maraikal
MUM
"


பொதுக்காலம் 13 ஆம் வாரம்  30-06-2020

முதல் வாசகம்

தலைவராகிய ஆண்டவர் பேசியிருக்க, இறைவாக்கு உரைக்காதவர் எவர்?

இறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து வாசகம் 3: 1-8; 4: 11-12

இஸ்ரயேல் மக்களே! கேளுங்கள்; உங்களுக்கு எதிராக - ஆம், எகிப்து நாட்டினின்று நான் அழைத்து வந்த முழுக் குடும்பமாகிய உங்களுக்கு எதிராக - ஆண்டவர் உரைக்கும் இந்த வாக்கைக் கேளுங்கள்: "உலகத்திலுள்ள எல்லா மக்களினங்களுக்குள்ளும் உங்களைத்தான் நான் சிறப்பாக அறிந்து கொண்டேன்; ஆதலால், உங்கள் தீச்செயல் அனைத்திற்காகவும் நான் உங்களைத் தண்டிப்பேன்.

தங்களுக்குள் உடன்பாடு இல்லாமல் இருவர் சேர்ந்து நடப்பார்களோ? இரை அகப்படாமல் இருக்கும்போது காட்டில் சிங்கம் கர்ச்சிக்குமோ? ஒன்றையும் பிடிக்காமல் இருக்கையிலேயே குகையிலிருந்து இளஞ்சிங்கம் முழக்கம் செய்யுமோ? வேடன் தரையில் வலைவிரிக்காதிருக்கும்போதே பறவை கண்ணியில் சிக்கிக் கொள்வதுண்டோ? ஒன்றுமே சிக்காதிருக்கும் போது பொறி தரையைவிட்டுத் துள்ளுவதுண்டோ? நகரில் எக்காளம் ஊதப்படுமானால், மக்கள் அஞ்சி நடுங்காமல் இருப்பார்களோ?ஆண்டவர் அனுப்பவில்லையெனில், நகருக்குத் தீமை தானாக வந்திடுமோ? தம் ஊழியர்களாகிய இறைவாக்கினர்களுக்குத் தம் மறைபொருளை வெளிப்படுத்தாமல், தலைவராகிய ஆண்டவர் ஏதும் செய்வதில்லை. சிங்கம் கர்ச்சனை செய்கின்றது; அஞ்சி நடுங்காதவர் எவர்? தலைவராகிய ஆண்டவர் பேசியிருக்க, இறைவாக்கு உரைக்காதவர் எவர்?

சோதோம், கொமோராவின் மக்களைக் கடவுள் அழித்தது போல உங்களுள் சிலரை அழித்தேன். நீங்களோ, நெருப்பிலிருந்து இழுக்கப்பட்ட கொள்ளிக் கட்டைபோல் ஆனீர்கள்; ஆயினும் நீங்கள் என் பக்கம் திரும்பவில்லை" என்கிறார் ஆண்டவர். "ஆகையால், இஸ்ரயேலே! உனக்கும் இவ்வாறே செய்வேன். இஸ்ரயேலே! இப்படி நான் செய்யப் போவதால் உன் கடவுளைச் சந்திக்கத் தயாராயிரு!”

ஆண்டவரின் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்


திபா 5: 4-5. 6. 7 . (பல்லவி: 8a) Mp3

பல்லவி: ஆண்டவரே, உமது நீதியின் பாதையில் என்னை நடத்தும்.
4
நீர் பொல்லாங்கைப் பார்த்து மகிழும் இறைவன் இல்லை; உமது முன்னிலையில் தீமைக்கு இடமில்லை.
5
ஆணவமிக்கோர் உமது கண்முன் நிற்க மாட்டார்; தீங்கிழைக்கும் அனைவரையும் நீர் வெறுக்கின்றீர். - பல்லவி

6
பொய் பேசுவோரை நீர் அழித்திடுவீர்; கொலை வெறியரையும் வஞ்சகரையும் அருவருக்கின்றீர். - பல்லவி

7
நானோ உம் பேரருளால் உமது இல்லம் சென்றிடுவேன்; உமது திருத்தூயகத்தை நோக்கி இறையச்சத்துடன் உம்மைப் பணிந்திடுவேன். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
திபா 130: 5

