maraikal
MUM
"


பாஸ்கா 4ஆம் வாரம் - புதன்கிழமை 06-05-2020

முதல் வாசகம்

பர்னபாவையும் சவுலையும் எனது பணிக்காக ஒதுக்கி வையுங்கள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 12: 24- 13: 5

அந்நாள்களில்

கடவுளின் வார்த்தை மேன்மேலும் பரவியது. பர்னபாவும் சவுலும் தங்கள் திருத்தொண்டை முடித்தபின், மாற்கு எனப்படும் யோவானைக் கூட்டிக்கொண்டு, எருசலேமிலிருந்து திரும்பிச் சென்றனர்.

அந்தியோக்கிய திருச்சபையில் பர்னபா, நீகர் எனப்படும் சிமியோன், சிரேன் ஊரானாகிய லூக்கியு, குறுநில மன்னன் ஏரோதுவுடன் வளர்ந்த மனாயீன், சவுல் ஆகியோர் இறைவாக்கினராகவும் போதகராகவும் இருந்தனர். அவர்கள் நோன்பிருந்து ஆண்டவரை வழிபடும்போது தூய ஆவியார் அவர்களிடம், "பர்னபாவையும் சவுலையும் ஒரு தனிப்பட்ட பணிக்கென நான் அழைத்திருக்கிறேன். அந்தப் பணிக்காக அவர்களை ஒதுக்கி வையுங்கள்" என்று கூறினார். அவர்கள் நோன்பிருந்து இறைவனிடம் வேண்டினார்கள்; தங்கள் கைகளை அவ்விருவர்மீது வைத்துத் திருப்பணியிலமர்த்தி அவர்களை அனுப்பி வைத்தார்கள்.

இவ்வாறு தூய ஆவியாரால் அனுப்பப்பட்டவர்கள் செலூக்கியாவுக்குச் சென்றார்கள்; அங்கிருந்து சைப்பிரசுக்குக் கப்பலேறினார்கள். அவர்கள் சாலமி நகருக்கு வந்து அங்குள்ள யூதரின் தொழுகைக் கூடங்களில் கடவுளின் வார்த்தையை அறிவித்தார்கள்; யோவானைத் தங்கள் உதவியாளராகக் கொண்டிருந்தார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்


திபா 67: 1-2. 4. 5,7 (பல்லவி: 3) Mp3

பல்லவி: கடவுளே! மக்களினத்தார் உம்மைப் போற்றிப் புகழ்வார்களாக! அல்லது: அல்லேலூயா.
1
கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக!
2
அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்துகொள்வர். - பல்லவி

4
வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். - பல்லவி

5
கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக!
7
கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

(யோவா 8: 12)

அல்லேலூயா, அல்லேலூயா! "உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்" என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்


நான் உலகிற்கு ஒளியாக வந்தேன்.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 44-50


அக்காலத்தில்

இயேசு உரத்த குரலில் கூறியது: "என்னிடம் நம்பிக்கை கொள்பவர் என்னிடம் மட்டும் அல்ல, என்னை அனுப்பியவரிடமே நம்பிக்கை கொள்கிறார். என்னைக் காண்பவரும் என்னை அனுப்பியவரையே காண்கிறார்.

என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இருளில் இராதபடி நான் ஒளியாக உலகிற்கு வந்தேன். நான் கூறும் வார்த்தைகளைக் கேட்டும் அவற்றைக் கடைப்பிடியாதவருக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்குபவன் நானல்ல. ஏனெனில் நான் உலகிற்குத் தீர்ப்பு வழங்க வரவில்லை; மாறாக அதை மீட்கவே வந்தேன்.

