maraikal
MUM
"
வாசகம்

 

                              பொதுக்காலம் 25 ம் வாரம் - 1ம் ஆண்டு

முதல் வாசகம்

யூதாவிலுள்ள எருசலேமுக்குச் சென்று, இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்கு ஒரு கோவிலைக் கட்டுவார்களாக!

எஸ்ரா நூலிலிருந்து வாசகம் 1: 1-6

எரேமியா வழியாக வெளிப்படுத்தப்பட்ட இறைவாக்கு நிறைவேறும்படி பாரசீக மன்னர் சைரசின் முதல் ஆண்டில் அவரது உள்ளுணர்வை ஆண்டவர் தூண்டினார். எனவே சைரசு ஆணை ஒன்றைப் பிறப்பித்து, அதைத் தம் நாடெங்கும் எழுத்து மூலம் வெளியிட்டார்.

"பாரசீக மன்னர் சைரசு கூறுவது: விண்ணகக் கடவுளான ஆண்டவர் மண்ணகத்திலுள்ள எல்லா அரசுகளையும் என்னிடம் ஒப்படைத்துள்ளார். மேலும், யூதாவிலுள்ள எருசலேமில் தமக்கென ஒரு கோவிலைக் கட்டும்படி அவர் என்னை நியமித்துள்ளார். அவருடைய எல்லா மக்களிலும் யார் யார் அவரைச் சார்ந்துள்ளனரோ - கடவுள் அவர்களோடு இருப்பாராக! - அவர்கள், யூதாவிலுள்ள எருசலேமுக்குச் சென்று, இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்கு ஒரு கோவிலைக் கட்டுவார்களாக!

எருசலேமில் இருக்கும் அவரே கடவுள்! எஞ்சியுள்ளவன் ஒவ்வொருவனும் எங்கு தங்கியிருந்தாலும் அங்கு வாழும் மக்கள், எருசலேமிலுள்ள கடவுளின் கோவிலுக்குத் தன்னார்வக் காணிக்கை அனுப்புவதோடு, அவனுக்கும் வெள்ளி, பொன், மற்றப் பொருள்கள், கால்நடைகள் ஆகியவற்றைக் கொடுத்து உதவுவார்களாக!''

அப்போது யூதா, பென்யமினுடைய குலத் தலைவர்களும், குருக்களும், லேவியரும், எருசலேமில் ஆண்டவரின் கோவிலைக் கட்டச் செல்லுமாறு ஆண்டவரால் தூண்டப்பெற்ற அனைவரும் புறப்பட்டார்கள். அவர்களைச் சூழ்ந்து வாழ்ந்த மக்கள் தன்னார்வக் காணிக்கை அனைத்தும் கொடுத்ததுமல்லாமல் அவர்களுக்கு வெள்ளிப் பாத்திரங்களையும், பொன்னையும், மற்றப் பொருள்களையும், கால்நடைகளையும், விலையுயர்ந்த பொருள்களையும் கொடுத்து உதவினார்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 126: 1-2ab. 2cd-3. 4-5. 6 (பல்லவி: 3a)Mp3

பல்லவி: ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்.

1 சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது, நாம் ஏதோ கனவு கண்டவர் போல இருந்தோம். 2யb அப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. நாவில் களிப்பாரவாரம் எழுந்தது. பல்லவி

2உன "ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்'' என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். 3 ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம். பல்லவி

4 ஆண்டவரே! தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவதுபோல, எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும். 5 கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். பல்லவி

6 விதை எடுத்துச் செல்லும்போது - செல்லும்போது - அழுகையோடு செல்கின்றார்கள்; அரிகளைச் சுமந்து வரும்போது - வரும்போது - அக்களிப்போடு வருவார்கள். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 5: 16

அல்லேலூயா, அல்லேலூயா! மக்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

உள்ளே வருவோருக்கு ஒளி கிடைக்கும்படி அதை விளக்குத் தண்டின்மீது வைப்பர்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 16-18

அக்காலத்தில் மக்கள் கூட்டத்தை நோக்கி இயேசு கூறியது: "எவரும் விளக்கை ஏற்றி அதை ஒரு பாத்திரத்தால் மூடுவதில்லை; கட்டிலின் கீழ் வைப்பதுமில்லை. மாறாக, உள்ளே வருவோருக்கு ஒளி கிடைக்கும்படி அதை விளக்குத் தண்டின்மீது வைப்பர்.

வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை; அறியப்படாமலும் வெளியாகாமலும் ஒளிந்திருப்பதும் ஒன்றுமில்லை.

ஆகையால், நீங்கள் எத்தகைய மன நிலையில் கேட்கிறீர்கள் என்பது பற்றிக் கவனமாயிருங்கள். உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவரிடமிருந்து தமக்கு உண்டென்று அவர் நினைப்பதும் எடுத்துக் கொள்ளப்படும்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
 

சிந்தனை

லூக்கா 8: 16-18

விளக்குத் தண்டின்மீது வைக்கப்படவேண்டிய விளக்க

நிகழ்வு

          இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த பிரபல பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ஊடவியலாருமான மால்கம் முக்கேரிட்ஜ் (Malcolm Muggeridge 1903 - 1990) தன்னுடைய ‘Something Beautiful for God’ என்ற நூலில் குறிப்பிடுகின்ற ஒரு நிகழ்ச்சி.

மால்கம் முக்கேரிட்ஜ், கல்கத்தாவில் உள்ள ‘சாகும் தருவாயில் இருப்போர்க்கான இல்லத்தில்’ (Home for the Dying) பணிசெய்துகொண்டிருந்த அன்னை தெரசாவையும் அவர் ஆற்றி வந்த பணிகளையும் பற்றிக் கேள்விப்பட்டு, அவரைக் குறித்து ஒரு குறும்படம் எடுப்பதற்குத் தீர்மானித்தார். அதன்படி அவர் தன்னுடைய படக்குழுவினரோடு கல்கத்தாவில் உள்ள அன்னையின் இல்லத்திற்கு வந்தார். அவர் அங்கு வந்தபோது, அன்னைத் தெரசா தன்னுடைய சபை அருள்சகோதரிகளோடு வீதிகளில் கவனிப்பாரற்றுக் கிடந்த முதியோர்களை அள்ளியெடுத்து, அவர்கட்கான இல்லத்தில் கொண்டுபோய் வைத்தார். இதைக் கண்ட மால்கம் முக்கேரிட்ஜும் அவருடைய படக்குழுவினரும் ஒரு நிமிடம் வியந்து போனார்கள்.

பின்னர் மால்கம் முக்கேரிட்ஜ், தான் கூட்டிக்கொண்டு வந்த படக்குழுவினரோடு சேர்ந்து, அன்னை தெரசா, வீதிகளில் கவனிப்பாரற்றுக் கிடந்த முதியோர்களை அள்ளியெடுத்துக் கொண்டு வருவதையும் அவர்களை அவர் அவர்கட்கான இல்லத்தில் கொண்டு போய் வைப்பதையும் அப்படியே படமாக்கினார். அப்பொழுது அவர்க்கு ஒரு சிக்கல் எழுந்தது. அது என்ன சிக்கலெனில், சாகும்தருவாயில் இருந்தோர்க்கான இல்லத்தில் போதுமான வெளிச்சம் இல்லாமல் இருந்ததால், அன்னை தெரசா அந்த இல்லத்திற்குள் செய்துவந்த பணிகளை அவரால் சரியாகப் படமெடுக்க முடியவில்லை. அந்த இல்லத்தின் ஜன்னல் வழியாக வந்த வெளிச்சத்தின் துணைகொண்டுதான் அன்னை தெரசா அங்கிருந்தவர்கட்குச் செய்துவந்த பணிகளைப் படமாக்கினார்.

அந்தக் காட்சிகளையெல்லாம் அவர் படமாக்கியபோது, ‘போதுமான வெளிச்சம் இல்லாததால், இக்காட்சிகளெல்லாம் திரையில் சரியாக வராது’ என்ற எண்ணத்தோடுதான் படமாக்கினார். எல்லாவற்றையும் படமாக்கியபின்பு மால்கம் முக்கேரிட்ஜும் அவருடைய படக்குழுவினரும் தாங்கள் படமெடுத்ததைத் திரையில் ஓட்டிப்பார்த்தபோது, வெளியே அவர் படமாக்கிய காட்சிகளைவிடவும், போதுமான வெளிச்சமில்லாத இல்லத்திற்குள் படமாக்கிய காட்சிகள் மிகவும் பிரமாதமாக – பிரகாசமாக இருந்தன. அதிலும் அன்னை தெரசாவைச் சுற்றி ஓர் ஒளிவட்டம் இருப்பதையும், அது அவர் இருந்த பகுதியைப் பிரகாசமாக்கியதையும் கண்டு மால்கம் முக்கேரிட்ஜ்ஜும் அவருடைய படக்குழுவினரும், ‘அன்னை தெரசா சாதாரண ஒரு பெண்மணி கிடையாது... அவர் இறைவனுடைய ஆசியை நிரம்பப்பெற்றவர்’ என்பதை உணர்ந்து ஆச்சரியப்பட்டனர். இது நடந்து ஏறக்குறைய பதினோரு ஆண்டுகள் கழித்து, மால்கம் முக்கேரிட்ஜ் கத்தோலிக்கத் திருஅவைக்கு மாறினார்.

