maraikal
MUM
"


பொதுக்காலம் 23 ஆம் வாரம்  11-09-2020

முதல் வாசகம்

எப்படியாவது ஒரு சிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாம் ஆனேன்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 9: 16-19, 22-27

சகோதரர் சகோதரிகளே,

நான் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றாலும் அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. இதைச் செய்யவேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு! இதை நானாக விரும்பிச் செய்தால் எனக்குக் கைம்மாறு உண்டு. நானாக விரும்பாவிட்டாலும் இது என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பாக இருக்கிறது. அப்படியானால், எனக்குக் கைம்மாறு என்ன? உங்களுக்கு எச்செலவுமின்றி நற்செய்தியை அறிவிப்பதிலுள்ள மனநிறைவே அக்கைம்மாறு; நான் நற்செய்தி அறிவிப்போருக்குரிய உரிமையைக் கொஞ்சம் கூடப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. நான் யாருக்கும் அடிமையாய் இல்லாதிருந்தும் பலரைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர என்னை எல்லாருக்கும் அடிமையாக்கிக் கொண்டேன்.

வலுவற்றவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர வலுவற்றவர்களுக்கு வலுவற்றவன் ஆனேன். எப்படியாவது ஒருசிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாம் ஆனேன். நற்செய்தியால் வரும் ஆசியில் பங்குபெற வேண்டி நற்செய்திக்காக எல்லாவற்றையும் செய்கிறேன்.

பந்தயத் திடலில் ஓட வந்திருப்போர் பலர் ஓடினாலும் பரிசு பெறுபவர் ஒருவரே. இது உங்களுக்குத் தெரியாதா? எனவே, பரிசு பெறுவதற்காகவே நீங்களும் ஓடுங்கள். பந்தயத்தில் போட்டியிடுவோர் யாவரும் அழிவுறும் வெற்றி வாகை சூடுவதற்காகத் தன்னடக்கப் பயிற்சிகளில் ஈடுபடுவர். நாமோ அழிவற்ற வெற்றிவாகை சூடுவதற்காக இப்படிச் செய்கிறோம். நான் குறிக்கோள் இன்றி ஓடுபவரைப் போல ஓடமாட்டேன். காற்றைக் குத்துபவரைப் போலக் குத்துச்சண்டை இடமாட்டேன். பிறருக்கு நற்செய்தியை அறிவிக்கிற நானே தகுதியற்றவனாக மாறிவிடாதவாறு என் உடலை அடக்கிக் கட்டுப்படுத்துகிறேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 84: 2. 3. 4-5. 11 . (பல்லவி: 1) Mp3

பல்லவி: படைகளின் ஆண்டவரே! உமது உறைவிடம் எத்துணை அருமையானது!
2
என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது; என் உள்ளமும் உடலும் என்றுமுள இறைவனை மகிழ்ச்சியுடன் பாடுகின்றது. - பல்லவி

3
படைகளின் ஆண்டவரே! என் அரசரே! என் கடவுளே! உமது பீடங்களில் அடைக்கலான் குருவிக்கு வீடு கிடைத்துள்ளது; தங்கள் குஞ்சுகளை வைத்திருப்பதற்குச் சிட்டுக் குருவிகளுக்குக் கூடும் கிடைத்துள்ளது. - பல்லவி

4
உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறுபெற்றோர்; அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டேயிருப்பார்கள்.
5
உம்மிடமிருந்து வலிமை பெற்ற மானிடர் பேறுபெற்றோர். அவர்களது உள்ளம் சீயோனுக்குச் செல்லும் நெடுஞ்சாலைகளை நோக்கியே உள்ளது. - பல்லவி

11
கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கதிரவனும் கேடயமுமாய் இருக்கின்றார்; ஆண்டவர் அருளையும் மேன்மையையும் அளிப்பார்; மாசற்றவர்களாய் நடப்பவர்களுக்கு நன்மையானவற்றை வழங்குவார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 17: 17b, 17a

அல்லேலூயா, அல்லேலூயா! உமது வார்த்தையே உண்மை. உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா?

