maraikal
MUM
"


பொதுக்காலம் 23 ஆம் வாரம்  07-09-2020

முதல் வாசகம்

நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-8

சகோதரர் சகோதரிகளே,

உங்களிடையே பரத்தைமை உண்டெனக் கேள்விப்படுகிறேன். ஒருவன் தன் தந்தையின் மறு மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானாம். இத்தகைய பரத்தைமை பிற இனத்தாரிடையே கூடக் காணப்படவில்லை. இதை அறிந்தும் நீங்கள் இறுமாப்புடன் இருப்பது எப்படி? துயரமடைந்திருக்க வேண்டாமா? இப்படிச் செய்தவனை உங்கள் நடுவிலிருந்து தள்ளிவைத்திருக்க வேண்டாமா? நான் உடலால் உங்களோடு இல்லாவிடினும் உள்ளத்தால் உங்களோடு இருக்கிறேன். நான் உங்களோடு இருப்பதாக எண்ணி அச்செயலைச் செய்தவனுக்கு ஏற்கெனவே தீர்ப்பு அளித்துவிட்டேன். நம் ஆண்டவர் இயேசுவின் பெயரால் நீங்கள் கூடிவரும்போது நானும் உள்ளத்தால் உங்களோடு இருப்பேன். அப்போது நம் ஆண்டவர் இயேசுவின் வல்லமையோடு, அத்தகையவனைச் சாத்தானிடம் ஒப்புவிக்க வேண்டும். அவனது உடல் அழிவுற்றாலும் ஆண்டவரின் நாளில் அவன் மீட்படைவதற்காக இவ்வாறு செய்வோம்.

நீங்கள் பெருமை பாராட்டுவது நல்லதல்ல. சிறிதளவு புளிப்பு மாவு, பிசைந்த மாவு முழுவதையும் புளிக்க வைக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதா? எனவே புளிப்புச் சத்துள்ள பழைய மாவைத் தூக்கி எறிந்துவிடுங்கள். அப்போது நீங்கள் புதிதாய்ப் பிசைந்த மாவாயிருப்பீர்கள். உண்மையில் நீங்கள் புளிப்பற்ற மாவாய்த்தான் இருக்கிறீர்கள். ஏனெனில் நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார். ஆகையால் பழைய புளிப்பு மாவைத் தவிர்க்க வேண்டும். தீமை, பரத்தைமை போன்ற புளிப்பு மாவோடு அல்ல, மாறாக நேர்மை, உண்மை போன்ற புளிப்பற்ற அப்பத்தோடு பாஸ்காவைக் கொண்டாடுவோமாக.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 5: 4-5a. 5b-6. 11 . (பல்லவி: 8a) Mp3

பல்லவி: ஆண்டவரே, உமது நீதியின் பாதையில் என்னை நடத்தும்.
4
நீர் பொல்லாங்கைப் பார்த்து மகிழும் இறைவன் இல்லை; உமது முன்னிலையில் தீமைக்கு இடமில்லை.
5a
ஆணவமிக்கோர் உமது கண்முன் நிற்க மாட்டார். - பல்லவி

5b
தீங்கிழைக்கும் அனைவரையும் நீர் வெறுக்கின்றீர்.
6
பொய் பேசுவோரை நீர் அழித்திடுவீர்; கொலை வெறியரையும் வஞ்சகரையும் அருவருக்கின்றீர். - பல்லவி

11
ஆனால், உம்மிடம் அடைக்கலம் புகுவோர் அனைவரும் மகிழ்வர்; அவர்கள் எந்நாளும் களித்து ஆர்ப்பரிப்பர்; நீர் அவர்களைப் பாதுகாப்பீர்; உமது பெயரில் பற்றுடையோர் உம்மில் அக்களிப்பர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 10: 27

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

ஓய்வு நாளில் இயேசு குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக்கொண்டேயிருந்தனர்.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 6-11

ஓய்வு நாளில் இயேசு தொழுகைக்கூடத்திற்குள் சென்று கற்பித்தார். அங்கே வலக்கை சூம்பியவர் ஒருவர் இருந்தார். மறைநூல் அறிஞரும் பரிசேயரும் இயேசுவிடம் குற்றம் காணும் நோக்குடன், ஓய்வு நாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக் கொண்டே இருந்தனர்.