யாரெல்லாம் கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவர் விட்டுச்சென்ற அன்புப் பணியினைத் தொடர்ந்து செய்கின்றார்களோ, அவர்களைச் சுற்றி எப்போதும் ஒளிவட்டம் இருக்கும், ஏன், அவர்களே இந்த உலகிற்கு ஒளியாக இருப்பார்கள் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. இன்றைய நற்செய்தி வாசகம், நம்மிடம் இருக்கும் ஒளியை அல்லது கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் ஒளியை எல்லார்க்கும் பயன்படும் வகையில் கொடுக்கவேண்டும் என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றது. அதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

ஒளி கொடுக்கத்தான் விளக்கே ஒழிய, மூடி மறப்பதற்கு அல்ல

          நற்செய்தியில் இயேசு, ‘எவரும் விளக்கை ஏற்றி அதை ஒரு பாத்திரத்தால் மூடுவதில்லை; கட்டிலின் கீழ் வைப்பதுமில்லை. மாறாக, உள்ளே வருவோர்க்கு ஒளி கிடைக்கும்படி அதை விளக்குத் தண்டின் மீது வைப்பர்” என்கின்றார். இயேசுவின் இவ்வார்த்தைகள் ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கப்படவேண்டியவையாக இருக்கின்றன.

மத்தேயு நற்செய்தியில் இயேசு, “நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்’ (மத் 5: 13) என்பார். அந்த அடிப்படையில், நாம் ஒவ்வொருவரும் உலகிற்கு ஒளியாக இருக்கின்றோம்... ஒளியாக இருக்கவேண்டும். ஆனால், திருஅவை மெல்ல வளர்ந்து வந்த அந்தக் காலக்கட்டத்தில், ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் கொடுத்த அச்சுறுத்தல்கட்கு அஞ்சி, பலர் கிறிஸ்தவ நம்பிக்கையை வெளிப்படையாக அறிவிக்க மறுத்தார்கள். இந்தப் பின்னணியில் மேலே இயேசு சொன்ன வார்த்தைகளைச் சிந்தனைக்கு உட்படுத்திப் பார்க்கவேண்டும்.

இயேசுவால் உலகிற்கு ஒளியாக இருக்க அழைக்கப்பட்ட நாம், எத்தகைய இடர் வரினும், துன்பம் வரினும் உலகிற்கு ஒளியாக இருந்து எல்லார்க்கும் ஒளி கொடுக்கவேண்டும். அத்தகைய வாழ்க்கைதான் இயேசு நம்மிடம் விருப்பும் வாழ்க்கை. எனவே, நாம் யார்க்கும் அஞ்சி, நம்முடைய கிறிஸ்தவ நம்பிக்கையின்படி வாழாமல் இருப்பதை விடுத்து, எவர்க்கும் அஞ்சாமல், கிறிஸ்தவ நம்பிக்கையின்படி வாழ்ந்து உலகிற்கு ஒளியாவோம்.

சிந்தனை

          ‘மானிடா நீ அவர்கட்கு அஞ்சாதே. அவர்களின் சொற்களைக் கேட்டு நடுங்காதே’ (எசே 2: 7) என்று ஆண்டவர் எசேக்கியேல் இறைவாக்கினரைப் பார்த்துக் கூறுவார். ஆண்டவர் கூறிய இவ்வார்த்தைளை நமது உள்ளத்தில் தாங்கி, யாருக்கும் அஞ்சாமல், நம்முடைய நம்பிக்கையின் படி வாழ்ந்து, உலகிற்கு ஒளியாவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

-         மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.   

