maraikal
MUM
"

 
 
 
இளையோர்
 
 
 
 
 
 
 
 
 
 
 

திருவருகைக்காலம் முதல் வாரம்  -  30 நவம்பர் 2020, திங்கள்

முதல் வாசகம்

அறிவிக்கப்படாத ஒன்றுபற்றி அவர்கள் எவ்வாறு கேள்வியுறுவார்கள்? அனுப்பப்படாமல் அவர்கள் எவ்வாறு அறிவிப்பார்கள்?

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 10: 9-18

சகோதரர் சகோதரிகளே,

‘இயேசு ஆண்டவர்’ என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள். இவ்வாறு உள்ளூர நம்புவோர் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆவர்; வாயார அறிக்கையிடுவோர் மீட்புப் பெறுவர். ஏனெனில், “அவர்மீது நம்பிக்கை கொண்டோர் வெட்கத்திற்கு உள்ளாக மாட்டார்” என்பது மறைநூல் கூற்று. இதில் யூதர் என்றோ கிரேக்கர் என்றோ வேறுபாடில்லை; அனைவருக்கும் ஆண்டவர் ஒருவரே. அவரை நோக்கி மன்றாடும் யாவருக்கும் அவர் அளவற்ற நலன்களைப் பொழிகிறார். “ஆண்டவரின் திருப்பெயரை அறிக்கையிட்டு மன்றாடுகிறவர் எவரும் மீட்புப் பெறுவர்” என்று எழுதியுள்ளது அல்லவா?

ஆனால் அவர்மீது நம்பிக்கை கொண்டிருந்தாலன்றி, அவர்கள் எவ்வாறு அவரை நோக்கி மன்றாடுவார்கள்? தாங்கள் கேள்வியுறாத ஒருவர்மீது எவ்வாறு நம்பிக்கை கொள்வார்கள்? அறிவிக்கப்படாத ஒன்று பற்றி அவர்கள் எவ்வாறு கேள்வியுறுவார்கள்? அனுப்பப்படாமல் அவர்கள் எவ்வாறு அறிவிப்பார்கள்? இதைப் பற்றியே, “நற்செய்தி அறிவிப்போரின் பாதங்கள் எத்துணை அழகாய் இருக்கின்றன” என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆயினும் எல்லாருமே நற்செய்தியை ஏற்றுக்கொள்ளவில்லை.

இதைக் குறித்தே எசாயா, “ஆண்டவரே, நாங்கள் அறிவித்ததை நம்பியவர் யார்?” என்று முறையிடுகிறார். ஆகவே அறிவிப்பதைக் கேட்டால்தான் நம்பிக்கை உண்டாகும். கிறிஸ்துவைப் பற்றிய செய்தி அறிவிக்கப்பட்டால்தான் அதைக் கேட்க வாய்ப்புண்டு. அப்படியானால், அவர்கள் கேள்விப்படவில்லை என்று சொல்ல முடியுமோ? எப்படிச் சொல்ல முடியும்? ஏனெனில், “அவர்களது அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது; அவர்கள் கூறும் செய்தி உலகின் கடை எல்லை வரை எட்டுகின்றது.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 19: 1-2. 3-4ab . (பல்லவி: 4a)  Mp3

பல்லவி: படைப்புகளின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது.

1
வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது.
2
ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது; ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப் பற்றிய அறிவை வழங்குகின்றது. - பல்லவி

 
3
அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை; அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை.
4ab
ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது; அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லைவரை எட்டுகின்றது. - பல்லவி

 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 4: 19

அல்லேலூயா, அல்லேலூயா! என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

வலைகளை விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 18-22

அக்காலத்தில்

இயேசு கலிலேயக் கடலோரமாய் நடக்கும்போது, சகோதரர் இருவரைக் கண்டார். ஒருவர் பேதுரு எனப்படும் சீமோன், மற்றவர் அவர் சகோதரரான அந்திரேயா. மீனவரான அவ்விருவரும் கடலில் வலை வீசிக் கொண்டிருந்தனர்.

