maraikal
MUM
"


பொதுக்காலம் 9ஆம் வாரம்  02-06-2020

முதல் வாசகம்


++புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகும் வரும் என நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

திருத்தூதர் பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 12-15a,17-18

அன்புக்குரியவர்களே, கடவுளின் நாளை எதிர்பார்த்து அவர் வருகையை விரைவுபடுத்த வேண்டும். அந்நாளில் வானங்கள் எரிந்தழிந்து பஞ்சபூதங்கள் வெந்துருகிப் போகும். அவர் வாக்களித்தபடியே நீதி குடிகொண்டிருக்கும். புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகும் வரும் என நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆகவே, அன்பார்ந்தவர்களே, இவற்றை எதிர்பார்த்திருக்கும் உங்களை அவர் மாசுமறுவற்றவர்களாய், நல்லுறவு கொண்டவர்களாய்க் காணும் வகையில் முழு முயற்சி செய்யுங்கள். நம் ஆண்டவரின் பொறுமையை மீட்பு எனக் கருதுங்கள். அன்பார்ந்தவர்களே, நீங்கள் இவற்றையெல்லாம் ஏற்கெனவே அறிந்திருக்கிறீர்கள். கட்டுப்பாடற்றவர்களின் தவறான வழிகளால் கவர்ந்திழுக்கப்பட்டு, உங்கள் உறுதி நிலையினின்று விழுந்துவிடாதபடி கவனமாயிருங்கள். நம் ஆண்டவரும் மீட்பருமான இயேசு கிறிஸ்துவின் அருளிலும் அறிவிலும் வளர்ச்சி அடையுங்கள். அவருக்கே இன்றும் என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்

திபா 90: 2. 3-4. 10. 14,16 . (பல்லவி: 1) Mp3

பல்லவி: என் தலைவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடம்.
2
மலைகள் தோன்றுமுன்பே, நிலத்தையும் உலகையும் நீர் உருவாக்கும் முன்பே, ஊழி, ஊழிக்காலமாய் உள்ள இறைவன் நீரே! - பல்லவி

3
மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்; ‘மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள்’ என்கின்றீர்.
4
ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்துபோன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன. - பல்லவி

10
எங்கள் வாழ்நாள் எழுபது ஆண்டுகளே; வலிமை மிகுந்தோர்க்கு எண்பது; அவற்றில் பெருமைக்கு உரியன துன்பமும் துயரமுமே! அவை விரைவில் கடந்துவிடுகின்றன, நாங்களும் பறந்து விடுகின்றோம். - பல்லவி

14
காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம்.
16
உம் அடியார்மீது உம் செயலும் அவர்தம் மைந்தர்மீது உமது மாட்சியும் விளங்கச் செய்யும். - பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

எபே 1: 17-18 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்று நீங்கள் அறியுமாறு நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் மாட்சிமிகு தந்தையுமானவர் ஞானமும், வெளிப்பாடும் தரும் தூய ஆவியை உங்களுக்கு அருள்வாராக! அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்


++சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள். 


மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 13-17


அக்காலத்தில் பரிசேயர் இயேசுவை அவருடைய பேச்சில் சிக்க வைக்க ஏரோதியர் சிலரை அவரிடம் அனுப்பி வைத்தனர். அவர்கள் அவரிடம் வந்து, "போதகரே, நீர் உண்மையுள்ளவர்; ஆள் பார்த்துச் செயல்படாதவர்; எவரையும் பொருட்படுத்தாமல் கடவுளின் நெறியை உண்மைக்கு ஏற்பக் கற்பிப்பவர் என்பது எங்களுக்குத் தெரியும். சீசருக்கு வரி செலுத்துவது முறையா, இல்லையா? நாங்கள் செலுத்தட்டுமா, வேண்டாமா?" என்று கேட்டார்கள். அவர் அவர்களுடைய வெளிவேடத்தைப் புரிந்துகொண்டு, "ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? என்னிடம் ஒரு தெனாரியம் கொண்டு வாருங்கள். நான் பார்க்க வேண்டும்" என்றார். அவர்கள் அதைக் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களிடம், "இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை?" என்று கேட்டார். அவர்கள் அவரிடம், "சீசருடையவை" என்றார்கள். அதற்கு இயேசு அவர்களை நோக்கி, "சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்" என்றார். அவர்கள் அவரைக் குறித்து வியப்படைந்தார்கள். இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி

ஆண்டவரின் அருள்வாக்கு.


