maraikal
MUM
"

 

                     பொதுக்காலம் 24 ம் வாரம் - 1ம் ஆண்டு

முதல் வாசகம்

எல்லா மனிதரும் மீட்புப் பெறவும் உண்மையை அறிந்துணரவும் வேண்டுமென கடவுள் விரும்புகிறார்.

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-8

அன்பிற்குரியவரே, அனைவருக்காகவும் மன்றாடுங்கள்; இறைவனிடம் வேண்டுங்கள்; பரிந்து பேசுங்கள்; நன்றி செலுத்துங்கள். முதன்முதலில் நான் உங்களுக்குத் தரும் அறிவுரை இதுவே.

இறைப் பற்றும் கண்ணியமும் நிறைந்தவர்களாய், தொல்லையின்றி அமைதியோடு வாழ அரசர்களுக்காகவும், உயர் நிலையிலுள்ள எல்லா மனிதர்களுக்காகவும் மன்றாடுங்கள். இதுவே நம் மீட்பராகிய கடவுளின் முன் சிறந்ததும் ஏற்புடையதுமாகும். எல்லா மனிதரும் மீட்புப் பெறவும் உண்மையை அறிந்துணரவும் வேண்டுமென அவர் விரும்புகிறார். ஏனெனில் கடவுள் ஒருவரே. கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளரும் ஒருவரே. அவரே இயேசு கிறிஸ்து என்னும் மனிதர். அனைவரின் மீட்புக்காக அவர் தம்மையே ஈடாகத் தந்தார்; குறித்த காலத்தில் அதற்குச் சான்று பகர்ந்தார். இதற்காகவே நான் நற்செய்தியை அறிவிப்பவனாகவும் திருத்தூதனாகவும் விசுவாசத்தையும் உண்மையையும் பிற இனத்தாருக்குக் கற்பிக்கும் போதகனாகவும் ஏற்படுத்தப்பட்டேன். நான் சொல்வது உண்மையே; பொய் அல்ல.

எனவே, ஆண்கள் சினமும் சொற்பூசலும் இன்றி எவ்விடத்திலும் தூய உள்ளத்தோடு கைகளை உயர்த்தி இறைவேண்டல் செய்யுமாறு விரும்புகின்றேன்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 28: 2. 7-8a. 8b-9 (பல்லவி: 6) Mp3

பல்லவி: என் கெஞ்சும் குரலுக்குச் செவிசாய்த்த ஆண்டவர் போற்றி! போற்றி!

2 நான் உம்மிடம் உதவி வேண்டுகையில், உமது திருத்தூயகத்தை நோக்கி நான் கை உயர்த்தி வேண்டுகையில், பதில் அளித்தருளும். பல்லவி

7 ஆண்டவர் என் வலிமை, என் கேடயம்; அவரை என் உள்ளம் நம்புகின்றது; நான் உதவி பெற்றேன்; ஆகையால் என் உள்ளம் களிகூர்கின்றது; நான் இன்னிசை பாடி அவருக்கு நன்றி கூறுவேன். 8ய ஆண்டவர் தாமே தம் மக்களின் வலிமை. பல்லவி

8b தாம் திருப்பொழிவு செய்தவர்க்கு அவரே பாதுகாப்பான அரண். 9 ஆண்டவரே, உம் மக்களுக்கு விடுதலை அளித்தருளும்; உமது உரிமைச் சொத்தான அவர்களுக்கு ஆசி வழங்கும்; அவர்களுக்கு ஆயராக இருந்து என்றென்றும்அவர்களைத் தாங்கிக் கொள்ளும். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 3: 16

அல்லேலூயா, அல்லேலூயா! தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இஸ்ரயேலரிடத்திலும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 1-10

அக்காலத்தில் இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றார். அங்கே நூற்றுவர் தலைவர் ஒருவரின் பணியாளர் ஒருவர் நோயுற்றுச் சாகும் தறுவாயிலிருந்தார். அவர்மீது தலைவர் மதிப்பு வைத்திருந்தார். அவர் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு யூதரின் மூப்பர்களை அவரிடம் அனுப்பித் தம் பணியாளரைக் காப்பாற்ற வருமாறு வேண்டினார்.

அவர்கள் இயேசுவிடம் வந்து, " நீர் இவ்வுதவி செய்வதற்கு அவர் தகுதியுள்ளவரே. அவர் நம் மக்கள்மீது அன்புள்ளவர்; எங்களுக்கு ஒரு தொழுகைக்கூடமும் கட்டித் தந்திருக்கிறார்'' என்று சொல்லி அவரை ஆர்வமாய் அழைத்தார்கள். இயேசு அவர்களோடு சென்றார்.