என்னைப் புறக்கணித்து நான் சொல்வதை ஏற்றுக்கொள்ளாதவருக்குத் தீர்ப்பளிக்கும் ஒன்று உண்டு; என் வார்த்தையே அது. இறுதி நாளில் அவர்களுக்கு அது தண்டனைத் தீர்ப்பு அளிக்கும். ஏனெனில் நானாக எதையும் பேசவில்லை; என்னை அனுப்பிய தந்தையே நான் என்ன சொல்லவேண்டும், என்ன பேசவேண்டும் என்பதுபற்றி எனக்குக் கட்டளை கொடுத்துள்ளார். அவருடைய கட்டளை நிலைவாழ்வு தருகிறது என்பது எனக்குத் தெரியும். எனவே நான் சொல்பவற்றையெல்லாம் தந்தை என்னிடம் கூறியவாறே சொல்கிறேன்."

ஆண்டவரின் அருள்வாக்கு.

 
 


திருத்தூதர் பணிகள் 12: 24-13: 5

மென்மேலும் பரவிய கடவுளின் வார்த்தை

நிகழ்வு

பிரான்ஸ் நாட்டில் உள்ளது சாமூர் (Saumur) என்ற இடம். இங்கு மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஒன்று உண்டு. இந்தக் கோயிலின் பெயர் புனித பேதுரு திருக்கோயில்.

இக்கோயிலில் பங்குத்தந்தையாக இருந்த அருள்பணியாளர் இறைப்பணி செய்வதற்கு நிறைய இளைஞர்கள் முன்வரவேண்டும் என்பதற்காக, கோயிலின் தலைவாசலுக்கு முன்பாக ஓர் அறிவிப்புப் பலகையை வைத்தார். அந்த அறிவிப்புப் பலகையில் பொறிக்கப்பட்டிருந்த வார்த்தைகள் இதோ: "கிறிஸ்தவராகப் பிறந்த ஒவ்வொருவருடைய வாழ்விலும் திருமுழுக்கு, புது நன்மை, திருமணம், இறப்பு ஆகிய நான்கு தருணங்கள் மிகவும் முக்கியமானவை. இந்த நான்கு தருணங்களிலும் நீங்கள் முக்கியப் பங்காற்றவேண்டும் என்றால், அருள்பணியாளர்களாக மாறுங்கள்."

இப்படியோர் அறிவிப்பைப் பார்த்த அப்பங்கைச் சார்ந்த பல இளைஞர்கள் குருமடத்தில் சேர்ந்து, அருள்பணியாளர்களாக மாறி, கடவுளின் வார்த்தையை எங்கும் எடுத்துரைக்கத் தொடங்கினார்கள்.

ஆம், இயேசு சொல்வது போல், அறுவடை மிகுதியாக இருக்க, வேலையாள்கள் மிகவும் குறைவாக இருக்கின்றார்கள் (மத் 10: 37). இப்படிப்பட்ட சூழலில், அறுவடைக்குத் தேவையான வேலையாள்கள் அல்லது அருள்பணியாளர்கள் வேண்டும். அப்பொழுதுதான் கடவுளின் வார்த்தையை எங்கும் எடுத்துரைக்க முடியும்; அதை எங்கும் பரவச் செய்ய முடியும். இன்றைய முதல் வாசகம் கடவுளின் வார்த்தை மென்மேலும் பரவியதைக் குறித்து எடுத்துச் சொல்கின்றது. அது எப்படிப் பரவியது, அதற்குக் காரணமாக இருந்தவர்கள் யார் என்பன குறித்து இப்பொழுது நாம் சிந்திப்போம்.

கடவுளின் வார்த்தை பரவிய விதம்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், "அந்நாள்களில் கடவுளின் வார்த்தை மேன்மேலும் பரவியது" என்றுதான் தொடங்குகின்றது. கடவுளின் வார்த்தை மேன்மேலும் பரவுவதற்கு இரண்டு முதமையான காரணங்களைச் சொல்லலாம். ஒன்று, திருத்தொண்டரான ஸ்தேவானின் மறைச்சாட்சியம். இரண்டு, தூய ஆவியாரின் உடனிருப்பு.

