maraikal
MUM
"


தவக்காலம் 2 ஆம் வாரம் 08-03-2020

முதல் வாசகம்

இறைமக்களுக்குத் தந்தையாகிய ஆபிராம் அழைக்கப்பெறுதல்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 12: 1-4

அந்நாள்களில்

ஆண்டவர் ஆபிராமை நோக்கி, "உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல். உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்; நீயே ஆசியாக விளங்குவாய். உனக்கு ஆசி கூறுவோர்க்கு நான் ஆசி வழங்குவேன்; உன்னைச் சபிப்போரை நானும் சபிப்பேன்; உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்" என்றார். ஆண்டவர் ஆபிராமுக்குக் கூறியபடியே அவர் புறப்பட்டுச் சென்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்


திபா 33: 4-5. 18-19. 20,22 (பல்லவி: திபா 33:22) Mp3

பல்லவி: ஆண்டவரே, உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!
4ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை.
5அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. - பல்லவி

18தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார்.
19அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். - பல்லவி

20நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார்.
22உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக! - பல்லவி



இரண்டாம் வாசகம்


இறைவன் நம்மை அழைத்து, நம்மீது ஒளி வீசுகிறார்.

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 8b-10

அன்பிற்குரியவரே,

கடவுளின் வல்லமைக்கேற்ப நற்செய்தியின் பொருட்டுத் துன்பத்தில் என்னுடன் பங்குகொள். அவர் நம் செயல்களை முன்னிட்டு அல்ல, காலங்களுக்கு முந்திய தமது தீர்மானத்தின்படி, கிறிஸ்து இயேசு வழியாக நமக்கு அளிக்கப்பட்ட அருளின்படி நம்மை மீட்டுள்ளார்; நமக்குத் தூய அழைப்பு விடுத்துள்ளார். நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு உலகில் தோன்றியதன் மூலம் இப்போது அருள் வெளிப்பட்டுள்ளது. அவர் சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
 


நற்செய்திக்கு முன் வசனம்

(மாற் 9: 7)

ஒளிரும் மேகத்தினின்று தந்தையின் குரலொலி கேட்டது: "என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்."
 
நற்செய்தி வாசகம்
இயேசுவின் முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 1-9


அக்காலத்தில்

இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளி போன்று வெண்மையாயின. இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக்கொண்டிந்தனர். பேதுரு இயேசுவைப் பார்த்து, "ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா?" என்றார்.

அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது. அந்த மேகத்தினின்று, "என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்" என்று ஒரு குரல் ஒலித்தது. அதைக் கேட்டதும் சீடர்கள் மிகவும் அஞ்சி முகங்குப்புற விழுந்தார்கள். இயேசு அவர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு, "எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்" என்றார். அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை.

அவர்கள் மலையிலிருந்து இறங்கிவந்தபோது இயேசு, "மானிடமகன் இறந்து உயிருடன் எழுப்பப்படும்வரை இக்காட்சியைப்பற்றி எவருக்கும் சொல்லக்கூடாது" என அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


தொடக்க நூல் 12: 1-4a
2 திமொத்தேயு 1: 8b-10
மத்தேயு 17: 1-9

யார் இறைவனின் அன்பார்ந்த மைந்தர்?

நிகழ்வு

மிகப்பெரிய தொழிலதிபரான டாட்டாவின் மகன்களில் ஒருவர் ஜே.ஆர்.டி. டாட்டா. இவர் தனது இருபத்து ஒன்றாம் வயதிலேயே தன் தந்தையின் நிறுவனங்களில் ஒன்றான "டாட்டா ஸ்டீலில்" சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார்.

ஒருநாள் இவருக்குக் கடுமையான காய்ச்சல் வந்தது. இவருக்குச் சிகிச்சையளித்த மருத்துவர், இவரிடம் ஓரிரு நாள்கள் நன்றாக ஓய்வெடுத்துக் கொண்டால், எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்லிவிட்டுச் சென்றார்; ஆனால், இவர் வீட்டில் இருந்த "பிஸினஸ்" தொடர்பான நூல்களைப் படிக்கத் தொடங்கினார். இதைப் பார்த்துவிட்டு வீட்டில் இருந்தவர்கள் இவரிடம், "மருத்துவர் உங்களை நன்றாக ஓய்வெடுக்குமாறு சொல்லிவிட்டுச் சென்றிருக்கும்பொழுது, நீங்கள் இப்படி பெரிய பெரிய புத்தங்களைப் படித்துக்கொண்டிருந்தால் எப்படி?" என்றார்கள்.