இயேசு அவர்களைப் பார்த்து, “என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்” என்றார்.

உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள். அங்கிருந்து அப்பால் சென்றபோது வேறு இரு சகோதரர்களைக் கண்டார். அவர்கள் செபதேயுவின் மகன் யாக்கோபும் அவர் சகோதரரான யோவானும் ஆவர். அவர்கள் தங்கள் தந்தை செபதேயுவுடன் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களையும் அழைத்தார்.

உடனே அவர்கள் தங்கள் படகையும் தந்தையையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

எசாயா 2: 1-5

“அவர் வழக்குகளைத் தீர்த்து வைப்பார்”


 

நிகழ்வு

சில ஆண்டுகளுக்கு முன்பாக இந்தோனேசியாவில் உள்ள ஒரு நீதிமன்றத்திற்கு வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கு மூதாட்டி ஒருவர் தோட்டக்காரர் ஒருவருடைய தோட்டத்திலிருந்து பழத்தைத் திருடியது தொடர்பானது. வழக்கை விசாரித்த நீதிபதி, மூதாட்டி தோட்டத்திலிருந்து தன் பேரனுக்காகப் பழத்தைத் திருடியது உண்மை என்று நிரூபணமானது.

அப்பொழுது நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டிருந்த மூதாட்டியை நோக்கி, “சட்டத்திற்கு முன்பாக எல்லாரும் சமம். அதற்கு முன்பு ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் கிடையாது. நீங்கள் தோட்டத்திலிருந்து பழம் திருடியது உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளதால், நீங்கள் அதற்குரிய அபராதத் தொகையாக ஒரு மில்லியன் ரூபியா (Rupiah – இந்தோனியாப் பணத்தின் பெயர்) செலுத்தவேண்டும். இதை மீறினால் நீங்கள் இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையை அனுபவிக்கவேண்டும்” என்று உத்தரவிட்டார்.

இதைக் கேட்டு அதிர்ந்து போன மூதாட்டி, “கையில் கொஞ்சம்கூட பணமில்லாமல்தான் பழத்தைத் திருடினேன். இப்பொழுது நீங்கள் ஓர் மில்லியன் ரூபியா செலுத்தவேண்டும் என்றால், அதற்கு நான் எங்கு போவது. மேலும் பணம் செலுத்த முடியாத பட்சத்தில் ஈராண்டுகள் நான் சிறையில் இருந்தால், என்னையே நம்பியிருக்கும் என் பேரனை யார் காப்பாற்றுவது?” என்று கண்ணீர் வடியச் சொன்னார். மூதாட்டியின் இவ்வார்த்தைகளால் தொடப்பட்ட நீதிபதி, “இந்த நீதிமன்றத்தில் உள்ள உங்கள் எல்லாரையும் பார்த்துச் சொல்கின்றேன்: இந்த மூதாட்டி பழத்தைத் திருடுவதற்கு ஒருவகையில் நாமும் காரணமாக இருக்கின்றோம். அதனால் நீதிமன்றம் இவருக்கு விதிக்கின்ற அபராதத் தொகையைச் செலுத்துவதும், இவருடைய வாழ்வாதாரத்திற்குத் தேவையானதைக் கொடுப்பதும் நம்முடைய கடமையாகும்” என்றார்.

