maraikal
MUM
"

இளையோர்


பொதுக்காலம் 30 ஆம் வாரம்  01-11-2020

முதல் வாசகம்


புனிதர் அனைவர் பெருவிழா




பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 7: 2-4, 9-14

கதிரவன் எழும் திசையிலிருந்து மற்றொரு வானதூதர் எழுந்து வரக் கண்டேன். வாழும் கடவுளின் முத்திரை அவரிடம் இருந்தது. நிலத்தையும் கடலையும் அழிக்க அதிகாரம் பெற்றிருந்த அந்த நான்கு வான தூதர்களையும் அவர் உரத்த குரலில் அழைத்து, “எங்கள் கடவுளுடைய பணியாளர்களின் நெற்றியில் நாங்கள் முத்திரையிடும்வரை நிலத்தையோ கடலையோ மரத்தையோ அழிக்க வேண்டாம்” என்று அவர்களிடம் கூறினார். முத்திரையிடப்பட்டவர்களின் எண்ணிக்கை பற்றிச் சொல்லக் கேட்டேன். இஸ்ரயேல் மக்களின் குலங்கள் அனைத்திலும் முத்திரையிடப் பட்டவர்கள் ஓர் இலட்சத்து நாற்பத்து நான்கு ஆயிரம்.

இதன்பின் யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும் குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்; அரியணைக்கும் ஆட்டுக் குட்டிக்கும் முன்பாக நின்றுகொண்டிருந்தார்கள்; வெண்மையான தொங்கலாடை அணிந்தவர்களாய்க் கையில் குருத்தோலைகளைப் பிடித்திருந்தார்கள். அவர்கள், “அரியணையில் வீற்றிருக்கும் எங்கள் கடவுளிடமிருந்தும் ஆட்டுக்குட்டியிடமிருந்துமே மீட்பு வருகிறது” என்று உரத்த குரலில் பாடினார்கள்.

அப்பொழுது வானதூதர்கள் அனைவரும் அரியணையையும் மூப்பர்களையும் நான்கு உயிர்களையும் சூழ்ந்து நின்றுகொண்டு இருந்தார்கள்; பின் அரியணைமுன் முகம் குப்புற விழுந்து கடவுளை வணங்கினார்கள். “ஆமென், புகழ்ச்சியும் பெருமையும் ஞானமும் நன்றியும் மாண்பும் வல்லமையும் வலிமையும் எங்கள் கடவுளுக்கே என்றென்றும் உரியன; ஆமென்” என்று பாடினார்கள்.

மூப்பர்களுள் ஒருவர், “வெண்மையான தொங்கலாடை அணிந்துள்ள இவர்கள் யார்? எங்கிருந்து வந்தவர்கள் தெரியுமா?” என்று என்னை வினவினார். நான் அவரிடம், “என் தலைவரே, அது உமக்குத்தான் தெரியும்” என்றேன்.

அதற்கு அவர் என்னிடம் கூறியது: “இவர்கள் கொடிய வேதனையில் இருந்து மீண்டவர்கள்; தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 24: 1-2. 3-4ab. 5-6 . (பல்லவி: 6) Mp3

பல்லவி: ஆண்டவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே.
1
மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம்.
2
ஏனெனில், அவரே கடல்களின்மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள்மீது அதை நிலைநாட்டினவரும் அவரே. - பல்லவி

3
ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்?
4ab
கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர். - பல்லவி

5
இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார்.
6
அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே; யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. - பல்லவி

இரண்டாம் வாசகம்

கடவுள் இருப்பதுபோல் அவரைக் காண்போம்.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-3


சகோதரர் சகோதரிகளே,

நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்; கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை அறிந்துகொள்ளாததால்தான் நம்மையும் அறிந்துகொள்ளவில்லை. என் அன்பார்ந்தவர்களே, இப்போது நாம் கடவுளின் பிள்ளைகளாய் இருக்கிறோம். இனி எத்தன்மையராய் இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை. ஆனால் அவர் தோன்றும்போது நாமும் அவரைப் போல் இருப்போம்; ஏனெனில் அவர் இருப்பதுபோல் அவரைக் காண்போம். அவரை எதிர்நோக்கி இருக்கிற அனைவரும் அவர் தூயவராய் இருப்பது போல் தம்மையே தூயவராக்க வேண்டும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 11: 28

அல்லேலூயா, அல்லேலூயா! பெருஞ்சுமை சுமந்து சோர்ந்து இருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்.


✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-12a

அக்காலத்தில்

இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவர் அருகே வந்தனர். அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை:

“ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர். நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர். இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர். நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது.

என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.
 


புனிதர்கள் – தூயவர்கள் – வானதூதர்களைப் போன்று விண்ணகத்திலிருந்து தோன்றியவர்கள் அல்ல, மாறாக அவர்கள் நம்மைப் போன்று மண்ணகத்திலிருந்து தோன்றியவர்கள்; சாதாரண மனிதர்கள். அப்படியிருந்தாலும் தங்களுடைய வாழ்வால், பணியால் புனிதர்களாக உயர்ந்தவர்கள். அப்படிப்பட்டவர்களுக்குத் தான் இன்றைய நாளில் நாம் விழா எடுத்துக் கொண்டாடுகின்றோம். ஆம், இன்றைய நாளில் திருச்சபை அனைத்துப் புனிதர்களுடைய விழாவினைக் கொண்டாடி மகிழ்கின்றது.

இந்த மண்ணுலகத்தில் வாழ்ந்த புனிதர்களின் எண்ணிக்கை வெறும் 365 மட்டுமே, ஏராளமான புனிதர்கள் இருக்கிறார்கள். திருவெளிப்பாடு நூலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகத்தில் படிப்பது போன்று, “யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான புனிதர்கள் இருக்கிறார்கள் (திவெ 7: 9). எனவே அவர்களையெல்லாம் நினைவுகூர்ந்து பார்ப்பதற்குத்தான் திருச்சபை ஒருநாளை ஒதுக்கி, அவர்களைச் சிறப்பு செய்கிறது.

முதலில் அனைத்துப் புனிதர்களின் விழா தோன்றியதன் வரலாற்றுப் பின்னணியை சிந்தித்துப் பார்த்து, அதன்பின் இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

இவ்விழா கொண்டாடப்பட்டதன் வரலாற்றுப் பின்னணியை ஆராய்ந்து பார்க்கும்போது நான்காம் நூற்றாண்டில் ‘கிறிஸ்த மதத்தைப் பின்பற்றியதற்காக மறைசாட்சிகளாக உயிர்நீத்தவர்களுக்கு விழா எடுத்துக் கொண்டாப்பட்டதற்கான ஒரு சில குறிப்புகள் இருக்கின்றன. ஆனாலும் அது சிறிய அளவில்தான் நடந்திருக்கின்றது. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த திருத்தந்தை நான்காம் போனிபெஸ்தான் (608 -615) ரோம் நகரில் இருந்த ‘பந்தேயோன்’ என்று அழைக்கப்படுகின்ற அனைத்துக் கடவுள்களின் கோவிலை இடித்துத் தள்ளி, அந்த இடத்தில் கிறிஸ்துவுக்காக மறைசாட்சிகளாக உயிர்நீத்தவர்களின் நினைவாக ஆலயம் ஒன்று எழுப்பினார். அன்றிலிருந்துதான் அனைத்துப் புனிதர்களின் விழா படிப்படியாக வளர்ந்தது.

கி.பி 993 ஆம் ஆண்டிலிருந்து இவ்விழா உலகம் முழுவதும் கொண்டாடப் பணிக்கப்பட்டது. இப்படிதான் அனைத்துப் புனிதர்களின் விழா நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி கொண்டாடும் நிலை ஏற்பட்டது.

இப்போது இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம். முதலாவதாக இவ்விழா புனிதர்கள் – தூயவர்கள் – ஆகியோரின் எடுத்துகாட்டான வாழ்வை நினைவுகூர்ந்து பார்க்க நமக்கு அழைப்புத் தருகின்றது. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகம் 13:7 ல் வாசிக்கின்றோம், உங்களுக்கு கடவுளின் வார்த்தையை எடுத்துச் சொன்ன உங்கள் தலைவர்களை நினைவுகூருங்கள். அவர்களது வாழ்வின் நிறைவை எண்ணிப் பார்த்து, நீங்களும் அவர்களைப் போல நம்பிக்கையுடையவர்களாய் இருங்கள்” என்று. ஆம், இன்றைய நாளில் நாம் அவர்களை சிறப்பாக நினைவுகூர்ந்து பார்க்கவேண்டும்.