ஆண்டவருடைய வார்த்தையை எடுத்துச் சொன்ன ஸ்தேவான் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, திருத்தூதர்களைத் தவிர்த்து, ஏனைய நம்பிக்கையாளர்கள் யூதேயா, சமாரியா, கலிலேயா... (திப 8:1) ஆகிய பல்வேறு இடங்களுக்குச் சிதறிப் போனார்கள். இப்படிச் சிதறிப்போன கிறிஸ்தவர்கள், அங்கிருந்த மக்களுக்கு கடவுளின் வார்த்தையை எடுத்துச் சொன்னார்கள். இதனால் கடவுளின் வார்த்தை மேன்மேலும் பரவியது. கிறிஸ்தவர்கள் கடவுளின் வார்த்தையை மக்களுக்கு எடுத்துச் சொன்னபொழுது, தூய ஆவியார் அவர்களோடு உடனிருந்தார். இதனால் கடவுளின் வார்த்தை இன்னும் வேகமாகப் பரவியது.

கடவுளின் வார்த்தை பரவுவதற்கு உழைத்தவர்கள்

கடவுளின் வார்த்தை மென்மேலும் பரவிவந்த நேரத்தில் அந்தியோக்கை மையமாக வைத்து, பிற இனத்து மக்களிடைய எப்படி நற்செய்தி அறிவிக்கப்பட்டது என்பதை இன்றைய முதல் வாசகத்தின் இரண்டாவது பகுதி எடுத்துச் சொல்கின்றது.

அந்தியோக்கில் பர்னபா, நீகர் எனப்படும் சிமியோன், சிரேன் ஊரானாகிய லூக்கியு, குறுநில மன்னன் ஏரோதுடன் வளர்ந்த மனாயீன், சவுல் ஆகியோர் இறைவாக்கினர்களாகவும் போதகர்களாகவும் இருந்தார்கள். இவர்கள் ஒவ்வொருவருமே வெவ்வேறு பின்புலத்தைச் சார்ந்தவர்கள்; வெவ்வேறு இடங்களைச் சார்ந்தவர்கள். இப்படி வெவ்வேறு பின்புலத்தைச் சார்ந்த, வெவ்வேறு பகுதிகளைச் சார்ந்தவர்கள் இறைவாக்கினர்களாகவும் போதகர்களாகவும் இருந்து கடவுளின் வார்த்தையை எடுத்துரைத்தார்கள் என்றால், அது எந்தளவுக்கு வேகமாகப் பரவியிருக்கும் என்பதை நாம் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளலாம்.

இன்றைய முதன் வாசகத்தின் இறுதியில், பர்னபாவும் பவுலும் சிறப்பான பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, செலுக்கியா, சைப்பிரசு, சலாமி போன்ற பகுதிகளுக்குச் சென்று, கடவுளின் வார்த்தையை எடுத்தரைத்தார்கள் என்று வாசிக்கின்றோம். அப்படியென்றால் இவர்களோடு இருந்த சிமியோன், லூக்கியு, மனாயீன் ஆகியோர் மற்ற பகுதிகளுக்குச் சென்று கடவுளின் வார்த்தையை எடுத்துரைத்திருப்பார்கள் அல்லவா! அதன்மூலம் கடவுளின் வார்த்தையை இன்னும் வேகமாகப் பரவியிருக்கும்தானே! மிகவும் சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்றாக இருக்கின்றது.

தொடக்கத் திருஅவையில் இருந்த பர்னபா, பவுல் போன்றவர்களும் இவர்களோடு இருந்தவர்களும் கடவுளின் வார்த்தையை பரவுவதற்குக் காரணமாக இருந்தார்கள் எனில், கடவுளின் வார்த்தையை பெற்றுக்கொண்ட நாம், அதை மற்றவர்களுக்கும் அறிவிக்கவேண்டியது நம்முடைய பொறுப்பு அல்லவா! (1 கொரி 9: 17). ஆகையால், தொடக்கத் திருஅவையில் இருந்த திருத்தூதர்களும் அவர்களோடு இருந்தவர்களும் கடவுளின் வார்த்தை பரவுவதற்குக் காரணமாக இருந்தது போல், நாமும் கடவுளின் வார்த்தை பரவுவதற்குக் காரணமாக இருப்போம்.

