maraikal
MUM
"
வாசகம்

இளையோர்

 

                              பொதுக்காலம் 26 ம் வாரம் - 1ம் ஆண்டு

முதல் வாசகம்
கிடையிலிருந்து வரும் ஆட்டுக்குட்டிகளையும் மந்தையிலிருந்து வரும் கொழுத்த கன்றுகளையும் உண்போருக்கு ஐயோ கேடு!

இறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து வாசகம் 6: 1, 3-7

எல்லாம் வல்ல இறைவன் கூறுவது: " சீயோன் குன்றின்மீது இன்பத்தில் திளைத்திருப்போரே! சமாரியா மலைமேல் கவலையற்றிருப்போரே! மக்களினங்களுள் சிறந்த இனத்தின் உயர்குடி மக்களே! இஸ்ரயேலின் மக்கள் தேடிவருமளவுக்குப் பெருமை வாய்ந்தவர்களே! உங்களுக்கு ஐயோ கேடு!

தீய நாளை இன்னும் தள்ளி வைப்பதாக நீங்கள் நினைக்கின்றீர்கள்; ஆனால் வன்முறையின் ஆட்சியை அருகில் கொண்டு வருகின்றீர்கள். தந்தத்தாலான கட்டிலில் பஞ்சணை மீது சாய்ந்து கிடப்போருக்கும், கிடையிலிருந்து வரும் ஆட்டுக்குட்டிகளையும் மந்தையிலிருந்து வரும் கொழுத்த கன்றுகளையும் உண்போருக்கும் ஐயோ கேடு!

அவர்கள் வீணையொலி எழுப்பி அலறித் தீர்க்கின்றார்கள், தாவீதைப் போல புதிய இசைக் கருவிகளைக் கண்டுபிடிக்கிறார்கள். கோப்பைகளில் திராட்சை இரசம் குடிக்கின்றார்கள்; உயர்ந்த நறுமண எண்ணெயைத் தடவிக் கொள்கின்றார்கள். ஆகையால் அவர்கள்தான் முதலில் நாடு கடத்தப்படுவார்கள்; அவர்களது இன்பக் களிப்பும் இல்லாதொழியும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

 

பதிலுரைப் பாடல்

திபா 146: 7. 8-9a. 9bc-10 (பல்லவி: 1a) Mp3

பல்லவி: என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு. அல்லது: அல்லேலூயா.

7 ஆண்டவர் ஒடுக்கப்பட்டடோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலைஅளிக்கின்றார். பல்லவி

8 ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார். 9ய ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார். பல்லவி

9bஉ அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்; ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்துவிடுகின்றார். 10 சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். பல்லவி

 

இரண்டாம் வாசகம்

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தோன்றும் வரையில் கட்டளையை அப்பழுக்கின்றிக் கடைப்பிடித்து வா.

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 6: 11-16

கடவுளின் மனிதனாகிய நீ, பொருள் ஆசையிலிருந்து தப்பி ஓடு. நீதி, இறைப் பற்று, நம்பிக்கை, மன உறுதி, பணிவு ஆகியவற்றை நாடித் தேடு. விசுவாச வாழ்வு என்னும் போராட்டத்தில் ஈடுபடு. நிலை வாழ்வைப் பற்றிக்கொள். அதற்காகவே அழைக்கப்பட்டிருக்கிறாய். அதனை முன்னிட்டே பல சாட்சிகள் முன்னிலையில் விசுவாசத்தைச் சிறப்பாக அறிக்கையிட்டாய்.

அனைத்துக்கும் வாழ்வளிக்கும் கடவுளின் முன்னிலையிலும், பொந்தியு பிலாத்துவின் முன் விசுவாசத்தைச் சிறப்பாக அறிக்கையிட்ட இயேசு கிறிஸ்துவின் முன்னிலையிலும் உனக்குக் கட்டளையிடுகிறேன்.

