maraikal
MUM
"


பொதுக்காலம் 14 ஆம் வாரம்  09-07-2020

முதல் வாசகம்

என் உள்ளம் கோபத்தை வெறுத்து ஒதுக்குகின்றது.

இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 11: 1-4, 8c-9

ஆண்டவர் கூறியது:

இஸ்ரயேல் குழந்தையாய் இருந்தபோது அவன்மேல் அன்பு கூர்ந்தேன்; எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன். எவ்வளவுக்கு நான் அவர்களை வருந்தி அழைத்தேனோ, அவ்வளவுக்கு என்னை விட்டுப் பிடிவாதமாய் விலகிப் போனார்கள். பாகால்களுக்குப் பலியிட்டார்கள், சிலைகளுக்குத் தூபம் காட்டினார்கள்.

ஆனால் எப்ராயிமுக்கு நடைபயிற்றுவித்தது நானே; அவர்களைக் கையிலேந்தியதும் நானே; ஆயினும், அவர்களைக் குணமாக்கியது நானே என்பதை அவர்கள் உணராமற் போனார்கள். பரிவு என்னும் கட்டுகளால் அவர்களைப் பிணைத்து, அன்புக் கயிறுகளால் கட்டி நடத்தி வந்தேன்; அவர்கள் கழுத்தின்மேல் இருந்த நுகத்தை அகற்றினேன்; அவர்கள் பக்கம் சாய்ந்து உணவு ஊட்டினேன்.

என் உள்ளம் கோபத்தை வெறுத்து ஒதுக்குகின்றது, என் இரக்கம் பொங்கி வழிகின்றது. என் சீற்றத்தின் கனலைக் கொட்டமாட்டேன்; எப்ராயிமை அழிக்கத் திரும்பி வரமாட்டேன்; நான் இறைவன், வெறும் மனிதனல்ல; நானே உங்கள் நடுவிலிருக்கும் தூயவர், ஆதலால், நான் நகர்க்கு எதிராக வரமாட்டேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 80: 1ac-2b. 14-15 . (பல்லவி: 3b) Mp3

பல்லவி: கடவுளே, எம்மை மீட்குமாறு உம் முக ஒளியைக் காட்டியருளும்!
1ac
இஸ்ரயேலின் ஆயரே, செவிசாயும்! கெருபுகளின் மீது வீற்றிருப்பவரே, ஒளிர்ந்திடும்!
2b
உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து எம்மை மீட்க வாரும்! - பல்லவி

14
படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்! விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பாரும்; இந்தத் திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்!
15
உமது வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மாற் 1: 15

அல்லேலூயா, அல்லேலூயா! இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 7-15

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: நீங்கள் சென்று "விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது" எனப் பறைசாற்றுங்கள். நலம் குன்றியவர்களைக் குணமாக்குங்கள்; இறந்தோரை உயிர் பெற்றெழச் செய்யுங்கள்; தொழுநோயாளரை நலமாக்குங்கள்; பேய்களை ஓட்டுங்கள்; கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள். பொன், வெள்ளி, செப்புக்காசு எதையும் உங்கள் இடைக் கச்சைகளில் வைத்துக்கொள்ள வேண்டாம். பயணத்திற்காகப் பையோ, இரண்டு அங்கிகளோ, மிதியடிகளோ, கைத்தடியோ எடுத்துக்கொண்டு போக வேண்டாம். ஏனெனில் வேலையாள் தம் உணவுக்கு உரிமை உடையவரே.

நீங்கள் எந்த நகருக்கோ ஊருக்கோ சென்றாலும் அங்கே உங்களை ஏற்கத் தகுதியுடையவர் யாரெனக் கேட்டறியுங்கள். அங்கிருந்து புறப்படும்வரை அவரோடு தங்கியிருங்கள். அந்த வீட்டுக்குள் செல்லும்பொழுதே, வீட்டாருக்கு வாழ்த்துக் கூறுங்கள். வீட்டார் தகுதி உள்ளவராய் இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவர்கள் மேல் தங்கட்டும்; அவர்கள் தகுதியற்றவர்களாய் இருந்தால் அது உங்களிடமே திரும்பி வரட்டும்.

