maraikal
MUM
"

 
 
 
இளையோர்
 
 
 
 
 
 
 
 
 
 
 

பொதுக்காலம் 31 ஆம் வாரம்  08-11-2020

முதல் வாசகம்

ஞானத்தைத் தேடுவோர், அதைக் கண்டடைவர்.

சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 6: 12-16

ஞானம் ஒளிமிக்கது; மங்காதது. அதன்பால் அன்புகூர்வோர் அதை எளிதில் கண்டுகொள்வர்; அதைத் தேடுவோர் கண்டடைவர். தன்னை நாடுவோர்க்கு அது தன்னையே விரைந்து வெளிப்படுத்தும்.

வைகறையில் அதைத் தேடுவோர் தளர்ச்சி அடைய மாட்டார்கள்; ஏனெனில் தம் கதவு அருகில் அது அமர்ந்திருப்பதை அவர்கள் காண்பார்கள். அதன்மீது மனத்தைச் செலுத்துவதே ஞானத்தின் நிறைவு. அதன் பொருட்டு விழிப்பாய் இருப்போர், கவலையிலிருந்து விரைவில் விடுபடுவர்.

தனக்குத் தகுதியுள்ளவர்களை ஞானம் தேடிச் செல்கிறது; அவர்களுடைய வழியில் கனிவுடன் தன்னையே காட்டுகிறது; அவர்களின் ஒவ்வொரு நினைவிலும் அது அவர்களை எதிர்கொள்கிறது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 63: 1. 2-3. 4-5. 6-7 . (பல்லவி: 1b) Mp3

பல்லவி: என் இறைவா! என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது.
1
கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்; என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது; நீரின்றி வறண்ட தரிசு நிலம் போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது. - பல்லவி

2
உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன்.
3
ஏனெனில், உமது பேரன்பு உயிரினும் மேலானது; என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன. - பல்லவி

4
என் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்; கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன்.
5
அறுசுவை விருந்தில் நிறைவடைவதுபோல என் உயிர் நிறைவடையும்; என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால் உம்மைப் போற்றும். - பல்லவி

6
நான் படுத்திருக்கையில் உம்மை நினைப்பேன்; இரா விழிப்புகளில் உம்மைப் பற்றியே ஆழ்ந்து சிந்திப்பேன்.
7
ஏனெனில், நீர் எனக்குத் துணையாய் இருந்தீர்; உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகின்றேன். - பல்லவி

இரண்டாம் வாசகம்

இயேசுவோடு இணைந்த நிலையில் இறந்தோரைக் கடவுள் அவருடன் அழைத்து வருவார்.

திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 13-18

சகோதரர் சகோதரிகளே, இறந்தோரைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்; எதிர்நோக்கு இல்லாத மற்றவர்களைப் போல் நீங்களும் துயருறக் கூடாது. இயேசு இறந்து உயிர்த்தெழுந்தார் என நாம் நம்புகிறோம். அப்படியானால், இயேசுவோடு இணைந்த நிலையில் இறந்தோரைக் கடவுள் அவருடன் அழைத்து வருவார். ஆண்டவருடைய வார்த்தையின் அடிப்படையில் நாங்கள் உங்களுக்குக் கூறுவது இதுவே: ஆண்டவர் வரும்வரை உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், இறந்தோரை முந்திவிட மாட்டோம்.

கட்டளை பிறக்க, தலைமை வானதூதரின் குரல் ஒலிக்க, கடவுளுடைய எக்காளம் முழங்க, ஆண்டவர் வானினின்று இறங்கி வருவார்; அப்பொழுது, கிறிஸ்து மீது நம்பிக்கை கொண்ட நிலையில் இறந்தவர்கள் முதலில் உயிர்த்தெழுவர். பின்னர் உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், அவர்களோடு மேகங்களில் எடுத்துக்கொண்டுபோகப்பட்டு, வான் வெளியில் ஆண்டவரை எதிர்கொள்ளச் செல்வோம். இவ்வாறு எப்போதும் நாம் ஆண்டவரோடு இருப்போம். எனவே, இவ்வார்த்தைகளைச் சொல்லி ஒருவரை ஒருவர் தேற்றிக்கொள்ளுங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 24: 42a, 44

அல்லேலூயா, அல்லேலூயா! விழிப்பாய் இருங்கள்; ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


விழிப்பாய் இருங்கள்; ஏனெனில் மானிடமகன் வரும் நாளோ, வேளையோ உங்களுக்குத் தெரியாது.


✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 1-13


இயேசு தம் சீடர்களுக்குச் சொன்ன உவமையாவது: “விண்ணரசு எவ்வாறு இருக்கும் என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாக விளக்கலாம்: மணமகனை எதிர்கொள்ள மணமகளின் தோழியர் பத்துப் பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுள் ஐந்து பேர் அறிவிலிகள்; ஐந்து பேர் முன்மதி உடையவர்கள். அறிவிலிகள் ஐவரும் தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால் தங்களோடு எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை. முன்மதியுடையோர் தங்கள் விளக்குகளுடன் கலங்களில் எண்ணெயும் எடுத்துச் சென்றனர். மணமகன் வரக் காலந் தாழ்த்தவே அனைவரும் தூக்க மயக்கத்தால் உறங்கிவிட்டனர்.

நள்ளிரவில், ‘இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்’ என்ற உரத்த குரல் ஒலித்தது. மணமகளின் தோழியர் எல்லாரும் எழுந்து தங்கள் விளக்குகளை ஒழுங்குபடுத்தினர். அப்போது அறிவிலிகள் முன்மதியுடையோரைப் பார்த்து, ‘எங்கள் விளக்குகள் அணைந்து கொண்டிருக்கின்றன; உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள்’ என்றார்கள். முன்மதியுடையவர்கள் மறுமொழியாக, ‘உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம். எனவே, வணிகரிடம் போய் நீங்களே வாங்கிக் கொள்வதுதான் நல்லது’ என்றார்கள்.

அவர்களும் வாங்கப் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது மணமகன் வந்துவிட்டார். ஆயத்தமாய் இருந்தவர்கள் அவரோடு திருமண மண்டபத்துக்குள் புகுந்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது. பிறகு மற்றத் தோழிகளும் வந்து, ‘ஐயா, ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும்’ என்றார்கள். அவர் மறுமொழியாக, ‘உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; எனக்கு உங்களைத் தெரியாது’ என்றார். எனவே விழிப்பாய் இருங்கள்; ஏனெனில் அவர் வரும் நாளோ, வேளையோ உங்களுக்குத் தெரியாது.”

ஆண்டவரின் அருள்வாக்கு.
I சாலமோனின் ஞானம் 6: 12-16
II 1 தெசலோனிக்கர் 4: 13-18
III மத்தேயு 25: 1-13

 
உள்ளே...! வெளியே...!

நிகழ்வு

மீன் பிரியர் ஒருவர் இருந்தார். இவர் பகல் உணவோ இரவு உணவோ உண்ணும்பொழுது, தன் மேசையில் மீன் இல்லாமல் உண்ணவே மாட்டார். அதற்காகவே, இவர் தன்னுடைய பண்ணைவீட்டில் குளம் ஒன்றை அமைத்து, அதில் மீன்களை வளர்த்து வந்தார்.

ஒருநாள் இவர் அமைத்திருந்த மீன்குளத்தில் தாமரை மலர் ஒன்று மலர்ந்திருந்தது. அதைப் பார்த்ததும் இவருக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. ஏனென்றால், இவருக்குத் தாமரை மலர் பிடிக்கும். ஆனாலும் தாமரைச் செடி மெல்ல வளர்ந்து, குளத்தை நிறைத்துவிட்டால், அது தான் வளர்க்கும் மீன்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று இவர் எண்ணினார். இதனால் இவர் தனக்கு மீன் குளத்தை அமைத்துத் தந்தவரிடம் “குளத்தில் வளர்ந்திருக்கும் தாமரைச் செடியை அகற்றலாமா? வேண்டாமா?” என்றார். அவரோ, “மீன் குளத்தில் தாமரைச் செடி வளர்வது பிரச்சனை இல்லைதான்; ஆனால், அதை இரண்டு ஆண்டுகளுக்குள் அகற்றிவிடவேண்டும். இல்லையென்றால், அது அப்படியே வளர்ந்து ஒரு கட்டத்தில் குளத்தையே நிறைத்து, குளத்தில் இருக்கும் மீன்களைச் சாகடித்துவிடும்” என்றார்.

