maraikal
MUM
"
வாசகம்

 

                     பொதுக்காலம் 24 ம் வாரம் - 1ம் ஆண்டு

முதல் வாசகம்

சபைக் கண்காணிப்பாளராக இருப்பவர் குறைச் சொல்லுக்கு ஆளாகாதவராக இருக்க வேண்டும்.


திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-13

அன்பிற்குரியவரே, சபையைக் கண்காணிக்கும் பொறுப்பை நாடுகிற எவரும் மேன்மையானதொரு பணியை விரும்புகிறார். இக்கூற்று உண்மையானது. ஆகவே, சபைக் கண்காணிப்பாளராக இருப்பவர் குறைச் சொல்லுக்கு ஆளாகாதவராயும் ஒரு மனைவி கொண்டவராயும், அறிவுத் தெளிவு, கட்டுப்பாடு, விருந்தோம்பல், கற்பிக்கும் ஆற்றல் ஆகியவற்றை உடையவராயும் இருக்க வேண்டும். அவர் குடி வெறிக்கும் வன்முறைக்கும் இடங்கொடாது, கனிந்த உள்ளத்தவராய் இருக்க வேண்டும்; சண்டையையும் பொருளாசையையும் தவிர்ப்பவராக இருக்க வேண்டும்; தமது சொந்தக் குடும்பத்தை நல்ல முறையில் நடத்தி, தம் பிள்ளைகள் பணிவுடனும் மிகுந்த கண்ணியத்துடனும் வளர ஆவன செய்பவராக இருக்க வேண்டும். தமது சொந்தக் குடும்பத்தை நடத்தத் தெரியாத ஒருவரால், கடவுளின் சபையை எவ்வாறு கவனிக்க முடியும்?

திருச்சபையில் புதிதாகச் சேர்ந்த ஒருவர் கண்காணிப்பாளராகக் கூடாது. அவ்வாறு ஆவாரானால் அவர் தற்பெருமை கொள்ளலாம். அதனால் அலகைக்குக் கிடைத்த தண்டனையை அவர் அடைய நேரிடும். சபைக் கண்காணிப்பாளர் திருச்சபைக்கு வெளியே உள்ளவர்களிடமும் நற்சான்று பெற்றவராய் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் இழிச் சொல்லுக்கு ஆளாகலாம்; அலகையின் கண்ணியிலும் விழ நேரிடலாம்.

அவ்வாறே திருத்தொண்டர்களும் கண்ணியம் உடையவர்களாக இருக்க வேண்டும்; இரட்டை நாக்கு உள்ளவர்களாகவும் குடிவெறிக்கு அடிமைப்பட்டவர்களாகவும் இழிவான ஊதியத்தின் மேல் ஆசை உள்ளவர்களாகவும் இருத்தலாகாது. எச்சரிக்கை! தூய மனச்சான்று உடையவர்களாய் விசுவாசத்தின் மறைபொருளைக் காத்து வரவேண்டும். முதலில் இவர்களைச் சோதித்துப் பார்க்க வேண்டும். இவர்கள் குறையற்றவர்கள் எனக் காணப்பட்டால் திருப்பணியாற்றலாம்.

அது போலவே பெண்களும் கண்ணியமுடையவராயும் புறங்கூறாதவராயும் அறிவுத் தெளிவு உடையவராயும் எல்லாவற்றிலும் நம்பத்தக்கவராயும் இருக்கவேண்டும்.

திருத்தொண்டர்கள் ஒரு மனைவி கொண்டவர்களாயும், பிள்ளைகளையும் சொந்தக் குடும்பத்தையும் நல்ல முறையில் நடத்துகிறவர்களாயும் இருக்க வேண்டும். நன்கு திருத்தொண்டு ஆற்றுவோர் உயர் மதிப்புப் பெறுவர். இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள நம்பிக்கையைக் குறித்து அதிகத் துணிவோடு பேசுவர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 101: 1-2ab. 2உ-3ab. 5. 6 (பல்லவி: 2c) Mp3

பல்லவி: தூய உள்ளத்தோடு என் இல்லத்தில் வாழ்வேன்.

