maraikal
MUM
"

 
 
 
இளையோர்
 
 
 
 
 
 
 
 
 
 
 

பொதுக்காலம் 33 ஆம் வாரம்  15-11-2020

திறமை வாய்ந்த பெண், தன் வேலை அனைத்தையும் விருப்புடன் தானே செய்வாள்.

ீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 31: 10-13, 19-20, 30-31

திறமை வாய்ந்த மனத்திடமுள்ள மனையாளைக் காண்பது மிக மிக அரிது; அவள் பவளத்தை விடப் பெருமதிப்புள்ளவள். அவளுடைய கணவன் அவளை மனமார நம்புகிறான்; அவளால் அவனுக்கு நலமும் வளமும் பெருகும். அவள் தன் வாழ்நாள் முழுவதும் அவனுக்கு நல்லதையே செய்வாள்; ஒருநாளும் தீங்கு நினையாள். கம்பளி, சணல் ஆகிய பொருள்களைத் தானே தேடிக் கொணர்வாள்; தன் வேலை அனைத்தையும் விருப்புடன் தானே செய்வாள்.

இராட்டினத்தைத் தானே பிடித்து வேலை செய்வாள்; நூல் இழைகளைத் தன் விரல்களால் திரிப்பாள். எளியவனுக்கு உதவி செய்யத் தன் கையை நீட்டுவாள். வறியவனுக்கு வயிறார உணவளிப்பாள்.

எழில் ஏமாற்றும், அழகு அற்றுப் போகும்; ஆண்டவரிடம் அச்சம் கொண்டுள்ள பெண்ணே புகழத்தக்கவள். அவளுடைய செயல்களின் நற்பயனை எண்ணி அவளை வாழ்த்துங்கள்; அவளது உழைப்பை மக்கள் மன்றம் பாராட்டுவதாக.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 128: 1-2. 3. 4-5 . (பல்லவி: 1) Mp3

பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழி நடப்போர் பேறுபெற்றோர்!
1
ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்!
2
உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்! - பல்லவி

3
உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். - பல்லவி

4
ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார்.
5
ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ்நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! - பல்லவி

இரண்டாம் வாசகம்


திருடன் இரவில் வருவதுபோல, ஆண்டவருடைய நாள் வரும் என்பதை நீங்களே திண்ணமாய்த் தெரிந்திருக்கிறீர்கள்.

திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-6

சகோதரர் சகோதரிகளே,

காலங்களையும் நேரங்களையும் குறித்து உங்களுக்கு எழுதத் தேவையில்லை. ஏனெனில் திருடன் இரவில் வருவது போல, ஆண்டவருடைய நாள் வரும் என்பதை நீங்களே திண்ணமாய்த் தெரிந்திருக்கிறீர்கள்.

‘எங்கும் அமைதி, ஆபத்து இல்லை’ என்று மக்கள் கூறிக்கொண்டிருக்கும் பொழுது, கருவுற்றிருப்பவருக்கு வேதனை வருவது போல, திடீரென அவர்களுக்கு அழிவு வரும்; யாரும் தப்பித்துக்கொள்ள இயலாது. ஆனால் அன்பர்களே! நீங்கள் இருளில் நடப்பவர்களல்ல; ஆகவே அந்த நாள் திருடனைப் போல் உங்களுக்கு வராது. நீங்கள் எல்லாரும் ஒளியைச் சார்ந்தவர்கள்; பகலில் நடப்பவர்கள். நாம் இரவையோ இருளையோ சார்ந்தவரல்ல.

ஆகவே மற்றவர்களைப் போல் நாமும் உறங்கலாகாது; விழிப்போடும் அறிவுத் தெளிவோடும் இருப்போம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 15: 4a, 5b

அல்லேலூயா, அல்லேலூயா! நான் உங்களோடு இணைந்து இருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 14-30

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்குக் கூறிய உவமை: விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாகவும் விளக்கலாம்: நெடும் பயணம் செல்ல இருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார். அவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்தும் வேறொருவருக்கு இரண்டு தாலந்தும், இன்னொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார். ஐந்து தாலந்தைப் பெற்றவர் போய் அவற்றைக் கொண்டு வாணிகம் செய்து வேறு ஐந்து தாலந்து ஈட்டினார். அவ்வாறே இரண்டு தாலந்து பெற்றவர் மேலும் இரண்டு தாலந்து ஈட்டினார். ஒரு தாலந்து பெற்றவரோ போய் நிலத்தைத் தோண்டித் தம் தலைவரின் பணத்தைப் புதைத்து வைத்தார்.

நெடுங்காலத்திற்குப் பின் அந்தப் பணியாளர்களின் தலைவர் வந்து அவர்களிடம் கணக்குக் கேட்டார்.