 
 


மாற்கு 12: 13-17

இயேசுவைப் பேச்சில் சிக்கவைக்க முயற்சி

நிகழ்வு

ஒருமுறை கவிஞர் கண்ணதாசன், அமெரிக்காவில் உள்ள தமிழ்ச்சங்கம் விடுத்திருந்த சிறப்பு அழைப்பின் பேரில், அங்குச் சென்று பேசினார். அவர் அங்குத் தன்னுடைய உரையில் பகிர்ந்துகொண்ட ஒரு வேடிக்கைக் கதைதான் இது.

தர்மபுரியில் துறவுமடம் ஒன்று இருந்தது. அந்த மடத்தின் தலைவருக்கு தமிழகத்திலுள்ள எல்லாத் தமிழறிஞர்களையும் ஒன்றாக அழைத்து, தான் இருக்கும் மடத்தில் ஒரு கூட்டம் நடத்தவேண்டும் என்று ஆசை. இதனால் இவர் தமிழகத்திலிருந்த மொத்தம் 97 தமிழறிஞர்களுக்கு அழைப்பு விடுத்தார். இவருடைய அழைப்பை ஏற்று எல்லாரும் கூட்டத்திற்கு வருவதாகச் சொல்லியிருந்தார்கள்.

கூட்டம் நடைபெறவிருந்த நாளும் வந்தது. கூட்டத்தில் கலந்துகொள்வதாகச் சொல்லியிருந்த 97 தமிழறிஞர்களில் 96 தமிழறிஞர்கள் கூட்டம் தொடங்குவதற்கு முன்பே வந்திருந்தனர். ஒரே ஒரு தமிழறிஞர் மட்டும் வரவில்லை. அவர் "கடைமடை" என்ற ஊரைச் சார்ந்தவர். எல்லாரும் அவருக்காக வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தார்கள். சிறிதுநேரம் கழித்து கடைமடையைச் சார்ந்த அந்தத் தமிழறிஞர் அங்கு வந்து சேர்ந்தார். அவரைப் பார்த்ததும் மடத்தின் தலைவர், "வாருங்கள்! கடைமடையரே!" என்று அழைத்தார். இவருடைய பேச்சில் ஏதோ நக்கல் இருப்பதை அறிந்த கடைமடையைச் சார்ந்த தமிழறிஞர் அவரிடம், "நன்றி மடத்தலைவரே!" என்றார் இதைக் கேட்டுவிட்டுச் சுற்றியிருந்த தமிழ்றிஞர்கள் அனைவரும் சத்தமாகச் சிரித்துவிட்டார்கள்.

கண்ணதாசனும் இந்த வேடிக்கையான சம்பவத்தை அமெரிக்கத் தமிழ்ச்சங்கத்தில் சொன்னபொழுது, அங்கிருந்த அனைவரும் சத்தமாகச் சிரித்தார்கள்.

கண்ணதாசன் சொன்னக் கதையில் வரும் கடைமடையைச் சார்ந்த தமிழறிஞரை, மடத்தின்தலைவர் கேலி செய்ய நினைத்தபொழுது, கடைசியில் அவரும் கேலிக்கு உள்ளாக்கப்பட்டார். நற்செய்தியில் இயேசுவை, அவருடைய பேச்சில் சிக் வைக்க பரிசேயர்கள் அனுப்பிவைத்த ஏரோதியர்கள், அவரிடம் கேள்வியைக் கேட்கின்றபொழுது, முடிவில் அவர்கள் வாயடைத்து நிற்கின்றார்கள். இந்த நற்செய்திப் பகுதி நமக்கு என்ன செய்தியை எடுத்துச் சொல்கின்றது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசுவை வீழ்த்துவதற்காக ஓரணியில் திரண்ட பரிசேயர்களும் ஏரோதியர்களும்

