maraikal
MUM
"
வாசகம்

 

                                                    பொதுக்காலம் 23 ம் வாரம் - 1ம் ஆண்டு

முதல் வாசகம்

அன்பையே கொண்டிருங்கள். அதுவே நற்பண்புகள் அனைத்தையும் நிறைவு பெறச் செய்யும்.

திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்3:12-17

சகோதரர் சகோதரிகளே, நீங்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள், அவரது அன்பிற்குரிய இறைமக்கள். எனவே அதற்கிசைய பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை ஆகிய பண்புகளால் உங்களை அணிசெய்யுங்கள். ஒருவரை ஒருவர் பொறுத்துக் கொள்ளுங்கள். ஒருவரைப் பற்றி ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால் மன்னியுங்கள். ஆண்டவர் உங்களை மன்னித்தது போல நீங்களும் மன்னிக்க வேண்டும்.

இவை அனைத்துக்கும் மேலாக, அன்பையே கொண்டிருங்கள். அதுவே இவை அனைத்தையும் பிணைத்து நிறைவு பெறச் செய்யும். கிறிஸ்து அருளும் அமைதி உங்கள் உள்ளங்களை நெறிப்படுத்துவதாக! இவ்வமைதிக்கென்றே நீங்கள் ஒரே உடலின் உறுப்புகளாக இருக்க அழைக்கப்பட்டீர்கள்.

நன்றியுள்ளவர்களாய் இருங்கள். கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடி கொள்வதாக! முழு ஞானத்தோடு ஒருவருக்கு ஒருவர் கற்பித்து அறிவுரை கூறுங்கள். திருப்பாடல்களையும் புகழ்ப் பாக்களையும் ஆவிக்குரிய பாடல்களையும் நன்றியோடு உளமாரப் பாடிக் கடவுளைப் போற்றுங்கள்.

எதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும் அனைத்தையும் ஆண்டவர் இயேசுவின் பெயரால் செய்து அவர் வழியாய்த் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 150: 1-2. 3-4. 5-6 (பல்லவி: 6) mp3

பல்லவி: அனைத்து உயிர்களே, ஆண்டவரைப் புகழ்ந்திடுக! அல்லது: அல்லேலூயா.

1 தூயகத்தில் இறைவனைப் போற்றுங்கள்! வலிமைமிகு விண்விரிவில் அவரைப் போற்றுங்கள்! 2 அவர்தம் வல்ல செயல்களுக்காய் அவரைப் போற்றுங்கள்! அவர்தம் எல்லையிலா மாண்பினைக் குறித்து அவரைப் போற்றுங்கள்! பல்லவி

3 எக்காளம் முழங்கியே அவரைப் போற்றுங்கள்! வீணையுடன் யாழிசைத்து அவரைப் போற்றுங்கள். 4 மத்தளம் கொட்டி நர்த்தனம் செய்து அவரைப் போற்றுங்கள்! யாழினை மீட்டி, குழலினை ஊதி அவரைப் போற்றுங்கள்! பல்லவி

5 சிலம்பிடும் சதங்கையுடன் அவரைப் போற்றுங்கள்! 'கலீர்' எனும் தாளத்துடன் அவரைப் போற்றுங்கள்! 6 அனைத்து உயிர்களே, ஆண்டவரைப் புகழ்ந்திடுக! பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

1 யோவா 4: 12

அல்லேலூயா, அல்லேலூயா! நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோம் என்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப்பார்; அவரது அன்பு நம்மிடம் நிறைவு பெறும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கமுள்ளவர்களாய் இருங்கள்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 27-38

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்குக் கூறுகிறேன்: உங்கள் பகைவரிடம் அன்பு கூருங்கள்; உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள்.

உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள்; உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.

உங்களை ஒரு கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்.

உங்கள் மேலுடையை எடுத்துக் கொள்பவர் உங்கள் அங்கியையும் எடுத்துக்கொள்ளப் பார்த்தால் அவரைத் தடுக்காதீர்கள்.

உங்களிடம் கேட்கும் எவருக்கும் கொடுங்கள். உங்களுடைய பொருள்களை எடுத்துக்கொள்வோரிடமிருந்து அவற்றைத் திருப்பிக் கேட்காதீர்கள். பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.

உங்களிடம் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்தினால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? பாவிகளும் தங்களிடம் அன்பு செலுத்துவோரிடம் அன்பு செலுத்துகிறார்களே.

