maraikal
MUM
"


 கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தம் பெருவிழா  14-06-2020

முதல் வாசகம்

நீங்களும் உங்கள் மூதாதையாரும் அறிந்திராத மன்னாவினால் உங்களை உண்பித்தார்.

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 8: 2-3, 14b-16a

மோசே மக்களை நோக்கிக் கூறியது: உங்கள் கடவுளாகிய ஆண்டவர் பாலைநிலத்தில் உங்களைக் கூட்டிச் சென்ற எல்லா வழிகளையும் நினைவில் கொள்ளுங்கள். அதன் மூலமே அவர் உங்களை எளியவராக்கினார். அவர்தம் கட்டளைகளை நீங்கள் கடைப்பிடிப்பீர்களோ மாட்டீர்களோ என உங்கள் உள்ளச் சிந்தனையை அறிந்து கொள்ளவும் சோதித்தார். அவர் உங்களை எளியவராக்கினார். உங்களுக்குப் பசியைத் தந்தார். ஆனால், மனிதர் அப்பத்தினால் மட்டுமன்று, மாறாக, கடவுளின் வாய்ச் சொல் ஒவ்வொன்றாலும் உயிர் வாழ்கின்றார் என்று நீங்கள் தெரிந்து கொள்ளுமாறு, நீங்களும் உங்கள் மூதாதையரும் அறிந்திராத மன்னாவினால் உங்களை உண்பித்தார். அடிமைத்தனத்தின் வீடாகிய எகிப்து நாட்டிலிருந்து உங்களைக் கூட்டி வந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்துவிட வேண்டாம். அவரே, கொள்ளிவாய்ப் பாம்புகளும் தேள்களும் நிறைந்த, நீரற்று வறண்ட நிலமான பரந்த கொடிய பாலைநிலத்தில் உங்களை வழிநடத்தியவர்; இறுகிய பாறையிலிருந்து உங்களுக்காக நீரைப் புறப்படச் செய்தவர். உங்கள் மூதாதையருக்குத் தெரிந்திராத மன்னாவால் பாலைநிலத்தில் உங்களை உண்பித்தவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 147: 12-13. 14-15. 19-20 . (பல்லவி: 12a) Mp3

பல்லவி: வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அல்லது: அல்லேலூயா.
12
எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! சீயோனே! உன் கடவுளைப் புகழ்வாயாக!
13
அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார்; உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார். - பல்லவி

14
அவர் உன் எல்லைப் புறங்களில் அமைதி நிலவச் செய்கின்றார்; உயர்தரக் கோதுமை வழங்கி உன்னை நிறைவடையச் செய்கின்றார்.
15
அவர் தமது கட்டளையை உலகினுள் அனுப்புகின்றார்; அவரது வாக்கு மிகவும் விரைவாய்ச் செல்கின்றது. - பல்லவி

19
யாக்கோபுக்குத் தமது வாக்கையும் இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும் நீதிநெறிகளையும் அறிவிக்கின்றார்.
20
அவர் வேறெந்த இனத்துக்கும் இப்படிச் செய்யவில்லை; அவருடைய நீதிநெறிகள் அவர்களுக்குத் தெரியாது. - பல்லவி

இரண்டாம் வாசகம்

அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 10: 16-17

சகோதரர் சகோதரிகளே, கடவுளைப் போற்றித் திருவிருந்துக் கிண்ணத்திலிருந்து பருகுகிறோமே, அது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்கு கொள்ளுதல் அல்லவா! அப்பத்தைப் பிட்டு உண்ணுகிறோமே, அது கிறிஸ்துவின் உடலில் பங்குகொள்ளுதல் அல்லவா! அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில்தான் பங்கு கொள்கிறோம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

தொடர்பாடல்


இத்தொடர் பாடலை விருப்பம் போல் பயன்படுத்தலாம்: இதை முழுமையாக அல்லது குறுகிய பாடமாக "வானவர் உணவிதோ" என்ற (21ஆம்) அடியிலிருந்தும் சொல்லலாம் அல்லது பாடலாம்.

சீயோனே, உன் மீட்பரைப் புகழ்வாய்,
கீதமும் பாடலும் இசைத்தே உந்தன்
ஆயரை, தலைவரைப் புகழ்வாயே.