வீட்டுக்குச் சற்றுத் தொலையில் வந்துகொண்டிருந்தபோதே நூற்றுவர் தலைவர் தம் நண்பர்கள் சிலரை அனுப்பிப் பின்வருமாறு கூறச் சொன்னார்: " ஐயா, உமக்குத் தொந்தரவு வேண்டாம்; நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். உம்மிடம் வரவும் என்னைத் தகுதியுள்ளவனாக நான் கருதவில்லை. ஆனால் ஒரு வார்த்தை சொல்லும்; என் ஊழியர் நலமடைவார். நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர். நான் ஒருவரிடம் `செல்க' என்றால் அவர் செல்கிறார்; வேறு ஒருவரிடம் `வருக' என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து `இதைச் செய்க' என்றால் அவர் செய்கிறார்.''

இவற்றைக் கேட்ட இயேசு அவரைக் குறித்து வியப்புற்றார். தம்மைப் பின் தொடரும் மக்கள் கூட்டத்தினரைத் திரும்பிப் பார்த்து, " இஸ்ரயேலரிடத்திலும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை என உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார்.

அனுப்பப்பட்டவர்கள் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது அப்பணியாளர் நலமுற்றிருப்பதைக் கண்டார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

 

1 திமொத்தேயு 2: 1-8

“எல்லா மனிதர்கட்காகவும்  மன்றாடுங்கள்”

நிகழ்வு

          சிறுமி ஒருத்தி இருந்தாள். அவள் கடவுள்மீது ஆழமான நம்பிக்கை கொண்டவளாகவும் நேரம் கிடைக்கின்றபோதேல்லாம் இறைவேண்டல் செய்யக்கூடியவளாகவும் விளங்கி வந்தாள். ஒருநாள் அவள் ‘நகரில் நடந்த ஒரு கலவரத்தில் பத்துக்கும் மேற்பட்டவர்களைக் கொன்ற கொலைக்குற்றவாளி மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கிறான் என்பதையும் அந்தக் கொலைக்குற்றவாளி, தான் செய்த தவறுக்கு இதுவரைக்கும் யாரிடமும் மன்னிப்புக் கேட்காமல் கல்நெஞ்சக் காரனாக இருக்கிறான்’ என்பதையும் தன் தந்தை சொல்லக் கேள்விப் பட்டாள்.

‘ஒருவன் தான் செய்த குற்றத்தை உணராமலும் மனம் வருந்தாமலும் இருந்தால், அவன் இறந்தபிறகு பாதாளம் – நகரம் அல்லவா போய்ச் சேர்வான். அப்படி அவனைப் பாதாளத்திற்கு விடக்கூடாதே’ என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டவளாய், அவள் அந்தக் கொலைகாரனும் மரணதண்டனைக் குற்றவாளியுமானவனுக்காக இறைவனிடம் வேண்ட முடிவு செய்தாள்.

இதற்குப் பின்பு அவள் ஒவ்வொருநாளும் காலையில் எழுந்த உடனும் இரவில் தூங்கக் செல்வதற்கு முன்னும் பாடங்களைப் படிக்கும் முன்னும் அந்தக் கொலைகாரனுக்காக இறைவனிடம் மிக உருக்கமாக மன்றாடி வந்தாள். நாள்கள் மெல்ல நகர்ந்தன. அந்தக் கொலைகாரன் தன்னுடைய நிலையிலிருந்து கொஞ்சம்கூட இறங்கி வராமல் கல்நெஞ்சக் காரனாக இருந்து வந்தான். அவன் இப்படிக் கல்நெஞ்சக் காரனாகவே இருக்கின்றான் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு சிறுமி மிகவும் வருந்தினாள்; அதே நேரத்தில் அவள் அவனுக்காக முன்பைவிட இன்னும் அதிக நேரம் எடுத்துக்கொண்டு மன்றாடத் தொடங்கினாள்.

இப்படியே நாள்கள் சென்றுகொண்டிருந்தன, அந்தக் கொலைகாரனுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படும் நாள் வந்தது. அப்பொழுது சிறையில் இருந்த அதிகாரி ஒருவர், அந்தக் கொலைகாரனிடம் சென்று, “இன்னும் ஒருசில மணிநேரங்களில் உனக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப் பட இருக்கின்றது. அதனால் அதற்கு முன்பாக நீ எதையாது சொல்லவேண்டும் என்று விரும்புகின்றாயா?” என்றார்.  “ஆமாம், எனக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னம் குருவானவரிடம் ஒப்புரவு அருளடையாளம் செய்யலாம் என்று இருக்கின்றேன்” என்றான் அவன்.

