maraikal
MUM
"


பொதுக்காலம் 13 ஆம் வாரம்  04-07-2020

முதல் வாசகம்

என் மக்களாகிய இஸ்ரயேலை முன்னைய நன்னிலைக்குக் கொண்டு வருவேன்.

இறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து வாசகம் 9: 11-15

ஆண்டவர் கூறுவது:

"அந்நாள்களில் விழுந்து கிடக்கும் தாவீதின் கூடாரத்தை மீண்டும் உயர்த்துவேன். அதிலுள்ள கிழிசல்களைப் பழுதுபார்த்துச் சிதைந்தவற்றைச் சீர்படுத்திப் பண்டை நாளில் இருந்தது போல் மீண்டும் கட்டி எழுப்புவேன். அப்பொழுது, ஏதோமில் எஞ்சியிருப்போரையும் எனது பெயரைத் தாங்கியிருக்கும் பிற இனத்தார் அனைவரையும் அவர்கள் தங்கள் உடைமை ஆக்கிக் கொள்வார்கள்," என்கிறார் இதைச் செயல்படுத்தும் ஆண்டவர்.

"இதோ! நாள்கள் வரப் போகின்றன; அப்போது, அறுவடை செய்வோரை உழுவோரும், கனி பிழிவோரை விதைப்போரும் தொடர்ந்து முன்னேறுவர்; மலைகள் இனிய இரசத்தைப் பொழியும்; குன்றுகள்தோறும் அது வழிந்தோடும்" என்கிறார் ஆண்டவர். "என் மக்களாகிய இஸ்ரயேலை முன்னைய நன்னிலைக்குக் கொண்டு வருவேன்; அவர்கள் பாழடைந்த நகர்களைத் திரும்பக் கட்டி அவற்றில் குடியேறுவார்கள்; திராட்சைத் தோட்டங்களை அமைத்து அவற்றின் கனிரசத்தை அருந்துவார்கள். பழத் தோட்டங்கள் அமைத்து அவற்றின் கனிகளை உண்பார்கள். அவர்களைத் தங்கள் நாட்டில் மீண்டும் நான் வேரூன்றச் செய்வேன்; நான் அவர்களுக்கு அளித்திருக்கும் நாட்டிலிருந்து இனி ஒருபோதும் அவர்கள் பிடுங்கப்பட மாட்டார்கள்" என்கிறார் உங்கள் கடவுளாகிய ஆண்டவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 85: 8ab,10-11. 12-13 . (பல்லவி: 8) Mp3

பல்லவி: ஆண்டவர் தம் மக்களுக்கு நிறைவாழ்வை வாக்களிக்கின்றார்.
8ab
ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்; தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார். - பல்லவி

10
பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும்.
11
மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். - பல்லவி

12
நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம் நாடு நல்கும்.
13
நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 10: 27

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா?

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 14-17

அக்காலத்தில்

யோவானின் சீடர் இயேசுவிடம் வந்து, "நாங்களும் பரிசேயரும் அதிகமாக நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?" என்றனர். அதற்கு இயேசு அவர்களை நோக்கி, "மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா? மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்பொழுது அவர்களும் நோன்பு இருப்பார்கள்.

மேலும் எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப் போடுவதில்லை. ஏனெனில் அந்த ஒட்டு ஆடையைக் கிழித்துவிடும்; கிழிசலும் பெரிதாகும். அதுபோலப் பழைய தோற்பைகளில் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை. ஊற்றி வைத்தால் தோற்பைகள் வெடிக்கும்; மதுவும் சிந்திப்போகும்; தோற்பைகளும் பாழாகும். புதிய மதுவைப் புதிய தோற்பைகளில்தான் ஊற்றி வைப்பர். அப்போது இரண்டும் வீணாய்ப் போகா" என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

 

