வாசகம்
maraikal
MUM

இளையோர்

 

                             பொதுக்காலம் 23 ம் வாரம் - 1ம் ஆண்டு

முதல் வாசகம்

ஆண்டவரும் தம் எண்ணத்தை மாற்றிக் கொண்டு தம் மக்களுக்குச் செய்யப்போவதாக அறிவித்த தீங்கைச் செய்யாது விட்டுவிட்டார்.

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 32: 7-11,13-14

அந்நாள்களில் ஆண்டவர் மோசேயை நோக்கி, "இங்கிருந்து இறங்கிப் போ. நீ எகிப்திலிருந்து நடத்தி வந்த உன் மக்கள் தங்களுக்குக் கேடு வருவித்துக் கொண்டனர். நான் கட்டளையிட்ட நெறியிலிருந்து இதற்குள்ளாகவே விலகி அவர்கள் தங்களுக்னெ ஒரு கன்றுக் குட்டியை வார்த்துக் கொண்டார்கள். அதற்கு வழிபாடு செய்து, பலியிட்டு, `இஸ்ரயேலே, எகிப்து நாட்டினின்று உன்னை நடத்தி வந்த தெய்வங்கள் இவையே' என்று கூறிக் கொள்கிறார்கள்'' என்றார்.

மேலும் ஆண்டவர் மோசேயிடம், "இம்மக்களை எனக்குத் தெரியும்; வணங்காக் கழுத்துள்ள மக்கள் அவர்கள். இப்போது என்னை விட்டுவிடு. அவர்கள்மேல் என் கோபக்கனல் மூண்டிருப்பதால் நான் அவர்களை அழித்தொழிக்கப் போகிறேன். உன்னையோ பேரினமாக்குவேன்'' என்றார்.

அப்போது மோசே தம் கடவுளாகிய ஆண்டவர் முன் மன்றாடி, "ஆண்டவரே, மிகுந்த ஆற்றலோடும் வலிமை மிகு கரத்தோடும் நீர்தாமே எகிப்து நாட்டிலிருந்து கொண்டுவந்த உம் மக்களுக்கு எதிராக உம் கோபம் மூள்வது ஏன்? உம் அடியாராகிய ஆபிரகாமையும், ஈசாக்கையும் இஸ்ரயேலையும் நினைந்தருளும். நான் உன் வழிமரபினரை விண்மீன்கள் போல் பெருகச் செய்வேன்; நான் வாக்களித்த இந்நாடு முழுவதையும் உன் வழிமரபினருக்கு அளிப்பேன்; அவர்கள் அதை என்றென்றும் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர் என்று நீராகவே அவர்களுக்கு ஆணையிட்டு அறிவித்துள்ளீரே'' என்று வேண்டிக்கொண்டார்.

அவ்வாறே ஆண்டவரும் தம் எண்ணத்தை மாற்றிக் கொண்டு தம் மக்களுக்குச் செய்யப்போவதாக அறிவித்த தீங்கைச் செய்யாது விட்டுவிட்டார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்

திபா 51: 1-2. 10-11. 15,17 (பல்லவி: லூக் 15: 18) mp3

பல்லவி: நான் புறப்பட்டு என் தந்தையிடம் போவேன்.

1 கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். 2 என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். பல்லவி

10 கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும். 11 உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். பல்லவி

15 என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்; அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும். 17 கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை. பல்லவி



இரண்டாம் வாசகம்

பாவிகளை மீட்க கிறிஸ்து இயேசு இவ்வுலகிற்கு வந்தார்.

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 12-17

அன்பிற்குரியவரே, எனக்கு வலுவூட்டும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி செலுத்துகின்றேன்.

ஏனெனில் நான் நம்பிக்கைக்குரியவன் என்று கருதி அவர் என்னைத் தம் திருத்தொண்டில் அமர்த்தினார். முன்னர் நான் அவரைப் பழித்துரைத்தேன்; துன்புறுத்தினேன்; இழிவுபடுத்தினேன். ஆயினும் நம்பிக்கை கொண்டிராத நிலையில் நான் அவ்வாறு நடந்ததால், அவர் எனக்கு இரங்கினார்.