எல்லாப் புகழும் கடந்தவர் அவரே;
இயலாது உன்னால் அவரைப் புகழ,
இயன்ற மட்டும் துணிந்திடுவாயே.

உயிர்மிகு அப்பம் உயிர்தரும் உணவாம்
போற்றுதற்குரிய இப்பேருண்மை
இன்று சிந்தனைக்கு ஏற்ற பொருளே.

தூய விருந்தின் பந்தியில் அன்று
பன்னிரு சோதரர் கூட்ட மதற்கே
கிடைத்த உணவிது ஐயமே யில்லை.

ஆர்ப்பரிப் புடனே இனிமையும் கலந்த
நிறைபுகழ்க் கீதம் ஒலிப்பதோ டன்றி
மகிழ்வும் மனதில் பெருகிடல் தகுமே.

பெருஞ்சிறப்பான திருவிழா இன்றே
இத்திரு விருந்தை முதன் முதலாக
நிறுவிய நாளை நினைவுகூர்கின்றோம்.

புதிய பேரரசரின் இத்திருப் பந்தியில்
புதிய ஏற்பாட்டின் புதுத்தனிப் பாஸ்கா
பழைய பாஸ்காவை முடிவுறச் செய்யும்.

புதுமை பழமையைப் போக்குதல் காணீர்,
உண்மை நிழலை ஓட்டுதல் காணீர்,
ஒளியோ இரவை ஒழித்தல் காணீர்.

திருவிருந்ததனில் நிறைவேற்றியதைத்
தம் நினைவாகச் சீடரும் செய்யக்
கட்டளை தந்தார் கிறிஸ்து பெருமான்.

திருக் கட்டளையால் அறிவுரை பெற்று
அப்பமும் இரசமும் மீட்புக்குரிய
பலிப் பொருளாக அர்ச்சிக்கின்றோம்.

அப்பம் மாறி அவர் ஊன் ஆவதும்,
இரசமது மாறி இரத்தமாவதும்
கிறிஸ்துவர்க் கருளிய உண்மையாமே.

புலனையும் அறிவையும் முற்றும் கடந்து,
இயற்கை முறைமைக் கப்பால்,
உள்ளத்தை உறுதியோ டேற்கும் உயிர்விசு வாசம்.

அப்பமும் இரசமும் குணங்களில் வேறாய்
அவற்றின் தோற்றம் மட்டுமே யிருக்க
அற்புத உட்பொருள் மறைவாய் உள்ளதே.

ஊனே உணவு, இரத்தமே பானம்
இருவித குணங்கள் ஒவ்வொன் றுள்ளும்
கிறிஸ்து முழுவதும் உண்டெனக் கொள்வீர்.

உண்பவர் அவரைப் பிய்ப்பதுமில்லை.
உடைப்பதுமில்லை, பிரிப்பதுமில்லை.
அவரை முழுதாய் உண்கின் றனரே.

உண்பவர் ஒருவரோ, ஆயிரம் பேரோ,
ஒருவர் உண்பதையே அனைவரும் உண்பர்;
உண்பதால் என்றுமே தீர்வதுமில்லை.

நல்லவர் உண்பர், தீயரும் உண்பர்
அதனால் அவர் பெறும் பயன் வெவ்வேறாம்
முன்னவர் வாழ்வார், பின்னவர் அழிவார்.

நல்லோர் வாழ்வார், தீயோர் அழிவார்:
உணவொன்றாயினும் எத்துணை வேறாம்
பயன்விளைத் திடுமெனப் பகுத்துணர் வாயே.

அப்ப மதனைப் பிட்ட பின்னரும்
முழுமையில் எதுவோ அதுவே பகுதியில்
உளதாம், அறிந்திடு, ஐயமே வேண்டா.

உட்பொருள் பிளவு படுவதே யில்லை;
குணத்தில் மட்டும் பிடப்படுமே
அவரது நிலையும் உருவும் குறையா.

வானவர் உணவிதோ வழிநடப் போர்க்கும்
உணவா யிற்றே; மக்களின் உணவை
நாய்கட் கெறிதல் நலமா காதே.

