maraikal
MUM
"
வாசகம்

 

                              பொதுக்காலம் 26 ம் வாரம் - 1ம் ஆண்டு

முதல் வாசகம்

கீழ்த்திசை நாட்டினின்றும் மேற்றிசை நாட்டினின்றும் என் மக்களை விடுவிப்பேன்.

இறைவாக்கினர் செக்கரியா நூலிலிருந்து வாசகம் 8: 1-8

அந்நாள்களில் படைகளின் ஆண்டவரது வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது: படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: " சீயோன்மீதுள்ள அன்பு வெறியால் நான் கனன்றுகொண்டிருக்கின்றேன்; அதன்மீதுள்ள அன்புவெறியால் நான் சினமுற்றிருக்கின்றேன்.''

ஆண்டவர் கூறுவது இதுவே: " சீயோனுக்கு நான் திரும்பி வரப்போகிறேன்; எருசலேம் நடுவில் குடியிருக்கப் போகிறேன்; எருசலேம் `உண்மையுள்ள நகர்' என்றும், படைகளின் ஆண்டவரது மலை `திருமலை' என்றும் பெயர்பெற்று விளங்கும்.''

படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: " எருசலேமின் தெருக்களில் கிழவரும் கிழவியரும் மீண்டும் அமர்ந்திருப்பார்கள்; வயது முதிர்ந்தவர்களானதால் ஒவ்வொருவரும் தம் கையில் கோல் வைத்திருப்பார்கள்; நகரின் தெருக்களில் சிறுவரும் சிறுமியரும் நிறைந்திருப்பார்கள்; அவர்கள் அதன் தெருக்களில் விளையாடிக் கொண்டிருப்பார்கள்.''

படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: "இம்மக்களில் எஞ்சியிருப் போரின் கண்களுக்கு இவையெல்லாம் அந்நாள்களில் விந்தையாய்த் தோன்றினாலும், என் கண்களுக்கு விந்தையாய்த் தோன்றுமோ?'' என்கிறார்

படைகளின் ஆண்டவர். படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: "இதோ, கீழ்த்திசை நாட்டினின்றும் மேற்றிசை நாட்டினின்றும் என் மக்களை விடுவிப்பேன்; அவர்களை அழைத்துக்கொண்டு வருவேன்; அவர்கள் எருசலேமில் குடியிருப்பார்கள்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்; உண்மையிலும் நீதியிலும் நான் அவர்களுக்குக் கடவுளாய் இருப்பேன்.''

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 102: 15-17. 18,20,19. 28,21-22 (பல்லவி: 16) Mp3

பல்லவி: ஆண்டவர் சீயோனைக் கட்டி எழுப்பி மாட்சியுடன் திகழ்ந்திடுவார்.

15 வேற்றினத்தார் ஆண்டவரின் பெயருக்கு அஞ்சுவர்; பூவுலகின் மன்னர் யாவரும் அவரது மாட்சியைக் கண்டு மருள்வர். 16 ஏனெனில் ஆண்டவர் சீயோனைக் கட்டியெழுப்புவார்; அங்கு அவர் தம் மாட்சியுடன் திகழ்வார். 17 திக்கற்றவர்களின் வேண்டுதலுக்கு அவர் செவிகொடுப்பார்; அவர்களின் மன்றாட்டை அவமதியார். பல்லவி

18 இனி வரவிருக்கும் தலைமுறைக்கென இது எழுதி வைக்கப்படட்டும்; படைக்கப்படவிருக்கும் மக்கள் ஆண்டவரைப் புகழட்டும். 20 அவர் சிறைப்பட்டோரின் புலம்பலுக்குச் செவிசாய்ப்பார்; சாவுக்கெனக் குறிக்கப்பட்டவர்களை விடுவிப்பார். 19 ஆண்டவர் தம் மேலுலகத் திருத்தலத்தினின்று கீழே நோக்கினார்; அவர் விண்ணுலகினின்று வையகத்தைக் கண்ணோக்கினார். பல்லவி