இயேசு கிறிஸ்துவோடு இணைந்த நிலையில் ஏற்படும் நம்பிக்கையோடும் அன்போடும் நம் ஆண்டவரின் அருள் அளவின்றிப் பெருகியது.

`பாவிகளை மீட்க கிறிஸ்து இயேசு இவ்வுலகிற்கு வந்தார்'. - இக்கூற்று உண்மையானது; எல்லாராலும் ஏற்றுக்கொள்ளத் தக்கது. - அந்தப் பாவிகளுள் முதன்மையான பாவி நான். ஆயினும் கடவுள் எனக்கு இரங்கினார்.

நிலைவாழ்வை அடைய இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொள்ள இருப்போருக்கு நான் முன்மாதிரியாய் விளங்க வேண்டும் என்பதற்காக முதன்முதலில் என்னிடம் தம் முழுப் பொறுமையைக் காட்டினார். அழிவில்லாத, கண்ணுக்குப் புலப்படாத, எக்காலத்துக்கும் அரசராய் இருக்கின்ற ஒரே கடவுளுக்கு என்றென்றும் மாண்பும் மாட்சியும் உரித்தாகுக! ஆமென்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


2 கொரி 5: 19

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக உலகினரைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை அவரே எங்களிடம் ஒப்படைத்தார். அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-32

அக்காலத்தில் வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கி வந்தனர்.

பரிசேயரும் மறைநூல் அறிஞரும், "இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே'' என்று முணுமுணுத்தனர்.

அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: "உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற் போனதைக் கண்டுபிடிக்கும் வரை தேடிச்செல்ல மாட்டாரா?

கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொள்வார்; வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, 'என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற் போன என் ஆட்டைக் கண்டுபிடித்துவிட்டேன்' என்பார்.

அது போலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியைவிட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

பெண் ஒருவரிடம் இருந்த பத்துத் திராக்மாக்களுள் ஒன்று காணமாற் போய்விட்டால் அவர் எண்ணெய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும்வரை கவனமாகத் தேடுவதில்லையா?

கண்டு பிடித்ததும், அவர் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, 'என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன திராக்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன்' என்பார்.

அவ்வாறே மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கிறேன்.''

மேலும் இயேசு கூறியது: "ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி, `அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும்' என்றார். அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார். சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலை நாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார். அனைத்தையும் அவர் செலவழித்தார்.

பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்; எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார். அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார்; ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை.

அவர் அறிவு தெளிந்தவராய், `என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே! நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், `அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன்' என்று சொல்லிக்கொண்டார்.

உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார்.

தொலையில் வந்துகொண்டிருந்தபோதே, அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார். மகனோ அவரிடம், `அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்' என்றார்.

தந்தை தம் பணியாளரை நோக்கி, `முதல் தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்; கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம். ஏனெனில் என் மகன் இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்று வந்துள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்' என்றார்.

அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள்.

அப்போது மூத்த மகன் வயலில் இருந்தார். அவர் திரும்பி வீட்டை நெருங்கி வந்துகொண்டிருந்தபோது, ஆடல் பாடல்களைக் கேட்டு, ஊழியர்களுள் ஒருவரை வரவழைத்து, `இதெல்லாம் என்ன?' என்று வினவினார்.

அதற்கு ஊழியர் அவரிடம், `உம் தம்பி வந்திருக்கிறார். அவர் தம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால் உம் தந்தை கொழுத்த கன்றை அடித்திருக்கிறார்' என்றார்.

அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார்.

உடனே அவருடைய தந்தை வெளியே வந்து, அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார். அதற்கு அவர் தந்தையிடம், `பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமைபோன்று உமக்கு வேலை செய்து வருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், என் நண்பரோடு நான் மகிழ்ந்து கொண்டாட ஓர் ஆட்டுக் குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை.

ஆனால் விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துகளை எல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே!' என்றார்.

அதற்குத் தந்தை, `மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே. இப்போது நாம் மகிழ்ந்து கொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்' என்றார்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


அல்லது குறுகிய வாசகம்

மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-10


அக்காலத்தில் வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கி வந்தனர். பரிசேயரும் மறைநூல் அறிஞரும், "இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே'' என்று முணுமுணுத்தனர்.

அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: "உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற் போனதைக் கண்டுபிடிக்கும் வரை தேடிச்செல்ல மாட்டாரா?

கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொள்வார்; வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, `என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற் போன என் ஆட்டைக் கண்டுபிடித்துவிட்டேன்' என்பார்.

அது போலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியைவிட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

பெண் ஒருவரிடம் இருந்த பத்துத் திராக்மாக்களுள் ஒன்று காணமாற்போய்விட்டால் அவர் எண்ணெய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும்வரை கவனமாகத் தேடுவதில்லையா?

கண்டுபிடித்ததும், அவர் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, `என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற் போன திராக்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன்' என்பார்.

அவ்வாறே மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கிறேன்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

 


I           விடுதலைப் பயணம் 32: 7-11
II          1 திமொத்தேயு 1: 12-17
III         லூக்கா 15: 1-32


பாவிகளை வரவேற்கும் இயேசு

நிகழ்வு

          இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் தான் பணிசெய்து வந்த இடத்தில் தன்னோடு பணிசெய்து வந்த ஓர் இளம்பெண்ணை உயிருக்கு உயிராகக் காதலித்தான்; அவளையே திருமணம் செய்துகொள்வதென முடிவுசெய்தான். இது குறித்து அவன் தன்னுடைய தந்தையிடம் பேசியபோது அவர், “சொந்த பந்தத்தில் இருக்கின்ற ஒரு பெண்ணைப் பார், கட்டிவைக்கிறேன்... அதை விடுத்து யாரோ ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளப் போகிறாய் என்றால், என்னால் அவளை வீட்டில் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று மறுத்துவிட்டார். அவன் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தான். அப்படியும் அவர் இறங்கிவராததால், அவன் தான் உயிருக்கு உயிராக அன்புசெய்த அந்தப்பெண்ணை மணந்துகொண்டு பெருநகரில் ஒன்றில்  குடியேறினான்.

அவன் தந்தையை விட்டுப் பிரிந்துவந்தாலும், ஒவ்வொரு வாரமும் அவர்க்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பிக்கொண்டே இருந்தான். அந்தக் கடிதத்தில் அவன் அவருடைய நலத்தை விசாரித்தும் அவருடைய சொல்பேச்சுக் கேட்டு நடக்காததற்கு மன்னிப்புக் கேட்டும் எழுதினான். ஆனால், அவனுடைய தந்தையிடமிருந்து மட்டும் எந்தவொரு பதில் கடிதமும் வரவில்லை. அப்படியிருந்தும் அவன் தன் தந்தைக்குக் கடிதம் எழுதுவதை மட்டும் நிறுத்தவே இல்லை. பத்து ஆண்டுகட்கும் மேல் எழுதிக் கொண்டே வந்தான்.

ஒருநாள் அவனுடைய முகவரிக்கு கனமான ஒரு பொட்டலம் (Parcel) வந்தது. அனுப்புநர் முகவரியை அவன் பார்த்தபோது, அதில் அவனுடைய தந்தையிடம் முகவரி குறிப்பிடப்பட்டிருந்தது. அவனால் நம்ப முடியவில்லை. ஒரு பக்கம் மகிழ்ச்சி, இன்னொரு பக்கம் பதற்றம். ‘இந்தப் பொட்டலத்திற்குள் என்ன இருக்குமோ?’ என்ற கலவையான எண்ணங்களோடு அவன் அதைப் பிரித்துப் பார்த்தன். அதில் அவன் பத்தாண்டுகட்கும் மேல் தன் தந்தைக்கு எழுதி அனுப்பிய கடிதங்களெல்லாம் இருந்தன, அதுவும் எந்தக் கடிதமும் பிரிக்கப்படாமலேயே இருந்தன. அப்பொழுது அவன், “இத்தனை ஆண்டுகளும் நான் எழுதி அனுப்பிய ஒரு கடிதத்தையாவது என் தந்தை பிரித்தப் பார்த்திருந்தால்கூட அவர் என்னை தன் மகனாக ஏற்றுக்கொண்டிருப்பாரே! இப்படி எதையுமே பிரித்துப் பார்க்காமல், நான் செய்த தவறையும் மன்னிக்காமல் வைராக்கியத்தோடு இருக்கிறாரே’ என்று மிகவும் வேதனைப்பட்டான்.

