maraikal
MUM
"

இளையோர்


பொதுக்காலம் 29 ஆம் வாரம்  19-10-2020

முதல் வாசகம்

இயேசு கிறிஸ்துவோடு இணைந்த நிலையில் நாம் அவரோடு உயிர்த்தெழவும் விண்ணுலகில் அவரோடு அமரவும் செய்தார்.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-10

சகோதரர் சகோதரிகளே,

உங்களுடைய குற்றங்களையும் பாவங்களையும் முன்னிட்டு நீங்கள் இறந்தவர்களாய் இருந்தீர்கள். அப்பொழுது நீங்கள் இவ்வுலகப் போக்கின்படி, வான்வெளியில் அதிகாரம் செலுத்தும் தலைவனுக்கு ஏற்ப வாழ்ந்து வந்தீர்கள். கடவுளுக்குக் கீழ்ப்படியாத மக்களிடையே இப்போது செயலாற்றும் தீய ஆற்றலுக்குப் பணிந்து நடந்தீர்கள். இந்நிலையில்தான் ஒரு காலத்தில் நாம் எல்லாரும் இருந்தோம். நம்முடைய ஊனியல்பின் தீய நாட்டங்களின்படி வாழ்ந்து, உடலும் மனமும் விரும்பியவாறு செயல்பட்டு, மற்றவர்களைப் போலவே நாமும் இயல்பாகக் கடவுளின் சினத்துக்கு ஆளானோம்.

ஆனால் கடவுள் மிகுந்த இரக்கம் உடையவர். அவர் நம்மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார். குற்றங்களின் காரணமாய் இறந்தவர்களாய் இருந்த நாம் அவ்வன்பின் மூலம் இணைந்து உயிர் பெறச் செய்தார். நீங்கள் மீட்கப்பட்டிருப்பது அந்த அருளாலேயே. இயேசு கிறிஸ்துவோடு இணைந்த நிலையில் நாம் அவரோடு உயிர்த்தெழவும் விண்ணுலகில் அவரோடு அமரவும் செய்தார். கிறிஸ்து இயேசு வழியாகக் கடவுள் நமக்குச் செய்த நன்மையையும் அவரது ஒப்புயர்வற்ற அருள் வளத்தையும் இனி வரும் காலங்களிலும் எடுத்துக்காட்டுவதற்காகவே இவ்வாறு செய்தார். நீங்கள் அந்த அருளாலேயே நம்பிக்கையின் வழியாக மீட்கப்பட்டிருக்கிறீர்கள். இது உங்கள் செயல் அல்ல; மாறாக இது கடவுளின் கொடை. இது மனிதச் செயல்களால் ஆனது அல்ல. எனவே எவரும் பெருமை பாராட்ட இயலாது. ஏனெனில் நாம் கடவுளின் கைவேலைப்பாடு; நற்செயல்கள் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாய்ப் படைக்கப்பட்டிருக்கிறோம். இவ்வாறு நற்செயல்கள் புரிந்து வாழும்படி கடவுள் முன்கூட்டியே ஏற்பாடு செய்திருக்கிறார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 100: 1-2. 3. 4. 5 . (பல்லவி: 3b) Mp3

பல்லவி: ஆண்டவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள்.
1
அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!
2
ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! - பல்லவி

3
ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்! - பல்லவி

4
நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்! புகழ்ப் பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்! அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள்! - பல்லவி

5
ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 5: 3

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நீ சேர்த்து வைத்தவை யாருடையவை ஆகும்?

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 13-21

அக்காலத்தில்

கூட்டத்தில் இருந்த ஒருவர் இயேசுவிடம், “போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக்கொள்ளுமாறு என் சகோதரருக்குச் சொல்லும்” என்றார். அவர் அந்த ஆளை நோக்கி, “என்னை உங்களுக்கு நடுவராகவோ பாகம் பிரிப்பவராகவோ அமர்த்தியவர் யார்?” என்று கேட்டார். பின்பு அவர் அவர்களை நோக்கி, “எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாய் இருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது” என்றார்.