ஆமோஸ் 9: 11-15

இஸ்ரயேலை (உன்னை) முன்னைய நிலைக்குக் கொண்டு வருவேன்

நிகழ்வு

கிறிஸ்டோபர் என்றோர் இளைஞன் இருந்தான். இவன் கோயிலுக்கு வருவது... வழிபாடுகளில் கலந்துகொள்வது... எல்லாரிடத்திலும் அன்பாய் இருப்பது என்று பலரும் வியந்து பார்க்கும் அளவுக்கு மிகவும் நன்றாய் இருந்தான். இப்படியிருக்கையில் தனக்கு அறிமுகமான தீய நண்பர்களால் குடிக்கும் போதைக்கும், இன்னும் பல தீய பழக்க வழக்கங்களுக்கும் அடிமையானான். இதனால் எல்லாரும் இவனை இகழ்ந்து ஒதுக்கத் தொடங்கினார்கள்.

இந்நிலையில் கிறிஸ்டோபரின் நெருங்கிய மற்றும் நீண்ட நாள் நண்பனாகிய அன்பு, அவனுக்கு நல்லதை எடுத்துச் சொல்லி, முன்பு அவன் எப்படி இருந்தான் என்பதையும் எடுத்துரைத்து, அவனை முன்னைய நிலைக்குக் கொண்டு வந்தான்.

இதற்குப் பின்பு ஒருநாள் கிறிஸ்டோபரும் அவனுடைய நண்பன் அன்புவும் பங்குத்தந்தையைப் பார்க்கச் சென்றார்கள். பங்குத்தந்தை கிறிஸ்டோபரிடம் நிகழ்ந்திருந்த மாற்றத்தையும், அவன் முன்புபோல் கோயிலுக்கு வருவதையும் வழிபாடுகளில் தவறாது கலந்து கொள்வதையும் அறிந்து அவனிடம், "கிறிஸ்டோபர்! நீ கடவுளை விலகி, மீண்டுமாக அவரிடம் வந்துசேர்ந்த அந்த அனுப்பம் எப்படடி இருந்தது என்று சொல்ல முடியுமா?" என்றார். உடனே கிறிஸ்டோபர் அவரிடம், "சுவாமி! நான் கடவுளை விட்டுப் பிரிந்திருந்த நாள்களை, கடலில் மூழ்கி உயிருக்காகப் போராடிக்கொண்டிருப்பதை போன்று உணர்கின்றேன். என்னுடைய நண்பன் அன்பு, என்னை முன்னைய நிலைக்குக் கொண்டு வந்து சேர்த்தை இயேசு எனக்குப் புதிய வாழ்க்கை தந்ததைப் போன்று உணர்கின்றேன்" என்றான்.

கிறிஸ்டோபர் இவ்வாறு சொன்னதைக் கேட்டு மிகவும் மகிழ்ந்த பங்குத்தந்தை அவனிடம், "இனிமேல் உன்னுடைய வாழ்க்கையில் எல்லாமும் நல்லதாக நடக்கட்டும்" என்று வாழ்த்தி அவனை அனுப்பி வைத்தார்.

இந்த நிகழ்வில் வருகின்ற கிறிஸ்டோபர் தன்னுடைய நண்பன் அன்புவின் வழியாக முன்னைய நிலைக்கு வந்தான். இஸ்ரயேல் மக்களும் மெசியாவாம் இயேசுவால் முன்னைய நிலைக்குக் கொண்டுவரப்படுவார்கள் என்று இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் ஆமோஸ் முன்னறிவிக்கின்றார். அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

உயர்த்துவேன்; எழுப்புவேன்

இஸ்ரயேல் மக்கள் உண்மைக் கடவுளை மறந்து, பிற தெய்வங்களை வழிபடத் தொடங்கினார்கள். இதை வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், அவர்கள் நன்மையின் ஊற்றாம் ஆண்டவரை தேடாமல், தீமையின் ஊற்றாம் பாகால் தெய்வத்தை வழிபடத் தொடங்கினார்கள் (ஆமோ 5:14) இதனால் அசிரியர்களின் படையெடுப்பு அவர்கள்மீது ஏற்பட, நாடு கடத்தப்பட்டார்கள். பின்னர் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பி வந்தார்கள். இவையெல்லாம் நிகழ்வதற்கு முன்பாகவே ஆமோஸ் இறைவாக்கினர் அவர்களிடம், "அந்நாள்களில் விழுந்து கிடக்கும் தாவீதின் கூடாரத்தை மீண்டும் உயர்த்துவேன்... கட்டி எழுப்புவேன்... என் மக்களாகிய இஸ்ரயேலை முன்னைய நிலைக்குக் கொண்டுவருவேன்" என்று இறைவாக்கு உரைக்கின்றார்.