இந்த நிகழ்வில் வருகின்ற தந்தையைப் போன்றுதான் பலர், தவறுசெய்தவர்களை (சில சமயங்களில் அது தவறில்லாமல் கூட இருக்கலாம்) மன்னித்து ஏற்றுக்கொள்ளும் மனதில்லாமல் இருக்கின்றார்கள். ஆனால், இவர்கட்கெல்லாம் முற்றிலும் மாறாக, தவறு செய்தபின் மனம் திருந்தியவர்களை, பாவிகளை உள்ளன்போடு ஏற்றுக்கொள்ளக்கூடியவராக விண்ணகத் தந்தை இருக்கின்றார் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் எடுத்துச் சொல்கின்றது. அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

பாவிகளை வரவேற்ற/ தேடிச்சென்ற இயேசு

          ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பாவிகளைத் தேடி மீட்டதையும் (லூக் 19: 10) பாவிகளோடு இருந்ததையும் (மத் 9: 10) பார்த்த பரிசேயக்கூட்டம், “இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே” என்று அவருக்கு எதிராக முணுமுணுக்கத் தொடங்குகிறார்கள். அப்பொழுது இயேசு, தான் ஏன் பாவிகளைத் தேடி மீட்கிறேன், எதற்காக அவர்களோடு தன்னை ஒன்றித்துக் கொள்கிறேன் என்பதை விளக்க, காணாமல் போன ஆடு உவமை, காணாமல் போன திராக்மா உவமை, காணாமல் போன மகன் உவமை என்ற மூன்று உவமைகளைச் சொல்கின்றார். இம்மூன்று உவமைகளிலும் அடிநாதமாக இருப்பவை, காணாமல் போதல், கண்டுகொள்ளுதல், மகிழ்ச்சி உண்டாகுதல் என்ற மூன்று கருத்துகள்தான். இம்மூன்று கருத்துகளையும் தனித்தனியாக சிந்தித்துப் பார்த்துவிட்டு, அவற்றின் மூலம் இயேசு ஏன் பாவிகளை வரவேற்றார் என்று தெரிந்துகொள்வோம்.
  1. காணாமல் போதல்


லூக்கா நற்செய்தியில் இடம்பெறுகின்ற மூன்று உவமைகளிலும் வெளிப்படக்கூடிய முதலாவது உண்மை, காணாமல் போதல் ஆகும். காணாமல் போன ஆடு உவமையில் வரும் அந்த ஆடானது, தன்னுடைய மதியினத்தால் அல்லது அறிவுகெட்டத்தனத்தால் காணாமல் போகிறது. ஆடு என்றால், ஆயனின் குரல் கேட்டு நடக்கவேண்டும். ஆனால், காணாமல் போன ஆடோ ஆயனின் குரல் கேட்கமால், தன்னுடைய மதியினத்தால் தொலைந்து போகின்றது. காணாமல் போன திராக்மா உவமையில் வரும் அந்த திராக்மா, அதை வைத்திருந்த பெண்ணின் கவனக்குறைவால் காணாமல் போகின்றது. இதை ஒருசில வீடுகளில் பெற்றோர்களின் நெறிகெட்ட வாழ்க்கையால் பிள்ளைகளும் கேட்டுப் போகிறார்களே, அதற்கு ஒப்பிடலாம். எப்படியிருந்தாலும் காணாமல் போனது அல்லது பாவத்தில் விழுந்தது பாவத்தில் விழுந்ததுதான். காணாமல் போன மகன் உவமையில் வரும் இளைய மகன் தெரிந்த காணாமல் போகிறான் அல்லது தெரிந்தே பாவத்தில் விழுகின்றான்.

காணாமல் போவதும் பாவத்தில் விழுவதும் இறப்பதற்குச் சமம் (15: 24) என்று இதே அதே அதிகாரம் நமக்கு எடுத்துச் சொல்கின்றது. இப்படிக் காணாமல் போன அல்லது இறந்துபோன(வை)(வர்)கள் எப்படிக் கண்டுகொல்லப்பட்டார்கள் என்று தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.
 

