maraikal
MUM
"


பொதுக்காலம் 14 ஆம் வாரம்  10-07-2020

முதல் வாசகம்

எங்கள் கைவினைப் பொருள்களை நோக்கி, `எங்கள் கடவுளே! ' என்று இனிச் சொல்லமாட்டோம்.

இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 14: 1-9

ஆண்டவர் கூறுவது:

இஸ்ரயேலே! உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வா; நீ உன் தீச்செயலால் வீழ்ச்சியுற்றாய். இம்மொழிகளை ஏந்தி ஆண்டவரிடம் திரும்பி வந்து இவ்வாறு சொல்லுங்கள்: "தீவினை அனைத்தையும் அகற்றியருளும், நன்மையானதை ஏற்றுக்கொள்ளும்; நாங்கள் எங்கள் வாய்மொழியாம் கனிகளை உமக்கு அளிப்போம்; அசீரியர் எங்களை விடுவிக்கமாட்டார்கள்; குதிரைமேல் நாங்கள் ஏறமாட்டோம்; எங்கள் கைவினைப் பொருள்களை நோக்கி, "எங்கள் கடவுளே! " என்று இனிச் சொல்லமாட்டோம்; திக்கற்றவன் உம்மிடத்தில் பரிவைப் பெறுகிறான்" எனச் சொல்லுங்கள்.

அவர்களுடைய பற்றுறுதியின்மையை நான் குணமாக்குவேன்; அவர்கள்மேல் உளமார அன்பு கூர்வேன். அவர்கள் மேலிருந்த என் சினம் தணிந்து விட்டது. நான் இஸ்ரயேலுக்குப் பனிபோல் இருப்பேன்; அவன் லீலிபோல் மலருவான்; லெபனோனின் மரம்போல் வேரூன்றி நிற்பான். அவனுடைய கிளைகள் விரிந்து பரவும்; அவன் பொலிவு ஒலிவ மரம்போல் இருக்கும்; லெபனோனைப் போல் அவன் நறுமணம் பரப்புவான்.

அவர்கள் திரும்பி வந்து என் நிழலில் குடியிருப்பார்கள்; கோதுமை போல் தழைத்தோங்குவார்கள். திராட்சைக் கொடிபோல் செழிப்படைவார்கள். லெபனோனின் திராட்சை இரசம் போல் அவர்களது புகழ் விளங்கும். இனிமேல் எப்ராயிமுக்குச் சிலைகள் எதற்கு? நானே அவனுக்குச் செவி சாய்த்து, அவன்மேல் அக்கறை கொண்டுள்ளேன்; நான் பசுமையான தேவதாரு மரம் போன்றவன். உன் கனி எல்லாம் என்னிடமிருந்தே வரும். ஞானம் நிறைந்தவன் எவனோ, அவன் இவற்றை உணர்ந்து கொள்ளட்டும்; பகுத்தறிவு உள்ளவன் எவனோ, அவன் இவற்றை அறிந்து கொள்ளட்டும்; ஆண்டவரின் நெறிகள் நேர்மையானவை; நேர்மையானவர்கள் அவற்றைப் பின்பற்றி நடக்கிறார்கள்; மீறுகிறவர்கள் அவற்றில் இடறி விழுகின்றார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்


திபா 51: 1-2. 6-7. 10-11. 12,15 . (பல்லவி: 15b) Mp3

பல்லவி: ஆண்டவரே, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும்.
1
கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்.
2
என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப் படுத்தியருளும். - பல்லவி

6
இதோ! நீர் விரும்புவது உள்ளத்து உண்மையையே; மெய்ஞானத்தால் என் மனத்தை நிரப்பும்.
7
ஈசோப்பினால் என்னைக் கழுவியருளும்; நான் தூய்மையாவேன். என்னைக் கழுவியருளும்; உறைபனியிலும் வெண்மையாவேன். - பல்லவி

10
கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும்.
11
உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். - பல்லவி

12
உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும்.
15
என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்; அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 16: 13

அல்லேலூயா, அல்லேலூயா! உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

பேசுபவர் நீங்கள் அல்ல. மாறாக, உங்கள் தந்தையின் ஆவியாரே.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 16-23

அக்காலத்தில்

இயேசு தம் திருத்தூதர்களை நோக்கிக் கூறியது: "இதோ! ஓநாய்கள் இடையே ஆடுகளை அனுப்புவதைப் போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப் போல முன்மதி உடையவர்களாயும் புறாக்களைப் போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.

எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில் மனிதர்கள் உங்களை யூதச் சங்கங்களிடம் ஒப்புவிப்பார்கள். தங்கள் தொழுகைக்கூடங்களில் உங்களைச் சாட்டையால் அடிப்பார்கள். என் பொருட்டு ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் உங்களை இழுத்துச் செல்வார்கள். இவ்வாறு யூதர்கள் முன்னும் பிற இனத்தவர் முன்னும் சான்று பகர்வீர்கள். இப்படி அவர்கள் உங்களை ஒப்புவிக்கும்பொழுது, "என்ன பேசுவது, எப்படிப் பேசுவது" என நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் என்ன பேச வேண்டும் என்பது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். ஏனெனில் பேசுபவர் நீங்கள் அல்ல. மாறாக, உங்கள் தந்தையின் ஆவியாரே உங்கள் வழியாய்ப் பேசுவார்.

சகோதரர் சகோதரிகள் தம் உடன் சகோதரர் சகோதரிகளையும் தந்தையர் பிள்ளைகளையும் கொல்வதற்கென ஒப்புவிப்பார்கள். பிள்ளைகள் பெற்றோர்க்கு எதிராக எழுந்து அவர்களைக் கொல்வார்கள். என் பெயரின் பொருட்டு உங்களை எல்லாரும் வெறுப்பர். இறுதிவரை மன உறுதியுடன் இருப்போரே மீட்கப்படுவர். அவர்கள் உங்களை ஒரு நகரில் துன்புறுத்தினால் வேறொரு நகருக்கு ஓடிப்போங்கள். மானிட மகனின் வருகைக்கு முன் நீங்கள் இஸ்ரயேலின் எல்லா நகர்களையும் சுற்றி முடித்திருக்கமாட்டீர்கள் என உறுதியாகவே உங்களுக்குச் சொல்கிறேன்."

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

ஓசேயா 14: 1-9

"ஆண்டவரிடம் திரும்பி வா"

நிகழ்வு

யூத இரபிகளில் தவிர்க்க முடியாத ஒருவர், இரபி எலியாசர். இவரிடம் சீடர்களாகப் பலர் இருந்தனர். ஒருநாள் இவர் தன்னுடைய சீடர்களிடம், "நீங்கள் இறப்பதற்கு ஒருநாள் முன்பு மனம்மாறிவிடுங்கள்" என்றார். இதைக் கேட்டு ஒரு சீடர், "குருவே! நாங்கள் எப்பொழுது இறப்போம் என்றே தெரியாது. அப்படியிருக்கும்பொழுது எப்படி நாங்கள் எங்களுடைய இறப்புக்கு ஒருநாள் முன்பு மனம்மாறுவது?" என்றார்.

இதற்கு இரபி எலியாசர் இப்படிப் பதில் சொன்னார்: "உங்களுடைய இறப்பு எப்பொழுது வரும் என்று உங்களுக்குத் தெரியாது அல்லவா! அப்படியானால், ஒவ்வொரு நாளையும் கடைசி நாளைப் போல், கடவுளுக்கு ஏற்றதுபோல் வாழுங்கள். அப்பொழுது உங்களுக்குத் தெரிந்துவிடும், உங்களுடைய இறப்பு எப்பொழுது வரும் என்று. அதன்பிறகு நீங்கள் எளிதாய் மனம்மாறிவிடலாம்."

நாம், ஒவ்வொருவரும் கடவுளுக்கு ஏற்றாற்போல் வாழவேண்டும்; அப்படி நாம் வாழவில்லை என்றால், நாம் மனம்மாறி, ஆண்டவரிடம் திரும்பி வரவேண்டும் என்ற உண்மையை எடுத்துச்சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் ஒசேயா இஸ்ரயேல் மக்களிடம், "உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்" என்கின்றார். இறைவாக்கினர் ஒசேயா இஸ்ரயேல் மக்களிடம் விடுக்கும் இந்த அழைப்பு நமக்கு என்ன செய்தியை எடுத்துச் சொல்கின்றது. என்பதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