உடனே இவர் அவர்களிடம், "நான் சாதாரண ஒரு மனிதருக்கு மகனாகப் பிறக்கவில்லை. மிகப்பெரிய தொழிலதிபரான டாட்டாவிற்கு மகனாகப் பிறந்திருக்கின்றேன். அவருடைய மகன் என்று நான் பெருமையோடு சொல்லிக்கொள்வதற்கு இப்படிப் புத்தங்களை வாசித்து, என்னுடைய தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டாமா...? சும்மா ஓய்வெடுத்துக்கொண்டிருந்தால் முடியுமா...?" என்றார்.

எப்படி டாட்டாவின் பெயர்சொல்லும் மகனாக, மைந்தராக இருப்பதற்கு ஜே.ஆர்.டி.டாட்டா தன்னைப் பல்வேறு விதங்களில் வளர்த்துக்கொண்டாரோ, அப்படி இறைவனின் அன்பார்ந்த மகனாக, மகளாக மாறுவதற்கு நம்முடைய தகுதியை வளர்த்துக்கொள்ளவேண்டும். தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, யார் இறைவனின் அன்பார்ந்த மைந்தர் என்ற கேள்விக்குப் பதிலாக இருக்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

தேங்கியிருப்பவர் அல்லர்; இயங்கிக்கொண்டிருப்பவர்

நற்செய்தியில் இயேசு தோற்றமாற்றம் அடைகின்ற நிகழ்வினைக் குறித்து வாசிக்கின்றோம். இயேசு தோற்றமாற்றம் அடைகின்றபொழுது, அவருக்கு முன் மோசேயும் எலியாவும் தோன்றுகின்றார்கள். அதைப் பார்த்துவிட்டு பேதுரு, "ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது" என்கின்றார்.

பேதுரு சொல்வது போன்று "இங்கேயே" இருந்தால் அல்லது தேங்கியே இருந்தால், ஒருவரால் கடவுளின் அன்பு மைந்தராக மாற முடியுமா என்றால், நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இன்றைக்குப் பலர் "எல்லாமும் கிடைத்துவிட்டது", "இந்த வாழ்க்கை போதும்" என்று பேதுருவைப் போன்று தேங்கியே இருப்பதைப் பார்க்க முடிகின்றது. ஆனால், ஆண்டவர் இயேசு இப்படித் தேங்கியிருக்கவில்லை; அவர் இயங்கிக்கொண்டே இருந்தார். இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு, "நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள். அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும், ஏனெனில், இதற்காகவே நான் வந்திருக்கின்றேன்" (மாற் 1: 38) என்று இயேசு தன் சீடர்களிடத்தில் சொன்னது. ஆம், இயேசு இறைவனின் வார்த்தையை மக்களுக்கு எடுத்துரைத்தும் வல்ல செயல்களைச் செய்தும் இயங்கிக்கொண்டே இருந்தார். அதனால் அவர் கடவுளின் அன்பார்ந்த மைந்தரானார். நாம் தேங்கியிருக்கின்றோமா? அல்லது இயங்கிக்கொண்டிருக்கின்றோமா? சிந்தித்துப் பார்ப்போம்.

"மனித வாழ்க்கை தேங்கிய குட்டையாய் இருக்கக்கூடாது, அது ஆற்றைப்போன்று ஓடிக்கொண்டிருக்கவேண்டும்" என்பார் கவிக்கோ அப்துல் ரகுமான். மிகவும் சிந்தனைக்குரிய வார்த்தைகள் இவை.

தன் விருப்பத்தின் நடப்பவர் அல்லர்; இறைவனின் குரல் கேட்டு நடப்பவர்

கடவுளின் அன்பார்ந்த மைந்தராவதற்கு இயங்கிக்கொண்டே இருக்கவேண்டும் என்று சிந்தித்துப் பார்த்த, இதற்கடுத்து என்ன செய்யவேண்டுமென்று சிந்தித்துப் பார்ப்போம்.