உடனே அங்கு ஒரு குருவானவர் வரவழைக்கப்பட்டார். அவரிடம் அவன் தான் செய்த தவறுகளையும் பாவங்களையும் அறிக்கையிட்டுக் கண்ணீர் விட்டு அழுந்தான். குருவானவரும் அவன் செய்த குற்றங்களையெல்லாம் மன்னித்து, அவனுக்கு ஆசி வழங்கிவிட்டுச் சென்றார். இதற்குப் பின்பு அவனுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் நேரம் வந்தபோது, காவலர்கள் அவனைப் பிடித்து, தூக்குமேடைக்கு இழுத்துக்கொண்டு  போனார்கள். அப்பொழுது அவன் பழைய மனிதனைப் போன்று இல்லை; பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு, புதிய மனிதனாய், மகிழ்ச்சியோடு தண்டனையை ஏற்றுக்கொள்பவனைப் போன்று போனான். பின்னர் அவனுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அடுத்த நாளில் செய்தித்தாளில் தலைப்புச் செய்தி இப்படி இருந்தது: “கொலைகாரன் தன்னுடைய குற்றத்தை உணர்ந்து, மன்னிப்புப் கேட்டான்.” இதைச் செய்தியைப் படித்ததும், அவனுக்காக இறைவனிடம் தொடர்ந்து மன்றாடி வந்த அந்தச் சிறுமி, ‘தன்னுடைய மன்றாட்டை இறைவன் கேட்டு, பாவியான கொலைகாரனை மனமாறச் செய்திருக்கின்றார்’ என்று மிகவும் மகிழ்ச்சியடைந்தாள்.

பாவி ஒருவர்க்காக நாம் இறைவனிடம் தொடர்ந்து மன்றாடுகின்றபோது, அவர் நிச்சயம் ஒருநாள் மனம்மாறுவார் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியதாக இருக்கின்றது. முதல் வாசகத்தில் பவுல் ‘அனைவர்க்காகவும் மன்றாடுங்கள்’ என்றோர் அழைப்பினைத் தருகின்றார். அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

அனைவர்க்காகவும் மன்றாடவேண்டும்

புனித பவுல் திமொத்தேயுக்கு எழுதிய முதல் திருமுகத்தில் (இன்றைய முதல் வாசகத்தில்), “அனைவர்க்காகவும் மன்றாடுகள்” என்கின்றார். இங்கு குறிப்பிடப்படும் ‘அனைவர்’ என்பதில் கிறிஸ்தவம் வேகமாக வளர்ந்து வந்த தொடக்கக் காலக்கட்டதில் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தி வந்த நீரோ மன்னன், உரோமை அரசாங்கத்தில் இருந்த உயர் அதிகாரிகள். இன்னும் பலர் அடங்குவர். இவர்களெல்லாம் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தியவர்கள், துன்புறுத்துகின்றவர்கள் என்பதற்காக, அவர்கட்காக நாம் இறைவனிடம் வேண்டாமல் இருக்கக்கூடாது, அவர்கட்காகவும் வேண்டவேண்டும் என்கின்றார் பவுல்.

அனைவரும் மீட்புப் பெறவேண்டும் என்று விரும்பும் இறைவன்

பவுல், திமொத்தேயுவிடம், எதற்காக அனைவர்க்காகவும் இறைவனிடம் மன்றாடச் சொல்கின்றார் என்ற கேள்வி எழலாம். அதற்கான விடை இன்றைய முதல் வாசகத்திலேயே இருக்கின்றது. ஆம், அனைவரும் மீட்புப் பெறவேண்டும் என்பதுதான் கடவுளின் திருவுளம். அந்தத் திருவுளம் நிறைவேற வேண்டுமென்றால், பாவிகள் யாவரும் மனம்மாறவேண்டும். அதற்கு நாம் அனைவருக்காகவும் மன்றாடவேண்டியது அவசியமாகும்.