ஆவலாய் வரவேற்கக் காத்திருக்கும் இறைவன்

ஆண்டவராகிய கடவுள் ஆபிரா(கா)மை அழைக்கின்றபொழுது, "நீயே ஆசியாக விளங்குவாய்...உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்" (தொநூ 12: 1-3) என்பார். இங்கு ஆபிரா(கா)மிற்குச் சொல்லப்பட்ட வார்த்தைகள் இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் பொருத்தும். இஸ்ரயேல் மக்கள் எல்லா மக்களுக்கும் ஆசியாக விளங்கியிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் தங்களுடைய உண்மைக் கடவுளை மறந்து, பாகால் தெய்வத்தை வணங்கி, இவ்வாறு நெறிகெட்ட வாழக்கை வாழ்ந்து, அதன்மூலம் உலகுக்கு ஆசியாக விளங்காமல் போனார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இறைவாக்கினர் ஒசேயா, இஸ்ரயேல் மக்களைப் பார்த்து, "உன் கடவுலாகியாய ஆண்டவரிடம் திரும்பி வா!" என்றோர் அழைப்பினைத் தருகின்றார்.

இறைவாக்கினர் ஒசேயா, இஸ்ரயேல் மக்களைப் பார்த்து இப்படியோர் அழைப்பினைக் கொடுப்பதற்கு முதன்மையான காரணம், பாவம் செய்து தன்னை விட்டு வெகுதொலைவில் சென்ற மக்கள், மனம்மாறுகின்றபொழுது, அவர்களை வரவேற்கக் கடவுள் ஆவலுடன் காத்திருக்கின்றார் என்பதுதான். இதற்கு நல்ல எடுத்துக்காட்டு ஊதாரி மைந்தன் உவமை. இந்த உவமையில் வருகின்ற இளைய மகன், தொலைவில் வருகின்றபொழுதே, அவன் தன்னுடைய மகன்தான் என அறியும் தந்தை, ஓடிப்போய் அவனைக் கட்டி அணைத்துக்கொள்கின்றார். இதன்மூலம் கடவுள், மனம்மாறித் தன்னிடம் வருகின்ற தன்னுடைய மக்களை வரவேற்க ஆவலாய்க் காத்திருக்கின்றார் என்பது தெளிவாகின்றது.

நலம்தரவும் அன்புகூரவும் காத்திருக்கும் இறைவன்

நொறுங்கிய, குற்றமுணர்ந்த நெஞ்சத்தோடு தன்னுடைய வருகின்ற தன் மக்களை கடவுள் ஆவலுடன் வரவேற்று, ஏற்றுக்கொள்கின்றார் (திபா 51: 17). மட்டுமல்லாமல், அவர் அவர்களுக்கு நலமளித்து, அவர்கள்மீது அன்புகூர்பவராகவும் இருக்கின்றார் என்பதையும் இன்றைய முதல் வாசகம் மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றது. இந்த உண்மையை நாம் இன்றைய முதல் வாசகத்தில் வருகின்ற, "அவர்களுடைய பற்றுறுதியின்மையை நான் நலமாக்குவேன்; அவர்கள் மேல் உளமார அன்புகூர்வேன்" என்று வார்த்தைகளில் கண்டுகொள்ளலாம்.

ஊதாரி மைந்தன் உவமையில் வருகின்ற இளைய மகனைத் தந்தையானவர் மன்னித்து ஏற்றுக்கொள்வதோடு மட்டுமல்லாமல், அவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவித்து, அவனை முன்னைய நிலையில் அமர்த்துவார். அதுபோன்றுதான் இன்றைய முதல் வாசகத்தில், கடவுள் தன்னிடம் திரும்பி வருகின்ற தன்னுடைய மக்களை நலப்படுத்தி, அன்புகூர்வேன் என்று சொல்கின்றார். இஸ்ரயேல் மக்களை அவர்கள் செய்த தீச்செயலுக்காகக் கடவுள் அவர்களைத் தண்டித்திருக்கலாம். ஆனாலும், அதைக் கடவுள் அவர்களை நல்வழிக்குக் கொண்டு வரவே செய்தார்.

ஆதலால், இஸ்ரயேல் மக்களைப் போன்று நம்மை வரவேற்பதற்கு ஆவலாய்க் காத்திருக்கும் இறைவனிடம்... நம்மை நலப்படுத்தி, நம்மீது அன்புகூரக் காத்திருக்கும் இறைவனிடம் திரும்பி வருவதே நாம் செய்யவேண்டிய முதன்மையான செயலாக இருக்கின்றது. எனவே, நாம் கடவுளிடம் திரும்பி வந்து அவருடைய அன்புக்குரிய மக்களாவோம்.