ஐந்து தாலந்து பெற்றவர் அவரை அணுகி, வேறு ஐந்து தாலந்தைக் கொண்டு வந்து, ‘ஐயா, ஐந்து தாலந்தை என்னிடம் ஒப்படைத்தீர்; இதோ பாரும், இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன்’ என்றார். அதற்கு அவருடைய தலைவர் அவரிடம், ‘நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன், உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்’ என்றார்.

இரண்டு தாலந்து பெற்றவரும் அவரை அணுகி, ‘ஐயா, நீர் என்னிடம் இரண்டு தாலந்து ஒப்படைத்தீர். இதோ பாரும், வேறு இரண்டு தாலந்து ஈட்டியுள்ளேன்’ என்றார். அவருடைய தலைவர் அவரிடம், ‘நன்று. நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்’ என்றார்.

ஒரு தாலந்தைப் பெற்றுக்கொண்டவரும் அவரை அணுகி, ‘ஐயா, நீர் கடின உள்ளத்தினர்; நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர்; நீர் தூவாத இடத்திலும் விளைச்சலைச் சேகரிப்பவர் என்பதை அறிவேன். உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன். இதோ, பாரும், உம்முடையது’ என்றார்.

அதற்கு அவருடைய தலைவர், ‘சோம்பேறியே! பொல்லாத பணியாளனே, நான் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவன். நான் தூவாத இடத்திலும் போய்ச் சேகரிப்பவன் என்பது உனக்குத் தெரிந்திருந்தது அல்லவா? அப்படியானால் என் பணத்தை நீ வட்டிக் கடையில் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் வரும்போது எனக்கு வரவேண்டியதை வட்டியோடு திரும்பப் பெற்றிருப்பேன்’ என்று கூறினார். ‘எனவே அந்தத் தாலந்தை அவனிடமிருந்து எடுத்து பத்துத் தாலந்து உடையவரிடம் கொடுங்கள். ஏனெனில் உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும். பயனற்ற இந்தப் பணியாளைப் புறம்பேயுள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்’ என்று அவர் கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது குறுகிய வாசகம


சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 14-15, 19-20

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்குக் கூறிய உவமை: விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாகவும் விளக்கலாம்: நெடும் பயணம் செல்ல இருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார். அவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்தும் வேறொருவருக்கு இரண்டு தாலந்தும், இன்னொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார். ஐந்து தாலந்தைப் பெற்றவர் போய் அவற்றைக் கொண்டு வாணிகம் செய்து வேறு ஐந்து தாலந்து ஈட்டினார். அவ்வாறே இரண்டு தாலந்து பெற்றவர் மேலும் இரண்டு தாலந்து ஈட்டினார். ஒரு தாலந்து பெற்றவரோ போய் நிலத்தைத் தோண்டித் தம் தலைவரின் பணத்தைப் புதைத்து வைத்தார்.

நெடுங்காலத்திற்குப் பின் அந்தப் பணியாளர்களின் தலைவர் வந்து அவர்களிடம் கணக்குக் கேட்டார்.

ஐந்து தாலந்து பெற்றவர் அவரை அணுகி, வேறு ஐந்து தாலந்தைக் கொண்டு வந்து, ‘ஐயா, ஐந்து தாலந்தை என்னிடம் ஒப்படைத்தீர்; இதோ பாரும், இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன்’ என்றார். அதற்கு அவருடைய தலைவர் அவரிடம், ‘நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன், உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்’ என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

I நீதிமொழிகள் 31: 10-13, 19-20, 30-31
II 1 தெசலோனிக்கர் 5: 1-6
III மத்தேயு 25: 14-30

கடின உழைப்புக்கு மாற்று இல்லை


நிகழ்வு

ஜோ, மிக வேகமாக ஓடக்கூடியவன். இவன் அருகிலிருந்த அரசினர் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்புப் படித்து வந்தான். இவன் படித்து வந்த பள்ளியில் ஒவ்வோர் ஆண்டும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். அதில் ஓர் அங்கமாக இருக்கும் ஓட்டப்பந்தயப் போட்டியில் இவன்தான் தொடர்ந்து முதல் பரிசு பெற்று வந்தான்.

