maraikal
MUM
"


தவக்காலம் 1 ஆம் வாரம் 01-03-2020

முதல் வாசகம்

முதல் பெற்றோரைப் படைத்ததும் அவர்களின் பாவமும்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 2: 7-9; 3: 1-7

ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான்.

ஆண்டவராகிய கடவுள் கிழக்கே இருந்த ஏதேனில் ஒரு தோட்டம் அமைத்துத் தாம் உருவாக்கிய மனிதனை அங்கே வைத்தார். ஆண்டவராகிய கடவுள் கண்ணுக்கு அழகானதும் உண்பதற்குச் சுவையானதுமான எல்லா வகை மரங்களையும், தோட்டத்தின் நடுவில் வாழ்வின் மரத்தையும் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்தையும் மண்ணிலிருந்து வளரச் செய்தார்.

ஆண்டவராகிய கடவுள் உருவாக்கிய காட்டு விலங்குகளிலெல்லாம் பாம்பு மிகவும் சூழ்ச்சிமிக்கதாக இருந்தது. அது பெண்ணிடம், “கடவுள் உங்களிடம் தோட்டத்திலுள்ள எல்லா மரங்களிலிருந்தும் உண்ணக்கூடாது என்றது உண்மையா?" என்று கேட்டது. பெண் பாம்பிடம்,"தோட்டத்தில் இருக்கும் மரங்களின் பழங்களை நாங்கள் உண்ணலாம். ஆனால் ‘தோட்டத்தின் நடுவில் உள்ள மரத்தின் கனியை மட்டும் நீங்கள் உண்ணக்கூடாது; அதைத் தொடவும் கூடாது. மீறினால் நீங்கள் சாவீர்கள்’ என்று கடவுள் சொன்னார்," என்றாள்.

பாம்பு பெண்ணிடம்,"நீங்கள் சாகவே மாட்டீர்கள்; ஏனெனில் நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் கடவுளைப் போல் நன்மை தீமையை அறிவீர்கள் என்பது கடவுளுக்குத் தெரியும்" என்றது.

அந்த மரம் உண்பதற்குச் சுவையானதாகவும் கண்களுக்குக் களிப்பூட்டுவதாகவும் அறிவு பெறுவதற்கு விரும்பத்தக்கதாகவும் இருந்ததைக் கண்டு, பெண் அதன் பழத்தைப் பறித்து உண்டாள். அதைத் தன்னுடனிருந்த தன் கணவனுக்கும் கொடுத்தாள். அவனும் உண்டான். அப்பொழுது அவர்கள் இருவரின் கண்களும் திறக்கப்பட்டன; அவர்கள் தாங்கள் ஆடையின்றி இருப்பதை அறிந்தனர். ஆகவே, அத்தி இலைகளைத் தைத்துத் தங்களுக்கு ஆடைகளைச் செய்துகொண்டனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்
திபா 51: 1-2, 3-4a, 10-11, 12+15 (பல்லவி: திபா 51:1a) Mp3

பல்லவி: ஆண்டவரே, இரக்கமாயிரும்; ஏனெனில் நாங்கள் பாவம் செய்தோம்.
1கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்.
2என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். - பல்லவி

3ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்; என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது.
4aஉமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்; உம் பார்வையில் தீயது செய்தேன். - பல்லவி

10கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதி தரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும்.
11உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். - பல்லவி

12உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும்.
15என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்; அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும். - பல்லவி


 

இரண்டாம் வாசகம்
பாவம் பெருகிய இடத்தில் அருள் அணைகடந்து பெருக்கெடுத்தது.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 12-19

சகோதரர் சகோதரிகளே,

ஒரே ஒரு மனிதன் வழியாய்ப் பாவம் இந்த உலகத்தில் நுழைந்தது; அந்தப் பாவத்தின் வழியாய்ச் சாவு வந்தது. அதுபோலவே, எல்லா மனிதரும் பாவம் செய்ததால், எல்லா மனிதரையும் சாவு கவ்விக்கொண்டது. திருச்சட்டம் தரப்படுமுன்பும் உலகில் பாவம் இருந்தது; ஆனால், சட்டம் இல்லாதபோது அது பாவமாகக் கருதப்படவில்லை. ஆயினும் ஆதாம் முதல் மோசே வரையில் இருந்தவர்கள் ஆதாமைப்போல் கடவுளின் கட்டளையை மீறிப் பாவம் செய்யவில்லை. எனினும் சாவு அவர்கள்மீதும் ஆட்சி செலுத்திற்று; இந்த ஆதாம் வரவிருந்தவருக்கு முன்னடையாளமாய் இருக்கிறார்.

