maraikal
MUM
"

இளையோர்


பொதுக்காலம் 30 ஆம் வாரம்  31-10-2020

முதல் வாசகம்

நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே; நான் இறந்தால் அது எனக்கு ஆதாயமே.

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 18b-26

சகோதரர் சகோதரிகளே,

எப்படியும் கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார். இதனால் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆம், இனியும் மகிழ்ச்சியடைவேன். இவ்வாறு உங்கள் மன்றாட்டும் இயேசு கிறிஸ்துவினுடைய ஆவியின் துணையும் என் விடுதலைக்கு வழி வகுக்கும் என நான் அறிவேன். என்ன நேர்ந்தாலும் வெட்கமுற மாட்டேன். இன்றும் என்றும், வாழ்விலும் சாவிலும் முழுத் துணிவுடன் கிறிஸ்துவை என் உடலால் பெருமைப்படுத்துவேன். இதுவே என் பேராவல், இதுவே என் எதிர்நோக்கு.

ஏனெனில் நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே; நான் இறந்தால் அது எனக்கு ஆதாயமே. எனினும் நான் தொடர்ந்து வாழ்ந்தால் பயனுள்ள பணி செய்ய முடியும். எனவே நான் எதைத் தேர்ந்துகொள்வதென எனக்குத் தெரியவில்லை. இந்த இரண்டுக்கும் இடையே ஓர் இழுபறி நிலையில் உள்ளேன். உயிர் நீத்துக் கிறிஸ்துவோடு இருக்க வேண்டும் என்னும் ஆவல் ஒரு புறம்: இதுவே மிகச் சிறந்தது: ஆனால், இன்னும் வாழவேண்டும் என்பது மற்றொரு புறம்: இது உங்கள் பொருட்டு மிகத் தேவையாய் இருக்கின்றது.

நான் உங்களோடு இருப்பதால் நீங்கள் நம்பிக்கையில் வளர்ச்சி பெற்று மகிழ்ச்சியடைவீர்கள். எனவே உங்கள் அனைவரோடும் தொடர்ந்து தங்கியிருப்பேன் என உறுதியாக நம்புகிறேன். ஆகவே, நான் உங்களிடம் மீண்டும் வருவதால், கிறிஸ்து இயேசுவின் உறவில் வாழும் நீங்கள் என் பொருட்டு இன்னும் மிகுதியாகப் பெருமிதம் கொள்வீர்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

பதிலுரைப் பாடல்

திபா 42: 1. 2. 4ab . (பல்லவி: 2a) Mp3

பல்லவி: உயிருள்ள இறைவன்மீது என் நெஞ்சம் தாகம் கொண்டுள்ளது.

1
கலைமான் நீரோடைகளுக்காக ஏங்கித் தவிப்பது போல் கடவுளே! என் நெஞ்சம் உமக்காக ஏங்கித் தவிக்கின்றது. - பல்லவி

 
2
என் நெஞ்சம் கடவுள்மீது, உயிருள்ள இறைவன்மீது தாகம் கொண்டுள்ளது; எப்பொழுது நான் கடவுள் முன்னிலையில் வந்து நிற்கப் போகின்றேன்? - பல்லவி

 
4ab
மக்கள் கூட்டத்தோடு சேர்ந்து பவனியாகக் கடவுளின் இல்லத்திற்குச் சென்றேனே! ஆர்ப்பரிப்பும் நன்றிப் பாடல்களும் முழங்க விழாக் கூட்டத்தில் நடந்தேனே. - பல்லவி

 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 11: 29ab

அல்லேலூயா, அல்லேலூயா! நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1, 7-11

அக்காலத்தில்

ஓய்வு நாள் ஒன்றில் இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றிருந்தார். அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர். விருந்தினர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தேர்ந்துகொண்டதை நோக்கிய இயேசு அவர்களுக்குக் கூறிய அறிவுரை:

“ஒருவர் உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால், பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களை விட மதிப்பிற்குரிய ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம். உங்களையும் அவரையும் அழைத்தவர் வந்து உங்களிடத்தில், ‘இவருக்கு இடத்தை விட்டுக்கொடுங்கள்’ என்பார். அப்பொழுது நீங்கள் வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும். நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும்போது, போய்க் கடைசி இடத்தில் அமருங்கள். அப்பொழுது உங்களை அழைத்தவர் வந்து உங்களிடம், ‘நண்பரே, முதல் இடத்திற்கு வாரும்’ எனச் சொல்லும் பொழுது உங்களுடன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் யாவருக்கும் முன்பாக நீங்கள் பெருமை அடைவீர்கள்.