சிந்தனை

"உன்னத இறைவனிடம் திரும்பி வாருங்கள்; அநீதியை விட்டுவிலகிச் செல்லுங்கள்; அவர் அருவருப்பதை அடியோடு வெறுத்திடுங்கள்" (சீஞா 17: 26) என்கிறது சீராக்கின் ஞானநூல். ஆகையால் நாம் அநீதியை, ஆண்டவர் அருவருப்பதை விட்டுவிட்டு, அவரிடம் திரும்பி வருவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.



- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
மத்தேயு 10: 16-23

"ஓநாய்களும் ஆடுகளும்"

நிகழ்வு

சில ஆண்டுகளுக்கு முன்பாக, அமெரிக்காவைச் சார்ந்த ஒரு கிறிஸ்தவக் குடும்பம் துருக்கியர்களிடம் சிக்கிக்கொண்டது. துருக்கியர்களிடம் சிக்கிய அந்தக் கிறிஸ்தவக் குடும்பத்தில் கணவன், மனைவி, அவர்களுடைய பதினைந்து வயது மகள் என்று மூவர் இருந்தனர். இந்த மூவரைக் கணவன், மனைவியைத் தனியாகவும், மகளைத் தனியாகவும் பிரித்தனர். பின்னர் கணவன் மனைவி ஆகிய இருவரிடமும் கிறிஸ்துவை மறுதலிக்கச் சொன்னார்கள். அவர்களோ அதற்கு மறுப்புத் தெரிவிக்க, துருக்கியவர்கள் அவர்கள் இருவரையும் அந்த இடத்திலேயே, அதாவது அவர்கள் இருவரையும் அவர்களது மகளுடைய கண்முன்னாலேயே கொன்றார்கள்.

பின்னர் அவர்கள் அந்தச் சிறுமியிடம், "உனக்கு உன் உயிர்மேல் ஆசை இருந்தால், நீ கிறிஸ்துவை மறுதலி. இல்லையென்றால் உன்னுடைய பெற்றோருக்கு ஏற்பட்ட நிலைதான் உனக்கும் ஏற்படும்" என்று மிரட்டினார்கள். அவளோ, "நான் கிறிஸ்துவை ஒருபோதும் மறுதலிக்க மாட்டேன்" என்று தன்னுடைய நம்பிக்கையில் மிக உறுதியாக இருந்தாள். இதனால் அவர்கள் அவளை மிகவும் பசியோடும் பட்டினியோடு கிடந்த நாய்களின் கூண்டுக்குள் தூக்கிப்போட்டுக் கதவை அடைத்துவிட்டுச் சென்றுவிட்டனர்.

அடுத்த நாள் காலையில் அவர்கள் நாய்களின் கூண்டைத் திறந்தனர். அவ்வாறு திறக்கும்பொழுது, "இத்தனை நாள்களும் பசியோடு இருந்த நாய்களுக்குச் சிறுமி நல்ல இரையாக இருந்திருப்பாள்" என்று பேசிக்ககொண்டே திறந்தார்கள்; ஆனால், அங்கு அவர்களுடைய கண்களை நம்பமுடியாத வண்ணம் ஒரு செயல் நடந்திருந்தது. அது என்னவெனில், நாய்களின் கூண்டுக்குள் இருந்த மிகப்பெரிய நாய், சிறுமியின் பக்கத்தில் நின்றுகொண்டு, கூண்டில் இருந்த மற்ற நாய்கள் அந்தச் சிறுமியைத் தாக்காத வண்ணம் காவல் காத்துக்கொண்டிருந்தது. இக்காட்சியைக் கண்டதும், அந்தத் துருக்கியர்கள், "இந்த சிறுமி வணங்கக்கூடிய இயேசு, உண்மையான கடவுள். அதனால்தான் அவர் இந்தச் சிறுமியை பசியோடும் பட்டினியோடும் கிடைந்த நாய்களிடமிருந்து காப்பாற்றியிருக்கின்றார்" என்று சொல்லி, சிறுமியை விடுதலை செய்தனர்.

ஆம், இயேசுவின் சீடர்களாகிய, அவரின் ஆடுகளாகிய நம்மைச் சுற்றி ஓநாய்கள் போன்ற மனிதர்கள் இருந்துகொண்டு, நமக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டுதான் இருப்பார்கள். இவர்களைக் கண்டு நாம் கலங்கிடாமல், இறுதிவரை மனவுறுதியோடு இருக்கின்றபொழுது மீட்கப்படுவோம். அதைத்தான் மேலே உள்ள நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இன்றைய நற்செய்தி வாசகமும் நமக்கு இதே செய்தியைத்தான் எடுத்துக்கூறுகின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பர்ப்போம்.

