maraikal
MUM
"


பொதுக்காலம் 24 ஆம் வாரம்  14-09-2020

முதல் வாசகம்

கொள்ளிவாய்ப் பாம்பைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்.

எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 21: 4-9

அந்நாள்களில்

ஏதோம் நாட்டைச் சுற்றிப் போகும்படி ஓர் என்ற மலையிலிருந்து இஸ்ரயேல் மக்கள் "செங்கடல் சாலை" வழியாகப் பயணப்பட்டனர்; அவ்வழியை முன்னிட்டு மக்கள் பொறுமை இழந்தனர். மக்கள் கடவுளுக்கும் மோசேக்கும் எதிராகப் பேசினர்: "இந்தப் பாலைநிலத்தில் மாளும்படி எங்களை எகிப்திலிருந்து கொண்டு வந்தது ஏன்? இங்கு உணவுமில்லை, தண்ணீருமில்லை, அற்பமான இந்த உணவு எங்களுக்கு வெறுத்துப் போய்விட்டது" என்றனர்.

உடனே ஆண்டவர் கொள்ளிவாய்ப் பாம்புகளை மக்களிடையே அனுப்பினார்; அவை கடிக்கவே இஸ்ரயேல் மக்களில் பலர் மாண்டனர். அப்போது மக்கள் மோசேயிடம் வந்து, "நாங்கள் பாவம் செய்துள்ளோம்; நாங்கள் ஆண்டவருக்கும் உமக்கும் எதிராகப் பேசியுள்ளோம்; அவர் இந்தப் பாம்புகளை அகற்றிவிடும்படி நீர் ஆண்டவரிடம் வேண்டிக் கொள்ளும்" என்றனர்.

அவ்வாறே மோசே மக்களுக்காக மன்றாடினார். அப்போது ஆண்டவர் மோசேயிடம், "கொள்ளிவாய்ப் பாம்பு ஒன்றைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்து; கடிக்கப்பட்டோரில் இதைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்" என்றார். அவ்வாறே மோசே ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்தினார்; பாம்பு கடித்த எந்த ஒரு மனிதனும் இந்த வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைப்பான்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 78: 1-2. 34-35. 36-37. 38 . (பல்லவி: 7b) Mp3

பல்லவி: இறைவனின் செயல்களை மறவாதிருங்கள்.
1
என் மக்களே, என் அறிவுரைக்குச் செவிசாயுங்கள்; என் வாய்மொழிகளுக்குச் செவிகொடுங்கள்.
2
நீதிமொழிகள் மூலம் நான் பேசுவேன்; முற்காலத்து மறைச் செய்திகளை எடுத்துரைப்பேன். - பல்லவி

34
அவர்களை அவர் கொன்றபோது அவரைத் தேடினர்; மனம் மாறி இறைவனைக் கருத்தாய் நாடினர்.
35
கடவுள் தங்கள் கற்பாறை என்பதையும் உன்னதரான இறைவன் தங்கள் மீட்பர் என்பதையும் அவர்கள் நினைவில் கொண்டனர். - பல்லவி

36
ஆயினும், அவர்கள் உதட்டளவிலேயே அவரைப் புகழ்ந்தார்கள்; தங்கள் நாவினால் அவரிடம் பொய் சொன்னார்கள்.
37
அவர்கள் இதயம் அவரைப் பற்றிக்கொள்வதில் உறுதியாய் இல்லை; அவரது உடன்படிக்கையில் அவர்கள் நிலைத்து நிற்கவில்லை. - பல்லவி

38
அவரோ இரக்கம் கொண்டவராய், அவர்கள் குற்றத்தை மன்னித்தார்; அவர்களை அழித்துவிடவில்லை, பலமுறை தம் கோபத்தை அடக்கிக்கொண்டார். தம் சினத்தையெல்லாம் அவர்களுக்கு எதிராய் மூட்டவில்லை. - பல்லவி

இரண்டாம் வாசகம்

கிறிஸ்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்; எனவே கடவுளும் கிறிஸ்துவை உயர்த்தினார்.

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 6-11

சகோதரர் சகோதரிகளே,

கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக "இயேசு கிறிஸ்து ஆண்டவர்" என எல்லா நாவுமே அறிக்கையிடும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவே, உம்மை ஆராதித்து வாழ்த்துகின்றோம்; ஏனெனில், உம் சிலுவையாலே உலகை மீட்டீரே. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மானிட மகன் உயர்த்தப்பட வேண்டும்.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 13-17


அக்காலத்தில்

இயேசு நிக்கதேமிடம் கூறியது: "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத் தவிர வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை. பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிட மகனும் உயர்த்தப்பட வேண்டும். அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்.

தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்."

ஆண்டவரின் அருள்வாக்கு.
 

 


1 கொரிந்தியர் 11: 17, 26-33

ஆண்டவரின் திருவிருந்தில் பங்குபெறுவோர் அடுத்திருப்பவரையும் நினைத்துப் பார்க்கவேண்டும்

நிகழ்வு



ஒருநாள் கொல்கொத்தாவில் இருந்த புனித தெரசாவின் – அன்னைத் தெரசாவின் – இல்லத்திற்கு ஒரு கணவனும் மனைவியும் வந்திருந்தனர். அவர்கள் இருவரும் தெரசாவிடம் ஒரு பெரிய தொகையைக் கொடுத்து, "அன்னையே! இதை இந்த இல்லத்திலிருக்கின்ற குழந்தைகளுக்கு உணவு கொடுக்கப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்" என்றார்கள்.

கொல்கொத்தாவிலிருந்த அன்னையின் இல்லத்தில் ஒன்பதாயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தார்கள். அத்தனை பேருக்கும் ஒருசில நல்ல உள்ளங்கள் அவ்வப்பொழுது பணவுதவி செய்து, அவர்களுடைய பசியை ஆற்றி வந்தார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தப் புதுமணத் தம்பதியர் அன்னையிடம் ஒரு பெரிய தொகையைக் கொடுத்து, குழந்தைகளுக்கு உணவு கொடுக்கப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொன்னது அன்னைக்கு வியப்பாக இருந்தது.

அப்பொழுது அன்னை அவர்களிடம், "உங்களைப் பார்க்கும்பொழுது வயதில் சிறியவர்களாக இருக்கின்றீர்கள்... இவ்வளவு பெரிய தொகை உங்களுக்கு எப்படிக் கிடைத்தது...?" என்று கேட்டபொழுது, அவர்கள் அன்னையிடம், "நாங்கள் இருவரும் இரண்டு நாள்களுக்கு முன்புதான் திருமணம் செய்துகொண்டோம். திருமணத்திற்கு முன்பு, நாங்கள் இருவரும், "நம்முடைய திருமணத்தை நாம் மற்ற எல்லாரையும் போன்று ஆடம்பரமாக நடத்தக்கூடாது; மாறாக, திருமணத்திற்குச் செலவாகும் பணத்தை ஏழைக் குழந்தைகளுக்கு உணவு கொடுக்கப் பயன்படுத்துவோம்" என்று முடிவுசெய்தோம். அப்படி வந்ததுதான் இந்தத் தொகை" என்றார்கள்

அவர்கள் சொன்னதை மிகவும் வியப்போடு கேட்டுக்கொண்டிருந்த அன்னை அவர்களிடம், "எது உங்களை ஏழைக் குழந்தைகளுக்கு உணவளிக்க உந்தித் தள்ளியது?" என்று கேட்க, அவர்கள் அவரிடம், "நாங்கள் இருவரும் கடவுள்மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள். அதே நேரத்தில் ஒருவர் மற்றவரிடமும் மிகுந்த அன்பு கொண்டவர்கள். அதனால் எங்களுடைய அன்பின் அடையாளமாக இருக்கட்டும் என்பதற்காக இப்படியொரு செயலைச் செய்தோம்" என்றார்கள். இதைக் கேட்டுப் பெரிதும் மகிழ்ந்த அன்னைத் தெரசா அவர்களை மனதார வாழ்த்தினார்.

ஆம், நாம் கடவுளிடம் அன்பும் பற்றும் கொண்டிருக்கின்றோம் எனில், அந்த அன்பையும் பற்றையும் அடுத்திருப்பவரிடத்தில் காட்டவேண்டும். அந்த விதத்தில் கடவுளிடமும் தங்களிடமும் மிகுந்த அன்புகொண்டிருந்த அந்தப் புதுமணத் தம்பதியர், தங்களுடைய அன்பின் வெளிப்பாடாக, ஏழைக் குழந்தைகளுக்கு உணவு கொடுக்க ஒரு பெரிய தொகையைக் கொடுத்தது உண்மையில் பாராட்டுக்குரியது. இன்றைய முதல் வாசகம், நாம் கடவுளிடம் கொண்டிருக்கும் அன்பை பிறரிடத்தில் வெளிப்படுத்தப்படாமல் இருந்தால், அது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை எடுத்துக்கூறுகின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பாப்போம்.

