) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் தன்னடக்கம், நம்பிக்கை, துணிவு, தூய வாழ்வு ஆகியவற்றில் நிலைத்திருப்போம். அதன்வழியாக இறைவன் தருகின்ற மீட்பையும் அருளையும் நிறைவாகப் பெறுவோம்.



- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
யோவான் 15: 1-8

என்னை விட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய முடியாது


நிகழ்வு

மாமன்னன் அலெக்ஸாண்டர் உலகை வெல்லும் ஆசையில் ஆசியக் கண்டதை நோக்கிப் படையெடுத்துப் வந்தான். அவன் கி.மு.326 ஆம் ஆண்டு, தற்போது பாகிஸ்தானில் உள்ள முல்தான் பகுதியை முற்றுகையிட்டான். இப்பகுதி இலாகூரிலிருந்து, தென்கிழக்கில் 175 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

இந்நகரைத் முற்றுகையிட்ட பின்பு, அலெக்ஸாண்டர் தன்மீது உள்ள தைரியத்தில், அவன் மட்டும் தனியாக முல்தான் நகரின் கோட்டைச் சுவரில் ஏறிக் குதித்து நகருக்குள் நுழைந்தான். இதற்கு நடுவில், மன்னன் மட்டும் தனியாக நகருக்குள் செல்வதைப் பார்த்த, அவனுடைய படையைச் சார்ந்த இரண்டு படைவீரர்கள் அவன் பின்னாலேயே சென்றார்கள். அதற்குள் அலெக்ஸாண்டரை ஒற்றன் என நினைத்துக்கொண்டு முல்தான் நகரில் இருந்த படைவீரர்கள் சிலர் அவனைத் தாக்கத் தொடங்கினார்கள். தனியொருவனால் அவர்களைச் சமாளிக்க முடியவில்லை. இதனால் அலெக்ஸாண்டரின் உடல் பலத்த காயங்கள் ஏற்பட்டன. அவனைப் பின்தொடர்ந்து வந்த இரண்டு படைவீரர்கள்தான் அவனை முல்தான் நகரில் இருந்த படைவீரர்களிடமிருந்து காப்பாற்றினார்கள்.

இதற்குப் பின்பு முல்தான் நகரை முற்றிகையிட்டிருந்த அலெக்ஸாண்டரின் படையானது நகருக்குள் நுழைந்து அந்த நகரைக் கைப்பற்றியது.

மாவீரன் அலெக்ஸாண்டரின் வாழ்க்கையில் நடந்த இந்த நிகழ்வு நமக்கு ஒரு முக்கியமான செய்தியை எடுத்துச் சொல்கின்றது. அது என்னவெனில், நாம் எவ்வளவு பெரிய ஆளாகவேண்டுமானாலும் இருக்கலாம்; ஆனால், நம்மால் மட்டும் எதையும் செய்ய முடியாது என்பதே ஆகும். மாவீரன் அலெக்ஸாண்டர் பல நாடுகள்மீது படையெடுத்துச் சென்று அவற்றை வென்றிருக்கலாம்; ஆனால், அவன் தனித்துச் சென்றபோது, இரண்டு மூன்று படைவீரர்களைக் கூட அவனால் சமாளிக்க முடியவில்லை. இதுதான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு சொல்லும் செய்தியின் சாராம்சமாக இருக்கின்றது. நற்செய்தியில் இயேசு தன்னுடைய சீடர்களிடம், "என்னை விட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய முடியாது" என்கின்றார். இயேசு சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளின் பொருள் என்ன என்பதை இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசுவே திராட்சைச் செடி; நாம் அதன் கிளைகள்

நற்செய்தியில் இயேசு தன்னுடைய சீடர்களிடம், அவர்களுக்கு நன்கு அறிமுகமான திராட்சைச் செடி, கிளைகள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, தனக்கும் அவர்களுக்கும் உள்ள உறவு எப்படி இருக்கவேண்டும் என்று பேசுகின்றார். திருவிவிலியத்தில் திராட்சைத் தோட்டம் என்பது இஸ்ரயேலையும், அதில் நடப்பட்ட கன்றுகள் யூதா மக்களையும், திராட்சைத் தோட்டத்தின் உரிமையாளர் கடவுளையும் குறிப்பதாக இருக்கின்றது (எசாயா 5: 1-7; திபா 80: 8-17). இது இயேசுவின் சீடர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். இதனாலேயே இயேசு திராட்சைச் செடியையும் கிளைகளையும் எடுத்துக்கொண்டு பேசத் தொடங்குகின்றார்.

திராட்சைச் செடி உவமையின் வழியாக இயேசு சொல்லக்கூடிய முதன்மையான செய்தி, கிளைகளாகிய நாம் திராட்சைச் செடியாகிய இயேசுவோடு இணைந்திருக்கவேண்டும். இணைந்திருக்கவேண்டும் என்கின்றபொழுது, யூதாசைப் போன்று பெயரளவுக்கு இயேசுவின் சீடர்களாக இணைந்திருப்பது கிடையாது. மாறாக, உள்ளத்தளவில் இணைந்திருப்பது. இயேசுவோடு உள்ளத்தளவில் நாம் இணைந்திருந்தால், அவரால் வாழ்ந்தால், அவருடைய விரும்பமே நம்முடைய விருப்பமாக மாறிவிடும். இயேசு தந்தைக் கடவுளால் வாழ்ந்தார் (யோவா 6: 57). நாமும் அவரால் வாழ்ந்தால், அவரோடு இணைந்திருப்போம்.

நாம் மிகுந்த கனி தருவதே தந்தைக்கு மாட்சி அளிக்கின்றது

நற்செய்தியின் வழியாக இயேசு சொல்லக்கூடிய இரண்டாவது முக்கியமான செய்தி, நாம் மிகுந்த கனிதருவதாகும். கனிதருவது என்பதை நாம் தூய ஆவியின் கனிகளின் படி வாழ்வது (கலா 5: 22) என்று பொருள் எடுத்துக் கொள்ளலாம்.

இப்பொழுது நமக்கு, எப்படிக் கனிதரும் வாழ்க்கை வாழ்வது என்ற கேள்வி எழலாம். அதற்கான பதிலை இன்றைய நற்செய்தியில் இயேசுவே தருகின்றார். ஆம், நாம் திராட்சைச் செடியாகிய இயேசுவோடு இணைந்திருக்கின்றபொழுது, நம்மால் மிகுந்த கனி தர முடியும். அதே நேரத்தில் நாம் இயேசுவை விட்டுப் பிரிந்திருந்தால், நம்மால் கனிதர முடியாது.

ஆகையால், நாம் கனிதந்து, தந்தைக்கு மாட்சியளிக்க இயேசுவோடு இணைந்திருப்போம்.

சிந்தனை

"கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருப்போருக்கு இனி தண்டனைத் தீர்ப்பே கிடையாது" (உரோ 8: 1) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் இயேசுவோடு அவருடைய வார்த்தைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் இணைந்திருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
Free Blog Widget
Stats Counter
hit counter