maraikal
MUM
"


பொதுக்காலம் 16 ஆம் வாரம்  19-07-2020

முதல் வாசகம்

எம் பாவங்களிலிருந்து மனமாற்றம் அருள்கிறீர்.

சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 12: 13, 16-19

ஆண்டவரே, உம்மைத் தவிர வேறு கடவுள் இல்லை. எல்லாவற்றின் மீதும் நீர் கருத்தாய் இருக்கிறீர். முறைகேடாக நீர் தீர்ப்பு வழங்குவதில்லை என்பதை யாரிடம் காட்ட வேண்டும்?

உமது ஆற்றலே நீதியின் ஊற்று. அனைத்தின் மீதும் உமக்குள்ள ஆட்சியுரிமை அனைத்தையும் வாழும்படி விட்டு வைக்கிறது. மனிதர்கள் உமது வலிமையின் நிறைவை ஐயுறும்போது நீர் உம்முடைய ஆற்றலைக் காட்டுகிறீர்; அதை அறிந்திருந்தும் செருக்குற்றிருப்போரை அடக்குகிறீர். நீர் ஆற்றல் மிக்கவராய் இருப்பதால் கனிவோடு தீர்ப்பு வழங்குகிறீர்; மிகுந்த பொறுமையோடு எங்களை ஆள்கிறீர். ஏனெனில் நீர் விரும்பும் போதெல்லாம் செயல் புரிய உமக்கு வலிமை உண்டு.

நீதிமான்கள் மனிதநேயம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதை இச்செயல்கள் வாயிலாக உம் மக்களுக்குக் கற்றுக் கொடுத்தீர்; உம் மக்களை நன்னம்பிக்கையால் நிரப்பினீர்; ஏனெனில் பாவங்களிலிருந்து மனமாற்றம் அருள்கிறீர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 86: 5-6. 9-10. 15-16 . (பல்லவி: 5a) Mp3

பல்லவி: ஆண்டவரே, நீர் நல்லவர்; மன்னிப்பவர்.
5
என் தலைவரே! நீர் நல்லவர்; மன்னிப்பவர்; உம்மை நோக்கி மன்றாடும் அனைவருக்கும் பேரன்பு காட்டுபவர்.
6
ஆண்டவரே, என் வேண்டுதலுக்குச் செவிகொடும்; உம் உதவியை நாடும் என் குரலைக் கேட்டருளும். - பல்லவி

9
என் தலைவரே! நீர் படைத்த மக்களினத்தார் அனைவரும் உம் திருமுன் வந்து உம்மைப் பணிவர்; உமது பெயருக்கு மாட்சி அளிப்பர்.
10
ஏனெனில், நீர் மாட்சி மிக்கவர்; வியத்தகு செயல்கள் புரிபவர்; நீர் ஒருவரே கடவுள்! - பல்லவி

15
என் தலைவரே! நீரோ இரக்கமிகு இறைவன்; அருள்மிகுந்தவர்; விரைவில் சினமுறாதவர்; பேரன்பும் உண்மையும் பெரிதும் கொண்டவர்.
16
என்னைக் கண்ணோக்கி என்மீது இரங்கும்; உம் அடியானுக்கு உம் ஆற்றலைத் தாரும்; உம் அடியாளின் மகனைக் காப்பாற்றும். - பல்லவி

இரண்டாம் வாசகம்

தூய ஆவியார் தாமே நமக்காகப் பரிந்து பேசுகிறார்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 26-27

சகோதரர் சகோதரிகளே,

தூய ஆவியார் நமது வலுவற்ற நிலையில் நமக்குத் துணைநிற்கிறார்; ஏனெனில், எதற்காக, எப்படி நாம் இறைவனிடம் வேண்டுவது என்று நமக்குத் தெரியாது; தூய ஆவியார் தாமே சொல் வடிவம் பெறமுடியாத நம்முடைய பெருமூச்சுகளின் வாயிலாய் நமக்காகப் பரிந்து பேசுகிறார். உள்ளங்களைத் துருவி ஆயும் கடவுள் தூய ஆவியாரின் மனநிலையை அறிவார். தூய ஆவியாரும் கடவுளுக்கு உகந்த முறையில் இறை மக்களுக்காகப் பரிந்து பேசுகிறார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 11: 25 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

அறுவடை வரை, இரண்டையும் வளர விடுங்கள்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 24-43

அக்காலத்தில்

இயேசு மக்கள் கூட்டத்திற்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: "விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம். ஒருவர் தம் வயலில் நல்ல விதைகளை விதைத்தார். அவருடைய ஆள்கள் தூங்கும்போது அவருடைய பகைவன் வந்து கோதுமைகளுக்கு இடையே களைகளை விதைத்து விட்டுப் போய்விட்டான்.