அந்த ஆண்டும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவதற்கான நாள் நெருங்கி வந்தது. ஆனால், இவன் பயிற்சி எதுவும் செய்யாமல் சும்மா இருந்தான். இதைப் பார்த்துவிட்டு, இவனுடைய தாய், “இந்த ஆண்டு பள்ளியில் நடைபெறுகின்ற விளையாட்டுப் போட்டியில் நீ கலந்துகொள்கின்றாய்தானே! உன்னைப் பார்க்கும்பொழுது போட்டியில் கலந்துகொள்ளாதவன் போல் இருக்கின்றது” என்றார். இதற்கு ஜோ, “அம்மா! எங்களுடைய பள்ளியில் நடைபெறும் ஓட்டப் பந்தயப் போட்டியில் என்னை வெல்வதற்கு யாருமில்லை. போட்டியில் எப்படியும் நான்தான் முதலில் வருவேன். பிறகு எதற்குத் தேவையில்லாமல் பயிற்சி எடுக்கவேண்டும் என்றுதான் இப்படி இருக்கின்றேன்” என்று மிகவும் சாதாரணமாகச் சொன்னான்.

“மகனே! நீ ஓடுவதில் திறமைசாலியாக இருக்கலாம்; ஆனால், தொடர் பயிற்சிகளை மேற்கொள்ளா விட்டால், உன்னால் போட்டியில் வெற்றிபெற முடியாது. அதனால் முறையான பயிற்சிகளை மேற்கோள்” என்று ஜோவின் தாய் அவனை எச்சரித்தார். அப்பொழுதும்கூட ஜோ பயிற்சி எடுக்கவில்லை.

இதற்கு நடுவில் ஜோவோடு படித்து வந்த ஜோவின் வகுப்புத் தோழன் அன்பு முறையான பயிற்சிகளை மேற்கொண்டு வந்தான். அவன் ஜோ அளவுக்கு வேகமாக ஓடாதவன் என்றாலும் அந்த ஆண்டு நடைபெறவிருந்த ஓட்டப் பந்தயத்தில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பதற்காகக் கடுமையாக உழைத்து, முறையான பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். போட்டி நாள் வந்தது. ஓட்டப் பந்தயப் போட்டியில் கலந்துகொண்ட யாவரும் வரிசையில் வந்து நின்றுகொண்டு விசிலுக்காகக் காத்திருந்தார்கள். சிறிதுநேரத்தில் விசில் ஊதப்பட்டது. போட்டியில் கலந்துகொண்ட யாவரும் இலக்கை நோக்கிப் பாய்ந்து ஓடினார்கள். ஜோ எப்பொழுதும் போல் எல்லாரையும் விட முன்னால் வேகமாக ஓடினான். ஜோ தான் வெற்றி பெறப்போகிறான் என்று எல்லாரும் நினைத்துக்கொண்டிருந்த, அவனுக்குப் பின்னால் வேகமாக ஓடிவந்த அன்பு என்ற மாணவன் அவனை முந்தி, போட்டியில் முதல் பரிசைத் தட்டிச் சென்றான்.

எல்லாவற்றையும் ஓரமாக இருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஜோவின் தாய், அன்புவிடம் சென்று, “உன்னுடைய கடின உழைப்பே உனக்குப் போட்டியில் வெற்றியைத் தந்திருக்கின்றது. வாழ்த்துகள்” என்றார். பின்னர் அவர் தன் மகன் ஜோவோடு வீட்டிற்குத் திரும்பிய வரும்பொழுது அவனிடம், “நீ முறையான பயிற்சிகளை மேற்கொள்ளாததால் உனக்கு இப்படி ஆகிவிட்டது” என்று சொல்லி அவனைக் கடிந்து கொண்டார்.

கடவுள் ஒருவருக்குக் கொடுத்திருக்கும் தாலந்தை அவர் எப்படிப் பயன்படுத்துகின்றார் என்பதைப் பொறுத்தே, அவருடைய உயர்வும் தாழ்வும் இருக்கின்றன என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. பொதுக்காலம் முப்பத்து மூன்றாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக் கேட்ட இறைவார்த்தையும்கூட நமக்கு இதே செய்தியைத்தான் எடுத்துக்கூறுகின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

ஒவ்வொருவரையும் தாலந்துகளால் நிரப்பியிருக்கும் இறைவன்

பொதுக்காலத்தின் கடைசி ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தியில், இயேசு விண்ணரசைத் தாலந்துக்கு ஒப்பிடுகின்றார். இந்த உவமையில் வருகின்ற தலைவர் தன் பணியாளர்களிடம் அவரவர் திறமைக்கு ஏற்ப முறையே ஐந்து, இரண்டு, ஒன்று தாலந்துகளைக் கொடுக்கின்றார். இதன்மூலம் கடவுள் ஒவ்வொருவரையும் தாலந்துகளால் - கொடைகளால் – நிரம்புகின்றார் என்று சொல்லலாம். ஒரு தாலந்து என்பது இன்றைய உரூபாய் மதிப்பில் ஒருகோடிக்கும் மேலிருக்கும். இவ்வளவு பெரிய தொகையை – கொடையை - ஒருவருக்குக் கடவுள் அளிக்கின்றார். இவ்வாறு கடவுள், நான் ஒவ்வொருவருக்கும் கொடுத்திருக்கும் தாலந்துகள் வேண்டுமானால் வேறு வேறாக இருக்கலாம் (1 கொரி 12: 4-11); ஆனால், நான் யாரையும் திறமையில்லாமல் படைக்கவில்லை என்பதைச் சொல்லாமல் சொல்கின்றார்.