கி.மு.63 ஆம் ஆண்டிலிருந்தே யூதர்கள், உரோமையர்களின் ஆளுகைக்குள் வந்தார்கள். உரோமையர்கள் தங்களை ஆட்சி செய்வதைப் பரிசேயர்கள் கொஞ்சம்கூட விரும்பவில்லை. காரணம், பரிசேயர்கள் கடவுள்தான் தங்களுக்குத் தலைவர், அரசர் என்ற எண்ணத்தில் இருந்தார்கள். அதனால் இவர்கள் உரோமையர்களுக்கு வரிசெலுத்துவதை (மறைமுகமாக) எதிர்த்தார்கள். இதற்கு முற்றிலும் மாறாக இருந்தவர்கள், ஏரோதியர்கள். இவர்கள் "எலும்புத் துண்டுபோல்" தங்களுக்குக் கிடைக்கும் பதவிக்கு ஆசைப்பட்டு, உரோமையர்களை ஆதரித்து வந்தார்கள். அதனால் அவர்கள் மக்களிடமிருந்து வரி வசூலிப்பதையும் ஆதரித்து வந்தார்கள்.

இப்படி இருவேறு கொள்கைகளையும் கொண்டவர்கள் ஒரு புள்ளியில் இணைந்துவந்தார்கள். ஆம், அவர்கள் இணைந்து வந்தததற்கு ஒரே காரணம், இயேசு என்ற பொதுஎதிரிதான். ஆம். இயேசுவை வீழ்த்துவதற்குத்தான் பரிசேயர்கள், ஒரு சிக்கலான கேள்வியோடு ஏரோதியர்களை அவரிடம் அனுப்பி வைக்கின்றார்கள்.

நாம் அனைவரும் ஆண்டவருக்கு உரியவர்கள்

"சீசருக்கு வரிசெலுத்துவது முறையா, இல்லையா?" என்ற கேள்வியோடு வந்த ஏரோதியர்களிடம் இயேசு உடனே பதில் சொல்லவில்லை. காரணம் சீசருக்குக் வரி செலுத்துவது முறைதான் என்று சொன்னால், பரிசேயர்கள் அதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு, தனக்கு எதிராகச் செயல்படுவார்கள் என்றும், சீசருக்கு வரி செலுத்துவது முறையில்லை என்று சொன்னால், அவனை ஆதரித்து வந்த ஏரோதியர்கள் தனக்கு எதிராகச் செயல்படுவார்கள் என்றும் இயேசுவுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. அதனால் இயேசு அவர்களிடம் ஒரு தெனாரியம் கொண்டு வாருங்கள் என்று சொல்லி, அதில் யாருடைய உருவமும் எழுத்தும் பொறிக்கப்பட்டுள்ளன என்று கேட்க, அவர்கள், "சீசருடையவை" என்று சொன்னதும், சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள் என்கின்றார்.

இயேசு ஏரோதியர்களுக்குக் கூறும் பதிலில் இரண்டு உண்மைகள் அடங்கியுள்ளன. ஒன்று, சீசருக்கு உரிவற்றைச் சீசருக்குக் கட்டாயம் கொடுத்தாக வேண்டும்; ஒருவேளை நாம் அவர்களுக்கு – அரசுக்குக்- கொடுக்காத பட்சத்தில், அதுவே பெரிய பிரச்சனையாக வரும் (உரோ 13: 1-7; 1திமொ 2: 1-6; 1 பேது 2: 13-17). அடுத்ததாக, கடவுளுக்கு உரியவற்றைக் கட்டாயம் கடவுளுக்குக் கொடுத்தாக வேண்டும். நாம் அனைவருமே கடவுளுக்கு உரியவர்கள். இதில் சீசரும் சரி, அதிகாரத்தில் இருக்கின்ற யாராக இருந்தாலும் சரி, அனைவருமே கடவுளுக்கு உரியவர்கள். ஆதலால், அனைவரும் கடவுளை முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் அன்பு செய்யவேண்டும். அதுதான் நாம் செய்யவேண்டிய தலையாய செயலாக இருக்கின்றது.

நாம், கடவுளுக்கு உரியவர்கள் என்பதை உணர்ந்தவர்களாய், அவரை முழுமையாக அன்பு செய்கின்றோமா? சிந்திப்போம்.

