maraikal
MUM
"


தவக்காலம் 4 ஆம் வாரம் 25-03-2020

கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு பெருவிழா

முதல் வாசகம்

இதோ, கருவுற்றிருக்கும் அந்த கன்னிப் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 7: 10-14; 8: 10b

அந்நாள்களில் ஆண்டவர் ஆகாசுக்கு மீண்டும் தம் திருவாக்கை அருளிச் சொல்லியது: "உம் கடவுளாகிய ஆண்டவர் உமக்கு ஓர் அடையாளத்தை அருளுமாறு கேளும்; அது கீழே பாதாளத்திலோ, மேலே வானத்திலோ தோன்றுமாறு கேட்டுக்கொள்ளும்" என்றார்.

அதற்கு ஆகாசு, "நான் கேட்க மாட்டேன். ஆண்டவரைச் சோதிக்க மாட்டேன்" என்றார். அதற்கு எசாயா: "தாவீதின் குடும்பத்தாரே! நான் சொல்வதைக் கேளுங்கள்; மனிதரின் பொறுமையைச் சோதித்து மனம் சலிப்படையச் செய்தது போதாதோ? என் கடவுளின் பொறுமையைக்கூட சோதிக்கப் பார்க்கிறீர்களோ?

ஆதலால் ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கருவுற்றிருக்கும் அந்த கன்னிப் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவர் 'இம்மானுவேல்' என்று பெயரிடுவார். ஏனெனில் கடவுள் எங்களோடு இருக்கிறார்" என்று கூறினார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
 

பதிலுரைப் பாடல்

(திபா:40: 6-7a. 7b-8. 9. 10 (பல்லவி: 7a,8a காண்க) Mp3

பல்லவி: இறைவா, இதோ உம் திருவுளம் நிறைவேற்ற நான் வருகின்றேன்.

6 பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை; ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர். 7a எனவே, 'இதோ வருகின்றேன்.' பல்லவி

7b என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது; 8 என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்; உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது என்றேன் நான். பல்லவி

9 என் நீதியை நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்; நான் வாயை மூடிக்கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே! நீர் இதை அறிவீர். பல்லவி

10 உமது நீதியை நான் என் உள்ளத்தின் ஆழத்தில் மறைத்து வைக்கவில்லை; உம் வாக்குப்பிறழாமையைப் பற்றியும் நீர் அருளும் மீட்பைப் பற்றியும் கூறியிருக்கின்றேன்; உம் பேரன்பையும் உண்மையையும் மாபெரும் சபைக்கு நான் ஒளிக்கவில்லை. பல்லவி


இரண்டாம் வாசகம்


என் கடவுளே, உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 10: 4-10


சகோதரர் சகோதரிகளே, காளைகள், வெள்ளாட்டுக் கிடாய்கள் இவற்றின் இரத்தம் பாவங்களைப் போக்க முடியாது. அதனால்தான் கிறிஸ்து உலகிற்கு வந்தபோது, "பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஆனால் ஓர் உடலை எனக்கு அமைத்துத் தந்தீர். எரிபலிகளும் பாவம் போக்கும் பலிகளும் உமக்கு உகந்தவையல்ல.

எனவே நான் கூறியது: என் கடவுளே, உமது திருவுளத்தை நிறைவேற்ற, `இதோ வருகின்றேன்.' என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது" என்கிறார். திருச்சட்டப்படி செலுத்தப்பட்ட போதிலும், "நீர் பலிகளையும் காணிக்கைகளையும் எரிபலிகளையும் பாவம்போக்கும் பலிகளையும் விரும்பவில்லை; இவை உமக்கு உகந்தவையல்ல" என்று அவர் முதலில் கூறுகிறார்.

பின்னர் "உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன்" என்கிறார். பின்னையதை நிலைக்கச் செய்ய முன்னையதை நீக்கி விடுகிறார். இந்தத் திருவுளத்தால்தான் இயேசு கிறிஸ்து ஒரே ஒரு முறை தம் உடலைப் பலியாகச் செலுத்தியதன் மூலம் நாம் தூயவராக்கப்பட்டிருக்கிறோம்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 1: 14ab

அல்லேலூயா, அல்லேலூயா! வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்
இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்.

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 26-38

ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா. வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, "அருள் நிறைந்தவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்" என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார்.

வானதூதர் அவரைப் பார்த்து, "மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார்.

அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின்மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது" என்றார். அதற்கு மரியா வானதூதரிடம், "இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!" என்றார்.