ஈசாக் பலியிலும் பாஸ்கா மறியிலும்
நம் முன்னோர்க்குத் தந்த மன்னாவிலும்
இந்தப் பலியின் முன்குறி காண்பீர்.

நல்ல ஆயனே, உண்மை உணவே,
யேசுவே, எம்மேல் இரங்கிடு வீரே,
எமக்குநல் அமுதே ஊட்டிடுவீரே.

நும்திரு மந்தை எம்மைக் காத்து,
நித்திய வாழ்வினர் வாழும் நாட்டில்
நலன்கள் அனைத்தும் காணச் செய்வீர்.

அனைத்தும் அறிவோய், அனைத்தும் வல்லோய்,
மாந்தர்க் கிங்கு உணவினைத் தருவோய்,
அங்கும் பந்தியில் அமரச் செய்வாய்.

அமர்ந்து நும்முடன் பங்கினைக் கொள்ளவும்,
வான்திருக் கூட்டத்தின் நட்பினராகவும், அருள்வீர்,
ஆமென், அல்லேலூயா.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


யோவா 6: 51-52

அல்லேலூயா, அல்லேலூயா! விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம்.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 51-58


அக்காலத்தில் இயேசு யூதர்கள் கூட்டத்தை நோக்கிக் கூறியது: "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்." "நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்?" என்ற வாக்குவாதம் அவர்களிடையே எழுந்தது. இயேசு அவர்களிடம், "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: மானிட மகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடைய மாட்டீர்கள். எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம். எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன். வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர். விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே; இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர்."

ஆண்டவரின் அருள்வாக்கு.
 

கிறிஸ்துவின் தூய்மைமிகு திரு உடலும் திரு இரத்தமும்

I இணைச்சட்டம் 8: 2-3, 14b -16a
II 1 கொரிந்தியர் 10: 16-17
III யோவான் 6: 51-58

கடவுள் கொடுத்த மிகப்பெரிய கொடை, நற்கருணை

நிகழ்வு


இங்கிலாந்தை ஆண்டுவந்த எட்டாம் ஹென்றி என்ற மன்னனிடம் பொதுச் செயலராகப் பணியாற்றி வந்தவர் தாமஸ் மூர் (1478-1535). பிற்காலத்தில் இவர் மன்னனுடைய தவற்றைச் சுட்டிக் காட்டியதற்காகக் கொல்லப்பட்டார்.

ஒருநாள் இவர் கோயிலில், நற்கருணை ஆண்டவருக்கு முன்பாக முழந்தாள் படியிட்டு வேண்டிக்கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த படைவீரர் ஒருவர் இவரிடம், "மன்னர் உங்களை ஒரு முக்கியமான செயலைக் குறித்து விவாதிக்க, விரைவாக வருமாறு அழைக்கின்றார், வாருங்கள்" என்றார். அதற்குத் தாமஸ் மூர் அவரிடம், "இப்பொழுது நான் மன்னருக்கெல்லாம் மன்னராம், இயேசுவோடு ஒரு முக்கியமான செயலைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கின்றேன். அவரோடு அதைப் பேசி முடித்துவிட்டு மன்னனைப் பார்க்க வருகின்றேன் என்று சொல்" என்றார். இதைக் கேட்டு அந்தப் படைவீரர் அதிர்ந்துபோனார்.

ஆம், புனித தாமஸ் மூர் நற்கருணை என்பது கடவுள் கொடுத்த மிகப்பெரிய கொடை என்பதை உணர்ந்திருந்தார். அதனால் அவர் மன்னன் எட்டாம் ஹென்றி அழைத்தபொழுதும் அவருக்கு முக்கியத்துவம் தராமல், நற்கருணை ஆண்டவருக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவரோடு தன்னுடைய பொன்னான நேரத்தைச் செலவிட்டார்.