உங்களை எவராவது ஏற்றுக் கொள்ளாமலோ, நீங்கள் அறிவித்தவற்றுக்குச் செவிசாய்க்காமலோ இருந்தால் அவரது வீட்டை, அல்லது நகரை விட்டு வெளியேறும் பொழுது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். தீர்ப்பு நாளில் சோதோம் கொமோராப் பகுதிகளுக்குக் கிடைக்கும் தண்டனையை விட அந்நகருக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

ஓசேயா 11: 1-4, 8c-9

"நான் இறைவன், வெறும் மனிதனல்ல"

நிகழ்வு

நார்வே நாட்டைச் சார்ந்தவர் நான்சென் (Nansen 1861- 1930). மிகப்பெரிய ஆய்வாளரான இவர் வடதுருவத்திற்குச் சென்று, கடலின் ஆழத்தை அளவிட முடிவுசெய்தார். அதற்காக இவர் நடுக்கடலுக்குச் சென்று, தன்னிடமிருந்த அளவுகோலை எடுத்து, கடலில் விட்டுப் பார்த்தார். இவரிடமிருந்த அளவுகோல் உள்ளே சென்றுகொண்டே இருந்தது. அப்படியிருந்தும், அது கடலின் தரையைத் தொடவில்லை. இதனால் அவர் "கடல் இன்னும் ஆழம்போல" என்று நினைத்துக்கொண்டு, ஏற்கெனவே இருந்த அளவுகோலோடு இணைத்து, இன்னோர் அளவுகோலையும் கடலுக்குள் செலுத்தினார். அப்படியிருந்தும் அது கடலின் தரையைத் தொடவில்லை.

அப்பொழுதும் அவர் "கடல் இன்னும் ஆழம்போல" என்று நினைத்துக்கொண்டு, ஏற்கெனவே உள்ளே இருந்த இரண்டு அளவுகோல்களோடு மூன்றாவது அளவுகோலை இணைத்து உள்ளே செலுத்தினார். அப்படியிருந்தும்கூட அவரால் கடலின் தரையைத் தொடமுடியவில்லை. அந்தளவுக் கடல் ஆழமாக இருந்தது. இதனால் அவர் பொறுமையிழந்து, "கடலின் ஆழத்தைக் அளவிட முடியாது போல" என்று நினைத்துக்கொண்டு தன்னுடைய முயற்சியைக் கைவிட்டார்.

வடதுருவத்திலிருந்த கடலின் ஆழத்தை எப்படி நான்செனால் அளவிட முடியவில்லையோ, அப்படிக் கடவுள் நம்மீதுகொண்ட பேரன்பின் ஆழத்தையும் உயரத்தையும் அகலத்தையும் நம்மால் அளவிட முடியாது. அந்தளவுக்குக் கடவுளின் பேரன்பது ஆழமானது, அகலமானது, உயரமானது. இறைவாக்கினர் ஒசேயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், கடவுளின் பேரன்பை நமக்கு எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

இஸ்ரயேல், குழந்தையாய் இருந்தபோது அதன்மீது அன்புகூர்ந்த கடவுள்

ஆண்டவராகிய கடவுளின் பேரன்பு, இஸ்ரயேல்மீது அது குழந்தையாகவும் அடிமையாகவும், தன்னை விட்டுவிலகியபோதும் எப்படி இருந்தது என்பதைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்பாக, கடவுள் ஏன் இஸ்ரயேல்மீது பேரன்பு காட்டினார் என்பதைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது.

இணைச்சட்ட நூல் ஏழாம் அதிகாரத்தில் நாம் இவ்வாறு வாசிக்கின்றோம்: "எல்லா மக்களிலும் நீங்கள் திரளானவர்கள் என்பதற்காக ஆண்டவர் உங்கள்மீது அன்புகொண்டு உங்களைத் தேர்ந்துகொள்ளவில்லை. உண்மையில், எல்லா மக்களிலும் நீங்கள் சொற்பமானவர்களே!" (இச 7:7). ஆம், இஸ்ரயேல் மக்கள் சொற்பமானவர்களாக, வறியவர்களாக இருந்தார்கள். அதனால்தான் வறியோர்மீது எப்பொழுதும் தனிப்பட்ட அன்புகொள்ளும் கடவுள், சொற்பமானவர்களாக, வறியவர்களாக இருந்த இஸ்ரயேல் மகள்மீது பேரன்பு கொண்டார்.