வானதூதர் அவரிடம், "தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப்போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை" என்றார். பின்னர் மரியா, "நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

 
 

எசாயா 49: 8-15

மறவாத இறைவன்

நிகழ்வு

ஒரு குடும்பத்தில் தந்தை, தாய், அவர்களுடைய ஒரே ஒரு மகள் என்று மூவர் இருந்தனர். அன்பு நிரம்பி வழிந்த இந்தக் குடும்பத்தில் தாய் திடீரென இறந்துபோனாள். இதனை மற்ற இருவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அக்கம் பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் எல்லாம் அவர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டுப் போனார்கள். அப்படியிருந்தும்கூட அவர்களால் இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இப்படியிருக்கையில் ஒருநாள் இரவு, தந்தை மகளை படுக்கையில் படுக்க வைத்துவிட்டு, தூக்கம் வராமல் அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தார். அப்பொழுது மின்சாரம் தடைபட்டது. உடனே மகள் அச்சம் கொண்டவளாய் தன் தந்தையைப் பார்த்து, "அப்பா! இந்த இருட்டிலும் நீ என்னை அன்பு செய்கின்றாயா...?" என்றாள். அவள் இப்படிக் கேட்ட வேளையில், தந்தை ரேடியத்தில் செய்யப்பட்டு, வீட்டுச் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த திரு இருதய ஆண்டவரின் சுரூபத்தைப் பார்த்தார். அது அந்த இருட்டில் அவ்வளவு பிரகாசமாக மின்னியது.

அதைப் பார்த்துவிட்டுத் தந்தை தன் மகளிடம், "சுற்றிலும் எவ்வளவுதான் இருட்டாக திரு இருதய ஆண்டவர் ஒளி கொடுக்கத் தவறியதில்லை... நம்மை அன்பு செய்யவும் தவறியதில்லை. அதுபோன்று சுற்றிலும் இருட்டாக இருந்தாலும், நானும் உன்னை அன்பு செய்ய மறப்பதில்லை" என்றார்.


இருளோ, இடரோ, இன்னாலோ எதுவுமே நம்மை ஆண்டவருடைய அன்பிலிருந்து பிரித்துவிட முடியாது. ஏனென்றால், நம் இறைவன் என்றுமே மாறாத, நம்மை மறவாத இறைவன். இன்றைய முதல் வாசகம் இறைவன் நம்மை ஒருபொழுதும் மறப்பதில்லை என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

மறவாத இறைவன்

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகமானது, பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டு, அடிமைகளாக வாழ்ந்து யூத மக்களுக்கு ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர் எசாயா வழியாக நம்பிக்கைச் செய்தியை வழங்குவதாக இருக்கின்றது.

யூதேயாவில் இருந்த மக்கள் ஆண்டவருடைய கட்டளையின் படி நடக்காமல், பிற தெய்வங்களை வழிபட்டு வந்ததால், பாபிலோனியர்களால் நாடுகடத்தப்பட்டு, அடிமைகளைப் போன்று வாழ்ந்து வந்தார். இதனால் அவர்கள் கடவுள் தங்களை கைநெகிழ்ந்து விட்டார் என்றும் மறந்துவிட்டார் என்றும் புலம்பினார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர் எசாயா வழியாக, "பால்குடிக்கும் தன் மகவைத் தாய் மறப்பாளோ? கருத்தாங்கினவள் தன் பிள்ளைமீது இரக்கம் காட்டாதிருப்பாளோ? இவர்கள் மறந்திடினும் நான் உன்னை மறக்கவே மாட்டேன்" என்று ஆறுதலின் செய்தியை கூறுகின்றார்.

ஆம், இறைவன் நாம் தவறுசெய்கின்றபொழுது, தண்டித்துத் திருத்தலாம் அதற்காக அவர் நம்மை மறந்துவிட்டார் என்று பொருள் கிடையாது. யூதேயாவில் இருந்தவர்கள் பாபிலோனியர்களால் நாடு கடத்தப்பட்டதுகூட தண்டித்துத் திருத்தப்படுவே என்று உறுதியாகச் சொல்லலாம்.

தகுந்த வேளையில் பதிலளித்த இறைவன்

இறைவன் இஸ்ரயேல் மக்களை மறக்கவும் இல்லை; அவர்களைக் கைநெகிழவும் இல்லை என்று கூறிய இன்றைய முதல் வாசகம், இன்னொரு முக்கியமான செய்தியையும் எடுத்துக்கூறுகின்றது. அது என்னவெனில், ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு அளிக்கும் நலமான வாழ்வு ஆகும். இன்றைய முதல் வாசகத்தில் இடம்பெறுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் இதற்குச் சான்று பகர்வதாக இருக்கின்றது.

