maraikal
MUM
"
வாசகம்

 

                              பொதுக்காலம் 25 ம் வாரம் - 1ம் ஆண்டு

முதல் வாசகம்
என் இல்லத்தை மீண்டும் கட்டியெழுப்புங்கள்; அது எனக்கு உகந்ததாய் இருக்கும்; அங்கே நான் மாட்சியுடன் விளங்குவேன்.

இறைவாக்கினர் ஆகாய் நூலிலிருந்து வாசகம் 1: 1-8

தாரியு அரசனது இரண்டாம் ஆட்சியாண்டின் ஆறாம் மாதம் முதல் நாளன்று இறைவாக்கினர் ஆகாய் வாயிலாக ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அது யூதாவின் ஆளுநரும் செயல்தியேலின் மகனுமான செருபாபேலுக்கும் தலைமைக் குருவும் யோசதாக்கின் மகனுமாகிய யோசுவாவுக்கும் அருளப்பட்ட செய்தி: " படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: ஆண்டவரது இல்லத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்குரிய காலம் இன்னும் வரவில்லை என்று இந்த மக்கள் சொல்கிறார்கள். அப்பொழுது இறைவாக்கினர் ஆகாய் வாயிலாக ஆண்டவரது வாக்கு அருளப்பட்டது. இந்தக் கோவில் பாழடைந்து கிடக்கும் இந்நேரத்தில், நீங்கள் மட்டும் மாட மாளிகைகளில் குடியிருக்கலாமா?

ஆதலால், இப்பொழுது படைகளின் ஆண்டவர் கூறுவதைக் கேளுங்கள்: `உங்களுக்கு நிகழ்ந்திருப்பதை நினைத்துப் பாருங்கள். நீங்கள் விதைத்தது மிகுதி. அறுத்ததோ குறைவு. நீங்கள் உண்கிறீர்கள்; ஆனால் உங்கள் வயிறு நிரம்புவதில்லை. நீங்கள் குடிக்கிறீர்கள்; ஆனால் நீங்கள் நிறைவு அடைவதில்லை. ஆடை அணிகிறீர்கள்; ஆனால் உங்களுள் எவருக்கும் குளிர் நீங்கவில்லை. வேலையாள் தான் கூலியாக வாங்கிய பணத்தைப் பொத்தலான பையில் போடுகிறான். உங்களுக்கு நேர்ந்துள்ளதை நினைத்துப் பாருங்கள்' என்று சொல்கிறார் படைகளின் ஆண்டவர்.

`எனவே, மலைக்குச் சென்று மரம் கொண்டு வாருங்கள்; என் இல்லத்தை மீண்டும் கட்டியெழுப்புங்கள்; அது எனக்கு உகந்ததாய் இருக்கும்; அங்கே நான் மாட்சியுடன் விளங்குவேன்' என்று சொல்கிறார் ஆண்டவர்.''

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 149: 1-2. 3-4. 5-6a,9b (பல்லவி: 4a) Mp3

பல்லவி: ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார். அல்லது: அல்லேலூயா.

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடலைப் பாடுங்கள்; அவருடைய அன்பர் சபையில் அவரது புகழைப் பாடுங்கள். 2 இஸ்ரயேல் தன்னை உண்டாக்கினவரைக் குறித்து மகிழ்ச்சி கொள்வதாக! சீயோனின் மக்கள் தம் அரசரை முன்னிட்டுக் களிகூர்வார்களாக! பல்லவி

3 நடனம் செய்து அவரது பெயரைப் போற்றுவார்களாக; மத்தளம் கொட்டி, யாழிசைத்து அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக! 4 ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்; தாழ்நிலையிலுள்ள அவர்களுக்கு வெற்றியளித்து மேன்மைப் படுத்துவார். பல்லவி

5 அவருடைய அன்பர் மேன்மையடைந்து களிகூர்வராக! மெத்தைகளில் சாய்ந்து மகிழ்ந்து கொண்டாடுவராக! 6a அவர்களின் வாய் இறைவனை ஏத்திப் புகழட்டும்; 9b இத்தகைய மேன்மை ஆண்டவர்தம் அன்பர் அனைவருக்கும் உரித்தானது. பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 14: 6

அல்லேலூயா, அல்லேலூயா! வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

யோவானின் தலையை நான் வெட்டச் செய்தேனே! இவர் யாரோ?

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 7-9

அக்காலத்தில் நிகழ்ந்தவற்றை எல்லாம் குறுநில மன்னன் ஏரோது கேள்வியுற்று மனம் குழம்பினான். ஏனெனில் சிலர், " இறந்த யோவான் உயிருடன் எழுப்பப்பட்டார்'' என்றனர்.