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன். என் நெஞ்சம் காத்திருக்கின்றது. அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


இயேசு எழுந்து காற்றையும் கடலையும் கடிந்துகொண்டார். உடனே மிகுந்த அமைதி உண்டாயிற்று.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 23-27

அக்காலத்தில்

இயேசு படகில் ஏறவே, அவருடைய சீடர்களும் அவரோடு ஏறினார்கள். திடீரெனக் கடலில் பெருங் கொந்தளிப்பு ஏற்பட்டது. படகுக்குமேல் அலைகள் எழுந்தன. ஆனால் இயேசு தூங்கிக் கொண்டிருந்தார். சீடர்கள் அவரிடம் வந்து, "ஆண்டவரே, காப்பாற்றும், சாகப் போகிறோம்"என்று சொல்லி அவரை எழுப்பினார்கள்.

இயேசு அவர்களை நோக்கி, "நம்பிக்கை குன்றியவர்களே, ஏன் அஞ்சுகிறீர்கள்?" என்று கேட்டு, எழுந்து காற்றையும் கடலையும் கடிந்து கொண்டார். உடனே மிகுந்த அமைதி உண்டாயிற்று.

மக்கள் எல்லாரும், "காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் எத்தகையவரோ?"என்று வியந்தனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

 


 ஆமோஸ் 3: 1-8; 4: 11-12

"எல்லா மக்களினங்களுக்குள்ளும் உங்களைத்தான் சிறப்பாக அறிந்துகொண்டேன்"

நிகழ்வு



பில் பிரைட் என்பவர் எழுதிய மிகச்சிறந்த புத்தகம், "The Four Spiritual Laws". இப்புத்தகம் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, இலட்சக்கணக்கான பிரதிகள் விற்றுள்ளன.

இந்தப் புத்தகத்தை முழுவதும் எழுதிவிட்டு, அச்சகத்திற்கு அனுப்புவதற்கு முந்தைய நாள் இரவு, பில் பிரைட்டிற்கு ஒரு சிந்தனை உதித்தது. அது என்ன சிந்தனை எனில், இந்தப் புத்தகத்தில் முதல் சட்டமாக இருந்த, "மனிதன் தான் செய்த பாவத்தினால், கடவுளைவிட்டு வெகுதொலைவு சென்றுவிட்டான்" என்பதைத் திருத்தி, "கடவுள் ஒவ்வொருவரையும் சிறப்பாக அழைத்திருக்கின்றார்; அவர்களுக்கென்று ஒரு திட்டத்தை வைத்திருக்கின்றார்" என்று எழுதவேண்டும் என்பதாகும்.

பில் பிரைட் தனக்கு உதித்த இந்த சிந்தனையின் படி, ஏற்கெனவே இருந்த முதல் சட்டத்தை மாற்றி, "கடவுள் ஒவ்வொருவரையும் சிறப்பாக அழைத்திருக்கின்றார்; ஒவ்வொருவருக்கும் ஒரு திட்டத்தை வைத்திருக்கின்றார்" என்று எழுதி அச்சகத்திற்கு அனுப்பி வைத்தார். அதன் விளைவு, புத்தகம் இவர் எதிர்பார்த்ததை விடவும் அமோகமாக விற்பனையானது; பலரையும் சென்றுசேர்ந்தது.

ஆம். பில் பிரைட் தன்னுடைய புத்தகத்தில் கூறுவதுபோல, கடவுள் ஒவ்வொருவருக்கும் ஒரு திட்டத்தை வைத்திருக்கின்றார். அதனால் அவர் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட விதமாய் அழைக்கின்றார். இந்த உண்மையை உணர்ந்து நாம் வாழ்ந்தோமெனில், நம்முடைய வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை. முதல் வாசகத்தில், ஆமோஸ் இறைவாக்கினர், கடவுள், இஸ்ரயேல் மக்களைச் சிறப்பாக அழைத்ததைக் குறித்துப் பேசுகின்றார். இஸ்ரயேல் மக்கள் தாங்கள் பெற்றுக்கொண்ட சிறப்பான அழைப்பினைச் சிறப்பாகப் பயன்படுத்தினார்களா என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

