maraikal
MUM
"

இளையோர்


பொதுக்காலம் 27 ஆம் வாரம்  09-10-2020

முதல் வாசகம்

ஆபிரகாம் பெற்ற அதே ஆசியில் நம்பிக்கை கொள்வோரும் பங்கு பெறுவர்.

திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 7-17

சகோதரர் சகோதரிகளே,

நம்பிக்கை கொண்டு வாழ்பவர்களே ஆபிரகாமின் மக்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள். நம்பிக்கை கொள்ளும் பிற இனத்தாரையும் கடவுள் தமக்கு ஏற்புடையவராக்குவார் என்பதை முன்னறிந்துதான் மறைநூல், “உன் வழியாக மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்” என்னும் நற்செய்தியை ஆபிரகாமுக்கு முன்னுரைத்தது. ஆகவே நம்பிக்கை கொண்ட ஆபிரகாம் பெற்ற அதே ஆசியில் நம்பிக்கை கொள்வோரும் பங்கு பெறுவர்.

திருச்சட்டம் சார்ந்த செயல்களையே நம்பியிருப்பவர்கள் சாபத்துக்கு ஆளானவர்கள்; ஏனெனில், “திருச்சட்டத்தின் வார்த்தைகளை எல்லாம் கடைப்பிடித்து நடவாதோர் சபிக்கப்படட்டும்!” என்று எழுதியுள்ளது. சட்டம் சார்ந்த செயல்களால் எவரும் கடவுள் முன்னிலையில் ஏற்புடையவர் ஆவதில்லை என்பதும் தெளிவு. ஏனெனில், “நேர்மையுடையோர் தம் நம்பிக்கையால் வாழ்வடைவர்.” திருச்சட்டம் நம்பிக்கையை அடிப்படையாய்க் கொண்டது அல்ல. மாறாக, “சட்டம் சார்ந்தவற்றைக் கடைப்பிடிப்போர் அவற்றால் வாழ்வு பெறுவர்” என்று எழுதியுள்ளது.

“மரத்தில் தொங்கவிடப்பட்டோர் சபிக்கப்பட்டோர்” என்று எழுதி உள்ளவாறு, நமக்காகக் கிறிஸ்து சாபத்துக்கு உள்ளாகி நம்மைச் சட்டத்தின் சாபத்தினின்று மீட்டுக் கொண்டார். ஆபிரகாமுக்குக் கிடைத்த ஆசி இயேசு கிறிஸ்துவின் வழியாய்ப் பிற இனத்தார்க்கும் கிடைக்கவும், வாக்களிக்கப்பட்ட தூய ஆவியை நாம் நம்பிக்கையின் வழியாய்ப் பெற்றுக்கொள்ளவுமே இவ்வாறு செய்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 111: 1-2. 3-4. 5-6 . (பல்லவி: 5b) Mp3

பல்லவி: ஆண்டவர் தமது உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார்.

அல்லது: அல்லேலூயா.
1
நெஞ்சார ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்; நீதிமான்களின் மன்றத்திலும் சபையிலும் அவருக்கு நன்றி செலுத்துவேன்.
2
ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை; அவற்றில் இன்பம் காண்போர் அனைவரும் அவற்றை ஆய்ந்துணர்வர். - பல்லவி

3
அவரது செயல் மேன்மையும் மாண்பும் மிக்கது; அவரது நீதி என்றென்றும் நிலைத்துள்ளது.
4
அவர் தம் வியத்தகு செயல்களை என்றும் நினைவில் நிலைக்கச் செய்துள்ளார்; அருளும் இரக்கமும் உடையவர் ஆண்டவர். - பல்லவி

5
அவர் தமக்கு அஞ்சி நடப்போர்க்கு உணவு அளிக்கின்றார்; தமது உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார்;
6
வேற்றினத்தாரின் உரிமைச் சொத்தைத் தம் மக்களுக்கு அளித்தார்; இவ்வாறு ஆற்றல்மிக்க தம் செயல்களை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 12: 31b-32

அல்லேலூயா, அல்லேலூயா! இப்போதே இவ்வுலகு தீர்ப்புக்கு உள்ளாகிறது; இவ்வுலகின் தலைவன் வெளியே துரத்தப்படுவான். நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும்போது அனைவரையும் என்பால் ஈர்த்துக்கொள்வேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நான் கடவுளின் ஆற்றலால் பேய்களை ஓட்டுகிறேன் என்றால் இறையாட்சி உங்களிடம் வந்துள்ளது அல்லவா!

