maraikal
MUM
"


பொதுக்காலம் 22 ஆம் வாரம்  05-09-2020

முதல் வாசகம்

பட்டினியோடும் தாகத்தோடும் ஆடையின்றியும் இருக்கிறோம்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 6-15

சகோதரர் சகோதரிகளே,

உங்கள் பொருட்டு என்னையும் அப்பொல்லோவையும் எடுத்துக்காட்டாகக் கொண்டு இவற்றைக் கூறினேன். ஏனெனில், "எழுதியுள்ளதற்கு மேல் போகாதே" என்பதன் பொருளை எங்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள். ஒருவரை ஆதரித்தும் மற்றவரை எதிர்த்தும் செயல்படாதீர்கள்; இறுமாப்புக் கொள்ளாதீர்கள். நீங்கள் மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் என்று சொன்னவர் யார்? உங்களிடம் உள்ள அனைத்தும் நீங்கள் பெற்றுக் கொண்டவைதானே? பெற்றுக்கொண்டும் பெற்றுக் கொள்ளாததுபோல் பெருமை பாராட்டுவது ஏன்? தேவையானவற்றை எல்லாம் ஏற்கெனவே பெற்றுவிட்டீர்களோ? ஏற்கெனவே செல்வர்களாகி விட்டீர்களோ? எங்களை விட்டுவிட்டு நீங்கள் மட்டும் ஆட்சி செலுத்துகிறீர்களோ? நீங்கள் ஆட்சி செலுத்த முடியுமென்றால் நல்லதுதான். அப்படியானால் நாங்களும் உங்களோடு சேர்ந்து ஆட்சி செலுத்தலாமே.

கடவுளின் திருத்தூதராகிய எங்களை அவர் எல்லாருக்கும் கடையராக்கினார்; நாங்கள் மரண தண்டனை பெற்றவர்கள் போல் ஆனோம். மனிதருக்கும் வானதூதருக்கும் உலகுக்கும் காட்சிப் பொருளானோம் எனக் கருதுகிறேன்.

நாங்கள் கிறிஸ்துவின் பொருட்டு மடையர்கள்; நீங்களோ கிறிஸ்துவோடு இணைந்த அறிவாளிகள். நாங்கள் வலுவற்றவர்கள்; நீங்களோ வலிமை மிக்கவர்கள். நீங்கள் மாண்புள்ளவர்கள்; நாங்களோ மதிப்பற்றவர்கள். இந்நேரம்வரை பட்டினியோடும் தாகத்தோடும் ஆடையின்றியும் இருக்கிறோம். அடிக்கப்படுகிறோம்; நாடோடிகளாய் இருக்கிறோம். எங்கள் கைகளால் பாடுபட்டு உழைக்கிறோம். பழிக்கப்படும்போது ஆசி கூறுகிறோம்; துன்புறுத்தப்படும்போது பொறுத்துக்கொள்கிறோம். அவமதிக்கப்படும்போதும் கனிவாகப் பேசுகிறோம். நாங்கள் உலகத்தின் குப்பை போல் ஆனோம். இதுவரை அனைத்திலும் கழிவுப் பொருட்கள் எனக் கருதப்பட்டுவருகிறோம்.

உங்களை வெட்கமடையச் செய்ய நான் இவற்றை எழுதவில்லை; நீங்கள் என் அன்பார்ந்த பிள்ளைகளென எண்ணி, உங்களுக்கு அறிவு புகட்டவே இவற்றை எழுதுகிறேன். கிறிஸ்துவைச் சார்ந்த உங்களுக்கு ஆசிரியர்கள் பல்லாயிரம் இருக்கலாம்; ஆனால் தந்தையர் பலர் இல்லை. நற்செய்தி வழியாக நான் உங்களைக் கிறிஸ்தவர்களாக ஈன்றெடுத்தேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 145: 17-18. 19-20. 21 . (பல்லவி: 18)  Mp3