அவர்களுக்கு அவர் ஓர் உவமையைச் சொன்னார்: “செல்வனாயிருந்த ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. அவன், ‘நான் என்ன செய்வேன்? என் விளைபொருள்களைச் சேர்த்து வைக்க இடமில்லையே!’ என்று எண்ணினான். ‘ஒன்று செய்வேன்; என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன்; அங்கு என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன்'. பின்பு, “என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பலவகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன; நீ ஓய்வெடு; உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு எனச் சொல்வேன்” என்று தனக்குள் கூறிக்கொண்டான். ஆனால் கடவுள் அவனிடம், ‘அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?’ என்று கேட்டார். கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவராய்த் தமக்காகவே செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே.”

ஆண்டவரின் அருள்வாக்கு.
 

 

எபேசியர் 2: 1-10

“நற்செயல்கள் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாய்ப் படைக்கப்பட்டிருக்கின்றோம்”



நிகழ்வு

சில ஆண்டுகளுக்கு முன்பாக அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தொடர்ந்து குற்றச் செயல்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. இதைத் தடுக்க அமெரிக்க அரசாங்கம் அதிகாரிகளை நியமித்தது. அவர்கள் ஒருவர் பின் ஒருவராகக் கொலை செய்யப்பட்டார்கள். இப்படி அந்தக் கொலைகாரக் கும்பலால் கொல்லப்பட்டவர்கள் மட்டும் ஏழு காவல்துறை அதிகாரிகள்.

இதையெல்லாம் அறிந்து, உயரிடத்தில் இருந்தவர்கள் அதிர்ந்து போனார்கள். குற்றங்கள் பெருகிக்கொண்டிருக்கும் அந்த இடத்தில் யாரை நியமித்தால் குற்றங்கள் குறையும் என்று அவர்கள் தீவிரமாக யோசிக்கும்பொழுதுதான், டென்னிஸ் காரிங்டன் என்ற காவல்துறை அதிகாரியின் நினைவு அவர்களுக்கு வந்தது. உடனே அவர்கள் அவரை, நியூயார்க் நகரின் குறிப்பிட்ட பகுதியில் பொறுப்பில் அமர்த்தினார்கள்.

டென்னிஸ் காரிங்டன் அந்தப் பகுதிக்கு வந்தபிறகு ஒரே ஆண்டில் நூற்று ஏழு குற்றவாளிகளைக் கைதுசெய்தார். அவர்கள் கைது செய்யப்பட்ட பிறகு, அவர்களுக்கு நீதிமன்றத்திலிருந்து தீர்ப்புக் கிடப்பதற்குக் காலதாமதம் ஆனது. அதனால் அவர்களுக்குப் பணம் செலவானது. அந்தச் செலவுகளை எல்லாம் டென்னிஸ் காரிங்டன் தன் சொந்தப் பணத்தைக் கொடுத்துச் சரிசெய்தார். மேலும் சிறையில் இருந்த அந்தக் குற்றவாளிகளின் குடும்பங்களுக்குப் பணத் தேவை ஏற்பட்டபொழுதும் டென்னிஸ் காரிங்டன் அவர்களுக்குப் பண உதவிகளைச் செய்தார்.

எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டு வந்த ஒரு காவலர் டென்னிஸ் காரிங்டனிடம், “நீங்கள் எதற்கு உங்களுடைய கையிலிருந்து பணத்தைப் போட்டு, இந்தக் குற்றவாளிகளுக்கு உதவிகள் செய்துகொண்டு வருகின்றீர்கள். நீங்கள் இவர்களுக்கு நல்லது எதுவும் செய்யாவிட்டாலும், உங்களை யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை. பிறகு நீங்கள் இவர்களுக்கு உதவி செய்கின்றீர்கள்” என்றார். அதற்கு டென்னிஸ் காரிங்டன் அவரிடம், “நல்லது செய்வது ஒரு விதையை நடுவதைப் போன்றது. விதை எப்படி வளர்ந்து விருச்சமாகி மிகுந்த பலன் கொடுக்கின்றதோ அப்படி நாம் செய்யும் நற்செயல்கள் என்றாவது ஒருநாள் நிச்சயம் பலன் கொடுக்கும்” என்றார்.