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 15-26

அக்காலத்தில்

மக்களுள் சிலர் இயேசுவைக் குறித்து, “பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்” என்றனர். வேறு சிலர் அவரைச் சோதிக்கும் நோக்குடன், வானத்திலிருந்து ஏதேனும் ஓர் அடையாளம் காட்டுமாறு அவரிடம் கேட்டனர்.

இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து, அவர்களிடம் கூறியது: “தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் பாழாய்ப்போகும். அவ்வாறே பிளவுபடும் வீடும் விழுந்துவிடும். சாத்தானும் தனக்கு எதிராகத் தானே பிளவுபட்டுப் போனால் அவனது அரசு எப்படி நிலைத்து நிற்கும்? பெயல்செபூலைக் கொண்டு நான் பேய்களை ஓட்டுகிறேன் என்கிறீர்களே. நான் பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறேன் என்றால் உங்களைச் சேர்ந்தவர்கள் யாரைக் கொண்டு பேய் ஓட்டுகிறார்கள்? ஆகவே அவர்களே உங்கள் கூற்று தவறு என்பதற்குச் சாட்சிகள். நான் கடவுளின் ஆற்றலால் பேய்களை ஓட்டுகிறேன் என்றால் இறையாட்சி உங்களிடம் வந்துள்ளது அல்லவா! வலியவர் ஆயுதம் தாங்கித் தம் அரண்மனையைக் காக்கிறபோது அவருடைய உடைமைகள் பாதுகாப்பாக இருக்கும். அவரைவிட மிகுந்த வலிமையுடையவர் ஒருவர் வந்து அவரை வென்றால் அவர் நம்பியிருந்த எல்லாப் படைக்கலங்களையும் பறித்துக் கொண்டு, கொள்ளைப் பொருளையும் பங்கிடுவார்.

என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்; என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறடிக்கிறார்.

ஒருவரை விட்டு வெளியேறுகின்ற தீய ஆவி வறண்ட இடங்களில் அலைந்து திரிந்து இளைப்பாற இடம் தேடும். இடம் கண்டுபிடிக்க முடியாமல், ‘நான் விட்டுவந்த எனது வீட்டுக்குத் திரும்பிப் போவேன்’ எனச் சொல்லும். திரும்பி வந்து அவ்வீடு கூட்டி அழகுபடுத்தப்பட்டிருப்பதைக் காணும். மீண்டும் சென்று தன்னைவிடப் பொல்லாத வேறு ஏழு ஆவிகளை அழைத்து வந்து அவருள் புகுந்து அங்கே குடியிருக்கும்.

அவருடைய பின்னைய நிலைமை முன்னைய நிலைமையை விடக் கேடுள்ளதாகும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.
 

 


கலாத்தியர் 3: 7-17

“நம்பிக்கை கொண்டு வாழ்பவர்களே ஆபிரகாமின் மக்கள்”


நிகழ்வு

அது நகரின் பரபரப்பான சாலை. அந்தச் சாலையின் இரண்டு பக்கமும் உயரமான இரண்டு கோபுரங்கள் இருந்தன. அந்த இரண்டு கோபுரங்களுக்கு நடுவிலும் திடீரென்று ஒரு கயிறு கட்டப்பட்டது. அந்தக் கயிற்றின் வழியாக ஒருவர் தன் தோள்மேல் தனது குழந்தையை வைத்துக்கொண்டு, கையில் ஒரு சிறிய கம்பையும் பிடித்துக்கொண்டு நடக்கத் தொடங்கினார்.

அவர் இவ்வாறு நடப்பதைப் பார்த்துவிட்டு, சாலையில் சென்றுகொண்டிருந்த, அந்தப் பக்கம் நின்றுகொண்டிருந்த பலரும் அவரை வியப்போடு பார்க்கத் தொடங்கினார்கள். கயிற்றில் நடந்துவந்தவரோ மிகவும் கவனமாக நடந்து, மறு கோபுரத்தை அடைந்தார். பின்னர் அவர் அங்கு நின்றுகொண்டிருந்தவர்களைப் பார்த்து, “அன்பார்ந்த மக்களே! இப்பொழுது என்னால் இந்தக் கோபுரத்திலிருந்து அந்தக் கோபுரத்திற்குச் செல்ல முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?” என்றார். அதற்கு அங்குத் திரண்டிருந்த மக்களோ, உங்களால் இந்தக் கோபுரத்திலிருந்து அந்தக் கோபுரத்திற்குச் செல்ல முடியும் என்று நம்புகிறோம்” என்று ஒருமித்த குரலில் சொன்னார்கள்.