பல்லவி: மன்றாடும் யாவருக்கும் ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்.
17
ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே.
18
தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். - பல்லவி

19
அவர் தமக்கு அஞ்சி நடப்போரின் விருப்பத்தை நிறைவேற்றுவார்; அவர்களது மன்றாட்டுக்குச் செவிசாய்த்து அவர்களைக் காப்பாற்றுவார்.
20
ஆண்டவர் தம்மிடம் பற்றுக் கொள்ளும் அனைவரையும் பாதுகாக்கின்றார்; பொல்லார் அனைவரையும் அழிப்பார். - பல்லவி

21
என் வாய் ஆண்டவரின் புகழை அறிவிப்பதாக! உடல் கொண்ட அனைத்தும் அவரது திருப்பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவதாக! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 14: 6

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

ஓய்வு நாளில் செய்யக் கூடாததை நீங்கள் செய்வதேன்?

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-5

ஓர் ஓய்வு நாளில் இயேசு வயல் வழியே செல்ல நேர்ந்தது. அவருடைய சீடர் கதிர்களைக் கொய்து கைகளினால் கசக்கித் தின்றனர். பரிசேயருள் சிலர், "ஓய்வு நாளில் செய்யக் கூடாததை நீங்கள் செய்வதேன்?" என்று கேட்டனர்.

அதற்கு இயேசு மறுமொழியாக, "தாமும் தம்முடன் இருந்தவர்களும் பசியாய் இருந்தபோது, தாவீது செய்ததைக் குறித்து நீங்கள் வாசித்தது இல்லையா? அவர் இறை இல்லத்திற்குள் சென்று, குருக்கள் மட்டுமே அன்றி வேறு எவரும் உண்ணக் கூடாத அர்ப்பண அப்பங்களை எடுத்துத் தாம் உண்டதுமன்றித் தம்மோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தார் அல்லவா?" என்று கூறினார். மேலும் அவர்களிடம், "ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே" என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
 

 


1 கொரிந்தியர் 4: 6-15

"மனிதர்களைப் பிரிப்பவர்களாக இல்லாமல், இணைப்பவர்களாக இருப்போம்"

நிகழ்வு



தையல்காரர் ஒருவர் இருந்தார். இவர் தன்னுடைய வீட்டிற்கு முன்பாக அமைத்திருந்த சிறிய தையல்கடையில் துணிகளைத் தைத்து, அதன்மூலம் தன்னுடைய குடும்பத்தைக் கரையேற்றி வந்தார்.

ஒரு விடுமுறை நாளில் இந்தக் தையல்கடைக்கு வந்த தையல்காரரின் மகன், தன் தந்தை கத்தரிக்கோலை எடுத்துத் துணிகளை வெட்டுவதையும், பின்னர் துணிகளை வெட்டப் பயன்படுத்திய கத்திரிக்கோலைத் தன் காலடியில் வைப்பதையும், அதன்பின்னர் ஊசியை எடுத்து வெட்டிய துணிகளைத் தைப்பதும், துணிகளைத் தைத்த பின்னர் ஊசியைத் தன்னுடைய தலைப்பாகையில் சொருகிக் கொள்வதுமாக இருந்ததைப் பார்த்தான்.

இக்காட்சியைப் பார்த்துவிட்டு அவன் தன் தந்தையிடம், "அப்பா! கத்தரிக்கோலோ அளவில் பெரிதாக இருக்கின்றது; பார்ப்பதற்கு விலை அதிகம் போல இருக்கின்றது. அதை நீங்கள் உங்களுடைய காலடியில் வைத்துவிட்டு, சிறியதும், அதேநேரத்தில் விலை மிகவும் குறைவானதுமான ஊசியை உங்கள் தலைப்பாகையில் சொருகிக் கொள்கிறீர்களே. ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?" என்றான்.