அந்த மனிதர் சொன்னதற்குச் சரியென்று சொல்லிவிட்டு, குளத்திலிருந்து கிடைத்த மீன்களை உண்டு, அதில் வளர்ந்து வந்த தாமரை மலர்களை இவர் இரசித்துக்கொண்டே வந்தார். நாள்கள் வேகமாக உருண்டோடத் தொடங்கியபொழுது, மீன் குளத்தில் தாமரைச் செடிகளின் எண்ணிக்கை பெருகியது. ஓராண்டிற்குள் தாமரைச் செடிகள் பாதிக் குளத்தை நிறைத்திருந்தன. இதைப் பார்த்துவிட்டு இவர், ‘தாமரைச் செடிகள் பாதிக் குளத்தைத்தானே நிறைத்திருக்கின்றன! இன்னும் ஓராண்டு இருக்கின்றதல்லவா...! அதற்குள் இவற்றையெல்லாம் அகற்றிவிடலாம்” என்று நினைத்துகொண்டார்.

இரண்டாமாண்டு முடியப் போகும் கடைசி நாள் வந்தது. அன்றைக்கு இவர் மீன் குளத்தைப் பார்த்தபொழுது, கடந்த ஆண்டு இருந்த தாமரைச் செடிகள்தான் அப்படியே இருந்தன. இதனால் இவர் ‘நாளைய நாளில் குளத்தில் இருக்கும் தாமரைச் செடிகளை வெட்டிக்கொள்ளலாம்’ என்று நினைத்துக்கொண்டுத் தூங்கப் போனார். மறுநாள் காலையில் இவர் மீன் குளத்தைப் பார்த்தபொழுது, குளம் முழுவதும் தாமரைச் செடிகள் நிறைந்து, அதில் இருந்த மீன்களெல்லாம் செத்து மிதந்துகொண்டிருந்தன. அக்காட்சியைக் கண்டு இவர், “இந்தக் மீன்குளத்தை அமைத்துத் தந்தவர் சொன்னதுபோன்று, இந்தக் குளத்தில் இருந்த தாமரைச் செடிகளை இரண்டு ஆண்டுகளுக்குள்ளே அகற்றியிருந்தால், இப்படியெல்லாம் தடந்திருக்காதே! என்று தன்னையே நொந்துகொண்டார்.

இந்த மனிதரைப் போன்றுதான் பலர் தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் முன்மதியில்லாமல் நடந்து, பலவற்றையும் இழந்து நிற்கின்றார்கள். இத்தகைய சூழ்நிலையில் பொதுக்காலம் முப்பத்து இரண்டாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை முன்மதியோடு நடந்துகொள்கின்ற ஒருவர் விண்ணரசில் பங்குபெறுவார் என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றது. அதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

மணமகனும் பத்துத் தோழியரும்

ஏறக்குறைய நாம் பொதுக்காலத்தின் நிறைவுப் பகுதியை அடைந்திருக்கின்றோம். அதனால் நாம் வாசிக்கின்ற இறைவாக்குப் பகுதிகள் மானிட மகனுடைய வருகையைப் பற்றியும், அவருடைய வருகைக்காக நாம் எப்படியெல்லாம் தயாராய் இருப்பது பற்றியும் எடுத்துக் கூறுபவையாக இருக்கின்றன. அந்த அடிப்படையில் இன்று நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தி வாசகமும் நமக்கு இதே செய்தியைத்தான் எடுத்துச் சொல்கின்றது. இன்றைய நற்செய்தியில் இயேசு விண்ணரசை மணமகனை எதிர்கொள்ளும் பத்துத் தோழியருக்குக் ஒப்பிடுகின்றனர். இந்த உவமையில் வருகின்ற மணமகன் - இயேசு; பத்துத் தோழியர் – அவர்களுடைய சீடர்களாகிய நாம்.

இயேசு தன்னுடைய போதனையில், தன்னை மணமகன் என்றே குறிப்பிடுவார் (மத் 9: 15, 22: 1-14) இதன்மூலம் இயேசு சொல்லும் உவமையில் வரும் மணமகன் அவரே என்று சொல்லலாம். அதே உவமையில் வருகின்ற பத்துத் தோழியரில் ஐவர் அறிவிலிகளாகவும், ஐவர் முன்மதியுடைவர்களாகவும் இருக்கின்றார்கள். இவர்களுடைய செயல்பாடு எப்படி இவர்களை திருமண மண்டபத்திற்குள் அல்லது விண்ணரசுக்குள் அனுமதிக்கின்றது/மறுக்கின்றது என்று பார்ப்போம்.