உடனே கயிற்றில் நடந்துகொண்டிருந்த அந்த மனிதர், சாலையின் ஓரமாகத் திரண்டிருந்த மக்களைப் பார்த்து, “என்னால் இந்தக் கயிற்றின் வழியாக இந்தக் கோபுரத்திலிருந்து அந்தக் கோபுரத்திற்குச் செல்ல முடியும் என்று நம்புகிறீர்கள்தானே! அப்படியானால் உங்களில் யாராவது ஒருவர் முன்வாருங்கள்; நான் அவரை என் தோள்மேல் வைத்துக்கொண்டு, அந்தக் கோபுரத்திற்குச் செல்கின்றேன்” என்றார். அவர் இப்படிச் சொன்னதும், சாலையோரமாக நின்றுகொண்டிருந்தவர்கள், “அது எப்படி இவரால் நம்மை இந்தக் கோபுரத்திலிருந்து அந்தக் கோபுரத்திற்குக் கொண்டு செல்ல முடியும்...? இது முடியாத செயல்” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.

இந்த நிகழ்வில் வருகின்ற மக்கள் எப்படி கயிற்றின்மீது நடந்த மனிதர்மீது முழுமையான நம்பிக்கை வைக்காது இருந்தார்களோ, அப்படி இன்றைக்குப் பலர் ஆண்டவர்மீது முழுமையான நம்பிக்கை வைக்காமலும், அந்த நம்பிக்கைக்கேற்ப வாழாமலும் இருக்கின்றார்கள். இத்தகைய சூழ்நிலையில், இன்றைய முதல் வாசகத்தில், “நம்பிக்கை கொண்டு வாழ்பவர்களே ஆபிரகாமின் மக்கள் என்று வாசிக்கின்றோம். நாம் அதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

திருச்சட்டம் சார்ந்த செயல்களையே நம்பியிருப்பவர்கள் சாபத்துக்கு ஆளானவர்கள்

யூதர்கள் நடுவில் இரண்டு முக்கியமான கருத்துகள் இருந்து வந்தன. ஒன்று, சட்டம் சார்ந்தவற்றைக் கடைப்பிடிப்போர் அவற்றால் வாழ்வு பெறுவர் என்பது (லேவி 18: 5). இரண்டு, ஒருவர் யூதராகப் பிறந்துவிட்டாலே போதும், அவர் ஆபிரகாமின் மகன் ஆகிவிடுவார் என்பது. இந்த இரண்டு கருத்துகளைக் குறித்தும் சிறிது சிந்தித்துப் பார்ப்போம்.

முதலாவதாக, சட்டம் சார்ந்தவற்றைக் கடைப்பிடிப்போர் அவற்றால் வாழ்வு பெறுவர் என்பதைக் குறித்துச் சிந்தித்துப் பார்க்கும்பொழுது, ஒருவரால் சட்டத்தை முழுமையாக, நூறு விழுக்காடு கடைப்பிடிக்க முடியாது என்று உறுதியாகச் சொல்லலாம். எப்படியாவது ஒரு சூழலில் அவர் சட்டத்தை மீறக்கூடிய, சட்டத்தைக் கடைப்பிடிக்காமல் போகக்கூடிய சூழ்நிலை ஏற்படக்கூடும். இதனால் அவரால் திருச்சட்டத்தின் வார்த்தைகளை எல்லாம் கடைப்பிடித்து நடக்க முடியாமல் சபிக்கப்படக்கூடிய நிலை ஏற்படும் (இச 27: 26) வாழ்வைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போகக்கூடிய நிலையும் ஏற்படும். இதனால்தான் புனித பவுல், “திருச்சட்டம் சார்ந்த செயல்களையே நம்பியிருப்பவர்கள் சாபத்துக்கு ஆளானவர்கள்” என்கின்றார்.

இரண்டாவது, ஒருவர் யூதராகப் பிறந்துவிட்டாலே போதும், அவர் ஆபிரகாமின் மகனாகிவிடுவார் என்று யூதர்களிடமிருந்த நம்பிக்கையைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்போம். யூதர்கள் தாங்கள் யூதராகப் பிறந்துவிட்டாலே போதும், ஆபிரகாமின் பிள்ளைகளாகிவிடலாம் என்று நினைத்தார்கள். இதனால் அவர்கள் கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழாமல், எப்படியும் வாழ்ந்தார்கள். யூதரல்லாதவர்களை ஒரு பொருட்டாகக்கூட மதிக்காமல் இருந்தார்கள். இது குறித்துத் திருமுழுக்கு யோவான் கூறும்பொழுது, “ஆபிரகாம் எங்களுக்குத் தந்தை என உங்களிடையே சொல்லிப் பெருமை கொள்ள வேண்டாம்... (மத் 3:9) என்பார். அப்படியானால் ஒருவர் ஆபிரகாமின் வழிவருவதாலோ அல்லது சட்டம் சார்ந்தவற்றைக் கடைப்பிடிப்பதாலோ மட்டும் வாழ்வடைய முடியாது என்பது உறுதி.