ஒன்றுகூடி வந்தபொழுது நன்மையை விடத் தீமையைச் செய்த கொரிந்து நகர் மக்கள்

கொரிந்து நகர்த் திருஅவையில் பலதரப்பட்ட மக்கள் இருந்தார்கள். குறிப்பாக பணக்காரர்கள் இருந்தார்கள்; ஒருவேளை நல்ல உணவு உண்பதற்கும் வழியில்லாத ஏழை எளிய மக்களும் இருந்தார்கள். இந்த ஏழை எளிய மக்கள், இறைமக்கள் யாவரும் ஒன்றுகூடி வரும் ஆண்டவரின் திருவிருந்தின்பொழுது, வழங்கப்படும் "ஆகாபே" உணவுக்காக ஆவலோடு காத்திருந்தார்கள்; ஆனால், பணக்காரர்களோ தாங்கள் கொண்டு வந்த உணவை, ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுக்காமலும், அவர்களுக்காகக் காத்திருக்காமலும், முன்னதாக உண்டுவிட்டு கிளம்பிச் சென்றனர். இதனால் இந்த உணவுக்காகக் காத்திருந்த ஏழைகள் பட்டினி கிடக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதைப் பார்த்துவிட்டுத்தான் புனித பவுல், நீங்கள் ஒன்றுகூடி வருகின்றபொழுது நன்மையல்ல, தீமையே மிகுதியாக விளைகின்றது என்கின்றார்.

தகுதியற்ற நிலையில் ஆண்டவரின் திருவிருந்தில் பங்கு பெறுவது குற்றம்

புனித பவுல் கொரிந்து நகரில் இருந்த இறைமக்களிடம், நீங்கள் கிறிஸ்துவில் ஓருடலாக இருக்கின்றீர்கள் என்பதை மீண்டும் மீண்டுமாக வலியுறுத்தி வந்தார். இறைமக்கள் யாவரும் கிறிஸ்துவின் உறுப்புகளாக இருக்கின்றார்கள் எனில், அவர்கள் ஒருவர் மற்றவரிடத்தில் கரிசனையோடும் அன்போடும் இருக்கவேண்டும். கொரிந்து நகர்த் திருஅவையில் இருந்த ஒருசில பணக்காரர்கள், இந்த உண்மையை உணராமல், ஏழைகள்மீது கரிசனையோடு இல்லாமல், தாங்கள் கொண்டுவந்த உணவைத் தாங்களாகவே உண்டு சென்றதால்தான் அல்லது பிறருக்காகக் காத்திராமல் உண்டதால்தான், தகுதியற்ற நிலையில் ஆண்டவரின் திருவிருந்தில் பங்குபெறுவது மிகப்பெரிய குற்றம் என்று கூறுகின்றார் புனித பவுல். அப்படியெனில், ஒருவர் ஆண்டவரிடம் கொண்டிருக்கும் அன்பை அடுத்தவரிடமும் காட்டி, திருவிருந்தில் கலந்துகொள்வதற்குத் தன்னை தகுதியுள்ளவராக மாற்றவேண்டும் என்பது உண்மையாகின்றது.

நாம் ஆண்டவரிடம் கொண்டிருக்கும் அன்பை, அடுத்தவரிடமும் கொண்டிருக்கின்றோமா? சிந்தித்துப் பார்ப்போம்.

சிந்தனை

"நான் பசியாய் இருந்தேன்; நீங்கள் உணவு கொடுத்தீர்கள்" (மத் 25: 35) என்பார் இயேசு. ஆகையால், நாம் அடுத்தவருக்குச் செய்யும் உதவி, ஆண்டவருக்குச் செய்யும் உதவி என்பதை உணர்ந்து, ஆண்டவரிடம் நாம் கொண்டிருக்கும் அன்பை அடுத்திருப்பவரிடமும் காட்டுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
லூக்கா 7: 1-10

"நமக்குக் கீழே உள்ளவர்களை நாம் பார்த்துக்கொண்டால், நமக்கு மேலே உள்ளவர் நம்மைப் பார்த்துக்கொள்வார்"

நிகழ்வு



ஜெர்மனியை ஆண்டு வந்தவர் இரண்டாம் ஃபிரெட்ரிக் என்ற மன்னர் (1740-1786) இவரிடம் கார்ல் என்ற இளைஞன் பணியாற்றி வந்தான். இவனுடைய வேலையெல்லாம் மன்னரின் அறைக்கு முன்பாக உட்கார்ந்துகொண்டு, மன்னர் சொல்லக்கூடிய வேலைகளைச் செய்வது. ஒருநாள் மன்னர், கார்லுக்கு நிறைய வேலை கொடுத்திருந்ததால், அவன் மிகவும் சோர்வாக இருந்தான். அன்று இரவு மன்னர் தன் அறையின் உள்ளே இருந்து, ஒரு முக்கியமான வேலை நிமித்தமாக வெளியே இருந்த கார்லை அழைப்பு மணி மூலம் அழைத்தபொழுது, அவனிடமிருந்து பதிலெதுவும் வரவில்லை.