தம்மைத் தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.


 

 

பிலிப்பியர் 1: 18b-26

“என்ன நேர்ந்தாலும் வெட்கமுறமாட்டேன்”



நிகழ்வு

இளைஞர் ஒருவர் கப்பற்படையில் ஒரு சாதாரண பொறுப்பில் இருந்து பணிசெய்துகொண்டிருந்தார். ஒருநாள் இவர் பணிசெய்துகொண்டிருந்த கப்பல் நடுக்கடலில் சென்றுகொண்டிருக்கும்பொழுது, அதில் ஒரு பழுது ஏற்பட்டுவிட்டது. இதனால் இவருடைய உயரதிகாரி இவரிடம் வந்து, அந்தப் பழுதை நீக்கிவிடுமாறு கேட்டார். இதற்கு அந்த இளைஞர், “ஏற்கெனவே எல்லாவற்றையும் தனியோர் ஆளாகச் செய்துகொண்டிருக்கின்றேன். இதில் இந்த வேலையையும் நான் உதவியாளர் யாரும் இல்லாமல், தனியாளாய்ச் செய்யவேண்டும் என்றால் எப்படிச் செய்வது! உங்களால் எனக்குப் பிரச்சனைகளுக்கு பிரச்சனைகள்” என்று கத்தினார்.

இளைஞரைப் பேசவிட்டுக் கேட்டுக்கொண்டிருந்த அந்த உயரதிகாரி, அவர் பேசி முடித்ததும், மிகவும் பொறுமையாக இவ்வாறு சொன்னார்: “உங்களுடைய பேச்சைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்ததில், ஒன்று எனக்கு நன்றாகப் புரிந்தது. அது என்னவெனில், நீங்கள் உங்களுடைய பேச்சில் ‘பிரச்சனை’ என்ற வார்த்தையை மிகுதியாகப் பயன்படுத்துவது.

உங்களுடைய முதுகுத்தண்டு முறிந்து, உங்களுடைய வாழ்நாள் முழுவதும் உங்களால் எழுந்திருக்க முடியாமல் போகுமானால், அது பிரச்சனை. உங்களுடைய வீடு தீப்பற்றி எரிந்து, வீட்டில் உள்ள பொருள்கள் எல்லாம் எரிந்து, அந்த இழப்பை ஈடுசெய்ய முடியாமல் போகுமானால் அது பிரச்சனை. இப்படி உங்களுடைய வாழ்க்கையில் ஈடு செய்ய முடியாத அளவுக்கு ஒரு துன்பம் ஏற்படுமானால், அதுதான் பிரச்சனையே ஒழிய, சிறு சிறு துன்பங்கள் எல்லாம் பிரச்சனையே அல்ல, அவை உங்களுடைய வாழ்க்கையில் ஏற்படும் சிரமங்கள். உங்களுடைய வாழ்க்கையில் சிரமங்கள் வரும் போகும். அடுத்த ஆறு மாதங்களோ அல்லது ஓர் ஆண்டோ கழித்து, நீங்கள் உங்களுக்கு வந்த சிரமங்களைத் திரும்பிப் பார்த்தால், அவை சிரமங்களே அல்ல என்பது உங்களுக்குப் புரியும். இன்னும் சொல்லப்போனால், ‘இவற்றையெல்லாமா நான் சிரமங்கள் என்று நினைத்தேன்?’ என்று உங்களுக்குச் சிரிப்பு கூட ஏற்படலாம். அதனால் உங்களுடைய வாழ்க்கையில் வருகின்ற சிரமங்களை நினைத்து நீங்கள் சோர்ந்துபோய்விடாமல், மனவுறுதியோடு இருங்கள்.”