  1. கண்டுகொள்ளுதல்


மூன்று உவமைகளிலும் வெளிப்படும் இரண்டாவது முக்கியமான உண்மை, கண்டுகொள்ளுதல். காணாமல் ஆடு உவமையிலும் காணாமல் போன திராக்மா உவமைவிலும் உரிமையாளர்களே அவற்றைத் தேடிக் கண்டுகொள்கின்றார்கள். இதனை ஆண்டவர் இயேசு பாவிகளைத் தேடிவந்து மீட்டதற்கு ஒப்பிடலாம் (லூக் 19: 10). ஆனால், காணாமல் போன மகன் உவமையில் அப்படியில்லை. அதில் காணாமல் போன மகனே, தந்தையின் பேரன்பையும் இரக்கத்தையும் உணர்ந்து, தன்னுடைய பாவத்தைக் கண்டுகொண்டு தந்தையிடம் திரும்பி வருகின்றான். இவ்வுவமை தந்தைக் கடவுள் பேரன்புடையவராக இருந்தாலும், மனிதர்களாகிய நாம், நம்முடைய இயலாமையை, பாவத்தை உணர்ந்து, அவரிடம் சேரவேண்டும் என்ற உண்மையை எடுத்துச் சொல்வதாக இருகின்றது.
 

  1. மகிழ்ச்சி உண்டாகுதல்


மூன்று உவமைகளும் எடுத்துரைக்கும் மூன்றாவது, மிக முக்கியமான உண்மை. மகிழ்ச்சி உண்டாகுதல் என்பதாகும். காணாமல் போன ஆட்டைக் கண்டுபிடிக்கும் ஆயர் நண்பர்களோடும் அண்டை வீட்டாரோடும் சேர்ந்து மகிழ்கின்றார்; காணாமல் போன திராமாவைக் கண்டுபிடித்தவரோ தன் தோழியரோடும் அண்டைவீட்டாரோடும் மகிழ்சிகின்றார்; காணாமல் போன மகனைக் கண்டுகொண்ட தந்தை தன் பணியாளர்கள் எல்லாரோடும் விருந்து கொண்டாடுகின்றார். இன்னும் சொல்லவேண்டும் என்றால், ஒரு பாவி மனம் மாறுகின்றபோது அது அவரைச் சார்ந்தவர்கட்கும் மட்டுமல்லாது, விண்ணுலகிலும் கடவுளின் தூதர்கட்கும் மகிழ்ச்சியைத் தரக்கூடிய ஒரு செயலாக இருக்கின்றது.

இப்படி ஒரு பாவியின் மனமாற்றத்தினால் எல்லாருக்கும் மகிழ்ச்சி ஏற்படுகின்றது என்பதால்தான் இயேசு அவர்களைத் தேடிச் செல்கின்றார்; தவறை உணர்ந்து திருந்தியவர்களை அன்போடு வரவேர்கின்றார். இந்த உண்மையை உணராமலும் தாங்களும் பாவிகள்தான் என்பதை அறியாமலும் இருந்ததால்தான் காணாமல் போன மகன் உவமையில் வருகின்ற மூத்த சகோதரனைப் போன்று பரிசேயக் கூட்டம், இயேசு பாவிகளை வரவேற்றதற்கு முணுமுணுக்கிறார்கள். பலநேரங்களில் நாமும்கூட, தவறுகளை உணர்ந்து, திருந்தி வருகின்றவர்களை திறந்த மனதோடு ஏற்றுக்கொள்ளாதவர்களாக இருக்கின்றோம். இத்தகைய போக்கினை நம்மிடமிருந்து அப்புறப்படுத்திவிட்டு இயேசுவைப் போன்று பாவிகளை அன்போடு ஏற்றுக்கொள்ள முயற்சி செய்வோம்.

சிந்தனை

‘யாரும் அழிந்து போகாமல், எல்லாரும் மனம் மாறவேண்மென இறைவன் விரும்புகிறார்’ (1 பேது 3:9) என்பார் புனித பேதுரு. ஆகையால், நாம் மனம்மாறி  அவரிடம் திரும்பி வரவேண்டும் என்று விரும்பும் அன்பு இறைவனிடம் திரும்பி வருவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாகப் பெறுவோம்.
 

-     மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


 

 

Free Blog Widget
Stats Counter
hit counter