இஸ்ரயேல் மக்கள் இழந்த தங்களுடைய நாட்டை மீட்டும் நிலைநாட்டுவர் என்றும், பாழடைந்து கிடக்கும் சொத்துக்கள் அவர்களை வந்தடையும் என்றும், சிறைப்பட்டோர் வெளியே புறப்படுவர் என்றும்,, இருளில் இருப்போர் வெளியே வருவர் என்றும் ஆண்டவராகிய கடவுள் அவர்களுக்கு நம்பிக்கை நிறைந்த வார்த்தைகளைத் தருகின்றார். யூதேயாவில் வாழ்ந்தோர் பாபிலோனியப் படையெடுப்பின்பொழுது இழந்தவை பல. அவையெல்லாம் மீட்கப்படும் என்று ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர் எசாயா வழியாக வாக்குறுதி தருவது உண்மையில் இஸ்ரயேல் மக்களுக்கு நம்பிக்கையூட்டியிருக்கும் என்றுதான் சொல்லவேண்டும்.

இன்றும்கூட நாம் நம்முடைய தீயச் செயல்களால் ஆண்டவரை விட்டு வெகுதொலையிருக்கின்றோம். இப்படிப்பட்ட நிலையில் நாம், தவற்றை உணர்ந்து வருந்திய ஊதாரி மைந்தனைப் போன்று, இஸ்ரயேல் மக்களை போன்று நம்முடைய தவற்றை உணர்ந்து, அவரிடம் திரும்பி வந்தால். அவர் நமக்கு எல்லாவிதமான ஆசியையும் தருவார் என்பது உறுதி.

சிந்தனை

"உன்னைக் கைநெகிழவும் மாட்டேன்; கைவிடவும் மாட்டேன்" (யோசு 1:5) என்று யோசுவாவைப் பார்த்துக் கூறுவார் ஆண்டவர். ஆகையால், நம்மைக் கைவிடாத, மறவாத இறைவனுக்கு நாம் என்றும் உண்மையுள்ளவர்களாக இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.



- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
யோவான் 5: 17-30

இன்றும் செயலாற்றும் கடவுள்

நிகழ்வு

மாவீரர் நெப்போலியன் எகிப்து நாட்டோடு போர்தொடுத்துவிட்டு, தன்னுடைய படைவீரர்களோடு இரவுநேரத்தில் பிரான்சு நாட்டிற்குத் திரும்பி வந்துகொண்டிருந்தார். வழியில் இவருடைய படைவீரர்கள் கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்று தர்க்கம் செய்துகொண்டு வந்தார்கள். ஒரு சாரார் கடவுள் இல்லவே இல்லை என்றும் இன்னொரு சாரார் கடவுள் இருக்கின்றார் என்றும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். எல்லாவற்றையும் நெப்போலியன் அமைதியாகக் கேட்டுக்கொண்டு வந்தார்.

அப்பொழுது ஒரு படைவீரர் நெப்போலியனிடம் வந்து, "கடவுள் இருக்கின்றாரா, இல்லையா. இது குறித்து உங்களுடைய பதிலைச் சொல்லுங்கள்" என்றார். உடனே நெப்போலியன், வானத்தைச் சுட்டிக்காட்டிவிட்டு, "அதோ தெரிகின்றனவே நிலவும் விண்மீன்களும். அவற்றையெல்லாம் யார் உண்டாக்கினார் என்று சொல்லமுடியுமா?" என்றார். படைவீரர் எதுவும் பேசமால் அமைதியாக இருந்தார். நெப்போலியன் தொடர்ந்து பேசினார்: "மேலே உள்ள நிலவையும் விண்மீன்களையும் யாவையும் மனிதரால் உண்டாக்கியிருக்க முடியாது! அப்படியானால் அவற்றைக் கடவுள்தானே உண்டாக்கியிருக்கவேண்டும்! எனவே, கடவுள் இருக்கின்றார்; அவர் இன்றைக்கும் செயலாற்றிக்கொண்டிருக்கின்றார்."