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தோன்றும் வரையில் குறைச் சொல்லுக்கு இடந்தராமல் இந்தக் கட்டளையை அப்பழுக்கின்றிக் கடைப்பிடித்து வா. உரிய காலத்தில் பேரின்பக் கடவுள் அவரைத் தோன்றச் செய்வார்.

கடவுள் ஒருவரே வேந்தர், அரசருக்கெல்லாம் அரசர், ஆண்டவருக்கெல்லாம் ஆண்டவர். அவர் ஒருவரே சாவை அறியாதவர்; அணுக முடியாத ஒளியில் வாழ்பவர்; அவரைக் கண்டவர் எவருமிலர்; காணவும் முடியாது. அவருக்கே என்றென்றும் மாண்பும் ஆற்றலும் உரித்தாகுக! ஆமென்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

2 கொரி 8: 9

அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து செல்வராயிருந்தும் அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு உங்களுக்காக ஏழையானார். அல்லேலூயா.

 

நற்செய்தி வாசகம்


நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 19-31


அக்காலத்தில் இயேசு பரிசேயரிடம் கூறியது: " செல்வர் ஒருவர் இருந்தார். அவர் விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார்.

இலாசர் என்னும் பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார். அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார். அவர் செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தம் பசியாற்ற விரும்பினார். நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும்.

அந்த ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள்.

செல்வரும் இறந்தார். அவர் அடக்கம் செய்யப்பட்டார். அவர் பாதாளத்தில் வதைக்கப்பட்டபோது அண்ணாந்து பார்த்துத் தொலையில் ஆபிரகாமையும் அவரது மடியில் இலாசரையும் கண்டார்.

அவர், `தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும்; இலாசர் தமது விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச் செய்ய அவரை அனுப்பும். ஏனெனில் இந்தத் தீப்பிழம்பில் நான் மிகுந்த வேதனைப் படுகிறேன்' என்று உரக்கக் கூறினார்.

அதற்கு ஆபிரகாம், `மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய்; அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக்கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய். அன்றியும் எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பெரும் பிளவு ஒன்று உள்ளது. ஆகையால் இங்கிருந்து ஒருவர் உங்களிடம் வர விரும்பினாலும் கடந்து வர இயலாது. அங்கிருந்து நீங்கள் எங்களிடம் கடந்து வரவும் இயலாது' என்றார்.

அவர், `அப்படியானால் தந்தையே, அவரை என் தந்தை வீட்டுக்கு அனுப்புமாறு உம்மிடம் வேண்டுகிறேன். எனக்கு ஐந்து சகோதரர்கள் உண்டு. அவர்களும் வேதனை மிகுந்த இந்த இடத்திற்கு வராதவாறு அவர் அவர்களை எச்சரிக்கலாமே' என்றார்.

அதற்கு ஆபிரகாம், `மோசேயும் இறைவாக்கினர்களும் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்குச் செவிசாய்க்கட்டும்' என்றார். அவர், `அப்படியல்ல, தந்தை ஆபிரகாமே, இறந்த ஒருவர் அவர்களிடம் போனால் அவர்கள் மனம் மாறுவார்கள்' என்றார். ஆபிரகாம், `அவர்கள் மோசேக்கும் இறைவாக்கினருக்கும் செவிசாய்க்காவிட்டால், இறந்த ஒருவர் உயிர்த்தெழுந்து அவர்களிடம் போனாலும் நம்பமாட்டார்கள்'' என்றார்.



இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
 

சிந்தனை


I           ஆமோஸ் 6: 1, 3-7

II          1 திமொத்தேயு 6: 11-16

III         லூக்கா 16: 19-31

 

பணத்தில் அல்ல, பரமனில் நம்பிக்கை வைப்போம்!