வேறு சிலர், " எலியா தோன்றியிருக்கிறார்'' என்றனர். மற்றும் சிலர், " முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார்'' என்றனர்.

ஏரோது, " யோவானின் தலையை நான் வெட்டச் செய்தேனே! இவர் யாரோ? இவரைப் பற்றி இவ்வாறெல்லாம் கேள்விப்படுகிறேனே!'' என்று சொல்லி இயேசுவைக் காண வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

 

சிந்தனை

லூக்கா 9: 7-9

மனசாட்சியை அடகு வைத்து வாழ்ந்தவன்


நிகழ்வு

          சில ஆண்டுகட்கு முன்பு, அமெரிக்காவில் உள்ள வருவாய்த்துறை அமைச்சகத்திற்கு ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது:

“நான் சிகாக்கோவில் வசித்து வருகிறேன். ஒவ்வொரு ஆண்டும் வருமான வரியைச் சரியாகக் கட்டிவிடும் நான், இந்தாண்டு 175 டாலர் குறைவாகக் கட்டிவிட்டேன். அதற்காக என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நான் கட்டத் தவறிய அந்த 175 டாலர்கான காசோலையையும் இந்தக் கடிதத்துடன் இணைத்துள்ளேன், ஏற்றுக்கொள்ளுங்கள். பின்குறிப்பு: ஒருவேளை நான் இன்னும் ஏதாவது கட்டவேண்டியிருந்தால், அதனை உடனே கட்டிவிடுகிறேன். இல்லையென்றால் என்னுடைய மனசாட்சி என்னைக் கொன்றுவிடும்.”

இக்கடிதத்தை வாசித்ததும் சம்பந்தப்பட்ட அதிகாரி, ‘மனசாட்சிக்குப் பயந்து இன்றைக்கும் இப்படி மனிதர்கள் இருக்கிறார்களா?’ என்று வியந்து நின்றார்.

‘மனிதனின் மனசாட்சி, இறைவனின் குரல்’ என்பார் பைரன் என்ற எழுத்தாளர். இறைவனின் குரலாக இருக்கும் மனசாட்சிக்கு அஞ்சி, அதன்படி செயல்பட்ட அந்த அமெரிக்கர் நமது பாராட்டிற்கு உரியவராக இருக்கின்றார். ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக மனசாட்சிக்குச் செவிகொடுக்காமல், அதை அடகு வைத்து வாழ்ந்த குறுநில மன்னன் ஏரோதைக் குறித்து இன்றைய நற்செய்தியில் வாசிக்கின்றோம். ஏரோது செய்த குற்றமென்ன? அந்தக் குற்றத்திலிருந்து அவன் வெளியே வந்தானா? என்பவை பற்றிச் சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசுவைக் குறித்துக் கேள்விப்பட்டு மனம்குழம்பிப் போன ஏரோது

          நற்செய்தியில், குறுநில மன்னன் ஏரோது நிகழ்ந்தவற்றை எல்லாம் கேள்வியுற்று மனம் குழம்பினான் என்று வாசிக்கின்றோம். அவனுடைய மனக்குழப்பத்திற்கு முக்கியமான காரணம், அவன் தலைவெட்டிக் கொன்ற திருமுழுக்கு யோவான் உயிருடன் எழுப்பப்பட்டுவிட்டார் என்று கேள்விப்பட்டதால்தான். அதனால் அவன் இயேசுவைக் காண வாய்ப்புத் தேடினான்.

குறுநில மன்னன் ஏரோது செய்தது மிகப்பெரிய குற்றம். ஏனெனில் அவன் தன் சகோதரனின் மனைவியோடு வாழ்ந்துவந்தான். அதைத் தவறு என்று திருமுழுக்கு யோவான்  சுட்டிக்காட்டியதால், அவரைக் கொலைசெய்தான். ‘மக்களால் வெகுவாக மதிக்கப்பட்ட, இறைவாக்கினர் எனக் கருதப்பட்ட திருமுழுக்கு யோவானைத் தான் கொலைசெய்துவிட்டோமே... அதற்குப் பிராயச்சித்தம் தேடவேண்டுமே’ என்று அவன் சிறிதளவுகூட நினைக்கவில்லை. மாறாக அவன், ‘இறந்த யோவான் உயிருடன் எழுப்பட்டார்’ என்று கேள்விப்பட்டதும் மனக்குழப்பம் அடைந்து அவரை – இயேசுவைக் காண வாய்ப்புத் தேடுகின்றான்.