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 39-42


அக்காலத்தில்

இயேசு அவர்களுக்கு உவமையாகக் கூறியது: "பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா? இருவரும் குழியில் விழுவரல்லவா? சீடர் குருவை விட மேலானவர் அல்ல. ஆனால் தேர்ச்சி பெற்ற எவரும் தம் குருவைப் போல் இருப்பர்.

நீங்கள் உங்கள் கண்ணில் இருக்கும் மரக் கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பைக் கூர்ந்து கவனிப்பதேன்? உங்கள் கண்ணில் இருக்கும் மரக் கட்டையையே நீங்கள் பார்க்காமல் இருந்துகொண்டு உங்கள் சகோதரர் அல்லது சகோதரியிடம், "உம் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்கட்டுமா?" என்று எப்படிக் கேட்க முடியும்?

வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையை எடுத்து எறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்."

ஆண்டவரின் அருள்வாக்கு.
 

 

1 கொரிந்தியர் 9: 16-19, 22-27

நற்செய்தி அறிவிப்புப் பணி என்பது ஒவ்வொருவரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பு"


நிகழ்வு



பங்குப் பணியாளர் ஒருவர் இருந்தார். இவர் ஒரு ஞாயிற்றுக்கிழமைத் திருப்பலியில், இப்படிச் சொல்லி மறையுரை ஆற்றத் தொடங்கினார்: "அன்பார்ந்த மக்களே! என்னுடைய முகத்தில் ஏற்பட்ட காயம், எப்படி ஏற்பட்டது என்று நின்று நீங்கள் கேட்கலாம்... இன்று காலையில் நான் முகச்சவரம் செய்துகொண்டிருக்கும்பொழுது, "திருப்பலியில் என்ன மறையுரை ஆற்றுவது...?" என்று யோசித்தேன். அப்படி நான் யோசிக்கும்பொழுது, கத்தி தவறுதலாக என்னுடைய முகத்தில் கிழித்துவிட்டது. இப்படித்தான் என்னுடைய முகத்தில் காயம் ஏற்பட்டது." இவ்வாறு சொல்லிவிட்டு அவர் நீண்டநேரம் மறையுரை ஆற்றினார்.

இதற்குப் பின்பு திருப்பலி வழக்கம் போல் தொடர்ந்தது. அன்றைய நாளில் வந்த காணிக்கையோடு ஒரு துண்டுச் சீட்டும் வந்திருந்தது. அதில், "இனிமேல் நீங்கள் முகச்சவரம் செய்யும்பொழுது, என்ன மறையுரை ஆற்றுவது என்று யோசித்து, உங்களுடைய முகத்தை வெட்டிக்கொள்ளவேண்டாம். மறையுரை ஆற்றுவதற்குப் போதுமான நேரம் ஒதுக்கி, நல்லமுறையில் தயாரித்து, மறையுரையின் நீளத்தைக் நீளத்தை வெட்டிவிடுங்கள்" என்று எழுதப்பட்டிருந்தது.

இதைப் படித்துப் பார்த்த அந்தப் பங்குப் பணியாளர் துண்டுச் சீட்டில் எழுதப்பட்டிருந்தைப் போன்று, மறையுரையைத் தயாரிப்பதற்குப் போதுமான நேரம் ஒதுக்கி, மறையுரையை நல்லமுறையில் தயாரித்து, அதை இரத்தினச் சுருக்கமாக வழங்கத் தொடங்கினார் (Smiles and Chuckles – Fred M. Pais).

மறையுரை ஆற்றுவதாக இருக்கட்டும், நற்செய்தியை அறிவிப்பதாக இருக்கட்டும், அதை ஏனோதானோ என்று செய்யாமல், பொறுப்புடனும் கடமையுணர்வுடனும் செய்யவேண்டும் என்ற உண்மையை இந்த நிகழ்வு எடுத்துக்கூறுகின்றது. இன்றைய முதல் வாசகத்தில் புனித பவுல் நற்செய்திப் பணியை எப்படி ஆற்றவேண்டும் என்பதை நமக்கு எடுத்துக்கூறுகின்றார். நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