பயிர் வளர்ந்து கதிர்விட்டபோது களைகளும் காணப்பட்டன. நிலக்கிழாருடைய பணியாளர்கள் அவரிடம் வந்து, "ஐயா, நீர் உமது வயலில் நல்ல விதைகளை அல்லவா விதைத்தீர்? அதில் களைகள் காணப்படுவது எப்படி?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "இது பகைவனுடைய வேலை" என்றார். உடனே பணியாளர்கள் அவரிடம், "நாங்கள் போய் அவற்றைப் பறித்துக்கொண்டு வரலாமா? உம் விருப்பம் என்ன?" என்று கேட்டார்கள். அவர், "வேண்டாம், களைகளைப் பறிக்கும்போது அவற்றோடு சேர்த்துக் கோதுமையையும் நீங்கள் பிடுங்கிவிடக்கூடும். அறுவடைவரை இரண்டையும் வளரவிடுங்கள். அறுவடை நேரத்தில் அறுவடை செய்வோரிடம், "முதலில் களைகளைப் பறித்துக்கொண்டு வந்து எரிப்பதற்கெனக் கட்டுகளாகக் கட்டுங்கள். கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள்" என்று கூறுவேன்" என்றார்.

இயேசு அவர்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: "ஒருவர் கடுகு விதையை எடுத்துத் தம் வயலில் விதைத்தார். அவ்விதை எல்லா விதைகளையும் விடச் சிறியது. ஆனாலும், அது வளரும்போது மற்றெல்லாச் செடிகளையும் விடப் பெரியதாகும். வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும். விண்ணரசு இக்கடுகு விதைக்கு ஒப்பாகும்."

அவர் அவர்களுக்குக் கூறிய வேறு ஓர் உவமை: "பெண் ஒருவர் புளிப்பு மாவை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது. விண்ணரசு இப்புளிப்பு மாவுக்கு ஒப்பாகும்."

இவற்றையெல்லாம் இயேசு மக்கள் கூட்டத்துக்கு உவமைகள் வாயிலாக உரைத்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு எதையும் பேச வில்லை. "நான் உவமைகள் வாயிலாகப் பேசுவேன்; உலகத் தோற்றமுதல் மறைந்திருப்பவற்றை விளக்குவேன்" என்று இறைவாக்கினர் உரைத்தது இவ்வாறு நிறைவேறியது. அதன்பின்பு இயேசு மக்கள் கூட்டத்தினரை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்தார். அப்போது அவருடைய சீடர்கள் அவர் அருகே வந்து, "வயலில் தோன்றிய களைகள் பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிக் கூறும்" என்றனர். அதற்கு அவர் பின்வருமாறு கூறினார்:

"நல்ல விதைகளை விதைப்பவர் மானிட மகன்; வயல், இவ்வுலகம்; நல்ல விதைகள், கடவுளின் ஆட்சிக்குட்பட்ட மக்கள்; களைகள், தீயோனைச் சேர்ந்தவர்கள்; அவற்றை விதைக்கும் பகைவன், அலகை; அறுவடை, உலகின் முடிவு; அறுவடை செய்வோர், வானதூதர்.

எவ்வாறு களைகளைப் பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும். மானிட மகன் தம் வானதூதரை அனுப்புவார். அவர்கள் அவருடைய ஆட்சிக்குத் தடையாக உள்ள அனைவரையும் நெறி கெட்டோரையும் ஒன்றுசேர்ப்பார்கள்; பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும். அப்போது நேர்மையாளர் தம் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப் போல் ஒளி வீசுவர். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்."

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது குறுகிய வாசகம்

அறுவடை வரை, இரண்டையும் வளர விடுங்கள்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 24-30

அக்காலத்தில்

இயேசு மக்கள் கூட்டத்திற்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: "விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம். ஒருவர் தம் வயலில் நல்ல விதைகளை விதைத்தார். அவருடைய ஆள்கள் தூங்கும்போது அவருடைய பகைவன் வந்து கோதுமைகளுக்கு இடையே களைகளை விதைத்து விட்டுப் போய்விட்டான்.

பயிர் வளர்ந்து கதிர்விட்டபோது களைகளும் காணப்பட்டன. நிலக்கிழாருடைய பணியாளர்கள் அவரிடம் வந்து, "ஐயா, நீர் உமது வயலில் நல்ல விதைகளை அல்லவா விதைத்தீர்? அதில் களைகள் காணப்படுவது எப்படி?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "இது பகைவனுடைய வேலை" என்றார். உடனே பணியாளர்கள் அவரிடம், "நாங்கள் போய் அவற்றைப் பறித்துக்கொண்டு வரலாமா? உம் விருப்பம் என்ன?" என்று கேட்டார்கள். அவர், "வேண்டாம், களைகளைப் பறிக்கும்போது அவற்றோடு சேர்த்துக் கோதுமையையும் நீங்கள் பிடுங்கிவிடக்கூடும். அறுவடைவரை இரண்டையும் வளர விடுங்கள். அறுவடை நேரத்தில் அறுவடை செய்வோரிடம், "முதலில் களைகளைப் பறித்துக்கொண்டு வந்து எரிப்பதற்கெனக் கட்டுகளாகக் கட்டுங்கள். கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள்" என்று கூறுவேன்" என்றார்."

ஆண்டவரின் அருள்வாக்கு.

 




- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
Free Blog Widget
Stats Counter
hit counter