எஸ்ரா 1: 1-6

ஆண்டவர்க்குக் கோயில் கட்டுவோம்

நிகழ்வு

          பல ஆண்டுகட்கு முன்பாக, அமெரிக்காவில் உள்ள ஒரு பங்கில், ஒரு ஞாயிற்றுக்கிழமைத் திருப்பலியின்போது, பங்குத்தந்தை மக்களைப் பார்த்து இப்படியோர் அறிவிப்புக் கொடுத்தார்: “அன்பார்ந்த மக்களே! நம்முடைய கோயில் மிகவும் பழுதடைந்து இருப்பதால், புதியதொரு கோயிலைக் கட்டலாம் என்று பங்குப்பேரவையில் முடி வெடுக்கப்பட்டிருக்கின்றது. ஆகையால், கோயில் திருப்பணி நல்லமுறையில் நடைபெற இறைமக்கள் யாவரும் தாராளமாக நன்கொடைகளைத் தந்து உதவுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.”

பங்குத்தந்தை இப்படியோர் அறிவிப்பைக் கொடுத்ததும் ஏழை எளியவர்கள், பணக்காரர்கள், என்று எல்லாரும் தாராளமாக நன்கொடைகளைத் தந்து உதவினார்கள்.

இதற்கு நடுவில் ஒரு பணக்காரப் பெண்மணி பங்குத்தந்தையைப் பார்க்க வந்தார். அவர் கோயில் திருப்பணிக்குத் தன்னுடைய பங்காக 12.42 டாலரை நன்கொடையாகக் கொடுத்தார். பங்குத்தந்தை ஒரு நிமிடம் யோசித்தார்: ‘எதற்காக இவர் 12.42 டாலரை நன்கொடையாகக் கொடுக்கிறார்? பார்ப்பதற்குப் பணக்காரப் பெண்மணி போன்று இருக்கின்றார். அப்படியிருக்கும்போது எதற்காக இவர் இவ்வளவு குறைவான  தொகையை, அதுவும் 12.42 டாலரை நன்கொடையாகக் கொடுக்கின்றார்?’

தனக்கு ஏற்பட்ட இந்த ஐயத்தை பங்குத்தந்தை அந்தப் பணக்காரப் பெண்மணியிடம் மிக வெளிப்படையாகவே கேட்டார். அதற்கு அந்தப் பணக்காரப் பெண்மணி “திருவிவிலியம் அப்படித்தான் சொல்கின்றது. அதனால்தான் நான் 12.42 டாலரை நன்கொடையாகக் கொடுக்கிறேன்” என்றார். “திருவிவிலியம் 12.42 டாலர் நன்கொடையாக கொடுக்கவேண்டும் என்று சொல்லியிருக்கின்றதா...? எங்கு சொல்லியிருக்கின்றது...? காட்டுங்கள்” என்றார் பங்குத்தந்தை.

உடனே அந்தப் பணக்காரப் பெண்மணி,  “மாற்கு நற்செய்தி பன்னிரண்டாவது அதிகாரம் நாற்பத்து இரண்டாவது – மாற்கு 12: 42 – இறைவார்த்தை எடுத்து வாசித்துப் பாருங்கள். அங்கு ஓர் ஏழைக் கைம்பெண் ஒரு கொதிராந்துக்கு இணையான இரண்டு செப்புக்காசுகளை காணிக்கையாகச் செலுத்தினார் என்று வரும். அவர் இரண்டு செப்புக்காசுகளைச் செலுத்தியதைப் பார்த்துவிட்டுத்தான் இயேசு ‘இந்தக் கைம்பெண் காணிக்கைப் பெட்டியில் காணிக்கை செலுத்திய மற்ற எல்லாரையும் விட மிகுதியாகச் செலுத்தியவர்’ என்று பாராட்டுவார். நான் அந்த ஏழைக் கைம்பெண்ணைப் போன்று இரண்டு செப்புக் காசுகளை கொடுக்கவும் இறைவனிடமிருந்து பாராட்டுப் பெறவும் என்னிடம் செப்புக் காசுகள் இல்லை. அதனால்தான் அந்த இறைவார்த்தை (மாற்கு 12: 42) இடம்பெற்றிருக்கும் பகுதிக்கு ஏற்ப 12.42 டாலரை கோயில் திருப்பணிக்கு நன்கொடையாகத் தருகின்றேன்” என்றார்.