ஒருவேளை ஏரோது நினைத்திருந்தால், தன்னுடைய தவறை நினைத்து மனம் வருந்தியிருக்கலாம்... இயேசுவிடம் சென்று மன்னிப்புக் கேட்டு நல்ல மனிதராய் வாழ்ந்திருக்கலாம்... ஆனால், அவன் மேலே சொன்ன எதையும் செய்யாமல், அதே தவறைத்தான் செய்துகொண்டிருந்தான். அதனால்தான் மனக்குழப்பம் அடைந்தான்.

மனசாட்சியை அணையவிடாமல் காத்துக்கொள்

          வாஷிங்டன் என்ற எழுத்தாளர் சொல்கின்ற ஒரு செய்தி, “உன் இதயத்திலுள்ள தெய்வீகச் சுடரான மனசாட்சியை அணையவிடாமல் காத்துக்கொள்.” மனசாட்சியை அணையவிடாமல் காத்துக் கொள்ளவேண்டும் என்றால், மனசாட்சியின் குரலுக்குத் தொடர்ந்து செவிமடுக்க வேண்டும். ஏரோது போன்று மனசாட்சியின் குரலுக்குச் செவிகொடுக்காமல் வாழ்பவர்களால், தெய்வீகச் சுடரான மனசாட்சி அணைந்துதான் போகும்.

குற்றத்தை உணர்வதோடு மட்டுமல்லாமல், அதை அறிக்கையிட்டு மன்னிப்பு பெறவேண்டும்

          ஒருசிலர் உண்டு, அவர்கள் தாங்கள் தவறு செய்துவிட்டோம் என்பதை உணர்ந்துவிடுவார்கள். ஆனால், அவர்கள் அதைக் குருவிடமோ, ஆண்டவரிடமோ அறிக்கையிட்டு மன்னிப்புப் பெறுவதற்கு முன்வரமாட்டார்கள். இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களில் ஒருவனும் அவரைக் காட்டிக் கொடுத்தவனுமான யூதாஸ் இப்படித்தான், தான் செய்தது மிகப்பெரிய குற்றம் என்பதை உணர்ந்தான். ஆனால், அவன் இயேசுவிடம் சென்று பாவ அறிக்கை செய்யாமல்,  தன் மனதிற்குள்ளே தான் செய்த குற்றத்தை நினைத்துப் புழுங்கியவனாய் இறுதியில் தற்கொலை செய்துகொள்கின்றான்.

பேதுருவோ இதற்கு முற்றிலும் மாறாக, தான் இயேசுவை மறுதலித்து மிகப்பெரிய பாவம் செய்துவிட்டேன் என்பதை உணர்கின்றார். உணர்ந்ததோடு மட்டுமல்லாமல், இயேசுவிடம் தன்னுடைய பாவத்தை அறிக்கையிட்டு (யோவா 21: 15-19) மன்னிப்புப் பெறுகின்றார். பின்னாளில் திருஅவையின் தலைவராக உயர்கின்றார். இதற்கெல்லாம் விதிவிலக்காக குறுநில மன்னன்  தான் செய்தது குற்றம் என்பதை உணராமலும் பாவத்தை அறிக்கையிடாமலும் இறுதிவரை மனக்குழப்பத்தோடு இருந்தான்; கொடிய சாவையும் எதிர்கொண்டான்.

ஆகையால், மனித பலவீனத்தோடு நாம் தவறு செய்ய நேர்ந்தாலும், இயேசுவின் இடத்தில் இருக்கும் குருவானவரிடம் அதை அறிக்கையிட்டு நல்லதோர் ஒப்புரவு அருளடையாளம் மேற்கொண்டு, மனஅமைதியோடு வாழ்வது நல்லது. அதைவிடுத்து, ஏரோதைப் போன்று தவறை உணராமலும் அல்லது யூதாசைப் போன்று தவறை உணர்ந்தாலும் பாவ அறிக்கை செய்யாமல் வாழ்ந்தால், இறுதியில் மன அமைதியின்றியும் தவறான முடிவினைத் தேட வேண்டியும்தான் வரும்.

சிந்தனை

          ‘அப்பா! கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்’ (லூக் 15: 21) என்று சொல்லும் இளைய மகனைப் போன்று, நாம் நமது குற்றங்களை இறைவனிடம் அறிக்கையிட்டு, மன்னிப்புப் பெறுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

-         மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.   