இப்படிச் சொல்லிவிட்டு, அந்த நீதிபதி, “என் சார்பாக இந்த மூதாட்டிக்கு ஐம்பதாயிரம் ரூபியா கொடுக்கிறேன்” என்று தன்னிடமிருந்த ஐம்பதாயிரம் ரூபியாவை எடுத்து, அதைத் தான் அணிந்திருந்த தொப்பியில் போட்டுக் கொடுத்து, பின் தன்னுடைய உதவியாளரை அழைத்து, “இதை எல்லாரிடமும் கொண்டு போங்கள். எல்லாரும் தாங்கள் கொடுக்கவேண்டிய ஐம்பதாயிரம் பணத்தைக் கொடுப்பார்கள்” என்றார். நீதிபதியின் உதவியாளரும் நீதிபதி கொடுத்த தொப்பியை எல்லாரிடமும் கொண்டு சென்றார். நீதிமன்றத்தில் இருந்த எல்லாரும் அந்தத் தொப்பியில் ஐம்பதாயிரம் ரூபியாவை வைத்தார்கள், தோட்டக்காரர் உட்பட. இவ்வாறு சேர்ந்த தொகை மூன்றரை மில்லியன்.

நீதிபதி அதிலிருந்து ஒரு மில்லியன் பணத்தை மட்டும் எடுத்து, நீதிமன்றத்திற்குக் கட்டவேண்டிய அபராதத் தொகையாகக் கட்டிவிட்டு, மீதித் தொகையை மூதாட்டியின் வாழ்வாதாரமாக் கொடுத்தார். இந்த வழக்கின் முடிவு வெளிவந்தபொழுது, இந்தோனேசியா ஊடகங்கள் நீதிபதியின் மனிதாபிமானத்தை வெகுவாகப் பாராட்டின.

இந்த நிகழ்வில் வருகின்ற நீதிபதி ஒரு சாதாரண ஏழை மூதாட்டிக்கு மனிதாபிமானத்தோடு தீர்ப்பு வழங்கினார். இன்றைய முதல் வாசகத்தில், மெசியாவைக் குறித்துச் சொல்லும்பொழுது எசாயா இறைவாக்கினர், “அவர் வேற்றினத்தாரிடையே உள்ள வழக்குகளைத் தீர்த்து வைப்பார்” என்கின்றார். இவ்வார்த்தைகளைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

எல்லாருக்குமான கடவுள்

இன்று நாம் திருவருகைக் காலத்தைத் தொடங்கி இருக்கின்றோம். அதனால் இன்று நாம் வாசிக்கக்கேட்ட முதல் வாசகம், மெசியா வருகின்றபொழுது என்ன நடக்கும் என்பதை எடுத்துக் கூறுகின்றது.

அந்நாள்களில் ஆண்டவரின் கோயில் உள்ள மலை எல்லா மலைகளுக்கும் உயர்ந்த தாய் நிலை நிறுத்தப்படும்; வேற்றினத்தாரிடையே உள்ள வழக்குகளை அவர் தீர்த்து வைப்பார்; ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது என்று முதல் வாசகத்தில் நாம் வாசிக்கின்றோம். மெசியா வேற்றினத்தாரின் வழக்குகளைத் தீர்த்துவைப்பார் எனில், அவர் யூதருக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் பொதுவானவர் என்பது உண்மையாகின்றது. மேலும் ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது என்பது மெசியா வருகின்றபொழுது, எங்கும் அமைதியும் அன்பும் நல்லுறவும் பெருகும் என்பதும் உண்மையாகின்றது.

ஆம், மெசியாவாம் இயேசு எல்லாருக்கும் பொதுவானவர்; அவர் எல்லாரையும் அன்போடு நடக்கக்கூடியவர். அப்படிப்பட்டவரை நாம் நம்முடைய உள்ளத்திலும் இல்லத்திலும் ஏற்பதற்கு அவருக்கு உகந்த மக்களாக வாழ்வதே சிறந்தது.