1 இரக்கத்தையும் நீதியையும் குறித்துப் பாடுவேன்; ஆண்டவரே, உமக்கே புகழ் சாற்றிடுவேன். 2ab மாசற்ற வழியே நடப்பதில் நான் கருத்தாயிருக்கிறேன்; எப்பொழுது நீர் என்னிடம் வருவீர்? பல்லவி

2c தூய உள்ளத்தோடு என் இல்லத்தில் வாழ்வேன். 3யb இழிவான எதையும் என் கண்முன் வைக்கமாட்டேன். நெறி தவறியவரின் செயலை நான் வெறுக்கின்றேன். பல்லவி

5 தமக்கு அடுத்திருப்போரை மறைவாகப் பழிப்போரை நான் ஒழிப்பேன்; கண்களில் இறுமாப்பும் உள்ளத்தில் செருக்கும் உள்ளோரின் செயலை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன். பல்லவி

6 நாட்டில் நம்பிக்கைக்குரியோரைக் கண்டுபிடித்து என்னோடு வாழச் செய்வேன்; நேரிய வழியில் நடப்போரை எனக்குப் பணிவிடை புரியச் செய்வேன். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக்: 7: 16

அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 11-17

அக்காலத்தில் இயேசு நயீன் என்னும் ஊருக்குச் சென்றார். அவருடைய சீடரும் பெருந்திரளான மக்களும் அவருடன் சென்றனர். அவர் அவ்வூர் வாயிலை நெருங்கி வந்தபோது, இறந்த ஒருவரைச் சிலர் தூக்கி வந்தனர். தாய்க்கு அவர் ஒரே மகன்; அத்தாயோ கைம்பெண். அவ்வூரைச் சேர்ந்த பெருந்திரளான மக்களும் அவரோடு இருந்தனர்.

அவரைக் கண்ட ஆண்டவர், அவர்மீது பரிவு கொண்டு, " அழாதீர்'' என்றார். அருகில் சென்று பாடையைத் தொட்டார். அதைத் தூக்கிச் சென்றவர்கள் நின்றார்கள்.

அப்பொழுது அவர், " இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு'' என்றார். இறந்தவர் எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்கினார்.

இயேசு அவரை அவர் தாயிடம் ஒப்படைத்தார். அனைவரும் அச்சமுற்று, "நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்'' என்று சொல்லிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.

அவரைப் பற்றிய இந்தச் செய்தி யூதேயா நாடு முழுவதிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் பரவியது.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

 

லூக்கா 7: 11-17

இயேசு அவரை அவர் தாயிடம் ஒப்படைத்தார்

நிகழ்வு

ஒருநாள் மாலைவேளையில் பெரியவர் ஒருவர் கடற்கரையோரமாய் காலார நடந்துசென்றுகொண்டிருந்தார். ஓரிடத்தில் இளைஞன் ஒருவன் கடலிலிருந்து கரையோரமாய் ஒதுங்கிய கிளிஞ்சல்களை (Shells) ஒரு பாத்திரத்தில் சேகரித்துக் கொண்டிருந்தான்.

அதைப் பார்த்ததும் பெரியவர் அவனுகே சென்று, “தம்பி! எதற்காக இந்தக் கிளிஞ்சல்களைச் சேகரித்துக் கொண்டிருக்கின்றாய்?” என்று கேட்டார். “சூப் தயாரித்துக் குடிப்பதற்காகவும் பொரித்துச் சாப்பிடுவதற்காகவும் இவற்றை நான் சேகரித்துக் கொண்டிருக்கின்றேன்” என்றான் அந்த இளைஞன். “இந்த உயிரினங்கள் உன்னைப் போல், என்னைப் போல் உயிர்வாழவேண்டும் என்று ஆசைப்படும்தானே! அப்படியிருக்கும்போது இவற்றைக் கொண்டுபோய் சூப் தயாரித்துக் குடிப்பது சரியாகுமா?” என்றார் பெரியவர்.

இளைஞன் எதுவும் பேசாது ஒரு நிமிடம் அமைதியாக இருந்தான். பின்னர் அவன் அவரிடம், “அது ஒன்றுமில்லை... என்னுடைய வீட்டிற்கு ஊரிலிருந்து என்னுடைய அத்தை வந்திருக்கின்றார். அவர்க்குச் சூப் வைத்துக் கொடுப்பதற்காகத்தான் இவற்றையெல்லாம் சேகரித்துக் கொண்டிருக்கின்றேன்” என்றான். உடனே பெரியவர் அவனிடம், “ஊரிலிருந்து  வந்திருக்கும் உன் அத்தைக்கு மட்டும்தான் இந்த கிளிஞ்சல்களைத் தருவாயா? எனக்குத் தரமாட்டாயா?” என்றார். மறுகணம் அவன் தன்னுடைய பாத்திரத்தில் சேகரித்து வைத்திருந்த கிளிஞ்சல்களை அவர்க்கு கொஞ்சம் அள்ளிக் கொடுத்தான்.