இது நடந்து ஓரிரு ஆண்டுகள் கழித்து, நியூயார்க் நகரில் பெருமழையுடன் கூடிய புயல் வீசியது. ஒருசிலர் அந்தப் புயலில் மாட்டிக்கொண்டு தத்தளித்துக் கொண்டிருக்கும்பொழுது, டென்னிஸ் காரிங்டன் அவர்களுக்கு உதவி செய்துகொண்டிருந்தார். ஒரு பக்கம் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டிக்கொண்டிருக்க, மறுபக்கம் டென்னிஸ் காரிங்க்டன் புயலில் சிக்கிக்கொண்டிருந்தவர்களைப் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பிக் கொண்டிருந்த அந்த நேரத்தில், யாரோ ஒருவர் அவர் மழையில் நனையாமல் இருக்கக் குடை பிடித்தார். ‘இந்த நேரத்தில் யார் நமக்குக் குடை பிடிக்கின்றார்?’ என்று டென்னிஸ் காரிங்டன் திரும்பிப் பார்த்தார். அங்குத் தான் பண உதவி செய்த குற்றவாளி ஒருவர் கையில் குடையுடன் நின்றுகொண்டிருந்தார். அப்பொழுது அவருக்கு முன்பொரு முறை ஒரு காவலரிடம் சொன்ன, ‘நாம் செய்யும் நற்செயல்கள் எப்படியாவது நமக்குத் திரும்ப வரும்’ என்ற வார்த்தைகள் நினைவுவுக்கு வந்தன.


ஆம், நாம் செய்யக்கூடிய நற்செயல்கள் எப்படியாவது நமக்குத் திரும்ப வரும். இன்றைய முதல் வாசகத்தில் புனித பவுல், நற்செயல்கள் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாய்ப் படைக்கப்பட்டிருக்கின்றோம் என்கின்றார். புனித பவுல் சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளின் பொருள் என்ன என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

நற்செயல்கள் செய்யவேண்டியது நமது கடமை

எபேசியர்த் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகத்தில், பவுல் இரண்டு முதன்மையான கருத்துகளை எடுத்துரைக்கின்றார். ஒன்று, குற்றங்களின் காரணமாக இறந்தவர்களாக இருந்த நம்மை, கடவுள் தம் பேரன்பினால் உயிர்பெறச் செய்தார் என்பது. இரண்டு, நற்செயல்கள் புரிவதற்கென்றே நாம் படைக்கப்பட்டிருகின்றோம் என்பது.

ஒரு காலத்தில் மனிதர்கள் தங்களுடைய ஊனியல்பிற்கு ஏற்ப நடந்து, குற்றங்கள் பல புரிந்து, இறந்தவர்கள் போன்று இருந்தார்கள். இந்நிலையில் கடவுள் தன்னுடைய பேரன்பினால், மனிதர்களை உயிர்பெறச் செய்தார். இவ்வாறு உயிர்பெற்ற நாம், கிறிஸ்து இயேசு வழியாய் நற்செயல்கள் புரியவேண்டும். அதற்காகவே, நாம் படைக்கப்பட்டிருக்கின்றோம். ஆதலால், கடவுளின் பேரன்பால் உயிர்பெற்ற நாம் அதற்கு நன்றியாக நற்செயல்கள் செய்யவேண்டும். இந்த உண்மையை நம்முடைய அன்றாட வாழ்வில் நாம் நற்செயல்கள் செய்கின்றோமா? சிந்திப்போம்.