தன் மகன் கேட்ட இக்கேள்விக்கு அந்தத் தையல்காரத் தந்தை இப்படிப் பதிலளித்தார்: "தம்பி! கத்தரிக்கோல் பெரியதாகவும், விலை கூடுதலாகவும் இருக்கலாம்; ஆனால், இந்தக் கத்தரிக்கோல் துணிகளை வெட்டிக்கொண்டிருக்கின்றது. வெட்டிவிடும் வேலையைச் செய்யும் இந்தக் கத்தரிக்கோலைக் காலடியில் வைப்பதுதான் நல்லது. மாறாக, இந்த ஊசி அளவில் சிறியதாகவும், விலை மிகவும் குறைவானதாகவும் இருந்தாலும், இணைக்கும் வேலையைச் செய்கின்றது. இணைக்கும் வேலையைச் செய்யும் எதையும் நமக்கு அருகில் வைத்திருப்பதுதான் நல்லது. அதனால்தான் அதை நான் என்னுடைய தலைப்பாகையில் சொருகி வைத்துக்கொள்கின்றேன்."

இப்படிச் சொல்லிவிட்டு அந்தத் தையல்காரத் தந்தை, தன் மகனிடம் இவ்வாறு சொல்லி முடித்தார். "மனிதர்களில்கூட பிரிப்பவர்கள், இணைப்பவர்கள் என்று இரண்டு வகையான மனிதர்கள் இருக்கின்றார்கள். பிரிப்பவர்களைச் சற்றுத் தொலைவிலேயே வைத்துவிட்டு, இணைப்பவர்களை நமக்கு மிக நெருக்கமாக வைத்துக்கொண்டால், நமது வாழ்க்கை சிறக்கும்."

ஆம், இந்த நிகழ்வில் வரும் தையல்காரத் தந்தை தன் மகனிடம் சொல்வதைப் போன்று, இந்த உலகில் மனிதர்களைப் பிரிப்பவர்கள், இணைப்பவர்கள் என்று இருவகையான மனிதர்கள் இருக்கின்றார்கள். இன்றைய முதல் வாசகமும் மனிதர்களைப் பிரிப்பவர்கள், இணைப்பவர்கள் என்று இரண்டுவகையான மனிதர்களைக் குறித்துப் பேசுகின்றது. யாரெல்லாம் மனிதர்களைப் பிரிப்பவர்களாக இருந்தார்கள்...? யாரெல்லாம் மனிதர்களை இணைப்பவர்களாக இருந்தார்கள்...? என்பன குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

மனிதர்களைப் பிரித்தவர்கள்

கொரிந்து நகர்த் திருஅவையில் இருந்த ஒருசிலர், "நான் பவுலைச் சார்ந்துள்ளேன்", "நான் அப்பொல்லோவைச் சார்ந்துள்ளேன்" என்று பிரிந்து கிடந்தார்கள்; மற்றவர்களையும் பிரித்துக் கொண்டிருந்தார்கள். கிறிஸ்துவில் ஒரே உடலாக (1 கொரி 12: 13) இருந்து, ஒன்றித்து வாழப் பணிக்கப்பட்ட கொரிந்து நகர்த் திருஅவையைச் சார்ந்த மக்கள் இப்படிப் பிரிந்துகிடந்ததைப் பார்த்துத்தான் பவுல் அவர்களிடம், "ஒருவரை ஆதரித்தும் மற்றவரை எதிர்த்தும் செயல்படாதீர்கள்" என்று அவர்களுக்கு அறிவுரை கூறுகின்றார்.