இயேசு அவர்களுடைய எண்ணங்களைஅறிந்து, கை சூம்பியவரை நோக்கி, “எழுந்து நடுவே நில்லும்!” என்றார். அவர் எழுந்து நின்றார்.

இயேசு அவர்களை நோக்கி, “உங்களிடம் ஒன்று கேட்கிறேன்: ஓய்வு நாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?” என்று கேட்டார். பிறகு அவர் சுற்றிலும் திரும்பி அவர்கள் யாவரையும் பார்த்துவிட்டு, “உமது கையை நீட்டும்!” என்று அவரிடம் கூறினார். அவரும் அப்படியே செய்தார். அவருடைய கை நலமடைந்தது. அவர்களோ கோபவெறிகொண்டு இயேசுவை என்ன செய்யலாம் என்று ஒருவரோடு ஒருவர் கலந்து பேசினர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

 

1 கொரிந்தியர் 5: 1-8

கொரிந்து நகர்த் திருஅவையில் நிலவிய ஒழுக்கக்கேடு


நிகழ்வு



சில ஆண்டுக்கு முன்பாக கிரீஸ் நாட்டில் உள்ள ஏதென்ஸ் நகர் நீதிமன்றத்திற்கு வித்தியாசமான ஒரு வழக்கு வந்தது. அந்த வித்தியாசமான வழக்கு இதுதான்:

1971 ஆம் ஆண்டு, ஜனவரி திங்கள் 24 ஆம் நாள், ஏதென்ஸைச் சார்ந்த பெட்ரோஸ் நோவரஸ் (Petros Novaras) என்பவன், வசிலிகி சியோடி (Vassiliki Chioti) என்ற பெண்ணை மணந்து, அவரோடு தேனிலவைக் கொண்டாட லமியா என்ற இடத்திற்குத் தன்னுடைய நான்கு சக்கர ஊர்தியில் சென்றுகொண்டிருந்தான். செல்லும் வழியில் ஊர்தியில் பழுது ஏற்படவே, அவன் தன் மனைவியிடம், “நான் வண்டியைச் சரிபார்த்துவிட்டு, அதை எடுத்துக்கொண்டு வருகிறேன். நீ நம்முடைய வீட்டிற்குப் போ” என்று சொல்லி, அவரை ஏதென்ஸ் நகருக்குப் பேருந்தில் அனுப்பி வைத்தான்.

அவன் தன்னுடைய மனைவியைத் தன் வீட்டிற்கு அனுப்பி வைத்த சிறிதுநேரத்தில் அவனுக்குள் ஒரு யோசனை எழுந்தது. அவனுக்குள் எழுந்த யோசனை இதுதான்: ‘தேனிலவிற்காக இவ்வளவு தூரம் வந்துவிட்டு, தேனிலவை கொண்டாமல் போவது அவ்வளவு நல்லதில்லை! இந்த நகரில் நமக்குத் தெரிந்த தோழி ஒருத்தி இருக்கின்றார். அவரை மணந்துகொண்டு அவரோடு தேனிலவு கொண்டாடுவோம்.” இதற்குப் பின்பு அவன் மறுநாளே லமியாவில் இருந்த தன்னுடைய தோழியை மணந்துகொண்டு, அவரோடு தேனிலவு கொண்டாடத் தொடங்கினான்.