சிந்தனை

‘உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க. அப்பொழுது உங்களுடைய நற்செயல்களைக் கண்டு, அவர்கள் உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்’ (மத் 5: 16) என்பார் இயேசு. ஆகையால், கடவுளின் பேரன்பால் உயிர்பெற்ற நாம், நற்செயல்கள் செய்து, நம்முடைய விண்ணகத் தந்தைக்குப் பெருமை சேர்ப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
லூக்கா 12: 13-21

“கடவுளிடமிருந்து நம்மை அந்நியப்படுத்தும் காசு”


நிகழ்வு

இங்கிலாந்து நாட்டைச் சார்ந்தவர் மறைப்போதகரான ராபர்ட் ஹால் (1764-1831). ஒருமுறை இவரிடத்தில் ஒருவர் வந்தார். அவரை இவருக்கு நன்றாகத் தெரியும்; பணம் மட்டுமே வாழ்க்கை என நினைத்து வாழ்ந்துகொண்டிருந்த அவருக்கு ராபர்ட் ஹால் நல்லதொரு பாடம் புகட்ட நினைத்தார்.

அதனால் ராபர்ட் ஹால் திருவிவிலியத்தைத் தம் கையில் எடுத்து, அதில் ‘கடவுள்’ என்று இருந்த இடத்தில், தம் விரலை வைத்து, “இதில் என்ன எழுதி இருக்கின்றது என்று தெரிகிறதா?” என்றார். “கடவுள் என்று எழுதியிருக்கின்றது” என்றார் அந்த மனிதர். பின்னர் ராபர்ட் ஹால் தன்னுடைய சட்டைப் பையிலிருந்த ஒரு நாணயத்தை எடுத்து, கடவுள் என்று இருந்த இடத்தில் வைத்து, “இப்பொழுது இந்த இடத்தில் என்ன இடம்பெற்றிருக்கின்றது என்று தெரிகிறதா?” என்றார். “தெரியவில்லை” என்றார் அவர்.

ராபர்ட் ஹால் அவரிடம் தொடர்ந்து பேசினார்: “இப்பொழுது நான் உன்னிடம் என்ன சொல்லப்போகிறேன் என்று உனக்கு நன்றாகவே தெரியும்... பணம்தான் பெரிது என்று வாழ்ந்துகொண்டிருக்கின்றாய்; ஆனால், அந்தப் பணமே நீ கடவுளைக் காணமுடியாதவாறு உன்னுடைய கண்ணை மறைத்துவிடும். மட்டுமல்லாமல் எல்லாவிதத் தீமைகளுக்குள்ளும் அது உன்னை விழத் தாட்டிவிடும். அதனால் மிகவும் கவனமாய் இரு.”

பலர் இந்த நிகழ்வில் வருகின்ற மனிதரைப் போன்றுதான் பணமும் பொருளும் உடைமைகளும்தான் வாழ்க்கை என நினைத்து வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். இப்படிப்பட்டவர்கள் கண்ணிருந்தும் குருடர்களாய் இருக்கின்றார்கள் என்பதுதான் உண்மை. இன்றைய நற்செய்தி வாசகம், பணமும் உடைமைகளும் மட்டுமே வாழ்க்கை என வாழ்ந்துகொண்டிருக்கும் ஒருவருடைய முடிவு எப்படி இருக்கும் என்பதைக் குறித்து எடுத்துச் சொல்கின்றது. அதைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசுவைப் பாகம் பிரிப்பவராக அமர்த்த முயன்ற மனிதர்!

இயேசு மக்கள் நடுவில் பணியாற்றும்பொழுது இறையாட்சி, இறையன்பு, மன்னிப்பு, பரிவு..... போன்ற மிக உன்னதமான நெறிகளைப் போதித்து, அவர்களும், அனைத்திற்கும் மேலாகக் கடவுளுடைய ஆட்சியையும், அவருக்கு ஏற்புடையவற்றை நாட வேண்டும் (மத் 6: 33) என்றும் போதித்தார். இப்படியிருக்கையில் ஒருவர் இன்றைய நற்செய்தியில், “போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக் கொள்ளுமாறு என் சகோதருக்குச் சொல்லும்” என்கின்றார்.