“இவ்வளவுதான் தருவாயா? இன்னும் கொஞ்சம் தரமாட்டாயா?” என்று பெரியவர் அவனிடம் கேட்க, அவன் தன்னுடைய பாத்திரத்திலிருந்து இன்னும் கொஞ்சம் கிளிஞ்சல்களை அவர்க்கு அள்ளிக்கொடுத்தான். அவர் மிகவும் மகிழ்ந்துபோய், தன்னிடம் இருந்த சிறிது பணத்தை எடுத்து அவனுக்குக் கொடுத்து, “இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு, உன்னிடமிருக்கின்ற கிளிஞ்சல்கள் அனைத்தையும் எனக்குத் தருவாயா?” என்றார். பணத்தைப் பார்த்ததும் மிகவும் உற்சாகமடைந்த அந்த இளைஞன் தன்னிடமிருந்த கிளிஞ்சல்கள் அனைத்தையும் அவர்க்குக் கொடுத்தான்.

இளைஞனிடமிருந்து எல்லாவற்றையும் பெற்றுக்கொண்ட அந்தப் பெரியவர் கடலுக்குள் மெல்ல இறங்கினார். பின்னர் அவர் தன்னிடமிருந்த கிளிஞ்சல்களைக் கடலுக்குள்ளும் விட்டுவிட்டு, “பிள்ளைகளா! சாக இருந்த உங்களை மீட்டுவந்து உங்களுடைய தாயிடம் ஒப்படைத்திருக்கின்றேன்... இனிமேல் கவனமாகவும் மகிழ்ச்சியாகவும் இருங்கள்” என்று சொல்லி, மிகவும் மனநிறைவோடு கரைக்கு வந்தார். இதையெல்லாம் கரையிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த அந்த இளைஞன், ‘இனிமேல் நான் எக்காரணத்தைக் கொண்டும் கிளிஞ்சல்களைப் பிடித்துப் பொரித்தோ அல்லது சூப்பு வைத்துக் குடிக்கவோ மாட்டேன்’ என்று உறுதிபூண்டான்.

இந்த நிகழ்வில் வருகின்ற பெரியவர் எப்படி சாவின் பிடியில் இருந்த கிழிஞ்சல்களை மீட்டு வாழ்வு கொடுத்தாரோ, அதுபோன்று இன்றைய நற்செய்தியில், இயேசு இறந்து போயிருந்த இளைஞனுக்கு வாழ்வு கொடுத்து அவனை அவனுடைய தாயிடம் ஒப்படைக்கின்றார். இயேசு செய்த வல்ல செயல் நமக்கு உணர்த்தும் செய்தியென்ன என்பதை இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

இவ்வுலகிற்கு வாழ்வுகொடுப்பதற்கு வந்த இயேசு

          நற்செய்தியில் இயேசு நயீன் நகரக் கைம்பெண்ணின் மகனை உயிர்த்தெழச் செய்கின்ற நிகழ்வினைக் குறித்து வாசிக்கின்றோம். இயேசு கப்பர்நாகுமிலிருந்து இருபத்தைந்து கிலோமீட்டர்த் தொலைவில் இருந்த நயீன் என்ற ஊரில் நுழைகின்றபோதுதான், இறந்த இளைஞனை  சிலர் பாடையில் வைத்துத் தூக்கிக்கொண்டு வருகின்ற இந்த வேதனை மிகுந்த நிகழ்ச்சியானது நடைபெற்றுகின்றது. அந்த இளைஞனோ, ‘கைம்பெண்ணான தாய்க்கு ஒரே மகன்’. அப்படியானால் அந்தத் தாயின் துயரம் எவ்வளவு கொடியதாக இருந்திருக்கும். இதை உணர்ந்தவராய்த்தான் இயேசு, அந்த இளைஞனை உயிர்த்தெழச் செய்து அல்லது அவனுக்கு வாழ்வு கொடுத்து, அவனை அவனுடைய தாயிடம் ஒப்படைக்கின்றார்.

இதன்மூலம் இயேசு, ‘நான் இந்த உலகிற்கு வாழ்வுகொடுக்க வந்தவர்’ (யோவா 10: 10) என்பதை நிரூபித்துக் காட்டுகின்றார். இயேசுவைப் போன்று நாமும் நம்முடைய இரக்கச் செயல்களால் வாழ்வு கொடுக்கவேண்டும் என்பதை நம்முடைய மனதில் இருத்துவது நல்லது.