மனிதர்களை இணைத்தவர்

கொரிந்து நகர்த் திருஅவையில் இருந்த ஒருசிலர் பிரிந்தும், மற்றவர்களைப் பிரிப்பவர்களாகவும் இருந்தபொழுது, பவுல் அவர்களைக் கிறிஸ்துவில் ஓருடலாக இருக்க, இணைந்து வாழப் பணித்தார். ஆம், மனிதர்களைப் பிரித்து, அதன்மூலம் ஆதாயம் தேடுவதற்கு இன்றைக்குப் பலர் இருக்கின்றார்கள்; மக்களை இணைப்பதற்கு இன்றைக்கு மனிதர்கள் வெகு சொற்பம்தான். கொரிந்தில் இருந்தவர்களைப் பிரிப்பதற்குப் பலர் முயன்றபொழுது, பவுல் அவர்களை இணைப்பதற்காக முயற்சி செய்தார்.

ஆண்டவர் இயேசு யூதர்களையும், பிற இனத்தாரையும் பிரித்து நின்ற பகைமை என்ற சுவரை, தமது உடலில் ஏற்ற துன்பத்தின் வழியாய்த் தகர்த்தெறிந்து, அவர்களை ஒன்றுபடுத்தினார் (எபே 2:13). இயேசுவின் வழியில் நடக்கின்ற நாமும் நம்மைப் பிரித்து வைத்திருக்கும் தீய சக்திகளை நம்மிடமிருந்து அப்புறப்படுத்திவிட்டு, கிறிஸ்துவில் எல்லாரையும் ஓருடலாக்க முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். புனித பவுல் எல்லாரையும் கிறிஸ்துவில் ஒருடலாக்க முயற்சி செய்தார். நாமும் அத்தகைய வழியைப் பின்பற்றி இயேசுவின் உண்மையான சீடார்களாய் வாழ்வோம்.

சிந்தனை

"கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்" (மாற்கு 10:9) என்பார் இயேசு. இயேசு சொல்லக்கூடிய இந்த வார்த்தைகள் திருமண வாழ்வில் இணைத்திருப்பர்களை முன்னிட்டுச் சொல்லப்பட்ட வார்த்தைகளாக இருந்தாலும், எல்லாருக்கும் பொருந்தக்கூடிய வார்த்தைகளாக இருக்கின்றன. ஆகையால், நாம் மொழியின் பெயரிலும், இனத்தின் பெயரிலும், குலத்தின் பெயரிலும் மனிதர்களைப் பிரிப்பவர்களாக இல்லாமல், இயேசுவின் பெயரில் மனிதர்களை இணைப்பவர்களாக இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
லூக்கா 6: 1-5

குறைகூறிக் கொண்டே இருப்பவர்கள்!

நிகழ்வு



இளைஞன் ஒருவன் இருந்தான். இவனுக்குத் திடீரென்று துறவியாக வேண்டும் என்ற ஆசை வந்தது. அதனால் இவன் ஒரு துறவுமடத்திற்குச் சென்று, அங்கிருந்த துறவுமடத் தலைவரிடம், துறவியாக வேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தைச் சொன்னான். அவரோ இவனிடம், "இந்தத் துறவுமடத்திற்கென்று ஒரு நிபந்தனை இருக்கின்றது. ஒருவர் இந்தத் துறவுமடத்தில் துறவியாக இருக்கவேண்டுமெனில், அவர் ஏழு ஆண்டுகளுக்கு எதுவும் பேசக்கூடாது; ஏழு ஆண்டுகள் கழித்து, அவர் என்னிடம் எதுவேண்டுமானாலும் பேசலாம்; ஆனால் ஒரு வாக்கியம்தான் பேசவேண்டும். இந்த நிபந்தனைக்கு நீ கட்டுப்பட்டாய் எனில் துறவுமடத்தில் சேரலாம்" என்றார். "துறவியாகவேண்டும் என்று ஆசைப்பட்டுவிட்டோம்... பேசாமல் இருப்பது ஒரு பெரிய செயலா...?" என்று நினைத்துகொண்டு இவன் துறவுமடத் தலைவரிடம், "நிபந்தனைகளுக்குக் கட்டுபட்டு நடக்கின்றேன்" என்றான்.