எதிர்நோக்கு இல்லாமல் வெளியே இருப்பவர்கள்

இன்றைய நற்செய்தியில், இயேசு சொல்லும் பத்துத்தோழியர் உவமையில் வரும் மணமகளின் ஐந்து தோழியர் அல்லது அறிவிலிகள் மணமகன் எந்த நேரத்திலும் வரக்கூடும்... அதனால் விளக்கில் எண்ணையோடு இருக்கவேண்டும் என்ற எந்தவோர் எதிர்நோக்கு இல்லாமல் இருக்கின்றார்கள். இதனால் அவர்கள் திருமண மண்டபத்திற்கு உள்ளே நுழைய முடியாமல், வெளியேயே இருக்கின்றார். இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல், “எதிர்நோக்கு இல்லாத மக்களைப் போன்று நீங்களும் துன்புறக்கூடாது” என்பார். இந்த ஐந்து அறிவிலிகளும் எந்தவோர் எதிர்நோக்கும் இல்லாமல் இருந்ததால் திருமண மண்டபத்திற்குள்/ விண்ணகத்திற்குள் நுழைய முடியாமல் வெளியே நிற்கின்றார்கள்.

எதிர்நோக்குடன் இருப்பதால் உள்ளே இருப்பவர்கள்

மணமகளின் ஐந்து தோழியர் அறிவிலிகள் என்றால், மீதி ஐந்து தோழியர் முன்மதியுடைவர்களாக இருக்கின்றார்கள். இதனால் இவர்கள் மணமகன் எந்த நேரத்திலும் வரக்கூடும் என்ற எதிர்நோக்குடன், தங்களுடைய விளக்குகளில் போதிய எண்ணையுடன் இருக்கின்றார்கள்; திடீரென்று மணமகன் வருகின்றபொழுது திருமண மண்டபத்திற்குள் நுழையும் பேற்றினையும் பெறுகின்றார்கள்.

ஆம், மணமகளின் மீதி ஐந்து தோழியர் முன்மதியோடு செயல்பட்டனர். அதனால் அவர்கள் திருமண மண்டபத்தில் நுழையும் பேறுபெற்றனர். இந்த முன்மதியை, சீராக்கின் ஞானநூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம் ஞானம் என்றும், அதன்பால் அன்பு கூர்வோர் அதை எளிதில் கண்டுகொள்வோர் என்றும் கூறுகின்றது. இத்தகைய ஞானம் ஆண்டவரிடம் கொள்ளும் அச்சத்தில் வருகின்றது (நீமொ 1:7) என்று நீதிமொழிகள் நூல் கூறினாலும், ஆண்டவர்மீது நம்பி, அவரை எதிர்நோக்கி இருப்பவருக்கே அது கிடைக்கின்றது என்று உறுதியாகச் சொல்லலாம் ஆகையால், நாம் ஆண்டவரை நம்பி அவரை எதிர்நோக்கி வாழவேண்டும். அப்பொழுதுதான் அவரது மேலான ஆசிகள் நமக்குக் கிடைக்கும்.

“நம்பிக்கை கொண்டான் பதற்றமடையான்” (எசா 28: 16) என்கிறது இறைவாக்கினர் நூல். அப்படியெனில் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டிருப்பவர் ஞானத்தோடு செயல்படுவார். அதனால் அவர் எதற்கும் பதற்றமடைய வேண்டிய தேவையே இருக்காது. மாறாக ஆண்டவரே நம்முடைய இல்லத்தின் கதவைத் தட்டி உள்ளே நுழையும் நிலை ஏற்படும் (திவெ 3: 20) ஆதலால், நாம் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டு, அவரை எதிர்நோக்கிக் இருந்து, அவர் தருகின்ற ஞானத்தை, முன்மதியைப் பெற்றவர்களாய், விண்ணரசுகு உள்ளே இருக்கும் பேறுபெறுவோம்.

சிந்தனை

‘உலகை வெல்வது நமது நம்பிக்கை’ (1 யோவா 5: 4) என்பார் புனித யோவான். எனவே, நாம் இயேசு எப்பொழுது வேண்டுமானாலும் வருவார் என்ற நம்பிக்கையோடும் எதிர்நோக்குடனும் இருந்து, இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.



- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
 
Free Blog Widget
Stats Counter
hit counter