ஆம், கடவுள் இருக்கின்றார்; அவர் இன்றைக்கும் செயலாற்றிக்கொண்டிருக்கின்றார். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, தந்தைக் கடவுள் இன்றும் செயலாற்றுகின்றார் என்று கூறுகின்றார். இது யூதர்கள் நடுவில் எத்தகைய எதிர்வினையை ஆற்றுகின்றது, இதன்வழியாக இயேசு நமக்குச் சொல்லக்கூடிய செய்தி என்ன என்பன குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

யூதர்களோடு வாக்குவாதம்

நேற்றைய நற்செய்தியில் (யோவா 5: 1-17) இயேசு முப்பத்தெட்டு ஆண்டுகளாய்ப் படுத்த படுக்கையாய்க் கிடந்த உடல்நலம் குன்றியவரை நலப்படுத்துவார். அந்நாள் ஓர் ஓய்வுநாள் என்பதால், யூதர்கள் அவரைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள். அதோடு நின்றுவிடாமல், அந்த மனிதரை நலப்படுத்திய இயேசுவிடம் வந்து, அவரை எப்படி ஓய்வுநாளில் நலப்படுத்தலாம் என்று அவரோடு வாக்குவாதம் செய்வார்கள். அவர்கள் இயேசுவோடு வாக்குவாதம் செய்வதுதான் இன்றைய நற்செய்தி வாசகமாக இருக்கின்றது. ஓய்வுநாளில் எப்படி உடல்நலமாற்றவரை நலப்படுத்தலாம் என்று கேட்ட யூதர்களுக்கு இயேசு என்ன மறுமொழி கூறினார் என்பதைக் குறித்துத் தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.

இன்றும் செயலாற்றும் தந்தைக் கடவுள்

தன்னிடம் வாக்குவாதம் செய்ய வந்த யூதர்களிடம் இயேசு, "என் தந்தை இன்றும் செயலாற்றுகிறார்; நானும் செயலாற்றுகின்றேன்" என்ற வரிகளோடு தொடங்குகின்றார். ஆண்டவராகிய கடவுள் தான் செய்த வேலையை முடித்திருந்து, ஏழாம் நாள் ஓய்ந்திருந்தார் (தொநூ 2:2) என்று திருவிவிலியம் சான்று பகர்கின்றது. கடவுள் ஏழாம் நாள் ஓய்ந்திருந்தால் என்றால், அவர் எந்த வேலையும் செய்யாமல் இருந்தார் என்று பொருளல்ல; தான் படைத்த உலகை உய்வித்துக்கொண்டிருந்தார் என்பதுதான் பொருள். நற்செய்தியில் இயேசு சொல்கின்ற வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், கடவுள் ஏழாம் நாளிலும்கூட தான் படைத்த உலகை உய்விப்பதன் வழியாக செயலாற்றிக் கொண்டிருந்தார். அதைத்தான் இயேசு, என் தந்தை இன்றும் செயலாற்றுகின்றார்; நானும் செயலாற்றுகிறேன் என்று கூறுகின்றார்.

யூதர்கள், கடவுள் இன்றும் செயலாற்றுகின்றார் என்பதை விட்டுவிட்டார்கள்; ஆனால், இயேசு, கடவுளைத் தந்தை என்று சொன்னதைப் பிடித்துக்கொண்டு, அது எப்படி, கடவுளைத் தந்தை என்று சொல்வது... இது மிகப்பெரிய குற்றம் (லேவி 24: 15-16) என்று அவரோடு வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றார்கள்.

நம்பினோருக்கு நிலைவாழ்வு

யூதர்கள், இயேசு எப்படி கடவுளைத் தந்தை என்று சொல்லலாம் என்று கேள்வி கேட்டதும், இயேசு அவர்களிடம், தனக்கும் தந்தைக்கும் உள்ள உறவைப் பற்றியும் தன்னுடைய வார்த்தையைக் கேட்டு, தன்னை அனுப்பியவரை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர் என்பது பற்றியும் எடுத்துக்கூறுகின்றார்.

ஆம், நற்செய்தியாளர் யோவான் தன்னுடைய நற்செய்தியின் தொடக்கத்தில் சொல்வது போன்று, வாக்கு என்னும் இயேசு தொடக்கத்திலிருந்தே இருந்தார்; அவர் கடவுளோடு இருந்தார்; கடவுளாகவும் இருந்தார். அப்படிப்பட்டவர் கடவுளைத் தந்தை என்று சொல்வதில் என்ன தவறு இருக்கின்றது என்பதுதான் புரியவில்லை. ஆகையால், நாம் இயேசுவின்மீது நம்பிக்கை வைப்பதன் வழியாக அவரை அனுப்பிய தந்தைக் கடவுளிடம் நம்பிக்கை வைக்கின்றோம் என்ற உண்மையை உணர்ந்தவர்களாய், இயேசுவின் வழியில் நடப்போம்.

சிந்தனை

"இதோ உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களோடு இருக்கின்றேன்" (மத் 20: 28). என்பார் இயேசு. ஆகையால், நாம் நம்மோடு இருக்கும், நம் நடுவில் செயலாற்றும், இயேசுவின்மீதும் தந்தைக் கடவுள்மீதும் நம்பிக்கை வைத்து வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
Free Blog Widget
Stats Counter
hit counter