 

நிகழ்வு

 

          வட அமெரிக்காவில் ஓடுகின்ற இரண்டாவது மிகப்பெரிய ஆறு மிசிசிப்பி (Mississippi). ஒருமுறை இந்த ஆற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சொகுசுக் கப்பல் ஒன்று பயணமானது. கப்பலில் பயணம் செய்தவர்கள் யாவரும் ஆடிப்படி மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள்.            நன்றாகச் சென்றுகொண்டிருந்த கப்பல், ஆற்றில் கண்ணுக்குத் தெரியாமல் இருந்த ஒரு பனிப்பாறையின்மீது திடீரென்று மோதி உடைந்தது. இதனால் கப்பலில் பயணம் செய்த பயணிகள் யாவரும் செய்வதறியாமல் இங்கும் அங்கும்  அலறியடித்துக்கொண்டு ஓடினார்கள். அப்பொழுது கப்பல் தளபதியிடமிருந்து ஓர் அறிவிப்பு வந்தது: “எதிர்பாராத விதமாக பனிப்பாறையில் கப்பல் மோதியதால், உடைந்துவிட்டது; கப்பலில் உயிர்க்காக்கும் படகுகள் (Life Boats) மிகவும் குறைவாகவே  உள்ளன. ஆகையால், பெண்கள் அந்த உயிர்க்காக்கும் படகுகளில் ஏறிக்கொள்ளுங்கள்; ஆண்கள் ஆற்றில் குதித்து நீந்திச்  சென்று தப்பித்துக்கொள்ளுங்கள்.”

 

இப்படியோர் அறிவிப்பு வந்ததைத் தொடர்ந்து, பெண்கள் உயிர்க்காக்கும் படகில் ஏறி தப்பிச் சென்றார்கள். ஆண்களோ ஆற்றில் குதித்து, கரையை நோக்கி நீந்திச் சென்றார்கள். இதற்கு நடுவில் இந்தக் கப்பலில் பயணம் செய்த ஒருவன் கப்பலின் மேல்தளத்திற்கு வந்து, அங்கிருந்த விலையுர்ந்த ஆபரணங்கள், பணம் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்து, கையில் கிடைத்த ஆபரணங்களையும் பணத்தையும் அள்ளி. தான் வைத்திருந்த பையில் போட்டுக்கொண்டு, அதைத் தன்னுடைய இடுப்போடு கட்டிக்கொண்டு ஆற்றில் குதித்தான்.

 

மிசிசிப்பி ஆற்றில் சென்றுகொண்டிருந்த கப்பல் பனிப்பாறையில் மோதி உடைந்துபோன செய்தியைக் கேட்டு, மீட்குக் குழுவினர் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள், யாராவது ஆற்றில் மூழ்கி இறந்துபோயிருக்கிறார்களா? என்று இரவு முழுவதும் தேடினார்கள். முடிவில் ஒரே ஒருவன் மட்டும் ஆற்றில் மூழ்கி இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவன் மட்டும் ஏன் ஆற்றில் மூழ்கி இறந்துபோனான் என்று மீட்புக் குழுவினர் அவனைச் சோதித்துப் பார்த்தபோது, அவனுடைய இடுப்பில் ஒரு கனமான பை கட்டப்பட்டிருப்பதையும் அதனுள் விலையுயர்ந்த ஆபரணங்களும் பணமும் இருப்பதைக் கண்டு அதிர்ந்துபோனார்கள். ‘உயிருக்கு ஆபத்து வந்த நேரத்தில் உயிரைக் காத்துக்கொள்ள நினைக்காமல், இப்படிப் பணத்தைக் காத்துக்கொள்ள நினைத்திருக்கிறானே... இவன் சரியான முட்டாள்!’ என்று சொல்லி வேதனைப்பட்டார்கள்.

