maraikal
MUM
 

இளையோர்


 திருநீற்றுப்புதன்

முதல் வாசகம்
                                                              
நீங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக்கொள்ளுங்கள்.

இறைவாக்கினர் யோவேல் நூலிலிருந்து வாசகம் 2: 12-18

ஆண்டவர் கூறுகிறார்: இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக்கொண்டு, உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்; நீங்கள் உங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக்கொண்டு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள். அவர் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்; நீடிய பொறுமையுள்ளவர், பேரன்பு மிக்கவர்; செய்யக் கருதிய தீங்கைக் குறித்து மனம் மாறுகின்றவர். ஒருவேளை அவர் தம் மனத்தை மாற்றிக்கொண்டு, உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு தானியப் படையலையும் நீர்மப் படையலையும் நீங்கள் அளிக்குமாறு உங்களுக்கு ஆசி வழங்குவார். இதை யார் அறிவார்?

சீயோனில் எக்காளம் ஊதி எச்சரியுங்கள்; புனிதமான உண்ணா நோன்புக்கென நாள் குறியுங்கள்; வழிபாட்டுப் பேரணியைத் திரட்டுங்கள். மக்களைத் திரண்டு வரச்செய்யுங்கள்; புனித கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்; முதியோரைக் கூடிவரச் செய்யுங்கள், பிள்ளைகளையும் பால் குடிக்கும் குழந்தைகளையும் ஒருசேரக் கூட்டுங்கள்; மணமகன் தன் அறையை விட்டு வெளியேறட்டும்; மணமகள் தன் மஞ்சத்தை விட்டுப் புறப்படட்டும்.

ஆண்டவரின் ஊழியர்களாகிய குருக்கள் கோவில் மண்டபத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையே நின்று அழுதவண்ணம், "ஆண்டவரே, உம் மக்கள்மீது இரக்கம் கொள்ளும்; உமது உரிமைச் சொத்தை வேற்றினத்தார் நடுவில் நிந்தைக்கும் பழிச்சொல்லுக்கும் ஆளாக்காதீர்" எனச் சொல்வார்களாக! "அவர்களுடைய கடவுள் எங்கே?"என வேற்றினத்தார் கூறவும் வேண்டுமோ?

அப்பொழுது ஆண்டவர் தம் நாட்டின்மேல் பேரார்வம் கொண்டு தம் மக்கள் மீது கருணை காட்டினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்
திபா 51: 1-2. 3-4a. 10-11. 12,15 (பல்லவி: 1a) Mp3

பல்லவி: ஆண்டவரே! இரக்கமாயிரும்; ஏனெனில் நாங்கள் பாவம் செய்தோம்.
1கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்.
2என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். - பல்லவி

3ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்; என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது.
4aஉமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்; உம் பார்வையில் தீயது செய்தேன். - பல்லவி

10கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதி தரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும்.
11உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். - பல்லவி

12உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும்.
15என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்; அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும். - பல்லவி



இரண்டாம் வாசகம்
கடவுளோடு ஒப்புரவாகுங்கள்; இதுவே தகுந்த காலம்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 20- 6: 2

சகோதரர் சகோதரிகளே,

நாங்கள் கிறிஸ்துவின் தூதுவர்களாய் இருக்கிறோம். கடவுளே எங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுக்கிறார். ஆகவே கடவுளோடு ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவின் சார்பில் நாங்கள் மன்றாடுகிறோம். நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்தார்.

நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட அருளை வீணாக்க வேண்டாம் என அவரோடு இணைந்து உழைக்கும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். "தகுந்த வேளையில் நான் உமக்குப் பதிலளித்தேன்; விடுதலை நாளில் உமக்குத் துணையாய் இருந்தேன்" எனக் கடவுள் கூறுகிறார். இதுவே தகுந்த காலம்! இன்றே மீட்பு நாள்!

ஆண்டவரின் அருள்வாக்கு.



நற்செய்திக்கு முன் வசனம்

(திபா 95: 8a, 7b காண்க)

உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக்கொள்ளாதீர்கள்; மாறாக ஆண்டவரின் குரலைக் கேட்பீர்களாக.

 


நற்செய்தி வாசகம்
மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-6, 16-18

அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள் முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள். இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். இல்லையென்றால் உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது.

நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப்பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள். வெளிவேடக்காரர் மக்கள் புகழ வேண்டுமென்று தொழுகைக்கூடங்களிலும் சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும். அப்பொழுது நீங்கள் செய்யும் தர்மம் மறைவாயிருக்கும்; மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.

நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது வெளிவேடக்காரரைப் போல் இருக்க வேண்டாம். அவர்கள் தொழுகைக்கூடங்களிலும் வீதியோரங்களிலும் நின்றுகொண்டு மக்கள் பார்க்கவேண்டுமென இறைவேண்டல் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஆனால் நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது உங்கள் உள்ளறைக்குச் சென்று, கதவை அடைத்துக்கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.

மேலும் நீங்கள் நோன்பு இருக்கும்போது வெளிவேடக்காரரைப் போல முகவாட்டமாய் இருக்க வேண்டாம். தாங்கள் நோன்பு இருப்பதை மக்கள் பார்க்க வேண்டுமென்றே அவர்கள் தங்கள் முகங்களை விகாரப் படுத்திக்கொள்கிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் நோன்பு இருக்கும்போது உங்கள் தலையில் எண்ணெய் தேய்த்து, முகத்தைக் கழுவுங்கள். அப்பொழுது நீங்கள் நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாது; மாறாக, மறைவாய் இருக்கிற உங்கள் தந்தைக்கு மட்டும் தெரியும். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்கு ஏற்ற கைம்மாறு அளிப்பார்."

ஆண்டவரின் அருள்வாக்கு.

 திருநீற்றுப்புதன்

I யோவேல் 2: 12-18
II 2 கொரிந்தியர் 5: 20-6:2
III மத்தேயு 6: 1-6, 16-18

"கடவுளோடு ஒப்புரவாகுங்கள்"

நிகழ்வு

பெருநகர் ஒன்றில் ஒரு கணவனும் மனைவியும் வாழ்ந்து வந்தார்கள். நன்றாகச் சென்றுகொண்டிருந்த அவருடைய திருமண வாழ்க்கையில் திடீரென்று விரிசல் ஏற்பட்டது. இதனால் அவர்கள் இருவரும் பிரிந்துவிடுவதே நல்லது என்று பிரிந்துபோனார்கள். இதற்குப் பின்பு அவர்கள் இருவரும் வேறு வேறு இடங்களுக்குச் சென்று வாழத் தொடங்கினார்கள்.

ஒருநாள் கணவர் பணி நிமித்தமாக முன்பிருந்த அதே நகருக்கு வந்தார். அன்றைய நாளில், பிறந்து ஓரிரு மாதங்களிலேயே இறந்துபோன அவருடைய மகனின் நினைவுநாள் என்பதால், அவர் தன்னுடைய பணியை முடித்துவிட்டு, மகனின் கல்லறைக்கு மரியாதை செலுத்த வந்தார். அவர் மகனின் கல்லறையில் மரியாதை செலுத்திக்கொண்டிருக்கையில் அவருக்குப் பின்னால் யாரோ ஒருவர் நடந்து வருவது மாதிரியான காலடிச் சத்தம் கேட்டது. அவர் திரும்பிப் பார்த்தார். அப்பொழுது அவருடைய கண்களை அவரால் நம்ப முடியவில்லை. ஆம், அங்கு அவருடைய மனைவி, மகனுக்கு மரியாதை செலுத்துவதற்காக மாலையோடு நின்றுகொண்டிருந்தார்.

நீண்ட நாள்கள் கழித்து இருவரும் பார்த்துக்கொண்டதால் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்கள். பின்னர் அவர்கள் இருவரும் பல ஆண்டுகள் பிரிந்திருந்ததால் ஏற்பட்ட இழப்புகளை உணர்ந்தவர்களாய் ஒன்று சேர்ந்தார்கள். ஆம், இறந்துபோன மகன் பிரிந்திருந்த அவர்கள் இருவரையும் ஒன்று சேர்த்தான்; ஒப்புரவாக்கினான்.