இன்று நாம், கிறிஸ்துவின் தூய்மைமிகு திருவுடல், திருஇரத்தப் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். நாம் கொண்டாடுகின்ற இப்பெருவிழா இன்றைய இறைவார்த்தையின் வழியாக நமக்கு என்ன செய்தியைச் சொல்கின்றது என்பதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

நற்கருணை: மானிடருக்குக் கடவுள் கொடுத்த மிகப்பெரிய கொடை

அருள்பணியாளர்களின் பாதுகாவலான புனித ஜான் மரிய வியான்னி நற்கருணையைக் குறித்துப் பேசும்பொழுது, "கடவுள், மானிடருக்குக் கொடுத்த மிகப்பெரிய கொடை நற்கருணை. ஏனெனில், நற்கருணையை விடப் பெரிய கொடை ஒன்று இருந்திருந்தால், அதை அவர் மானிடருக்குக் கொடுத்திருப்பார்" என்பார். எவ்வளவு ஆழமான, அர்த்தம் நிறைந்த வார்த்தைகள் இவை.

கடவுள் கொடுத்திருக்கின்ற மிகப்பெரிய கொடையாகிய நற்கருணை விருந்தை இன்று நாம் கொண்டாடுவது வேண்டுமானால் எளிதான செயலாக இருக்கலாம். ஆனால், பல நாடுகளில் நற்கருணை விருந்தைக் கொண்டாடுவதற்குக் கடுமையாக எதிர்ப்புகள் இருந்தன. சீனா போன்று கம்யூனிச நாடுகளில் நற்கருணை விருந்தை, ஆட்சியாளர்களுக்குத் தெரியாமல் கிறிஸ்தவர்கள் கொண்டினார்கள். அயர்லாந்தில்"Mass Rock" என்றோர் இடம், நகருக்கு வெளியே ஓராமாக இருக்கின்றது. இந்த இடத்தில்தான் அயர்லாந்தைச் சார்ந்தவர்கள் அன்றைய காலக்கட்டத்தில் ஆட்சியாளர்களுக்குத் தெரியாமல் நற்கருணை விருந்தைக் கொண்டாடி இருக்கின்றார்கள். இப்படிப் பல்வேறு நாடுகள், நற்கருணை விருந்தானது வெளிப்படையாக இல்லாமல், மறைவாகத்தான் நடைபெற்றது.

இன்று நாம் நற்கருணை விருந்தை வெளிப்படையாகக் கொண்டாடுகின்றோம் எனில், அதற்கு நாம் இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். நற்கருணை என்றாலே கிரேக்கத்தில் நன்றி என்றுதானே பொருள். ஆகையால், நாம் கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் இந்த நற்கருணையை வெளிப்படையாகக் கொண்டாடுவதற்கு அருள்பாலித்ததற்காக இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

நற்கருணையை நம்பிக்கையோடு உட்கொள்ளவேண்டும்

அடுத்ததாக, இன்று நாம் கொண்டாடுகின்ற, கிறிஸ்துவின் தூய்மைமிகு திருஉடல் இர இரத்தப் பெருவிழா நமக்கு உணர்த்துகின்ற செய்தி, நாம் உட்கொள்கின்ற நற்கருணையை நம்பிக்கையோடு உட்கொள்ளவேண்டும் என்பதாகும்.

அன்றைய காலத்தில், யூதர்களிடம் இயேசு தன்னுடைய உடலையும் இரத்தத்தையும் குறிப்பிட்டு விட்டு, "மானிடமகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள்" என்று சொன்னபொழுது, யூதர்கள் பலர் அதை மேம்போக்காகப் புரிந்துகொண்டு, நம்ப மறுத்தார்கள். இயேசு சொன்னதை யூதர்கள் நம்ப மறுத்ததற்கு ஒரு முக்கியமான காரணமும் இருந்தது. அது என்னவெனில்,"எந்த உடலையும் குருதியோடு உண்ணாதீர்கள்... எல்லா உடலின் உயிரும் குருதியே; அதை உண்பவர் அழிவார்" (லேவி 17: 10-14; இச 12: 16; திப 15: 29) என்று சொல்லப்பட்டிருந்தது. இதனால் அவர்கள் இயேசு சொன்னதை நம்பவும் ஏற்றுக்கொள்ளவும் மறுத்தார்கள்.

இயேசு தன்னுடைய உடலையும் இரத்தத்தையும் ஆன்மிக உணவு, பானம் என்று சொல்லி, அவற்றை உண்போர் என்றுமே வாழ்வார் என்று சொன்னார். ஆகையால், நாம் இயேசுவின் திருவுடலையும் திருஇரத்ததையும் நமக்கு வாழ்வளிக்கும் ஆன்மிக உணவாகவும் பானமாகவும் நம்பி உண்டோமெனில் நிலைவாழ்வை அடைவோம் என்பது உறுதி..