தாலந்துகளை நன்முறையில் பயன்படுத்துவோருக்கு ஆசி

நெடும்பயணம் மேற்கொண்டிருந்த தலைவர் திரும்பி வரும்பொழுது, தன்னிடமிருந்து தாலந்தைப் பெற்றவர்களிடமிருந்து கணக்குக் கேட்கின்றார். இது, இயேசு மீண்டுமாக வருகின்றபொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கேற்பக் கைம்மாறு அளிப்பார் என்ற உண்மையை உணர்த்துவதாக இருக்கின்றது. தலைவரிடம் முறையே ஐந்து, இரண்டு தாலந்துகளைப் பெற்றவர்கள், மேலும் ஐந்து, இரண்டு தாலந்துகளோடு வருகின்றார்கள். இதனால் தலைவர் அவர்கள் இருவரையும் பெரிய பொறுப்பில் அமர்த்துகின்றார். ஆம், எவர் ஒருவர் தனக்குக் கொடுக்கப்பட்ட தாலந்துகளைத் தன்னுடைய கடின உழைப்பின் மூலமும், இன்றைய முதல் வாசகத்தில் புனித பவுல் சொல்வதுபோன்று விழிப்போடும் அறிவுத் தெளிவோடும் பெருக்குகின்றார்களோ, அவர்களுக்குக் கடவுளின் ஆசி அபரிமிதமாகக் கிடைக்கும். அந்த ஆசியானது நாம் ஓய்ந்திருப்பதற்கான ஆசி அல்ல, மாறாக, நம்மிடம் கொடுக்கப்பட்ட கூடதலான பொறுப்புகளை இன்னும் சிறப்பாகச் செய்வதற்கான ஆசி.

தாலந்தைப் பயன்படுத்தாருக்குத் தண்டனை

தலைவரிடம் வருகின்ற முதல் இரண்டு பணியாளர்களும் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட தாலந்துகளைப் பெருக்கிக்கொண்டு வருகின்றபொழுது, கடைசியில் வருகின்ற பணியாளர் அப்படியே அதைக் கொண்டு வருகின்றார். இதனால் தலைவர் அந்தப் பொல்லாத பணியாளனை இருளில் தள்ளுகின்றார்.

கடவுளின் விரும்பமெல்லாம் நாம் மிகுந்த கனிதரவேண்டும் என்பதுதானே தவிர (யோவா 15: 8), கனிகொடாமல் இருப்பது கிடையாது. அப்படிக் கனிகொடாமல் இருப்பவர் தக்க தண்டனையைத்தான் பெறுவர். ஆதலால், நாம் ஒவ்வொருவரும் கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் தாலந்தை கடின உழைப்பின் மூலமும், விழிப்போடும் அறிவுத் தெளிவோடும் பெருக்க முயற்சி செய்வோம். நீதிமொழிகள் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், திறமை வாய்ந்த மனத்திடமுள்ள மனையாள் பவளத்தைவிட மதிப்பு மிக்கவள் என்கின்றது. இது மனையாளுக்கு மட்டுமல்ல, கடின உழைப்பு, விழிப்பு, அறிவுத் தெளிவு ஆகியவற்றைக் கொண்டு திறமையோடு செயல்படும் ஒவ்வொருவருக்கும் பொருந்தும்.

ஆகையால், நாம் பவளத்தை விட மதிப்பு மிக்கவர்களாய்த் திகழ, நமக்குக் கொடுக்கப்பட்ட தாலந்துகளைக் கடினமாக உழைத்துப் பெருக்கிக் கடவுளுக்குப் பெருமை சேர்ப்போம்.

சிந்தனை

‘கடின உழைப்புக்கு மாற்று இல்லை’ என்பார் மிகப்பெரிய கண்டுபிடிப்பாளரான தாமஸ் ஆல்வா எடிசன். ஆகையால், கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் தாலந்தை, திறமையைக் கடினமாக உழைத்துப் பெருக்குவோம்; அதைப் பலருக்கும் பயனுள்ள விதமாய்ப் பயன்படுத்திக் கடவுளுக்குப் பெருமை சேர்ப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
 
Free Blog Widget
Stats Counter
hit counter