சிந்தனை

‘அனைவருக்கும் ஆண்டவர் ஒருவரே. அவரை நோக்கி மன்றாடும் யாவருக்கும் அவர் அளவற்ற நலன்களைப் பொழிகிறார் (உரோ 10: 12) என்பார் புனித பவுல். ஆகையால், அனைவருக்கும் ஆண்டவராக இருக்கும் மெசியாவாம் இயேசுவை நாம் தகுந்த விதமாய் வரவேற்க, அவருக்கு உகந்தவர்கள் ஆவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
மத்தேயு 8: 5-11

“இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை”
 

நிகழ்வு

பாபூவா நியூ கினியாவில் (Papua New Guinea) நற்செய்திப் பணியாற்றி வந்த மறைப்பணியாளர் ஒருவர், அங்கிருந்த மக்கள் பேசும் மொழியில் திருவிவிலியத்தை மொழி பெயர்க்கும் பணியில் ஈடுபட்டார். திருவிவிலியத்தில் உள்ள எல்லாச் சொற்களுக்கும் அவர்களுடைய மொழியில் சரியான சொல் கிடைத்துவிட, நம்பிக்கை என்ற சொல்லுக்கு மட்டும், அவர்களுடைய மொழியில் சரியான சொல் கிடைக்கவில்லை. இதற்காக அவர் தீவிரமான தேடலில் ஈடுபட்டார்.

இந்நிலையில் அவருடைய பகுதியில் இருந்த கிறிஸ்தவர் ஒருவரின் குழந்தை ஒன்று இறந்துபோனது. அதற்கான அடக்கச் சடங்குகள் எல்லாம் முடிந்தபிறகு, அந்தக் குழந்தையைப் புதைப்பதற்காகக் குழி தோண்டிய பிற சமயத்தைச் சார்ந்த இளைஞன் ஒருவன், குழந்தை தந்தையிடம், “தொடக்கத்திலிருந்தே நான் உங்களைக் கவனித்து வருகின்றேன். நீங்கள் உங்கள் குழந்தை இறந்ததற்காக ஒரு சொட்டுக் கண்ணீர்கூட வடிக்கவில்லையே! ஏன்...?” என்றான். “நான் ஏன் என் குழந்தை இறந்ததற்காகக் கண்ணீர் விட்டு அழவேண்டும். என்னுடைய குழந்தை இப்பொழுது கடவுளோடு இருக்கின்றது. ஒருநாள் நானும் இறந்து, விண்ணகத்திற்குச் சென்று, அதைப் பார்ப்பேன் என்பதால்தான் நான் கண்ணீர் விட்டு அழாமல் இருக்கின்றேன்” என்று அமைந்த குரலில் சொன்னார் இறந்துபோன அந்தக் குழந்தையின் தந்தை.

இதற்கு அந்த இளைஞன், “இதை நான் ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கின்றேன், கிறிஸ்தவர்களாகிய நீங்கள் ‘அடிவானத்திற்கு அப்பாலும் பார்க்கக்கூடியவர்கள்’. உண்மையில் நீங்கள் மிகப்பெரியவர்கள்” என்று வியந்து பேசினான். இதைப் பக்கத்தில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த மறைப்பணியாளர், ‘நம்பிக்கை என்பதற்கு அடிவானத்திற்கு அப்பாலும் பார்த்தல் என்பது எவ்வளவு பொருத்தமான சொல் என்று நினைத்துக் கொண்டு, திருவிவிலியத்தில் எங்கெல்லாம் நம்பிக்கை என்ற சொல் வந்ததோ அங்கெல்லாம் ‘அடிவானத்திற்கு அப்பால் பார்த்தல்’ என்று மொழிபெயர்த்தார்.

நம்பிக்கை என்பதற்கு, அடிவானத்திற்கு அப்பாலும் பார்த்தல் என்பது எவ்வளவு பொருத்தமான மொழிபெயர்ப்பு! இந்த இடத்தில் ‘நம்பிக்கை என்பது கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை’ (எபி 11: 1) என்ற வார்த்தைகளையும் இணைத்துப் பார்த்தல் நல்லது. ஆம், நம்பிக்கை என்பது கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை. அது நம்மை அடிவானத்திற்கு அப்பால் உள்ளவற்றையும் பார்க்க வைக்கும்.