பரிவினால் வாழ்வு கொடுத்த இயேசு

          இயேசு அந்த நயீன் நகரக் கைம்பெண்ணின் மகனுக்கு வாழ்வு கொடுத்தார் எனில், அதற்குக் காரணமாக இருந்தது, அவர் கொண்டிருந்த பரிவுதான். இயேசு, ஏற்கனவே தன் கணவரை இழந்து, இப்பொழுது மகனையும் இழந்து தவித்த அந்தத் தாயின் துயரத்தைத் தன்னுடைய துயரமாக பார்த்தார். அதனால்தான் அவர் அவருடைய மகனை உயிர்த்தெழச் செய்கின்றார். நம்முடைய அன்றாட வாழ்விலும் இயேசுவிடம் இருந்த அதே பரிவும் இரக்கமும் நம்மிடம் இருக்க வேண்டும் என்பதுதான் இன்றைய இறைவார்த்தை நமக்குச் சொல்லும் மிக ஆழமான செய்தியாக இருக்கின்றது. ஆகையால், நாம் இயேசுவைப் போன்று பிறருடைய துன்பத்தை நம்முடைய துன்பமாக பார்த்து, அதை நீக்க நம்மாலான முயற்சிகளை மேற்கொள்வோம்.

சிந்தனை

          ‘எவர் ஒருவர் உள்ளத்தில் உண்மையான பரிவும் இரக்கமும் இல்லாமல் இருக்கின்றாரோ, அவர் பின்னாளில் பைத்தியமாகிவிடுவார்’ என்கிறது ஒரு முதுமொழி. ஆகையால், நாம் இயேசுவைப் போன்று உள்ளத்தில் பரிவும் இரக்கமும் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

-         மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
 


1 திமொத்தேயு 3: 1-13

தலைவர், கனிந்த உள்ளத்தினராக இருக்கவேண்டும்

நிகழ்வு

          ஒரு சமயம் ஒரு குட்டி நண்டு, கடற்கரை மணலில் தன்னுடைய கால்தடங்களைப் பதித்து, இங்கும் அங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருந்தது. திடீரென்று வேகமாக வந்த ஒரு பெரிய அலை, நண்டு கடற்கரை மணலில் பதித்து வைத்திருந்த கால்தடங்களை எல்லாம் அழித்துவிட்டு வேகமாகப் பின்வாங்கியது. நண்டிற்கு ஒரே வருத்தமாகப் போய்விட்டது. ‘என்ன அலை இது! நாம் அழகாகப் பதித்து வைத்திருந்த கால்தடங்களை எல்லாம் இப்படி ஒரே வீச்சில் அழித்துவிட்டுப் போய்விட்டதே! வரட்டும் அதோடு சண்டை பிடிப்போம்’ என்று காத்திருந்தது.

உள்ளே போன அலை திரும்ப வந்தது. அப்பொழுது அந்தக் குட்டி நண்டு அலையிடம், “நான் என்னுடைய கால்தடங்களை இந்த கடற்கரை மணலில் அழகாக பதிய வைத்திருக்கும்போது, இப்படி வீச்சில் அடித்துக்கொண்டு போய்விட்டாயே! நான் உன்னை என்னுடைய நண்பனாக, அண்ணனாக நினைகொண்டிருக்கும்போது, நீ இப்படிச் செய்துவிட்டாயே! இது உனக்கே நன்றாக இருக்கின்றதே!” என்று சொல்லி வருத்தப்பட்டது.

“தம்பி! நான் சொல்வதைக் கொஞ்சம் பொறுமையாகக் கேள். அதன்பிறகு நான் எதற்காக அப்படிச் செய்தேன் என்று உனக்குப் புரியும் என்று சொல்லிவிட்டு, அலை குட்டி நண்டிடம் பொறுமையாகப் பேசத் தொடங்கியது: “இதோ பார் தம்பி! கடலுக்கு மீன் பிடிக்க வருகின்றார்களே! அவர்களில் ஒருசிலர் கடற்கரை மணலில் தெரியும் உன்னுடைய கால்தடங்களைப் பார்த்து, நீ எங்கே ஒளிந்திருக்கிறாய் என்று கண்டுபிடித்து உன்னைப் பிடித்துக் கொண்டு போய்விடுவார்கள் அல்லவா! அதற்காகத்தான் நான் இப்படிச் செய்தேன்.”

அலை சொன்னதைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த குட்டி நண்டு, “இந்த உண்மை தெரியாமல் உங்களைத் தவறாக நினைத்துவிட்டேன். என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்” என்றது. இதற்குப் பின்பு அந்தக் குட்டி நண்டும் அலையும் நல்ல நண்பர்களாய் அண்ணன் தம்பிகளாய் வாழ்ந்து வந்தனர்.