ஆகாய் 1: 1-6

“என் இல்லத்தை மீண்டும் கட்டியெழுப்புங்கள்”


நிகழ்வு

          ஒரு கிராமத்தில் மிகவும் பழைய கோயில் (ஆலயம்) ஒன்று இருந்தது. அந்தத் கோயிலின் சுவர்கள் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடிய நிலையில் இருந்தன; மேலே இருந்த கூரையோ மழை பெய்தால் ஒழுகக்கூடியதாக இருந்தது.

இதனால் அந்தக் கோயில் இருந்த கிராமத்திற்குப் பங்குத்தந்தையாக இருந்தவர, கோயிலைப் புதுப்பித்துக் கட்டலாம் என்று முடிவுசெய்தார். அதனால் அவர் ஒரு ஞாயிற்றுக்கிழமைத் திருப்பலியின்போது கோயிலின் நிலையைச் சொல்லி, “வருகின்ற வாரத்திலிருந்து கோயில் கட்டுமானப் பணிக்காக நிதி சேகரிக்க இருக்கின்றோம். அதன் தொடக்கமாக ஒவ்வொருவரும் அவரவர் வீட்டிலுள்ள ஏதாவது பயனுள்ள பொருளை இங்கு கொண்டுவாருங்கள். அதை நாம் ஏலத்திற்கு விட்டு, அதிலிருந்து கிடைக்கும் தொகையை வைத்து கோயில் கட்டுமானப் பணியைத் தொடங்குவோம்” என்றார். இறைமக்களும் அதற்குச் சரியென்று ஒப்புக்கொண்டார்கள்.

அடுத்தவாரம்  ஞாயிற்றுக்கிழமைத் திருப்பலிக்கு வந்தபோது ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான பொருளைக் கொண்டு வந்திருந்தார்கள். எல்லாப் பொருள்களும் ஏலத்திற்கு விடப்பட்டு, நிதி சேகரிக்கப்பட்டது. இப்படியிருக்கையில் அவ்வூரில் இருந்த சவப்பெட்டி செய்யும் ஒருவர் தான் செய்த சவப்பெட்டி ஒன்றை அங்கு கொண்டுவந்திருந்தார். அதை ஏலத்தில் எடுக்க யாரும் முன்வரவில்லை.

அப்பொழுது அந்தச் சவப்பெட்டியைக் கொண்டு வந்திருந்த மனிதர், “இதை யாரும் ஏலத்திற்கு எடுக்க முன்வராததால், பங்குத்தந்தைக்காக ஐயாயிரம் ரூபாய் கொடுத்து நானே ஏலம் எடுக்கிறேன்” என்றார். பங்குத்தந்தை இதைக் கேட்டு ஒருநிமிடம் உறைந்துபோனார். பின்னர் சுதாரித்துக்கொண்டு, “இந்தச் சவப்பெட்டியை மரியாயின் சேனைத் தலைவிக்காக  பத்தாயிரத்து நானே ஏலத்துக்கு எடுக்கிறேன்” என்றார். அவர், கோயில் உபதேசியாரைச் சொல்ல, அவர் இன்னொருவரைச் சொல்ல, இப்படியே ஒருவர் மாற்றி ஒருவர் சொல்லிக்கொண்டே சென்றார்கள். இதனால் ஏலத்தொகை கூடிக்கொண்டே போனது.

ஒருகட்டத்தில் அந்தக் கிராமத்தில் இருந்த பெரிய பணக்காரர் “இந்தச் சவப்பெட்டியை இதை ஏலத்திற்குக் கொண்டுவந்த சவப்பெட்டி செய்பவர்கு நானே ஒரு இலட்சத்திற்கு ஏலத்திற்கு எடுக்கிறேன்” என்று சொல்லிவிட்டு ஒரு இலட்ச ரூபாய்க்கான காசோலையை பங்குத்தந்தையிடம் கொடுத்தார். இதனால் பங்குத்தந்தை உட்பட அங்கிருந்த எல்லாரும் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். சவப்பெட்டியை ஏலத்திற்குக் கொண்டுவந்தவரோ ‘தன்னால் ஒரு இலட்ச ரூபாய் கோயில் திருப்பணிக்காகக் கிடைத்திருகிறதே’ என்ற மகிழ்ச்சியில் இறைவனுக்கு நன்றி சொல்லிவிட்டு, தான் ஏலத்திற்குக் கொண்டுவந்திருந்த சவப்பெட்டியைக் கையோடு தூக்கிக்கொண்டு வீட்டிற்குப் போனார்.