இந்த நிகழ்வில் வருகின்ற இளைஞரைப் போன்றுதான், இன்றைக்குப் பலர் தங்களுடைய வாழ்க்கையில் வரும் சிறு சிறு சிரமங்களுக்கெல்லாம் மிகவும் வருந்தி, சோர்ந்து போவதைக் காணமுடிகின்றது. இத்தகைய சூழ்நிலையில் இன்றைய முதல் வாசகத்தில் புனித பவுல், “என்ன நேர்ந்தாலும் வெட்கமுறைமாட்டேன்” என்கின்றார். புனித பவுல் சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளின் பொருள் என்ன என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

மறுகிறிஸ்துவாக, கிறிஸ்துவுக்காகவே வாழ்ந்த புனித பவுல்

ஒருகாலத்தில் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்திய பவுல், தமஸ்கு நகர் நோக்கிச் செல்லும் வழியில் ஆண்டவரால் தடுத்தாட்கொள்ளப்பட்டு, பிற இனத்தாருக்கு நற்செய்தி அறிவிக்கப் பணிக்கப்படுகின்றார். இதைத் தொடர்ந்து பவுல் தன்னுடைய வாழ்வாலும் வார்த்தாலும் ஆண்டவருடைய நற்செய்தியை மக்களுக்கு அறிவித்து வந்தார். இன்னும் சொல்லப்போனால், “வாழ்பவன் நான் அல்ல; கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்” (கலா 2: 20) என்று மறுகிறிஸ்துவாகவே வாழ்ந்து வந்தார். இவ்வாறு அவர் தன் உடலால் இயேசுவைப் பெருமைப்படுத்தினார். இப்படி இருக்கும்பொழுதுதான் அவருக்குத் துன்பங்களுக்கு மேல் துன்பங்களும், எதிர்ப்புகளுக்கு மேல் எதிர்ப்புகளும் வந்தன. இதை முன்னிட்டுத்தான் அவர், “என்ன நேர்ந்தாலும் வெட்கமுறமாட்டேன்” என்கின்றார்.

ஆம், மறுகிறிஸ்துவாக, கிறிஸ்துவுக்காக நாம் வாழ்கின்றபொழுது நம்மை எதுவும் ஒன்றும் செய்ய முடியாது.

கிறிஸ்துவுக்காக வாழ்கின்றபொழுது எதையும் துணிவோடு எதிர்கொள்ளலாம்

புனித பவுல் மறுகிறிஸ்துவாக, கிறிஸ்துவுக்காக வாழ்ந்ததால், எதுவும் அவரை வெட்கமுறச் செய்யவில்லை என்று மேலே பார்த்தோம். நாமும் கிறிஸ்துவுக்காக, மறுகிறிஸ்துவுக்காக வாழ்ந்தோமெனில் நம்மை எதுவும் ஒன்றும் செய்யாது என்பதே உண்மை.

புனித பவுல் தன்னுடைய உடலால் ஆண்டவரைப் பெருமைப்படுத்தினார்; அவர் அறிவித்த நற்செய்தியால், பலரும் கிறிஸ்துவுக்குள் வந்து சேர்ந்தார்கள்/ இன்றைக்கு நாம் நம்முடைய உடலால் அல்லது வாழ்வால், வார்த்தையால் ஆண்டவர் இயேசுவைப் பெருமைப்படுத்துகின்றோமா? சிந்தித்துப் பார்க்கவேண்டும். கிறிஸ்துவின் அன்பிலிருந்து எதுதான் நம்மைப் பிரிக்க முடியும்?” (உரோ 8: 36) என்று புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் கூறுவார். ஆம், நாம் நம்முடைய உடலால் இயேசுவைப் பெருமைப் பெருமைப்படுத்துகின்றபொழுது, அவருடைய அன்பிலிருந்து நம்மை எதுவும் பிரிக்க முடியாது.

நாம் நம்முடைய உடலால் இயேசுவைப் பெருமைப்படுத்துகின்றோமா? சிந்திப்போம்.