இதற்குப் பிறகு இவனுக்கென்று ஓர் அறை ஒதுக்கப்பட்டது. அந்த அறை மிகவும் சிறிதாக இருந்தது. மட்டுமல்லாமல், அந்த அறையில் படுத்துறங்கக் கட்டில் இல்லை; வெறும் பாய் மட்டுமே இருந்தது. வசதியாக வாழ்ந்து பழக்கப்பட்ட இவன், "படுத்துறங்க ஒரு கட்டில் கூட இல்லையே!" என்று துறவுமடத்தில் புகுந்த முதல் நாளே புலம்பத் தொடங்கினான். என்ன செய்வது; ஏழு ஆண்டுகளுக்கு எதுவும் பேசக்கூடாது என்ற நிபந்தனை இருந்ததால், குளிரைத் தாங்கிக்கொண்டு இவன் ஏழு ஆண்டுகள் பாயிலேயே படுத்துறங்கி வந்தான்.

ஏழு ஆண்டுகளுக்கு கழித்து, துறவுமடத் தலைவரிடம் சென்ற இவன், "என்னுடைய அறையில் படுத்துறங்க கட்டில் இல்லை; ஒரு கட்டில் இருந்தால் நன்றாக இருக்கும்" என்றான். "சரி, உன்னுடைய அறைக்குக் கட்டில் கொண்டுவரப்படும். இனி ஏதாவது பேசவேண்டும் என்றால், ஏழு ஆண்டுகள் கழித்துப் பேசலாம்" என்று சொல்லிவிட்டு போய்விட்டார் துறவுமடத் தலைவர். இவன் துறவுமடத் தலைவரிடம் கேட்டுக்கொண்டது போல், இவனுடைய அறைக்குக் கட்டில் கொண்டுவரப்பட்டது; ஆனால், கட்டிலை உள்ளே கொண்டுவர முடியாதவாறு அறை மிகவும் சிறிதாக இருந்ததால், அதைக்கொண்டு வந்த பணியாளர் கட்டிலைப் பக்க வாட்டில் கொண்டுவர முயற்சி செய்தார்கள். அப்படிக் கொண்டுவரும்பொழுது, அவர்கள் அறையில் இருந்த காலதரில் மோத (Window), அது உடைந்துபோனது. இதனால் இவன் மழையையும் குளிரையும் தாங்கிக்கொண்டு ஏழு ஆண்டுகள் சிரமப்பட வேண்டியதாயிற்று.

ஏழு ஆண்டுகள் கழித்து மீண்டுமாக இவன் துறவியிடம் சென்று, "என்னுடைய அறையில் உள்ள காலதர் உடைந்துவிட்டது. அதைச் சரிசெய்து தந்தால் நன்றாக இருக்கும்" என்றான். "காலதரைச் சரிசெய்யப் பணியாளர்கள் வருவார்கள்; நீங்கள் போகலாம். ஆனால் நீங்கள் "அது சரியில்லை... இது சரியில்லை" என்று சொல்லிக்கொண்டு மீண்டுமாக என்னிடம் வரக்கூடாது" என்று சொல்லி அனுப்பி வைத்தார் துறவுமடத் தலைவர். இதற்குப் பின்பு பணியாளர்கள் இவனுடைய அறையில் இருந்த உடைந்துபோன காலதரைச் சரிசெய்ய வந்தார்கள். அவர்கள் காலதரைச் சரிசெய்ய, அறையின் உள்ளே கிடந்த கட்டிலைத் தூக்கி வெளியே போடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் இவன் காலதர் சரிசெய்யப்பட்டாலும், வெளியே கட்டில் போனதால், முன்புபோல் பாயிலேயே படுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் "கட்டில் வெளியே போய்விட்டது; அதை உள்ளே கொண்டுவரவேண்டும்" என்று இவர் துறவுமடத் தலைவரிடம் சொல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது.