இந்தக் குழந்தை எப்படி பிரிந்திருந்த கணவன் மனைவியை ஒப்புரவாக்கியதோ, அது போன்று ஆண்டவராகிய கடவுள் தன் மகன் இயேசு வழியாக மனிதர்களாகிய நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். எனவே, நாம் அனைவரும் அவரோடு ஒப்புரவாக இருக்கவேண்டும். அதைத்தான் மேலே உள்ள நிகழ்வும் இன்று நாம் தொடங்கியிருக்கும் தவக்காலமும் நமக்கு எடுத்துக்கூறுகின்றன.

தன் மகன் இயேசுவின் வழியாக நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கிய கடவுள்

இன்று நாம் அருளின் காலமான தவக்காலத்தைத் தொடங்கியிருக்கின்றோம். இன்றைய நாளில் நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, கடவுளோடு ஒப்புரவாகவேண்டும் என்ற உயரிய அழைப்பினைத் தருகின்றது. நாம் ஏன் கடவுளோடு ஒப்புரவாகவேண்டும்...? கடவுளோடு எப்படி ஒப்புரவாகுவது...? கடவுளோடு ஒப்புரவாகுவதால் நாம் அடையும் நன்மைகள் என்ன...? ஆகியவற்றைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் இவ்வாறு வாசிக்கின்றோம்: "உலகினரின் குற்றங்களைப் பொருட்படுத்தாமல் கடவுள், கிறிஸ்துவின் வாயிலாக அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்." ஆம், மனிதர்கள் தங்களுடைய கீழ்ப்படியாமையால் கடவுளோடு உள்ள உறவை முறித்துக்கொண்டார்கள். அப்படியிருந்தும், கடவுள் அவர்களுடைய குற்றங்களைப் பொருட்படுத்தாமல், தம் மகன் இயேசுவின் வழியாக அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கிக்கொண்டார். அப்படியானால், நாம் ஒவ்வொருவரும் கடவுளோடு ஒப்புரவாக இருக்கவேண்டும் என்பதே அவர் நமக்குக் கொடுக்கப்படும் அழைப்பாக இருக்கின்றது.

கடவுளோடு எப்படி ஒப்புரவாகுவது என்பதற்கான பதிலை இன்றைய நாளில் நாம் படிக்கக்கேட்ட நற்செய்தி வாசகத்தில் இயேசு தருகின்றார். அறம் செய்தல், இறைவேண்டல் செய்தல், நோன்பிருத்தல், என்ற மூன்று முக்கியமான உண்மைகளைச் சொல்லும் இயேசு, இவற்றின்மூலம் நாம் கடவுளோடு ஒப்புரவாகலாம் என்று கூறுகின்றார். இங்கு ஒரு கேள்வி எழலாம். அது என்ன கேள்வி எனில், அறம் செய்தல், இறைவேண்டல் செய்தல், நோன்பிருத்தல் இவற்றின் மூலம் ஒருவர் எப்படிக் கடவுளோடு ஒப்புரவாக முடியும் என்பதுதான் அந்தக் கேள்வி.

திருத்தூதரான புனித யோவானின் கூற்றுப்படி (1யோவா 4: 20) மனிதரோடு ஒப்புரவாகாமல் அல்லது மனிதரை அன்பு செய்யாமல், கடவுளோடு ஒப்புரவாகுவதோ அல்லது கடவுளை அன்பு செய்யவோ முடியாது. மனிதரை அன்பு செய்வதற்கு ஒருவர் அறச்செயல்களைச் செய்தாகவேண்டும். இதைவிட மிக முக்கியமான செய்தி என்னவெனில், ஒருவர் சக மனிதரோடு ஒப்புரவாகவேண்டும் அல்லது அவரை அன்பு செய்யவேண்டும் என்றால், அதற்கு அவர் தன்னை முதலில் அன்பு செய்யவேண்டும். தன்னை அன்பு செய்கின்றவர் கட்டயாம் நோன்பிருந்தாக வேண்டும். எனவே, ஒருவர் கடவுளோடு ஒப்புரவாக வேண்டும் என்றால், அவர் தன்னோடும் பிறரோடும் ஒப்புரவாகவேண்டும். அதற்கு நோன்பும் அறச் செயலும் இறைவேண்டலும் தேவையானதாக இருக்கின்றன.