இரண்டாவதாக புனிதர்கள் – தூயவர்கள் – எப்போதும் இறைவனின் திருமுன் நின்றுகொண்டு எப்போதும் நமக்காக பரிந்துபேசுபவர்களாக இருக்கிறார்கள். எனவே அதற்காக நாம் இறைவனுக்கு நன்றி செலுத்தவேண்டும்.

மூன்றாவதாக புனிதர்களைப் போன்று நாமும் நல்வழியில் நடந்து புனித நிலையை அடையவேண்டும். அதனைத்தான் இவ்விழா நமக்கு சிறப்பாக எடுத்துக் கூறுகின்றது. தூய அகுஸ்தினார் கூறுவார், “அவனும் அவளும் புனிதராக, புனிதையாக மாறும்போது, ஏன் உன்னால் முடியாது?” என்று. ஆம், நம்மாலும் புனித நிலையை அடையலாம். அதற்கான வழிமுறைகளைத்தான் இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு எட்டு விதமான பேறுபெற்றவர்களைப் பற்றி பேசுகின்றார். நாம் ஏழையரின் உள்ளம் கொண்டவராக, இயேசுவுக்காக துயருறுவோராக, கனிவுடையோராக........ இருக்கின்றபோது நம்மாலும் புனித நிலையை அடையலாம் என்பதுதான் இயேசுவின் போதனையாக இருக்கின்றது. நாம் இயேசு குறிப்பிடுகின்ற வழிமுறைகளின்படி வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

ஓர் ஆசிரியரிடம் பாடம் கற்ற முன்னாள் மாணவன் ஒருவன் அந்த ஆசிரியரை சந்திக்கச் சென்றான். அவர் தன்னிடம் இருந்த உடைமைகள் அனைத்தையும் ஏழை எளிய மக்களுக்குக் கொடுத்துவிட்டு ஒரு சாதாரண குடிசையில் வாழ்ந்துவந்தார். இதைப் பார்த்த மாணவனுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. “எவ்வளவு பெரிய ஆசிரியர் நீங்கள், எத்தனையோ மனிதர்களுடைய வாழ்வில் ஒளி ஏற்றியவர்கள் நீங்கள். அப்படிப்பட்டவர்கள் ஒரு சாதாரண குடிசையில் வாழ்வதா? என்று கேட்டார். அதற்கு அவர், “இந்த உலகத்தில் நான் ஒரு பயணிதான்” என்றார்.

பின்னர் அவர் மேலே சுட்டிக்காட்டி, “விண்ணகம் என்னுடைய (நம்முடைய) நிலையான வீடு. அங்கே வாழ்வதற்குத்தான் நான் என்னுடைய செல்வத்தை எல்லாம் அனுப்பி வைத்துக்கொண்டிருக்கிறேன்” என்றார்.

ஆம், இந்த மண்ணுலகில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு நாம் செய்யும் உதவியாவும் விண்ணுலகில் சேர்க்கும் செல்வமாகும். அப்படிப்பட்ட வாழ்வு வாழும்போது நாமும் தூயவர்கள் ஆகின்றோம்.

ஆகவே அனைத்துப் புனிதர்களின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவர்களின் எடுத்துக்காட்டான வாழ்வைப் பின்பற்றி நாமும் தூயவர்களாவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
இன்று திருச்சபையானது புனிதர் அனைவரின் பெருவிழாவைக் கொண்டாடுகின்றது. “ஒவ்வொரு புனிதரும் தங்கள் மனநிலை ஆளுமைத்தன்மையிலும், ஆன்மீக தனிவரங்களிலும் ஒருவருக்கொருவர் வேறுபட்டு நின்றாலும் அனைவரும் இயேசுவின் அன்பின் பதிப்புக்களாகவும், சிலுவையின் சாட்சிகளாகவும் ஒன்றிணைந்து நிற்பார்கள்” என்பார் நமது முன்னாள் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவர்கள்.