இறைவாக்கினர் ஆமோஸ் சொன்ன வார்த்தைகள் நிறைவேறினவா என்பதைக் குறித்துத் தொடர்ந்து சிந்திப்போம்.

மக்களை உயர்த்திய... எழுப்பிய இயேசு

விழுந்து கிடக்கும் தாவீதின் கூடாரத்தை நான் மீண்டும் உயர்த்துவேன்... என் மக்களாகிய இஸ்ரயேலை முன்னைய நன்னிலைக்குக் கொண்டுவருவேன் என்று இறைவாக்கினர் ஆமோஸ் வழியாக ஆண்டவர் சொன்ன வார்த்தைகள், இயேசுவால் நிறைவேறின. அதற்குச் சான்றாக இருப்பதுதான் இயேசுவின் வாழும், அவருடைய பணியும்.

இயேசு தான் அறிவித்த நற்செய்தியின் மூலமும், தான் புரிந்த வல்ல செயல்கள் மூலமும் மக்களுக்கு கடவுளின் அன்பை வெளிப்படுத்தி, அவர்களைக் கடவுளிடம் கொண்டு வந்துசேர்ந்தார். அதைவிடவும் சிலுவையில் சிந்திய இரத்தத்தால், மக்களுடைய பாவங்களைக் கழுவி (1 யோவா 2:2), இஸ்ரேயல் மக்களை மட்டுமல்லாது, எல்லாரையும் முன்னைய நிலைக்கு வந்தார். இவ்வாறு இறைவாக்கினர் ஆமோஸ் உரைத்த வார்த்தைகள் மெசியாவாம் இயேசு வழியாக, இயேசுவில் நிறைவேறுகின்றன.

நாமும்கூட கடவுளின் கடவுளின் அன்பைப் புறக்கணித்துவிட்டு, அவரை விட்டு வெகுதொலைவில் போயிருக்கலாம். ஆதலால், நம்மை முன்னைய நிலைக்கு கொண்டு இயேசுவிடம் நம்பிக்கையோடு திரும்பிவந்து, கடவுளின் அன்பு மக்களாக வாழ முயற்சி செய்வோம்.

சிந்தனை

"நான் உனக்கு நலம் அளிப்பேன்; உன்னுடைய காயங்களை ஆற்றுவேன்" (எரே 30: 17) என்பார் ஆண்டவர் ஆகையால், நம்முடைய காயங்களை ஆற்றி, நமக்கு நலம் அளிக்கின்ற ஆண்டவர் இயேசுவிடம் திரும்பி வந்து, அவருக்கு உகந்த மக்களாக வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.



- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
மத்தேயு 9: 14-17

"மகிழ்ச்சியான கடவுள்"


நிகழ்வு

ஆஸ்திரியாவில் தோன்றிய மிகப்பெரிய இசைக்கலைஞர் பிரான்ஸ் ஜோசப் ஹய்டன் (Franz Joseph Haydn 1732-1809). இவரே சிம்பனி இசையின் தந்தை என அழைக்கப்படுகின்றார். இன்னும் முக்கியமான ஒரு செய்தி, இவர் இசைமேதையான மொசார்டின் நெருங்கிய நண்பர்; இசைச் சக்கரவர்த்தியான பீத்தோவனின் ஆசிரியர்.