ஆனால், குற்றத்தின் தன்மை வேறு, அருள் கொடையின் தன்மை வேறு. எவ்வாறெனில், ஒருவர் செய்த குற்றத்தால் பலரும் இறந்தனர். ஆனால் கடவுளின் அருளும் இயேசு கிறிஸ்து என்னும் ஒரே மனிதரின் வழியாய் வரும் அருள்கொடையும் பலருக்கும் மிகுதியாய்க் கிடைத்தது. இந்த அருள்கொடையின் விளைவு வேறு, அந்த ஒரு மனிதர் செய்த பாவத்தின் விளைவு வேறு. எவ்வாறெனில், ஒரு மனிதர் செய்த குற்றத்துக்குத் தீர்ப்பாகக் கிடைத்தது தண்டனை. பலருடைய குற்றங்களுக்கும் தீர்ப்பாகக் கிடைத்ததோ அருள்கொடையாக வந்த விடுதலை.

மேலும் ஒருவர் குற்றத்தாலே, அந்த ஒருவர் வழியாகச் சாவு ஆட்சி செலுத்தினதென்றால், அருள் பெருக்கையும் கடவுளுக்கு ஏற்புடையவராகும் கொடையையும் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவர் வழியாக அடைந்துகொண்டவர்கள் வாழ்வு பெற்று ஆட்சி செலுத்துவார்கள் என இன்னும் மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ?

ஆகவே ஒருவரின் குற்றம் எல்லா மனிதருக்கும் தண்டனைத் தீர்ப்பாய் அமைந்ததுபோல், ஒரே ஒருவரின் ஏற்புடைய செயல் எல்லா மனிதருக்கும் வாழ்வளிக்கும் விடுதலைத் தீர்ப்பாய் அமைந்தது. ஒரு மனிதரின் கீழ்ப்படியாமையால் பலர் பாவிகளானதுபோல், ஒருவரின் கீழ்ப்படிதலால் பலர் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள்.

அல்லது

குறுகிய வாசகம்


பாவம் பெருகிய இடத்தில் அருள் அணைகடந்து பெருக்கெடுத்தது.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 12,17-19

சகோதரர் சகோதரிகளே,

ஒரே ஒரு மனிதன் வழியாய்ப் பாவம் இந்த உலகத்தில் நுழைந்தது; அந்தப் பாவத்தின் வழியாய்ச் சாவு வந்தது. அதுபோலவே, எல்லா மனிதரும் பாவம் செய்ததால், எல்லா மனிதரையும் சாவு கவ்விக்கொண்டது.

மேலும் ஒருவர் குற்றத்தாலே, அந்த ஒருவர் வழியாகச் சாவு ஆட்சி செலுத்தினதென்றால் அருள் பெருக்கையும் கடவுளுக்கு ஏற்புடையவராகும் கொடையையும் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவர் வழியாக அடைந்துகொண்டவர்கள் வாழ்வு பெற்று ஆட்சி செலுத்துவார்கள் என இன்னும் மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ?

ஆகவே ஒருவரின் குற்றம் எல்லா மனிதருக்கும் தண்டனைத் தீர்ப்பாய் அமைந்ததுபோல், ஒரே ஒருவரின் ஏற்புடைய செயல் எல்லா மனிதருக்கும் வாழ்வளிக்கும் விடுதலைத் தீர்ப்பாய் அமைந்தது. ஒரு மனிதரின் கீழ்ப்படியாமையால் பலர் பாவிகளானதுபோல், ஒருவரின் கீழ்ப்படிதலால் பலர் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.



நற்செய்திக்கு முன் வசனம

(மத் 4: 4b)

மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்.
 


