maraikal
MUM
"


தவக்காலம் 3 ஆம் வாரம் 19-03-2020

முதல் வாசகம்

 - புனித யோசேப்பு - தூய கன்னி மரியாவின் கணவர் பெருவிழா
=================================================================================
 உன் வழித்தோன்றலை உனக்குப்பின் நான் உயர்த்தி, அவனது அரசை நிலைநாட்டுவேன்.

சாமுவேலின் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 4-5a, 12-14a, 16

அந்நாள்களில்

ஆண்டவரின் வார்த்தை நாத்தானுக்கு அருளப்பட்டது: "நீ சென்று, என் ஊழியன் தாவீதிடம் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: உன் வாழ்நாள்கள் நிறைவுபெற்று நீ உன் மூதாதையரோடு துயில்கொள்ளும் போது, உனக்குப் பிறக்கும் உன் வழித்தோன்றலை உனக்குப்பின் நான் உயர்த்தி, அவனது அரசை நான் நிலைநாட்டுவேன். எனது பெயருக்காகக் கோவில் கட்டவிருப்பவன் அவனே. அவனது அரசை நான் என்றும் நிலைநிறுத்துவேன். நான் அவனுக்குத் தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான்.

என் முன்பாக உனது குடும்பமும் உனது அரசும் என்றும் உறுதியாய் இருக்கும்! உனது அரியணை என்றுமே நிலைத்திருக்கும்!"

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 89: 1-2. 3-4. 26,28 (பல்லவி: 36) Mp3

பல்லவி: அவனது வழிமரபு என்றென்றும் நிலைத்திருக்கும்.
1
ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்; நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன்.
2
உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்; உமது உண்மை வானைப் போல் உறுதியானது. - பல்லவி

3
நீர் உரைத்தது: "நான் தேர்ந்து கொண்டவனோடு உடன்படிக்கை செய்துகொண்டேன்; என் ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டு நான் கூறியது:
4
உன் வழிமரபை என்றென்றும் நிலைக்கச் செய்வேன்; உன் அரியணையைத் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கச் செய்வேன்'. - பல்லவி

26
"நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை" என்று அவன் என்னை அழைப்பான்.
28
அவன்மீது கொண்ட பேரன்பு என்றும் நிலைக்குமாறு செய்வேன்; அவனோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கையும் எப்பொழுதும் நிலைத்திருக்கும். - பல்லவி

இரண்டாம் வாசகம்


எதிர்நோக்குக்கு இடம் இல்லாததுபோல் தோன்றினும், அவர் எதிர்நோக்கினார்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 13, 16-18, 22

சகோதரர் சகோதரிகளே,

உலகமே அவருக்கு உரிமைச் சொத்தாகும் என்னும் வாக்குறுதி ஆபிரகாமுக்கோ அவருடைய வழிமரபினர்களுக்கோ திருச்சட்டத்தைக் கடைப்பிடித்ததால் கிடைக்கவில்லை; நம்பிக்கை கொண்டு கடவுளுக்கு ஏற்புடையவர் ஆனதால்தான் அவ்வாக்குறுதி கிடைத்தது.

ஆகவே கடவுளின் அருள்செயலால் நம்பிக்கை வாக்குறுதியின் அடிப்படையாயிற்று. இவ்வாறு வாக்குறுதி ஆபிரகாமின் வழிவந்தவர்கள் எல்லாருக்கும் - திருச்சட்டத்திற்கு உட்பட்டோருக்கு மட்டுமல்ல, அவரைப் போலக் கடவுள்மீது நம்பிக்கை கொண்டோருக்கும் - உரியது என்பது உறுதியாயிற்று. ஆபிரகாம் நம் அனைவருக்கும் தந்தை. ஏனெனில் "எண்ணற்ற மக்களினங்களுக்கு உம்மை நான் தந்தையாக்குகிறேன்" என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆம், இறந்தவர்களை வாழ்விப்பவரும் இல்லாததைத் தம் வார்த்தையால் இருக்கச் செய்பவருமாகிய கடவுள்மீது நம்பிக்கை கொண்டு அவர் முன்னிலையில் ஆபிரகாம் நம் தந்தையானார். "உன் வழிமரபினர் எண்ணற்றவராய் இருப்பர்" என்றும் அவருக்குச் சொல்லப்பட்டது. இக்கூற்று நிறைவேறும் என்னும் எதிர்நோக்குக்கு இடம் இல்லாதது போல் தோன்றினும், அவர் எதிர்நோக்கினார்; தயங்காமல் நம்பினார். ஆகவே அவர் பல மக்களினங்களுக்குத் தந்தையானார். "அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்."