சிந்தனை

‘உங்களைத் துன்புறுத்துவோர்காக இறைவனிடம் மன்றாடுங்கள்’ (மத் 5: 46) என்பார் இயேசு. ஆகையால், நாம் இயேசுவின், பவுலின் அழைப்பினை ஏற்று அனைவர்க்காகவும் மன்றாடுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

-   மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
 

லூக்கா 7: 1-10

‘பணியாளர்மீது நூற்றுவத்தலைவர் மதிப்பு வைத்திருந்தார்’

நிகழ்வு

          சில ஆண்டுகட்கு முன்னம், நம்முடைய இந்திய இராணுவத்தில் போர் விமான ஓட்டுநராகப்  பணியாற்றி வந்தவர் விஷால் என்ற போர் விமானி (Jet Pilot). ஒருநாள் அவர் போர் விமானத்தில் சென்றுகொண்டிருக்கும்போது எதிரி நாட்டுப் படையினர் அவர் சென்றுகொண்டிருந்த போர் விமானத்தின்மீது ஏவுகணையைக் குறி பார்த்து அடித்தனர். இதனால் அந்த விமானமே சுக்கு நூறாக நொறுங்கிப் போனது. அவருடைய நல்ல நேரத்திற்கு, அந்த விமானத்தில் வான் குடையானது (Parachute) வைக்கப்பட்டிருந்தது. இதனால் அவர் அந்த வான்குடையில் ஏறிக்கொன்று, பத்திரமாகக் கீழே இறங்கினார்.

இது நடந்து ஓராண்டு கழித்து, விஷாலும் அவருடைய மனைவியும் ஓர் உணவகத்தில் சாப்பித்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவரிடம் வந்து பேசிய ஒருவர், “நீங்கள்தானே போர் விமானி விஷால்? உங்களைத் தானே எதிரிகள் ஏவுகணையை வைத்துத் தாக்கினார்கள்? இப்பொழுது நீங்கள் பத்திரமாக இருக்கின்றீர்கள்தானே? “ என்று கேள்விக்கு மேல் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனார். ‘என்னைக் குறித்து இவ்வளவு தெரிந்து வைத்திருக்கின்றாரே…  இதுவரைக்கும் நான் இவரிடம் பேசியதுகூடக் கிடையாதே... இவர் யாராக இருக்கும்?’ என்று யோசிக்கத் தொடங்கினார்.

பின்னர் விஷால் அவரிடம், “ஆமாம், என்னைக் குறித்து இவ்வளவு தெரிந்து  வைத்திருக்கின்றீர்களே, நீங்கள் யார்?” என்று கேட்டார். அதற்கு அந்த மனிதர்,  “நான்தான் நீங்கள் ஓட்டிச்சென்ற போர் விமானத்தில் ‘வான் குடையை’ எடுத்து வைத்தவன்” என்றார். இதைக் கேட்டுவிடு போர் விமானி விஷால், “ஓ நீங்கள் போர் விமானத்தில் வான்குடையை வைத்தவரா? இத்தனை நாளும் இது தெரியாமல் இருந்திருக்கின்றேன்... மிக்க நன்றி” என்று சொல்லிவிட்டு அவரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு, தன்னுடைய மனைவியோடு வீட்டிற்கு  வந்தார்.

வீட்டிற்கு வந்த விஷால் அந்தப் பணியாளரைக் குறித்தே சிந்திக்கத் தொடங்கினார். ‘சே! நம்முடைய உயிரை ஒருவர் ஆபத்திலிருந்து காப்பாற்றியிருக்கின்றார். அப்படியிருந்தும் இத்தனை நாட்களாக அவரைக் குறித்துத் தெரியாமல் இருந்திருக்கின்றேனே! என்ன மனுஷன் நான்” என்று தன்னையே நொந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் வருகின்ற போர் விமானி விஷாலைப் போன்றுதான் பலரும் தங்கட்கு கீழ் பணிபுரியும் பணியாளர்கள் யார்? அவர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன? அவர்களுடைய குடும்பம் எப்படியிருக்கின்றது? என்பதைக் குறித்து சிறிதும் தெரியாமலும், தெரிந்துகொள்ள விருப்பமில்லாமலும் இருப்பதைக் காண முடிக்கின்றது. இத்தகைய சூழ்நிலையில் தனக்குக் கீழ் பணிபுரிந்த ஒரு பணியாளர் உயிர் பிழைக்கச் செய்யவேண்டும் என்பதற்காக என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அதையெல்லாம் செய்கின்ற – ஆண்டவர் இயேசுவின் உதவியை நாடுகின்ற நூற்றுவத் தலைவரைக் குறித்து இன்றைய நற்செய்தியில் வாசிக்கின்றோம். நூற்றுவத் தலைவர் தன்னுடைய பணியாளர்மீது கொண்டிருந்த அன்பும் மதிப்பும் எத்தகையது? அதற்காக அவர் என்ன செய்தார்? என்பவை பற்றிச் சிந்தித்துப் பார்ப்போம்.