கடவுளால் சிறப்பாக அழைக்கப்பட்ட இஸ்ரயேல் மக்கள்

"உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினம் நீங்கள். மண்ணுகிலுள்ள எல்லா மக்களினங்களிலும் உங்களையே தம் சொந்த மக்களாக கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்து கொண்டார்..." (இச 7: 6-8) என்று இணைச்சட்ட நூலில் ஆண்டவராகிய கடவுள் கூறுவார். கடவுள் இஸ்ரயேல் மக்களைத் தன் மக்களாகச் சிறப்பாக அழைத்தார் எனில், அவர்களுக்கென்று ஒருசில பொறுப்புகளையும் அவர் கொடுத்திருந்தார்.

ஆண்டவராகிய கடவுள் ஆபிரகாமிடம் பேசுகின்றபொழுது, "...உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசிபெறும்"(தொநூ 12: 3) என்பார். ஆபிரகாமிற்குக் கொடுக்கப்பட்ட அந்த அழைப்பு, இஸ்ரயேல் மக்கள் அனைவருக்குமான அழைப்பாகும். ஆதலால், இஸ்ரயேல் மக்கள் மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசிபெறுவதற்குக் கருவியாக இருந்து செயல்பட்டிருக்கவேண்டும். ஆனால், அவர்கள் அப்படிச் செயல்படவில்லை என்பதே வேதனை கலந்த உண்மை.

கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட அழைப்பை வீணடித்த இஸ்ரயேல் மக்கள்

கடவுளால் சிறப்பாக அழைக்கப்பட்ட இஸ்ரயேல் மக்கள், மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசிபெறுவதற்கு ஒரு கருவியாக இருந்து செயல்பட்டிருக்கவேண்டும் என்று மேலே பார்த்தோம். இஸ்ரயேல் மக்களுக்கு இன்னொரு கடமையும் இருந்தது. அது என்ன கடமை என்பதை, யோவான் தன்னுடைய முதல் திருமுகத்தில் இவ்வாறு கூறுவார்: "...நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகின்றோம்... அவர் தோன்றும்பொழுது அவரைப் போல் இருப்போம்"(1 யோவா 3: 1-2). ஆம், கடவுளால் சிறப்பாக அழைக்கப்பட்ட இஸ்ரயேல் மக்கள் அவர் தூயவராக இருந்தது போல, இருந்திருக்கவேண்டும். ஆனால், அவர்கள் நேற்றைய முதல் வாசகத்தில் நாம் வாசித்துபோல, அநீதியாகவும் ஒழுக்கக்கேடாகவும் சிலை வழிபாடு செய்பவர்களாகவும் நடந்துகொண்டார்கள். இதனால் அவர்கள்மீது கடவுளின் சினம் பொங்கி எழும் என்று கூறுகின்றார் ஆமோஸ் இறைவாக்கினர்.

இன்றைய முதல் வாசகத்தின் இறுதியில் வருகின்ற, "ஆகையால்! இஸ்ரயேலே! இப்படி நான் செய்யப்போவதால், உன் கடவுளைச் சந்திக்கத் தயாராயிரு" என்ற வார்த்தைகள், இஸ்ரயேல் மக்கள் தாங்கள் பெற்ற சிறப்பான அழைப்பினை வீணடித்ததற்காகப் பெறவிருக்கும் தண்டனையை எடுத்துக் கூறுவதாக இருக்கின்றது. ஆகையால், நாம் இஸ்ரயேல் மக்களைப் போன்று கடவுளிடமிருந்து நாம் பெற்றுக்கொண்ட அழைப்பினை வீணடிக்காமல், நமக்கென கடவுள் வைத்திருக்கும் திட்டத்தையும் வீணடிக்காமல், அவற்றை நல்லவிதமாய்ப் பயன்படுத்துவோம்.