ஆண்டவரின் அருள்வாக்கு.
 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

(திபா 84: 4)

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறுபெற்றோர்; அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டேயிருப்பார்கள். அல்லேலூயா.
 

நற்செய்தி வாசகம்
ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே யோசேப்பு நடந்துகொண்டார்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 16, 18-21, 24a

யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு.

இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப் பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழுமுன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.

அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, ""யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்" என்றார்.

யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக் கொண்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது
உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 41-51a

அக்காலத்தில்

ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள்; இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது, வழக்கப்படி விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர். விழா நாள்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது, சிறுவன் இயேசு எருசலேமில் தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது; பயணிகள் கூட்டத்தில் அவர் இருப்பார் என்று எண்ணினர். ஒரு நாள் பயணம் முடிந்த பின்பு உறவினரிடையேயும் அறிமுகமானவர்களிடையேயும் அவரைத் தேடினர்; அவரைக் காணாததால் அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள்.

மூன்று நாள்களுக்குப்பின் அவரைக் கோவிலில் கண்டார்கள். அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக்கொண்டும் இருந்தார். அவற்றைக் கேட்ட அனைவரும் அவருடைய புரிந்துகொள்ளும் திறனையும் அவர் அளித்த பதில்களையும் கண்டு மலைத்துப் போயினர். அவருடைய பெற்றோரும் அவரைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். அப்பொழுது அவருடைய தாய் அவரை நோக்கி, "மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே" என்றார். அவர் அவர்களிடம், ""நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?" என்றார். அவர் சொன்னதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. பின்பு அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 
 

எரேமியா 7: 23-28

"அவர்களோ எனக்குச் செவி சாய்க்கவும் இல்லை; கவனிக்கவும் இல்லை"

நிகழ்வு

அமெரிக்காவின் 35 ஆவது அதிபராக இருந்தவர் திரு. ஜான் எப். கென்னடி. இவருடைய மகன் ஜூனியர் ஜான். எப். கென்னடி 1999 ஆம் ஆண்டு, ஜூலை 15 ஆம் நாள் தன்னுடைய மனைவி கரோலின் மற்றும் அவருடைய சகோதரி லாரெனுடன் நியூயார்க்கிலிருந்து மாசசூசெட்ஸில் இருந்த தன்னுடைய வீட்டிற்கு தனி விமானத்தில் புறப்படத் தயாரானார்.

அப்பொழுது கென்னடியின் நலம்விரும்பிகள் அவரிடம், "வானிலை சரியில்லை... மேகமூட்டமாக இருக்கின்றது. அதனால் எல்லாம் சரியான பிறகு பயணம் செய்யுங்கள். தயவுசெய்து இப்பொழுது பயணம் செய்யவேண்டாம்" என்று சொல்லி கெஞ்சிக் கேட்டார்கள். அவரோ "எல்லாம் எனக்குத் தெரியும்... நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டு விமானத்தில் பயணம் செய்யத் தொடங்கினார்; ஆனால், துரதிஸ்டவசம் அவரை விடவில்லை. ஆம், அவர் பயணம் செய்த விமானம், மோசமான வானிலையின் காரணமாக அட்லாண்டிக் கடலில் விழுந்து நொங்கிப் போனது. அதில் அவரும் அவரோடு பயணம் செய்த இருவரும் இறந்துபோனார்கள்.