இஸ்ரயேல், குழந்தையாய் இருந்தபொழுது அதன்மீது எப்படிக் கடவுள் அன்புகூர்ந்தால் எனில், யாக்கோபு தன்னுடைய புதல்வர்களோடு இருந்த இடத்தில் பெரும்பஞ்சம் ஏற்படுவதற்கு முன்பாகவே அவருடைய புதல்வர்களுள் ஒருவரான யோசேப்பை எகிப்துக்கு அனுப்பி வைக்கின்றார். யோசேப்புக்கு அவருடைய சகோதரர்கள் கெடுதல் செய்தாலும்கூட, கடவுள் அதையே நல்லதாக்கி (தொநூ 50:20), பஞ்ச காலத்தில் இஸ்ரயேலாம், யாக்கோபின் குடும்பத்தைக் காப்பாற்றி, அதன்மீது இருந்த தன்னுடைய அன்பு வெளிப்படுத்தினார்.

அடிமையானபோது அதன்மீது அன்புகூர்ந்த கடவுள்

எகிப்தில் இஸ்ரயேல் மக்கள் பெருகியபொழுது, பார்வோன் மன்னன் அவர்களைக் கொடுமைப்படுத்தத் தொடங்கினான். இதனால் அவர்களது அழுகுரல் விண்ணை நோக்கி எழ, அக்குரலைக் கேட்ட கடவுள் (விப 3:9) அவர்கள்மீது அன்புகூர்ந்து, அவர்களுக்குப் பாலும் தேனும் பொழிவும் கானான் நாட்டை வழங்குகின்றார். நிலம் ஒருவருக்கு அடையாளம். அந்த நிலத்தை அல்லது நாட்டை இஸ்ரயேல் மக்களுக்குக் கடவுள் அளித்தார் எனில், கடவுள் அவர்கள்மீது எந்தளவுக்கு அன்புகொண்டிருப்பார் என்பதை நாம் கற்பனை செய்து பார்த்துக்கொள்ளலாம்.

தன்னை விட்டுவிலகிப் போனபோதும், அன்பு கூர்ந்த கடவுள்

அடிமைகளாக இருந்த இஸ்ரயேல் மக்கள், கடவுளால் கானான் நாட்டில் குடியமர்த்தப்பபட்ட பிறகு, அவர்கள் கடவுளுக்கு நன்றியுள்ளவர்களாவும் உண்மையுள்ளவர்களாகவும் இருந்திருக்கவேண்டும்; ஆனால், அவர்கள் பாகால் தெய்வத்தை வழிபட்டுக் கடவுளுக்குச் சினமூட்டினார்கள். அப்படியிருந்தும் கடவுள் அவர்களை அன்பு செய்பவராகவே இருந்தார். அதனால்தான் இன்றைய முதல் வாசகத்தின் இறுதியில், "நான் இறைவன், வெறும் மனிதல்ல" என்கின்றார்.

ஆகையால், இஸ்ரயேல் மக்களைப் போன்று நாம் தவறு செய்தாலும், அந்தத் தவற்றை மன்னித்து, நம்மை ஏற்றுக்கொண்டு, நம்மீது பேரன்புகொள்ளக்கூடிய கடவுள்மீது நாம் அன்பு கொண்டு வாழ்வதுதான் நாம் செய்யவேண்டிய தலையாய செயல். நாம் நம்மீது பேரன்பு கொண்டிருக்கும் கடவுளிடம் அன்பு கொண்டு வாழத் தயாரா? சிந்திப்போம்.

சிந்தனை

"ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பையும் கொண்டவர்" (திபா 103: 8) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நம்மீது இரக்கமும் அருளும் பேரன்பும்கொண்டிருக்கும் ஆண்டவருக்கு உண்மையுள்ளவர்களாய், அவர்மீது நம்பிக்கைவைத்து, அவர் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.



- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
மத்தேயு 10: 7-15

ஆண்டவரை நம்பிப் பணிசெய்வோம்

நிகழ்வு

அருள்பணியாளர் ஒருவர் இருந்தார். இவர் முதன்முறையாக ஒரு பங்கிற்குப் பங்குப்பணியாளராக நியமிக்கப்பட்டார். அந்தப் பங்கோ மூவாயிரம் கிறிஸ்தவர்களைக் கொண்ட மிகப்பெரிய பங்கு.

இச்செய்தியை அறிந்த அருள்பணியாளருடைய நெருங்கிய நண்பர் ஒருவர், "சுவாமி! நீங்கள் போகிற பங்கில் மூவாயிரம் கிறிஸ்தவர்கள் இருக்கின்றார்கள்! இந்த மூவாயிரம் பேரையும் நீங்கள் எப்படித் திரும்பிப்படுத்தப் போகிறீர்கள்?" என்றார். இதற்கு அருள்பணியாளர், அவரிடம், "நான் மூவாயிரம் பேரையும் திருப்திப்படுத்த அங்கு போகவில்லை. என்னைத் திருப்பணிக்கு அழைத்த, என் ஆண்டவர் இயேசுவை மட்டுமே திரும்பிப்படுத்தப் போகின்றேன். அதனால் நான் எதைப்பற்றியும் கவலைப்படாமல், ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்துப் பணிசெய்யச் செல்கின்றேன்" என்றார்.

ஆம், இறைவக்குப் பணி என்பது மனிதரைத் திருப்திப்படுத்துகின்ற பணியல்ல; அது ஆண்டவரைத் திரும்பிப்படுத்துகின்ற பணி. இறைவாக்குப் பணி என்பது பணத்தின்மீதோ, பொருளின்மீதோ நம்பிக்கை வைத்துச் செய்யப்படுகின்ற பணி அல்ல; அது ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்துச் செய்யப்படுகின்ற பணி என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. நற்செய்தியில் இயேசு பன்னிருவரையும் பணித்தளத்திற்கு அனுப்பிகின்றபொழுது, அவர்கள் எப்படிப் பணிசெய்யவேண்டும் என்பதை எடுத்துச் சொல்கின்றார். அதைப் பற்றி இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

கொடையாகப் பெற்றத்தைக் கொடையாகக் கொடுக்கவேண்டும்

நேற்றைய நற்செய்தியில் (மத் 10: 1-7) இயேசு பன்னிரு திருத்தூதர்களைத் தேர்ந்தெடுத்ததைக் குறித்து வாசித்திருப்போம். இன்றைய நற்செய்தியில் இயேசு பன்னிருவரைப் பணித்தளங்களுக்கு அனுப்புவதைக் குறித்து வாசிக்கின்றோம். இங்கு இயேசு பன்னிருவரிடமும் சொல்கின்ற முதன்மையான செய்தி, கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள் என்பதாகும்.

இயேசு பன்னிருவருக்குப் பேயை ஓட்டுகின்ற அதிகாரத்தையும், நோய் நொடிகளை நலப்படுத்துகின்ற அதிகாரத்தையும், இறைவார்த்தையையும் கொடையாகவே கொடுத்தார். ஆதலால், அவருடைய சீடர்கள் அவற்றை மக்களுக்குக் கொடையாகவே கொடுக்கவேண்டும். இதில் ஆதாயம் தேடுவது அழகல்ல. இயேசு இப்படிச் சொன்னதற்கு ஒரு முக்கியமான காரணமும் இருந்தது. அது என்னவெனில், இயேசுவின் காலத்தில் இருந்த போலி இறைவாக்கினர்கள், இயேசுவின் பெயரைச் சொல்லிகொண்டு (மத் 7: 21) பேய்களை ஓட்டி, பிணிகளை நலப்படுத்தி ஆதாயம் தேடினார்கள். அதனால்தான் இயேசு இப்படிச் சொல்கின்றார்.