சிந்தனை

‘நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால், நீங்கள் விரும்பிக் கேட்டதெல்லாம் நடக்கும்’ (யோவா 15: 7) என்பார் இயேசு. ஆகையால், நாம் இயேசுவின் வார்த்தைகளை நம்முடைய உள்ளத்தில் தாங்கி, புனித பவுலைப் போன்று மறு கிறிஸ்துவாக வாழ்ந்து, இயேசுவுக்குச் சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
லூக்கா 14: 1, 7-11

“தாழ்ச்சியும் உயர்வும்”


 

நிகழ்வு

ஜப்பானில் உள்ள புகழ்பெற்ற கராத்தே கற்றுத்தரும் பள்ளி அது. அந்தப் பள்ளியில் கராத்தே கற்று வந்த மாணவன் ஒருவன் எல்லாப் போட்டிகளிலும் வெற்றிபெற்றுக் கறுப்புக் கச்சை அதாவது Black Belt பெறுவதற்குத் தகுதியுள்ளவன் ஆனான். பள்ளி நிர்வாகம் பள்ளியில் ஒவ்வோர் ஆண்டும் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் கறுப்புக் கச்சையை அந்த மாணவனுக்கு அளிப்பதாக அறிவித்திருந்தது.

பட்டமளிப்பு நாள் வந்தது. எல்லாப் போட்டிகளிலும் வெற்றி பெற்ற மாணவன், பள்ளியின் முதல்வரிடமிருந்து கறுப்புக் கச்சையைப் பெறுவதற்காக மேடையேறினான். அப்பொழுது பள்ளியின் முதல்வர் அவனிடம், “உனக்கு இந்தக் கறுப்புக் கச்சை எதற்காகத் தரப்படுகின்றது என்று எல்லாருக்கும் முன்பாகச் சொல்ல முடியுமா?” என்றார். “கராத்தேயில், என்னை வெல்வதற்குப் பள்ளியில் யாருமே இல்லை. அதனால்தான் எனக்கு இந்தக் கறுப்புக் கச்சை தரப்படுகின்றது” என்று ஆணவத்தின் உச்சிக்குச் சென்று பேசினான் அவன். இது அவனுக்குப் கறுப்புக் கச்சையைத் தரக் காத்திருந்த பள்ளியின் முதல்வரைத் திடுக்கிட வைத்தது.

‘இந்த மாணவன் ஏன் இவ்வளவு ஆணவத்தோடு பேசவேண்டும்...? இப்படிப்பட்ட மாணவனுக்கு இப்பொழுது இந்தக் கறுப்புக் கச்சைக் கொடுத்தால், இவன் இன்னும் ஆணவம் பிடித்து அலைவான், அதனால் இவனுக்கு அடுத்த ஆண்டு கொடுத்துக்கொள்ளலாம்’ என்று மனத்திற்குள் நினைத்தவராய் அவர், “தம்பி! நீ இன்னொரு போட்டியில் வெற்றிபெற வேண்டியிருக்கின்றது. அதனால் நீ அடுத்த ஆண்டு நடைபெறுகின்ற பட்டமளிப்பு விழாவில் வந்து இந்தக் கறுப்புக் கச்சையை வாங்கிக் கொள்” என்றார். இது அந்த மாணவனுக்குப் பெருத்த ஏமாற்றமாகிப் போய்விட்டது.

அடுத்த ஆண்டு பட்டமளிப்பு விழா வந்தது. பள்ளியின் முதல்வர் குறிப்பிட்ட அந்த மாணவரின் பெயரை வாசிக்க, அவன் கறுப்புக் கச்சையை வாங்க மேடைக்கு வந்தான். கடந்த ஆண்டு கேட்கப்பட்ட அதே கேள்வியை அவனிடம் கேட்டார். அவனும் அதே பதிலைச் சொல்ல, பள்ளியின் முதல்வர் அவனிடம் கடந்த ஆண்டு சொன்ன அதே விளக்கத்தைச் சொல்லி, அவனைத் திருப்தி அனுப்பி வைத்தார். இதனால் அந்த மாணவன் குழம்பினான். ‘அதுதான் எல்லாப் போட்டியிலும் வெற்றி பெற்றுவிட்டேனே...! இன்னும் எந்தப் போட்டியில் நான் வெற்றிபெறவேண்டும்’ என்று தீவீரமாக யோசித்தான் அவன். முடிவில் அவனுக்கு எந்தப் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற உண்மை புரிந்தது.