நற்செய்தி வாசகத்தில் நூற்றுவத் தலைவரின் உயர்ந்த நம்பிக்கையைக் குறித்து வாசிக்கின்றோம். அதைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

ஒரு வார்த்தை சொல்லும் என் பையன் நலமடைவான்

கலிலேயாக் கடலின் வடபகுதியில் இருந்த ஒரு வணிக நகர்தான் கப்பர்நாகும். இந்த நகரைச் சார்ந்தவகள்தான் பேதுரு, அந்திரேயா, யோவான், யாக்கோபு மற்றும் மத்தேயு. பிற இனத்தார் மிகுதியாக வாழ்ந்த இந்த நகருக்கு இயேசு வந்தபொழுது, அவரிடம் வருகின்ற நூற்றுவத் தலைவர், தன்னுடைய மகன் முடக்குவாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்துக் கிடப்பதாகச் சொல்கின்றார். அதற்கு இயேசு, “நான் வந்து அவனை நலமாக்குவேன்” என்று சொன்னதும், நூற்றுவத் தலைவர் தன்னுடைய தகுதியின்மையையும், அதே நேரத்தில் வல்லமையையும் உணர்ந்தவராய், “..... ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான்” என்கின்றார்.

லூக்கா நற்செய்தியில் நூற்றுவத் தலைவர் இயேசுவிடம் நேரடியாக வராமல், யூதரின் மூப்பர்களைத் தன் சார்பாக இயேசுவிடம் அனுப்பி வைப்பதாக நாம் வாசிப்போம் (லூக் 7: 3-4); ஆனால், மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தியில் அவரே இயேசுவிடம் நேரடியாக வருவதைக் குறித்து நாம் வாசிக்கின்றோம். மேலும் அவர், யூதர்கள் பிற இனத்தாரின் வீட்டிற்குள் நுழைவது தீட்டு என்பதையும் (யோவா 18: 28), இயேசு தன்னைவிட அதிகாரத்தில் உயர்ந்தவர் என்பதையும் உணர்ந்திருந்ததால் இயேசுவிடம், “ஒரு வார்த்தை சொல்லும் என் பையன் நலமடைவான்” என்கின்றார்.

நூற்றுவர் தலைவனின் வியக்க வைக்கும் நம்பிக்கை

பிற இனத்தாரும், அதிகாரத்தில் உள்ளவருமான நூற்றுவர் தலைவரிடமிருந்து நம்பிக்கை மிகுந்த வார்த்தைகள் வந்ததும், இயேசு அவருடைய நம்பிக்கையைக் கண்டு வியந்து, “இஸ்ரயேலர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை” என்று சொல்லிவிட்டு, “கிழக்கிலும் மேற்கிலும் பலர் வந்து, ஆபிரகாம்..... ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர்” என்கின்றார்.

யூதர்கள் விண்ணரசின் பந்தியில் தாங்கள் மட்டுமே இடம்பெறுவோம் என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள்; ஆனால், இயேசு நம்பிக்கை கொண்ட யாவரும், அது பிற இனத்தவராக இருந்தாலும், விண்ணரசின் பந்தியில் அமர்வர் என்கின்றார். இயேசுவின் வார்த்தைகள், விண்ணரசின் பந்தியில் அவர்மீது நம்பிக்கை கொண்ட எல்லாருக்கும் இடமுண்டு என்ற உண்மையை உணர்த்துகின்றன (எசா 49: 8-12, 59: 19; மலா 1:11; லூக் 13: 28,29).

எனவே, நாம் நூற்றுவத் தலைவரைப் போன்று இயேசுவின்மீது ஆழமான நம்பிக்கை கொண்டு விண்ணரசின் பந்தியில் பங்குபெறும் பேறு பெறுவோம்.

சிந்தனை

‘ஆண்டவரிடம் நம்பிக்கை கொள்’ (சீஞா 11: 21) என்கின்றது சீராக்கின் ஞான நூல். ஆகையால், நாம் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டு, இறையருளை நிறைவாகப் பெறுவோம்


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
Free Blog Widget
Stats Counter
hit counter