நற்கருணையை குறித்துக் காட்டும் விழுமியங்களை வாழ்வாக்கவேண்டும்

இன்று நாம் கொண்டாடுகின்ற கிறிஸ்துவின் தூய்மைமிகு திருஉடல் திருஇரத்தப் பெருவிழாவனது உணர்த்துகின்ற மூன்றாவது செய்தி, நாம் நற்கருணையை நம்பிக்கையோடு உட்கொள்வதோடு மட்டுமல்லாமல், அது குறித்துக் காட்டுகின்ற விழுமியங்களுக்கு ஏற்ப வாழவேண்டும் என்பதாகும்.

புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில், திருவிருந்துக் கிண்ணத்தில் பருகுதல், கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்குகொள்ளுதல் அல்லவா, அப்பத்தைப் பிட்டு உண்ணுதல் கிறிஸ்துவின் உடலில் பங்கு கொள்ளுதல் அல்லவா என்று சொல்லிவிட்டு, அவர் ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாயிருக்கின்றோம் என்பார். புனித பவுல் சொல்லக்கூடிய இவ்வார்த்தைகளை வேறுவிதமாகச் சொல்லவேண்டும் என்றால், நாம் பலராக இருந்தாலும், கிறிஸ்துவின் உடலிலும் இரத்தத்திலும் பங்குகொள்வதால் ஒரே உடலாயிருக்க அழைக்கப்பட்டிருக்கின்றோம்; ஆனால், நடைமுறை வாழ்வில் நாம் ஒரே உடலாய் இல்லை என்பதே வேதனை கலந்த உண்மையாக இருக்கின்றது.

‘கிறிஸ்தவர்கள்" என்று ஒரே உடலாக இருக்கவேண்டிய நாம், இனத்தின் பெயரிலும் குலத்தின் பெயரிலும் மொழியின் பெயரிலும் பிரிந்து கிடக்கின்றோம். ஒருமுறை இராபர்ட் பெஞ்ச்லே என்ற அறிஞர், "உலகில் உள்ள மக்களை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். மக்களை இரண்டாகப் பிறப்பவர் ஒருவிதம், அப்படிப் பிரிக்காதவர் இன்னொரு விதம் என்று பிரிக்காலம் எனக் குறிப்பிட்டார். ஆம், இன்றைக்குப் பலர் மக்களை இணைப்பவர்களாக அல்லாமல், பிரிப்பவர்களாகவும், ஒற்றுமைக்கு ஊறுவிளைவிப்பவர்களாகவும் இருக்கின்றார்கள். இப்படிப்பட்டவர்கள் நற்கருணை குறித்துக் காட்டும் ஒற்றுமை, தியாகம், அன்பு போன்ற பண்புகளைத் தங்களுடைய வாழ்வில் வாழ்ந்து காட்டுவது மிகவும் நல்லது.

ஆகவே, கிறிஸ்துவின் தூய்மைமிகு திருஉடல் திரு இரத்தப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில், நற்கருனையைக் கொடையாகத் தந்த இறைவனுக்கு நன்றி செலுத்துவோம். மேலும் அந்த நற்கருணையை நம்பிக்கையோடு உட்கொண்டு, அது குறித்துக் காட்டும் ஒற்றுமை, ஒன்றிப்பு, தியாகம், அன்பு போன்ற பண்புகளை நம்முடைய வாழ்வில் கடைப்பிடித்து வாழக் கற்றுக்கொள்வோம்.

சிந்தனை

‘நாம் விண்ணகத்திற்கு செல்ல மிக எளியதும் பாதுகாப்பதுமான வழி, நற்கருணையே!" என்பார் புனித பத்தாம் பயஸ். ஆகையால், நாம் நம்மை விண்ணகத்திற்கு இட்டுச் செல்லும் நற்கருணையை நம்பிக்கையோடு உட்கொண்டு, நற்கருணை உணர்த்தும் விழுமியங்களை நமது வாழ்வில் வாழ்ந்து காட்டுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
Free Blog Widget
Stats Counter
hit counter