யூத இரபிகள் மக்கள் நடுவில் உள்ள பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பது வழக்கம். அந்த அடிப்படையில்தான் இந்த மனிதர், இயேசுவிடம், சொத்தை என்னோடு பங்கிக்கொள்ளுமாறு என் சகோதருக்குச் சொல்லும் என்கின்றார். மோசேயின் சட்டப்படி, தலைச்சன் பிள்ளைக்குச் சொத்தில் மூன்றில் இரண்டு மடங்கும், அதற்கு அடுத்து உள்ளவருக்கு ஒரு மடங்கும் கொடுக்கப்படுவது வழக்கம். உண்மை இப்படி இருக்கையில் இந்த மனிதர் இயேசுவிடம், சொத்தை என்னோடு பங்கிட்டுக் கொள்ளுமாறு என் சகோதரருக்குக் சொல்லும் என்று சொன்னதால் இயேசு, ‘இந்த மனிதர் பேராசையால் இப்படிச் சொல்கின்றார் என்று, “எவ்வகைப் பேராசைக்கும் இடம்கொடாதவாறு எச்சரிக்கையாய் இருங்கள்.....” என்கின்றார்.

கடவுள் முன்னிலையில் செல்வம் சேர்த்து வைப்போம்

இயேசுவிடம் பேசிய மனிதர், தன்னுடைய சகோதரன் (நிச்சயம் அவர் மூத்தவராகத்தான் இருந்திருக்கவேண்டும்) சொத்தைத் தன்னோடு பங்கிக்கொள்ளும் பட்சத்தில், தனக்கு நிறைய சொத்துச் சேரும். அதன்மூலம் தான் பெரிய செல்வராக செல்வந்தராகி விடலாம் என்ற பேராசையோடு இருந்திருக்கவேண்டும்; ஆனால், இயேசு அவரிடம் எவ்வகைப் பேராசைக்கும் இடம்கொடுக்க வேண்டாம் என்றும், மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் மட்டும் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது என்றும் கூறுகின்றார். இதை விளக்க இயேசு சொல்லும் உவமைதான் அறிவற்ற செல்வந்தன் உண்மை.

இயேசு சொல்லும் உவமையில் வரும் செல்வந்தன், மனிதருக்கு முன் செல்வம் சேர்க்க நினைத்தானே ஒழிய, கடவுளுக்கு முன் செல்வம் சேர்க்கவில்லை. அதாவது அவன் தன்னிடம் இருந்தைப் பிறரோடு பகிர முன் வரவில்லை. அதனால் அவனுடைய முடிவு மிகக் கொடூரமாக இருக்கின்றது. நாம் ஒவ்வொருவரும் மனிதர்முன் அல்ல, கடவுள் முன் செல்வந்தவர்களாக இருக்க அழைக்கப்பட்டிருக்கின்றோம். ஆதலால் நாம் பேராசைக்கு இடம்கொடாமல், இருப்பதைப் பிறரோடு பகிர்ந்து, கடவுள்முன் செல்வந்தர்களாய் இருப்போம்.

சிந்தனை

‘பொருளாசையை விலக்கி வாழுங்கள். உள்ளதே போதும் என்றிருங்கள். ஏனெனில், ‘நான் உன்னைக் கைவிடமாட்டேன்! உன்னை விட்டு விலக மாட்டேன்’ என்று கடவுளே கூறியிருக்கின்றார்’ (எபி 13: 5) என்பார் எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர். நாம் பொருளாசை விட்டுவிலகி, ஆண்டவர்மீது ஆழமான பற்றுக்கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
Free Blog Widget
Stats Counter
hit counter