இப்படிப்பட்ட மிகப்பெரிய இசைக்கலைஞராகிய பிரான்ஸ் ஜோசப் ஹய்டனுடைய இசையின்மீது ஒருசிலர், "இவருடைய இசை எப்பொழுதும் கொண்டாட்டமாகவே இருக்கிறது; மனிதர்களின் துக்கத்தையும் வேதனையையும் அது வெளிப்படுத்துவே இல்லை" என்ற விமர்சனத்தை முன்வைத்தார்கள்.

இதற்கு பிரான்ஸ் ஜோசப் ஹய்டன் இப்படிப் பதிலளித்தார்: "என்னுடைய இசை எல்லாரையும் திருப்திப்படுத்தாதுதான். இதற்காக நான் என்றும் செய்ய முடியாது. ஏனெனில் கடவுளால்கூட எல்லாரையும் திரும்பிப்படுத்த முடியாது. என்னுடைய இசை துக்கத்தையும் வேதனையும் வெளிப்படுத்துவதில்லை என்று சொல்கிறீர்கள்! என்னிடம் இல்லாத ஒன்றை எப்படி நான் வெளிப்படுத்த முடியும்...? எப்பொழுதெல்லாம் நான் கடவுளைப் பற்றி நினைக்கின்றேனோ, அப்பொழுதெல்லாம் என்னுடைய உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கி வழிகின்றது; அந்த மகிழ்ச்சியைத்தான் நான் இசையாக வெளிப்படுத்துகின்றேன். மேலும் நான் துக்கமாக இருப்பதைவிடவும் மகிழ்ச்சியாக இருப்பதற்காகக் கடவுள் என்னை மன்னித்துக் கொள்வார் என்று நினைக்கின்றேன். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, கடவுள் எப்பொழுதும் மகிழ்ச்சியான கடவுளாகவே இருக்கின்றார். அதனால் என்னுடைய இசையிலும் எப்பொழுதும் மகிழ்ச்சியே நிரம்பி வழியும்."

மிகப்பெரிய இசைக் கலைஞராகிய பிரான்ஸ் ஜோசப் ஹய்டன் சொன்ன இந்த வார்த்தைகள் ஓர் உண்மை நமக்கு மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றன, அது என்னவெனில், கடவுள் துக்கமான கடவுள் இல்லை; அவர் மகிழ்ச்சியான கடவுள் என்பதாகும். இன்றைய நற்செய்தியில் யோவானின் சீடர்கள் இயேசுவிடம் நோன்பு பற்றிய கேள்வியை எழுப்பியபொழுது, இயேசு இந்த உண்மையைத்தான் எடுத்துக் கூறுகின்றார். நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசுவின் சீடர்கள் மகிழ்ந்திருப்பதைப் பார்த்துப் பொறாமைப்பட்ட யோவானின் சீடர்கள்

இன்றைய நற்செய்தியில், யோவானின் சீடர்கள் இயேசுவிடம் நோன்பு பற்றிய கேள்வியை எழுப்புகின்றார்களே...? இவர்கள் ஏன் திடீரென்று இப்படியொரு கேள்வியை இயேசுவிடம் எழுப்புகின்றார்கள்...? என்று நமக்குத் தோன்றலாம். இதற்கான பதில் இதற்கு முந்தைய பகுதியில் (மத் 9: 9-13) இருக்கின்றது. இப்பகுதியில், ஆண்டவர் இயேசு மத்தேயுவைத் தன்னுடைய பணிக்காக அழைத்ததை முன்னிட்டு, அவர் தன்னுடைய வீட்டில் இயேசுவுக்கும் அவருடைய சீடர்களும், தன்னுடைய நண்பர்களுக்கும் விருந்து வைப்பார். இந்த விருந்தில் எல்லாரும் மகிழ்ந்திருப்பார்கள்! இதைப் பார்த்துப் பொறாமைப்பட்டுதான் யோவானின் சீடர்கள் இயேசுவிடம், "நாங்களும் பரிசேயரும் மிகுதியாக நோன்பிருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பிருப்பதில்லை?" என்றொரு கேள்வியைக் கேட்கின்றார்கள்.