உங்களுக்கு நன்மை செய்பவர்களுக்கே நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? பாவிகளும் அவ்வாறு செய்கிறார்களே. திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என எதிர்பார்த்து நீங்கள் கடன் கொடுத்தால் உங்களுக்கு வரும் நன்மை என்ன?

ஏனெனில், முழுவதையும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்னும் நோக்குடன் பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே.

நீங்கள் உங்கள் பகைவரிடமும் அன்பு செலுத்துங்கள்; அவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; திரும்பக் கிடைக்கும் என எதிர்பார்க்காமல் கடன் கொடுங்கள். அப்போது உங்கள் கைம்மாறு மிகுதியாய் இருக்கும். நீங்கள் உன்னத கடவுளின் மக்களாய் இருப்பீர்கள். ஏனெனில் அவர் நன்றிகெட்டோருக்கும் பொல்லாதோருக்கும் நன்மை செய்கிறார்.

உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள். பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாகமாட்டீர்கள்.

மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள்; அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள்.

மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள். கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

 

மறையுரை சிந்தனை

லூக்கா 6: 27-38

“கொடுங்கள்; கொடுக்கப்படும்”

நிகழ்வு

ஒரு நகரில் திருமணமாகிப் பல ஆண்டுகளாகியும் குழந்தையே இல்லாத ஒரு கணவனும் மனைவியும் வாழ்ந்துவந்தனர். இருவரும் ஒருவரையொருவர் தங்களுடைய உயிரினும் மேலாக அன்பு செய்துவந்தனர். திடீரென்று ஒருநாள் கணவர் பெரிய விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்ததால், அவருடைய மனைவி தன்னுடைய வாழ்வில் இருந்த மகிழ்ச்சி, நிம்மதி எல்லாமே போய்விட்டதென நொறுங்கிப்போய் நின்றார். இதற்குப் பின்பு அவர் யாருடனும் பேசமால், நான்கு சுவர்கட்குள் தன்னை அடைத்துகொண்டு தனிமையில் நாள்களைக் கழித்து வந்தார்.

இப்படியிருக்கையில் ஒருநாள் அவர் தன்னுடைய வீட்டின் சாளரத்தின் வழியாக தெருவில் போவோர் வருவோரைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, இரண்டு சிறுவர்கள் சரியான உடையில்லாமலும், காலில் சரியான செருப்பு இல்லாமலும் ஒரு குடிசை வீட்டிற்கு முன்பாகப் படுத்துக் கிடப்பதைக் கண்டார். அவர்கள் இருவரையும் அவர் பார்த்தவுடன் அவர்கட்கு ஏதாவது செய்யவேண்டும் என்று அவருடைய உள்மனம் அவரை உந்தித் தள்ளியது. எனவே அவர் அந்த சிறுவர்களிடம் சென்று, “உங்களுடைய பெற்றோர் எங்கே?” என்று கேட்டார். “அவர்கள் இருவரும் இறந்து ஐந்தாண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்பொழுது நாங்கள் இருவரும் அநாதைகள்” என்றார்கள் அவர்கள் இருவரும். “சாப்பாட்டிற்கும் மற்ற தேவைகட்கும் நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று அவர் அவர்களிடம் கேட்டபோது, அவர்கள், “பக்கம் பக்கத்திலிருப்பவர்கள் கொடுக்கின்றவற்றைக் கொண்டு நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்” என்றார்கள்.

இதற்குப் பின்பு அவர் அவர்கள் இருவரையும் தன்னோடு அழைத்துக்கொண்டு ஒரு பெரிய துணிக்கடைக்குள் நுழைந்தார். அங்கு அவர் அவர்கள் இருவரிடமும், “உங்கட்குத் தேவையான துணிமணிகளை எடுத்துக்கொள்ளுங்கள்” என்றார். அவர்கள் தங்கட்கு வேண்டிய துணிமணிகளை எடுத்துக்கொண்டார்கள். பின்னர் அவர் அவர்கள் இருவரும் எடுத்த துணிமணிகட்கு உரிய தொகையைச் செலுத்துவிட்டு, இருவரையும் அழைத்துக்கொண்டு ஒரு செருப்புக் கடைக்குள் நுழைந்தார். அங்கேயும் அவர் அவர்கள் இருவரிடமும் அவர்கட்கு பிடித்தமான செருப்புகளை எடுத்துக்கொள்ளச் சொன்னார். அவர்களும் அவர்கட்கு பிடித்தமான செருப்புகளை எடுத்துக் கொண்டார்கள்.