28 உம் அடியாரின் பிள்ளைகள் பாதுகாப்புடன் வாழ்வர்; அவர்களின் வழிமரபினர் உமது திருமுன் நிலைத்திருப்பர்! 21 சீயோனில் ஆண்டவரின் பெயர் போற்றப்படும். எருசலேமில் அவர்தம் புகழ் அறிவிக்கப்படும். 22 அப்போது, மக்களினங்களும் அரசுகளும் ஒன்றுதிரண்டு ஆண்டவரை வழிபடுவர். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மாற் 10: 45

அல்லேலூயா, அல்லேலூயா! மானிட மகன் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

உங்கள் எல்லாரிலும் சிறியவரே பெரியவர் ஆவார்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 46-50


அக்காலத்தில் தங்களுக்குள் பெரியவர் யார் என்ற விவாதம் சீடர்களிடையே எழுந்தது. இயேசு அவர்களின் எண்ணங்களை அறிந்து ஒரு சிறுபிள்ளையை எடுத்து, தம் அருகே நிறுத்தி, அவர்களிடம், "இச்சிறு பிள்ளையை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார். உங்கள் எல்லாரிலும் சிறியவரே பெரியவர் ஆவார்'' என்றார்.

யோவான் இயேசுவைப் பார்த்து, " ஆண்டவரே, ஒருவர் உமது பெயரால் பேய் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப்பார்த்தோம்; ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர்'' என்றார்.

இயேசு அவரை நோக்கி, " தடுக்க வேண்டாம்; ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்'' என்றார்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
 

சிந்தனை

லூக்கா 9: 46-50

 

“உங்கள் எல்லாரிலும் சிறியவரே பெரியவர் ஆவார்”


 

நிகழ்வு

 

          இங்கிலாந்தில் உள்ள ‘நோர்போக்’கில் (Norfolk) அரசாக இருந்தவர் தாமஸ் ஹோவர்ட். தான் அரசர் என்ற எண்ணம் சிறிதளவுகூட இல்லாமல் மிகவும் எளியவராய், காட்சி இனியவராய், தேவையில் இருப்பவர் யாராக இருந்தாலும் அவர்க்கு ஓடிச்சென்று உதவக் கூடியவராய் இருந்தார்.

 

ஒருநாள் இவர் தன்னுடைய அரண்மனைக்கு அருகாமையில் இருந்த இருப்பூர்தி நிலையத்தில் (Railway Station) அமர்ந்திருந்தார். அப்பொழுது ஓர் இளம்பெண் கையில் பெட்டியுடன் இருப்பூர்தியிலிருந்து கீழே இறங்கி வந்தார். அவர் அங்கிருந்த சுமைதூக்கும் தொழிலாளியிடம், “இங்கிருந்து இந்தப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு பக்கத்திலுள்ள அரண்மனைக்கு செல்லவேண்டும். அதற்கு எவ்வளவு ஆகும்” என்று கேட்டார். அதற்கு அந்தச் சுமைதூக்கும் தொழிலாளி பெட்டியைத் தூக்கிப் பார்த்துவிட்டு, “பெட்டி மிகவும் கனமாக இருக்கின்றது. அதனால் இங்கிருந்து இப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு அரண்மனைக்குச் செல்லவேண்டும் என்றால், ஐந்து ஷில்லிங் வேண்டும்” என்றார்.

 

இளம்பெண்ணோ தன்னிடம் எவ்வளவு ஷில்லிங் இருக்கின்றது என்று, தான் வைத்திருந்த கைப்பைக்குள் துலாவிப் பார்த்தார். அதில் ஒரே ஒரு ஷில்லிங்தான் இருந்தது. உடனே அவர் அந்தச் சுமைதூக்கும் தொழிலாளியிடம், “இப்பொழுது என்னிடம் ஒரே ஒரு ஷில்லிங்தான் இருக்கின்றது. இதை வைத்துக்கொண்டு இந்தப் பெட்டியை இங்கிருந்து தூக்கிக்கொண்டு அரண்மனைக்கு வரமுடியுமா?” என்று கேட்டார். அவரோ, “அதெல்லாம் கட்டுபடியாகாதம்மா” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து நகர்ந்து போனார்.