நம்மேல் சுமத்தப்பட்ட கடமை என்று நற்செய்திப் பணி செய்யவேண்டும்

இன்றைய முதல்வாசகத்தில் புனித பவுல், தான் எத்தகைய மனநிலையோடு நற்செய்திப் பணி செய்துவந்தேன் என்பதை மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றார். கிறிஸ்தவர்களைச் சித்திரவதை செய்வதற்காகத் தமஸ்கு நகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த பவுலை, ஆண்டவராகிய இயேசு, தடுத்தாட்கொண்டு, பிற இனத்தவருக்கும் மன்னருக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் முன்பாக நற்செய்தி அறிவிக்க ஒரு கருவியாகத் தேர்ந்தெடுத்தார் (திப 9: 15-16) கடவுள் தேர்ந்துகொண்டதற்கு ஏற்ப பவுல், பிற இனத்தாருக்கும் மன்னருக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் முன்பாக நற்செய்தி அறிவித்து, அவர்களைக் கடவுளுக்குள் கொண்டு வந்தார்.

இப்படிப்பட்ட நற்செய்திப் பணியைப் புனித பவுல், தன்னுடைய பெருமைக்காக அல்ல, தன்மேல் சுமத்தப்பட்ட ஒரு பெரிய பொறுப்பு என்ற உணர்வோடு செய்தார். அதை இன்றைய முதல் வாசகத்தில் அவர் மிக அழகாக விளக்குகின்றார்.

பலரையும் கிறிஸ்துவிடம் கொண்டு வர நற்செய்திப் பணி செய்யவேண்டும்

பவுல் தமஸ்கு நகர் நோக்கிச் செல்லும் வழியில் அவரைத் தடுத்தாட்கொண்ட இயேசு, அவரைப் பிற இனத்தார், மன்னர், இஸ்ரயேல் மக்கள் என பலருக்கும் நற்செய்தி அறிவிக்க ஒரு கருவியாய்த் தேர்ந்தெடுத்தார் என்று மேலே பார்த்தோம். புனித பவுல் பலரையும் கிறிஸ்துவுக்குள் கொண்டுவர, எல்லாருக்கும் அடிமையானார். இன்னும் சொல்லப்போனால், எப்படியாவது ஒருசிலரையேனும் மீட்க அவர் எல்லாருக்கும் எல்லாமானர். ஆன்மாக்களை மீட்பதற்காக பவுல் மேற்கொண்ட முயற்சிகள், அவர் ஆற்றிய பணிகள் யாவையும், இன்றைக்கு நற்செய்திப் பணியில் ஈடுபடுவோர் கருத்தில் எடுத்துக்கொண்டு செயல்படுவது நல்லது.

போதனையாலும் மட்டுமல்ல, வாழ்வாலும் போதிக்கவேண்டும்

புனித பவுல் மக்களிடம் நற்செய்திப் பணியாற்றும்பொழுது, தனது போதனையால் மட்டும் அவர்களை ஆண்டவருக்குள் கொண்டு வரவில்லை. தன்னுடைய முன்மாதிரியான வாழ்வாலும் அவர்களை அவர் ஆண்டவர் இயேசுவுக்குள் கொண்டுவந்தார். இதற்கு இன்றைய முதல் வாசகத்தில் இடம்பெறும், "பிறருக்கு நற்செய்தி அறிவிக்கிற நானே தகுதியற்றவனாக மாறிவிடாதவாறு என் உடலை அடக்கிக் கட்டுப்படுத்துகிறேன்" என்ற வார்த்தைகள் சான்றாக இருக்கின்றன. பவுல் தெசலோனிக்கருக்கு எழுதுகின்றபொழுதுகூட, "உங்களுள் எவருக்கும் சுமையாய் இராதபடி, இராப்பகலாய்ப் பாடுபட்டு உழைத்தோம்" (2 தெச 3:8) என்றே குறிப்பிடுகின்றார். இவ்வாறு அவர் தன்னுடைய போதனையால் மட்டுமல்ல, தன் வாழ்வாலும் ஆண்டவரின் நற்செய்தியை அறிவித்தார்.