சிந்தனை

"நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை. நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன்.." (யோவா 15: 16) என்பார் இயேசு. ஆகையால், கடவுளிடமிருந்து சிறப்பான அழைப்பினைப் பெற்றிருக்கும் நாம், அந்த அழைப்பினை, கடவுள் நமக்கென வைத்திருக்கும் திட்டத்தை வீணடிக்காமல் நல்ல முறையில் பயன்படுத்துவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

மத்தேயு 8: 23-27

"அவரை எழுப்பினார்கள்"

நிகழ்வு


முன்பெல்லாம் கடலில் செல்லக்கூடிய கப்பல்களில் பாய்மரங்கள் பயன்படுத்தப்படும். இன்றைக்கும் ஒருசில சொகுசுக் கப்பல்கள் பாய் மரங்களைப் பயன்படுத்துகின்றன. இந்தப் பாய்மரங்களைப் பயன்படுத்துவதில் உள்ள சிக்கல் என்னவெனில், இந்தப் பாய் மரங்களுக்கு நடுவே உள்ள கம்பத்தைச் சரியாகப் பொருத்துவதுதான்.

காற்று வேகமாக வீசிக்கொண்டிருக்கும்பொழுது கப்பல் தளபதி, கப்பலில் உள்ள மாலுமியிடம் கம்பத்தின் மீது ஏறி, அதை அவிழ்க்கச் சொல்வார். சில நேரங்களில் அவர் மாலுமியிடம், காற்றுவீசும் திசையை நோக்கி, கம்பத்தின்மீது ஏறி அதைச் சரிசெய்யச் சொல்வார். மாலுமி கம்பத்தின்மீது ஏறும்பொழுது, தப்பித்தவறி கீழே பார்க்க நேர்ந்தால், குலையே நடுங்கிவிடும். அதனால் கம்பத்தின்மீது பாய்மரத்தைச் சரி செய்யவோ அல்லது அதை அவிழ்க்கவோ சொல்கின்றபொழுது, கப்பல் தளபதி, கம்பத்தின்மீது ஏறக்கூடிய மாலுமியிடம் "மேல் நோக்கிப் பார்"என்று சொல்வார்.

ஆம், கம்பத்தின் மீது ஏறக்கூடிய மிகக்கடினமான பணியைச் செய்யும் மாலுமி, கீழ் நோக்கிப் பார்த்தால், அச்சத்தில் நடுங்கத் தொடங்கிவிடுவார் என்பதாலேயே, கப்பல் தளபதி அவரிடம் மேல் நோக்கிப் பார் என்று சொல்கின்றார். நம்முடைய வாழ்க்கையிலும் ஆபத்துகள் வருகின்றபொழுது கீழ்நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்காமல், மேல் நோக்கிப் பார்த்தால், விண்ணகத்தில் உள்ள இறைவன் நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார் என்பது உறுதி. அதைத்தான் இந்த உண்மை நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

நற்செய்தியில், சீடர்கள் கடலிலில் சென்றுகொண்டிருக்கும்பொழுது, பெருங்கொந்தளிப்பு ஏற்பட, அவர்கள் இயேசுவின் உதவியை நாடுகின்றார்கள். இதனால் அவர்கள் ஆபத்திலிருந்து காப்பாற்றப்படுகின்றார்கள். மத்தேயு நற்செய்தியில் இடம்பெறும் இந்த நிகழ்வு நமக்கு என்ன செய்தியை எடுத்துச் சொல்கின்றது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

ஆபத்து மிகுந்த கலிலேயாக் கடல்

யூத வரலாற்று ஆசிரியரான ஜோசபுஸ், கலிலேயாக் கடலைக் குறித்து ஒருசில தரவுகளைத் தருகின்றார். அவை நம்முடைய கவனத்திற்கு உரியவையாக இருக்கின்றன. "பதின்மூன்று கிலோமீட்டர் நீளமும், ஏழு கிலோமீட்டர் அகலமும் கொண்ட கலிலேயாக் கடல் எப்பொழுதும் ஆபத்து நிறைந்ததாகவே இருக்கும். சில நேரங்களில் இருபது அடிக்கும் மேலே எழும் அலையில், கடலில் பயணம் செய்வது மிகப்பெரிய சவாலாக இருக்கும். இப்படிப்பட்ட சவால் நிறைந்த கலிலேயாக் கடலில், குறைந்தது முன்னூறு படகுகள் எப்பொழுதும் இருந்துகொண்ட இருக்கும் (Life Application New Testament Commentary –Brue Barton, D.min. pg. 41).