நற்செய்தி வாசகம்
இயேசு நாற்பது நாள் நோன்பிருக்கிறார்; சோதிக்கப்படுகிறார்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 1-11

அக்காலத்தில்

இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற்காகப் பாலைநிலத்திற்குத் தூய ஆவியால் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் நாற்பது நாள் இரவும் பகலும் நோன்பிருந்தார். அதன்பின் பசியுற்றார். சோதிக்கிறவன் அவரை அணுகி,"நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள் அப்பமாகும்படிக் கட்டளையிடும்" என்றான். அவர் மறுமொழியாக," ‘மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்’ என மறைநூலில் எழுதியுள்ளதே" என்றார்.

பின்னர் அலகை அவரை எருசலேம் திருநகரத்திற்குக் கூட்டிச் சென்றது. கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி,"நீர் இறைமகன் என்றால் கீழே குதியும்; ‘கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள்’ என்று மறைநூலில் எழுதியுள்ளது" என்று அலகை அவரிடம் சொன்னது. இயேசு அதனிடம்," ‘உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்’ எனவும் எழுதியுள்ளதே" என்று சொன்னார்.

மறுபடியும் அலகை அவரை மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டி, அவரிடம்,"நீர் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன்" என்றது. அப்பொழுது இயேசு அதனைப் பார்த்து,"அகன்று போ, சாத்தானே, ‘உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்’ என்றும் மறைநூலில் எழுதியுள்ளது" என்றார்.

பின்னர் அலகை அவரை விட்டு அகன்றது. உடனே வானதூதர் வந்து அவருக்குப் பணிவிடை செய்தனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

I தொடக்கநூல் 2: 7-9; 3: 1-7
II உரோமையர் 5: 12-19
III மத்தேயு 4: 1-11

ஆண்டவரில் நிலைத்திருப்பவர் அசைவுறார்

நிகழ்வு

அது ஒரு கடற்கரைக் கிராமம். அந்தக் கிராமத்தில் பெரியதொரு கலங்கரை விளக்கு இருந்தது. அதைப் பெரியவர் ஒருவர் பன்னெடுங்காலமாகக் காவல்காத்து வந்தார். ஒருநாள் இரவில் கடலில் பெரும்புயல் ஏற்பட்டு, கடற்கரையோரத்தில் இருந்த வீடுகளையெல்லாம் சேதப்படுத்தியது.

இதையடுத்து வந்த நாளில் கலங்கரை விளக்கைத் காவல் காத்து வந்த பெரியவர் ஊருக்குள் வந்தார். அவரைப் பார்த்ததும், ஊருக்குள் அவருக்குத் தெரிந்த ஒருசிலர் அவரிடம், "நேற்று இரவு வீசிய பெரும் புயலில் இங்கிருந்த பல வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகிவிட்டன... கலங்கரை விளக்குகூட இடிந்து விழுந்து விட்டதாகக் கேள்விப்போட்டோம். அது உண்மையா?" என்றனர். அதற்கு அந்தப் பெரியவர், "இந்தப் புயலுக்கெல்லாம் கலங்கரை விளக்கு இடிந்து விழுந்துவிடுமா என்ன...? கலங்கரை விளக்கின் அடித்தளம் மிகவும் உறுதியாக இருக்கின்றது. அதை எந்தவொரு புயற்காற்றாலும் அடித்து வீழ்த்திவிட முடியாது" என்று உறுதியாகச் சொன்னார்.

எப்படி கலங்கரை விளக்கின் அடித்தளம் உறுதியாக இருந்தததால், புயற்காற்றினால் ஒன்றும் செய்யமுடியாமல் போனதோ, அப்படி ஆண்டவரின் மக்களாகிய நாம், அவரில் உறுதியாக இருந்தால், நம்முடைய வாழ்க்கையில் வரும் சோதனையோ, துன்பமோ... எதுவும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது. தவக்காலத்தின் முதல் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, நம்முடைய வாழ்வில் வரும் சோதனைகளை நாம் எப்படி வெற்றிகொள்வது என்ற செய்தியை நமக்கு எடுத்துச் சொல்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
உடல்தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்கான சோதனை

நற்செய்தியில், ஆண்டவர் இயேசு பாலை நிலத்தில் நாற்பது நாள்கள் இரவும் பகலும் நோன்பிருந்து பசியாய் இருக்கின்றார். இத்தகையதொரு சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, அலகை அவரைச் சோதிக்கின்றது.