இது கற்பனைக் கதையாக இருந்தாலும், பெரியவர்கள் மற்றும் பொறுப்பில் இருப்பவர்கள் தங்களோடு இருப்பவர்களையும் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டவர்களிடமும் கரிசனையோடும் கனிந்த உள்ளத்தோடும் இருந்து அவர்களைக் கவனித்துக் கொள்ளவேண்டும் என்ற உண்மையை உரக்கச் சொல்வதாக இருக்கின்றது. இன்றைய முதல் வாசகம் சபைக் கண்காணிப்பாளர் அல்லது ஒரு தலைவர் எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றிய விளக்கத்தைத் தருகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

கனிந்த உள்ளத்தினராய் இருக்கவேண்டும்

திமொத்தேயுக்கு எழுதிய முதல் திருமுகத்தில் புனித பவுல், சபைக் கண்காணிப்பாளர்  அல்லது தலைவர் எப்படி இருக்கக்கூடாது, எப்படி இருக்கக்கூடாது என்பவை பற்றிய விளக்கத்தினைத் தருகின்றார். முதலில் சபைக் கண்காணிப்பாளர் எப்படி இருக்கவேண்டும் என்று பார்ப்போம்.

ஒரு சபைக் கண்காணிப்பாளர் அறிவுத் தெளிவு, கட்டுப்பாடு, விருந்தோம்பல், கற்பிக்கும் ஆற்றல் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும். இவை எல்லாவற்றிற்கு மேலாக அவர் கனிந்த உள்ளத்தினராய் இருக்கவேண்டும; என்கிறார் பவுல். சபைக் கண்காணிப்பாளர் அறிவுத் தெளிவு, கற்பிக்கும் ஆற்றல் போன்றவற்றைப் பெற்றிருந்தாலும், அவர் கனிந்த உள்ளத்தினராய் இருக்க வேண்டும். ஏனென்றால், கனிந்த உள்ளத்தினராய் சபைக் கண்காணிப்பாளர் இருக்கின்றபோதுதான், அவர் சபையில் உள்ள எளியவர், வறியவர், ஆதரவற்றோர் ஆகியோர்மீது இயேசுவைப் போன்று இறங்கி, அவர்கட்கு வேண்டியதைச் செய்துதர முடியும்.

நற்சான்று பெற்றவராய் இருக்கவேண்டும்

சபைக் கண்காணிப்பாளர் நற்சான்று பெற்றவராய் இருக்கவேண்டும் என்று புனித பவுல் சொல்கின்றபோது, அவர் தன்னுடைய சபையில் உள்ளவர்கள்மீது மட்டும் கனிந்த உள்ளத்தோடு இருந்து, அன்பு பாராட்டுபவராக இருக்கக்கூடாது; சபைக்கு வெளியே உள்ளவர்கள்மீதும் அதாவது பிற சபையார், பிற சமயத்தார் ஆகியோர்மீதும் கனிந்த உள்ளத்தோடு இருந்து, அன்பு பாராட்டி, அதன்வழியாக சான்றுபெற்றவராக இருக்கவேண்டும். இவ்வாறு சபைக் கண்காணிப்பாளர் நற்சான்று பெற்றவராய் இருப்பது இன்றியமையாதது.

குறைசொல்லுக்கு ஆளாகக்கூடாது

ஒரு சபைக் கண்காணிப்பாளர் எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்பது குறித்துப் பேசிய புனித பவுல், எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்பது பற்றியும் பேசுகின்றார். குறிப்பாக  அவர் குறை சொல்லுக்கு ஆளாகதவராகவும் குடிவெறிக்கும் வன்முறைக்கும் இடங்கொடாதவாறு இருக்கவேண்டும்: சண்டையையும் பொருளாசையையும் தவிப்பவராக  இருக்கவேண்டும் என்று குறிப்பிடுகின்றார் பவுல்

சபைக் கண்காணிப்பாளர் என்றால், அவர் ஒரு சபைக்கே தலைவராக இருக்கின்றார். அப்படியிருக்கும்போது அவர் இந்த உலகப்போக்கிலான செயல்களைத் தவிர்த்துவிட்டு, ஆண்டவர்க்கு உகந்த வழியில் நடப்பது எல்லார்க்கும் முன்மாதிரியான வாழ்க்கை வாழ்வது சிறப்பானது.

சிந்தனை

          ‘தனக்கென உழைப்பவன் மனிதன்; பிறர்க்காக உழைப்பவன் தலைவன். அவனே மாமனிதன்’ என்பார் கார்ல் மாக்ஸ். ஆகையால், நாம் ஒவ்வொருவரும் ஏதோவொரு வகையில் தலைவர்கள் என்பதை உணர்ந்து, பிறருடைய வாழ்வு ஏற்றம் காண உழைப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


-          மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

Free Blog Widget
Stats Counter
hit counter