பங்குத்தந்தை இதைக் கேட்டுவிட்டு ‘இப்படியெல்லாமா மனிதர்கள் இருப்பார்கள்?’ என்று அதிர்ந்துபோனார்.

ஆண்டவர் உறையும் கோயில் திருப்பணிகட்கு சாதாரண, எளிய மக்கள் தாராளமாகக் கொடுக்கின்றபோது, வசதி படைத்த ஒருசிலர் கொடுக்க யோசிப்பது மிகவும் வியப்பாகத்தான் இருக்கின்றது!. இன்றைய முதல் வாசகத்தில் பாரசீக மன்னர் சைரசு எருசலேம் திருக்கோயிலை மீண்டுமாகக் கட்டும் முயற்சியில் ஈடுபடுகின்றார். அதற்காக அவர் மக்களை காணிக்கைகளைத் தருமாறு கேட்கின்றார். மக்கள் எருசலேம் திருகோயில் திருப்பணிக்கு காணிக்கைகளை (நன்கொடைகள்) தந்தார்களா...? கோயில் திருப்பணி நல்லமுறையில் நடந்தாதா...? சிந்தித்துப் பாப்போம்.

தனக்கென கோவிலைக் கட்ட சைரசை ஆண்டவர் நியமித்தல்

எஸ்ரா நூலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் பாரசீக மன்னர் சைரசு, விண்ணகக் கடவுளான ஆண்டவர், மண்ணகத்திலுள்ள எல்லா அரசுகளையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் ஒப்படைத்திருப்பதாகவும் எருசலேமில் திருக்கோயிலைக் கட்டி எழுப்புவதற்குத் தன்னை நியமித்திருப்பதாகும் அதனால் மக்கள் கோயில் திருப்பணிக்கு (கட்டுமானப் பணிக்கு) தன்னார்வக் காணிக்கைகளை அனுப்பி வைக்குமாறும் ஆணை பிறப்பிக்கின்றார்.

மன்னர் சைரசு யூதர் கிடையாது; அவர் ஒரு புறவினத்தார். ஆனாலும் கடவுள் அவர் வழியாகச் செயல்பட்டு இஸ்ரயேல் மக்கட்கு விடுதலை அளித்ததும் எருசலேம் திருக்கோவிலை கட்டி முடித்ததும், கடவுள் யாரை வேண்டுமானாலும் தன்னுடைய கருவியாகத் தேர்ந்தெடுத்துச் செயல்பட முடியும் என்ற உண்மையைப் பறைசாற்றுவதாக இருக்கின்றது

கோவிலைக் கட்ட காணிக்கைகளைக் கொடுக்க மக்கட்கு அழைப்பு

பாரசீக மன்னர் சைரசின் ஆணையைத் தொடர்ந்து, மக்கள் அனைவரும் எருசலேம் திருக்கோவில் திருப்பணி நல்லமுறையில் நடைபெற வேண்டும் என்று தன்னார்வக் காணிக்கைகளையும் பொன், வெள்ளி, மற்ற பொருள்கள், கால்நடைகளையும் கொடுத்து உதவுகின்றார்கள். இவ்வாறு எருசலேம் திருக்கோயில் (இரண்டாம் திருக்கோயில்) கட்டி முடிக்கப்படுகின்றது.

மக்கள் அனைவரும்  எருசலேம் திருக்கோயில் திருப்பணிக்குத் தாராளமாகக் கொடுத்து உதவியது என்பது, நாம் ஒவ்வொருவரும் கோயில் திருப்பணிகட்கும் வளர்ச்சிப் பணிகட்கும் தாராளமாகக் கொடுத்து உதவ வேண்டும் என்ற உயர்ந்ததோர் அழைப்பினைத் தருகின்றது. ஆகையால், கடவுள் நமக்குக் கொடுத்ததைக் கடவுளுக்கும் அவர்க்கு உகந்தவற்றிற்கும் கொடுத்து உதவிட முன்வருவோம்.

சிந்தனை

          ‘ஆண்டவரே கைம்மாறு செய்பவர்; ஏழு மடங்கு உனக்குத் திருப்பித் தருபவர்’ (சீரா 35: 10). என்கின்றது இறைவார்த்தை. ஆகையால், நாம் கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் ஆசியையும் வாய்ப்பு வசதிகளையும் அவருடைய திருப்பணிக்காகக் கொடுக்க முன்வருவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

-          மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

Free Blog Widget
Stats Counter
hit counter