மனிதர்களுக்கு வரக்கூடிய பெரும்பாலான சோதனைகள், அடிப்படைத் தேவைகளில் முதன்மையாக இருக்கக்கூடிய உணவு தொடர்பான சோதனைகள்தான். இந்தச் சோதனைக்கு ஆதாம் –ஏவாள் தொடங்கி, இஸ்ரயேல் மக்கள் வரை பலர் வீழ்ந்திருக்கின்றார்கள்; ஆனால், இயேசு இந்தச் சோதனையில் விழவில்லை. இத்தனைக்கும் அவரால் கற்களை அப்பமாக மாற்றி உண்ணமுடியும் என்றாலும்கூட, அந்தச் சோதனையில் வீழ்ந்துவிடாமல், "மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்" (இச 8:3) என்ற இறைவார்த்தையின்மூலம் சாத்தனை முறியடிக்கின்றார். நமக்கும் இது போன்ற சோதனைகள் வரலாம். ஏனென்றால், புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமடலில் கூறுவதுபோல, கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் உணவும் அதுதொடர்பாக வரும் பட்டினியும் பிரிக்கக்கூடும் (உரோ 8: 35). இத்தகைய வேளைகளில் நாம் சோதனையில் வீழ்ந்துவிடாமல், இறைவனில் உறுதியாக இருப்பது நல்லது.

நம்முடைய விருப்பு வெறுப்பிற்கேற்ப இறைவனை வளைத்துக்கொள்ளும் சோதனை

ஒரு மனிதர் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்கின்ற சோதனையை வென்றுவிட்டால், அவருக்கு வருகின்ற அடுத்த சோதனை அதிகாரம் தொடர்பான சோதனை. இதனை வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், தன்னுடைய விருப்பு வெறுப்பிற்கேற்ப கடவுளையும் மக்களையும் வளைத்துக் கொள்கின்ற சோதனை என்று சொல்லலாம். இது எப்படி என்று பார்ப்போம்.

இயேசு தனக்கு வந்த உணவு தொடர்பான சோதனையை வெற்றிகொண்டதும், சாத்தான் அவரை எருசலேம் திருநகருக்குக் கூட்டிச் சென்று, திருப்பாடல் 91: 11-12 ஐ மேற்கோள் காட்டி, கோயிலிலிருந்து கீழே குதிக்கச் சொல்கின்றது. இதன்மூலம் இறைவனைத் தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்ப இழுக்குமாறு இயேசுவைத் தூண்டுகின்றது. இயேசு அவ்வாறு செய்யாமல், "உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்கவேண்டாம்" (இச 6:16) என்று சொல்லி அந்தச் சோதனையையும் முறியடிக்கின்றார். ஒருசிலர் இருக்கின்றார்கள், இவர்கள் தங்களிடம் அதிகாரம் இருக்கின்றது, செல்வாக்கு இருக்கின்றது என்பதற்காக இறைவனிடம், "இறைவா! எனக்கு இதைச் செய்யும்... அதைச் செய்யும்" சொல்லி, அவரைத் தங்களுடைய விரும்பத்திற்கேற்ப இழுப்பார்கள். மனிதர்களையும் அவர்கள் இவ்வாறே செய்யச் சொல்வார்கள்; ஆனால், இயேசு இறைவார்த்தையில், "உமது கால்கள் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக்கொள்வார்கள்’ என்று சொல்லப்பட்டிருந்தாலும், தன்னிடம் அதிகாரம் இருக்கின்றது என்பதற்காக அதைத் தவறாகப் பயன்படுத்தாமல், வேறோர் இறைவார்த்தையால் சாத்தானை வெற்றிகொள்கின்றார்.

"உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே" (விப 20:7) என்கிறார் ஆண்டவர். இவ்வார்த்தையை நாம் எப்பொழுதும் நம்முடைய மனக்கண் முன் வைத்து, அதிகாரம் தருகின்ற போதை என்னும் சோதனையில் வீழ்ந்துவிடாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

இலகுவாக முன்னேறுவதற்கான சோதனை

உணவு மற்றும் அதிகாரம் தொடர்பான சோதனைகளை இயேசு முறியடித்ததும் குறுக்கு வழியில் அல்லது இலகுவான வழியில் முன்னேறுவதற்கான சோதனையை அலகை தன் கையில் எடுக்கின்றது. அது என்ன இலகுவாக முன்னேறுவதற்கான சோதனை என்பதைப் பார்ப்போம்.