"வழக்கமாக நாம் அழைத்தவுடன் ஓடிவரும் கார்லுக்கு, இன்றைக்கு என்ன ஆயிற்று?" என்று மன்னர் வெளியே வந்து பார்த்தபொழுது, அங்கு, தான் அமர்ந்திருந்த நாற்காலியில் அப்படியே தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார். "பகல் முழுவதும் நிறைய வேலைகளைச் செய்ததால்தான் இவன் இப்படித் தூங்கிக்கொண்டிருக்கின்றான் போல" என்று மன்னர் அவன்மீது கோபமோ எரிச்சலோ கொள்ளவில்லை. மாறாக, இவர் தற்செயலாகக் கார்லுக்குப் பக்கத்தில் ஒரு காகிதம் கிடப்பதை கண்டு, எது என்ன என்று பிரித்துப் பார்த்தார். அதில் கீழ்க்காணும் வரிகள் இடம்பெற்றிருந்தன.

"என் அன்பு மகனே கார்ல்! மன்னர் உனக்குத் தரும் ஊதியத்தை அப்படியே வீட்டிற்கு அனுப்பி வைப்பதால், நானும் உன் சகோதரியும் எந்தவொரு குறையுமில்லாமல் மகிழ்ச்சியாக வாழ்கின்றோம். அதே நேரத்தில் நீ உனக்குப் பணிக்கப்பட்ட பொறுப்பில் உண்மையாகவும், நம்பிக்கைக்குரியவனாகவும் இரு; உனக்கும் நம் நாட்டிற்கும் தலைவராக இருக்கும் மன்னரைப் பத்திரமாப் பார்த்துக்கொள். இப்படிக்கு உன் அன்பு அன்னை."

இக்கடிதத்தைப் படித்துப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்த மன்னர், அதை அப்படியே கார்லின் சட்டைப் பைக்குள் வைத்துவிட்டு, வேகமாகத் தன் அறைக்குள் வந்து, பத்து தங்கக்காசுகளை எடுத்து, ஒரு பைக்குள் முடிந்து, அதைக் கார்லின் கால்சட்டைப் பைக்குள் வைத்துவிட்டு, அறைக்குள் வந்து வந்துவிட்டார்.

மறுநாள் காலையில் மன்னர் கார்லை அழைப்புமணி மூலம் அழைத்தபொழுது, அவன் வேகமாக ஓடி, மன்னருக்கு முன்பாக நின்றான். "நேற்று இரவு ஒரு முக்கியமான வேலை நிமித்தாய் உன்னை நான் அழைத்தேன்; நீ தூங்கிக்கொண்டிருந்திருப்பாய் போல! என்னிடம் வரவில்லை!" என்றார். "மன்னிக்கவும் மன்னா! அசதியில் தூங்கிவிட்டேன். அதனால்தான் நீங்கள் அழைத்தபொழுது என்னால் எழுந்து வரவில்லை!" என்று சொல்லிக்கொண்டே கார்ல், தன் கால்சட்டைக்குள் கையை விட்டுப் பார்த்தான். அதனுள் ஒரு பையும், பையிலுள் தங்கக் காசுகளும் இருப்பதைக் கண்டு, "மன்னா! என்னை வேலையிலிருந்து தூக்குவதற்குத்தான் யாரோ ஒருவர் என்னுடைய கால்சட்டைப் பையில் தங்கக்காசுகளை வைத்திருக்கின்றார் என்று புலம்பத் தொடங்கினான்.

அப்பொழுது மன்னர் அவரிடம், "நான்தான் அதை உன்னுடைய கால்சட்டைப் பைக்குள் வைத்தேன். மேலும் நேற்று இரவு உன்னை வந்து பார்த்தபொழுது உன்னுடைய அம்மா உனக்கு எழுதிய கடிதத்தையும் படிக்க நேர்ந்தது. அடுத்த முறை நீ உன்னுடைய அம்மாவிற்குக் கடிதம் எழுதுகின்றபொழுது "அம்மா! உங்களுக்கு மன்னர் இரண்டாம் ஃபிரெட்ரிக் நன்பாகக் கிடைத்திருக்கின்றார்" என்ற வரிகளையும் சேர்த்து எழுது" என்றார். இதைக் கேட்டுப் புளகாங்கிதம் அடைந்த கார்ல், அடுத்த முறை தன் தாய்க்குக் கடிதம் எழுதியபொழுது, மன்னர் தன்னிடம் சொன்ன வரிகளையும் சேர்த்து எழுதினான். இதனால் மன்னருக்கும் கார்லுக்கும் நல்ல புரிதல் ஏற்பட்டது. மன்னர் கார்லுக்குத் தேவையானதைச் செய்துதர, கார்லும் மன்னரைப் பத்திரமாகப் பாதுகாத்துவந்தான்.