ஓநாய்களிடம் என்ன பேசவேண்டும் என்று கவலைப்படவேண்டாம்

இயேசு பன்னிருவரைப் பணித்தளத்திற்கு அனுப்புகின்றபொழுது, அவர்களுக்குப் பல்வேறு அறிவுரைகளைக் கூறுகின்றார். அவற்றின் ஒரு பகுதியாக இன்றைய நற்செய்தி வாசகம் இருக்கின்றது. இயேசு தன்னுடைய சீடர்களிடம் கூறுகின்றபொழுது, "ஓநாய்கள் இடையே ஆடுகளை அனுப்புவதை போல நான் உங்களை அனுப்புகின்றேன்" என்கின்றார். இங்கு ஓநாய் என்று இயேசு குறிப்பிடுவது போலி இறைவாக்கினர்கள், யூத மதத் தலைவர்களாக இருந்தாலும், இயேசுவின் போதனைக்கு எதிராக உள்ள யாவரையும் ஓநாய்கள் என்ற வரையறைக்குள் கொண்டு வரலாம். இப்படிப்பட்டவர்களிடம் நாம் மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் கிறிஸ்தவக் குடும்பத்தைப் போல சிக்கிக்கொள்ளலாம். அப்பொழுது நாம் என்ன பேசவேண்டும் என்று கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில் கடவுள் ஆவியார் நம் சார்பாகப் பேச இருக்கின்றார்.

ஆகையால், ஓநாய்கள் போன்ற ஆபத்துகள் நம்மைச் சூழ்ந்து இருந்தாலும், கடவுள் நம் சார்பாக இருப்பதால், நாம் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை.

ஓநாய்களுக்கு முன்பாக மனவுறுதியோடு இருக்கவேண்டும்

இயேசு தன்னுடைய சீடர்களிடம் போலி இறைவாக்கினர்கள், ஆட்சியாளர்கள் போன்ற ஓநாய்களிடமிருந்து ஆபத்துகள் வரும் என்று சுட்டிக்காட்டுகின்ற அதேவேளையில், குடும்ப உறுப்பினர்களிடமிருந்தும் ஆபத்துகள் வரும் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றார். இப்படி வெளியே இருந்தும், குடும்பத்தின் உள்ளே இருந்தும், ஓநாய்கள் போன்று ஆபத்துகள் வருகின்றபொழுது, நாம் மனந்தளர்ந்து போய்விடக்கூடாது; மாறாக இறுதிவரை மனவுறுதி இருக்கவேண்டும் என்பதை இயேசு மிக அழகாக எடுத்துக்கூறுகின்றார். ஆம், யாரெல்லாம் இறுதிவரை மனவுறுதியோடு இருக்கின்றார்களோ, அவர்ககளே மீட்கப்படுவார்கள்.

ஆகையால், இயேசுவின் ஆடுகளாக இருக்கும் நாம், ஓநாய்கள் போன்ற ஆபத்துகள் வெளியே இருந்தும், உள்ளே இருந்தும் வருகின்றபொழுது, அவற்றைக் கண்டு மனம் உடைந்து போகாமல், இறுதிவரை மனவுறுதியோடு இருந்து, இயேசுவுக்குச் சான்று பகர்ந்து வாழ்வோம்.

சிந்தனை

"அழியக்கூடிய பொன் நெருப்பினால் புடமிடப்படுகின்றது. அதைவிட விலையுயர்ந்த உங்கள் நம்பிக்கையும் மெய்ப்பிக்கப்படவே துயருறுகிறீர்கள்" (1பேது 1: 7) என்பார் புனித பேதுரு. ஆகையால், இயேசுவின் சீடர்களாக அவர் வழியில் நமக்கு வரும் துன்பங்கள் எல்லாம், நம்முடைய நம்பிக்கையை மெய்ப்பிக்கவே என்ற உண்மையை உணர்ந்து, எதிர்வரும் ஓநாய்கள் போன்ற சவால்களைத் துணிவோடு எதிர்கொண்டு, இறுதிவரை மனவுறுதியோடு இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
Free Blog Widget
Stats Counter
hit counter