நம்பிக்கையால் மட்டுமே வாழ்வு

சட்டம் சார்ந்தவற்றைக் கடைப்பிடிப்பதாலோ, ஆபிரகாமின் வழிவருவதாலோ ஒருவர் வாழ்வடைய முடியாது; மாறாக, நம்பிக்கையால் மட்டுமே வாழ்வடைவார்; அப்படிப்பட்டவரே ஆபிரகாமின் மகன் என அழைக்கப்படுவார் என்கின்றார் புனித பவுல். ஆம், ஆபிரகாம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டிருந்தார்; அந்த நம்பிக்கையாலே அவர் வாழ்வடைந்தார்; அவர் வழியாகப் பிறரும் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டு வாழ்வடைந்தனர். ஆதலால், ஒருவர் வாழ்வடைவதற்கு அவர் ஆண்டவர்மீது நம்பிக்கை கொள்வது மிகவும் இன்றியமையாததாக இருக்கின்றது.

நாம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டு, அந்த நம்பிக்கைக்கேற்ப வாழ்கின்றோமா? சிந்தித்துப் பார்ப்போம்.

சிந்தனை

‘கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கேற்ற செயல்’ என்பார் இயேசு (யோவா 6: 29). எனவே, நாம் கடவுள் அனுப்பிய இயேசுவின்மீது ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
லூக்கா 11: 15-26

“நம்மை அவமானப்படுத்துபவர்களை எப்படி எதிர்கொள்வது?”


நிகழ்வு

தாத்தாவும் பேரனும் மனம்விட்டுப் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது பேரன் தாத்தாவிடம், “தாத்தா! ஒருவர் என்னை அவமானப்படுத்தினால் நான் என்ன செய்வது?” என்றான். “உன்னை ஒருவர் அவமானப்படுத்தினால், அவரை நிராகரித்து விடு; அப்படியில்லை என்றால், அப்படியே சிரித்துவிட்டுக் கடந்துவிடு. ஒருவேளை அவர் அவமானப்படுத்தியதில் ஏதாவது நல்ல செய்தி இருப்பின், அந்தப் பாடத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, பாரத்தை விட்டுவிடு” என்று அறிவுப்பூர்வமாகப் பதிலளித்தார்.

தன்னுடைய தாத்தாவிடமிருந்து இப்படியொரு பதில் வந்ததைக் கேட்டுப் பேரன் பெரிதும் மகிழ்ந்தான்.

நம்மை அவமானப்படுத்துபவர்களை அல்லது நம்மைத் தேவையில்லாமல் விமர்சிப்பவர்களை நாம் எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்ற உண்மையை விளக்கிச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. நற்செய்தியில் இயேசு பேய்பிடித்துப் பேச்சிழந்த ஒருவரிடமிருந்து பேயை ஓட்டியதும், பரிசேயக் கூட்டம் அவரைத் தேவையில்லாமல் விமர்சிக்கின்றது. இந்த விமர்சனத்தை இயேசு எப்படி எதிர்கொண்டார் என்பதைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

தூய ஆவியாரால், தீய ஆவியை விரட்டும் இயேசு

திருத்தூதர் பணிகள் நூல் 10: 38 இல் இவ்வாறு நாம் வாசிக்கின்றோம்: “கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்ததால், அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார்.” இவ்வார்த்தைகள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த மண்ணுலகத்தில் வாழ்ந்தபொழுது, தூய ஆவியாரின் வல்லமையால், தீய ஆவியை விரட்டியடித்தார் என்ற உண்மையை எடுத்துச் சொல்வதாக இருக்கின்றன. இப்படி இருக்கையில், இன்றைய நற்செய்தியில், இயேசு பேய்பிடித்துப் பேச்சிழந்த ஒருவரிடமிருந்து பேயை ஓட்டியதும், ஒருசிலர் அதாவது பரிசேயர்கள், இயேசு பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுவதாகச் சொல்வது மிகவும் வியப்பாக இருக்கின்றது.