இப்படி ஆபத்துகள் நிறைந்த கலிலேயாக் கடலில்தான் இயேசுவும், அவருடைய சீடர்களும் மாலை வேளையில் (மாற் 4: 35) பயணம் செய்கின்றார்கள். அப்பொழுதுதான் கடலில் பெருங்கொந்தளிப்பு ஏற்படுத்துகின்றது. அதைப் பார்த்துவிட்டுத்தான் அவர்கள் அஞ்சி இயேசுவை எழுப்புகின்றார்கள் .

ஆண்டவரை எழுப்பிய இயேசுவின் சீடர்கள்

கடலில் ஏற்பட்ட பெருங்கொந்தளிப்பைக் கண்டு இயேசுவின் சீடர்கள் அவரை எழுப்பியது நமக்கு இரண்டு செய்திகளைச் சொல்கின்றது. ஒன்று, சீடர்களின் அவநம்பிக்கை. இரண்டு, சீடர்கள் இயேசுவின் உதவியை நாடுதல் அல்லது மேலே, விண்ணை நோக்கிப் பார்த்தல்.

இயேசுவின் சீடர்களின் ஏழுபேர் மீனவர்கள் (யோவா 21: 1-2). அவர்களுக்கு, கடலில் ஆபத்து வந்தால் எப்படிச் சமாளிக்கவேண்டும் என்பது பற்றி நன்றாகவே தெரிந்திருக்கும். ஆனாலும், அவர்கள் கடலில் ஏற்பட்ட பெருங்கொந்தளிப்பைக் கண்டு அஞ்சினார்கள் எனில், அவர்கள் நம்பிக்கை இல்லாமல் இருந்தார்கள் என்பதையே காட்டுகின்றது. அதனால்தான் இயேசு அவர்களை, "நம்பிக்கை குன்றியவர்களே, ஏன் அஞ்சுகிறீர்கள்?" என்று கேட்கின்றார்.

சீடர்கள், கடலில் ஏற்பட்ட பெருங்கொந்தளிப்பைக் கண்டு அஞ்சி, தூங்கிக்கொண்டிருந்த இயேசுவை எழுப்பியது, நாம் ஒவ்வொருவரும் இறைவனுடைய உதவியை நாடவேண்டும் என்ற செய்தியை எடுத்துச் சொல்வதாக இருக்கின்றது. அருளாளர் இவான் மெர்ஸ் இப்படிச் சொல்வார்: "மனிதர்களால் ஒன்றும் முடியாது; ஆனால், ஆண்டவரால் எல்லாம் முடியும்."இங்குச் சீடர்கள் தங்களுக்கு ஆபத்து வந்ததும், ஆண்டவருடைய உதவியை நாடினார்கள்; அதனால் அவர்கள் ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டார்கள். நாமும் துன்பம் அல்லது ஆபத்து வருகின்றபொழுது ஆண்டவரின் உதவியை நாடினால், அவர் நம்மை ஆபத்திலிருந்து காப்பார் என்பது உறுதி.

ஆகையால், நம்மிடம் இருக்கின்ற அவ நம்பிக்கையை அகற்றி, நமக்குக் கேடயமாக இருக்கும் ஆண்டவருடைய உதவியை நாடுவோம்; அவரது பாதுகாப்பையும் அரவணைப்பையும் பெற்றுக்கொள்வோம்.

சிந்தனை

"இஸ்ரயேலைக் காக்கின்றவர் கண்ணயர்வதுமில்லை; உறங்குவதுமில்லை" (திபா 121: 4) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நம்மைக் கண்ணயராமல் காக்கின்ற இறைவனிடம் ஆழமான நம்பிக்கை கொண்டு, அவரை உற்றுநோக்கி, அவர் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
Free Blog Widget
Stats Counter
hit counter