ஜூனியர் ஜான் எப். கென்னடி அவருடைய நலம்விரும்பிகளின் பேச்சைக் கேட்டு, விமானத்தை ஒட்டாமல் இருந்திருக்கலாம். என்ன செய்வது, அவர் அவர்களுடைய வார்த்தைகளைக் கேட்கவில்லை. அதனால் இறந்துபோனார். இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எரேமியா இஸ்ரேயல் மக்களிடம் இறைவார்த்தையைக் கேட்டு நடக்கவேண்டும் என்று சொல்லியும், நடக்காமல் இருக்கின்றார்கள். இதனால் அவர்களுக்கு எப்படிப்பட்ட கேடு வந்தது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

இறைவனுக்குச் செவிகொடுத்து வாழ அழைக்கப்பட்ட இஸ்ரயேல் மக்கள்

இன்றைய முதல் வாசகம் இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து எடுக்கப்பட்டிருக்கின்றது. இதில் இறைவாக்கினர் எரேமியா இஸ்ரயேல் மக்களிடம் ஆண்டவரின் குரலுக்குச் செவிசாய்த்து வாழவேண்டும் என்று சொல்கின்றார். ஏன் அவர் அவர்களிடம் இவ்வாறு சொல்லவேண்டும் என்பதை நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.

இஸ்ரயேல் மக்களை இறைவன் தனிப்பட்ட முறையில் தேர்ந்துகொண்டதால், அவர்கள் அவருக்கு மக்களாக இருந்தார்கள். அவரும் அவர்களுக்குத் தந்தையாக இருந்தார். இதனால் இஸ்ரயேல் மக்கள் இறைவனுக்குச் செவிசாய்த்து வாழ அழைக்கப்பட்டார்கள். மேலும் இஸ்ரயேல் மக்கள் இறைவனுக்குச் செவிசாய்ந்து வாழ்ந்தால், நலம் பல பெறுவார்கள் என்றும் எரேமியா அவர்களிடம் கூறினார். இஸ்ரயேல் மக்கள் இறைவாக்கினர் எரேமியா வழியாக மொழியப்பட்ட ஆண்டவரின் வார்த்தைக்குச் செவிகொடுத்தார்களா? இல்லையா? தொடர்ந்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

இறைவனின் வார்த்தைக்குச் செவிசாய்க்காத மக்கள்

இறைவாக்கினர் எரேமியா, இஸ்ரயேல் மக்களிடம் ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுத்து வாழவேண்டும் என்று தொடர்ந்து சொல்லிவந்தார். அவர்களோ ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுக்கவே இல்லை. இதனால் அவர்கள் பாபிலோனியார்களால் நாடுகடத்தப்பட்டார்கள்.

இறைவாக்கினர் எரேமியா கிமு 650 முதல் கி.மு 570 வரையிலான காலக்கட்டத்தில் வாழ்ந்தவர். இவர் யூதேயாவில் இருந்தவர்களிடம் ஆண்டவரின் வாக்கைத் தொடர்ந்து எடுத்துரைத்து வந்தார். மக்கள்தான் அவருடைய வார்த்தையைக் கேட்கவில்லை. மாறாக, அவர்கள் அவரைத் துன்புறுத்தினார்கள். என்னவெல்லாவோ செய்தார்கள். இதனால் அவர்கள் பாபிலோனியர்களால் நாடுகடத்தப்பட்டார்கள். இறைவாக்கினர் எரேமியா வழியாக ஆண்டவர் நமக்கு ஒரு முக்கியமான செய்தியைச் சொல்கின்றார். அது என்னவென்று இப்பொழுது பார்ப்போம்.

கீழ்ப்படிதல் பலியை விடச் சிறந்தது

சாமுவேல் முதல் நூலில் இவ்வாறு வாசிக்கின்றோம்: "ஆண்டவருக்கு மகிழ்ச்சி தருவது எரிபலிகள், பிற பலிகள் செலுத்துவதா? அவரது குரலுக்குக் கீழ்ப்படிவதா? கீழ்ப்படிதல் பலியை விடச் சிறந்தது." ஆம், இறைவனுக்கு பிடித்தது பலி அல்ல, கீழ்ப்படிதல் அல்லது அவரது வார்த்தையைக் கேட்டு நடத்தல். இஸ்ரயேல் மக்கள் இறைவனுடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்திருந்தால் இறைவன் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார்; அவர்களும் அவரிடமிருந்து எல்லாவிதமான அருளையும் ஆசியையும் பெற்றிருப்பார்கள். இஸ்ரயேல் மக்கள் இறைவனுடைய வார்த்தைக்குச் செவிமடுக்கவில்லை. இதனால் தங்களுடைய செயலாலேயே தண்டனையைப் பெற்றுக்கொண்டார்கள். அப்படியென்றால், ஒருவருடைய உயர்வும் அவருடைய தாழ்வும் அவர் இறைவனுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய வார்த்தையின் படி நடப்பதைப் பொறுத்து இருக்கின்றது என்று உறுதியாகச் சொல்லலாம்.