சிந்தனை

"உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்" (மாற் 16: 15) என்பார் இயேசு. ஆகையால், நாம் இயேசுவின் இக்கட்டளையை ஏற்று, கடவுளின் வார்த்தையை எல்லாருக்கும் எடுத்துரைப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
யோவான் 12: 44-50

தன்னிடம் நம்பிக்கை கொள்வோருக்கு ஒளியாக வரும் இயேசு

நிகழ்வு

ஒருமுறை நியூயார்க்கைச் சார்ந்த, நற்செய்தி அறிவிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், இந்தியாவிற்கு வந்து நற்செய்தி அறிவிக்கலாம் என்று திட்டம் தீட்டினார்கள். அதன்படி ஒரு குறிப்பிட்ட நாளில், அந்த பத்துப் பேரும் நியூயார்க்கிலிருந்து இந்தியாவிற்குக் கப்பலில் கிளம்பி வந்தார்கள்.

கப்பல் அட்லாண்டிக் கடலில் வந்துகொண்டிருந்தபொழுது, அந்தக் கூட்டத்தின் தலைவருக்கு லேசாகப் பதற்றம் தொற்றிக்கொண்டது. "இந்தியாவிற்குச் சென்று எங்கு தங்குவது...? நற்செய்திப் பணி செய்கின்றபொழுது பணத்திற்கு என்ன செய்வது...? மக்கள் எங்களை ஏற்றுக்கொள்வாரா...?" இதுமாதிரியான எண்ணங்கள் அவரைப் பதற்றமடையச் செய்தன. இந்த எண்ணங்களோடு அவர் இறைவனிடம் நம்பிக்கையோடு வேண்டிவிட்டு அப்படியே தூங்கிவிட்டார்.

அப்பொழுது அவருக்கு ஒரு கனவு வந்தது. அந்தக் கனவில், அவர் ஓர் ஆற்றங்கரையில் நின்றுகொண்டிருந்தார். ஆறு சற்று ஆழமாக இருந்ததால், அதை எப்படிக் கடப்பது என்று எண்ணிக் கொண்டிருந்தார். அந்நேரத்தில் எங்கிருந்தோ வந்த ஒருவர், படகுடன் அவருக்கு முன் வந்து நின்றார். பின்னர் அந்தப் படகோட்டி அவரைப் படகில் ஏற்றுக்கொண்டு மறுகரையில் இறக்கிவிட்டார்.

கனவில் இப்படியொரு காட்சியைக் கண்டதும், அந்தக் நற்செய்திப் பணியாளர்களுடைய கூட்டத்தின் தலைவர், "ஆண்டவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார். அப்படியிருக்கின்றபொழுது எதற்கு நாம் எதைப் பற்றியும் கவலைப்படவேண்டும்!" என்று எண்ணிக்கொண்டு, ஆண்டவர்மீது முழு நம்பிக்கை வைத்துப் பயணத்தைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்ள பெனாரசிற்கு வந்து, அவரோடு வந்தவர்களோடு சேர்ந்து, ஆண்டவருடைய நற்செய்தியை மிகுந்த உற்சாகத்தோடு அறிவித்தார்கள்.

திருமதி. டபிள்யூ. கே. நோர்டன் எழுதிய "My life of the Pilgrim"s Mission, Benares, Inida" என்ற நூலில் இடம்பெறும் இந்த நிகழ்வு, ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்வோருக்கு ஆண்டவர் வழியாகவும் ஒளியாகவும் அடைக்கலமுமாகவும் வருகின்றார் என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றது. இன்றைய நற்செய்தி வாசகம், இயேசுவிடம் நம்பிக்கை கொள்வோரை, அவர் ஒளியாக இருந்து, இருளில் இடராதபடி வழிநடத்துகின்றார் என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றது. அது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