கடவுளிடமிருந்து பெற்ற அழைப்பை இழக்கவேண்டாம்

கடவுளோடு ஒப்புரவாகுங்கள் என்ற சொன்ன புனித பவுல், அடுத்ததாகச் சொல்லக்கூடிய செய்தி, "கடவுளிடமிருந்து பெற்ற அழைப்பை இழக்கவேண்டாம்" என்பதாகும். நாம் கடவுளிடமிருந்து பெற்ற அழைக்க இழக்கவேண்டாம் என்று பவுல் வலியுறுத்திக் கூறுவதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கின்றது. அது என்னவெனில், மனிதர்களாகிய நாம் அனைவரும் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக இருக்க, அவர் பாவம் அறியாத தம் திருமகனை பாவநிலை ஏற்கச் செய்தார் என்பதாகும். இது கடவுளைப் பொருத்தமட்டில் ஒரு மிகப்பெரிய செயல் என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில், எவரும் தம் மகன் அல்லது மகள் தாழ்ந்துபோகவேண்டும் என்று விரும்புவதில்லை. ஆனால், கடவுள் பாவமே அறியாத தன் மகனைப் பாவநிலை ஏற்கச் செய்தார் எனில், அங்குதான் மேலான கடவுளின் அன்பு இருக்கின்றது. எனவே, இத்தகைய பேரன்பு மிக்க இறைவனிடமிருந்து வரும் "என்னிடம் திரும்பி வாருங்கள்"யோவே 2: 12,13) அல்லது ஒப்புரவாகுங்கள் என்ற அழைப்பினை நாம் இழந்துவிடவேண்டாம் என்பதுதான் பவுல் கூறும் செய்தியாக இருக்கின்றது.

இதுவே தகுந்த காலம்; இன்றே மீட்பு நாள்

இன்றைய இரண்டாவது வாசகத்தின் வழியாக புனித பவுல் நமக்குச் சொல்லும் மூன்றாவது முக்கியமான செய்தி, கடவுளோடு ஒப்புரவாகுவதற்கு இதுவே தகுந்த காலம்; இன்றே மீட்பு நாள் என்பதாகும். பலர் "கடவுளோடு நாளை ஒப்புரவாகலாம்... பிறகு ஒப்புரவாகலாம்..."என்று இருப்பதுண்டு. இதனால் அவர்கள் கடவுளோடு ஒருபோதும் ஒப்புரவாகாமல் போகும் நிலைதான் ஏற்படும். இத்தகைய சூழ்நிலையில் புனித பவுல் இன்றைய இரண்டாம் வாசகத்தின் வழியாகக் கொடுக்கும், "இதுவே தகுந்த காலம். இன்றே மீட்பு நாள்"என்ற அழைப்பு நமது கவனத்திற்குரியது.

கடல் ஆமைகளிடம் ஒரு வித்தியாச வழக்கம் உண்டு. அவை முட்டையிடும்பொழுது கடலில் முட்டையிடாமல், நிலத்திற்கு வந்து, குழிகளைத் தோண்டி முட்டையிட்டு மூடிவிட்டுப் போய்விடும். குறிப்பிட்ட காலத்தில் அவை குஞ்சுகளாகப் பொறித்துவிடும். குஞ்சுகளாகப் பொறித்தபின் அவை நிலத்தில் தங்குவதில்லை. மாறாக, தங்களுடைய பெற்றோர் இருக்கும் கடலுக்கு வந்துவிடும். ஒருவேளை அவை நிலத்திலேயே இருந்தால், பறவைகளுக்கும் பிற உயிரினங்களுக்கும் இரையாகிவிடும் என்பதலேயே அவை இப்படிச் செய்யும்.

மனிதர்களாகிய நாமும்கூட இந்த மண்ணக இன்பமே போதும் என்று இருந்துவிடாமல், முடிவில்லா வாழ்வினைத் தரும் இறைவனைத் தேடிச் செல்லவேண்டும்; அவரோடு ஒப்புரவாகவேண்டும். அதுதான் இறைவனின் விரும்பமும்கூட. எனவே, நாம் கடவுளோடு ஒப்புரவாக இதுவே தகுந்த காலம் என்று நம்மை அன்பு செய்து, பிறரையும் அன்பு செய்து, அதன்மூலம் கடவுளையும் செய்து, அவரோடு ஒப்புரவாகுவோம்.

சிந்தனை

"என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய முடியாது" (யோவா 15: 5) என்பார் இயேசு. ஆகையால், நாம் கடவுளோடு ஒப்புரவாகுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
Free Blog Widget
Stats Counter
hit counter