இச்செய்தி அவனுடைய முதல் மனைவிக்குத் தெரிய வந்ததும், அவர் இவன்மீது ஏதென்ஸ் நகரில் இருந்த நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபொழுது நீதிபதி அவனிடம், “முதல் திருமணம் நடந்து முடிந்த அடுத்த 48 மணிநேரத்திற்குள் நீ இன்னொரு பெண்ணை மணந்தது உண்மையா?” என்று கேட்டபொழுது, “ஆமாம். நான் முதல் மனைவியை ஏமாற்றிவிட்டு, இன்னொரு பெண்ணை மணந்து உண்மைதான். இப்பொழுது என்னுடைய முதல் மனைவிக்கு ஆட்சோபனை இல்லையென்றால், நான் அவரோடும் என்னுடைய இரண்டாவது மனைவியோடும் தேனிலவுக்குச் செல்லத் தயார்” என்றான். இதற்கு அவனுடைய முதல் மனைவி மறுப்புத் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், தன்னை ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணை மணந்தவனுக்கு அவனுக்குத் தக்க தண்டனை தருமாறு கேட்டுக்கொண்டார். அவர் கேட்டுக்கொண்டதற்கேற்ப, எட்டு மாதங்கள் அவனுக்குக் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது.

இந்த வழக்கு ஏதென்ஸ் நகர் நீதிமன்றத்திற்கு வந்தபொழுது, மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. ஆம், மனிதர்கள் தங்களுடைய உடல் இச்சைகளைத் தீர்த்துக்கொள்ள எப்படியெல்லாம் செயல்படுகின்றார் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இன்றைய முதல் வாசகத்தில், பவுல் கொரிந்து நகர்த் திருஅவையில் இருந்த ஒழுக்கக்கேட்டினைச் சாடுவதைக் குறித்து வாசிக்கின்றோம். அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

பரத்தமை என்ற புளிப்புமாவு

வணிக நகரமான கொரிந்து நகரில் பல இனத்தவரும் வாழ்ந்து வந்தனர். இதனால் பணம் மட்டுமல்ல; பாவமும் அங்குப் பெருகியது. குறிப்பாக விபசாரம் அல்லது பரத்தமையானது அங்கு மேலோங்கி இருந்தது. இதில் திருஅவையைச் சார்ந்தவர்களும் ஈடுபட்டு வந்தார்கள். இதை அறியும் பவுல் அவர்களிடம், “உங்களிடையே பரத்தமை உண்டெனக் கேள்விப்படுகிறேன்... இத்தகைய பரத்தமை பிற இனத்தவரிடையேகூடக் காணப்படவில்லை” என்று வருத்தத்தோடு கூறுகின்றார். இபப்டிக் கூறிவிட்டு, அவர் அவர்களிடம், இப்படிப் பரத்தமையில் ஈடுபடுகின்றவனைத் தள்ளி வைக்கவேண்டும். ஏனெனில், சிறிதளவு புளிப்பு மாவு, பிசைந்த மாவு முழுவதையும் புளிக்க வைத்துவிடும் என்கின்றார்.

இயேசுவின் வழியில் நடக்கின்ற ஒருவர் தன்னுடைய நற்செயலால் விண்ணகத் தந்தைக்குப் பெருமை சேர்க்கவேண்டும் (மத் 5:16); இப்படித் துற்செயலால் அவரை அவமதிக்கக்கூடாது என்பதால், புனித பவுல் பரத்தமையில் ஈடுபடுகின்றவரைத் திருஅவையிலிருந்து தள்ளி வேண்டும் என்கின்றார்.

நேர்மை, உண்மை போன்ற புளிப்பற்ற அப்பம்

பழைய புளிப்பு மாவாகிய பரத்தமையைத் தவிர்க்கச் சொல்லும் புனித பவுல் நேர்மை, உண்மை போன்ற புளிப்பற்ற அப்பத்தோடு பாஸ்கா விழாவைக் கொண்டாடவேண்டும் என்கின்றார். ஆம், இயேசுவின் வழியில் நடக்கின்ற ஒருவர் தன்னிடமிருந்து தீமையைத் தவிர்க்கவேண்டும். அது அவர் செய்யவேண்டிய தலையாய செயல். தீமையைத் தவிர்ப்பது மட்டுமல்லாமல், நன்மை செய்யவேண்டும்; உண்மை, நேர்மை ஆகியவற்றின்படி நடக்கவேண்டும். இது அவர் செய்யவேண்டிய இரண்டாவது முக்கியமான செயலாக இருக்கின்றது.