 

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த தாமஸ் ஹோவர்ட், அந்த இளம்பெண்ணிடம் சென்று, “அம்மா! நீங்கள் எங்கு செல்லவேண்டும்? உங்கட்கு நான் எவ்வாறு உதவவேண்டும்?” என்று கேட்டார். உடனே அந்த இளம்பெண், நடந்ததையெல்லாம் சொல்லிவிட்டு, “ஐயா! நான் பக்கத்திலுள்ள அரண்மனைக்குச் செல்லவேண்டும். என்னிடமிடமுள்ள இந்தப் பெட்டியை அரண்மனைவரைக்கும் தூக்கிக்கொண்டு வரமுடியுமா?” என்று கேட்டார். தாமஸ் ஹோவர்டோ தன்னை யாரென்று அவரிடம் காட்டிக்கொள்ளாமல், “தாராளமாகத் தூக்கிக் கொண்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு பெட்டியைத் தூக்கிக்கொண்டு அவர் பின்னாலேயே நடந்து சென்றார்.

 

வழியில் தாமஸ் ஹோவர்ட் அவரிடம், “என்ன விசயமாக அரண்மனைக்குச் செல்கிறீர்கள்?” என்று கேட்டார். “அரண்மனையில் பணிப்பெண்ணாக இருக்க ஆள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். அதனால்தான் நான் அங்கு செல்கின்றேன்” என்றார் அவர். இப்படியே அவர்கள் பேசிக்கொண்டு செல்லும்போது, அரண்மனை வந்துவிட்டது. அரண்மனை வந்ததும் அந்த இளம்பெண் தன்னுடைய பெட்டியைத் தூக்கிக்கொண்டு வந்த அந்த மனிதர்க்கு ஒரு ஷில்லிங் கொடுத்துவிட்டு அவர்க்கு நன்றி சொல்லிவிட்டு, அவரிடமிருந்து விடைபெற்றார்.

 

அடுத்தநாள் அவர் அரசரைப் பார்ப்பதற்காக அவருடைய அறைக்கு வந்தபோது, அங்கு முந்தைய நாளில், யார் தன்னுடைய பெட்டியை இருப்பூர்தி நிலையத்திலிருந்து தூக்கிக்கொண்டு வந்தாரோ, அவர் வீற்றிருப்பதைக் கண்டு அதிர்ந்து போய், “என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். தெரியாமல் இப்படிச் செய்துவிட்டேன்” என்றார். அதற்கு தாமஸ் ஹோவர்ட், “இனிமேல் நீங்கள் இந்த அரண்மனையில் பணிசெய்யப்போகிறீர்கள். இந்த ஒருமுறை உங்கட்கு நான்  பணிவிடை செய்ய ஒரு வாய்ப்பினைத் தந்தீர்களே. அதற்கு நன்றி” என்றார்.

 

பெரிய அரசராக இருந்தாலும், அதையெல்லாம் ஒரு பொருட்டாக நினைக்காமல், சாதாரண ஒருவர்க்கு சேவை செய்த நோர்போக் அரசர் நமது கவனத்திற்கு உரியவராக இருக்கின்றார். நற்செய்தியில் சீடர்கள் நடுவில் யார் பெரியவர் என்ற விவாதம் வருகின்றபோது, இயேசு அவர்களிடம், “உங்கள் எல்லாரிலும் சிறியவரே பெரியவர்” என்கின்றார். இது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

 

தங்கட்குள் யார் பெரியவர் என்ற விவாதம்

 

இயேசு தன் பாடுகளைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கையில், அவருடைய சீடர்களோ தங்கட்குள் யார் பெரியவர் விவாதம் செய்துகொண்டிருக்கின்றார்கள். சீடர்கள் இவ்வாறு விவாதிப்பதற்குக் காரணம், இதற்கு முந்தைய பகுதிகளில் இயேசு தன்னோடு பேதுரு, யோவான், யாக்கோபு ஆகிய மூன்றுபேரை மலைக்குக் கூட்டிக்கொண்டு செல்வார். இதன்பொருட்டு மற்ற ஒன்பது பேர், அந்த மூன்றுபேர் மேல் பொறாமை கொண்டு இப்படியொரு விவாதத்தில் ஈடுபடுவார்கள். அவர்களுடைய விவாதத்திற்கு இன்னொரு காரணமும் இருக்கின்றது. அது என்னவென்றால், இயேசு பேதுருவை அழைத்து, கோவில் வரி செலுத்த அனுப்பி வைத்தார் (மத் 17: 24-27). இதனாலும் அவர்கள் ஒருவர்மீது ஒருவர் பொறாமை கொண்டு தங்கட்குள் யார் பெரியவர் என்ற விவாதத்தில் ஈடுபட்டார்கள்.