நாம் நம்முடைய வாழ்க்கையில் இறைவனுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய வார்த்தையின் படி நடக்கின்றோமா? சிந்திப்போம்.

சிந்தனை

"பலி செலுத்துவதைவிட நேர்மையாகவும் நியாயமாகவும் நடப்பதே ஆண்டவருக்கு உவப்பளிக்கும்" (நீமொ 21: 3) என்கிறது நீதிமொழிகள் நூல். ஆகையால், நாம் இறைவனின் குரலுக்குச் செவிகொடுத்து, அவர் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.



- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
லூக்கா 11: 14-23

தன்னை விமர்சித்தவர்களுக்குப் பதிலடி கொடுத்த இயேசு

நிகழ்வு

இளைஞர்களின் நம்பிக்கை நாயகனாகிய விவேகானந்தர் ஒருநாள் இருப்பூர்தியில் (Train) அமர்ந்துகொண்டு ஓரிடத்திற்குச் சென்றுகொண்டிருந்தார். அவருக்கு முன்பாக ஆங்கிலேயச் சிப்பாய்கள் சிலர் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் விவேகானந்தரின் தோற்றத்தையும் அவர் உடுத்தியிருந்த ஆடையையும் பார்த்துவிட்டு, அவரைத் தகாத வார்த்தைகளில் ஆங்கிலத்தில் திட்டினார்கள்; கிண்டலாகப் பேசுகின்றார்கள். விவேகானந்தர் எதுவுமே கேட்காதது போல் அமைதியாக அமர்ந்திருந்தார்.

ஓர் நிறுத்தத்தில் இருப்பூர்தியில் ஏறிய உயர்அதிகாரி ஒருவர், விவேகானந்தரிடம் வந்து ஆங்கிலத்தில் பேசினார். விவேகானந்தரும் பதிலுக்கு அவரிடம் ஆங்கிலத்தில் பேசினார். இதைப் பார்த்துவிட்டு, அவரை ஆங்கிலத்தில் தகாத வார்த்தைகளைச் சொல்லித் திட்டியவர்கள் அதிர்ந்துபோனார்கள். உயர் அதிகாரி அங்கிருந்து போனபின்பு, அந்த ஆங்கிலேயச் சிப்பாய்கள் விவேகானந்தரிடம், "உங்களுக்கு ஆங்கிலம் தெரியும் என்று முதலிலேயே சொல்லியிருக்கலாம்தானே...! ஏன் நீங்கள் எதுவுமே பேசாமல் அமைதியாக வந்தீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு விவேகானந்தர் அவரிடம், "நான் முட்டாள்களைச் சந்திப்பது இது முதன்முறையல்ல, அதனால்தான் எதுவும் பேசாமல் அமைதியாக வந்தேன்" என்று ஆங்கிலத்தில் சொன்னார். இதைக் கேட்டு அவர்கள் வாயடைத்துப்போனார்கள்.

தன்னைத் தேவையில்லாமல் விமர்சித்தவர்களுக்கு விவேகானந்தர் எப்படி தக்க பதிலடி கொடுத்தாரோ, அப்படி இன்றைய நற்செய்தி வாசகத்தில் தன்னைத் தேவையில்லாமல், எந்தவோர் அர்த்தமில்லாமல் விமர்சித்தவர்களுக்கு இயேசு தக்க பதிலடி கொடுக்கின்றார். அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசுவை விமர்சித்த பரிசேயர்கள்

இயேசு பேய்பிடித்துப் பேச்சிழந்த ஒருவரிடமிருந்து பேயை ஓட்டுகின்றார். இதைத் தொடர்ந்து அங்கிருந்த சிலர், இயேசு பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுவதாக விமர்சிக்கின்றார்கள்.