சிந்தனை

"நீங்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள்; அவரது அன்புக்குரிய இறைமக்கள்" (கொலோ 3: 12) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் அனைவரும் கடவுளின் அன்புக்குரிய மக்கள் என்ற உண்மையை உணர்ந்தவர்களாய், அவருக்கு உரிய வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
2பேதுரு 3: 12-15a, 17-18

"கட்டுப்பாடற்றவர்களின் தவறான வழிகளால் கவர்ந்திழுக்கப்படாதவாறு கவனமாயிருங்கள்"


நிகழ்வு

 மில்டன் என்றோர் இளைஞன் இருந்தான். இவன் ஒரு பன்னாட்டு நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்தான். இந்த மில்டனுக்குத் தவறான வழியில் செல்லக்கூடியவர்களோடு நட்பு இருந்தது. அதனால் அவர்கள்வழியாக இவன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானான். குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் இவன் தான் பணியாற்றி வந்த நிறுவனத்திலிருந்து கிடைக்கவிருந்த ஒரு முக்கியமான பொறுப்பினையும் இழந்தான். இதுபோன்று பலவற்றையும் இவன் தன்னுடைய குடிப்பழக்கத்தினால் இழந்தான். இதனால் இவன் குடிப்பழக்கத்திலிருந்து எப்படியாவது வெளியே வந்துவிடவேண்டும் என்று முயற்சி செய்தான். இவன் எவ்வளவுதான் குடிப்பழக்கத்திலிருந்து வெளியே வரவேண்டும் என்று முயற்சி செய்தபோதும் முடியவில்லை.

இப்படிப்பட்ட சூழலில் இவனுக்குத் தெரிந்த நண்பன் ஒருவன் இவனிடம், "நீ குடிப்பழக்கத்திலிருந்து வெளியே வரவேண்டும் என்றால், கடவுள்மீது நம்பிக்கைகொண்டு வாழத் தொடங்கு. அப்பொழுது உன்னால் குடிப்பழக்கத்திலிருந்து வெளியே வரமுடியும்" என்றான். இவனுக்குக் கடவுள்மீது நம்பிக்கை இல்லாததால், தன் நண்பன் சொன்னதை இவன் கண்டுகொள்ளவில்லை.

நாள்கள் வேகமான உருண்டோடத் தொடங்கின. இவனுக்கு இருந்த குடிப்பழக்கம் கொஞ்சம்கூட குறையவே இல்லை. இதனால் இவனுக்கு அறிமுகமான ஒருசிலர் இவனிடம், "நீ சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல், உனக்கு மரணம்தான்" என்று எச்சரித்தனர். இதனால் இவன் ஒரு வைத்தியசாலையில் தங்கி, சிகிச்சை பெற்றுவந்தான். அப்பொழுதும் இவனுக்கு அறிமுகமான ஒருவர் இவனிடம் வந்து, "நீ கடவுளிடம் நம்பிக்கை கொள். நிச்சயம் உன்னால் குடிப்பழக்கத்திலிருந்து வெளியே வரமுடியும்" என்று சொல்லிவிட்டுச் சென்றார். அதையும் இவன் கண்டுகொள்ளவில்லை.

இப்படியே நாள்கள் சென்றுகொண்டிருக்க, இவன் தனித்துவிடப்பட்டனைப் போன்று உணர்ந்தான். ஒருநாள் இவன் தனக்குக் கொடுக்கப்பட்ட அறையில் இருந்து, மிகுந்த வேதனையோடு, "இறைவா! நான் உன்னிடத்தில் நம்பிக்கை கொள்கின்றேன்; என்னுடைய வாழ்க்கைக்குப் புதிய வழியை காட்டும்" என்று கத்தினான். அப்பொழுது இவனுடைய உள்ளத்தில் புதிய ஒளி பிறந்ததைப் போன்று உணர்ந்தான். இதற்குப் பின்பு இவன் புதிய மனிதனாய் மாறினான்; விரைவிலேயே இவன் வைத்தியசாலையில் சிகிச்சையை முடித்துகொண்டு வெளியே வந்து, குடிக்கு அடிமையானோர் அதிலிருத்து வெளியே வர மறுவாழ்வு மையம் ஒன்றைத் தொடங்கினான்.