 

ஒருவர் மற்றவரிடம் அன்பு இல்லை

 

சீடர்கள் இப்படி தங்கட்குள் யார் பெரியவர் என்ற விவாதித்த்தற்கு மிக முக்கியமான காரணம், அவர்களிடம் ஒருவர் மற்றவர்மீது அன்பு இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஒருவேளை அவர்களிடம் உண்மையான அன்பு இருந்திருந்தால், அவர்கள் இப்படி விவாதித்திருக்க மாட்டார்கள். சீடர்கள் இப்படி விவாதிக்கத் தொடங்கியதும், இயேசு அவர்கள் நடுவில் ஒரு குழந்தையை நிறுத்தி அவர்கட்குப் பாடம் புகட்டுகின்றார். மட்டுமல்லாமல், பெரியவராக இருக்க விரும்புகிறவர் சிறியவராகவும் தொண்டராகவும் இருக்கட்டும் என்கின்றார். நாம்கூடப்  பலநேரங்களில் இயேசுவின் சீடர்களைப் போன்று யார் பெரியவர் என்று விவாதித்துக் கொண்டும் சண்டை போட்டுக்கொண்டும் இருக்கின்றோம். இத்தகைய நிலை நம்மிடமிருந்து மாறவேண்டும்.

 

ஒருவருடைய பெருமை அவர் வகித்திருக்கும் பதவியில் இல்லை, அவர் அந்தப் பதவியைக் கொண்டு எப்படி பணிவிடை செய்கின்றார் என்பதில் அடக்கியிருக்கின்றது என்பதை உணர்ந்துகொண்டால் நாம், யார் பெரியவர் என்று விவாதித்துக் கொண்டிருக்கமாட்டோம்.

 

சிந்தனை

 

‘அடக்கம் அமரருள் உய்க்கும்’ என்ற 121 குறளுக்கு விளக்கமளிக்கின்றபோது கலைஞர் கருணாநிதி, “அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும். அடங்காமை வாழ்வையே இருளாக்கிவிடும்” என்பார். நாம் அடக்கத்தோடும் பணிவோடும் வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


-         மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.   

செக்கரியா 8: 1-8

 

“அன்பு வெறியால் நான் கனன்று கொண்டிருக்கின்றேன்”

 

நிகழ்வு

 

கல்லூரி ஒன்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்த ஒருவர், ஒருநாள் தன்னுடைய வகுப்பு மாணவர்களைப் பார்த்து, “அன்பார்ந்த மாணவச் செல்வங்களே! இன்று நான் உங்கட்கு வித்தியாசமான ஒரு வீட்டுப் பாடத்தைக் கொடுக்கப்போறேன்.” என்றார். பேராசிரியர் இவ்வாறு சொன்னதைக் கேட்டு மாணவர்கள், ‘என்ன வீட்டுப் பாடத்தைக் கொடுக்கப்போகிறாரோ?” என்று அவரே வியப்பாகப் பார்த்தார்கள்.