மேலும் இறையடியார் ஒருவர் புனிதர் எனப்படுபவர் யார் என்பதற்கு பின்வருமாறு விளக்கம் தருவார், “புனிதர்கள்
1)மனிதராகப் பிறந்தவர்கள்,
2) இவ்வுலகில் வாழ்ந்தபோது இறைவனுக்கு ஏற்புடையவர்களாய் திகழ்ந்தவர்கள்,
3) தங்களது சான்று வாழ்வின் வழியாக இறைவனைப் பலருக்கு அறிமுகப்படுத்தியவர்கள்,
4) என்றும் இறைவனோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்,
5) தம்மை நோக்கி மன்றாடுபவர்களுக்காக இறைவனிடம் பரிந்துரைப்பவர்கள், 6) தங்கள் உயிரையே இறைமாட்சிக்காகக் கையளித்தவர்கள்” என்று.

ஆம், திருச்சபை பல்வேறு இறையடியார்களை, இறைவழி வாழ்ந்தவர்களைப் புனிதர்களாக அங்கிகரித்திருந்தாலும், இன்னும் எத்தனையோ மனிதர்கள் கிறிஸ்துவின் விழுமியங்களின்படி வாழ்ந்திருக்கிறார்கள். எனவே அவர்களையெல்லாம் நினைவுகூர்ந்து விழா கொண்டாட வேண்டும் என்பதற்குதான் திருச்சபை நவம்பர் ஒன்றாம் தேதியை புனிதர்கள் அனைவரின் பெருவிழாவாகக் கொண்டாடுகின்றது.

அனைத்துப் புனிதர்களுடைய பெருவிழா பல்வேறு இடங்களில், பல்வேறு நாட்களில் கொண்டாடப்பட்டு வந்தபோது திருத்தந்தை மூன்றாம் கிரகோரியார்தான் (827 -844) இதனை ஒழுங்குபடுத்தி, நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி கொண்டாடப் பணித்தார்.

முன்னதாக கி.பி. 600 ஆம் ஆண்டில் உரோமையில் இருந்த அனைவரும் கிறிஸ்த மதத்தைத் தழுவினார்கள். இதனால் எல்லாக் கடவுளது சிலைகளும் வைக்கப்பட்டிருந்த பான்தேயேன் கோவிலானது அன்னை மரியாளுக்கும், அனைத்துப் புனிதர்களுக்கும் நேர்ந்தளிக்கப்பட்டது. அக்கோவிலில் ஏற்கனவே இருந்த வேற்று தெய்வக் கடவுளின் சிலைகளானது திருந்தந்தை நான்காம் போனிபஸ் அவர்களின் உத்தரவின் பேரில் அடித்து நொறுக்கப்பட்டது. இப்பெருவிழா நாளில் பெந்தேயன் கோவிலுக்குச் சென்று மக்கள் யாவரும் இறையருளைப் பெற்றுச் செல்வார்கள்.

அனைத்துப் புனிதர்களின் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நல்லநாளில் திருச்சபையும், இறைவார்த்தையும் நமக்கு என்ன செய்தியை தருகிறது என்று சிந்தித்துப் பார்ப்போம்.

திருவெளிப்பாட்டு நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் ‘எல்லா இனத்தைச் சேர்ந்த, மொழியைப் பேசக்கூடிய எண்ணிக்கையில் அடங்காத மக்கள் அரியணைக்கும், ஆட்டுக்குட்டுக்கும் இடையில் இருந்து இறைவனை வாழ்த்திக் கொண்டிருந்தார்கள்’ என்று படிக்கின்றோம். இவர்கள் யார்?. இவர்கள் வேறு யாருமல்ல, இறைவழியில் நடந்து கடவுளையும், அயலாரையும் அன்பு செய்த தூயவர்கள் – புனிதர்கள் – கடவுளின்மக்கள் - ஆவர்.