பரிசேயர்கள் இயேசுவை விமர்சித்ததுபோன்று, இயேசு பெயல்செபூலைக் கொண்டுதான் பேய்களை ஓட்டினாரா என்ற கேள்வி நமக்குள் எழலாம். இதற்கான பதிலை திருத்தூதர் பணிகள் நூல் 10: 38 இல் இவ்வாறு வாசிக்கின்றோம், "கடவுள் நாசரேத்து இயேசுவின் மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்ததால் அலைகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார்." ஆம், இயேசு தூய ஆவியாரின் வல்லமையைக் கொண்டு பேயை விரட்டியடித்தார். அப்படியிருக்கும்பொழுது பரிசேயர்கள் அவரை, பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகின்றார் என்று விமர்சித்தது, முழுக்கு முழுக்க பொறாமைதான் காரணம் என்று உறுதியாகச் சொல்லலாம்.

பரிசேயர்களுக்குப் பதிலடி கொடுத்த இயேசு

பரிசேயர்கள் தன்னை தேவையில்லாமல் விமர்சித்ததைக் கேட்டு, இயேசு அமைதியாகிவிடவில்லை; மனம் உடைந்தும் போகவில்லை. மாறாக, அவர் அவர்களுக்குத் தக்க பதிலடி கொடுக்கின்றார். ஆம், இயேசு பரிசேயர்களுக்கு மூன்று விதமான பதில்களைச் சொல்லி, அவர்களுடைய வாயை அடைக்கின்றார்.

இயேசு பரிசேயர்களுக்குச் சொன்ன முதல் பதில், தனக்கு எதிராகப் பிளவுபடும் எந்த அரசும் நிலைத்து நிற்காது என்பதாகும். பரிசேயர்கள் இயேசுவை பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஒட்டுகின்றார் என்று விமர்சித்தார்கள். ஒருவேளை இயேசு பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டினார் என்றால், அது பேய்களின் அரசாங்கத்திற்கு எதிரான செயலாக அல்லவா இருக்கும்...! "யாராவது தனக்கு எதிராகத் தானே செயல்படுவார்களா...?" என்பதுதான் இயேசு கொடுக்கும் முதல் பதிலாக இருக்கின்றது.

இயேசு பரிசேயர்களுக்குக் கொடுக்கும் இரண்டாவது பதில், நான் பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகின்றேன் என்றால், நீங்கள் யாரைக் கொண்டு பேய்களை ஒட்டுகின்றீர்கள் என்பதாகும். இயேசுவின் காலத்தில் பலர் பேய்களை ஓட்டிக்கொண்டு இருந்தார்கள் (மாற் 9:38; திப 19: 13-14) இவர்களெல்லாம் யாரைக் கொண்டு பேயை ஓட்டுகின்றார்கள் என்பதுதான் இயேசு கொடுத்த இரண்டாவது பதிலடி. இயேசு பரிசேயர்களுக்குக் கொடுத்த மூன்றாவது பதில், வலியவர் ஒருவரை அவரை விட வலியவர் ஒருவர் வென்றால், முன்னவரை விடப் பின்னர் வலிமை மிக்கவர் என்பதாகும். இயேசு சாத்தானை வெற்றிகொண்டார் எனில், சாத்தனை விட அவர் வலிமை மிக்கவர் என்பதுதான் பொருள். இந்த அடிப்படை உண்மைகூடத் தெரியாமல், இயேசுவைப் பரிசேயர்கள் விமர்சித்ததுதான் மிகவும் வேடிக்கையாக இருக்கின்றது.

பல நேரங்களில் நம்மையும்கூட சிலர் தேவையின்றி விமர்சிப்பார்கள். இவர்கள் மட்டில் நாம் எப்பொழுதும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருந்து, இயேசுவைப் போன்று விமர்சனங்களால் பாதிக்கப்படாதவாறு இருப்பது நல்லது.

சிந்தனை

"நன்மை செய்வதில் நீங்கள் மனந்தளர வேண்டாம்" (2 தெச 3: 13) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் மற்றவர் நம்மைத் தேவையில்லாமல் விமர்சிக்கின்றபொழுது, அதனைக் கண்டு மனமுடைந்து போகாமலும் மனம் தளர்ந்து விடாமலும் இருந்து, இயேசுவைப் போன்று தொடர்ந்து நன்மை செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
Free Blog Widget
Stats Counter
hit counter