தன்னுடைய தவறான நண்பர்கள் மூலம் குடிப்பழக்கத்திற்கு அடிமையான மில்டன், ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்ட நம்பிக்கையினால் புதிய மனிதனாக வாழத் தொடங்கினான். இன்றைய முதல்வாசகத்தில் புனித பேதுரு, "கட்டுப்பாடற்றவர்களின் தவறான வழிகளால் கவர்ந்திழுக்கப்பட்டு, உங்கள உறுதி நிலையினின்று விழுந்து விடாதபடி கவனமாயிருங்கள்" என்கின்றார். புனித பேதுரு சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளின் பொருள் என்ன, இவ்வார்த்தைகள் எப்படிப்பட்ட சூழலில் எழுதப்பட்டன என்பன... குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

மாசற்றவர்களாய், நல்லுறவு கொண்டவர்களாய் இருப்போம்

கடவுளின் நாளைக் குறித்துப் பேசுகின்ற புனித பேதுரு, அந்நாளில் வானங்கள் எரிந்தழிந்து பஞ்சபூதங்கள் வெந்துருகிப் போகும்... புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகும் வரும் என்று சொல்லிவிட்டு, அவர் உங்களை மாசற்றவர்களாய், நல்லுறவு கொண்டவர்களாய்க் காணும் வகையில் முழு முயற்சி செய்யுங்கள் என்று குறிப்பிடுகின்றார்.

ஆம், கடவுள் தூயவராய் இருக்கின்றார் (லேவி 19: 2); நல்லுறவு விரும்புபவராகவும் இருக்கின்றார் (மத் 19: 19 -20). ஆகையால், அவர் வருகின்றபொழுது, நாம் மாசற்றவர்களாய், நல்லுறவோடு இருப்பதுதான் சாலச் சிறந்தது.

கவனமாய் இருப்போம்

கடவுள் வருகின்றபொழுது மாசற்றவராய், நல்லுறவோடு வாழ்பவராய் நாம் வாழவேண்டும் என்பதற்குப் புனித பேதுரு ஒரு வழிமுறையையும் சுட்டிக் காட்டிக்காட்டுகின்றார். அதைத்தான் நாம் இன்றைய முதல் வாசகத்தின் இறுதியில் இவ்வாறு வாசிக்கின்றோம்: "கட்டுப்பாடற்றவர்களின் தவறான வழிகளால் கவர்ந்திழுக்கப்பட்டு, உங்கள் உறுதியினின்று விழுந்து விடாதபடி கவனமாயிருங்கள்."

இன்றைக்கு நாம் மாசற்ற வழியில் நடந்தாலும், நம்மைச் சுற்றிலும் வாழக்கூடியவர்கள், குறிப்பாகக் கட்டுப்பாடின்றி வாழக்கூடியவர்கள் அலகையைப் போன்று நம்மைச் சோதிக்கக்கூடும். ஏனெனில் அலகை யாரை விழுங்கலாமென கர்சிக்கும் சிங்கபோலத் தேடித் திரிகிறது (1பேது 5:8). ஆகையால், நாம் அலகையின் சோதனைக்குள் விழுந்துவிடாமல் ஆண்டவர்மீதுகொண்ட நம்பிக்கையில் மிக உறுதியாக இருந்து மாசற்றவர்களாய், நல்லுறவு கொண்டவர்களாய் வாழவேண்டும். அதைத்தான் புனித பேதுரு தன்னுடைய இரண்டாம் திருமுகத்தின் வழியாக எடுத்துக் கூறுகின்றார்.

ஆகையால், நாம் ஆண்டவரின் நாளுக்காக மாசற்றவர்களாக, நல்லுறவோடு வாழ முயற்சி செய்வோம்.

சிந்தனை

"மாசற்ற வழியில் நடப்போர் பேறுபெற்றோர்" (திபா 119: 1) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நாம் ஆண்டவரை எதிர்கொள்ளும் விதமாக மாசற்றவர்களாய், நல்லுறவோடு இருப்பவர்களாய் வாழக் கற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
Free Blog Widget
Stats Counter
hit counter