 

அப்பொழுது அவர் அவரிடம், “ஒவ்வொரு மாணவரும் தனக்கு நன்கு அறிமுகமான ஒருவரிடம், ‘நான் உங்களை மிகவும் அன்புசெய்கிறேன்’ என்ற வார்த்தைகளைச் சொல்லவேண்டும். ஆனால், அவர் அந்த மனிதரிடம் அதற்கு முன்பாக அந்த வார்த்தைகளைச் சொல்லியிருக்கக்கூடாது. மேலும் ‘நான் உங்களை மிகவும் அன்பு செய்கிறேன்’ என்ற வார்த்தைகளைச் சொன்னபிறகு எதிரே இருப்பவர் அதற்கு எப்படி எதிர்வினை ஆற்றினார்  என்பதையும் சொல்லவேண்டும். இதை நீங்கள் ஒருவார காலம் அவகாசம் எடுத்துக்கொண்டு செய்யுங்கள். ஒருவாரத்திற்கு நீங்கள் செய்த அந்த வீட்டுப்பாடத்தை எல்லார்க்கும் முன்பாகச் சொல்லவேண்டும். இதை யார் சிறப்பாகச் செய்கின்றாரோ அவர்கட்கு நல்ல மதிப்பெண் கிடைக்கும்” என்றார். மாணவர்களும் அதற்குச் சரியென்று ஒத்துக்கொண்டார்கள்.

 

ஒருவாரம் கழித்து, எல்லா மாணவர்கள் தாங்கள் ‘நான் உங்களை மிகவும் அன்பு செய்கின்றேன் என்ற வார்த்தைகளைச் சொன்னபோது, எதிரே இருந்தவர்கள் அதற்கு எப்படி எதிர்வினை ஆற்றினார்கள் என்பதைப் மாணவர்கட்கு முன்பாக வரிசையாகச் சொல்லிக்கொண்டு வந்தார்கள். ஒரு மாணவரின் முறை வந்தபோது, அவர் தனக்கு நேர்ந்ததை எல்லார்க்கும் முன்பாகச் சொல்லத் தொடங்கினார்:

 

“தொடக்கத்தில் எனக்கு இந்த வீட்டுப்பாடத்தைச் செய் எனக்குப் பிடிக்கவே இல்லை. அதனால் நான் இதை வேண்டா வெறுப்பாகக் கேட்டுக்கொண்டிருந்தேன். ஆனால், நான் கல்லூரி முடிந்து வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருக்கும்போது  ‘நான் ஏன் என் தந்தையிடம் அவ்வார்த்தைகளைச் சொல்லக்கூடாது?’ என்ற சிந்தனை வந்தது. எனக்கும் என்னுடைய தந்தைக்கும் இடையே ஒரு சிறிய மனக்கசப்பு ஏற்பட்டு, இருவரும் ஐந்து ஆண்டுகளாகப் பேசிக்கொள்ளாமலே இருக்கின்றோம். அதனால்தான் நான் என்னுடைய தந்தையிடம் அவ்வார்த்தைகளைச் சொல்லலாம் என்று முடிவுசெய்தேன். அதன்படி நான் என்னுடைய தந்தையிடம் சென்று, “அப்பா! நான் உங்களை மிகவும் அன்புசெய்கிறேன்’ என்றேன்.

 

இவ்வார்த்தைகளைக் கேட்டு அவருடைய கண்கள் கலங்கின; உடனே அவர் என்னிடம், ‘நானும் உன்னோடு பேசிச் சமரசமாக வேண்டும் என்றுதான் பலமுறை நினைத்தேன். ஆனால் என்னிடம் இருந்த வறட்டுக் கெளரவம் என்னை என்னுடைய நிலையிலிருந்து இறங்கி வரமுடியாதவாறு செய்துவிட்டது. இன்றைக்கு நீயே என்னிடம் வந்து, ‘நான் உன்னை மிகவும் அன்புசெய்கிறேன்’ என்ற வார்த்தைகளைச் சொன்னதால், எனக்குக் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது” என்றார். இது நடந்து இரண்டு நாள்கள் கழித்து, என்னுடைய தந்தை மாரடைப்பினால் இறந்துபோனார். அப்பொழுது நான் என்னுடைய மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்; ‘நான் மட்டும் என்னுடைய நிலையிலிருந்து இறங்கிவந்து, எனது தந்தையிடம் அந்த வார்த்தைகளைச் சொல்லி இருக்காமல் இருந்தால், ஏதோவொரு பெரிய பாரத்தோடுதான் இறந்திருப்பார். ஆனால் இப்பொழுது அவர் நிம்மதியாக இறந்திருக்கின்றார்.’ உங்களுடைய தயவினால் நான் என்னுடைய தந்தையோடு நல்லுறவு ஏற்படுத்திக் கொண்டேன். மிக்க நன்றி.”