இந்த நிகழ்வில் வரும் இளந்துறவியைப் போன்றுதான் பலரும் "அது சரியில்லை, இது சரியில்லை", "அடுத்தவர் சரியில்லை" என்று குறைகூறிக்கொண்டு இருப்பதைக் காணமுடிகின்றது. இன்றைய நற்செய்தியிலும் பரிசேயருள் சிலர் இயேசுவின் சீடர்கள் கதிர்களைக் கொய்து உண்டதைப் பெரிய குறையாகச் சொல்கின்றார்கள். இதற்கு இயேசுவின் பதில் என்ன என்பதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசுவின் சீடர்களைக் குறைகூறிய பரிசேயர்கள்

நற்செய்தியில் இயேசுவின் சீடர்கள் கதிர்களைக் கொய்து உண்டதைப் பார்த்த பரிசேயர்களுள் சிலர், "ஓய்வுநாளில் செய்யக் கூடாததை நீங்கள் செய்வதேன்?" என்கின்றார்கள். கதிர்களைக் கொய்து உண்பது பிற நாள்களில் குற்றமில்லை என்றாலும் (இச 23: 25), இயேசுவின் சீடர்கள் அதை ஓய்வுநாளில் செய்தததால், பரிசேயர்கள் அதைப் பெரிய குற்றமாகப் பார்க்கின்றார்கள். அப்பொழுதுதான் இயேசு அவர்களிடம் தாவீதின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வை (1 சாமு 21: 1-6) அவர்களுக்கு எடுத்துச் சொல்லித் தக்க பதிலளிக்கின்றார்.

உடன்படிக்கைப் பேழையில், ஏற்கெனவே இருக்கும் பன்னிரண்டு அப்பங்கள் மாற்றப்பட்டு, புதிதாகப் பன்னிரண்டு அப்பங்கள் ஒவ்வொரு வாரமும் வைக்கப்படும் (லேவி 24:9). இப்படிப் பழைய அப்பங்கள் மாற்றப்பட்டு, புதிய அப்பங்கள் வைக்கப்படும்பொழுது ஏற்கெனவே இருந்த பன்னிரண்டு அப்பங்களைக் குருக்கள் மட்டுமே உண்ணவேண்டும். அப்படிப்பட்ட அப்பங்களைத் தாவீது சவுலிடமிருந்து தப்பியோடும்பொழுது, தன்னோடு இருந்தவர்களோடு உண்கின்றார். இந்த நிகழ்வைச் சுட்டிக்காட்டிப் பேசும் இயேசு, தாவீது செய்தது குற்றமில்லை என்றால், தன் சீடர்கள் செய்ததும் குற்றமில்லைதான் என்கின்றார். அதைவிடவும் சட்டங்களை விடவும் மனிதரின் தேவை முக்கியம் என்கின்றார் .

ஆம், சட்டமா? மனிதரின் தேவையா? என்று பார்த்தால், மனிதரிடம் தேவைதான் முன்னுரிமை பெறவேண்டும். இந்த உண்மையைத்தான் இயேசு பரிசேயர்களுக்கு எடுத்துக் கூறுகின்றார். ஆகையால், நாம் சட்டங்களை உயர்த்திப் பிடித்துக்கொண்டு பிறரைக் குறைகூறிக் கொண்டு திரியாமல், மனிதரின் தேவைக்குக் முதன்மையான இடம் கொடுத்து, ஒருவர் மற்றவரிடம் அன்போடும் இரக்கத்தோடும் வாழக் கற்றுக்கொள்வோம்.

சிந்தனை

"குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை" என்பது மூத்தோர் வாக்கு. ஆகையால், நாம் அடுத்தவரைக் குறைகூறிக் கொண்டே இராமல், அவரிடம் இருக்கும் நல்ல பண்புகளைக் கண்டு பாராட்டக் கற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
Free Blog Widget
Stats Counter
hit counter