மறு ஆண்டு பட்டமளிப்பு விழா வந்தது. பள்ளியின் முதல்வர் குறிப்பிட்ட அந்த மாணவனின் பெயரை வாசிக்க அவன், மேடை ஏறினான். அப்பொழுது அவர் அவனிடம், “இந்தக் கறுப்புக் கச்சை உனக்கு எதற்காக கொடுக்கப்படுகின்றது என்று எல்லாருக்கும் முன்பாகச் சொல்லமுடியுமா?” என்று முன்பு கேட்ட, அதே கேள்வியைக் கேட்க, அவன் மிகவும் தாழ்ச்சியோடு, “என்னுடைய திறமையை இன்னும் வளர்த்துக்கொள்ளவே எனக்கு இந்தக் கறுப்புக் கச்சை கொடுக்கப்படுகின்றது” என்றான். அந்த மாணவனிடமிருந்து இப்படியொரு பதில் வந்ததும் பள்ளியின் முதல்வர் அவனிடம், “இப்பொழுதுதான் நீ இந்தக் கறுப்புக் கச்சையைப் பெறுகின்ற அளவுக்கு எல்லாப் போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கின்றாய்” என்றார்.

ஆம், தன்னை வெல்வதற்கு யாரும் இல்லை என்று ஆணவத்தோடு இருந்தவரைக்கும் அந்த மாணவனால் கறுப்புக் கச்சையைப் பெற முடியவில்லை. எப்பொழுது அந்த மாணவன் மிகவும் தாழ்ச்சியோடு பேசினானோ அப்பொழுதுதான் அவனால் அந்தக் கறுப்புக் கச்சையைப் பெற முடிந்தது. ஆம், ஆணவம் அல்ல, தாழ்ச்சியே ஒருவருக்கு உயர்வு தரும் என்பதையும் இந்த நிகழ்வும், இன்றைய நற்செய்தி வாசகமும் எடுத்துக் கூறுகின்றன.. அது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

ஆணவமல்ல, தாழ்ச்சியாலேயே உயர்வு வரும்

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, விருந்துகளில் கலந்துகொள்ளும்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற மிக எளிய அதே நேரத்தில் முக்கியமான ஒரு செய்தியைச் சொல்கின்றார்.

இயேசுவின் காலத்தில் வாழ்ந்துவந்த பரிசேயர்கள் விருந்துகளில் முதன்மையான இடங்களைத் தேடினார்கள் (மத் 23: 6), இயேசுவை விருந்துக்கு அழைத்திருந்த பரிசேயர்த் தலைவர் வீட்டிலும் அப்படித்தான் பலர் முதன்மையான இடங்களைத் தேடுவதில் குறியாய் இருந்தார்கள். இதைப் பார்த்துவிட்டுத்தான் இயேசு மக்களிடம், ஒருவர் உங்களை விருந்துக்கு அழைக்கின்றபொழுது முதன்மையான இடங்களை அல்ல, கடைசியான இடங்களில்போய் அமர்ந்துகொள்ளுங்கள். அப்படி நீங்கள் அமரும்பொழுது உங்களை விருந்துக்கு அழைத்தவர், உங்களுக்கு முதன்மையான இடத்தைக் கொடுத்து, எல்லாருக்கும் முன்பாக உங்களை உயரச் செய்வார் என்கின்றார்.

இயேசு சொல்லக்கூடிய இந்த அறிவுரை விருந்துக்கு மட்டுமல்ல, நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கும் தேவையான ஒன்றாக இருக்கின்றது. ஆகையால், நாம் உள்ளத்தில் தாழ்சியுள்ளவர்களாய் வாழக் கற்றுக்கொள்வோம்.

சிந்தனை

‘கடவுள் தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்’ (லூக் 1: 50) என்பது மரியா பாடிய பாடலில் உள்ள வரிகள். ஆகையால், நாம் கடவுளுக்கு எப்பொழுது உகந்தவர்களாக, அவரால் உயர்த்தப்பட, தாழ்ச்சியுள்ளவர்களாக வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
 


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
Free Blog Widget
Stats Counter
hit counter