இயேசுவின் வழியில் நடக்கின்ற நாம், தீமையை நம்மிடமிருந்து அப்புறப்படுத்துவதோடு மட்டுமல்லாமல். நல்லது செய்து, நல்ல வழியில் வாழத் தயாரா? சிந்திப்போம்.

சிந்தனை

‘நன்மையை நாடுகள்; தீமையைத் தேடாதீர்கள்’ (ஆமோ 5:14) என்பார் ஆமோஸ் இறைவாக்கினர். ஆகையால், நாம் நம்மிடம் இருக்கும் தீமையை விட்டுவிட்டு, நன்மையை நாடுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
லூக்கா 6: 6-11

“எல்லா நாளிலும் நன்மை செய்வோம்”


நிகழ்வு



தன்னுடைய எழுத்துகளாலும் போதனையாலும் மக்கள் நடுவில் மிகவும் பிரபலமானவர் அமெரிக்காவைச் சார்ந்த பேராயர் புல்டன் ஷீன் (1875-1979). இவர் சொல்லக்கூடிய ஒரு உண்மை நிகழ்வு.

மருத்துவர் ஒருவர் லூசியானாவில் உள்ள, ஒரு பரபரப்பான சாலையில் இருந்த கட்டடமொன்றின் மாடியில், ஒரு சிறிய மருத்துவமனை வைத்து, அதன்மூலம் அங்கு வந்த ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ உதவிகளைச் செய்துவந்தார். பெயர்ப்பலகையில் தனது பெயரைக் குறிப்பிடாமல், ‘மருத்துவர் மாடியில்’ என்றே இவர் குறிப்பிட்டிருந்தார். இப்படித் தன் பெயர்கூட வெளியே தெரியாத வண்ணம், தன்னிடம் வந்த ஏழை எளிய மக்களுக்கு அன்போடும், சில நேரங்களில் கட்டணமில்லாமலும், எல்லா நாள்களிலும் மருத்துவச் சேவை செய்து வந்த இந்த மருத்துவர் ஒருநாள் திடீரென இறந்துபோனார்.

இவருடைய இறப்புச் செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால் அந்த நகரத்தவர், ‘மக்களுக்கு அன்போடும், குறைந்த கட்டணத்தோடும், சில நேரங்களில் கட்டணமே இல்லாமலும் மருத்துவச் சேவை செய்துவந்த இந்த மருத்துவருடைய பெயர் என்றைக்கும் நிலைக்கும் வகையில் பெரிதாக ஏதாவது செய்யவேண்டும்’ என்று முடிவெடுத்தார்கள். அப்பொழுது அவர்களிடமிருந்து பல கருத்துகள் வந்தன. யாருடைய கருத்தும் எல்லாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஏற்பட்டது. கடைசியில் ஒருவர் சொன்ன கருத்தை எல்லாரும் ஏற்றுக்கொண்டு, அதன்படி செய்தார்கள். எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து இதுதான்: “தன்னுடைய பெயரே தெரியாத வண்ணம், மக்களுக்கு அன்போடு மருத்துவப் பணி செய்துவந்த அந்த மருத்துவருக்கு, நல்லமுறையில் ஒரு கல்லறையைக் கட்டி எழுப்புவோம். அதில் ‘மருத்துவர் மாடியில்’ என்ற பெயர்ப்பலகையை பொருத்தி வைப்போம்.”

ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற ‘மருத்துவர் மாடியில்’ என்ற பெயர்ப்பலகையோடு எல்லா நாள்களிலும் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவச் சேவை செய்த மருத்துவரைப் போன்று, ஆண்டவர் இயேசு, ஓய்வுநாள் என்றுகூடப் பாராமல், நோயாளர்களை நலப்படுத்தினார். இன்றைய நற்செய்தியில் இயேசு ஓய்வுநாளில் கைசூம்பியவரை நலப்படுத்தியதைக் குறித்து வாசிக்கின்றோம். இயேசு செய்த இச்செயலுக்கு மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோர் எத்தகைய எதிர்வினையை ஆற்றினார்கள் என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

ஓய்வுநாளில் நலமளிக்கும் இயேசு

ஓய்வுநாளின்பொழுது தொழுகைக்கூடத்தில் கற்பிக்கும் இயேசு, அங்கு வலக்கை சூம்பிய ஒருவரைக் காண்கின்றார். தொழுகைக்கூடத்தில் இருந்த மறைநூல் அறிஞரும் பரிசேயரும் குற்றம் காணும் நோக்குடன் இயேசு, வலக்கை சூம்பிய மனிதரை நலப்படுத்துவாரா? என்று கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தபொழுது இயேசு அந்த மனிதருக்கு நலமளிக்கின்றார்.

இங்கு மறைநூல் அறிஞரும் பரிசேயரும், குற்றம் காணும் நோக்குடன் இயேசுவைக் கூர்ந்து கவனித்ததை நமது கருத்தில் கொள்ளவேண்டும். “ஆறு நாள்கள் வேலை செய்யலாம். ஏழாம் நாளோ ஓய்வுநாளாகிய ‘சாபத்து’. ஆண்டவருக்குப் புனிதமான நாள். ஓய்வுநாளில் வேலை செய்பவன் எவனும் கொல்லப்படவேண்டும்” (விப 31: 14-17) என்று சட்டம் இருந்தது. அதே நேரத்தில் ஓய்வுநாளில் ஒருவர் ஆபத்தில் இருந்தால் அவரைக் காப்பாற்றலாம் என்ற சட்டமும் இருந்தது. இந்நிலையில்தான் இயேசு தொழுகைக்கூடத்தில் இருந்த வலக்கை சூம்பிய மனிதரை, அது ஓய்வுநாள் என்றெல்லாம் பாராமல் நலமாளிக்கின்றார்.

எல்லா நாள்களிலும் நன்மை செய்வோம்

இயேசு கைசூம்பிய மனிதருக்கு நலமளிக்கும் செயல், தொழுகைக்கூடத்தில் இருந்த மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோருடான வாக்குவாதத்திற்குப் பிறகே நடைபெறுகின்றது. தங்களோடு இருந்த கை சூம்பிய மனிதரின் வாழ்வில் ஒரு விடிவு பிறக்க மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் எதையும் செய்யவில்லை; ஆனால், இயேசு அந்த மனிதரை நலப்படுத்த முயன்றபொழுதுதான் அவருக்குத் தடையாக இருக்கின்றார்கள்.

ஒருசிலர் இப்படித்தான். இவர்கள் தாங்களாக எந்தவொரு நல்ல செயலையும் செய்வதில்லை; ஆனால், நல்லது செய்யும் மனிதர்களுக்குத் தடையாய் இருப்பார்கள். இயேசு, மறைநூல் அறிஞரும் பரிசேயரும் தனக்குத் தடையாக இருக்கின்றார்கள்... தான் ஓய்வுநாளில் அந்தக் கைசூம்பிய மனிதரை நலப்படுத்துவதால் ஆபத்து வரும் என்பதையெல்லாம் பார்க்காமல், கை சூம்பிய மனிதர் தேவையில் இருக்கின்றார் என்பதை உணர்ந்து, அவருக்கு நலமளிக்கின்றார். எனவே, நாமும் இயேசுவைப் போன்று ஆபத்துகள், எதிர்ப்புகள் வந்தாலும், தொடர்ந்து நன்மை செய்வோம்.

சிந்தனை

‘சகோதர சகோதரிகளே நன்மை செய்வதில் நீங்கள் மனந்தளர்ந்து போகவேண்டாம்’ (1 தெச 3:13) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் எத்தகைய ஆபத்துகள், எதிர்ப்புகள் வந்தாலும், இயேசுவைப் போன்று தொடர்ந்து நன்மை செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
Free Blog Widget
Stats Counter
hit counter