 

இந்த நிகழ்வில் வருகின்ற மனிதனைப் போன்று, இன்றுக்குப் பலர் பணம்தான் பெரிது, அதுகொடுக்கும் இன்பம்தான் நிலையானது என்று நினைத்து அதைக் கட்டியழுது (!) கொண்டிருக்கின்றார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இன்றைய நாளில் நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தி வாசகம், ஒருவர் பணத்தின்மீது வைக்கும் நம்பிக்கை அல்ல, இறைவன்மீது வைக்கும் நம்பிக்கையே அவர்க்கு உண்மையான மகிழ்ச்சியையும் விண்ணகத்தில் நிலையான இடத்தையும் தரும் என்ற செய்தியைத் தருகின்றது. எனவே, நாம் அதைக் குறித்து சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

 

பணத்தின் மீது பற்றுகொண்டிருந்த செல்வர்

 

          ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, எவரும் கடவுளுக்கும் செல்வத்திற்கும் பணிவிடை செய்ய முடியாது’ (லூக் 16: 13) என்று போதித்தார். அவர் இவ்வாறு போதித்ததைக் கேட்டுக்கொண்டிருந்த பரிசேயக்கூட்டமோ அவரை ஏளனம் செய்தது. அதற்குக் காரணமும் இருந்தது. பரிசேயக்கூட்டம் மக்கள் பார்வைக்கு நல்லவர் போன்று இருந்து, பணத்தின்மீது அளவுகடந்த பற்றுக்கொண்டிருந்தது. அதனால்தான் இயேசு அவ்வாறு போதித்ததைக் கேட்டு அவரை ஏளனம் செய்தது. அப்பொழுதுதான் இயேசு பணத்தின்மீது பற்றுக்கொண்டு அழிவினைச் சந்தித்த செல்வர், ஆண்டவர்மீது பற்றுக்கொண்டு இறைவனின் திருவடிகளை அடைந்த ஏழை இலாசர் உவமையை அவர்கட்குச்  சொல்கின்றார்.

 

உவமையில் வருகின்ற செல்வரோ விலையுயர்ந்த செந்நிற ஆடை அணிந்து நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார். இந்த சொற்றொடரில் வருகின்ற ஒவ்வொரு சொல்லும் நம்முடைய கவனத்திற்கு உரியவை. செல்வர் விலையுயர்ந்த ஆடை அணிந்து, நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார் என்றால், அவர் எத்துணை சொகுசான வாழ்க்கை வாழ்ந்திருப்பார், வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், எந்தளவுக்கு அவர் ஏழைகளைச் சுரண்டிக் கொழுத்திருப்பார் (எசா 3:15; ஆமோ 2:6, 4:1, 8: 4-6) என்பதை நாம் கற்பனை செய்துபார்த்துக் கொள்ளலாம்.

 

அடுத்ததாக, உவமையில் வருகின்ற அந்த செல்வர், யூபிலி ஆண்டில் (லேவி 25) நிலத்தின் உரிமையாளர்க்கு (ஒருவேளை இலாசர் நிலத்தின் உரிமையாளராக இருந்திருந்தால்!) அந்த நிலத்தை செல்வர் அபகரித்திருந்தால், அதை அவர் ஏழை இலாசருக்குத் திரும்பிக் கொடுத்திருக்கவேண்டும். ஒருவேளை ஏழை இலாசர் செல்வரிடம் கடன்படிருந்தால் (?) அவருடைய கடனை செல்வர் தள்ளுபடி செய்திருக்கவேண்டும். இதைவிட மிக முக்கியமான அம்சம், செல்வர் ஏழை இலாசர்க்குச் செய்யவேண்டிய உதவிகளை (நீமொ 14: 21. 19:17) செய்திருக்கவேண்டும். இவற்றில் அவர் எதையுமே ஏழை இலாசர்க்கு செய்யாமல், தன்னுடைய செல்வத்தின்மீது மட்டும் பற்று வைத்திருந்தார் என்பதைத்தான் உவமை நமக்கு எடுத்துச் சொல்கின்றது.