தாங்கள் நோன்பு இருப்பதாக யோவானின் சீடர்கள் சொல்கின்ற "அந்த நோன்பு" எப்படிப்பட்டதாக இருந்தது என்பதை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். அப்பொழுதுதான் இயேசு அவர்களுக்குக் கொடுக்கும் பதிலை நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். யூதர்கள் ஆண்டுக்கொரு முறை பாவப் பரிகார நாளில் நோன்பிருந்தார்கள் (லேவி 16: 29); பரிசேயர்களோ திங்கள் மற்றும் வியாழன் ஆகிய இரண்டு நாள்களில் நோன்பிருந்தார்கள் (லூக் 18: 12). பரிசேயர்களைப் பார்த்துவிட்டு, யோவானின் சீடர்களும் இப்படி வாரம் இருமுறை நோன்பிருந்திருக்கவேண்டும். அதனால்தான், "நாங்களும் பரிசேயரும் மிகுதியாக நோன்பு இருக்க..." என்ற சொற்களைப் பயன்படுத்துகின்றார்கள். மேலும் யோவானின் சீடர்கள் துக்கத்தின் அடையாளமாகவும், மெசியாவின் வருகைக்காகவும் நோன்பிருந்தார்கள். இத்தகைய சூழ்நிலையில்தான் யோவானின் சீடர்கள் இயேசுவிடம் கேள்வி கேட்கின்றார்கள்.

மகிழ்ச்சியை இவ்வுலகிற்குக் கொண்டு வந்த இயேசு

யோவானின் சீடர்கள் இப்படியொரு கேள்வியை இயேசுவிடம் கேட்டபொழுது, அவர் அவர்களிடம் நோன்பிருக்கவேண்டாம் என்று சொல்லவில்லை. ஏனெனில் இயேசுவே நோன்பிருந்தார் (லூக் 4: 1-12), நோன்பினால் தீய ஆவிய்களை விரட்ட முடியும் என்றும் சொன்னார் (மத் 17: 21). ஆனால், இங்கு இயேசு எப்பொழுது நோன்பிருக்கவேண்டும் என்பதை தெளிவுபடுத்துகின்றார். அதற்காக அவர் பயன்படுத்தும் உருவகம்தான் மணமகன் – மனவிருந்தினர் உருவகம். கடவுளை மணமகனாக பழைய ஏற்பாடு குறிப்பிடுகின்றது (எசா 54: 5-6; ஒசே 2: 16- 20). இங்கு இயேசு தன்னை மனமகன் என்று சுட்டிக்காட்டுவதன்மூலம், தான் தன்னுடைய சீடர்களோடு இருக்கின்றபொழுது அவர்கள் மகிழ்ச்சியாத்தான் இருப்பார்கள்; அவர்கள் துக்கம் கொண்டாடிக் கொண்டிருக்கமாட்டார்கள் என்று தெளிவாகச் சொல்கின்றார். இதன்மூலம் இயேசு தன்னை - கடவுளை – மகிழ்ச்சியான கடவுள் என்று சுட்டிக்காட்டுகின்றார்.

ஆம். நமது கடவுள் நாம் துக்கத்தோடு இருக்கவேண்டும் என்று அல்ல, மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்றே விரும்புகின்றார். அதற்காகவே அவர் தன்னுடைய வாழ்வளிக்கும் வார்த்தைகளைத் தந்திருக்கின்றார் (யோவா 15: 11). ஆகவே, நாம் ஆண்டவருடைய கட்டளைகளைக் கருத்தூன்றிக் கடைப்பிடித்து, அவர் தரும் மகிழ்ச்சியில் நிலைத்திருக்க முயற்சி செய்வோம்.

சிந்தனை

"ஆண்டவரை முன்னிட்டு அக மகிழுங்கள்" (திபா 32: 11) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நாம் ஆண்டவரை முன்னிட்டு, அவரோடு, அவரை வார்த்தைகளைக் கடைப்பிடிப்பதன் வழியாக இணைந்திருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
Free Blog Widget
Stats Counter
hit counter