தீர்ப்புக்குள்ளாகி இருந்த இவ்வுலகை (யோவா 12:31) இயேசு தன்னுடைய பாடுகள், சிலுவைச் சாவின் வழியாக மீட்கவேண்டும் (பிலி 2: 9-11) என்பது இறைவனின் திட்டம்; ஆனால், சாத்தான் இயேசுவை ஓர் உயர்ந்த மலைக்குக் கூட்டிக்கொண்டு சென்று, அரசுகளைக் காட்டி, தன்னை நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினால் எல்லாவற்றையும் தருவதாகச் சொல்கின்றது. பாடுகள் என்பது கடினமான பாதை; சாத்தானை வணங்குவது மிகவும் இலகுவான பாதை. மிகவும் இலகுவான பாதை என்பதற்காக இயேசு சாத்தானை வணங்காமல், கடினமான பாதையான பாடுகளின் பாதையைத் தேர்ந்தெடுத்து, இயேசு சாத்தானின் சோதனையை முறியடிக்கின்றார்.

நம்முடைய வாழ்க்கையிலும் இலகுவான பாதையைத் தேர்ந்தெடுத்து அல்லது குறுக்கு வழியைத் தேர்ந்தெடுத்து முன்னேறுவதற்கான சோதனை வரும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் அந்தச் சோதனையில் வீழ்ந்துவிடாமல், இயேசுவைப் போன்று ஆண்டவரில் உறுதியாக இருந்து, அதனை வெற்றிகொள்வது நல்லது.

இங்கோர் உண்மையை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். அது என்னவெனில், நமக்குக் வருகின்ற சோதனைகள் எங்கிருந்தோ வருபவை அல்ல; நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்களிடமிருந்தும் பொருள்களிடமிருந்தே வரும். இவற்றில் நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். இடைக்காலத்தில் வாழ்ந்தவர் மார்கோ போலோ. உலகமெங்கும் சுற்றிவந்தவரான இவர் குறிப்பிடுகின்ற ஒரு செய்தி. லோப் என்ற பாலைநிலத்தில் யாராவது நடந்துசென்றால், பின்னாலிருந்து அவருடைய நண்பரோ அல்லது அவருக்கு அறிமுகமான ஒருவரோ அழைப்பது போன்று இருக்குமாம். அவர் அந்தக் குரலுக்குச் செவிமடுத்து, அதன்பின்னால் சென்றால் அழிவுதான் ஏற்படும். ஏனெனில் சாத்தான்தான் அவரை ஏமாற்றுவதற்காக அவரை அவருடைய நண்பர் அழைப்பது போன்று அழைக்குமாம்.

நமக்கும் நாம் சுற்றியிருக்கும் மனிதர்களிடமிருந்தும் பொருள்களிடமிருந்துமே சோதனைகள் வரும். அவற்றில் நாம் வீழ்ந்துவிடாமல், ஆண்டவரில், அவருடைய வார்த்தையில் நிலைத்திருந்து சோதனையை வெற்றிகொள்வது நல்லது. ஏனெனில், சோதனைகளை வெற்றிகொள்கின்றவர் வாழ்க்கையில் வெற்றிகொள்கின்றார். ஏன், எல்லாவற்றிலும் வெற்றி கொள்கின்றார்.

சிந்தனை

"தாமே சோதனைக்கு உள்ளாகித் துன்பப்பட்டதனால் சோதிக்கப்படுவோருக்கு உதவி செய்ய அவர் வல்லவர்’ (எபி 2: 18) என்பார் எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர். ஆகையால், நம்முடைய வாழ்க்கையில் சோதனை வருகின்றபொழுது, அதில் நாம் வீழ்ந்திடாது, இயேசுவில் உறுதியாக இருந்து வெற்றிகொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.



- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
Free Blog Widget
Stats Counter
hit counter