இவர்களைப் போன்று இறைவனின் திருமுன் நிற்பததற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்பதற்கான பதிலைதான் இன்றைய நற்செய்தி வாசகத்திலே படிக்கின்றோம். ஆண்டவர் இயேசு தந்த மலைப்பொழிவை யாராரெல்லாம் தங்களுடைய வாழ்வில் கடைப்பிடித்து வருகிறார்களோ, அவர்களே இறைவன் தரும் விண்ணரசை உரிமைச் சொத்தாகப் பெறமுடியும். எளிய உள்ளத்தோராய், தூய இதயத்தோராய், நீதியின்மீது தாகமுடையோராய், அமைதிக்காக உழைப்போராய், கனிவுடையோறாய், நீதிக்காக துன்பங்களை அனுபவிப்பவராய், இன்னும் பல்வேறு இறையாட்சியின் விழுமியங்களின்படி வாழுகின்றபோது இறைவன் தரும் விண்ணரசு நமக்கு எப்போதும் உண்டு என்பதில் எந்தவித மாற்றுக் கருத்து இல்லை.

நாம் நமது அன்றாட வாழ்வில் இயேசுவின் போதனைகளின் படி வாழ்கின்றோமா? நம்மோடு வாழும் எளியோரை, இறைவனை அன்பு செய்கிறோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் அரசியும், புனிதையுமான புனித ஹங்கேரி நகர எலிசபெத். இவர் 1207 ஆம் ஆண்டு ஹங்கேரி நாட்டு அரசர் அந்திரேயாவுக்கு மகளாகப் பிறந்தவர். 1221 ஆம் லண்ட்ரவேயின் அரசன் நான்காம் லூயி மன்னனுக்கு தன்னுடைய பதிமூன்றாம் வயதிலேயே மணமுடித்துக் கொடுக்கப்பட்டார்.

அரசியான எலிசபெத் தான் அரசி என்றெல்லாம் பாராது ஏழைகள், வறியவர் யாவருக்கும் உதவி செய்துவந்தார். ஒருமுறை நாட்டில் கொள்ளை நோய் பரவியபோது ஏராளமான மக்கள் மடிந்துபோனார்கள். அத்தகைய வேளையில் அரசி துன்புறக்கூடிய மக்களுக்கு ஓடோடிச் சென்று உதவி செய்தார். இது அவளுடைய அத்தைக்குப் பிடிக்கவில்லை. இதனால் அவளது அத்தை, அதாவது மன்னன் லூயின் தாயார் தன்னுடைய மகனிடம் மருமகளைப் பற்றிக் குறைகூறினாள். ஆனால் மன்னனோ தன் மனைவியின்மீது அளவு கடந்த பாசம் கொண்டிருந்ததால் அதனை அவன் கண்டுகொள்ளவில்லை.

ஒருநாள் அரசி எலிசபெத் தெருவோரத்தில் நோய்வாய்ப்பட்டுக் கிடந்த தொழுநோயாளி ஒருவரை அழைத்துவந்து, தன்னுடைய வீட்டில்வைத்து சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தார். இதனைப் பார்த்த அவளுடைய அத்தை, தன்னுடைய மகனிடம் சென்று, எல்லாவற்றையும் முறையிட்டாள். உடனே அவன், தன் தாயோடு வீட்டில் என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக அரசியின் அறைக்கு வந்தான். அங்கே படுக்கையில் இயேசுவின் உருவில் தொழுநோயாளர் படுத்துக் கிடந்தார். அவருக்கு அரசி சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மன்னரின் தாயார், தன்னுடைய மருமகளின் காலில் விழுந்து ‘அவளைத் தவறாகப் புரிந்துகொண்டதற்கு மன்னிப்புக் கேட்டார். அதன்பிறகு தன்னுடைய மருமகள் பிறர் நலப்பணிகள் புரிவதற்கு அவர் உறுதுணையாக இருந்து வந்தார்.

அயலாருக்குச் செய்யும் சேவை யாவும் ஆண்டவருக்கு செய்யக்கூடியவை என்பதை இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துக்கூறுகிறது. புனிதர்கள் என்பவர் வேறு யாருமல்ல, அவர்கள் மனிதரை அன்பு செய்து, அவர்களுக்கு சேவைசெய்ததன் வழியாக இறைவனை அடைந்தவர்கள்.

ஆகையில் அனைத்துப் புனிதர்களின் விழாவைக் கொண்டாடும் இவ்வேளையில் புனிதர்களைப் போன்று இயேசு நமக்குப் போதித்த விழுமியங்களின் படி – மலைப்பொழிவின்படி வாழ்வோம். இயேசுவுக்கு நமது வாழ்வால், வார்த்தையால் சான்று பகர்வோம். அதன் வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
Free Blog Widget
Stats Counter
hit counter