நம்பிக்கையாளர்களுக்கு ஒளியாக வந்த இயேசு

நற்செய்தியில் இயேசு, தன்மீது நம்பிக்கை கொண்டு வாழ்வதன் முக்கியத்துவத்தைக் குறித்துப் பேசுகின்றார். யோவான் நற்செய்தின் இந்தப் பகுதியோடு (யோவா 12: 44-50) இயேசு, பொதுவிடத்தில் போதிப்பது நிறைவுபெறுகின்றது. இதன்பிறகு அவர் தன்னுடைய சீடர்களுக்குத்தான் போதிக்கின்றார். இப்படிப் பொதுஇடத்தில் இயேசு போதிக்கும் கடைசிப் போதனை, அவர்மீது நம்பிக்கை கொண்டு வாழ்வதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கின்றது.

இயேசு மக்களிடம், என்மீது நம்பிக்கை கொள்பவர் என்னை அனுப்பியவரிடமே நம்பிக்கை கொள்கின்றார் என்று சொல்வதும், என்னைக் காண்பவர் என்னை அனுப்பியவரையே காண்கின்றார் என்று சொல்வதும், "என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும்" (யோவா 14: 9-11) என்ற வார்த்தைகளை நமக்கு நினைவுபடுத்துகின்றன. மேலும் இயேசு தொடர்ந்து சொல்லக்கூடிய, "என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இருளில் இராதபடி நான் ஒளியாக உலகிற்கு வந்தேன்" என்ற வார்த்தைகள், "உலகின் ஒளி நானே" (யோவா 8: 12) என்ற வார்த்தைகளை நினைவுபடுத்துபவையாக இருக்கின்றன.

ஆம், இயேசு இந்த உலகிற்கு ஒளியாக வந்தார். அப்படிப்பட்டவரிடம் நம்பிக்கை கொள்ளும் யாரும் இருளில் இடறி விழமாட்டார் என்பது உறுதி.

தீர்ப்பளிக்க அல்ல, மீட்பளிக்க வந்த இயேசு

தன்னிடம் நம்பிக்கை கொள்வோருக்குக் ஒளியாக வந்தேன் என்று சொல்லும் இயேசு, தொடர்ந்து, உலகிற்குத் தீர்ப்பு வழங்க வரவில்லை; அதை மீட்கவே வந்தேன் என்று கூறுகின்றார். ஆம். கடவுளின் திருவுளம் எல்லாரும் மீட்படைய வேண்டும் என்பதுதான் (1திமொ 2:4). அதற்காக, அவர், தன் ஒரே மகனை இவ்வுலகிற்கு அனுப்பினார். இயேசுவும் கடவுளின் மீட்புத் திட்டத்தினை செவ்வனே செய்து முடித்தார். அப்படியெனில், தண்டனைத் தீர்ப்பு வழங்குவது எது எனக் கேள்வி எழலாம். அது வேறொன்றும் இல்லை. இயேசுவின் வார்த்தைதான் தண்டனைத் தீர்ப்பு அளிக்கும்.

உலகினர் வாழ்வு பெறுவதற்காகக் கொடுக்கப்பட்ட இயேசுவின் வார்த்தையை நம்பாவிடில், அதுதானே அதனை நம்பாதவருக்குத் தீர்ப்பளிக்கும். ஆகையால், நமக்கு நிலைவாழ்வு அளிக்கும் இயேசுவின் வார்த்தைகளில் நம்பிக்கை கொண்டு, அவருடைய வழியில் நடக்கக் கற்றுக்கொள்வோம். அதன்வழியாக நிலைவாழ்வைப் பெறுவோம்.

சிந்தனை

"நம்பிக்கை என்பது ஆதாரத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. ஆதாரமோ மனிதனுக்கே உரியது. ஆனால், நம்பிக்கை என்பது கடவுளின் கொடை" என்பார் பிரான்சு நாட்டு மெய்யியலாரான ப்ளேஸ் பாஸ்கல் (1623-1662). ஆகையால், நாம் கடவுள் மனிதருக்குக் கொடுத்திருக்கின்ற கொடையாகிய நம்பிக்கையை, அந்தக் கடவுளின்மீது கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
Free Blog Widget
Stats Counter
hit counter