கோயில் திருப்பணிக்காக நாம் எப்படி வேண்டுமானாலும் உதவலாம் என்ற செய்தியை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. முதல் வாசகத்தில் பாபிலோனியர்களால் தரைமட்டமாக்கப்பட்ட எருசலேம் திருக்கோயில் மீண்டுமாகக் கட்டி எழுப்பப்படுவதற்கான முயற்சிகள் நடைபெறுவதைக் குறித்து வாசிக்கின்றோம். இந்த இறைவார்த்தைப் பகுதியின் வழியாக இறைவன் நமக்குத் தரும் செய்தியைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

இறைவனின் இல்லம் பாழடைந்து இருக்கையில் நாம் மாடமாளிகையில் குடியிருக்கலாமா?     

பாபிலோனிய அடிமைத்தனத்திற்குப் பிறகு நாடு திரும்பிய மக்கள், அதிலும் குறிப்பாக சாலமோன் அரசரால் கட்டி எழுப்பப்பட்ட பிரமாண்டமான திருக்கோயிலைப் பார்த்திருந்த வயதானவர்கள் ‘திருகோயில் இப்படி பாழடைந்து கிடக்கிறதே! அதனை விரைவில்  கட்டி எழுப்புவோம்’ என்று சொன்னபோது, வயதில் சிறியவர்கள் அதாவது பாபிலோனில் பிறந்தவர்கள் ‘ஆண்டவரது இல்லத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்குரிய காலம் இன்னும் வரவில்லை’ என்று பேசத் தொடங்கினார்கள். அப்பொழுதுதான் இறைவாக்கினர் ஆகாய், “இறைவனின் இல்லம் பாழடைந்து இருக்கையில் நாம் மாடமாளிகையில் குடியிருக்கலாமா?” என்ற வார்த்தைகளைச் சொல்லி, ‘வாருங்கள் ஆண்டவரின் இல்லத்தைக் கட்டி எழுப்புவோம்’ என்று மக்கட்கு அழைப்புத் தருகின்றார்.

இஸ்ரயேல் மக்கள், ‘ஆண்டவர் தங்களை பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து மீண்டு,ம் சொந்த நாட்டிற்குக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறாரே... அவருடைய இல்லம் பாழடைந்து கிடக்கையில் அதை சரிசெய்வோமே’ என்று நினைக்கவில்லை. மாறாக, பிறரு பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்தார்கள். இப்படிப்பட்ட சமயத்தில்தான் இறைவாக்கினர் ஆகாய் வழியாக அவர்கட்கு ஆண்டவர்க்கான இல்லம் கட்டி எழுப்பப்படுவதற்கான அழைப்புத் தரப்படுகின்றது.

ஆண்டவர்க்கு இல்லம் கட்டி எழுப்பிய மக்கள்

          இறைவாக்கினர் ஆகாயிடமிருந்து இப்படியோர் அழைப்பு வந்ததும் மக்கள் ஆண்டவர்க்கான இல்லம் கட்டி எழுப்பத் தொடங்குகின்றார்கள். மக்கள், ஆண்டவர்கான இல்லம் கட்டி எழுப்பப்பட வேண்டும் என்பதற்காகத் தன்னார்வக் காணிக்கைகளையும் பொன்னையும் வெள்ளியையும் இன்னபிற பொருள்களையும் தந்து உதவுகிறார்கள்.

இங்கு ஒரு முக்கியமான உண்மையை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். இறைவன், தனக்கென்று ஓர் இல்லம் கட்டி எழுப்புவதை விடவும் (திப 7: 48-50) தன் மக்கள் தன்னுடைய விருப்பத்தின் படி நடப்பதைப் பெரிதும் விரும்புகிறவர். இயேசு தந்தையின் விருப்பத்தின் படி நடந்தார் (யோவா 8: 29) ஆனால், இஸ்ரயேல் மக்கள் இறைவனின் விருப்பத்தின் படியும் நடக்கவில்லை; அவர்க்கு உகந்தவற்றை நாடவில்லை என்பது வேதனையான ஒரு விசயமாக இருக்கின்றது. ஆகையால், நாம் ஆண்டவர்க்கு இல்லம் கட்டி எழுப்ப அதிக சிரத்தை எடுக்கும் அதே வேளையில், அவருடைய விருப்பத்தின்படி நடக்கவும் முயற்சி செய்வோம்.

சிந்தனை          

          ‘கொடைகளை வழங்கும்போதெல்லாம் முகமலர்ச்சியோடு கொடு’ (சீஞா 35: 8) என்கிறது இறைவார்த்தை. நாம் ஆண்டவருடைய திருப்பணிக்கு முகமலர்ச்சியோடு கொடுப்போம். அதைவிடவும் அவருடைய விருப்பத்தின் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

-          மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

Free Blog Widget
Stats Counter
hit counter