திருமுழுக்குப் பெற்று, இயேசுவின் நற்செய்தியை எல்லாருக்கும் அறிவிக்கக் கடமைப்பட்டிருக்கின்ற நாம், புனித பவுலைப் போன்று நற்செய்தி அறிவிப்பப் பணி என்பது நம்முடைய கடமை என்பதை உணர்ந்து, அதை நம் வாழ்வாலும் வார்த்தையாலும் அறிவிக்கின்றோமா? சிந்திப்போம்.

சிந்தனை

"உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்" (மாற் 16: 15) என்பார் இயேசு. ஆகையால், நாம் இயேசு விடுத்த இந்த அழைப்பினை ஏற்று, புனித பவுலைப் போன்று, நம் வாழ்வாலும் வார்த்தையாலும் நற்செய்தி அறிவிப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
லூக்கா 6: 39-42

மற்றவரைத் தீர்ப்பிடுவதற்கு நாம் என்ன கடவுளா?

நிகழ்வு



இந்த உலகம் ஒருசிலரை "ஒன்றுக்கும் ஆகாதவர்கள்" என்று தீர்ப்பிட்டபொழுது, அவர்களோ யாருமே கனவிலும் எதிர்பார்த்திராத அளவில் மகப்பெரிய சாதனையாளர்களாக உருவானவர்கள். இப்படி இந்த உலகம் ஒன்றுக்கும் ஆகாதவர்கள் என்று தீர்ப்பிட்டு, மிகப்பெரிய சாதனையாளர்களாக உருவானவர்கள் பட்டியல் இதோ:

இங்கிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் சிறுவனாக இருந்தபொழுது இவருடைய தந்தை, "என் மகன் இப்படி மிகவும் மந்தமாக இருக்கின்றானே...! இவன் வளர்ந்து பெரியவனாகும்பொழுது, இந்த நாட்டில் எப்படி வாழப்போகிறானோ! தெரியவில்லையே!" என்று மிகவும் வேதனைப்பட்டார்.

இயற்கை ஆய்வாளரான சார்லஸ் டார்வினுக்கு சிறுவயதில் படிப்பு மண்டையில் ஏறவே இல்லை. இதைப் பார்த்துவிட்டு இவருடைய தந்தை, "உன்னால் நம்முடைய குடும்பத்திற்கே அவமானம்" என்றார்.

மிகப்பெரிய எழுத்தாளரான ஜி.கே. செஸ்டர்டனுக்கு மூன்றாம் வகுப்புவரை வாசிக்கவே தெரியாது. இதனால் இவருக்குப் பாடம் கற்றுக்கொடுத்த ஆசிரியர் இவரிடம், "உன்னுடைய மூளையைத் திறந்து பார்த்தால், அங்கு மூளை இருக்காது; கொழுப்புக் கட்டிதான் இருக்கும்" என்றார்.

பெரிய கண்டுபிடிப்பாளரான தாமஸ் ஆல்வா எடிசனுக்குச் சிறுவயதில் படிப்பே வரவில்லை. இதனால் இவருடைய ஆசிரியர் இவரை "மக்கு" என்று திட்டித் தீர்த்தார்.

ஆல்பர்ட் ஐஸ்டீனுக்குச் சிறுவயதில், கணிதத்தைத் தவிர வேறு எதுவும் வரவில்லை. ஆகவே, இவருக்குப் பாடம் கற்றுக்கொடுத்த ஆசிரியர் இவருடைய பெற்றோரிடம், "உங்களுடைய மகனுக்குப் படிப்பு வரவில்லை. அதனால் இவனைப் பள்ளியிலிருந்து கூட்டிக்கொண்டு போய்விடுங்கள்" என்றார்.

இப்படிப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இவர்கள் எல்லாரும் இந்த உலகினர் தங்களைப் பற்றிச் சொன்னவை... தீர்ப்பிட்டவை... பொய் என்று நிரூபித்துக்காட்டியர்கள். ஆம், எந்த மனிதரிடமிருந்து எப்படிப்பட்ட சாதனையாளர், மகான், அறிஞர் வருவார் என்று யாருக்கும் தெரியாது. ஆதலால் நாம் யாரையும் தீர்ப்பிடாமல் இருப்பதே நல்லது. நற்செய்தியில் இயேசு யாரையும் தீர்ப்பிடவேண்டாம் என்று சொல்கின்றார். இயேசு ஏன் யாரையும் தீர்ப்பிடவேண்டாம் என்று சொல்கின்றார் என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