இந்த நிகழ்வில் வருகின்ற மன்னர் இரண்டாம் ஃபிரெட்ரிக் தனக்குக் கீழிலிருந்த கார்லை நல்லமுறையில் கவனித்துக்கொண்டார். இதனால் கடவுளும் கார்ல் வழியாக மன்னரைப் பத்திரமாகப் பாதுகாத்து வந்தார். இன்றைய நற்செய்தியில் வரும் நூற்றுவத் தலைவர் தனக்குக் கீழேயிருந்த பணியாளரை நல்லமுறையில் பார்த்துக்கொண்டார். அதனால் கடவுள் நூற்றுவத் தலைவரை வானளாவப் பாராட்டுகின்றார். லூக்கா நற்செய்தியில் இடம்பெறும் இந்த நிகழ்வைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

தனக்குக் கீழே இருந்தவர்களை நல்லமுறையில் பார்த்துக்கொண்ட நூற்றுவர் தலைவர்

நற்செய்தியில் இயேசு, நூற்றுவர் தலைவரின் பணியாளருக்கு நலமளிப்பதைக் குறித்து வாசிக்கின்றோம். இதில் நாம் கவனிக்கவேண்டியவை, நூற்றுவத் தலைவர், தன் பணியாளரிடம் மதிப்புக் கொண்டிருந்ததும், அவர் நலம்பெற வேண்டும் என்று, யூதரின் மூப்பர்களை இயேசுவிடம் அனுப்பி வைப்பதும்தான். இன்றைக்கே தனக்குக் கீழே உள்ள பணியாளர்களை அடிமைகளைப் போன்று நடத்தும் அவலம் இருக்கும்பொழுது, நூற்றுவர் தலைவர் தன் பணியாளரிடம் மதிப்புக் கொண்டிருந்ததும்,. அவர் நலம்பெற வேண்டி யூதரின் மூப்பர்களை நம்பிக்கையோடு இயேசுவிடம் அனுப்பி வைப்பதும் வியப்பாக இருக்கின்றது.

நூற்றுவர் தலைவர் தனது பணியாளரிடம் மட்டுமல்ல, தனக்குக் கீழே இருந்த யூதர்களிடம் நல்லமுறையில் இருந்தார் என்பதை அவர் அவர்களுக்குத் தொழுகைக் கூடம் கட்டிக்கொடுத்ததிலிருந்து அறிந்துகொள்ளலாம்.

தனக்கு மேலே இருந்த ஆண்டவரால் நூற்றுவர் தலைவர் வாழ்த்தப்படுதல்

நூற்றுவர் தலைவர் தனக்குக் கீழே இருந்த பணியாளர்மீதும், யூதர்கள்மீதும் மிகுந்த அன்பு கொண்டிருந்ததாலும், இயேசுவின்மீது உயர்ந்த நம்பிக்கை கொண்டிருந்ததாலும், இயேசு நூற்றுவர் தலைவரின் பணியாளருக்கு நலமளிக்கின்றார். அதை விடவும் "இஸ்ரயேரிடத்தில் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை" என்று இயேசு அவரை வியந்து பாராட்டுகின்றார். ஆம், எவர் ஒருவர் தனக்குக் கீழே உள்ளவரை உயர்வாக நடத்துகின்றாரோ, அவரை அவருக்கு மேலே உள்ள ஆண்டவர் உயர்வாக நடத்துவர் என்பது உறுதி.

நாம் நமக்குக் கீழே உள்ளவர்களை உயர்வாக நடத்தி, அவர்களிடம் அன்பு கூர்கின்றோமா? சிந்திப்போம்.

சிந்தனை

"உடன்பிறப்புகள் போன்று ஒருவருக்கொருவர் உளங்கனிந்த அன்பு காட்டுங்கள்" (உரோ 12: 10) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் நமக்குக் கீழே உள்ளவர்களிடமும், மேலே உள்ளவர்களிடம் உளங்கனிந்த அன்பு காட்டுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
Free Blog Widget
Stats Counter
hit counter