 

அந்த மாணவர் தனக்கு தேர்ந்த இந்த அனுபவத்தைச் சொல்லிமுடித்ததும், வகுப்பறையில் இருந்த எல்லாரும் அவர்க்கு எழுந்து நின்று பாராட்டுத் தெரிவித்தார்கள்.

 

இந்த நிகழ்வில் வரும் மகன் எப்படி தன்னுடைய நிலையிலிருந்து இறங்கிவந்து தன் தந்தையோடு ஒன்றித்தானோ அதுபோன்று இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள், மக்களின் குற்றங்களை மன்னித்து, அவர்களோடு தங்குவதாக வாக்குறுதி தருகின்றார். அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

 

தன் அன்பினால் மக்களின் பாவங்களை மன்னித்த இறைவன்

 

          ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்கட்கு எவ்வளோ நன்மைகளைச் செய்தும், அவர்கள் அவர்க்கு நம்பிக்கைக்குரியவர்களாக இல்லை. மாறாக, அவர்கள் பிற தெய்வத்தை வழிபட்டு வந்தார்கள். இதன்பொருட்டுத்தான் அவர்கள் நாடுகடத்தப்பட்டார்கள். ஆனாலும் கடவுள் தன்னுடைய பேரன்பின் மிகுதியால் பாவம் செய்த அவர்களுடைய குற்றங்களை மன்னித்து, அவர்களை அவர்களுடைய  நாட்டிற்குக் கூட்டிக் கொண்டு வருகின்றார். ஆண்டவர், இஸ்ரயேல் மக்கள்மீது கொண்ட பேரன்பின் மிகுதியால், அவர்களுடைய குற்றங்களை மன்னித்தது மட்டும் இல்லாமல், இன்னொன்றையும் செய்கின்றார். அது குறித்துத் தொடர்ந்து சிந்திப்போம்.

 

எருசலேம் நடுவில் குடியிருக்கப்போவதாகச் சொல்லும் இறைவன்

 

          ‘இஸ்ரயேல் மக்கள்மீது ஆண்டவர் கொண்ட அன்பு கனன்று எரிந்தது. அதனால் அவர் அவர்களுடைய குற்றங்களை எல்லாம் மன்னித்தார். அதைவிடவும் அவர் அவர்கள் நடுவில் குடியிருக்கப் போவதாகப் போவதாக வாக்குறுதி தருகின்றார். இதை வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், ஆண்டவர் அவர்களுக்குக் கடவுளாகவும் அவர்கள் தனக்கு மக்களாகவும் இருப்பார்கள் என்ற வாக்குறுதியைத் தருகின்றார்.

 

இஸ்ரயேல் மக்கள் கடவுளின் கட்டளையை மீறி நடந்ததால், அவருடைய மக்களாக இருக்கும் தகுதியை இழந்தார்கள். ஆனாலும் கடவுள் தன்னுடைய பேரன்பினால், அவர்களுடைய பாவங்களையெல்லாம் மன்னித்து, அவர்களைத் தன்னுடைய அன்பு மக்களாக ஏற்றுக்கொள்கிறார். இதுதான் கடவுளின் பேரன்பாக, மன்னிக்கும் அன்பாக இருக்கின்றது. ஆகையால், நம்மீது இவ்வளவு அன்பு கொண்டிருக்கும் கடவுளிடம் திரும்பி வருவதே, அவருடைய மக்களாகிய நாம் ஒவ்வொருவரும் செய்யவேண்டியதாக இருக்கின்றது.

 

சிந்தனை

 

          ‘அவர் நம் பாவங்கட்கேற்ப நம்மை நடத்துபவதில்லை; நம் குற்றங்கட்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை’ (108: 10) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நம்மீது பேரன்பு கொண்டு நம்முடைய குற்றங்களை எல்லாம் மன்னிக்கும் இறைவனோடு ஒன்றித்து வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

-          மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

Free Blog Widget
Stats Counter
hit counter