மற்றவரைத் தீர்ப்பிடுவதற்கு நாம் ஒன்றும் கடவுள் இல்லை

நமது அன்றாட வாழ்வில் நாம் எத்தனையோ மனிதர்களைத் தீர்ப்பிடுகின்றோம்; நாமும்கூட பிறரால் தீர்ப்பிடப்படுகின்றோம். இப்படித் தீர்ப்பிடும்பொழுதும் தீர்ப்பிடப்படும்பொழுதும் ஓர் உண்மையை மறந்துபோய்விடுகின்றோம். அது என்னவெனில், இந்த உலகத்தில் உள்ள யாரும் யாரையும் முழுமையாக அறிந்துகொள்ள இயலாது என்பதாகும். ஆம், கடவுளைத் தவிர வேறு யாராலும் ஒருவரை முழுமையாக அறிந்துகொள்ள முடியாதபொழுது (திபா 139: 2), அடுத்தவரைக் குற்றவாளி என்று தீர்ப்பிடுவது மிகப்பெரிய குற்றமாகும்.

தை விடவும், இந்த உலகத்தில் உள்ள யாரும் யாரையும் தீர்ப்பிடுவதற்கு எந்தவோர் அதிகாரமும் கிடையாது; கடவுள் ஒருவருக்கு மட்டுமே அதிகாரம் இருக்கின்றது. அபப்டியானால், நாம் ஒருவரைக் குற்றவாளி என்று தீர்ப்பிடும்பொழுது, கடவுள் செய்யக்கூடிய வேலையை நாம் செய்கின்றோம் அல்லது கடவுளை நாம் இழிவுபடுத்துபவர்கள் ஆகின்றோம். ஆகவேதான், நாம் யாரையும் தீர்ப்பிடக்கூடாது என்கின்றார் இயேசு.

நாம் பாவிகளாக இருக்கும்பொழுது, மற்றவர்களைத் தீர்ப்பிடுவது சரியாகுமா?

நாம் ஏன் மற்றவரைத் தீர்ப்பிடக்கூடாது என்று இயேசு சொல்கின்றார் எனில், நாமே தீர்ப்புக்கு ஆளாகவும் நிலையில்தான் இருக்கின்றோம் அல்லது நாமே பாவிகளாக இருக்கின்றோம் என்பதால்தான். நம்மிடம் நாம் தவற்றை வைத்துக்கொண்டு மற்றவரைத் தீர்ப்பிடுவது எப்படி இருக்கின்றது எனில், நமது கண்ணில் பெரிய அளவில் உள்ள மரக்கட்டையை வைத்துக்கொண்டு, மற்றவர் கண்ணில் சிறிய அளவில் உள்ள துரும்பை எடுங்கள் என்று சொல்வதற்கு இணையானது என்கின்றார் இயேசு.

ஆகவே, நாம் பிறரைத் தீர்ப்பிடுவதற்கு எந்தவிதத்திலும் தகுதியில்லாதவர்கள் என்பதையும், கடவுளுக்கு மட்டுமே தீர்ப்பளிக்கும் அதிகாரம் உண்டு என்பதையும் உணர்ந்தவர்களாய்த் தீர்ப்பிடாமல் வாழக் கற்றுக்கொள்வோம்.

சிந்தனை

"மற்றவரைத் தீர்ப்பிடுவது முள்வேலியைப் போன்றது" என்பார் சுகி.சிவம். முள்வேலி எப்படி உள்ளே இருப்பவரை மட்டுமல்லாது, வெளியே இருப்பவரையும் காயப்படுத்துகின்றதோ, அப்படிப் பிறரைத் தீர்ப்பிடும்பொழுது தீர்ப்பிடப்படுவர் மட்டுமல்லாது, தீர்ப்பிடப்படும் நாமும் காயப்படுகின்றோம். எனவே, பிறரைக் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்காமல், பிறரைப் பற்றி உயர்வாக நினைத்து, ஒருவர் மற்றவரிடம் அன்போடு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
Free Blog Widget
Stats Counter
hit counter