 

ஆண்டவர்மீது பற்றுக்கொண்டிருந்த ஏழை இலாசர்

 

          செல்வர் தான் வைத்திருந்த செல்வத்தின்மீது பற்று வைத்து வாழ்ந்ததால், அது அவருடைய கண்ணை மறைத்து, தன் வீட்டுக்கு முன்னம் இருந்த இலாசரைக் காணவிடாமல் செய்தபோது, இலாசரோ ‘ஆண்டவரே என் உதவி’ என்ற தன்னுடைய பெயர்க்கு ஏற்றாற்போல்போல் தன்னுடைய வறிய, நோய்வாய்ப்பட்ட நிலையிலும் ஆண்டவர்மீது பற்றுக்கொண்டு அல்லது நம்பிக்கை கொண்டு வாழ்ந்து வந்தார். இலாசர் தன்னுடைய வறியநிலைக்காக தன்னைப் படைத்தவர்க்கு எதிராக எங்கேயும் முறையிட்டதாகக்கூட நாம் வாசிக்க முடியாது. அவர், ஆண்டவரே என் நம்பிக்கை, ஆண்டவரே என் அடைக்கலம் என்ற நம்பிக்கையோடு வாழ்ந்து வந்தார். அதனால் அவருக்கு என்ன கைம்மாறு கிடைத்தது?. தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.

 

பணத்தின்மீது அல்ல, பரமன் பற்றுக்கொண்டவர்க்கே விண்ணகத்தில் இடம்

 

          மண்ணகத்தில் வாழ்ந்தபோது செல்வர் பணத்தின்மீது பற்றுவைத்து, சொகுசான வாழ்க்கை வாழ்ந்துவந்ததையும், இலாசரோ வறியநிலையிலும் ஆண்டவர்மீது பற்று வைத்து வாழ்ந்ததையும் பார்த்தோம். ஆனால், அவர்கள் இருவரும் இறந்தபிறகு இலாசர் ஆபிரகாமின் மடியிலும், செல்வர் பாதாளத்தில் வதைபடுவதையும் வாசிக்கின்றோம். இதற்குக் காரணம் ஒன்றே ஒன்றுதான். அது வேறொன்றுமில்லை. அதுதான் ஆண்டவர்மீது கொள்ளும் நம்பிக்கை. செல்வர் செல்வத்தின் மீது பற்று வைத்து சோதனை என்னும் கண்ணியில் சிக்கி அழிந்துபோனார் (1 திமொ 6: 9) ஆனால் இலாசர் ஆண்டவர்மீது பற்று வைத்து விண்ணகத்தில் பேரின்பத்தைக் கண்டார். இந்த இருவரில் நாம் யார்? செல்வரா? ஏழை இலாசரா? சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்றாக இருக்கின்றது.

 

இன்றைக்குப் பலரும் செல்வத்தின்மீது பற்று வைத்து, அதுதரும் போலியான சுகத்தில் மடிந்துகொண்டிருக்கின்றார்கள். உண்மையில் ஒருவர் ஆண்டவர்மீது வைக்கும் நம்பிக்கைதான் அவர்க்கு எல்லாவிதமான நலனையும் ஆசியையும் தரும். ஆபிரகாம் தனக்கு வளமும் இருந்தும், ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்ந்து வந்தார (தொநூ 15: 6). அதனால் அவர் ஆண்டவர்க்கு உகந்தவர் ஆனார். நாமும் அவரைப் போன்று ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்ந்து, அவர் தரும் ஆசியைப் பெறுவோம்.

 

சிந்தனை

 

          ‘மாந்தர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவர்க்குக் கிடைக்கும் பயன் என்ன?” (மத் 16: 26) என்று கேட்பார் இயேசு. ஆகையால், நாம் செல்வத்தின் மீது பற்று வைத்து வாழ்வைத் தொலைக்காமல், ஆண்டவர்மீது பற்று வைத்து வாழ்வைப் பெறுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

 

 


-         மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.   


-          மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

Free Blog Widget
Stats Counter
hit counter