ஒருவரை எதிர்த்து நிற்க முடியாமல் அல்லது ஒருவரோடு போட்டி போட முடியாமல் போனால், அவரைப் பற்றித் தவறாகப் பரப்புரை செய்வது ஒருசிலர் செய்யக்கூடிய மிக மலினமான செயல். பரிசேயர்களால் இயேசுவை எதிர்த்து நிற்க முடியவில்லை; அவர் அடைந்த பெயரையும் புகழையும், மக்கள் நடுவில் அவர் கொண்டிருந்த செல்வாக்கையும் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் அவர்கள், இயேசுவைப் பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகின்றார் என்று விமர்சிக்கின்றார்கள். பரிசேயர்களின் இந்தத் தேவையற்ற விமர்சனத்தை இயேசு எப்படி எதிர்கொண்டார் என்பதைப் பற்றித் தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.

தனக்கு எதிராகப் பிளவுபடும் எந்த அரசும் நிலைத்து நிற்காது

‘பரிசேயர்கள் தன்னைத் தேவையின்றி விமர்சிக்கின்றார்களே!’ என்று நினைத்து இயேசு முடங்கிப் போய்விடவில்லை. மாறாக, அவர் அவர்களுக்குத் தக்க பதில்கூறுகின்றார். இயேசு அவர்களுக்குக் கூறும் முதலாவது பதில், “தனக்கு எதிராகப் பிளவுபடும் எந்த அரசும் நிலைத்து நிற்க முடியாது” என்பதாகும். பரிசேயர்கள் சொல்வதுபோல், இயேசு பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகின்றார் எனில், அது பேய்களின் ஆட்சிக்கு எதிரான செயலாகிவிடும். அப்படி யாரும் தான் கெட்டுப்போக வேண்டும் என்று நினைப்பதில்லை. அதனால் பரிசேயர்களின் கூற்று பெய் என்று நிரூபிக்கின்றார் இயேசு.

இயேசு பரிசேயர்களுக்கு அளிக்கும் இரண்டாது பதில், நான் பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஒட்டுகிறேன் என்றால், நீங்கள் யாரைக் கொண்டு பேய்களை ஒட்டுகிறீர்கள் என்பதாகும். இயேசுவின் காலத்தில் பலர் பேய்களை ஓட்டிக்கொண்டிருந்தார்கள். நிச்சயமாக அவர்கள் இயேசுவைப் போன்று தூய ஆவியாரின் வல்லமையால் பேயை ஓட்டி இருக்கமாட்டார்கள். அதனால்தான் இயேசு நீங்கள் யாரைக் கொண்டு பேய்களை ஒட்டுகிறீர்கள் என்று அவர்களுக்குப் பதிலளிக்கின்றார்.

இயேசு பரிசேயர்களுக்கு அளிக்கும் மூன்றாவது பதில், ஒரு வலியவரை அவரை விட வலியவர்தான் வெல்ல முடியும் என்பதாகும். இயேசு பேயை விரட்டியடித்தார் எனில், அவர் அதைவிட வலிமையானர், அதன்மீது அதிகாரம் கொண்டிருப்பவர் என்பது உண்மையாகின்றது. இவ்வாறு இயேசு தன்னைத் தேவையின்றி விமர்சித்தவர்களுக்குத் தக்க பதில் கொடுத்து, அவர்களுடைய வாயை அடிக்கின்றார்.

நம்முடைய வாழ்விலும் ஒருசிலர் நம்மைத் தேவையின்றி, எந்தவோர் ஆதாரமும் இன்றி விமர்சிக்கலாம். இத்தகையோரை நாம் இயேசுவைப் போன்று எதிர்கொள்வது அல்லது நிகாரித்துவிட்டுக் கடந்து போவது சிறந்தது.

சிந்தனை

‘மற்றவர்களை விமர்சிப்பவர்களாக அல்லாமல், ஊக்கப்படுத்துபவர்களாக இருங்கள். ஏனெனில் இந்த உலகத்த்தில் மற்றவர்களை விமர்சிப்பவர்கள் தேவைக்கு மிகுதியாகவே இருக்கின்றார்கள்’ என்கிறது ஒரு முதுமொழி. ஆகையால், நாம் மற்றவர்களைத் தேவையில்லாமல் விமர்சிப்பவர்களாக இல்லாமல், ஊக்கப்படுத்துபவர்களாக இருப்போம். இயேசுவின் வழியில் எப்பொழுதும் நாம் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
Free Blog Widget
Stats Counter
hit counter