ஆகையால், இயேசுவிடமிருந்து பெற்றதை அவர்களுடைய சீடர்கள் (அருள்பணியாளர்கள், துறவிகள் மட்டும் கிடையாது; இயேசுவின் வழியில் நடக்கின்ற ஒவ்வொருவரும்) கொடையாகக் கொடுக்கவேண்டும்.

பொருள்களை நம்பி அல்ல, ஆண்டவரை நம்பிப் பணிசெய்யவேண்டும்

இயேசு தன் சீடர்களுக்குச் சொல்லக்கூடிய இரண்டாவது செய்தி, எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம் என்பதாகும். இதில் இரண்டு உண்மைகள் இருக்கின்றன. ஒன்று, இயேசுவிடம் சீடராக இருந்து, அவருடைய பணியைச் செய்யும் ஒவ்வொருவரும் பொருளையோ, பணத்தையோ அல்ல, ஆண்டவரை நம்பிப் பணிசெய்யவேண்டும் என்பதாகும். இரண்டு, இயேசுவின் சீடர்கள் மக்கள் நடுவில் பணிசெய்வதால், மக்களே அவர்களுக்கு வேண்டியதைச் செய்துதரவேண்டும். அதைதான் இயேசு, வேலையாள் தம் உணவுக்கு உரிமை உடையவரே என்கின்றார்.

இன்று ஒருசில இடங்களில் ஆண்டவர் நம்பி, மக்கள் நடுவில் பணிசெய்யும் அருள்பணியாளரின் "அடிப்படைத் தேவைகளைக்" கூட, மக்கள் நிறைவேற்றித் தராமல் இருப்பது வியப்பாக இருக்கின்றது. இவர்கள் இறைப்பணி செய்பவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுகின்றார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.

ஏற்றுக்கொண்டால் ஆசி, இல்லையென்றால் தண்டனை

இயேசு பன்னிருவரிடம் சொல்லக்கூடிய மூன்றாவது முக்கியமான செய்தி, உங்களை ஏற்றுக்கொள்பவரிடம் தங்கிப் பணிசெய்யுங்கள்; இல்லையென்றால் உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிட்டு வந்துவிடுங்கள் என்பதாகும்.

இயேசுவின் சீடர்கள் அவருடைய பதிலாளிகள்; ஆதலால், அவருடைய சீடர்கள் பேசக்கூடிய வார்த்தைகள், அவருடைய வார்த்தைகளாக இருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில், இயேசுவின் சீடர்களுடைய வார்த்தைகளைக் கேட்பவர்கள் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்பவர்களாக இருக்கின்றார்கள்; அவரையே ஏற்றுக்கொள்பவர்களாக இருக்கின்றார்கள் (மத் 10: 40). ஒருவேளை இயேசுவின் சீடர்களுடைய வார்த்தைகளைக் கேட்காதவர்கள், அவருடைய வார்த்தையைக் கேளாதவர்களாகவும், அவரை ஏற்றுக்கொள்ளாதவர்களாகவும் மாறுகின்றார்கள. இப்படிப்பட்டவர்களுக்குத் தீர்ப்பு நாளில் மிகுதியான தண்டனை கிடைக்கும் என்று கூறுகின்றார் இயேசு.

ஆகையால், இயேசுவின் பதிலாள்களாக இருக்கும், அவருடைய சீடர்கள் அறிவிக்கின்ற நற்செய்தியைக் கேட்டு, அதன்படி நடப்பவர்களாக வாழ நாம் முயற்சி செய்வோம்.

சிந்தனை

"நான் கட்டளையிடும் அனைத்தையும் அவர்களிடம் சொல்" (எரே 1:17) என்று ஆண்டவர் இறைவாக்கினர் எரேமியாவிடம் கூறுவார். அன்று ஆண்டவர் எரேமியாவிடம் இப்படிச் சொன்னது போன்று, இன்று நம்மிடம் இப்படிச் சொல்கின்றார். ஆகையால், நாம் ஆண்டவரின் வார்த்தையைக் மக்களுக்கு அறிவிப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
Free Blog Widget
Stats Counter
hit counter