இதற்குப் பின்பு அவர் அவர்கள் இருவரையும் வீட்டுக்கு அழைத்து வந்து, “நீங்கள் இருவரும் எனக்கு பிள்ளைகள் போன்றவர்கள். அதனால் நீங்கள் எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் கேட்கலாம்” என்றார். அதைக் கேட்ட அந்த இரண்டு சிறுவர்களும், “சரிம்மா” என்று வாஞ்சையோடு சொல்லிவிட்டு அவரிடமிருந்து விடைபெற்றார்கள். அப்பொழுது அவர் தன்னுடைய மனதில் இருந்த அத்தனைக் கஷ்டங்களும் மறந்து, வார்த்தைகளால் விவரிக்க முடியாத மகிழ்ச்சி பிறப்பதை உணரத் தொடங்கினார்.

ஆம், நாம் நம்மிடம் இருப்பதைப் பிறர்க்குக் கொடுக்கின்றபோது அது தருகின்ற மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரித்துச் சொல்ல முடியாது என்ற உண்மையை உரக்கச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. இந்த நற்செய்தி வாசகம், கொடுப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துச் சொல்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

கேட்பவர்க்குக் கொடுக்கவேண்டும்

நற்செய்தியில் இயேசு கொடுப்பதன் முக்கியத்துவத்தைக் குறித்துப் பேசும்போது, ‘கேட்பவர்கட்குக் கொடுங்கள்‘ என்கின்றார். இதை நாம் எப்படிப் புரிந்துகொள்வது? இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

யாராவது ஒருவர் தேவையில் இருக்கின்றார் என்றால், அவர் தன்னிலும் வறியவரிடம் கேட்பது கிடையாது; அரிதிலும் அரிதாகக் கேட்பதுண்டு. ஆனால், அவர்கள் வசதிபடைத்தவர்களிடம் கேட்பார்கள். அப்படியானால் மிகுதியாக வைத்திருப்பவர்களிடம்தான் கேட்கப்படும். இயேசு சொல்வது போல, “மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும் (லூக் 12: 48) வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால், மிகுதியாகக் கொடுக்கப்பட்டவர்களிடம் மிகுதியாகக் கேட்கப்படும். அப்படிப்பட்டவர்கள் கேட்பவர்கட்கு முகம் கோணாமல் தாராளமாகக் கொடுக்கவேண்டும். இது அவர்களுடைய சமூகக் கடமையும் கூட.

திரும்பக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில்லாமல் கொடுக்கவேண்டும்

கொடுப்பதன் முக்கியத்துவத்தைக் குறித்து ஆண்டவர் இயேசு பேசும்போது, 'திரும்பக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில்லாமல் கொடுங்கள்' என்கின்றார். நிறைய நேரங்களில் பலரும் கொடுக்கின்றபோது கைம்மாறு கருதியே அல்லது பிரதிபலன் எதிர்பார்த்தே கொடுப்பதைக் காணமுடிகின்றது. இப்படிப் கைம்மாறு கருதியும் பிரதிபலன் எதிர்பார்த்தும் கொடுக்கக்கூடியவர்கள் பாவிகட்கு இணையானவர்கள் என்று ஆண்டவர் இயேசு கூறுகின்றார். ஆகையால், நாம் கொடுக்கின்றபோது எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல், ஏன், கேட்பவர் கேட்குமுன்பே அவர்களுடைய தேவையை அறிந்து கொடுக்கக் கற்றுக் கொள்ளவேண்டும். அப்போதுதான் நாம் கடவுளின் அன்பு மக்களா மாறமுடியும்.

சிந்தனை

'சாக்கடல் பெயர்க்கு ஏற்றாற்போல் சாக்கடலாக இருக்கக் காரணம், அது தம்மிடமிருந்து எதையும் கொடுக்காமல், பெற்றுக்கொண்டே இருக்கின்றது. அதனால்தான் அது சாக்கடலாக இருக்கின்றது' என்பார். நாம் பெறுபவர்காக அல்லாமல், கொடுப்பவர்களாக இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

 

Free Blog Widget
Stats Counter
hit counter