பணியாளர்களை விலங்கினும் கீழாக நடத்திய/ நடத்தும் சமூகம்

          தொழிலாளர் நலச்சங்கம், தொழிலாளர்களின் உரிமைகள் என்று பேசப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலக்கட்டத்தில்கூட தொழிலார்களை ஒரு பொருட்டாக மதிக்காத ஒருநிலைதான் இருக்கின்றது. அப்படியானால், இவையெல்லாம் இல்லாத காலக்கட்டத்தில் தொழிலார்கள் அல்லது பணியாளர்களின் நிலை என்னவாக இருந்திருக்கும் என்று நாம் கற்பனை செய்து பார்ப்பதற்கே மிகவும் அச்சமாக இருக்கின்றது. உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், இயேசு வாழ்ந்த காலத்தில், பணியாளர்கள் எல்லாம் அடிமைகளைப் போன்று, ஏன், விலங்கினும் கீழாக நடத்தப்பட்டு வந்தார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் நற்செய்தியில் வருகின்ற நூற்றுவத் தலைவரோ தன்னுடைய பணியாளர்மீது மதிப்புக் கொண்டிருக்கின்றார். அவர் அந்தப் பணியாளர்மீது மதிப்புக் கொண்டிருந்தார் என்றால், அவர்மீது உண்மையான அன்பு கொண்டிருந்தார் என்றுதான் சொல்லலாம். இப்படிப் பணியாளர்களை அடிமைகள் போன்று நடத்தும் தலைவர்கட்கு நடுவில், தன் பணியாளர்மீது மதிப்புக் கொண்டிருந்ததால்,  நூற்றுவத் தலைவர் மற்றவர்களை விட அவர் தனித்துத் தெரிகின்றார்.

பணியாளர் பொருட்டு தன் நிலையிலிருந்து இறங்கி வந்த நூற்றுவத் தலைவர்

          நூற்றுவத் தலைவர் தன் பணியாளர்மீது மதிப்புக் கொண்டிருந்ததோடு மட்டுமல்லாமல், அவர் பொருட்டு - அவர் நலம் பெறும்பொருட்டுத் தன் நிலையிலிருந்து இறங்கி வருகின்றார். நூற்றுவத் தலைவர் நினைத்திருக்கலாம், ‘நான் எவ்வளவு பெரிய ஆள். ஒரு சாதாரண யூதப் போதகரிடம் இறங்கிப் போவதா? அதுவும் ஒரு பணியாளர்க்காக’ என்று. ஆனால், அவர் அப்படி நினைக்காமல், தன்னுடைய நிலையிலிருந்து இறங்கி, தனது பணியாளர்களை இயேசுவிடம் அனுப்பி வைக்கின்றார். அது மட்டுமல்லாமல், இயேசு தன்னுடைய வீட்டில் அடியெடுத்து வைக்க தான் தகுதியற்றவன் என்பதைத் தன் பணியாளர்கள் வழியாக அவரிடம் சொல்லச் சொல்கின்றார். இந்தத் தாழ்ச்சியும் நம்பிக்கையுமே, நூற்றுவத் தலைவருடைய பணியாளர்க்கு இயேசுவிடமிருந்து நலனைப் பெற்றுத் தருகின்றது.

நூற்றுவத் தலைவரிடமிருந்த தாழ்ச்சியும் நம்பிக்கையும் சக மனிதர்க்காக இன்னொருவரிடம் இறங்கிபோகும் நம்மிடம் இருக்கின்றதா? என்று சிந்தித்துப் பார்ப்போம்.

சிந்தனை

           ‘பிறரிடம் இரக்கமும் சகோதரர் அன்பும் பரிவுள்ளமும் மனத்தாழ்மையும் கொண்டிருங்கள்’ (1 பேது 3:8) என்பார் புனித பேதுரு. ஆகையால், நாம் நம்முடன் பணிபுரிபவர்களிடமும் ஏன், நமக்குக் கீழ் பணிபுரிபவர்களிடமும் நூற்றுவத் தலைவரைப் போன்று இரக்கமும் அன்பும் பரிவும் மனதாழ்மையும் கொண்டு வாழ்வோம் .அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


-          மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

 

Free Blog Widget
Stats Counter
hit counter