இன்றைய நற்செய்தியில் இடம்பெறுகின்ற இயேசுவின் தோற்றமாற்ற நிகழ்விற்கு முன்பாக, இயேசு தன்னுடைய பாடுகளை முன்னறிவிப்பார். அப்பொழுது பேதுரு, "ஆண்டவரே, இது வேண்டாம்" என்பார். உடனே இயேசு அவரைப் பார்த்து, "என் கண்முன் நில்லாதே சாத்தானே... நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல், மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்" என்பார். ஆம், பேதுருவைப் போன்று மனிதருக்கு ஏற்றவை பற்றி எண்ணி, மனித விருப்பத்தின்படி அல்லது தன்னுடைய விருப்பத்தின் செயல்படுகின்ற எவரும் கடவுளின் மைந்தராக முடியாது. ஒருவர் கடவுளின் மைந்தராகவேண்டும் என்றால், அவர் கடவுளின் குரல் கேட்டு, அவருடைய திட்டத்தின்படி நடக்கவேண்டும். இயேசு கடவுளின் குரல்கேட்டு, அவருடைய திருவுளத்தின்படி நடந்தார். அதனால்தான், "என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" என்று விண்ணகத்திலிருந்து தந்தையின் குரல் ஒலித்தது.

நாம் நம்முடைய விருப்பத்தின்படி நடக்கின்றோமா அல்லது இறைவனின் குரல் கேட்டு, அவருடைய திருவுளத்தின் நடக்கின்றோமா? சிந்தித்துப் பார்ப்போம். பல நேரங்களில் நாம் பேதுருவைப் போன்று நம்முடைய விருப்பத்தின்படியே நடக்கின்றோம். நமக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகின்றோம். இப்படிச் செய்தால் நாம் ஒருபோதும் கடவுளின் மைந்தராக இருக்க முடியாது. ஆகையால், நாம் இறைவனின் மைந்தராக இருப்பதற்கு இறைவனின் குரல் கேட்டு, இறைவனின் திருவுளத்தின்படி நடக்க முயற்சி செய்வோம்.

தனித்திருப்பவர் அல்லர்; மக்களோடு இருப்பவர்

கடவுளின் மைந்தராக இருப்பதற்கு ஒருவர் செய்யவேண்டிய மூன்றாவது முக்கியமான செயல் மக்களோடு இருப்பதாகும். மலையில் இயேசு தோற்றமாற்றம் அடைந்தபிறகு அங்கேயே இருக்கவில்லை. மாறாக மலையிலிருந்து கீழே இறங்கி வந்து, மக்களுக்குப் பணிவிடை செய்யத் தொடங்குகின்றார். அதனால் பரிசேயர் மற்றும் மறைநூல் அறிஞர்களிடமிருந்து பல்வேறு எதிர்ப்புகள் கிளம்புகின்றன. ஆனாலும்கூட இயேசு அவற்றிற்கெல்லாம் அஞ்சாமல், கல்வாரி மலையில் தன்னுடைய உயிரைக் கையளித்து தந்தைக் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றி, அவருடைய அன்பார்ந்த மைந்தராகின்றார். அப்படியானால், ஒருவர் கடவுளின் மைந்தராக வேண்டுமானால், அவர் யாரோடும் எந்த ஒட்டும் உறவும் இல்லாமல் வாழ்வதை விடுத்து இயேசுவைப் போன்று மக்களோடு இருப்பவராக இருக்கவேண்டும்; மக்களின் இன்ப துன்பங்களில் பங்குபெறக்கூடியவராக இருக்கவேண்டும்.

இன்றைக்குப் பலர் "எல்லாம் என்னிடம் இருக்கின்றது, அதனால் எனக்கு யாரும் வேண்டாம்" என்ற மனநிலையோடு வாழ்வதைக் காணமுடிகின்றது. அடுத்தவரைப் பற்றிச் சிந்திக்காமல், அடுத்தவருடைய இன்ப துன்பங்களில் பங்குபெறாமல், எப்படி ஒருவர் ஆண்டவரின் மைந்தராக முடியும். ஆகையால், நாம் இயேசுவைப் போன்று கடவுளின் அன்பார்ந்த மைந்தராக இருக்க இயங்கிக்கொண்டே இருப்போம்; இறைவனின் குரல் கேட்டு நடப்போம். எல்லாவற்றிற்கும் மேலாக மக்களோடு இருப்போம்.

சிந்தனை

"நாம் கடவுள்மீது அன்புகொண்டு அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்போது, கடவுளின் பிள்ளைகள்மீதும் அன்புகொள்கிறோம் என்பது நமக்குத் தெரியவரும்" (1 யோவா 5: 2) என்பார் புனித யோவான். ஆகையால், நாம் கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் அவரையும் அவருடைய பிள்ளைகளையும் அன்பு செய்பவர்களாக மாறி, நாமும் அவருடைய அன்பு மைந்தர்களாக மாறுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
Free Blog Widget
Stats Counter
hit counter